Monday, October 3, 2011

நவராத்திரி?!

நீங்கள் நவராத்திரி பற்றி ஒரு பதிவு எழுதலாமே - இது ரமணி அண்ணாவின் விண்ணப்பம். ஓ! எழுதலாமே. எதை எழுத, எதை விட?

நான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிய கதையை எழுதவா? சரி அது இப்ப வேண்டாம். நானே நொந்து போய் இருக்கிறேன். என் மாமா ( அப்பாவின் தங்கை கணவர் ) இறந்து விட்டார். அவர் வசித்தது கனடாவில். தொலை பேசியில் என் கஸின் அழுத போது ஆறுதல் தான் சொல்ல முடிந்தது. ஒடிப் போய் அணைத்துக் கொள்ளவோ அல்லது பக்கத்தில் இருக்கவோ முடியவில்லை என்று ஏக்கம் இன்னும் இருக்கு. நினைச்ச உடனே ஓடிப் போய் ப்ளைட்டில் ஏற முடிவதில்லை. கணவருக்கு வேலை, பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடம். நான் என் சகோதரியிடம் அடிக்கடி சொல்வேன், அடுத்த ஜென்மத்தில் இலங்கையில் பிறக்கவே கூடாது. கூழோ, கஞ்சியோ குடித்தாலும் பக்கத்து பக்கத்து குடிசைகளில் இருந்து குடிக்க வேண்டும்.

சரி. இப்ப நவராத்திரிக்கு வருவோம். ஆக்சுவலா என்ன நடந்தது என்றால் எனக்கு நவராத்திரி என்பதே தெரியாது. என் அம்மா கனடாவில் இருந்திருந்தா பொங்கல், தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி, இன்னும் என்ன என்ன பண்டிகைகள் இருக்கோ அதெல்லாம் மறக்காமல் தொலை பேசியில் சொல்லிவிடுவார். கடந்த 2 மாசங்களாக அம்மா கனடாவில் இல்லை.

என் கணவருடன் கூட வேலை பார்ப்பவர் என் கணவரை நவராத்திரி பற்றிக் கேட்ட போது தான் அவருக்கே தெரிய வந்தது. அதன் பிறகு எனக்குத் தெரியும். தெரிஞ்சு என்ன புண்ணியம். என் கணவர் என்னிடம் சொன்ன போது நேரம் இரவு 8.30. அதுக்குப் பிறகு என்னத்தை செய்வது என்று பேசாமல் இருந்தாச்சு.

இன்னும் நவராத்திரி முடியவில்லை தானே. கடைசி நாள் மட்டும் ஏதாவது செய்து சமாளிக்கலாம். எங்கள் வழக்கப்படி கொலு வைப்பது இல்லை. இந்தியாவில் இருந்த போது சுண்டலுக்காக லச்சுமி மாமியுடன் வீடு வீடாக போனதுண்டு. என் சகோதரிக்கு நல்ல குரல் வளம். அவர் பாட நான் சுண்டலை பார்த்து ஜொள்ளு விடுவதுண்டு. எல்லாம் முடிந்த பின்னர் பூ, சுண்டல், மஞ்சள், ஜாக்கெட் துணி இவற்றுடன் வீடு போவோம்.

***********************************

ஒரு முறை National Geography சானல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தீவுப் பகுதிகள், மலைப் பிரதேசங்கள், காட்டுப் பகுதிகள், எரிமலைப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி காட்டினார்கள்.
எரிமலைப் பகுதியில் வாழும் மக்களின் ஒரு தொழில் எரிமலையின் அடிவாரத்தில் போய் பாஸ்பரஸ் நிறைந்த பாறைகளை எடுத்து வருவது. நச்சு புகை சூழ்ந்த பகுதியினுள் எந்தவிதமான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் செல்கிறார்கள். பாறைகளை தோளில் தூக்கி வருகிறார்கள். சிலர் நச்சு வாயு தாக்கி இறப்பதும் உண்டாம். இதை விட்டா பிழைப்புக்கு வேறு வழி இல்லை என்று சொல்கிறார்கள். பாறைகள் தூக்கி இவர்களின் உடம்பில் நிறைய தழும்புகள்.

காட்டுப் பகுதியில் வாழ்பவர்களுக்கு உண்ண உணவுப் பொருட்கள் இல்லை. பெரும்பாலும் காட்டில் விளையும் உணவுகளை உண்கிறார்கள். புரோட்டீனுக்கு எங்கே போவார்கள்? காட்டில் திரியும் வௌவால்களை பிடித்து உண்ணுகிறார்கள். பெரிய குடும்பங்களுக்கு ஒன்று, இரண்டு பறவைகள் போதுமான தாக இல்லை. அந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் மண்டையை குடைஞ்சு கண்டு பிடித்த ஐடியா தான் இப்பவும் புழக்கத்தில் இருக்காம். ஒரு பிரமாண்டமான வலையினை திறந்த வெளியில் கட்டி விடுகிறார்கள். தூரமாக போயிருந்து தடியினால் தகர டப்பாவில் ஒலி எழுப்புகிறார்கள். வவ்வால்கள் கூட்டமாக வலை இருக்கும் பக்கம் நோக்கி பறந்து வலையில் சிக்கிக் கொள்கின்றன. இன்று நல்ல விருந்து தான் என்கிறார் அப்பா. நெருப்பு மூட்டி ஆனந்தமாக சமையல் செய்கிறார்கள். கடன் அட்டைகள், கரன்ட், கரண்டி, சட்டி, பானைகள் எதுவும் இல்லாமல சந்தோஷமாக வாழ்கிறார்கள்.


ஆகாயத்தில் அடக்கம்
மலைப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை வரலாறு தான் கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது. ஒரு வயதானவர் இறந்து விட்டார். அவரை எரிக்க விறகோ அல்லது புதைக்க இடமோ இல்லையாம். மலைப் பகுதியில் மரங்கள், சுடுகாடுகள் இல்லை. இறந்தவரை மூட்டையாக கட்டிக் கொண்டு மலையின் மீது ஏறுகிறார்கள் அவரின் மகன்கள். வேறு ஒருவர், இப்பெல்லாம் நிறைய அடிச்சா தான் வேலை செய்ய முடியுது, என்றபடி ஏதோ ஒரு பாட்டிலை வாயில் கவிழ்க்கிறார். மலையின் சம தளத்தினை அடைந்த பின்னர் மந்திரங்கள் சொன்ன பிறகு மகன்கள் அழுது கொண்டே கீழே இறங்கிச் செல்ல, ( மப்பில் இருந்த ) ஆசாமி இறந்தவரின் உடலை கழுகுக்கு இரையாக போடுகிறார்.
இன்று அப்பா, நாளை நான். இந்த வறண்ட பிரதேச்சத்தில் இதை விட்டா வேறு வழியில்லை. எங்களுக்கும் இந்து முறைப்படி அடக்கம் செய்ய விருப்பம் தான். இப்ப என் அப்பா இயற்கையோடு ஒன்றாக கலந்துவிட்டார், என்றார் மகன்.