கனடா வந்த புதிதில் எனக்கு இடம், வலம் தெரியாது. அதாவது ஏதாவது புது இடங்களுக்கு போய், வரத் தெரியாது. எப்ப பார்த்தாலும் கணிணியில் கார்ட்ஸ் கேம் தான் கதி. இதைப் பார்த்து கடுப்பான என் அண்ணா என்னை இங்கிலீசு பேசிப் பழக ஒரு வகுப்பில் சேர்த்து விட்டார். முதல் நாள் என்னைக் காரில் கொண்டு போய் ரோட்டின் ஓரத்தில் இறக்கிவிட்டார். நான் பில்டிங்கை நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பி பார்க்க என் அண்ணாவும், காரும் மாயமாகி இருந்தார்கள்.
அடப்பாவி! இப்படியா நட்டாற்றில் விட்டுட்டு போறது என்று அழுகை வந்தது.
ஒரு வழியா எலிவேட்டரை கண்டு பிடிச்சு, 5 வது தளத்திற்கு சென்றேன்.
அங்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் நிரப்பிக் கொடுத்த பின்னர் பெண்மணி சொன்னார், இங்கிருந்து வெளியே போய் வலது புறம் திரும்பி, மீண்டும் இடது புறம் திரும்பி, ஒரு அரை மைல் தூரம் நடக்க ஒரு கட்டிடம் வரும். அங்கே தான் இன்று உங்களுக்கு வகுப்புகள் ஆரம்பம், என்றார்.
இப்படி வலது, இடது என்று சொன்னால் நான் என்ன செய்வேன், என்று கறுவியபடி அவர் கொடுத்த அட்ரஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
இப்ப மீண்டும் குழப்பம். எனக்கு வலது புறம் என்று சொன்னாரா? அல்லது அவருக்கு வலது புறம் என்று சொன்னாரா? ஏதோ ஒரு முடிவுடன் இடது புறம் நடந்தேன் . ஆனால் அவர் சொன்ன ஒரு லான்ட் மார்க்கும் வரவில்லை. மழையும், அழுகையும் தான் வந்தது.
அங்கு கண்ணில் பட்ட கனடியனிடம் இந்த அட்ரஸ் தெரியுமா என்று கேட்டேன். அவர் நல்ல டிப்டாப்பாக உடுத்தி இருந்தார். மழைக்கு குடையும் பிடித்தபடி வந்தவர். என் அட்ரஸ் பேப்பரைப் பார்த்துவிட்டு, வா நான் எங்கே என்று காட்டுகிறேன் என்றார். குடையினை எனக்கு பிடித்தபடி வந்தார்.
குடை எனக்கு வேண்டாம். உங்க ஆடை எல்லாம் நனையுதே என்றேன்.
பரவாயில்லை. நீ வா என்றார்.
ரோட்டின் தலைப்பு வரை வந்தவர். அங்கிருந்தே நான் போக வேண்டிய திசையினைக் காட்டி, விளக்கமாக அட்ரஸ் சொன்னார்.
நான் ஒரு தடவைக்கு நூறு தடவை கேட்டு சரி பார்த்த பின்னர், அவருக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டேன். நாட்டில் இப்படி நல்லவர்கள் இருப்பதால் தான் மழை, ஸ்நோ எல்லாம் பெய்யுதாம் ஆங்.
சில வாரங்களின் முன்பு எனக்கு ஒரு புது இடத்திற்கு போக வேண்டி இருந்தது. கூகிள் போய் தேவையான எல்லாம் பிரின்ட் பண்ணியாச்சு. ஆனால், குழப்பமாக இருந்தது. என் ஆ.காரரிடம் கேட்டேன். அவர் என் அண்ணாவோடு போனில் பேசியபடி எனக்கு அட்ரஸ் சொன்னார். சில லான்ட் மார்க் சொல்லி, இங்கே திரும்பினால் அது வரும், அங்கே திரும்பினால் இது வரும் ....
நான் ஙேஙே ....
நீங்க அட்ரஸ் சொல்றீங்களா. அது போனாலும் போயிடும், என்று என் அண்ணா போனில் சொல்ல, இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
கர்ர்ர்ர்.....என்று மனதில் உறுமிக் கொண்டேன்.
என் கணவர் சொன்னார், ஆண்களுக்கு தலையினுள் பில்ட்-இன் ஜிபிஎஸ் இருக்காம். அவர்களுக்கு திசைகள் கண்டு பிடிப்பது, புது இடங்களுக்கு போவது, தொலையாமல் திரும்பி வருவது எல்லாம் சும்மா அல்வா சாப்பிடுவது போலவாம்.
உதாரணமாக, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிச்சது. கடலில் எப்படி தொலையாமல் வந்தார்??!!
நட்சத்திரங்களின் உதவியோடு பல மீனவர்கள், கடல் வாணிபம் செய்பவர்கள் திசையினை அறிவார்கள் என்று ஊரில் என் பாட்டா சொல்வார்.
ஒரே பெருமைதான் போங்கள்.
ஒரு வழியா என் அண்ணாவோடு உரையாடல் முடிஞ்சு போனை வைத்த பின்னர் சமையல் அறைக்குப் போனார் என் கணவர். எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
என்ன தேடுறீங்க?, இது நான்.
சீரியல் சாப்பிட பௌல் எங்கே?, என்றார்.
அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா? செயற்கை கோளிலிருந்து சமிக்கைகள் கிடைக்கவில்லையா? என்று நினைத்தபடி வழக்கமாக சட்டிகள் அடுக்கி வைக்கும் இடத்தினைக் காட்டினேன்.