Saturday, June 11, 2011

எங்க ஊர் நல்ல ஊர்


எங்க ஊர் என்று நான் எதைச் சொல்ல, பிறந்த இடத்தையா? வளர்ந்த இடத்தையா? தற்போது இருக்கும் ஊர் பற்றிச் சொல்லவா? என்று ஒரே குழப்பம். பிறந்த இடத்தைப் பற்றிச் சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. அல்லாவிட்டால் பெருமையாகச் சொல்ல எதுவும் இல்லை. இலங்கையின் தலைநகர் கொழும்பில் பிறந்தேன். எனக்கு கொழும்பு எப்போதும் பிடிப்பதில்லை. எப்போதும் நச நசவென மக்கள் கூட்டம். விரைந்தோடும் மக்கள், பிஸியான சாலைகள். 1983, ஜூலைக்குப் பிறகு சுத்தமாகப் பிடிக்காமல் போய் விட்டது. சிங்களக் காடையர்களால் வீடு தாக்கப்பட்டு, நடுத் தெருவில் வீடு வீடாக ஓடி தஞ்சம் கேட்டது, சாப்பாடு கிடைக்காமல் பட்டினி கிடந்தது, ஆடு மாடுகள் போல கப்பலில் அடைக்கப் பட்டு யாழ் நோக்கிச் சென்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஊர் தான் எனக்கு எப்போதும் பிடிக்கும். என் பெற்றோரின் ஊர். தாய் வழிச் சொத்து பெண்களுக்கு என்பது எங்கள் நாட்டுச் சட்டம். பெரிய நிலம், வீடு என்று வசதியான குடும்பம் அம்மாச்சியின் குடும்பம். அந்த வீடு தான் என் வசந்தமாளிகை என்று சொல்வேன். முற்றம் முழுவதும் மா மரங்கள், கொய்யா மரம், ரோஸ், மல்லிகை, தென்னை, இப்படி நிறையச் செடிகள், மரங்கள்.
என் மாமா ( அம்மாவின் சகோதரன் ) 27 வயதில் இறந்த போது நான் என் அம்மாச்சியின் அரவணைப்பில் 2 வருடங்கள் இருந்தேன். என் பெற்றோர்கள் கொழும்பில் இருக்க நான் ஊரில். என்னை நேர்ஸரியில் சேர்த்து விட்டார் அம்மாச்சி. எனக்கோ பள்ளி போக வெறுப்பு. என் அம்மாச்சிக்குப் பயம் எங்கே நான் படிக்காமல் இருந்துவிட்டால் என் அப்பா வந்து இழுத்துச் சென்று விடுவாரோ என்று. எங்கள் வீட்டின் பின் புறம் அம்மாச்சியின் தோழி ஒருவர் இருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த அம்மாச்சி ஏதோ தோன்றியவராக என் விரலினைப் பிடித்து, அ எழுது, வாணி அம்மா என்று கடுப்பேத்த, நான் போய் பனை மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டேன்.
இந்த சம்பவத்தின் பிறகு என் அம்மாச்சிக்காக ஏதோ பள்ளி போய் வந்தேன். சில மாதங்களின் பின்னர் என் அப்பா மீண்டும் கொழும்புக்கே கூட்டிச் சென்று விட்டார். மனம் ஒன்றாமல் ஏதோ ஒரு வெறுமையாக இருந்ததை அடிக்கடி உணர்ந்தேன். ஜூலை, 1983 க்குப் பிறகு ஒரேயடியாக ஊர் போனதில் எனக்கு அவ்வளவு சந்தோஷம்.

ஒழிந்தான் துரோகி ( கொழும்பு வாழ்க்கை ) என்பது போல இருந்தது. ஊரில் அம்மாச்சியோடு சுத்தாத இடங்கள் இல்லை. கோயில் திருவிழா, உறவினர்கள் வீட்டு விசேஷங்கள், கடை, சந்தை இன்னும் நிறைய இடங்கள் இருந்தன. என் அம்மாச்சி நல்ல கல கலப்பானவர். எப்போதும் கல கலப்பாக பேசுவார். பஸ்ஸில் ஏறினால் என் அம்மாச்சியின் குரல் எங்கும் ஒலிக்கும். நான் எங்காவது கூட்டத்தில் காணாமல் போய் விட்டால் என் பெயரைக் கூவி அழைத்து, ஏலம் விடாத குறையாக ஒரு வழி பண்ணி விடுவார்.

எனக்கு ஊரில் மிகவும் பிடித்தது அம்மன் கோயில் திருவிழா. தெருவை அடைத்து பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, லைட்டுகள் போட்டு ஊரே கல கலப்பாக இருக்கும். என் அம்மாச்சியுடன் 15 நாட்களும் கோயிலுக்கு போய் வருவேன். அப்பவே பெரிய பக்தி மான் என்று நினைக்க வேண்டாம். கோயிலுக்கு வரும் நண்பிகள் கூட்டத்துடன் அரட்டை அடிக்கவே போவேன்.

தெளிந்த நீரோடை போல சென்ற வாழ்வில் மீண்டும் குழப்பங்கள். இராணுவத்தினர், ஷெல், துப்பாக்கி, விமானங்கள் என்று மீண்டும் ஓட்டம். அம்மாச்சி பெரும்பாலும் வீட்டிலேயே இருந்து விடுவார். கை, கால் வழங்காத நிலையில் இருந்த என் தாத்தாவை விட்டுட்டு எங்கேயும் வர மாட்டேன் என்று அவருடனே இருந்து கொள்வார். தாத்தாவை எங்களுடன் கூட்டிச் செல்ல முயன்றாலும் அதற்குரிய வசதிகள் இருந்ததில்லை. சைக்கிளில் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திற்கே ஓட்டிச் செல்ல முடியும். அதுவும் கை, கால்களை ஒருவர் பிடிக்க, இன்னொருவர் சைக்கிளை மெதுவாக மிதிக்க வேண்டும். வரும் குண்டு வீச்சு விமானங்களை பார்ப்பதா, இராணுவத்தினரைப் பார்ப்பதா என்று ஒரே குழப்பமாக இருந்தாலும் அம்மாச்சி கூடவே வருகிறார் என்ற நினைப்பே இனிமையாக இருக்கும் எனக்கு.

1989 இல் இந்தியா போக முடிவு செய்தார் அப்பா. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தியா போக வேண்டிய கட்டாயம். என் அம்மாச்சியும் வருவதாக இருந்தார். பின்னாளில் அது நடை முறைக்கு ஒத்து வராது என்று கை விடப்பட்டது. தாத்தாவை படகில் கூட்டி வரவோ அல்லது விமானத்தில் கூட்டி வரவோ உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.

அன்று நான் ரகசியமாக அழுத அழுகை எவருக்கும் தெரியாது. நாங்கள் இந்தியா சென்று 5 வருடங்களின் பின்னர் என் அம்மாச்சி இறந்தார். அவரின் முகத்தை கடைசியாக ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் இறந்த நிலையில் அவரைப் பார்க்க என் மனம் விரும்பவில்லை. அவரின் நினைவாக அறுசுவையில் நான் எழுதிய கதை தான் " பேரன் வருவான்".

இந்தியா, திருச்சியில் கிட்டத்தட்ட 10 வருடங்கள். திருச்சி எனக்கு கிட்டத்தட்ட எனக்கு ஊர் போல இருந்தது. மலைக்கோட்டைப் பிள்ளையார், சிறீரங்கம் இப்படிப் பல இடங்கள், படித்த பள்ளி, கல்லூரி எல்லாமே என் நினைவில் அப்படியே பசுமையாக இருக்கு.

என் அம்மாச்சியின் மறைவின் பின்னர் எனக்கு ஊர் நினைவு அடியோடு மறைந்து போய் விட்டது. ஊருக்குப் போனாலும் ஒவ்வொரு கல்லும், மரமும் அம்மாச்சியின் நினைவை எனக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும். பல தடவை குண்டு வீச்சினால் உடைந்து போயிருக்கும் எங்கள் வீட்டின் அழகும், சந்தோஷமும் என் அம்மாச்சியோடு போய் விட்டது என்றே எண்ணுகிறேன்.
ஊரைப் பற்றி எழுதாமல் என் அம்மாச்சி பற்றி எழுதியமைக்கு மன்னிக்கவும். ஊர் பற்றிய நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் ஒரு புள்ளியாய் மட்டுமே ஞாபகம் இருக்க, அம்மாச்சியுடன் திரிந்தது மட்டுமே எப்போதும் பசுமையாக இருப்பதால் அவரைப் பற்றி எழுதினேன்.

( ஸாதிகா அக்கா அழைத்த தொடர்பதிவு. )