Saturday, May 3, 2014

சாம்புவின் செல்லம்


சாம்புக்கு டென்ஷனாக இருந்தது. அட எனக்கு அப்படி என்ன டென்ஷன் என்று நீங்கள் நக்கலாக/சீரியஸாக நினைக்கலாம். கோயிலில் என் காதின் பக்கத்தில் இரைந்து கொண்டிருந்த லவுட் ஸ்பீக்கர், மேடையில் ஆடிய பெண்கள், நாடகம், பட்டிமன்றம், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் அரட்டை அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க, எனக்கு எரிச்சல் வந்தது. ஒன்றில் கை தட்டுங்கள் அல்லது மவுனமாக இருந்து தொலையுங்கள். உங்களுக்காக ஒரு கூட்டமே மேடையில் நின்று உயிரைக் கொடுத்து கத்திக் கொண்டிருக்க என்ன ஒரு அடாவடித்தனம் செய்கிறீர்கள்.
என் செல்லம் வீட்டில் என்னத்தை தின்னுச்சோ தெரியவில்லை. அம்மாவிடம் ஏற்கனவே 13 தரம் வீட்டுக்கு போகலாமா என்று கேட்டு, அவரின் முறைப்பினை பொருட்படுத்தாமல் மீண்டும் இரண்டு தரம் கேட்டு திட்டு வாங்கி, கதிரையில் முடங்கி கொண்டேன். ஏதோ பாட்டு கச்சேரி இருக்காம் அது முடியத் தான் வீட்டுக்கு போவது என்று அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். இன்னொரு முறை கேட்டால் அம்மா கச்சேரியை ஆரம்பித்து விடுவார்கள் என்று பேசாமல் இருந்தேன். தங்கையை மெதுவாக கிள்ளிவிட்டேன். தங்கை பெருங்குரலில் அழ ஆரம்பிக்க, இப்ப கூட்டத்தில் எங்கோ தலைமறைவாக இருந்த என் அப்பா ஓடி வந்து தங்கையை தூக்கிக் கொண்டார். அப்பா வெளியே செல்ல நானும் அவருடன் இணைந்து கொண்டேன்.

வெளியே வந்த பிறகு என்னால் நிம்மதியாக யோசிக்க முடிந்தது. என் செல்லம் இப்ப என்ன செய்யும் வீட்டில். சாப்பிட்டிருக்குமா? அல்லது தப்பி ஓடி இருக்குமா? சே சே தப்பி ஓடாமல் ஒரு பெட்டியில் வைத்து மூடி, ஒரு பிளாஷ்டிக் பெட்டியை கவிழ்த்து வைத்துவிட்டுத் தானே வந்தேன். வரும் முன்னர் பென் & ஜெரிஸ் ஐஸ்கிரீம் ஒரு சட்டியில் வைத்து விட்டுத் தானே வந்தேன். அதை சாப்பிட்டுருக்குமா? அல்லது அதில் விழுந்து உயிரை விட்டிருக்குமா தெரியவில்லை.
"அப்பா, வீட்டுக்கு போகலாமா", என்றேன்.
"சாம்பு, அம்மா வந்ததும் போகலாம் சரியா?", என்றார்.
காரினுள் போய் அமர்ந்து கொண்டோம்.
சூரிய ஒளி கண்களை கூச எழுந்து அமர்ந்து கொண்டேன். எப்ப கோயிலில் இருந்து வந்தோம், எப்படி கட்டிலில் படுத்தேன்...இருங்கள் என் செல்லம்.. கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தேன். தெளிவான பிளாஷ்டிக் மூடி வழியாக பார்க்க முடிந்தது. என் செல்லம் ஐஸ்கிரீமை சீண்டக் கூட இல்லை. ஒரு ஓரமாக படுத்துக் கிடந்தது. ஒரு வேளை இறந்து விட்டதோ?  விரலால் மெதுவாக தடவிக் கொடுத்தேன்.


அசைவு தெரிந்தது. என் செல்லம் கடந்த திங்கள்கிழமை தான் என் செல்லப் பிராணியாக மாறினான். இல்லை இல்லை மாற்றப்பட்டான். அதாவது வேறு வழி இல்லாமல் என் செல்லப்பிராணியாக இருக்கிறான்.
புத்தகத்தில் குறிப்பிட்டது போல திங்கள் கிழமை ஒரு ஆப்பிள், செவ்வாய் கிழமை இரண்டு ப்ளம்...இவை எதையும் அவன் சீண்டவே இல்லை. பட்டினி கிடக்கிறான். எனவே புதன்கிழமை அவனுக்கு ஐஸ்கிரீம் கொடுத்தேன். அதையும் திரும்பி கூட பார்க்கவில்லை. ஒரு வேளை சீஸ் கேக், கப் கேக் சாப்பிடுமா தெரியவில்லை. அம்மாவிடம் கப் கேக் கேட்டால் என்ன என்று நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். பிறகு என் செல்லப் பிராணியை தூக்கி எறிந்து விடுவார்கள். அம்மா, அப்பா இருவருக்கும் என் செல்லப் பிராணி வளர்ப்பு பற்றித் தெரியாது. உங்களுக்கு மட்டும் தான் சொல்கிறேன்.
ஒரு வேளை கூகிளில் ஏதாவது பதில் கிடைக்குமா? அட! என் செல்லப் பிராணி தோட்டத்தில் தானாக அலைந்து திரிந்து இலை, தழை இப்படி ஏதாவது சாப்பிடுமாம். அவை கட்டாயமாக தோட்டத்தில் தான் இருக்க வேண்டுமாம். அப்ப தான் அது ஒரு நாள் அழகிய வண்னத்துபூச்சியாக மாறுமாம். என் செல்லத்தை மெதுவாக கையில் எடுத்துக் கொண்டேன். பச்சைக் கலரில் பட்டுப் போல இருந்தது. மெதுவாக தோட்டத்தில் கொண்டு போய் விட்டேன். திரும்பி கூட பாராமல் போய்விட்டது. அப்ப புத்தகத்தில் இருந்த தகவல்கள் பொய்யா?  The very Hungry Caterpillar என்ற புத்தகத்தில் இருந்த தகவல்கள் உண்மையில்லையா?. ஒரு இலையில் ஒரு முட்டை. அதில் இருந்து வந்த காட்டர்பில்லர். அதற்கு அகோரப் பசி. திங்கள்- ஒரு ஆப்பிள், செவ்வாய் 2 ப்ளம்ஸ்.... வெள்ளி 5 ஆரஞ்சு, சனிக் கிழமை அதன் மெனு பெரிசு. கப் கேக், சீஸ் கேக், செரி பை, சீஸ்.... இப்படி ஏகப்பட்டதை நொறுக்கிவிட்டு வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை ஒரு பெரிய இலையை சாப்பிட்டு, தன்னைச் சுற்றி ஒரு கூட்டினை உருவாக்கி, அதில் 2 கிழமைகள் இருந்து ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சியாக வெளிவருகிறது. இது தான் லீசா சொன்ன கதை. அது Fiction என்று என் ஆசிரியை லீசா சொன்னதன் அர்த்தம் இப்ப எனக்கு உறைத்தது.  தினமும் என் செல்லத்தை தேடுகிறேன். காணவில்லை. அழகிய மலரில் ஒரு வண்ணத்துப்பூச்சி அமர்ந்து தேன் குடித்துவிட்டு பறந்தது. அது தான் என் செல்லமாக இருக்கும். அதை விரட்டிக் கொண்டு ஓடினேன். அது கைகளில் அகப்படாமல் ஓடி மறைந்தது.
இப்ப வெள்ளை, மஞ்சள், ப்ரவுன், இப்படி பல வர்ண நிறங்களில், பல திசைகளிலும் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இதில் எது என் செல்லம் என்று தெரியாமல் குழம்பி நின்றேன். ஒரு வேளை ஒரு பெயர் சூட்டியிருந்தால் கூப்பிட்டதும் வந்து நிற்குமோ?