வெள்ளைப் பூக்கள் உலகம் முழுதும்....என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. உண்மையில் வெள்ளைப் பூக்கள் மலர்ந்துள்ளதா?, உலகம் முழுவதும் மக்கள் போர் இன்றி சமாதானமாக வாழ்கிறார்களா?, என்ற எண்ணம் உண்டானது. எங்கு பார்த்தாலும் சண்டை, நாடுகளுக்கு இடையே போர், உள்நாட்டுப் போர்கள், உலகில் ஒரு பக்கம் மக்கள் சாப்பிட சாப்பாடு இல்லாமல் வருந்த, மறுபக்கம் போர் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் செலவாகிறது. போர் என்ற வார்த்தையே உலகில் இல்லாமல் போக வேண்டும். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் சில ஆண்டுகள் வாழ்ந்தவள் என்ற முறையில் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. சில ஆண்டுகள் வாழ்ந்த எனக்கே இன்னும் அந்த வடுக்கள் ஆறாது இருக்கும்போது அங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு... நினைத்துப் பார்க்கவே கலக்கமாக இருக்கின்றது. பெற்றோர்களை இழந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், கணவன் இல்லாமல், மனைவி இல்லாமல் வாழும் துணைகள், இப்படி பலர். இவர்களுக்கு எல்லாம் யார் கவுன்சிலிங் கொடுத்தார்கள். இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
ஜூலை மாதம் 1983ம் ஆண்டு தான் என் முதல் அனுபவம், அதாவது அது போர் இல்லை என்றாலும், போருக்கான பல படிகளில் அந்த சம்பவமும் ஒரு படி என்று சொல்லலாம். கொழும்பில் என் அப்பா ஒரு அரசாங்க ஊழியர். கொழும்பு வாழ்க்கை எப்போதும் பரபரப்பான வாழ்க்கை. எனக்கு அப்போது 10 வயது ஆகவில்லை. அந்த நாள் ஒரு சாதாரண நாள் ஆகவே பட்டது எனக்கு. வழக்கம் போல பள்ளிக்கு சென்றோம். பள்ளியில் அன்று வழக்கம் போலவே காலை வணக்க பாடல், மதிய இடைவேளை, அதன் பின்னர் எல்லோரும் கட்டாயம் வீடு சென்று சேருங்கள் என்று எச்சரிக்கையுடன் வீட்டுக்கு அனுப்பினார்கள். நானும், என் தோழிகளும் வழக்கம் போலவே ஜஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்த என் ஆசிரியை எல்லோரையும் கடிந்து கொண்டார். அதன் பிறகு பஸ் பிடித்து, நான் இருந்த குடியிருப்பினை அடைந்த போது ஒரு மயான அமைதி நிலவியது. வீட்டில் அம்மா, தங்கை, நான் சென்று சிறிது நேரம் கழித்து அப்பா, சகோதரர்கள் வந்து சேர்ந்தார்கள். மதியம் எல்லோரும் சாப்பிட, நான் மட்டும் கட்டிலில் இருந்து அப்படியே உறங்கிப் போனேன்.
நான் படுத்திருந்த கட்டிலில் ஒரு செங்கல் வந்து என் தலைமாட்டில் விழ, நான் அரைத் தூக்கத்தில் எழும்ப, எங்கும் ஒரே சத்தம், மீண்டும் கற்கள் விழுந்த வண்ணம் இருந்தன. நான் எழுந்து ஜன்னல் வழியாக பார்க்க நினைத்து, பின்னர் அந்த நினைப்பினை உதறி, என் தூக்கத்தினை உதறி, படி வழியாக இறங்கி ஓட, மீண்டும் செங்கற்கள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. வீட்டில் யாரும் இல்லை. என் உண்டியலை எடுக்க நினைத்து கைகளை நீட்டியவள் பின்னர் முடிவினை மாற்றிக் கொண்டு வெளியே ஓடி, பாத்ரூமினுள் ஒளிந்து கொண்டேன். கற்கள் விழும் சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள் எங்கே என்ற எண்ணம் வர, உடனடியாக அவர்களைத் தேட வேண்டும் என்ற கவலை, பயம் சூழ்ந்து கொண்டது. பாத்ரூமில் இருந்து வெளியே வந்து வீதியில் நின்று கொண்டேன். அங்கு கிட்டத்தட்ட ஒரு 50 பேராவது கைகளில் கத்தி, கம்புகளுடன் ஆவேசமாக நின்று கொண்டிருந்தார்கள். சிலர் என்னைக் கடந்து, எங்கள் வீட்டினுள் சென்று, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், என் உண்டியல் சகிதம் வெளியே வர, வேறு சிலர் உள்ளே நுழைவதை காண முடிந்தது. இப்ப என் உண்டியல் பற்றிய கவலை எனக்கு. அதில் குறைந்தது 150 ரூபாய்கள் இருந்திருக்கலாம் அல்லது அதிகமாக இருக்கலாம். அந்த நபரிடம் போய் கேட்டால் கொடுப்பானா என்பது தெரியவில்லை. அந்த நபர் உண்டியலை கொண்டு சென்று தெரு முனையில் இருந்த வேறு ஒரு தமிழரின் வீட்டினுள் நுழையும் வரை என் கண்கள் அவனை பின் தொடர்ந்தன. அவன் மறைந்த பின்னர் என் பெற்றோர்கள் பற்றிய நினைப்பு மீண்டும். பசி, களைப்பு, பயம் எல்லாம் சூழ்ந்து கொண்டது. முதன் முறையாக மரண பயம் வந்தது.....