Wednesday, December 26, 2012

மார்கஸ்


மார்கஸ் அந்த சிறைச் சாலைக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகியிருந்தது. மார்கஸ் ஒரு வங்கி கொள்ளையன். இது வரை கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் தன் கை வைரிசையை காட்டிவிட்டான். கொள்ளையடிக்க போகும் போது குறுக்கே யார் வந்தாலும் ஒரே போடாக போட்டுவிடுவான். இவன் செய்த கொலைகள் கிட்டத்தட்ட 5 இருக்கும். சிம்ம சொப்பனமாக இருந்தவனை அரும்பாடுபட்டுப் பிடித்தார்கள். ஒரு உள்ளூர் சிறையில் அடைத்தபோது இவன் தப்பி ஓடிவிட்டான். இவனுக்கு ஏற்ற சிறை இதுவாகத் தான் இருக்கும் என்று முடிவு செய்து, மேல் அதிகாரிகள் அனுமதியுடன் மார்கஸ் இந்த சிறையில் அடைக்கப்பட்டான். நான்கு பக்கமும் தண்ணீர் சூழப்பட்ட இடத்தில் இருந்தது இந்த சிறைச்சாலை. சிறையினை சுற்றி மூன்று பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வனாந்திரம். யாரும் தப்பி போக நினைத்து காட்டுக்குள் போனால் இரண்டு நாட்களில் மரணம் நிச்சயம் என்று சொல்லும் அளவுக்கு கொடிய மிருகங்கள் நிறைந்திருந்த காட்டுப்பகுதி அது. தப்பித்துப் போக நினைப்பவர்களுக்கு ஒரே வழி கடல் மட்டுமே. கடல் வழியாக நீந்தி மட்டுமே கரை சேர  முடியும். கிட்டத்தட்ட 100 மைல்கள் நீந்தினால் கரை சேரலாம் உயிரோடு இருந்தால். இந்த தகவல்கள் எல்லாம் ஜெயிலர் பீட்டர் சொன்ன தகவல்கள். அவர்  சொன்ன தகவல்கள் உண்மை தான் என்று சக கைதிகள் உறுதி செய்தார்கள். அந்த சிறைச் சாலையிலிருந்து உயிரோடு வெளியே போனவர்கள் யாருமே இல்லையாம். உள்ளேயே இருந்து மெதுவாக மரணத்தை தழுவிக் கொள்ள மார்க்கஸ்ஸூக்கு விருப்பம் இல்லை. எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் சிறைச்சாலையின் கம்பிகள் சூழ்ந்த வளாகத்தில் நின்று அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அதை தன் வசம் இருந்த பேப்பரில் சங்கேத வார்த்தைகளினால் குறித்துக் கொண்டான். ஒரு கிழமைக்கு ஒரு தடவை வரும் கப்பல் தான் அவனின் ஒரே ஒரு நம்பிக்கை. அந்த கப்பலில் எப்படியாவது ஏறிக் கொண்டால் ஏறக்குறைய தப்பியது போலத் தான் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் வேலியோரம் நின்று கடலை வெறித்துக் கொண்டிருந்தபோது பீட்டர் அருகில் வந்தார். என்ன மார்கஸ்,  யோசனை பலமா இருக்கே?", என்றார்.
பதில் சொல்லாது வெறித்தான்.
" இதோ பார் மார்கஸ்", என்று ஒரு செடியினைக் காட்டினார்.
அந்தச் செடியில் குழல் போல நீண்ட பூக்கள், அழகிய நீல நிறத்தில் பூத்துக் குலுங்கின.
" இந்த வகை பூக்கள் வேறு எங்கும் நீ பார்க்க முடியாது. ", என்றார்.
இப்ப அதுக்கென்ன என்பது போல பார்வையினை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
" மார்கஸ், நீ இங்கிருந்து தப்பி போகலாம் என்று கனவிலும் நினைக்காதே. இங்கிருந்து போக வேண்டும் எனில் ஒன்று நீ இறக்க வேண்டும். அல்லது அரசாங்கம் இரக்கப்பட்டு உன்னை விடுதலை செய்தால் தான் உண்டு. எனவே இந்த வேலியோரம் நின்று சமுத்திரம், காடு இவற்றை வெறித்துப் பார்ப்பதை நிப்பாட்டு", என்று மிரட்டும் குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.


பீட்டர் எல்லோரிடமும் அந்த நீண்ட குழாய் போன்ற பூக்களை மிகவும் சிலாகித்துப் பேசுவார். யாருமற்ற தீவில் அந்தப் பூக்கள் எல்லோர் கண்களுக்கும் விருந்து படைத்தன என்பது உண்மைதான். மார்கஸ் கூட தன்னை மறந்து பூக்களை ரசித்ததுண்டு. சிறையின் கம்பி வேலி மீது படர விடாமல் அடிக்கடி கத்தரித்து விடுவார்கள் அங்கிருப்பவர்கள். எங்கே அந்தச் செடி வேலி மீது படர்ந்து, முற்கம்பிகள் மீது அரணாக மூடி, சிறையில் இருப்பவர்கள் அதன் வழியாக தப்பித்து ஓடி விடாமல் இருக்க இந்த ஏற்பாடு.

 பீட்டர் அந்த இடத்தினை விட்டுச் சென்றதும் எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று மார்கஸூக்கு வெறி உண்டானது. பீட்டரின் திமிர் தனத்தை அடக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
மார்கஸ் அங்கு வந்து 4 மாதங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு கிழமையும் திங்கள் வரும் கப்பல், அதில் வரும் சாமன்களை ஏற்ற சிறையில் இருந்து செல்லும் ஊர்திகள், அந்த ஊர்திகளை கடுமையாக சோதனை செய்த பின்னர் அனுப்பும் அதிகாரிகள் என்று பலவற்றையும் அமைதியாக கிரகித்துக் கொண்டான். அந்த ஊர்திகள் வழியாக தப்பிச் செல்வது எளிதான காரியம் அல்ல. வேறு ஏதாவது யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சிறையில் பல வருடங்களாக இருக்கும் கைதி மைக்கேல் தான் ஒரே ஒரு நம்பிக்கை. கிட்டத்தட்ட 60 வயதாவது இருக்கும் மைக்கேலுக்கு. அவர் ஏன் சிறை வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. மிகவும் அப்பாவி போல தெரிந்தார். சிறை அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். மார்கஸ் மைக்கேலுடன் வலியப் போய் பேசி நட்பு பாராட்டினான். மைக்கேல் ஒவ்வொரு நாளும் சிறையில் சேரும் குப்பைகளை சேகரித்து, ஒரு பெரிய கை வண்டியில் போட்டு, சிறைக்கு வெளியே போய் வைத்து வருவார். வாசலில் நிற்கும் காவலாளி ஈட்டி போன்ற கூரான முனை கொண்ட ஒரு கம்பியினால் கை வண்டிக்குள் இருக்கும் குப்பைகளை குத்திக் கிளறி ஒரு வழி பண்ணிய பிறகே வெளியே போக அனுமதிப்பார்.


மைக்கேல் ஒரு நாள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த போது அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நடந்தான் மார்கஸ். அவர் அசந்த நேரம் கை வண்டிக்குள் ஏறி ஒளிந்து கொண்டான். கை வண்டி வாசலைக் கடந்தபோது  காவலாளி ஈட்டியினை எடுத்துக் கொண்டு வந்து குத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய குத்துகள் பின்னர் வேகமெடுக்க ஆரம்பித்தன. லாவகமாக நழுவப்பார்த்தான் மார்கஸ். ஆனால், தோள்பட்டையில் சரமாரியாக விழுந்த குத்துக்களுக்கு வீரிட்டுக் கத்த நினைத்தவன் பற்களை கடித்துக் கொண்டே தாங்கிக் கொண்டான். ஒரு வழியாக சோதனை முடிந்ததும்  வெளியே வண்டியை அனுமதித்தான் காவலாளி.

கூரான ஆயுதத்தில் இரத்த்க கறையினை காவலாளி கவனிக்கவில்லையோ அல்லது அவனின் கவலையீனமோ என்று விளங்கவில்லை மார்கஸூக்கு. அந்த சிறைச்சாலையில் இருந்து யாரும் தப்பி போக மாட்டார்கள் என்று நம்பிக்கையாக கூட இருக்கலாம். 40 வருடங்களின் முன்னர் யாரோ ஒரு நபர் தப்பித்து செல்ல நினைத்து, கடலில் குதித்து உயிரை விட்டதாக ஜெயிலர் சொன்னது ஞாபகம் இருந்தது. இவனும் அப்படியே செத்து தொலையட்டும் என்று நினைத்தானோ என்பதும் புலப்படவில்லை.

எது எப்படியோ வெளியே வந்தாயிற்று. இருட்டும் வரை அங்கேயே இருந்தாக வேண்டும். கப்பல் இங்கிருந்து நகர இன்னும் சிலமணிநேரங்கள் இருந்தன. ஈட்டி குத்திய இடத்தில் இருந்து இரத்தம் ஓடியது. குப்பையிலிருந்த பழைய துணியின் மூலம் கட்டுப்போட்டுக் கொண்டான். நினைத்தது போல கப்பலில் ஓடிச் சென்று ஏறமுடியவில்லை. ஜெயில் அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் விரைந்து மறைந்தது.

மார்கஸ் சிறையில் இல்லை, தப்பிவிட்டான் என்று இரவு தான் பீட்டருக்கு விளங்கியது. இந்நேரம் எந்தக் கொடிய மிருகத்துக்கு இரையாகி இருப்பானோ தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டே எச்சரிக்கை மணியின் பொத்தானை அழுத்தினான். சிறைச்சாலை முழுவதும் அலாரம் அடித்தது. சிவப்பு விளக்குகள் மின்னின. அதிகாரிகள் துப்பாக்கிகளுடன் நாலா புறங்களிலும் விரைந்தோடினார்கள். மார்கஸ் இருந்த அறை சோதனை போடப்பட்டது.
மேலிடத்துக்கு தகவல் அனுப்பபட்டது.  காலையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று மேலிடத்திலிருந்து தகவல் வந்தது. அதிகாலையில் காட்டுக்குள் ஆட்கள் அனுப்பபட்டார்கள். மார்கஸின் உடலையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பீட்டரின் இலட்சியமாக இருந்தது. மார்கஸ் கடல் வழியாக தப்பிச் சென்றிருப்பான் என்ற கோணத்தில் ஒரு பக்கம் விசாரணை நடந்தது. பீட்டரின் தலைமையில் ஒரு குழு கடலின் மறுபக்கம் அனுப்பபட்டார்கள். அது பாறைகள் சூழப்பட்ட இடம். சிறு குழுக்களாக பிரிந்து தேடத் தொடங்கினார்கள். யாருக்கும் மார்கஸ் உயிரோடு இருப்பான் என்ற நம்பிக்கை வரவேயில்லை பீட்டர் உட்பட. தேடுதல் முடிந்து அனைவரையும் ஒரு இடத்தில் கூடுமாறு உத்தரவிட்டார் பீட்டர். ஏதோ பேச முற்பட்டவர் சிறிது தூரத்தில் நீல நிற குவளைப்பூக்கள் பாறைகளின் மேல் தெரிவதைப் பார்த்ததும் அருகில் ஓடினார். இது எப்படி இங்கே? ஒரு கொத்தாக பூக்கள் இருந்தன. யாரோ இவருக்காகவே வைத்திருந்ததைப் போல இருந்தது. இதை இங்கே வைத்தவன் மார்கஸ் தான் என்பது பீட்டருக்கு உறுதியாக விளங்கியது. எனக்கே சவாலா, என்று கருவியபடி, மார்கஸ் இன்னும் சாகவில்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான். அவனை பிடிக்கும் வரை நான் ஓயப்போவதில்லை, என்று சபதம் பூண்டார். இதன் பிறகு கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார் பீட்டர். அந்த 25 வருடங்களும் மார்கஸ் பற்றி நினைக்காத நாள் இல்லை. அவன் எப்படி தப்பித்துச் சென்றான், அவன் எங்கே இருக்கிறான் என்பதோ யாருக்கும் புரியாத புதிர். 




























Sunday, December 2, 2012

சிங்கு மாமா



"30 நாட்களில் ஹிந்தி கற்றுக்கொள்ள இந்த நம்பரை அணுகவும்", என்ற விளம்பரத்தினை வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் செழியன்.
"அப்பா, வாங்கப்பா போகலாம்", என்று மகள் பல முறை அழைத்தபோதும் பதில் சொல்லாது விளம்பரத்தினை வெறித்துக் கொண்டே நின்றான்.

ஒரு பேப்பரில் ஹிந்தி கற்றுத் தருபவரின் தொலைபேசி இலக்கம், முகவரி, மின்னஞ்சல் முகவரி  போன்றவை இருந்தன. தன்னுடைய கைத் தொலைபேசியை எடுத்து தகவல்களைக் குறித்துக் கொண்டான்.
மகள் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்திருந்தாள். மகளை வாரி அணைத்துக் கொண்டான். மன்னிப்பு கேட்டபடி கன்னத்தில் மெதுவாக இதழ் பதித்தான்.
"அப்பா, அது என்னப்பா?", என்றாள்  ஐந்து வயது நிரம்பிய அனுஷா.
" அதுவா? அது ஹிந்தி கற்றுத் தராங்களாம்", என்றான்.
"அப்பா, ஹிந்தி என்றால் என்னப்பா?", என்றாள் மகள்.
"அது ஒரு மொழி செல்லம். ஸ்பானிஷ், ப்ரெஞ், உருது போல  ஹிந்தியும் ஒரு மொழிடா", என்றான்.
"உங்களுக்கு ஹிந்தி தெரியுமாப்பா?",  என்றாள் அனுஷா.
"ம்ம்ம்ம்... 40 வரை எண்ணத் தெரியும்", என்றான் பெருமையுடன்.
அப்பா எனக்கும் சொல்லிக் கொடுப்பீங்களா?", என்ற மகளை காரினுள் அவளுக்குரிய சீட்டில் வைத்து, பெல்ட் அணிந்து வீட்டினை நோக்கி காரினை செலுத்த தொடங்கினான்.
அப்பா, உங்களுக்கு நாற்பது வரை எண்ண யார் சொல்லித் தந்தார்கள்?", என்றாள் மகள்.
" சிங்கு மாமா தான் சொல்லிக் கொடுத்தார்கள்", என்றான்.
"ஏன் அவர் நாற்பதுக்கு பிறகு சொல்லித் தரவில்லை?", என்று மீண்டும் கேள்வி. மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவளிடம் பேசிவிட்டு திரும்பி பார்க்க அனுஷா அரைத் தூக்கத்தில் இருந்தாள்.
செழியனுக்கு ஹிந்தி கற்றுக் கொண்ட நாட்கள் மனதில் நிழலாடியது. இலங்கையில் இந்திய இராணுவம் 1980 களின் இறுதிப் பகுதியில் வந்து இறங்கினார்கள். இவனின் வீடு இருந்தது நகரின் பிரதான தெரு. இராணுவத்தினரின் சோதனைச் சாவடி கடந்தே இவர்கள் தினமும் போக வேண்டும்.  இவனுக்கு அப்போது 12, 13 வயது தான் இருந்திருக்கும். இராணுவத்தினரை கடந்து பள்ளிக்கு செல்லுதல், விளையாட செல்லுதல் என்று இவனின் பொழுது இனிமையாக சென்றது. அரணில் காவலுக்கு நின்ற நெடிய ஒரு இராணுவ வீரன் இவன் போகும் போது கைகளை ஆட்டி, சிநேகமாக புன்னகைப்பார். முதலில் பயம் காரணமாக  ஒரே ஓட்டமாக ஓடி விடுவான். நாட்கள் செல்லச் செல்ல இவனும் பதிலுக்கு புன்னகைக்கத்தான்.

ஒரு நாள் அவர் இவனிடம் வலிய வந்து பேசினார். எப்பவும் தூரத்தில் பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவான். இப்ப பக்கத்தில் பார்த்ததும் சிறிது அச்சம் உண்டானது.  அவர் இவனின் கைகளை பிடித்து குலுக்கினார்.
"உன்னைப் பார்த்தால் என் மகன் போலவே இருக்கிறாய்", என்றார்.
"அவனுக்கும் உன் வயது தான் இருக்கும்", என்றவர், " உன் பெயரென்ன?", என்றார் ஆங்கிலத்தில்.
"செழியன்", என்றான் தயங்கியபடி. அப்பா பார்த்தால் முகுகில் நாலு அப்பு அப்பி விடுவார் என்ற எண்ணம் வர ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். இப்படியே உருவான நட்பு கொஞ்சம் வலுப்பெற்றது.
ஒரு நாள் அவரிடம், " நீங்கள் என்ன மொழி பேசுவீங்கள்?", என்றான் ஆங்கிலத்தில்.
" நான் ஹிந்தி பேசுவேன். ஏன் உனக்கு பழக விருப்பமா?", என்றார்.


அப்பாவை நினைத்தால் குலை நடுங்கியது இருந்தாலும் அவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டான். ஒவ்வொரு நாளும் 5 இலக்கங்கள் சொல்லித் தருவதாக ஏற்பாடு.
ஏக், தோ, தீன்.... என்று அவர் ஹிந்தியில் சொல்ல இவன் அதை மனப்பாடமாக வைத்து ஒரு நோட்டில் குறித்துக் கொண்டான்.
கிரிக்கெட் விளையாட போகும் போது எடுக்கும் ரன்களை ஹிந்தியில் சொல்ல நண்பர்கள் வாயடைத் நின்றார்கள்.
டேய், எப்படி உன்னாலே முடியுது? எங்களுக்கும் சொல்லித் தர முடியுமா?, என்றார்கள். இவன் பெருமையாக இவனின் இராணுவ நண்பர் பற்றிச் சொல்லி, அவரிடம் அனுமதி கேட்ட பிறகு உங்களை எல்லோரையும் கூட்டிச் செல்கிறேன், என்று உறுதி அளித்தான்.
இந்த விடயம் எப்படியோ அங்கு பரவி, இங்கு பரவி அப்பாவின் காதுகளில் விழுந்தது. ஒரு நாள் இவன் குருவிடம் பாடம் கற்றுக் கொண்ட பின்னர் வீட்டுக்கு வரும் போது அப்பா கையில் பிரம்போடு காத்திருந்தார்.
" சகவாசத்தைப் பாரு. துரைக்கு இராணுவத்தில் ப்ரெண்டு கேட்குதோ", என்றபடி பிரம்பினால் விளாசித் தள்ளிவிட்டார்.


இனிமேல் அந்தப் பக்கம் போ இருக்கு கச்சேரி. அவர்களுக்கும் எங்களுக்கு ஒத்து வராதுப்பா", என்றார் அப்பா விழிகளை உருட்டியபடி.
அதன் பிறகு இவனின் ஹிந்தி கற்றுக் கொள்ளும் ஆசையும் போய்விட்டது. வழியில் எங்காவது அந்த இராணுவ வீரனை கண்டால் தலை குனிந்தபடி கடந்து சென்றுவிடுவான். அவரின் பெயரை இவன் கேட்டதில்லை. அவரின் பெயர் பொறிக்கப்ப்பட்ட அடையாள அட்டையில் விரேந்திர சிங் அல்லது லாலா சிங் என்ற பெயர் மட்டும் ஞாபகம் இருந்தது.  சிங் மாமா என்பது மருவி சிங்கு மாமா என்ற அந்த நபரும் காலப் போக்கில் மறைந்து போனார்கள். நெடிய உருவம், தீர்க்கமான கண்கள்,  கூரான நாடி  என்று அவரின் உருவம் இப்பவும் ஞாபகம் இருந்தது. அவர் சொல்லிக் கொடுத்த நம்பர்கள் மட்டும் அப்படியே மனதில் பதிந்து இருந்தது. மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆசை, தாகம் மட்டும் தணியவில்லை. வெளிநாடு வந்தபிறகு ப்ரெஞ், ஸ்பானிஷ் கற்றுக் கொண்டான். இப்ப ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டான். 



அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு, வகுப்பில் இணைந்து கொண்டான்.
முதல் நாள் வகுப்பு முடிந்து வந்ததும் மகள் கேட்டாள், "அப்பா, உங்கள் டீச்சர் பெயர் என்னப்பா?", என்றாள்.
" சிங்கு மாமா", என்றான் புன்முறுவலுடன். வகுப்பில் ஆசிரியர் சொன்ன பெயர் எதுவும் மனதில் பதியவில்லை. நெடிய உருவம், தீர்க்கமான கண்கள், கூரான நாடியுடன் இருந்த அவரின் பெயர் "சிங்கு மாமா" தான் எப்போதும் செழியனுக்கு.

Friday, November 9, 2012

கறி பண்









இந்த ரெசிப்பி என் சகோதரி எனக்கு அனுப்பினார். அவர் You tube இல் பார்த்து செய்த ரெசிப்பி. ஆனால், வீடியோவில் அந்த அக்கா சொன்னது போல தண்ணீர் விட்டால் பண் வராது என்பது என் கருத்து. அவரின் தண்ணீர் அளவு அதிகம். ஆனால் பாருங்கள் சூப்பராக இருக்கிறது பதம் ( அவரின் வீடியோவில் ). நான் அரை கப் தண்ணீர் விட்டேன்.

மா - 2 கப்
முட்டை - 2
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன் ( கொழுப்பு குறைவான மாஜரீன் தான் நான் பயன்படுத்தினேன் )
சீனி - 2 டீஸ்பூன்
warm water - 1/2 கப்

எண்ணெய்- தேவையான அளவு
கறி - விரும்பிய ஏதாவது ஒரு கறி வகை. சீனிச் சம்பலும் பயன்படுத்தலாம். என் குறிப்பில் ரெசிப்பி இருக்கு. இங்கே பாருங்கள். நான் செய்தது பிஷ் டின் கறி.
 நகச்சூடான தண்ணீரில் ஈஸ்ட், சீனி கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். ஒரு முட்டையினை நன்கு அடித்து வைக்கவும். பட்டர் மைக்ரோவேவில் உருக்கி வைக்கவும்.
மாவினை எடுத்து, நடுவில் குழி பறித்து, அதனுள் முட்டை, ஈஸ்ட் கலவை, பட்டர், உப்பு சேர்த்து பிசையவும். கொஞ்சம் கைகளில் ஒட்டும் பதமாக இருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கைகளினால் மிருதுவாக பிசையும் போது ஒட்டும் தன்மை போய்விடும். மிகவும் தண்ணீராக இருந்தால் மா தூவி பிசையவும். ஒரு சட்டியினுள் வைத்து, மேலே எண்ணெய் பூசி, ஈரத்துணியால் ( தண்ணீர் சொட்டச் சொட்ட இல்லாமல் பிழிந்து போடுங்கள் ) மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரத்தின் பிறகு மாவினை திறந்து பார்த்தால் பொங்கி வந்திருக்கும். ஒரு சிறந்த மல்யுத்த வீரன் போல மாவின் மேல் ஒரு குத்து விடுங்கள். மா அடங்கிவிடும். இப்ப மீண்டும் லேசாக பிசைந்து ஒரு 10 நிமிடங்கள் வையுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கவும். உங்களுக்கு பெரிய சைஸ் கறி பண் வேண்டும் எனில் பெரிய உருண்டைகளாகவும், சின்ன சைஸ் வேண்டும் எனில் ... மீண்டும் மூடி ஒரு பத்து நிமிடங்கள் வையுங்கள். இந்த இடைவெளியில் பேக்கிங் ட்ரேயில் ஷீட் விரித்து ரெடியாக வைக்கவும். உங்கள் அவனில் ஏதாவது பண்டம், பாத்திரம் இருந்தால் ( என்னைப் போல ) இருந்தால் வெளியே வைத்து, பேக் செய்வதற்கு ரெடியாக்குங்கள். 
 இப்ப மாவினை எடுத்து, 6 இஞ்ச் ஆரம்( அதான்பா டயாமீட்டர்) இருக்கும் வட்டங்களாக உருட்டி, நடுவில் கறி வைத்து, முக்கோண சேப்பில் மடித்து வைக்கவும். மடித்த பண்களை ட்ரேயில் அடுக்கி, மேலே இன்னொரு முட்டை இருக்கு அல்லவா? அதனை அடித்து, பிரஸ் உதவியினால் மேலே பூசிக் கொள்ளவும். இப்ப அவனை 375 ஃபாரனைட் வெப்பத்துக்கு ப்ரீஹீட் செய்து, பண்களை வைத்து, 20- 30 நிமிடங்கள் பேக் செய்யவும். பண்களை அவனில் இருந்து வெளியே எடுத்ததும் மேலே கொஞ்சமாக பட்டர்/மாஜரீன் பூசிக் கொண்டால் இப்படி மினுப்மினுப்பாக இருக்கும்.

குறிப்பு: நான் இங்கே பாருங்கள் என்று குறிப்பிட்டதில் எதுவும் வரவில்லை. ஏன் என்று விளங்கவில்லை? லிங்க் சேர்க்கும் ஆப்ஸன் வேலை செய்யவில்லை. எனவே சோம்பல் படாமல் " சீனிச் சம்பல் " என்பதை தேடுக- வில் போட்டால் என் ரெசிப்பி கிடைக்கும். வீடியோ லிங்க் இருக்கு விரும்பினால் போய் பாருங்கள். ஈஸ்ட் நான் எப்போதும் ப்ரீஸரில் தான் வைப்பேன். வெளியில் வைத்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். 
( http://www.youtube.com/watch?v=t-byUSegIAY) 

Saturday, November 3, 2012

அற்பனுக்கு பவுசு..


இந்த Tide என்று ஒரு பொருள் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா? அதாவது துணிகள்  தோய்க்க பயன்படும் சோப்பு. இது திரவ வடிவிலும், பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. இது தவிர கலர் கொடுக்க பயன்படும் மார்க்கர்ஸ் போன்றும் கடைகளில் கிடைக்கிறது. நீங்கள் நல்லா மெனக்கெட்டு ட்ரெஸ் பண்ணி பார்ட்டிக்கு போறீங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், போகும் வழியில் ஆடையில்  கறை அல்லது அழுக்கு பட்டா எரிச்சல் வரும். அப்போ இந்த டைட் மார்க்கரை மேலே லேசாக பூசினால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதெல்லாம் டிவியில் பார்த்த விளம்பரம். மற்றும்படி நான் இதெல்லாம் வாங்கியதில்லை. பார்ட்டிக்கு போகும் போது அழுக்குபட்டாலும் கலங்காத பரம்பரை எங்களுடையது. இந்த டைட் சோப்பு பிரபலம் ஆக காரணம். அதன் தரம். இதில் தோய்த்தால் ஆடைகள் பளிச் தான்.

ஊரில் இருந்த போது சன்லைட் சோப்போ அல்லது மூன்லைட்டோ ஏதோ ஒரு சோப்பினை ஆடையினை விரித்து வைத்து, சோப்புக் கட்டியினை இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஒரு இழுவை இழுத்து, தண்ணியில் அலசி, கொடியில் காயப்போட்டால் வேலை முடிந்தது.
இந்தியாவில் தண்ணீர் வித்யாசம் காரணமாக எந்த சோப்பும் வேலைக்கு ஆகவில்லை. அப்போது தான் என் அப்பா முதன் முறையாக டைட் பொடி வாங்கி வந்தார்கள். சூப்பரான மணம், தரம். அதன் பிறகு டைட் எங்கள் குடும்ப அங்கத்தினர் போல ஆகிப்போனார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் டைட் தான் எப்போதும் வாங்குவோம்.
அமெரிக்கா வந்த பிறகு டைட் திரவ வடிவில் வாங்கினாலும், எகிறும் அதன் விலை கண்டு வேறு ப்ராண்டுகள் வாங்கி ஆடைகள் தோய்ப்பதுண்டு. அதுவும் ஒரு குட்டி ( 8 தடவை தான் ஆடைகள் தோய்க்க முடியும் என்று கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தாலும் ) காலனின் விலை பத்து டாலர்களுக்கு மேல். இப்படி வாங்கி, ஆடைகள் தோய்க்க கட்டுபடியாகுமா? எனவே  வேறு பக்கம் திரும்ப வேண்டியதாகிவிட்டது.
எல்லோரும் என்னைப்போல் மனதை சமாதானப்படுத்தி வேறு பக்கம் திரும்பவில்லையாம். எப்படி என்கிறீர்களா? கடைகளில் களவு போகும் பொருட்களில் இது முன்னணியில் இருக்கும் பொருளாம். இதை திருடி வெளியில் குறைந்த விலைக்கு விற்கிறார்களாம் சிலர். கடைகளில் உஷாராகி, இந்தப் பொருட்களை ஷோகேஸில் வைச்சு பூட்டி இருக்கிறார்கள். சவரம் செய்யப்பயன்படும் ஷேவிங்செட் வரிசையில் இதுவும் இப்ப ஷோகேஸில். உங்களுக்கு கட்டாயம் வாங்கி ஆகவேண்டும் எனில் கடையில் வேலை செய்பவர்களிடம் போய் கேட்க வேண்டும்.
போன கிழமை நான் கடைக்கு போனபோது இந்த பொருள் சேல் போட்டிருந்தார்கள். 50% தள்ளுபடி. வாங்கலாமா வேண்டாமா? என்று கொஞ்ச நேரம் யோசனை செய்த பின்னர் கடையில் வேலை செய்யும் அக்காவிடம், அதை எடுத்து தாங்கள் ப்ளீஸ், என்றேன். இடுப்பில் பத்திரமாக இருந்த சாவியை எடுத்து, கவனமாக திறந்து,கைகளை நீட்டிக் கொண்டு நின்ற என்னிடம் கொடுக்காமல், ஒரு கையால் பிடித்துக் கொண்டே, மறு கையால் ஷோகேஸினை பூட்டி, அதனை இரண்டு தரம் இழுத்துப் பார்த்துவிட்டு, ஒரு வெற்றிச் சிரிப்பு சிரித்தார். சரி, அதைக் இப்படிக் கொடுங்கள் என்றேன்.
இல்லை பரவாயில்லை. நானே கவுன்டர் வரை கொண்டு வருகிறேன், என்று சொன்னதோடு நில்லாமல் கவுன்டர் வரை கொண்டு வந்து, அவரே பில்லும் போட்டு, ரசீதை என் கையில் கொடுத்த பிறகு தான் டைட் பாட்டிலை என்னிடம் கொடுத்தார். நான் அதற்கு கொடுத்த விலை $5. ஆனால், ஒபாமா ரேஞ்சுக்கு அவ்வளவு பாதுகாப்பு இந்தப் பொருளுக்கு.

எங்க அம்மாச்சி சொல்வார்கள், அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம், என்று.

இப்படி Tide திருடி ஆடைகள் சுத்தமாக போட வேண்டும் என்று நினைப்பவர்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அப்படி சுத்தமாக ஆடைகள் போட்டு என்ன வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கா போக போகிறார்கள். வெள்ளை மாளிகையின் வாசலில் நிற்கும் செக்யூரிட்டி   சல்யூட் அடிச்சு உள்ளே கூப்பிடவா போறார். அந்த வேலியோரம் நின்று ஒரு போட்டோ பிடிச்சுட்டு வீட்டுக்கு வரவேண்டியது தான்.


*************************
அந்தரத்தில் காற்சட்டை



சமீபத்தில் ஒருவர் சொன்னார், ஒரு பள்ளியில் பழைய பெல்ட்களை ( இடுப்பு பட்டி - சரியான தமிழா தெரியவில்லை ) தானமாக/இலவசமாக வழங்கும்படி கோரிக்கை வைத்தார்களாம். அதான்பா இந்த டவுசர், காற்சட்டை கீழே விழாமல் உறுதியாக இடுப்புடன் கட்டி வைத்திருக்க பயன்படுமே அதே தான். எனக்குத் தான் காது மந்தமோ என்று நினைத்து அருகில் நின்ற என் தோழியிடம் கேட்டேன். அவரும் என்னைப் போல ஙே ஙே தான். அந்த நபர் சொன்னார், அட! பெல்ட்டேதான், என்று..
சிலரை பார்த்திருப்பீர்கள் பான்ட், டவுசர் இடுப்பில் நிற்காது (saggy pants ). மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காமல் எங்கோ அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும். அட என்ன கொடுமை, என்று நாட்டுக்கு வந்த புதிதில் நினைத்திருக்கிறேன்.
அந்த நபர் தொடர்ந்தார், உங்களுக்கு தெரியுமா இந்த பெல்ட் அணியாமல் காற்சட்டை, நீள டவுசர் போடும் பழக்கம் எங்கே தோன்றியது என்று?, கேட்டார்.
இதுக்கெல்லாம் ஒரு வரலாறா? நல்ல டமாஷா இருக்கே, என்று சிரிப்பு வந்தது.
பெல்ட் அணியாமல் பான்ட்(pants) போடும் பழக்கம் முதன் முதலில் தோன்றியது சிறைச்சாலைகளில் தானாம். காரணம்: இந்த பெல்டை  கொழுவி கைதிகள் தற்கொலை செய்யாமல் தடுக்க இந்த ஏற்பாடாம். அது போல ஷூக்களுக்கு லேஸ்களும் வழங்கப்படுவதில்லையாம்.

இந்தப் பழக்கமே பின்நாளில் ஸ்டைல்/பாஷன் என்று உருவாகிவிட்டதாம். இதைக் கடைப்பிடித்து பள்ளிகளுக்கு தொங்கும் பான்ட்ஸுகளுடன் வந்த விடலைகளுக்கு பள்ளி நிர்வாகமே பெல்ட்கள் வழங்க முடிவு செய்துள்ளதாம். நல்ல முடிவு தான். சரி. இதனைப் பார்த்து மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய பெல்ட்களை கொண்டு போய் கொடுத்தாலும் மாணவர்கள் இதை ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு அணிந்து வருவார்கள் என்பது எவ்வளவு நிச்சயம். ஒரு பெல்ட் வாங்கி  கொடுக்ககூட முடியாமல் பெற்றோர்கள் இருப்பார்களா? அவர்கள் பெல்ட் வாங்கி கொடுத்து, இவர்கள் கட்டாமல் இப்படி சுத்தினால் யார் என்ன செய்ய முடியும்?  இதென்னவோ வேண்டாத வேலை என்றே எனக்கு படுகிறது.



































Sunday, October 28, 2012

வீட்டினைத் தேடி ஒரு பயணம் ( இறுதி பாகம் )


இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும் ஒரு சிறு கிராமம் தான் தேவாவின் சொந்த ஊர். அப்பா ஊரில் மிகவும் செல்வாக்கானவர்.  சொந்தவீடு கட்ட வேண்டும் என்பது அப்பாவின் நீண்ட நாளைய கனவு. நிலம் வாங்கி, வீடு இப்படித் தான் அமைய வேண்டும் என்று அப்பாவின் விருப்பபடியே கட்டப்பட்டது. சமையல் அறை, சாமி அறை இரண்டும் அம்மாவின் எண்ணப்படி உருவானது. சாமி அறைக்கு தேக்கில் உருவான கதவுகள், சாமி படங்கள் வைக்க ஏதுவாக ஷெஃல்ப்கள், சுவரோடு கட்டப்பட்ட ஸ்டீல்  அலமாரிகள், சுவருக்கு அழகான பெயின்ட் பூச்சுகள் என்று அமர்களமாக திட்டமிட்டுக் கட்டினார் அப்பா. தினமும் பூக்கள் கொண்டு பூசை செய்வார் அம்மா. அவ்வளவு சுத்தமாக இருக்கும் சாமி அறை.

1980 களின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற குண்டு வீச்சுகளால் வீடு சேதமடைந்த போதும் சாமி அறை அப்படியே இருந்தது. பல நேரங்களில் அந்த அறையே படுக்கை அறையாக பயன்படுத்தப்பட்டது. மிகவும் உறுதியாக, குண்டு துளைக்காமல் இருந்தபடியால் ஒரு பதுங்கு குழி போல அரணாக இருந்தது. வெளிநாடு வரும் வேளையில் உறவினர்களிடம் சாவியை கொடுத்த போது அம்மாவின் கண்கள் கலங்கியதை தேவா கண்டான். நாங்கள் எப்படியும் 2 வருடங்களில் திரும்ப ஊர் வந்துவிடுவோம் அது வரை எங்கள் வீட்டினை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டன.

அப்பாவின் மறைவுக்குப் பின்னர் ஊர் போகும் எண்ணமும் அடியோடு மறைந்து போயிற்று. தற்போது வீட்டில் யாரோ குடியிருப்பதாக அம்மா சொல்வார். யார் என்று அறியும் ஆர்வம் தேவாக்கு இருந்ததில்லை. ஊர் போய் அந்த நபரை விரட்டி விட்டு, வீட்டினை புனரமைத்து, யாராவது நம்பிக்கை ஆனவர்களிடம் கொடுத்துவிட்டு, திரும்ப தன் வேலைகளை கவனிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் தேவா. 
கொழும்பில், விமான நிலையத்தில் காத்திருந்த வேலு மாமாவை அடையாளம் கண்டு, அவருடன் ஊர் போய் சேர்ந்த போது அம்மா மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். 
தம்பி, நீங்கள் தங்குவதற்கு என் நண்பரின் வீட்டினை கேட்டிருக்கிறேன், என்று இழுத்தார் வேலு மாமா.
ஏன் மாமா உங்க வீட்டில் நாங்கள் தங்க அனுமதியில்லையா என்று கேட்டவனை மறு பேச்சில்லாமல் வீட்டுக்கு கூட்டிச் சென்றார்.
மாமாவின் மகள் தேவகியும் இரண்டு குழந்தைகளுடன் அங்கே இருந்தாள். சிறு வயதில் தேவகியுடன் விளையாடியது, சண்டை போட்டது எல்லாம் ஞாபகம் வந்தது. தேவகி தங்கவிக்ரம் போல அவ்வளவு அழகு. பழைய கலகலப்பு அப்படியே இருந்தது அவளிடம். புறாக்கூடு போல வீட்டில் எப்படி இவ்வளவு பேர்?  அதில் நான் வேறு என்று கொஞ்சம் வருத்தம் உண்டானது தேவாக்கு.
மாமாவிடம் தேவகியின் கணவன் பற்றிக் கேட்க நினைத்தவன் எப்படிக் கேட்பது என்று தயக்கத்தினால் கேட்காமல் இருந்து கொண்டான். மாமாவே சொல்லட்டும். அது வரைக்கும் சும்மா இருப்பதே புத்திசாலித்தனம் என்று முடிவு செய்து கொண்டான். ஒரு வேளை அவள் கணவன் இறந்து போய்விட்டானோ? என்று நினைத்தவன் தேவகியின் நெற்றியில் இருந்த குங்கும பொட்டினைக் கண்டதும் அப்படி இருக்காது என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

இரவு அங்கேயே கழிந்தது.

டீயுடன் காலை வணக்கம் சொன்னாள் தேவகி. அம்மா அங்கிருந்த பாயில் ஓய்வாக அமர்ந்து தேவகியின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். தேவா போய் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். தேவகி சமையல் அறையினுள் சென்றதும் யாருக்கும் கேட்காத குரலில்,
" அம்மா, தேவகியின் கணவர் எங்கே?", என்றான்.
" அவர் எங்கோ டவுனில் வேலை பார்க்கிறாராம். மாசத்துக்கு ஒரு தரம் தான் வருவாராம். இங்கே தொழில் தொடங்க பொருள் வசதி, இட வசதி இல்லையாம். வேலு மாமா சிறுகச் சிறுக கொஞ்ச காசு சேர்த்து வைச்சிருக்கிறாராம். நாங்கள் தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் தேவா. ", என்றார் அம்மா.

இப்ப தான் நிம்மதியாக உணர்ந்தான் தேவா. வேலு மாமாவிடம் அல்லது தேவகியிடம் அவசரப்பட்டு, நான் அது செய்யப் போகிறேன், இது செய்யப் போகிறேன் என்று வாயை விடாமல், அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்று பலவாறாக யோசனை செய்யத் தொடங்கினான்.


"மாமா, வாங்க வீட்டினை போய் பார்த்து வரலாம்", என்றான்.
வேலு தயங்கினார். "இப்ப எதுக்கு தம்பி? நாளைக்குப் போகலாம்", என்றார்.
" நீங்க வராவிட்டால் பரவாயில்லை நான் போகிறேன்", என்று கிளம்பினான். மறுப்பு சொல்லாமல் பின் தொடர்ந்தார். நானும் வருகிறேன் என்று சொன்ன தேவாவின் தாயாரை, "நீங்கள் இன்று வர வேண்டாம். நாங்கள் போய் பார்த்துட்டு வந்து உங்களை கூட்டிச் செல்கிறோம்", என்றார்.

"மாமா, ஏன் அப்படிச் சொன்னீர்கள்? எங்கள் வீடு தானே. நாங்கள் போய் பார்க்க என்ன தடை", என்றான் வருத்தத்துடன்.
"இல்லைத் தம்பி. நீங்கள் போய் பார்த்த பிறகு தெரிந்து கொள்வீர்கள்", என்றபடி சைக்கிளை மிதித்தார் வேலு. "தம்பி, வெளிநாட்டில் இருப்பது போல சட்டம் ஒழுங்கு இந்த நாட்டில் இல்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான் இந்த ஊரில். உங்கள் வீட்டில் இருப்பவனுக்கு ஆள் பலம் இருக்கு. அவனை வெளியேற்றுவது மிகவும் கடினம். நான் உங்களை அதனால் தான் ஊருக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை", என்றார்.

தேவா பதில் சொல்லாது மௌனம் காத்தான். 
"தம்பி, அவனுக்கு என்னை அடையாளம் தெரியும். அவனிடம் பல முறை வீட்டினை காலி பண்ணச் சொல்லி பிரச்னைப்பட்டிருக்கிறேன். நீங்கள் மட்டும் உள்ளே போய் பார்த்து வாருங்கள். நான் இங்கேயே நிற்கிறேன்", என்றார்.
"வாசலில் நிற்கும் எருமை ஆயிரம் கேள்விகள் கேட்பான். அவனிடம் ஆட்டிறைச்சி வாங்க வந்திருப்பதாக சொல்லுங்கள்", என்றார்.
"மாமா, ஆட்டு இறைச்சியா? என்ன சொல்றீங்க? நான் அதெல்லாம்",.. என்று தொடர்ந்தவன் பேச்சினை இடையில் நிறுத்தியவன் மாமாவை புதிருடன் பார்த்தான்.
"உள்ளே போய் பாருங்கள் தம்பி உங்களுக்கு விளங்கும்", என்றார்.
வாசல் கடந்து, எருமைக்கு பதில் சொன்ன பிறகு உள்ளே நுழைந்தான். 
உள்ளே இருந்து வந்த கொடிய மணம் குடலைப் புரட்டியது. என்னவாக இருக்கும் என்று யோசனை ஓடியது. வீட்டு முற்றத்தில் ஆடுகள், மாடுகள் கும்பலாக தெரிந்தன. 
முற்றத்தில் ஆடு, மாடுகளின் தோல்கள் ஓரமாக காயப்போடப்பட்டிருந்தன. மறு புறம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி வாங்க ஒரு சிறு குழுவாக மக்கள் நின்றார்கள். வீட்டின் பின் புறத்தில் ஆடு ஒன்றின் கதறல் சத்தம் கேட்டது. தொண்டை அறுக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டான். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறினான் தேவா.

"தேவா, இங்கு வந்து நான்கு நாட்கள் ஆச்சு. எப்ப வீட்டினை பார்க்க போகலாம்",  என்று நச்சரித்த அம்மாவினை சமாளிக்க முடியாமல் முழித்தான். வேலு மாமா தான் எதேதோ சொல்லி சமாளித்தார். 

ஒரு வாரம் சென்ற பின்னர் அம்மா தனியாக கிளம்பிவிட்டார் வீட்டினைப் பார்க்க. தடுக்க வழி தெரியாமல் ஸ்தம்பித்துப் போனான் தேவா. 

சரி உங்க தலையெழுத்து. வாங்க போகலாம் என்று பின் தொடர்ந்தான். 
வீட்டினை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள அம்மாவுக்கு சில நிமிடங்கள் பிடித்தன." இவன் என்ன மனிதனா", என்றார் அழுகையினூடே. சாமி அறையில் ஒரு முழு ஆட்டினை தோல் உரித்து தொங்கவிட்டிருந்தான் மண்டைக் கோபால்.

"அம்மா, வீட்டினை பார்த்தாச்சு அல்லவா வாங்கள் திரும்ப ஊருக்குப் போகலாம்", என்றான் தேவா.
"இல்லை தேவா. எனக்கு அந்த வீடு வேணும். அந்த சாமி அறை திரும்ப வேணும்", என்று சொன்ன அம்மாவை கலவரத்துடன் பார்த்தான்.
"அம்மா, அந்த லூஸூ மண்டைக் கோபாலுடன் யார் போய் கதைப்பார்கள். அவன் முழியும் அவனும். அது ஒரு மனுஷ ஜென்மம் போல இல்லையே", என்றான்.
"தேவா, நீ போய் உன் வேலையை பார். நான் இங்கேயே இருந்து வேலை முடித்த பிறகு தான் வருவேன்", என்று சொன்ன அம்மாவை இயலாமை கலந்த கோபத்துடன் பார்த்தான். 
தாய் மீது கோபம் வந்தது. வேலு மாமா தான் சமாதானப்படுத்தினார்.
"தேவா, காசினை செலவு செய்ய நீ ஆயத்தமாக இருந்தால் எல்லாம் இங்கே சாத்தியமே", என்றார். 
"மாமா, எனக்கு காசு ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், இதெல்லாம் சாத்தியமா?", என்றான்.
"தம்பி, கொஞ்சம் பணத்தினை விட்டெறிஞ்சால் எல்லாம் நடக்கும்", என்றார். 
அவர் சொன்ன தொகை கொஞ்சம் அதிகம் தான். இருந்தாலும் அம்மாவுக்காக செய்து முடிப்பது என்று தீர்மானித்தான். 

காசினை விட்டெறிந்து, கால்கள் தேய நடந்து, மண்டைக் கோபலை விட ஒரு பெரிய ரவுடியை கண்டுபிடித்தார்கள். அவனுக்கு ஆள்பலம், பணபலம்,  அரசியல்வாதிகளுடன் தொடர்பு என்று எல்லாமே இருந்தன. 
மண்டைக் கோபாலை அங்கே இருந்து வெளியேற்றியது மட்டும் அல்ல அவனை மீண்டும் இவர்கள் இருந்த திசைப் பக்கம் வரவிடாமல் செய்ய ஒரு பெருந்தொகை செலவு செய்ய வேண்டியதாகிப் போனது. 
எல்லாவற்றையும் அம்மாவுக்காக செய்து முடித்தான் தேவா. இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்த வீட்டினை சுத்தம் செய்து, புனரமைப்பு  செய்து, மேலும் சில இலட்சங்களை செலவு செய்தான் தேவா. வீடு மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. தேக்கில் உருவான சாமி அறைக் கதவு, வண்ணப்பூச்சுகள் பள பளத்தன. 

அம்மா, இப்ப திருப்தி தானே, என்றான். 
"தேவா, இல்லை. எனக்கு இந்த அறையில் கண்களை மூடினால் சாமியை வணங்க மனம் வரவில்லை", என்றார் தாயார்.
அம்மா, என்ன சொல்கிறீர்கள்?, என்றான் தேவா.
"கண்களை மூடினால் அந்த ஆட்டின் உயிரற்ற உடல் தான் ஞாபகம் வருகிறது. நான் என்ன செய்வேன்?", என்றார் . 
" அம்மா, நான் முன்பே சொன்னேன் அல்லவா வாங்கள் திரும்ப ஊருக்குப் போகலாம் என்று. நீங்கள் கேட்கவில்லை. எவ்வளவு அலைச்சல், காசு செலவு. சரி காசு போனாலும் பரவாயில்லை. உங்களுக்கு எவ்வளவு மனவருத்தம்", என்றான் தேவா.

"தேவா, எனக்கு தெரியும் கண்ணா. மண்டைக் கோபாலை வெளியேற்ற வேண்டும் என்பதே என் வெறியாக இருந்தது. இப்ப இந்த வீட்டில் எனக்கு வாழ விருப்பம் இல்லை. வீட்டின் உள்ளே போனால் ஆடு, மாடுகள் கத்தும் ஒலி கற்பனையில் வந்து என்னைக் கொல்கிறது. இந்த வீட்டினை விற்பது தான் ஒரே வழி", என்றார் அம்மா. 

"அம்மா, ஏன் இந்த வீட்டினை வேலு மாமாவுக்கு கொடுக்கலாமே!", என்றான் தேவா.
"இல்லை தேவா. அது அவ்வளவு நன்றாக இருக்காது. எங்களுக்கு வேண்டாம் என்பதால் அவரின் தலையில் கட்டுவது சரியில்லை", என்றார்.



"வேலு மாமாவும் இதை விரும்பமாட்டார் அல்லவா", என்று தாயார் சொன்னதிலும் ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்டான் தேவா. 

வீட்டினை விற்பனை செய்ய ஒழுங்குகள் செய்த பின்னர் தாயும் மகனும் விமானத்தில் ஏறிவிட்டார்கள். வேலு மாமா எல்லாவற்றினையும் பார்த்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்தார். 

ஒரு மாதத்தின் பின்னர் தொலைபேசி மணி அடித்தது.  எடுத்து காதில் பொருத்தினான் தேவா.
"தேவா, நலமா?, என்றார் வேலு மாமா. வீட்டினை வித்தாச்சு. ஊர் பணத்தில் கிட்டத்தட்ட 100 இலட்சங்கள் இருக்கு. பணத்தினை எப்படி அனுப்ப என்று சொல்லு தம்பி", என்றார் வேலு மாமா. 

"மாமா, பணம் முழுக்க உங்களுக்குத் தான். எங்களின் அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்", என்றான் தேவா.

மறுமுனையில் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. என்ன தம்பி சொல்றீங்க?

"மாமா, அப்பா இருந்திருதால் இன்னும் அதிகமா செய்திருப்பார். இதை நாங்கள் அங்கேயே கூறியிருந்தால் நீங்கள் கண்டிப்பாக மறுப்புக் கூறியிருப்பீங்கள் என்று தெரியும். அதனால் தான் இந்த ஏற்பாடு", என்றான்.
அவரின் தழு தழுத்த குரல் அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருப்பதைக் காட்டியது.
நன்றி, சொல்லி தொலைபேசியினை அதன் இடத்தில் வைத்தான் தேவா.
நீண்ட நாட்களின் பின்னர் இன்று நிம்மதியாக உணர்ந்தான் தேவா. கசிந்த கண்களை தாயார் அறியாமல் துடைத்துக் கொண்டான்.



































Sunday, August 5, 2012

என்ன கொலைக் குற்றமா?


மகளிடம் இருந்து கடிதம் வந்ததிலிருந்து மனதே சரியில்லை ராமசாமிக்கு. என்னவாக இருக்கும் என்று பலவாறாக யோசனை செய்ததில் தலைவலி வந்தது தான் மிச்சம். மகள் வசந்தி, திருச்சியில் ஒரு பெண்கள் பள்ளியில் 11 வகுப்பு படிக்கிறாள். படிப்பில் ஆகா ஓகோ என்று இல்லாவிட்டாலும் குறை சொல்லும் அளவுக்கு மட்டம் இல்லை. அதோடு ராமசாமி பெரிய கலக்டரோ, இஞ்சினியரோ அல்ல. விவசாயம் தான் அவர் தொழில். மகளுக்கு எழுதப் படிக்க தெரிந்தால் போதும் என்று நினைத்து பள்ளிக்கு அனுப்பினார். அவள் 10ம் வகுப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றதும் சந்தோஷப்பட்டு இன்னும் கொஞ்ச நாட்கள் படிக்கட்டும் என்று திருச்சி டவுனில் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டார். மகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தாள். நேரம் கிடைத்தால் மகளைப் பார்க்க கிளம்பிவிடுவார். நேற்று மகளிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அப்பா, உடனே வந்து என் வகுப்பாசிரியை சாரதாவை சந்திக்கவும். மிகவும் அவசரம், என்று குறிப்பிட்டிருந்தாள்.
" என்ன, யோசனை பலமா இருக்கு?", என்றபடி வந்தார் மனைவி.
" இல்லை. மகளிடம் இருந்து கடிதம் வந்ததிலிருந்து மனது பதறுது", என்றார் ராமசாமி.
" ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தா முடிஞ்சுது", என்றார் மனைவி.
"சுட்டெறிக்கும் வெய்யிலில் பஸ்ஸில் ஏறி இறங்குவதை நினைச்சா வெறுப்பா இருக்கு", என்றார் ராமசாமி.
பிறகு ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானார். இப்பவே போனால் தான் பள்ளி விடும் நேரத்துக்கு முன்னர் போய்ச் சேரலாம் என்று நினைத்தபடி அதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தார்.
ஒரு வேளை மகள் யாரையோ காதலிக்கிறாளோ என்று யோசனை வரவே மனைவியிடம் யோசனை கேட்டார்.
" காதலா? அதெல்லாம் இருக்காது.", என்றார் மனைவி.
பலவற்றையும் கற்பனை செய்து கொண்டே, மனைவி கொடுத்த பொதியுடன், மறக்காமல் தண்ணீர் பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தார். கடையில் தண்ணீர் வாங்கினால் கொள்ளை விலை சொல்வார்கள். அதோடு வீட்டில் எப்பவும் சுட்டாறிய தண்ணீர் குடித்தே பழகிவிட்டார் ராமசாமி.


கிட்டத்தட்ட 2 மணி நேரங்களின் பின்னர் மகளின் பள்ளி போய்ச் சேர்ந்தார்.
வகுப்பறையின் வெளியே காவல் இருந்தார். இவருடன் மூன்று மாணவிகள் சேர்ந்து கொண்டார்கள்.
மெதுவாக பேச்சுக் கொடுத்தார்.
" கண்ணுகளா, என்ன வீட்டுப் பாடம் செய்யலையா?", என்றார்.
"அதெல்லாம் இல்லை. டீச்சர் பாடம் நடத்தும் போது தண்ணீர் குடிச்சோம் அதான் வெளியே விரட்டி விட்டாங்க", என்றார்கள் கிசு கிசுப்பான குரலில்.
" என்னது?. தண்ணீர் குடிச்சதுக்கா", என்று மேலும் என்ன கேட்பது என்று தெரியாமல்  திகைத்துப் போனார் ராமசாமி.
மெதுவாக வகுப்பறையின் உள்ளே எட்டிப் பார்த்தார். மகளின் முகத்தில் திடீரென்று ஒரு சந்தோஷக் களை வந்து ஒட்டிக் கொண்டது இவரைக் கண்டதும். காதல் கத்தரிக்காய் எதுவும் இருக்காது என்று நினைத்துக் கொண்டார். 
ஆசிரியை ஒரு பெரிய அண்டா போன்ற ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை மொண்டு குடித்துக் கொண்டிருந்தார். 


இவரை கண்டதும் அண்டாவை கீழே வைத்துவிட்டு வெளியே வந்தார்.
" நீங்க வசந்தியின் அப்பாதானே?", என்றார்.
ம்ம்ம்.. என்று தலையாட்டினார்.
" டீச்சர், ஏதாவது பிரச்சினையா?", என்று கேட்டார்.
" இருங்க சொல்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு எங்கள் முதல்வர் இந்தப் பக்கம் வந்தார்கள் தெரியுமா?", என்றார்.
" ஏனுங்கம்மா பள்ளிக்கூடம்  வந்தாங்களா? ", என்றார் வெள்ளாந்தியாக.
" அட. இந்த தெரு வழியா போனார்கள். அப்போது எங்க ஸ்கூல் பிள்ளைகளை ரோட்டோரம் நிற்பாட்டி வைத்திருந்தோம்...", என்றார் ஆசிரியை.
" எதுக்குங்க இந்த வேகாத வெய்யிலில் பிள்ளைகளை ரோட்டில் நிற்பாட்டி வைச்சீங்க?", என்று அப்பாவியாக கேள்வி கேட்டார் ராமசாமி.
"முதல்வர் வரும்போது கை காட்ட, அவர்களை வரவேற்க ...", என்று தொடர்ந்தவரை எரிச்சலுடன் பார்த்தார் ராமசாமி.
"சரி. இருக்கட்டும். அதுக்கு எதுக்கு என்னை இந்த வேகாத வெய்யிலில் வரச் சொன்னீங்க?", என்று கேள்வி எழுப்பினார்.
" அதுவா. எல்லோரையும் வரிசையில் நிற்க வைக்க நாங்கள் எவ்வளவு பாடுபட்டோம். ஆனால், உங்கள் மகள் ... எல்லாம் திமிர்த்தனம்", என்று ஏதோ முணுமுணுத்தார்.
ராமசாமி விளங்காமல் பார்த்தார்.
" எல்லோரையும் வரிசையா நிற்கச் சொல்லிட்டு, அந்தப் பக்கம் போய்ட்டு திரும்ப வந்து பார்த்தா உங்க மகளைக் காணவில்லை", என்றார் ஆசிரியை.

"ஐயயோ! பிறகு என்னம்மா ஆச்சு?. காதலனுடன் போயிட்டாளா என் மகள்", என்றார் பதறிக் கொண்டே.

பள்ளி விடும் நேரமாகையால் கூட்டம் சேர ஆரம்பித்து இருந்தது.

" அட அப்படி இல்லைங்க. உங்க மகளும் வேறு சில மாணவிகளும் யாரோ தண்ணீர் கொடுப்பதாக அறிந்து அங்கு போய் வரிசையில் நின்று தண்ணீர் வாங்கி குடிச்சுட்டு இருந்தார்கள்", என்றார்.
" ஓ. ", என்றார் ராமசாமி எரிச்சலுடன். இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்றீங்க? தண்ணீர் தாகம் எடுத்தால் குடிச்சா என்ன கொலைக் குற்றமா? இப்ப நீங்க பக்கத்தில் ஒரு அண்டா வைச்சு குடிக்கிறீங்க. ஆனால், தண்ணீர் குடித்த குற்றத்துக்கு இந்த மூன்று மாணவிகளை வெளியே நிற்க வைச்சு, நீங்க ஒரு சர்வாதிகாரி போல நடக்கிறீங்க. அவர்கள் தண்ணீர் குடித்தது குற்றம் எனில் நீங்கள் குடிச்சது குற்றம் இல்லையா?, என்று பொரிந்து தள்ளினார் ராமசாமி.

கூட்டம் சேர ஆரம்பித்தது. பெற்றோர்களும் ராமசாமிக்கு ஆதரவாக களத்தில் இறங்க ஆசிரியை வாயடைத்துப் போய் நின்றார்.


பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறி விட்டதை நினைத்து ஆசிரியை கூனிக் குறுகி நின்றார்.

தண்ணீர் குடித்ததுக்கு தண்டனையா?, என்று கூட்டத்தினரும் சேர்ந்து கொள்ள, யாரோ போய் தலைமை ஆசியருக்கு தகவல் சொல்ல, அவர் பறந்தோடி வந்தார். யாரோ போய் ஆசிரியையின் அண்டாவை எடுத்து வந்து, தலைமை ஆசிரியருக்கு காட்டி நியாயம் கேட்டார்கள்.
" ஏனுங்க அவங்க தாகம் எடுத்தா குடிக்கலாம். எங்க பிள்ளைகள் குடிச்சா தண்டனை குடுப்பாங்களாம். இந்த அநியாயத்தைக் கேட்க ஆள் இல்லையா?", என்று கோபத்துடன் கத்தினார்கள்.
இறுதியில் ஆசிரியை செய்தது பெருந்தவறு என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. அதோடு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஒரு சாரார் சொல்ல, ஆசிரியை வேண்டா வெறுப்பாக மன்னிப்புக் கேட்டார்.

எய்தவன் இருக்க அம்பை நோவதேன், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் இந்தப் பழமொழிகள் எல்லாம் ஆசிரியைக்கு வரிசையாக ஞாபகம் வந்தன. ராமசாமியின் மகள் வசந்தி தண்ணீர் குடித்ததுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தலைமை ஆசிரியரின் முடிவே. இடைவேளை தவிர யாரும் வகுப்பில் தண்ணீர் அருந்தக் கூடாது என்பதும்  அவரின் உத்தரவே. இப்ப கூட்டத்தினைக் கண்டதும்  பழியை முழுக்க ஆசிரியை மீது போட்டு விட்டு நழுவிய தலைமை ஆசிரியரை கடுப்புடன் பார்த்துக் கொண்டே ராமசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் சாரதா.
























Saturday, July 21, 2012

வீட்டினைத் தேடி ஒரு பயணம்


நியூயோர்க் நகரின் பிரதான இடத்தில் இருந்தது தேவாவின் வீடு. அடுக்கு மாடி குடியிருப்பில் 8வது தளத்தில், சகலவசதிகளோடு கூடிய வீடு அவனுடையது. நேரம் அதிகாலை 4 மணி. தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் தேவா. வயது 35. இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் செய்யும் எண்ணமும் இல்லை. எப்போதும் வேலை, வேலை என்று அலைந்து திரிந்து, பங்கு சந்தையில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டான். இந்த வீடு, கார், வசதிகள் எல்லாம் அவன் குறுகிய காலத்தில் ஈட்டியவை. அவனின் அப்பா காலமாகிவிட, அறுபதுகளின் ஆரம்ப பகுதியில் இருக்கும் அம்மா மட்டுமே இவனுக்கு துணை.

எழுந்து வெளியே சென்றான். பால்கனியில் நின்று கொண்டே நகரின் அழகை, பிரமாண்டத்தை பார்த்துக் கொண்டே நின்றான். எதிலும் மனது ஒட்டவில்லை. திரும்ப அறைக்குள் செல்ல நினைத்தவன் தாயின் அறையில் விளக்கின் வெளிச்சம் கண்டு சிறிது நேரம் தயங்கி நின்றான். மென்மையாக கதவினை தட்டினான்.

" தேவா, உள்ளே வா", என்றார் அம்மா.
கட்டிலில் ஒரு பக்கம் ஆடைகள் அடுக்கப்பட்டிருக்க, மறு புறம் சிறு மலை போல ஆடைகள். அம்மா கையில் லிஸ்ட் வைத்துக் கொண்டே வேலையில் முமுமுரமாக இருந்தார். தரையில் சூட்கேஸ்கள் வாயை பிளந்தபடி காத்திருந்தன. ஒரு பழைய துணியினை எடுத்து, சூட்கேஸ்கள் மீதிருந்த தூசியினை சுத்தம் செய்யத் தொடங்கினான் தேவா.
"அம்மா, கட்டாயம் போய் ஆக வேண்டுமா", என்றான்.
"ம்ம்... இப்ப ஏன் இது பற்றி பேச வேண்டும். காலை 11 மணிக்கு ப்ளைட் என்று மறந்துவிட்டாயா. போய் படு. நான் எல்லாவற்றையும் அடுக்கி வைச்சுட்டு வாறேன்", என்றார் அம்மா.
போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான் தேவா. ஆறு மாதங்கள் முன்பு, ஒரு நாள் வேலை முடிந்து வந்தபோது அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது.
"அம்மா, என்னாச்சு? உடம்பு சரியில்லையா", என்று பரிவாக கேட்டான்.
"இல்லை தேவா. ஊரில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கு என்று உனக்குத் தெரியும் அல்லவா", என்றார்.
"இப்ப அதுக்கென்ன அம்மா. அதில் வேறு யாரோ குடியிருப்பதாக நீங்கள் சொன்னீர்களே. மறந்துவிட்டீர்களா?", என்று கேட்டான்.
"இல்லை. மறக்கவில்லை. எனக்கு அந்த வீட்டினை இப்பவே பார்க்க வேண்டும் போலிருக்கு...." என்று தொடர்ந்த தாயை கலவரமாகப் பார்த்தான்.
"அம்மா, நடக்கிறகாரியமா அது. உங்களுக்கு இங்கே வீடு வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன். ஊருக்குப் போய், அங்கே குடியிருப்பவரை எழுப்புவது இயலாத காரியம். அங்கு குடியிருப்பவன் பெரிய ரவுடி என்று நீங்கள் தானே சொன்னீங்கள்", என்றான்.

"ம்ம்.. சொன்னேன் தான். எனக்கு இறுதிக் காலம் விரைவில் வந்து விடும் போல இருக்கு. நான் சாக முன்னர் அல்லது நோய்வாய்ப் பட்டு படுக்கையில் என் இறுதி நாட்களை கழிக்கும் முன்னர் எங்கள் வீட்டினை அதாவது உன் அப்பா ஆசையாக கட்டிய வீட்டினை ஒரு தரம் பார்க்க வேண்டும்", என்றார்.

"அம்மா, உங்களுக்கு ஒன்றும் ஆகாது. ஊருக்கு இப்ப போக முடியாது. வேலை தலைக்கு மேல் இருக்கு", என்று தவிர்க்கப்பார்த்தான்.

"நீ வராவிட்டால் பரவாயில்லை. நான் மட்டும் போய் வருகிறேன்", என்று தனியாக கிளம்பிய அம்மாவை தடுக்க வழி தெரியாமல் கூடவே கிளம்ப வேண்டிய கட்டாயம்.

காலை ஏழு மணியளவில் அளவில் தொலைபேசியில் அவனுக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் அனுப்பி பிஸியாக இருந்தான் தேவா.

"தேவா, எத்தனை மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும்? ஊரில் வேலு மாமாவுக்கு தகவல் சொல்லிவிட்டாயா கண்ணா?", என்று தாயார் கேட்ட பின்னர் தான் அவனுக்கு ஞாபகம் வர தொலைபேசியில் வேலு மாமாவின் நம்பரை அழுத்தினான்.


அடித்துப் பிடித்து விமான நிலையம் போய்ச் சேர நேரம் சரியாக இருந்தது. தாயார் ஏதோ ஒரு புத்தகத்தில் பிஸியாகி விட. இவன் கண்களை மூடிக் கொண்டான்.

"தேவா, வேலு மாமா என்ன சொன்னர்?", என்று வினவினார் தாயார்.

"எங்கள் வருகைக்கு காத்திருப்பதாக சொன்னார் அம்மா. உங்களுக்கு ஏதாவது வேணுமா? நான் கொஞ்ச நேரம் படுக்கப் போறேன்", என்றான்.
"இல்லைக் கண்ணா. நீ படு", என்றபடி புத்தகத்தில் மூழ்கிப் போனார் அம்மா.

வேலு மாமா என்று இவன் அழைப்பது இவனின் சொந்த  மாமா அல்ல. அப்பாவின் நண்பர். ஜாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த காலங்களில் அப்பாவுக்கு அறிமுகமானவர் வேலு. அம்மாச்சி மிகவும் கண்டிப்பானவர் ஜாதி விடயங்களில்.  குறைந்த ஜாதி மக்கள் வீட்டினுள் வந்தால் தீட்டு என்பார்.

"என்ன தீட்டோ, இழவோ அதெல்லாம் சும்மா. நீங்க வீட்டுக்குள் வாங்கோ", என்று அவர்களை வரவேற்று, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில் அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, அழகு பார்த்தவர் அப்பா. அதே போல அவர்கள் வீட்டுக்கும் சென்று அவர்கள் அன்பாக கொடுக்கும் உணவுகளை ரசித்து சாப்பிடுவார்.


அப்பா வெளிநாடு வந்த பின்னரும் நட்பு தொடர்ந்தது. தொலை பேசி, தபால் என்று நட்பு இன்னும் வலுப்பெற்றது. அப்பாவின் மறைவின் பின்னர் வேலு மாமாவின் கடிதங்களை அம்மா இன்னும் கவனமாக பேணிக் காத்து வந்தார்.  ஒவ்வொரு கடிதத்திலும் அன்பினை கரைத்து ஊற்றியிருப்பார் மாமா. மிகவும் கஷ்ட சூழ்நிலையில் இருந்தாலும் அதைப் பற்றி ஒரு நாளும் குறிப்பிடமாட்டார். அப்பாவே இவரின் கஷ்டம் உணர்ந்து இடைக்கிடையில் பணம் உதவி செய்ததுண்டு. அப்பாவின் மறைவின் பின்னர் தொடர்பு சுத்தமாக நின்று போனது.
இப்ப வீட்டினை பார்க்க வேண்டும் என்றதும் எங்கோ கிடந்த தொலைபேசி எண்களை கண்டு பிடித்து, அவரை அழைத்து... நான் எவ்வளவு சுயநலவாதி என்று நினைத்துக் கொண்டான் தேவா. அப்பாவின் மறைவின் பின்னர் வேலு மாமா பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டிருப்பார். ஊர் போய் அவருக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்று தாயாரும் மகனும் முடிவு செய்து கொண்டார்கள்.

தொடரும்..








Monday, June 25, 2012

குழப்பவாதிகளா? சிந்தனைவாதிகளா?

காரினை எங்காவது பார்க்கிங்கில் விட்டுட்டு போய் இருக்கிறீங்களா?.பார்க்கிங்கில் விடாமல் உன் தலையிலா விடுவார்கள் என்று கேள்வி கேட்கப்படாது & இது என்ன கேள்வி என்று முறைக்கப்படாது.  இப்ப இது பற்றி தான் நான் சொல்லப்போகிறேன்.

 சில மாதங்களின் முன்னர் கடைக்கு சென்றபோது என் ஆ.காரர் எங்கள் காரினை குறிப்பிட்ட இடத்தில் நிற்பாட்டிய பிறகு உள்ளே குரோசரி வாங்கச் சென்றுவிட்டார். நான் கொஞ்சம் தலைவலி காரணமாக காரில் இருந்துவிட்டேன். வின்டர் மற்றும் நான் எடுத்த டாப்லட்டின் வீரியத்தினால்  ஒரு குட்டி தூக்கம் போட நினைத்து... அப்படியே தூங்கியும்விட்டேன்.
ஏதோ  சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. ஒரு ஆசாமி எங்கள் கார் கதவினை திறக்க மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு பயத்தில் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு , நாக்கு வறண்டு போனது. செல் போனை தேடினால் கையில் அகப்படவில்லை. என் ஆ.காரர் எப்போதும் திட்டுவார் செல் போனை மறக்காமல் கையில் வைத்திருங்கோ என்று. இப்ப தான் அவரின் அறிவுரை மூளைக்கு எட்டியது. ஆசாமி இன்னும் வேகமாக கதவினை திறக்க முயற்சி செய்தார். வின்டர் நேரமாகையால் வெள்ளனவே இருட்டிக் கொண்டுவிடும். பாஸஞ்சர் சீட்டில் நான் இருப்பதை அவர் கவனிக்கவில்லை.

ஐயோ! என் ஆ.காரர் வருமுன்னர் இவர் என்னை கடத்திக் கொண்டு போயிடுவார் போலிருக்கே. சே! கடத்திக் கொண்டு போறதுக்கு ஏற்ற முகமா எனக்கு என்று ஒரு சந்தேகம் வந்தது. அவர் காரைத் தான் கடத்தப்போகிறார் போல என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன்.


இப்ப வேகமாக நான் இருந்த பக்கம் வந்தார் அந்த ஆசாமி. பெரிய ஆஃபிஸர் போல கோட், சூட், டை எல்லாம் போட்டிருந்தார் அந்த அமெரிக்கர்.
அடச்சே இவருக்கு ஏன் புத்தி இப்படிப் போகுது என்று நினைத்துக் கொண்டேன்.
இப்ப  என் பக்க கதவினை பலம் கொண்ட மட்டும்  திறந்தார். காரின் கதவினை லாக் செய்து இருந்தாலும் நான் கதவினை திறக்காமல்  கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அவர் கையில் இருந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்துவதும், பிறகு டென்ஷன் ஆவதுமாக இருந்தார்.
திடீரென்று அவரின் செய்கைகள் ஒரு முடிவுக்கு வந்தது. என்னை அப்போது தான் முதன்முறையாக பார்த்தவர் கொஞ்சம் மிரண்டு பின் வாங்கினார். என் காரினுள் இவள் எப்படி என்று அவரும்? இவர் மட்டும் என் கையில் மாட்டினால், மகனே! சட்னிதான் என்று நானும் நினைத்துக் கொண்டோம்!!!!.

திரும்பி பக்கத்தில் இருந்த காரினை பார்த்தார். நானும் அப்போது தான் கவனித்தேன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரும் எங்கள் காரினைப் போல அதே கலர், அதே நிறுவனம்... இப்படி பல ஒற்றுமைகள். இப்ப தான் எனக்கு நெஞ்சுக்குள் கொஞ்சம் தண்ணீர் வந்தது. ஆனால், ஆசாமி எங்கும் போகாமல் அங்கேயே நின்றார். என்னிடம் மன்னிப்பு கேட்க நிற்கிறாராம் அவர். அவர் பம்மிய பம்மில் நான் அறிந்து கொண்டாலும் கதவினை திறக்கும் தைரியம் வரவில்லை. பரவாயில்லை என்று கைகளினால் சைகை செய்தேன்.  குலதெய்வத்தினை கும்பிடுவது போல என்னை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.
நான் எப்பவும் பார்க்கிங்கில் காரை நிப்பாட்டினால் இடத்தினை மனதினுள் குறித்துக் கொள்வேன். அதோடு காரின் நம்பர் எப்பவும் மனப்பாடமாக வைத்திருப்பேன். நேற்றுக்கூட குரோசரிக் கடையினுள் இருந்து வேகமாக வந்த ஒருவர் ரிமோட்டினை கையில் எடுத்து, பொத்தானை அழுத்தியபடி 2 தரம் சுற்றி வந்தார்.  நான் காரின் பக்கம் போனதும் அவரின் காரினை நோக்கி வேகமாக நடந்தார். அதே கோல்ட் கலரில் அவரின் கார் தெரிந்தது. 

இப்படி இவ்வளவு குழப்பவாதிகளா இந்த நாட்டில் என்று வியந்து போனேன். ஆனால், பாருங்கள் இப்ப என் ஆ.காரரும் இந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார். கையில் ரிமோட்டினை வைத்து அது கதறும் வரை அழுத்துவது அல்லது ஏதோ ஒரு கட்டத்தின் பின்னர் இது நம்முடைய பொருள் இல்லை என்று விலகிப்போவது. குழப்பவாதிகள் அல்ல சிந்தனைவாதிகள் என்று இப்ப நினைத்துக் கொள்வேன். அதாவது சதா சர்வகாலமும் எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் தான் இவர்கள் இப்படி ( குழப்பவாதிகளாக) இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 


இதுக்கு ஒத்துப் போறாப்போல என் மகன் வரைந்து தந்த படம். கலர் கொடுத்தது என் மகள்.

Monday, June 4, 2012

சங்கிலிப் பேய்

சரட்..சரட்.. என்று சத்தம் இரவின் அமைதியை கிழித்துக் கொண்டு காதில் விழுந்தது. என்னவாக இருக்கும் பேயா? அல்லது பிசாசா? என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். இது ஏதோ ஒரு ஆவியின் வேலையாக இருக்க வேண்டும். இரண்டு மாதங்களின் முன்பு செத்த சின்னவாளி கிழவியின் ஆவியா இருக்க வேண்டும் என்றார்கள். அது இருக்கும் போதே நகை, நகைன்னு பேயா அலைஞ்சு சொத்து சேர்த்துச்சு, இப்ப செத்த பிறகு அந்த நகைகளை போட்டுக் கொண்டு திரியுதோ என்று திகிலுடன் பேசிக் கொண்டார்கள்.

அந்தக் குக் கிராமத்தில் 30, 40 குடும்பங்கள் இருந்தார்கள். மின்சார வசதி இல்லாத 1950 களின் ஆரம்ப காலம். மண்ணெண்ணை விளக்குகள் தான் ஒரே ஒரு வெளிச்சம். மக்கள் நேரத்தோடு சாப்பிட்டு, உறங்கப் போய் விடுவார்கள். ஆண்கள் மீன் பிடித் தொழிலுக்கு போய் விட, ஊரில் பெரும்பாலான வீடுகளில் பெண்களும், குழந்தைகளுமே இருப்பார்கள்.

ஊர் அடங்கிய பின்னர் வீதியில் சங்கிலிகள் உராயும் சத்தங்கள் கேட்டன. முதலில் அதைப் பெரிதாக யாரும் எடுக்கவில்லை. யாரோ ஒருவர் கொழுத்திப் போட, அது பேய் உருவம் எடுத்தது. இரவில் பேய் உலவியதாக மக்கள் அதன் பிறகு நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உறங்கினர். வயதான பாட்டிகள் காவலுக்கு இருந்தார்கள். யாருக்கும் வெளியே எட்டிப் பார்க்கும் தைரியம் வரவில்லை. நிலவின் ஒளியில் ஒர் உருவம் சங்கிலிகளை இழுத்துப் போவது மட்டும் மங்கலாக தெரியும்.

சங்கிலிப் பேய் என்று நாமகரணம் சூட்டினார்கள். பூசாரி வந்தார். பல பூஜைகள் செய்தார். சின்னவாளிக் கிழவியின் வீட்டிலும் பூஜைகள் செய்யப் பட்டன. ஆனால் பேய் போன பாடு இல்லை. தினமும் இரவில் வந்து போனது. ஆண்கள் தொழிலுக்கு போகாமல் இருட்டில் பதுங்கி இருந்தார்கள்.

பேய்க்கு இந்த விடயம் காதுக்கு எட்டி விட்டது போல. இரண்டு நாட்களாக வரவில்லை.

ஊரின் ஒதுக்குப் புறத்தில் குடி இருந்தான் ஜெகன். களவு தான் அவன் தொழில். இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் தொழிலுக்கு போகவில்லை. மக்கள் தூங்கியதும் இவன் போய் மாடு, யானை தவிர கொல்லைப் புறத்தில் எதை கட்டி இருந்தாலும் ஈரச் சாக்கினை மிருகத்தின் மேலே போட்டு, இழுத்து வந்து விடுவான். போகும் போது ஈரச் சாக்கின் உள்ளே சங்கிலியை சுற்றி வைத்துக் கொள்வான். திருடி முடிந்ததும் சங்கிலியை தோளில் மாட்டிக் கொள்வான். மக்களை பயமுறுத்தவே அவ்வாறு செய்யத் தொடங்கினான்.


ஊரில் ஆண்களின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை தன் வீட்டில் இருந்தபடியே கவனித்தான் ஜெகன்.
வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே நோட்டம் விட்டான்.
என்ன நடக்கிறது? ஏதாவது காணவில்லயா?. என்றான் அப்பாவியாக.
உனக்கு தெரியாதா? ஊரில் உலவும் சங்கிலிப் பேயை மக்கள் பிடிக்கப் போகிறார்கள், என்றார் யாரோ ஒருவர் போகிற போக்கில்.
நல்லது. வாழ்த்துக்கள், என்றான் ஜெகன்.
எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். இரவு நெருங்க நெருங்க பர பரப்பு கூடியது.

நீ போகலையா சங்கிலிப் பேயை பிடிக்க, என்றான் ஜெகனின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அப்புக் குட்டி.
இல்லை என்று வேகமாக தலையாட்ட நினைத்தவன் ஏதோயோசனையின் பின்னர் பக்கத்தில் கிடந்த உருட்டுக் கட்டையுடன் கிளம்பினான். மனதுக்குள் சிரிப்பு வந்தது. ஊருடன் ஒத்து வாழ் என்று என் செத்துப் போன ஆயா சும்மாவா சொல்லிச்சு.

ஆண்கள் வேப்பமரத்தடியில் கூடியிருந்தார்கள். நான்கு பிரிவாக பிரிந்து ஒவ்வொரு திசையில் பேயைப் பிடிக்க அனுப்பபட்டார்கள். ஏதோ ஒரு பிரிவில் ஜெகனும் இடம் பெற்றான்.
புதரின் பின்னே மறைந்து இருந்தார்கள்.
ஜெகன் அப்போது தான் கவனித்தான் பக்கத்தில் இருந்தவர்களின் ஆயுதங்களை. சிலரின் கைகளில் கத்திகள், வீச்சரிவாள், ஈட்டி போன்று முனை சீவப்பட்ட கம்புகள், இன்னும் பல.
ஆண்டவா! நல்லவேளை நான் இரண்டு நாட்களா களவுக்கு போகவில்லை. இன்று வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அந்த சங்கிலியை ஆற்றில் தூக்கிப் போட வேண்டும், என்று நினைத்துக் கொண்டான்.
அவனையும் அறியாமல் சிரிப்பும் வந்தது. கெக்கே பிக்கே என்று சிரித்தான்.
டேய் பைத்தியம், சிரிக்கிற நேரமா இது?, என்று யாரோ இவனை அடக்கினார்கள்.
ம்ம்... நான் பைத்தியம்!!!,  என்று நினைத்தபடி உருட்டுக் கட்டையினை உறுதியாக பற்றிக் கொண்டான்.




Tuesday, May 22, 2012

அம்மாவுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள அம்மா, நலமா?  உங்களுக்கென்ன நலமாகத் தான் இருப்பீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் தான்  அநாதைகள்  போல் ஆகிவிட்டோம். நீங்கள் இருந்தபோதும் நாங்கள் அநாதைகள் தான் என்பது வேறு விடயம். எப்போதும் எள்ளும், கொள்ளும் வெடிக்கும்  முகம். பக்கத்தில் வந்தால் முதுகில் சரமாரியாக அடி விழும் என்ற காரணத்தினால் ஒரு  நான்கடி தள்ளி நின்றே எல்லோரும் பேசப் பழகிக் கொண்டோம். தப்பித் தவறி யாராவது மாட்டிக் கொண்டால் அந்த நபர் கதி அவ்வளவு தான். இப்படி உங்கள் மீது பழியை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு நாள் கூடத்தில் ஒரு அழகிய வெண்புறா வந்து நின்றது. இதைக் கண்ட என் பள்ளித் தோழி  ஸ்டெல்லா சொன்னாள், உனக்குத் தெரியுமா வெண்புறா வந்தால் வீட்டில் துர்மரணம் சம்பவிக்கும், என்றாள். நான் குழம்பி நின்றேன். யார் இறக்கப் போகிறார்கள். என்ன தான் கொடுமையான அம்மாவாக இருந்தாலும் நீ வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய பலம். நீ இல்லாமல் ஒரு வாழ்க்கையினை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சே! அப்படி இருக்காது என்று வெளிமனம் சொன்னாலும் உள்ளுக்குள்  பயமாக இருந்தது.
மற்ற அம்மாக்கள் போல விரும்பிய உணவுகள் செய்து கொடுத்ததில்லை. ஏதாவது சாப்பிட ஆசையாக இருந்தாலும் உன் பக்கத்தில் வந்து கேட்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை. கேட்டால் நையப் புடைத்து விடுவாய். என் தங்கை, தம்பிகள் இப்படி உன்னிடம் அடிக்கடி அடி வாங்கியது கண்டு மனம் பொறுக்காமல் நானே அவர்களுக்கு சமைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு வீட்டு நிர்வாகம் முழுக்க என் தலையில் சுமத்தி விட்டு நீ கட்டிலில் மட்டும் காலத்தைக் கழித்தாய்.

உனக்கு என்ன நோய் என்று எங்களுக்கு விளங்கவில்லை. அதை நீயும் எங்களுக்கு எடுத்துச் சொன்னதில்லை. ஒரு வேளை தவறு எங்கள் மீது தானோ? உன் தலையினை வருடி, உன் கைகளைப் பிடித்து ஆதரவாக, அம்மா, நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தைகளை தான் நீ எதிர்பார்த்தாயோ? அப்பாவிடம் கிடைக்காத அன்பு, காதல் எதையும் நீ எங்களிடமும் எதிர்பார்கவில்லையோ?
ஒரு நாள் பள்ளியால் வந்தபோது அப்பா வாசலில் நின்றார். அவரின் முகம் கலங்கி இருந்தது. எங்களை அணைக்க முயன்றார். அவரை விலக்கி உள்ளே ஓடினேன். அங்கே கூடத்தில் நீ. உயிரற்ற சடலமாக. ஆனால், உன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி உணர்வு. அப்படி ஒரு சாந்தமான முகத்தினை நான் அதற்கு முன்னர் கண்டதில்லை. ஒரு பெரிய பொதியாக கட்டி உன்னை எடுத்துச் சென்றார்கள்.

 இது வரை நான் வாழ்க்கையில் கண்டறியாத, கேட்டறியாத உறவினர்கள் எல்லோரும் வந்தார்கள். போலியான சோகத்துடன் அவர்கள். பொய்யான சோகத்துடன் அப்பா. இடையில் நாங்கள் நால்வரும் செய்வதறியாது நின்றோம். நான் ஒரு உறவினர் வீட்டிலும், தங்கை வேறு ஒருவர் பராமரிப்பிலும், தம்பிகள் அப்பாவோடு செல்வதாக அவர்களே முடிவு செய்தார்கள். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என் தங்கை, தம்பிகளை வளர்க்க நீங்கள் எல்லோரும் யார், என்று கேள்வி கேட்ட என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
அப்படியே அம்மாவின் திமிர் இதுக்கும் வந்திருக்கு, என்று நொட்டை சொன்ன பிறகு அவர்கள் வழியில் போய் விட்டார்கள்.
அம்மாவின் திமிர் மட்டும் அல்ல. அவரின் மன உறுதியும் சேர்ந்தே வந்திருக்கு என்று மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு உடன் பிறப்புகளை கவனமாக வளர்த்து கரையேற்றினேன்.
உன் திமிர், மன உறுதி மட்டும் அல்ல. உன் நோயும் எனக்கு வந்திருக்கு. ஆம். உனக்கு வந்த அதே மனச்சிதைவு நோய் எனக்கும் வந்திருக்கு.
இப்ப விளங்குகின்றது நீ எதற்காக அப்படி இருந்தாய் என்பது. உலகமே என்னைச் சுற்றி வந்தாலும் எனக்கோ எதையோ பறி கொடுத்தால் போல ஒரு உணர்வு. அழகிய மகள் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத வெறுப்பு எல்லோர் மீதும். இன்று  காலை வெய்யில் வீட்டினுள் வரக் கூட நான் அனுமதிக்கவில்லை.கதவு, ஜன்னல் திரைச்சேலை எல்லாம் மூடி விட்டு, இரூட்டில் இருக்கிறேன்.  இருட்டினையே அதிகம் விரும்புது மனது. நீயும் இப்படி இருட்டில் தானே இருந்தாய். 

காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது மகள் சொன்னாள், அம்மா, இன்று எனக்கு பிடிச்ச பைனாப்பிள் கேசரி செய்து வைப்பீர்களாம், என்று.  உனக்கு அது தான் ஒரு கேடு என்று நீங்கள் சொல்வது போல நினைத்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டே புன்னகை செய்தேன்.


தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் விளங்கும் என்பார்கள். நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று விளங்குது. ஒரே ஒரு முறை மீண்டும் அந்த நொடி... நீ தற்கொலை செய்ய நினைத்த அந்த  நொடிக்கு போகும் சக்தி எனக்கு இருந்தால், இப்பவே உன்னை அங்கே வந்து மீண்டும் கூட்டி வருவேனே. உன்னிடம் அன்பாக பேசி, உனது நோயின் காரணத்தை கண்டறிந்து கொள்ள வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. இந்தக் கொடிய நோய் உனக்கு, எனக்கு, எனக்குப் பின்னர் என் மகளுக்கு.... நினைக்கவே நெஞ்சு பதறுகின்றதே. உன் முடிவு உனக்கு மட்டும் விடுதலை தேடிக் கொடுத்தது. உன்னைப் போல நான் மட்டும் விடுதலை பெற விரும்பவில்லை. எதிர்த்து நின்று இந்த நோயினை வெற்றி கொள்ளப் போகிறேன்.

இப்படிக்கு,
உன் அன்பு மகள் சௌம்யா.

Monday, May 14, 2012

அதோடு ஒரு பயணம்



சேகர், கூடையை கவனமா பார், என்றான் சண்முகம்.
சேகரின் முறைப்பினை பொருட்படுத்தாமல் ஜன்னல் வழியே பார்வையினை ஓடவிட்டான்.
பேருந்து அடுத்த ஸ்டாப்பில் நிற்க சில வயதான பெண்கள் கூடைகள் சகிதம் உள்ளே ஏறினார்கள். சில கூடைகளில் கீரை, சிலவற்றில் பழங்கள் என்று காணப்பட்டன.
சேகர் அலுப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
என் தலைவிதி உன்னோடு வரவேண்டி இருக்கே, என்று சண்முகத்திடம் குமுறினான்.
இருடா. இன்னும் அரை மணி நேரத்தில் கோயில் வந்துவிடும். அதன் பிறகு அங்கே இதை ... என்று சமாதானம் செய்தான் சண்முகம்.
கீரைக் கூடையோடு  ஏறிய பாட்டி இவர்களை நோக்கி வந்தார்.

சேகர் ஆழ்ந்து உறங்குபவன் போல கண்களை மூடிக் கொண்டான்.
ஏம்பா, எத்தனை கீரைக் கட்டு வாங்கினாய், என்றார் பாட்டி.
அஞ்சு இருக்கும் பாட்டி, என்றான் சண்முகம்.
உன்னை நான் முன்ன பின்ன இந்த பஸ்ஸில் பார்த்ததில்லையே, என்றார் பாட்டி. இன்னைக்கு தான் பிஸ்னஸ்  தொடங்குறாயா? ஒரு கட்டு எத்தனை ரூபாய்க்கு விற்கிறதா உத்தேசம்?. 5 கட்டுதான் இருக்கிறதா சொன்னே. இதை எந்த சந்தையில் கொண்டு போய் விற்கப் போகிறாய்,  என்று தொடர்ந்தார்.
பாட்டி சும்மா தொண தொணக்காமல் வா. இல்லாவிட்டால் இந்தக் கூடையை உங்களுக்கே தர வேண்டி வந்தாலும் வரலாம், என்றான் சண்முகம்.
பாட்டி அதன் பிறகு வாயை மூடிக் கொண்டாலும் அவரின் குறு குறுக்கும் பார்வை மட்டும் குறையவில்லை.


சண்முகத்திற்கு நேற்று நடந்தது எல்லாம் வரிசையாக ஞாபகம் வந்தது. உண்மையில் நேற்று அல்ல.  இந்தச் சம்பவம்... இல்லை இல்லை அந்த "அது"  இவனின் காதலி வீட்டினை சுற்றி வரத் தொடங்கி குறைந்து 2 மாதங்களாவது இருக்கலாம்.

காதலி வீட்டில் கோழிக் குஞ்சுகள், முட்டைகள் எல்லாம் மாயமாக மறைந்து போயினவாம்.காதலி சொன்னபோது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை  சண்முகம் . விடு உங்க அப்பா எடுத்து தின்னிருப்பார் என்று சமாதானம் சொன்னான். அவளின் அப்பா தான் இவனுக்கு வில்லன்.
இல்லை சண்முகம் எங்க வீட்டில் ஒரு பாம்பு இருக்கு. அது தான் எல்லாத்தையும் எடுத்து தின்னுது. நீ பெரிய ஆம்பிளையா இருந்தா அதை பிடி பார்க்கலாம், என்றாள்.
இவனுக்கு பாம்பென்றால் பயம் என்று சொல்வதை விட வெறுப்பு என்றே சொல்லலாம். அது நெளிந்து ஓடும்போது குமட்டிக் கொண்டு வரும். காதலி சொல்லும் போது எதுவும் சொல்ல முடியவில்லை. அடுத்த நாளே நண்பர்கள் துணையுடன் பெரிய வீரன் போல பாம்பு தேடச் சென்றான். கம்பு, தடிகளுடன் ஒரு கூட்டத்தினைக் கண்டதும்  இவனின் மாமனார், முடிஞ்சா அடித்துக் கொல்லுங்கள்,  என்று சொன்னார்.



என்னது பாம்பினை அடிப்பதா? அதன் சாபம் ஏழு ஜென்மத்துக்கும் விடாதே, என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்தார் வில்லனின் அம்மா.
அப்ப என்ன தான் செய்வதாம் என்று சொல்லு அதன்படி செய்துடுவோம், என்றார் அப்பா.
டேய்! அது சாதரண பாம்பு அல்ல. நாக பாம்பு. நீங்க அதை கவனமா பிடிச்சு நாக தம்பிரான் கோயிலில் கொண்டு போய் விட வேண்டும், என்றார் பாட்டி.
அதன் பிறகு சண்முகத்துக்கு உதறல் எடுத்தது. பாம்பினை லாவகமாக பிடிக்கும் முத்துவின் உதவியால் பிடித்து விட்டார்கள். ஆனால், முத்து ஏதோ அவசர வேலை இருப்பதாக சொல்லி கழன்று கொண்டான்.
சண்முகம் அவனுக்கு பணம் தருவதாக சொன்னபோதும் மறுத்துவிட்டான்.
நீயே கொண்டு போய் கோயிலில் போடுவியோ அல்லது அடிச்சுக் கொன்றாலும் பரவாயில்லை. நீ இதைக் கொன்றால் கூட கிழவிக்கு தெரியவா போகுது, என்று சொல்லிய பிறகு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் முத்து. மற்றைய நண்பர்களும் கழன்று கொண்டார்கள். மாட்டிக் கொண்டவன் சேகர் மட்டுமே.
தம்பிகளா, இதைக் கொண்டு போய் கோயிலில் விட்டுட்டு வாங்கப்பா, என்று வில்லன் கனிவாக சொன்ன போது மறுக்க முடியவில்லை.
டேய்  என் மாமா சொல்லிட்டார். கிளம்பு என்றான் சேகரிடம்.
ஆங் பெரிய மாமா சொல்லிட்டாராம். எங்க வீட்டில் கூட 5 முட்டைகள் காணாமல் போச்சு என்று சொன்னேன் நீ கேட்டியா? இப்ப உன் காதலி வீட்டில் 4 முட்டைகள்....
இல்லைடா 6 முட்டைகள் என்று இடையில் குறுக்கிட்ட நண்பனை முறைத்தான் சேகர்.
போடா லூஸூ. 60 முட்டைகள் காணாமல் போனாலும் பரவாயில்லை. நான் வரமாட்டேன், என்றான் சேகர்.

நண்பனை சமாதானம் செய்து, பாம்பினை சாக்கு பையில் போட்டு, அதை மீண்டும் இன்னொரு சாக்குப் பையில் போட்டு பஸ்ஸில் ஏறச் சென்றார்கள்.

டேய் தம்பி, அந்த கோணிப் பையில் என்ன இருக்கு?, என்றார் பஸ்ஸில் டிக்கெட் கொடுப்பவர்.
அதுவாங்கண்ணா.... என்று தயங்கி நின்றார்கள்.
இப்பெல்லாம் நாட்டு வெடி குண்டுகள் நிறைய கடத்துகிறார்கள். பிடிபட்டால் கம்பி எண்ண வேண்டியது தான். உனக்கு டிக்கெட் கொடுத்த பாவத்துக்கு நானும் கம்பி எண்ண ரெடியில்லை சொல்லிட்டேன். இப்பவே பையை திறந்து காட்டு என்று பிடிவாதம் பிடித்த நடத்துனரிடம் இருந்து தப்பி வருவதற்குள் வாழ்க்கை வெறுத்துப் போனது.

சைக்கிளில் போகும் தூரம் இல்லை. பஸ்ஸில் போகவே குறைந்தது ஒரு மணி நேரம் வேண்டும். என்ன செய்வது என்று தயங்கி நின்ற வேளை தான் சேகர் சொன்னான்.
டேய் லூஸூ, ஒரு ஓலைப் பெட்டி வாங்கி அதன் அடியில் இந்த கோணிப் பையினை வைச்சு. மேலே  கீரை வாங்கி அடுக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது, என்று சொன்ன நண்பன் தெய்வமாகத் தெரிந்தான்.


இடையில் வேறு ஒரு பஸ்ஸில் ஏறி இறங்க வேண்டும். கீரைக் கூடையுடன் திரிந்த விடலைகளை சிலர் சந்தேகமாகப் பார்த்தார்கள். எல்லோரின் பார்வையினையும் தவிர்த்து கோயில் போய் சேர்ந்தார்கள்.

ஏன் சண்முகம், பாம்பினை கோயிலில் கொண்டு போய் உண்மையில் விட்டியா? அல்லது அடிச்சுக் கொலை செய்தாயா? என்று காதலி சந்தேகமாக கேட்டாள்.
நீ என்னை நம்பவில்லை என்றால் சேகரிடம் கேள், என்றான்.
சரி. நம்புறேன். நீ பாம்பினை கோயிலில் விட்டதும் அது என்ன பண்ணிச்சு, என்றாள்.
இப்ப எதுக்கு அதெல்லாம் என்று மழுப்பினான்.
இல்லை சொல்லு. சும்மா ஒரு ஆர்வம் தான், என்றாள்.

அந்தக் காட்சி கண் முன்னே விரிந்தது. பஸ்ஸில் இருந்து இருவரும் இறங்கி நாகதம்பிரான் கோயிலை நோக்கிச் சென்றார்கள். கீரையினை எறிந்த பின்னர் கோணிப் பையினை நடுங்கும் கைகளினால் அவிழ்த்துவிட்டான். உள்ளே இருந்து ஆக்ரோசமாக சீறியபடி வந்த பாம்பு இருவரையும் நோக்கி வந்தது. அன்று ஓட்டம் எடுத்த சேகர் அதன் பின்னர் இவனின் நட்பினை முறித்துக் கொண்டான்.
காதலி பெரிய ஜோக் கேட்டவள் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.
இவளின் சிரிப்புக்காக இன்னும் ஆயிரம் பாம்புகள் பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் சண்முகம்.
( இது ஒரு கற்பனைக் கதையே. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையே.)






















Thursday, May 3, 2012

படை படுக்கட்டும்

என் அம்மாச்சி சமையலில் ஒரு புலி. அவர் செய்யாத சாப்பாடு வகைகள் இல்லை. கேக், பாட்டீஸ் தொடக்கம் உள்ளூர் சாப்பாடுகள் வரை எல்லாமே நல்ல சுவையாக செய்வார். என் அமாச்சிக்கு என் அம்மா உட்பட 6 குழந்தைகள். அவர் ஏதாவது சாப்பாடுகள் செய்வது எனில் இரவு தான் செய்வார். எனக்கு ஒரே மர்மமாக இருக்கும். எதுக்கு இரவு செய்கிறார் என்று. ஒரு நாள் சொன்னார், ஓ! அதுவா. இந்தப் படை எல்லாம் படுத்த பிறகு தான் செய்வேன், என்றார்.
ஏன்?, இது நான்.
என் அம்மாச்சி பதில் சொல்லவில்லை.
உள்ளூர் சாப்பாடு வகைகள் செய்வது எனில் பகலிலும், கேக், லட்டு, அல்வா ஆகியவை செய்யும் போது இரவிலும் செய்வார்.

இந்தப் பழக்கம் என் அம்மா, அவரின் சகோதரர்கள், பிறகு நாங்கள் வளர்ந்த பிறகும் தொடர்ந்தது. என் அம்மாச்சி அல்வா செய்வது எனில் வீட்டில் போர்க்களம் போவது போல அப்படி ஒரு ஆரவாரம். மாவினை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் தெளிய வைத்து, மாவினை பிசைந்து கழுவி, அதில் வரும் தண்ணீரை எல்லாம் சேமித்து... இது ஒரு பெரிய வேலை. ரகசியமாக நடக்கும். ஆனால், நாங்கள் எல்லோரும் சூப்பராக மோப்பம் பிடித்துவிடுவோம்.
இன்று இரவு அல்வா செய்யப் போகிறார்கள், என்று எங்கள் கஸின்ஸ் எல்லோருக்கும் தகவல் போய் விடும். அவர்களும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
ஆனால் முந்திரிப்பருப்பு, வற்றல் என்று எதையும் கண்ணில் காட்டவே மாட்டார்கள். நாங்கள் முற்றத்தில் அல்வா கிண்டும் இடத்திற்கு பக்கத்தில் பாய் விரித்து, தலையணை போட்டு, எதற்கும் ரெடியாகவே இருப்போம்.
நித்திரை தூங்கி விழுபவர்களையும் சத்தம் போட்டு எழுப்பி விடுவோம்.


இந்தக் கூத்து எல்லாமே ஒரு 12 மணி வரை தான் செய்ய முடியும். அதன் பின்னர் பாதி தூக்கம், பாதி முழிப்பு என்று ஒரு நிலை வரும்.
அப்ப தான் என் அம்மாச்சி முந்திரிப்பருப்பு, வற்றல் இரண்டையும் நெய்யில் வறுத்து வைப்பார். கைக்கெட்டும் தூரத்தில் வைத்தாலும் போய் எடுக்க முடியாதபடி தூக்கம் சுழற்றி அடிக்கும். இதை சாப்பிடத் தானே இப்படி ஆளாய் பறந்தோம் என்பது மறந்து போயிருக்கும்.  அடுத்த நாள் விடிந்தெழுந்து பார்க்கும் போது அழகிய பச்சை அல்லது சிவப்பு நிறத்தில், முந்திரி தூவப்பட்ட அல்வா தட்டில் இருக்கும். ஆனால், நாங்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
படை பறந்திச்சு. ஆனால் இப்ப யாரும் தேடுவார் இல்லாமல் இருக்கே, என்று அம்மாச்சி வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு அல்வா கொடுப்பார்.


என் அப்பாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. பிள்ளைகளுக்கு தானே செய்கிறோம். பகலில் செய்தா என்னவாம், என்று குறைபட்டுக் கொள்வார்.
இவர் ஈஸியா சொல்லிட்டுப் போயிடுவார். நான் இந்தப் படையோடு படும் பாடு... என்று அம்மாச்சி முணுமுணுப்பார்.
என் அம்மா கேக் செய்ய ஆரம்பித்த போது என் அப்பாவின் ஆணைப்படி பகலில் செய்யத் தொடங்கினார்.

ஆனால் பாருங்கள் அல்வா செய்வது எனில் முந்திரிப் பருப்பு, வற்றல் இரண்டுக்கு மட்டுமே பறப்போம். கேக் செய்வது எனில் எவ்வளவு பொருட்களுக்கு பறக்க வேண்டும்... பட்டர், சீனி அடிக்கும் போது அதை அள்ளிச் சாப்பிடுவது ஒரு தனி சுகம். பின்னர் மா சேர்த்து அடிக்கும் போது, அடித்த பின்னர் இப்படியே தொடரும். என் அம்மா ஒரு பெரிய சட்டியில் பட்டர், சீனி சேர்த்து மத்தினால் தான் அடிப்பார். சட்டி நகராமல் பிடிக்க ஒரு ஆள் வேணும். அந்த பொறுப்பான பதவி வகிக்க பெரிய சண்டையே நடக்கும். ஏனெனில் சட்டியை பிடிப்பவர்  எதேச்சையாக கைகளை மேல் விளிம்பு வரை கொண்டு சென்று, விபத்து போல கேக் கலவையினை அடிக்கடி விரல்களினால் தொட்டு நக்க சந்தர்ப்பம் அதிகம் அல்லவா. ஆனால், என் அம்மா மத்தினை சுழற்றும் வேகத்துக்கு ஏற்றாப்போல சட்டியை நகராமல் பிடிக்க வேண்டும். ஒழுங்கா பிடிக்காமல் இருந்தால் அந்த வேலை வேறு யாருக்காவது கொடுக்கப்படும்.


அதன் பிறகு முந்திரிப் பருப்பு, வற்றலுக்கு பறந்து, கேக் கலவையினை ட்ரேயில் ஊற்றிய பிறகு சட்டி, மத்து இவற்றுக்கு ஒரு பெரிய சண்டையே நடக்கும். மத்து ஒருவருக்கு கொடுக்கப்படும், சட்டியில் கோடு போட்டு ஒரு பகுதி ஒருவருக்கு, மற்றைய  பகுதி இன்னொருவருக்கு என்று கொடுக்கப்படும்.
நான் அப்பவே சொன்னேன் இந்தப் படை படுத்த பிறகு செய்யலாம் என்று நீ தான் கேட்கவில்லை, என்று அம்மாச்சி என் அம்மாவிடம் குறைபட்டுக் கொள்வார்.
பிறகு நாட்டுப் பிரச்சினையால் அண்ணன்கள் ஒவ்வொரு பக்கம், நாங்கள் ஒரு பக்கம் என்று பிரிந்து போனோம். கேக் செய்வது எல்லாம் அடியோடு நின்று போனது.
இப்ப நினைத்தவுடன் கேக் செய்ய முடிகிறது. ஆனால், என் பிள்ளைகள் எதற்கும் பறப்பதில்லை. என்ன இப்படி இருக்கிறார்கள் என்று நினைப்பேன். நாங்கள் சட்டி, மத்து இப்படி எல்லாவற்றுக்கும் சண்டை பிடித்த கதைகள் சொன்னால் சிரித்துக் கொள்வார்கள்.
இப்ப நினைத்தால் சிரிப்பு வந்தாலும் திரும்ப அந்தப் பருவம் வராதா என்று அடிக்கடி ஏங்குவதுண்டு. இப்பவும் பழைய நினைவில் சட்டியை வழித்து ஒரு டீஸ்பூன் சாப்பிட்டாலும் பிறகு ஏனோ மூட் வருவதில்லை. என் அம்மாச்சி சொல்வது போல " படை படுக்கட்டும் " என்ற வரி தான் இப்பெல்லாம் கேக் செய்யும் போது ஞாபகம் வரும்.



Saturday, April 28, 2012


ஃப்ரைட் ரைஸ்

ஜாஸ்மின் ரைஸ் - 2 கப்
வெங்காயம் - பாதி
water chest nuts - 1/2 கப்
சிக்கன் - 1/2 கப்
கிரீன் பீஸ் - 1/2 கப்
முட்டை - 2
வெங்காயத் தாள் -  1/2 கப்
சோயா சாஸ் - 1/4 கப் ( அல்லது விரும்பிய அளவு )
எண்ணெய்
முட்டைக்கு கொஞ்ச உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.

ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு சைனீஸ் வோக் எனப்படும் நான் ஸ்டிக் சட்டி  வாங்க வேண்டும் என்ற என் பலநாள் கனவு இந்த வருடம் நிறைவேறியது. உங்கள் வசதிற்கேற்ப பல விலைகளிலும் கிடைக்கிறது. 20 டாலர்களிலிருந்து 100 டாலர்கள் வரை ரேஞ்ச்களில் கிடைக்கிறது.
ஃப்ரைட் ரைஸ் செய்ய ஜாஸ்மின் ரைஸ் தான் சிறந்தது. 1 கப் ரைஸ் எனில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு, முதல் நாள் இரவே  ரைஸ் குக்கரில் சோறு செய்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
சைனீஷ் வோக்கினை அடுப்பில் வைத்து  சூடாக்கவும். இங்கு எல்லாப் பொருட்களையும்  stir fry முறையில் தான் பொரிக்க வேண்டும். அடுப்பினை ஹையில் வைத்து,
 வெங்காயத்தை ஃப்ரை செய்து எடுக்கவும். இதே போல  water chestnuts , கிரீன் பீஸ், முட்டை எல்லாவற்றையும் தனித் தனியாக பொரிக்கவும்.
கடைசியாக  சிக்கினை ( கவனிக்கவும் லேசாக தான் உப்பு சேர்க்க வேண்டும் )பொரித்தெடுக்கவும்.
சோம்பல் பட்டுக் கொண்டு  எல்லாவற்றையும் ஒரேதாக  சட்டியில் கொட்டக் கூடாது.

சட்டியினை லேசாக துடைத்துவிட்டு, சிறிது எண்ணெய் விட்டு குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ரைஸினை உதிர்த்து போடவும். பின்னர் சோயா சாஸ் விடவும். ஃப்ரை செய்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.  இறுதியில் வெங்காயத்தாள் தூவி அலங்கரிக்கலாம்.

சோயா சாஸில் உப்பு இருப்பதால் பொருட்களை உப்பு சேர்க்காமல் பொரித்தெடுக்கவும். விரும்பினால் மஷ்ரூம் சேர்க்கலாம்.
( Thanks to google )

water chestnut என்பது கொரியன் கடைகளில் ப்ரெஷ் ஆக கிடைக்கும் அல்லது டின்களில் அடைத்தும் விற்கிறார்கள். 


வாங்க கார்லிக் ( உள்ளி, பூண்டு ) உரிக்கலாம்.

என் மகனின் நண்பனின் கிரான்ட்மா  குளிர்சாதனப் பெட்டியில் நிறை..ய ஜிஞ்சர்+ கார்லிக் பேஸ்ட் அரைத்து வைத்திருப்பதைக் காட்டினார். டிவி பார்த்துக் கொண்டே கார்லிக் உரித்து, ஜிஞ்சர் வெட்டி அரைப்பாராம். அவ்வளவு  பூண்டும் தோல் நீக்குவது என்பது எவ்வளவு மெனக்கெட்ட வேலை என்று விளங்கியது. 
நான் தேவைக்கேற்ப  உடனே அரைத்து பாவித்துக் கொள்வேன். க்ரான்ட்மாவின் ஐடியா நல்லா தான் இருந்தது. ஆனால், இவ்வளவு பூண்டும் தோல் நீக்குவது என்பது அலுப்பு பிடிச்ச வேலை. அப்ப தான் பல வருடங்களின் முன்னர் எங்கட ரேச்சல் ரே அக்கா ( தொலைக்காட்சியில் ரெசிப்பிகள் வழங்குபவர் ) சொன்ன இலகுவான முறை ஞாபகம் வந்தது. 
இரண்டு எவர் சில்வர் சட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டுகளை அப்படியே தோலோடு சட்டியில் போடவும். மறு சட்டியால் மூடி, நன்கு குலுக்கவும். சில நிமிடங்களில் கார்லிக் தோல் நீங்கி சூப்பராக வரும். 

இதில் 2 சட்டிகளும் எவர் சில்வராக இருக்க வேண்டும். ப்ளாஷ்டிக் சட்டிகள் கண்டிப்பாக பாவிக்க கூடாது. 


Friday, April 6, 2012






சம்பல்




தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்பூ - 1 கப்
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை
சின்ன சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
சட்டியில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயை  நன்கு வறுக்க வேண்டும்.



இந்த சம்பல் ப்ரெட், சப்பாத்தி, தோசை இப்படி எல்லா வகையான உணவுகளுக்கும் ஏற்ற சைட் டிஷ். 
ஊரில் இருந்த போது காய்ந்த மிளகாயை வறுத்து உரலில் இடித்து, தேங்காய் துருவல் சேர்த்து இடித்து, பின்னர் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சின்ன சீரகம், சிறிது எலுமிச்சை சாறு ( விரும்பினால் ), உப்பு சேர்த்து இடித்து, ப்ரெட், ரொட்டி, அப்பம், புட்டு, இடியப்பம் உடன் சாப்பிட்டால் அமிர்தம் தான். வெளிநாட்டில் உரலுக்கு எங்கே போவது. இந்த சம்பல் செய்வது நின்று போனது. கனடாவில் என் அம்மா ஒரு முறை காய்ந்த மிளகாயை வறுத்து, காஃபி க்ரைன்டரில் பொடியாக்கி, தேங்காய் துருவலை பிரட்டி எடுத்து, பின்னர் food processor இல் போட்டு ஒரு சுழற்று சுழற்றி, வெங்காயம், கறிவேப்பிலை, சின்ன சீரகம், உப்பு போட்டு லேசாக ஸ்பின் செய்து இறக்கினார். இந்த சம்பலுக்கு தண்ணீர் ஒரு துளி கூட சேர்க்க கூடாது. தண்ணீர் சேர்த்தால் சட்னியாக மாறிவிடும். 


சொதப்பல்கள்
மகியின் காண்ட்வி ரெசிப்பி செய்தேன். அவர் குறிப்பிட்ட அளவுகள் எல்லாம் போட்டு, குறிப்பின்படி கை வலிக்க கிளறி, எண்ணெய் பூசிய அலுமினியம் foil இல் பரவி... இதுவரை நல்லாத் தான் போனது. ஆனால், இந்த பாய் போல சுருட்டுவது தான் சரி வரவில்லை. சுருட்டி வைத்துவிட்டு திரும்பி பார்க்க எல்லாம் தாமாகவே பழைய நிலைக்கு வந்து கிடந்தன. மீண்டும் சுற்ற நினைத்தேன் ஆனால், அப்படியே டைமன்ட் ஷேப்பில் வெட்டினால் என்ன என்ற எண்ணம் வந்தது. அப்படியே வெட்டி, தாளித்து போட்டு, சாப்பிட்டால் சுவையோ சுவை. 










Thursday, March 29, 2012


ஐ பூரி





இந்த ரெசிப்பி எனக்கு மிகவும் பிடிக்கும். ஊரில் இருந்த போது, என் அம்மாவின் தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும் போது சாப்பிடச் சொன்னால், இல்லைம்மா இப்ப தான் அய் பூரி சாப்பிட்டேன், என்பார்.
என் அம்மாச்சி அவரிடம் ரெசிப்பி கேட்டார். அவரும் சொன்னார். வீட்டில் அய் பூரி செய்தார்கள் செய்து அடுத்த நொடி எல்லாமே முடிந்துவிட்டது.
இப்ப இது என் பிள்ளைகளின் பேவரைட் உணவு. தேங்காய் சட்னியோடு அல்லது  சைட் டிஷ் இல்லாமல் சாப்பிட சுவையாக இருக்கும்.
சரி இப்ப இந்த பெயர் வந்த காரணத்தை பார்ப்போமா?
ஊரில் என் உறவினர் சூடிய பெயர் " அய் பூரி". என் மகன் சூட்டிய பெயர்   " ஐ பூரி".
ஏன் இந்தப் பெயர்?, இது நான்.
அதுவா ஐ போன், ஐ பாட் போல இதுக்கு பெயர் ஐ பூரி, என்றார்.

தேவையான பொருட்கள்:

மா - 2 கப்
வெங்காயம் - 1/4
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காரட் - துருவியது 1/4 கப்
உப்பு
கறிவேப்பிலை

செய்முறை:
முதலில் வெங்காயத்தை மிகவும் பொடியாக வெட்டவும். பொடியாக வெட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க கூடாது. பொடியாக வெட்டினால் தான் மாவோடு சேர்ந்து இருக்கும். இல்லாவிட்டால் தனியாக பிரிந்து போய்விடும். சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போடவும். பின்னர்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, லேசாக வதக்கவும். வதங்கியதும் தட்டில் பரவி ஆற விடவும்.

மாவுடன் உப்பு, காரட், வெங்காய கலவை கலந்து கொள்ளவும். குளிர்ந்த தண்ணீரை விட்டு சப்பாத்தி மா பதத்திற்கு பிசையவும். பிசைந்து  முடிந்ததும் எண்ணெயில் தொட்டு பூரி சைஸில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்ப சுவையான ஐ பூரி ரெடி.

மா - கோதுமை மா, மைதா மா இரண்டும் மிக்ஸ் செய்து பூரி செய்யலாம். நான் மைதா மா மட்டும் பாவித்தேன். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் உணவு. பெரிசுகளும் சாப்பிடத் தொடங்கினால் நிப்பாட்ட மாட்டார்கள்.









Tuesday, March 13, 2012

பெயரை மாற்றப் போகிறேன்

கடைகளில் சில நேரங்களில் பொருட்கள் வாங்கினால் ரிபேட் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையினை திருப்ப தருவார்கள். இப்ப அதுக்கென்ன வாங்கி செலவழிக்க வேண்டியது தானே என்று நினைத்தால் அது தவறு. கடையில் எக்ஸ்ட்ராவா ஒரு ரசீது கொடுப்பார்கள். அதில் இந்த நபர் இந்தப் பொருளை வாங்கினார் என்பதற்கு சில தகவல்கள் இருக்கும். இந்த ரசீது, வாங்கிய பொருளின் பெட்டி மீது இருக்கும் யுபிஸி கோட், விண்ணப்ப படிவம் நிரப்பி, அவர்கள் சொன்ன தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதெல்லாம் செய்ய யாருக்கு நேரம் இருக்கு என்று என் ஆ.காரர் கடுப்படிச்சாலும் நான் கண்டு கொள்வதில்லை. அனுப்பிய பிறகு தான் மறுவேலை. சமீபத்தில் ஒரு பொருள் வாங்கினோம். அதிலும் இந்த ரிபேட் இருந்தது. நான் அவர்கள் கேட்ட எல்லாத்தையும் கவரில் போட்டு அனுப்பினேன். சில வாரங்களின் பிறகு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. அதில், நீங்கள் அனுப்பிய யுபிஸி கோடு செல்லுபடியாகாது. எனவே காசு தரமுடியாது என்று எழுதி இருந்தார்கள். உனக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அடப்பாவிகளா! என்று எரிச்சல் வந்தது. நான் என்னவோ யுபிஸி கோடு வீட்டில் உற்பத்தி செய்தது போல பிகு பண்ணுகிறார்களே என்று கோபம் வந்தது. நான் அவர்களுக்கு பின்வருமாறு மெயில் அனுப்பினேன்.

நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் அனுப்பிய பிறகும் காசு தரமாட்டோம் என்று சொல்வது முறையல்ல. உங்களுக்கு பணம் தர விருப்பம் இல்லாவிட்டால் தர விருப்பம் இல்லை என்று சொல்லுங்கள். அதை விட்டுப் போட்டு இது நொட்டை, அது நொள்ளை என்று குறை சொல்லப்படாது. இனிமேல் உங்க கடைப்பக்கம் வந்தால் என் பெயர் வானதி இல்லை. இப்படிக்கு, வானதி.


சில நாட்களின் பின்னர், அவர்களிடமிருந்து பதில் வந்திருந்தது. உன் பெயரை எல்லாம் மாத்த வேண்டாம். நாங்கள் உனக்கு சேர வேண்டிய காசினை அனுப்பி வைக்கிறோம். எங்கள் கடைப் பக்கம் வராம மட்டும் இருந்திடாதே.
இப்படிக்கு,
டோனி

( டோனிக்கு எல்லோரும் " ஓ" போடுங்க.)

**********************
மகளின் வகுப்பில் வாலன்டியராக வேலை செய்வது வழக்கம். ஒரு குட்டிப் பெண் மிகவும் ஒட்டுதலாக இருப்பார். ஒரு நாள் லஞ்ச் டைம் காஃபிடீரியாவில் என்னைக் கண்டதும் கைகளை ஆட்டினார். கிட்ட வருமாறு சைகை செய்தார்.
என்ன வேணும்?, இது நான்.
இந்த சான்ட்விச்சை கட் பண்ணிக் குடு, என்றார்.
என் கைகள் அழுக்காக ( லஞ்சம் வாங்கி அல்ல உழைத்து அழுக்கான கைகள்.) இருக்கு. நீ சான்ட்விச்சை பிடி. நான் இரண்டாக வெட்டி விடுகிறேன், என்றேன்.
சரி, என்று தலையாட்டினார்.
வெட்டிய பின்னர் ப்ளாஸ்டிக் கத்தியை அவரிடம் நீட்டினேன்.
எனக்கு வேண்டாம், என்றார்.
இதை நான் என்ன செய்ய? எனக்கும் வேண்டாம், என்றேன்.
கொண்டு போய் குப்பையில் போடு, என்று விட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நான் குப்பையில் போட்டு விட்டு நகர்ந்தேன்.


வகுப்பறையில் குட்டிப் பெண் தனியாக ஒரு நாற்காலியில் அமர வைக்கப்படிடிருந்தார். என்னைக் கண்டதும் லேசாக சிரிப்பு வந்தாலும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை. டீச்சர் பின்னர் மெதுவான குரலில் சொன்னார், இந்தக் குட்டி சொல் பேச்சுக் கேட்பதில்லை. வகுப்பறையில் விழுந்து, பிரண்டு விளையாடிக் கொண்டு இருந்தார். அதனால் தான் தனியாக அமர வைத்தேன். முன்பெல்லாம் வகுப்பறைகளில் 20 பிள்ளைகளுக்கு மேல் இருக்க மாட்டார்கள். எனவே எல்லோரின் மீதும் தனிக்கவனம் செலுத்த முடிந்தது.

இப்ப எத்தனை பேர் இருக்கிறார்கள்?, என்றேன்.

26 பேர், என்றார் ஆசிரியர்.

நான் ஊரில் படித்த போது என் வகுப்பில் கிட்டத்தட்ட 40- 50 இருந்திருப்பார்கள். என் ஆசிரியையின் முகம் ஞாபகம் இல்லை. எப்படி ஞாபகம் இருக்கும்? அவரின் பிரம்பு மட்டுமே ஞாபகம் இருக்கு. ஆசிரியரைப் பார்த்து 20 பேர் பயப்பட, மிச்சம் ( நான் உட்பட ) இருப்பவர்கள் பிரம்பினை பார்த்து பயப்பிட்டே படித்த காலம். ஆசிரியர் வகுப்பில் இல்லாவிட்டாலும் பிரம்பு இருக்கும். நேர்சரி விடும் நேரம் வந்ததும் ஒரே ஓட்டமாக ஓடி வந்து வெளியே நின்றால் தான் போன உயிர் திரும்பி வந்தது போல இருக்கும். கான்வென்டில் படித்த போது பிரம்புடன் ரவுன்ட்ஸ் போகும் தலைமை ஆசிரியை. திருக்குறள் மனப்பாடம் செய்து சொல்லாவிட்டால் அடி, ஆசியர்களுக்கு மூட் சரியில்லாவிட்டால் அடி, இப்படி ஏகப்பட்ட பிரம்புகள் வாழ்வில் சந்தித்து, பிரம்புகளோடு வாழ்ந்து இருக்கிறேன். இப்ப என் பிள்ளைகளுக்கு அந்தக் கொடுமை எல்லாம் இல்லை என்று சந்தோசம் அடிக்கடி எட்டிப் பார்ப்பதுண்டு. இதையெல்லாம் கொசுவத்தி சுழல விட்டு மனதினுள் சிரித்துக் கொண்டேன்.

ஏன் சிரிக்கிறாய்?, என்றார் ஆசிரியர்.

எங்க ஊர் பற்றி சொல்லி மானத்தை கப்பலேற்றி அனுப்பக் கூடாது என்று நினைத்துக் கொண்டே, வரட்டா, என்று விடைபெற்றேன்.

Sunday, March 11, 2012

விடியல்

சுதாகர் இரு கைகளிலும் பைகளை சுமந்தபடி வேகமாக நடந்தான். வானம் இருள் சூழ்ந்து, இப்பவே மழையை பொழியவா என்று மிரட்டுவது போல வெட்டி மின்னியது. சுதாகரின் நடை ஓட்டமாக மாறியது. காலை பத்து மணி என்று கடிகார முட்கள் சொன்னது. இன்னும் 10 நிமிடங்கள் நடந்தால் வீடு வந்து விடும். ஆனால், இந்த பாழாய்ப் போன மழை இன்னும் எவ்வளவு நேரம் கொட்டப் போகிறதோ தெரியவில்லை என்று யோசனையுடன் அங்கிருந்த கடைப் பக்கம் ஒதுங்கிக் கொண்டான்.

10 வருடங்களில் ஊர் நிறையவே மாறி விட்டதை ரசித்தான். மழை ஒரு வழியாக குறைந்ததும் வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மனதில் ஒரு வித பயம், குழப்பம், சந்தோஷம் என்று கலவையான உணர்வுகள் போட்டி போட்டுக் கொண்டு நின்றன. அப்பா என்ன சொல்வார், அம்மா என்னை ஏற்றுக் கொள்வாரா பல விதமான வினாக்கள் எழுந்தன. பத்து வருடங்கள் 10 நொடிகள் போல மறைந்து விட்டதை உணர்ந்தான். கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அங்கேயே அழுது விடுவோமோ என்று பயத்தினால் விரைவாக நடக்கத் தொடங்கினான்.

வீட்டு வாசலில் போலீஸ் நிற்பது தெரிந்தது. என்ன வில்லங்கமோ என்று நினைத்தபடி வேகமாக ஓடத் தொடங்கினான். கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினான். அப்பா இவனைக் கண்டதும் அடையாளம் கண்டு கொண்டார். அம்மா ஓடி வந்து அணைத்துக் கொண்டார். இப்பவாச்சும் எங்கள் ஞாபகம் வந்திச்சே உனக்கு என்றபடி பெருங்குரலில் அழ ஆரம்பித்த தாயை தேற்ற வழி தெரியாமல் கண்கள் கலங்கி நின்றான்.

இவர் யார்? என்று போலிஸார் அப்பாவை கேள்வி கேட்டபடி இவனை சந்தேகமாகப் பார்த்தார்கள்.
என் ஒரே மகன். 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவன் இப்ப தான் திரும்பி வந்திருக்கிறான் என்றார் குரல் கம்ம.
ஓ! அப்படியா. நாங்கள் வருகிறோம். இன்னும் ஒரு 2 வாரங்கள் பார்க்கலாம். யாரும் வரலைன்னா அதன் பிறகு ஆக வேண்டியதை பார்க்கலாம் என்றபடி விடை பெற்றார்கள் காவல் துறை அதிகாரிகள்.
சொர்ணம், உன் மகன் திரும்பி வந்துட்டான். உனக்கு ஒரு பேரனும் கிடைச்சாச்சு. உனக்கு இனிமேல் நல்ல நேரம் தான் என்று பெரியம்மா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பார்வையினை ஓட விட்டான். பெரியம்மாவின் மடியில் பூக் குவியல் போல ஒரு குழந்தை. குண்டுக் கன்னங்கள், ரோஜா நிறம், அழகிய சிவந்த உதடுகள் என்று பார்க்கவே தூக்கி கொஞ்ச வேண்டும் போல இருந்தது.
சுதா, இது யார் பெத்த பிள்ளையோ தெரியவில்லை. இன்று காலையில் அழுகுரல் கேட்டுச்சு வந்து பார்த்தபோது குழந்தையை யாரோ வைச்சுட்டு போயிருந்தார்கள், என்றார் அம்மா.

ஊரே திரண்டு வந்து நின்றது வாசலில்.
எங்க ஊரில் யாரும் இவ்வளவு சிவந்த நிறம் கிடையாது. யார் குழந்தையாக இருக்கும் என்று ஊர் மக்கள் கேள்விகள் கேட்டு, அவர்களே பதிலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் போய்ட்டு பிறகு வாங்க. ஆற அமர இருந்து யோசிச்சு என்ன செய்வது என்று முடிவு செய்வோம், என்றார் சுதாகரின் அப்பா. யாராவது உரிமை கோரி வரும் வரை குழந்தை எங்கள் பராமரிப்பிலேயே இருக்கும். யாருக்காவது வேறு ஏதாவது எண்ணம் இருந்தா இப்பவே இங்கேயே குழி தோண்டிப் புதைச்சுட்டு வீடு போய் சேருங்கள் என்று முடித்துக் கொண்டார்.

ஊரார் கலைந்து சென்ற பின்னர் உறவினர் பார்வை சுதாகரின் பக்கம் திரும்பியது.
சுதாகர், எப்படி, எங்கே, என்ன செய்து கொண்டிருந்தாய் இவ்வளவு நாட்களா? என்று பெரியப்பா கேள்வி எழுப்பினார்.
" பெரியப்பா, வீட்டை விட்டுப் போய் சென்னையில் இருந்தேன். அங்கே தான் 10 வருடங்களா இருந்தேன்", என்று முடித்துக் கொண்டான் சுதாகர். அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாமல் இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். மேலும் சில உறவினர்கள் பல கேள்விகள் கேட்க, சுதாகர் எதற்கும் சுரத்தில்லாமல் பதில் சொன்னான்.
எல்லோரும் போய்ட்டு நாளைக்கு வாங்கப்பா. ஆறுதலாக பேசலாம் என்று சுதாகரின் அப்பாவின் கட்டளைக்கு மனமில்லாமல் கலைந்து சென்றார்கள்.
சுதாகர், நீ போய் சாப்பிடுப்பா. நாளைக்கு பேசலாம், என்ற அப்பாவின் குரலுக்கு பார்வையால் நன்றி சொல்லியபடி உள் அறையினை நோக்கி ஓடினான்.
படுத்த பின்னர் தூக்கம் வரவில்லை. ஆனால், நிம்மதியாக இருந்தது. வெளியே இன்னும் மெல்லிய பேச்சு சத்தம் கேட்டது. குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
பத்து வருடங்களின் முன்னர், இதே போல ஒரு மழை நாளில் தான் சுதாகர் சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறினான். அப்பா நல்லவர் தான். ஆனால், மிகவும் கோபக்காரர். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்த காரணத்தால் நடுக்கம் பிடித்துக் கொண்டது. வீட்டுக்கு வராமல் தேரடியில் ஒளிந்து கொண்டான். இரவு நெடு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அப்பா படையுடன் ஊரெல்லாம் தேடினார். இறுதியில் தேரடியில் கண்டும் பிடித்துவிட்டார். இடுப்பில் கட்டியிருந்த பெல்டினை உருவி, சுதாகரின் முதுகினை பதம் பார்த்துவிட்டார். அப்பா கையால் அடி வாங்கியது கூட பெரிதாக தோன்றவில்லை சுதாகருக்கு ஆனால், ஊரார் முன்னாடி அடித்தது தான் பெரும் அவமானமாக இருந்தது. அன்றிரவே சென்னை செல்லும் பேரூந்தில் ஏறிவிட்டான். சென்னையில் இருக்கப் பிடிக்காமல் பல இடங்களையும் சுற்றி வந்து, இறுதியில் கேரளாப் பக்கம் வந்த போது மனசுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது அந்த இடம். நச நசவென பெய்யும் மழையும், அழகிய பெண்களும் கண் கொள்ளாக் காட்சியாகப்பட்டது இவனுக்கு. கிடைத்த வேலைகளை செய்து வாழ்க்கையினை ஓட்டினான்.

வாழ்வில் குறிக்கோள் இல்லாமல் இருந்தவன் பார்வதியை சந்தித்த பின்னர் மாறிப் போனான். காதல் கனிந்தது. வாழ்வின் மீது ஒரு பிடிப்பு வந்தது. முட்டி மோதி ஒரு நல்ல நிலையை அடைய நிறையப் போராட வேண்டி இருந்தது உண்மை தான். வாழ்க்கை இனிமையாக மாறியது. திருமணம் முடிந்த அடுத்த மாதமே பார்வதி கர்ப்பம் ஆகினாள்.

வீல்... என்ற அழுகுரலுக்கு தூக்கம் கலைந்தது. அம்மா தேநீர் கோப்பையுடன் பக்கத்தில் வந்தார். அம்மாவோ அல்லது அப்பாவோ எதுவும் கேட்காதது மிகவும் நிம்மதியாக இருந்தது. உனக்கு எப்ப சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்ப சொல்லு என்று ஒதுங்கிக் கொண்டார்கள். தொண்டை வரை வந்த வார்த்தைகளை முழுங்கிக் கொண்டான்.

பார்வதிக்கு அழகிய குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் பார்வதி புற்று நோய் வந்து இறந்து போக, இவன் குழந்தையினை வைத்துக் கொண்டு தடுமாறிப் போனான். பாலுக்காக அழுத பிள்ளையை தேற்ற வழி தெரியாமல் மீண்டும் பயணம் தொடர்ந்தது.
மீண்டும் குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. அதன் அம்மாவின் கதகதப்புக்கு ஏங்குறது குழந்தை. என் குழந்தை தாயும் இல்லாமல், தகப்பனும் இல்லாமல் வாழப்போகிறது. யாரையோ அப்பாஎன்று அழைக்கப் போகிறது என்ற நினைப்பு வந்ததும் திடுக்கிட்டு எழுந்தான். நான் செய்தது சரியா என்று மீண்டும் குற்ற உணர்வு ஆட்கொண்டது.

மறுநாள் விடிந்த போது குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லை. சொர்ணம் வீடு முழுக்கத் தேடியும் குழந்தையைக் காணவில்லை. ஒரு கடிதம் மேசையில் பட படத்தது.

அன்புள்ள அம்மா, அப்பா, இருவருக்கும்,

நீங்கள் மீண்டும் என்னை மன்னிக்க வேண்டும். நம்ம வீட்டில் இருந்த குழந்தை என் குழந்தையே தான். நான் ஊருக்குள் வந்த போது எல்லா உண்மைகளையும் சொல்லும் நோக்கத்தோடு தான் வந்தேன். ஆனால், கடைசி நொடியில் மனதை மாற்றிக் கொண்டேன். மீண்டும் மனம் மாறி என் குழந்தையை என்னோடு அழைத்துச் செல்கிறேன். அவனை வளர்ப்பது என் கடமை அல்லவா? என் மனைவி இல்லாமல் எப்படி அவனை வளர்ப்பேன் என்று தான் இங்கே வந்தேன். ஆனால், இப்ப ஒரு தெளிவு வந்துவிட்டது.
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரிந்து செல்கிறோம்.
அன்பு முத்தங்களுடன்,
சுதாகர்
மேனன்
பின்குறிப்பு: அவனுக்கு நாங்கள் வைத்த பெயர் மேனன்.

Monday, February 27, 2012

50 கிலோ தாஜ்மகால் இப்போ...

ஐந்து வருடங்களின் பின்னர் ஊருக்கு வந்த சந்தோஷம் மனைவி ருக்மணியின் முகத்தில் கொஞ்சம் கூட இருக்கவில்லை. எதையோ பறி கொடுத்தவள் போல இருந்தாள்.என் தங்கையின் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 400 பேராவது வந்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று கோபம் வந்தது கணேஷுக்கு.

ஏன் ருக்கு, என்ன நடந்தது? ஏன் இப்படி சோகம்? என்றான் மனைவியிடம்.
அவள் பதில் சொல்ல முன்னர். கோபி சித்தப்பா வந்தார்.
கணேஷ், எப்படி இருக்கிறாய்? உன் மனைவி வரவில்லையா?, என்றார்.
கணேஷ் பக்கத்தில் இருந்த ருக்மணியைக் காட்டினான். கோபி சித்தப்பா ஏதோ உலக அதிசயத்தைக் கண்டவர் போல விழிகள் விரிய சில நிமிடங்கள் நின்ற பின்னர் கடந்து போனார்.
ருக்மணியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.
கணேஷ், வாங்க ஊருக்கே திரும்ப போகலாம். வந்ததிலிருந்து எல்லோரும் என்னை வெறுப்பேத்திக் கொண்டு இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன். என் உடம்பு வாகு அப்படி. சும்மா பால் குடிச்சாலே 1 கிலோ ஏறுது. உங்க வீட்டு வாண்டிலிருந்து பெரிசு வரை எல்லோரும் என் உடம்பினை நக்கல் செய்கிறார்கள். இப்ப கூட பாருங்க உங்க சித்தப்பாக்கு என்னை அடையாளம் தெரியவில்லை, என்றாள் சிவந்த முகத்தோடு.

அப்படி இருக்காது ருக்கு. நீ முன்பு இருந்ததை விட இப்ப இன்னும் கூடுதலாக அழகா இருக்கிறாய் அல்லவா.... என்று தொடர்ந்த கணவனை எரித்து விடுவது போல பார்த்தாள்.

நீங்க இங்கேயே இருங்கள். நான் போகிறேன், என்று கிளம்பிய மனைவியை நிப்பாட்டுவதற்குள் பிராணன் போய்விட்டது கணேஷுக்கு.
அதன் பிறகு மனைவியை விட்டு எங்கேயும் நகராமல் அருகிலேயே நின்றான்.

திருமணம் ஆகிய போது ருக்மணியும் 50 கிலோ தாஜ்மகால் போல் தான் இருந்தாள். வெளிநாடு போன பின்னர் கிட்டத்தட்ட 25 கிலோ ஏறிவிட்டது உண்மைதான். எப்போதும் ருக்மணியின் அருகிலேயே இருந்தமையால் அவளின் எடை ஒரு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. இப்படி எங்காவது கிளம்பி வந்தால்தான் விளங்குது. ஒரு சிலருக்கே ருக்மணியை அடையாளம் தெரிந்தது. பலருக்கு இவளை அடையாளம் தெரியவில்லை. வலிந்து புன்னகைத்தபோதும் விலகிச் சென்றார்கள். ஒரு கட்டத்தின் பின்னர் அழுகை மட்டுமே மிஞ்சியது.

ஏம்பா கணேஷ், உன் மனைவி உனக்கு சாப்பாடு தர்றாளா இல்லையா?, என்று இவனின் ஒன்றுவிட்ட பாட்டி கேட்டபோது, சுற்றும் முற்றும் பார்வையினை ஓடவிட்டாள் ருக்மணி. ஏதாவது கையில் அகப்படுமா என்பது போல பார்த்தாள்.
பாட்டியை அங்கிருந்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
கிழடு மட்டும் இன்னும் இங்கு ஒரு 1 செக்கன்ட் நின்றிருந்தால் மண்டையை பிளந்திருப்பேன், என்றாள் ருக்மணி.
மனைவியை சமாதானப்படுத்தி, வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவதற்குள் வாழ்க்கை வெறுத்துப் போனது.

ஊருக்கு போனதும் இவளை ஒரு ஜிம்மில் சேர்த்து விட்ட பிறகு தான் மறுவேலை என்று நினைத்துக் கொண்டான்.
கணேஷ், நீங்களும் என்னை வெறுக்கிறீங்க இல்லையா?, என்றாள் ருக்கு. இப்பவே உங்களுக்கு வேறு ஒரு பெண் பார்க்கச் சொல்லுங்க. நான் எங்கையாவது போய்த் தொலைகிறேன், என்று தொடர்ந்தாள் ருக்கு.
ருக்கு, ஊருக்கு போனதும் உன்னை ஜிம்மில் சேர்த்து விடுகிறேன். இப்ப அழ வேண்டாம் என்றவனை இடைமறித்தாள்.
அப்ப நீங்களும் ஒத்துக் கொள்கிறீங்களா நான் குண்டு என்பதை. நான் இப்பவே எங்காவாது தொலைந்து போகிறேன், என்றாள்.

கடவுளே! என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.

அந்த நேரம் கணேஷின் தங்கை சுவர்ணா வந்தாள், அண்ணி, உங்களை பெரும்பாலும் யாருக்கும் அடையாளமே.... என்று முடிக்கும் முன்னர் கணேஷ் அவளை அங்கிருந்து விரட்டி விட்டான். இருக்கிற பிரச்சினை பத்தாது என்று இவள் வேறு எதுக்கு என்று ஆத்திரம் வந்தது.
சுவர்ணா வசனத்தை முடிக்காவிட்டாலும் ருக்கு இறுதி வார்த்தையினை அவளே போட்டு நிரப்பிக் கொண்டாள். அழுகை இன்னும் கூடியது.


இந்த சம்பவத்தின் பிறகு ருக்குவிடம் பழைய கலகலப்பு காணாமல் போனது. ஏதோ கடமைக்கு இருப்பவள் போல இருந்தாள்.
ஊருக்கு போகும் நாளும் வந்தது. இவர்களை வழியனுப்ப ஒரு பெரிய கூட்டமே வந்திருந்தது.
எல்லோரிடம் விடைபெற்று காரில் ஏறி அமர்ந்த பின்னர் ருக்மணியின் பெரியப்பா, பெரியம்மா இருவரும் ஒரு பெரிய பொதியுடன் வந்தார்கள்.
எங்க ருக்குக்கு வழியில் பசிக்குமே அதுக்கு தான் இந்த தின்பண்டங்கள் எல்லாம் வீட்டில் செய்து கொண்டு வந்தோம் என்றார்கள்.
பையினுள் முறுக்கு, சீனிப்பணியாரம், அதிரசம் இப்படி ஏகப்பட்ட தின்பண்டங்களை கண்டதும் ருக்குவின் முகத்தில் ஒரு மின்னல்.

பையினை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். ஊர் போய் சேரும் வரை அவளின் வாய் ஓயப்போவதில்லை.

பையினை தூக்கி எறிய வேண்டும் போல ஆத்திரம் வந்தது கணேஷுக்கு. அடக்கிக் கொண்டான்.

இவ்வளவு நாட்களா.. இல்லையில்லை வருடங்களா இவளின் எடை பற்றி நான் கவலைப்பட்டதில்லை. இப்ப யாரோ சொன்னதும் எனக்கும் அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி, விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கூடவே இருந்து குடும்பம் நடத்திய நான் அல்லவா மனைவியின் நலனில் அக்கறை காட்டி இருக்க வேண்டும். இப்ப யாரோ சொன்னார்கள் என்பதுக்காக நான் அவளை வெறுப்பது நியாயம் இல்லை. ஊருக்கு போனதும் இருவருமே ஜிம்மில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு சிறுமி போல பொதியினை அணைத்துக் கொண்டே தூங்கி விழுந்த மனைவியை பார்த்து மனதினுள் சிரித்துக் கொண்டான்.


( குறிப்பு: 50 கிலோ தாஜ்மகாலாக இருந்து 80 கிலோவாக மாறிய அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம். )

Wednesday, February 8, 2012

நான் போகிறேன் மேலே


(Image: Thanks to google )


நிவேதாவை காணவில்லையாம் இது தான் அந்த வீட்டின் பரபரப்புக்கு காரணம்.
பக்கத்து வீட்டில் வரவில்லை என்றார்கள். ரோடு முழுக்க தேடியும் காணவில்லை. ஒரு வேளை நடக்க கூடாதது எதுவும் நடந்துவிட்டதோ என்ற யோசனை வர, நிவேதாவின் அம்மா அழத் தொடங்கினார்.
நான் அவளுக்கு என்ன குறை வைத்தேன். கேட்பது எல்லாமே கிடைக்கிற வசதி அவளுக்கு. கொழுப்பு ஏறிப் போச்சு, என்று அம்மா மூக்கினை உறிஞ்சிக் கொண்டார்.
அப்பா பொலீசுக்கு போவதற்கு ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினார்.
விமலா, காலையில் அவ என்ன கலர் சட்டை போட்டிருந்தா? என்ன கலர் செருப்பு? எப்படி தலை வாரியிருந்தா?, என்று கேள்விகள் கேட்ட அப்பா ஒரு கட்டத்தில் உடைந்து அழ ஆரம்பித்தார். பெரியப்பா அவரை சமாதானப்படுத்திக் கொண்டே விபரங்களை பேப்பரில் எழுதிக் கொண்டே இருந்தார்.
ஓடிப் போற வயசா அவளுக்கு? போன மாசம் தான் 10 வயசு ஆரம்பம் ஆச்சு? ஏதோ ஒரு பச்சைக்கலர் பட்டுப்பாவாடை, சட்டை வேணும் என்று கேட்டாள். அடுத்த மாசம் வாங்கித் தாறேன் என்று சொன்னேன். அதுக்குள்ளே கோபித்துக் கொண்டு போய்விட்டாளே, என்று அம்மா சொல்ல,

என்னது பாவாடை, சட்டை கேட்டாளா என் செல்ல மகள். நீ ஏன் என்னிடம் சொல்லவே இல்லை. இப்ப பார் எனக்கு மகள் இல்லை. எல்லாம் உன்னால் வந்த பிரச்சினை தான் என்று அப்பா அம்மாவோடு வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடத் தொடங்கினார். உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்துவதா? அல்லது மகளைத் தேடுவதா என்று குழம்பி போய் நின்றார்கள்.

இதை எல்லாம் உயரமான இடத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா. உயரமான இடம் என்பது மேல் மாடி அல்ல. தென்னை மரம். நிவேதா எல்லா விதமான மரங்களிலும் உச்சி வரை ஏறுவதில் கெட்டிக்காரி. அம்மாவிடம் பட்டுப் பாவாடை கேட்க, அவர் மறுக்க. நிவேதாக்கு கோபம் வந்தது. விறுவிறுவென மரத்தில் ஏறிக் கொண்டாள். இது தான் முதல் தரம் தென்னை மரத்தில் ஏறியது. ஏதோ ஒரு வேகத்தில் ஏறி விட்டாள் ஆனால் இறங்கத் தெரியாமல் அங்கேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.

நேரம் ஆக ஆக பயம் சூழ்ந்து கொண்டது. கீழே நடக்கும் பரபரப்பில் நான் இப்ப மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான் அம்மா அடிச்சே கொலை பண்ணி விடுவார்கள். அப்பா - எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று சொல்வதற்கில்லை. கீழே அப்பாவை எல்லோரும் சமாதானப்படுத்துவதை பார்க்க அழுகை வந்தது நிவேதாக்கு.
அப்பா, என்று அழுகையின் ஊடே குரால் கொடுத்தாள். ஆனால், யாருக்கும் அவள் குரல் கேட்கவில்லை.
பக்கத்தில் ஏதோ மினுமினுப்பாக தெரிந்தது. இளநீர் குலைகளுக்கு மத்தியில் என்னவாக இருக்கும் என்று குனிந்து பார்த்தாள். அது பாம்பு. பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள். பாம்பு தீண்டாமல் காலினை காய்ந்து போன தென்னம் ஓலையில் வைக்க, அது கீழே விழ, ஓலையோடு சேர்ந்து இரண்டு தேங்காய்கள், பாம்பும் கீழே விழுந்தன.

கீழே விழுந்த ஓலை, தேங்காய்களைப் பார்த்ததும் அப்பாவுக்கு மின்னல் வெட்டியது. மேலே நிமிர்ந்து பார்த்தார். சிவப்பு நிற சட்டை தெரிந்ததும் அவருக்கு உயிர் வந்தது. ஏணி வைத்து மேலே ஏறி வந்து, மகளை அணைத்துக் கொண்டார்.

அம்மாவுக்கு கோபம் வந்தது. மகளுடன் இனிமேல் பேச்சு வார்த்தை இல்லை என்று முகத்தினை திருப்பிக் கொண்டார். ஆத்திரத்துடன் மகளின் முதுகில் இரண்டு போடு போட்டார்.
அம்மாவின் கோபம் ஒரு வாரம் கழித்தும் போகவில்லை.
அம்மாச்சி வந்ததும் நிவேதா அழுது கொண்டே அம்மா தன்னிடம் மிகவும் கோபமாக இருப்பதை சொன்னாள்.

கமலா, ஏன் இப்படி மகளை கோபித்துக் கொள்கிறாய்? நீ சின்ன வயசில் செய்த அதே கூத்தை தான் உன் மகளும் செய்கிறாள். நீ ஒரு முறை தெனை மரத்தில் ஏறி 4 மணி நேரம் மறைந்து இருந்தாயே ஞாபகம் இல்லையா? உன்னை கீழே இறக்க நான் பட்டபாடு இருக்கே. கடைசியில் நீ கேட்ட பொருளை வாங்கி வந்த பின்னர் தான் இறங்கி வந்தாயே.

ஏதோ வேலையாக உள்ளே வந்த அப்பா புன்சிரிப்புடன் கேட்டு கொண்டு நின்றார். ஓ! அப்ப இது பரம்பரைப் பழக்கமா? நானும் எங்கே இருந்து இந்தப் பழக்கம் வந்தது என்று நினைச்சுக் கொண்டே இருக்கிறேன். இது தெரியாமல் நான் அன்று ஏணி வைச்சு, கஷ்டப்பட்டு ஏறி...

நல்ல அம்மாவும், மகளும் தான் போங்கள் , என்றார் அப்பா.

தோட்டத்தினை நோக்கிப் போன அப்பாவை பின் தொடர்ந்தார்கள் அம்மாவும், மகளும்.
அப்பா, என்ன செய்கிறீங்க?, என்றாள் நிவேதா.
தென்னை மரம் ஏறப் பழகிக் கொள்கிறேன். ஒரே நேரத்தில் அம்மாவும் மகளும் மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டாள் ஏறி மீட்க வேண்டாமா, என்று சொன்ன கணவரை செல்லக் கோபத்துடன் முறைத்துக் கொண்டே நின்றாள் கமலா.

அதெல்லாம் பிறவியில் வரும் பழக்கம். இடையில் வரவே வராது, என்றார் அம்மா புன்சிரிப்போடு.