Sunday, March 11, 2012

விடியல்

சுதாகர் இரு கைகளிலும் பைகளை சுமந்தபடி வேகமாக நடந்தான். வானம் இருள் சூழ்ந்து, இப்பவே மழையை பொழியவா என்று மிரட்டுவது போல வெட்டி மின்னியது. சுதாகரின் நடை ஓட்டமாக மாறியது. காலை பத்து மணி என்று கடிகார முட்கள் சொன்னது. இன்னும் 10 நிமிடங்கள் நடந்தால் வீடு வந்து விடும். ஆனால், இந்த பாழாய்ப் போன மழை இன்னும் எவ்வளவு நேரம் கொட்டப் போகிறதோ தெரியவில்லை என்று யோசனையுடன் அங்கிருந்த கடைப் பக்கம் ஒதுங்கிக் கொண்டான்.

10 வருடங்களில் ஊர் நிறையவே மாறி விட்டதை ரசித்தான். மழை ஒரு வழியாக குறைந்ததும் வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மனதில் ஒரு வித பயம், குழப்பம், சந்தோஷம் என்று கலவையான உணர்வுகள் போட்டி போட்டுக் கொண்டு நின்றன. அப்பா என்ன சொல்வார், அம்மா என்னை ஏற்றுக் கொள்வாரா பல விதமான வினாக்கள் எழுந்தன. பத்து வருடங்கள் 10 நொடிகள் போல மறைந்து விட்டதை உணர்ந்தான். கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அங்கேயே அழுது விடுவோமோ என்று பயத்தினால் விரைவாக நடக்கத் தொடங்கினான்.

வீட்டு வாசலில் போலீஸ் நிற்பது தெரிந்தது. என்ன வில்லங்கமோ என்று நினைத்தபடி வேகமாக ஓடத் தொடங்கினான். கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினான். அப்பா இவனைக் கண்டதும் அடையாளம் கண்டு கொண்டார். அம்மா ஓடி வந்து அணைத்துக் கொண்டார். இப்பவாச்சும் எங்கள் ஞாபகம் வந்திச்சே உனக்கு என்றபடி பெருங்குரலில் அழ ஆரம்பித்த தாயை தேற்ற வழி தெரியாமல் கண்கள் கலங்கி நின்றான்.

இவர் யார்? என்று போலிஸார் அப்பாவை கேள்வி கேட்டபடி இவனை சந்தேகமாகப் பார்த்தார்கள்.
என் ஒரே மகன். 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவன் இப்ப தான் திரும்பி வந்திருக்கிறான் என்றார் குரல் கம்ம.
ஓ! அப்படியா. நாங்கள் வருகிறோம். இன்னும் ஒரு 2 வாரங்கள் பார்க்கலாம். யாரும் வரலைன்னா அதன் பிறகு ஆக வேண்டியதை பார்க்கலாம் என்றபடி விடை பெற்றார்கள் காவல் துறை அதிகாரிகள்.
சொர்ணம், உன் மகன் திரும்பி வந்துட்டான். உனக்கு ஒரு பேரனும் கிடைச்சாச்சு. உனக்கு இனிமேல் நல்ல நேரம் தான் என்று பெரியம்மா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பார்வையினை ஓட விட்டான். பெரியம்மாவின் மடியில் பூக் குவியல் போல ஒரு குழந்தை. குண்டுக் கன்னங்கள், ரோஜா நிறம், அழகிய சிவந்த உதடுகள் என்று பார்க்கவே தூக்கி கொஞ்ச வேண்டும் போல இருந்தது.
சுதா, இது யார் பெத்த பிள்ளையோ தெரியவில்லை. இன்று காலையில் அழுகுரல் கேட்டுச்சு வந்து பார்த்தபோது குழந்தையை யாரோ வைச்சுட்டு போயிருந்தார்கள், என்றார் அம்மா.

ஊரே திரண்டு வந்து நின்றது வாசலில்.
எங்க ஊரில் யாரும் இவ்வளவு சிவந்த நிறம் கிடையாது. யார் குழந்தையாக இருக்கும் என்று ஊர் மக்கள் கேள்விகள் கேட்டு, அவர்களே பதிலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் போய்ட்டு பிறகு வாங்க. ஆற அமர இருந்து யோசிச்சு என்ன செய்வது என்று முடிவு செய்வோம், என்றார் சுதாகரின் அப்பா. யாராவது உரிமை கோரி வரும் வரை குழந்தை எங்கள் பராமரிப்பிலேயே இருக்கும். யாருக்காவது வேறு ஏதாவது எண்ணம் இருந்தா இப்பவே இங்கேயே குழி தோண்டிப் புதைச்சுட்டு வீடு போய் சேருங்கள் என்று முடித்துக் கொண்டார்.

ஊரார் கலைந்து சென்ற பின்னர் உறவினர் பார்வை சுதாகரின் பக்கம் திரும்பியது.
சுதாகர், எப்படி, எங்கே, என்ன செய்து கொண்டிருந்தாய் இவ்வளவு நாட்களா? என்று பெரியப்பா கேள்வி எழுப்பினார்.
" பெரியப்பா, வீட்டை விட்டுப் போய் சென்னையில் இருந்தேன். அங்கே தான் 10 வருடங்களா இருந்தேன்", என்று முடித்துக் கொண்டான் சுதாகர். அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாமல் இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். மேலும் சில உறவினர்கள் பல கேள்விகள் கேட்க, சுதாகர் எதற்கும் சுரத்தில்லாமல் பதில் சொன்னான்.
எல்லோரும் போய்ட்டு நாளைக்கு வாங்கப்பா. ஆறுதலாக பேசலாம் என்று சுதாகரின் அப்பாவின் கட்டளைக்கு மனமில்லாமல் கலைந்து சென்றார்கள்.
சுதாகர், நீ போய் சாப்பிடுப்பா. நாளைக்கு பேசலாம், என்ற அப்பாவின் குரலுக்கு பார்வையால் நன்றி சொல்லியபடி உள் அறையினை நோக்கி ஓடினான்.
படுத்த பின்னர் தூக்கம் வரவில்லை. ஆனால், நிம்மதியாக இருந்தது. வெளியே இன்னும் மெல்லிய பேச்சு சத்தம் கேட்டது. குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
பத்து வருடங்களின் முன்னர், இதே போல ஒரு மழை நாளில் தான் சுதாகர் சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறினான். அப்பா நல்லவர் தான். ஆனால், மிகவும் கோபக்காரர். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்த காரணத்தால் நடுக்கம் பிடித்துக் கொண்டது. வீட்டுக்கு வராமல் தேரடியில் ஒளிந்து கொண்டான். இரவு நெடு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அப்பா படையுடன் ஊரெல்லாம் தேடினார். இறுதியில் தேரடியில் கண்டும் பிடித்துவிட்டார். இடுப்பில் கட்டியிருந்த பெல்டினை உருவி, சுதாகரின் முதுகினை பதம் பார்த்துவிட்டார். அப்பா கையால் அடி வாங்கியது கூட பெரிதாக தோன்றவில்லை சுதாகருக்கு ஆனால், ஊரார் முன்னாடி அடித்தது தான் பெரும் அவமானமாக இருந்தது. அன்றிரவே சென்னை செல்லும் பேரூந்தில் ஏறிவிட்டான். சென்னையில் இருக்கப் பிடிக்காமல் பல இடங்களையும் சுற்றி வந்து, இறுதியில் கேரளாப் பக்கம் வந்த போது மனசுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது அந்த இடம். நச நசவென பெய்யும் மழையும், அழகிய பெண்களும் கண் கொள்ளாக் காட்சியாகப்பட்டது இவனுக்கு. கிடைத்த வேலைகளை செய்து வாழ்க்கையினை ஓட்டினான்.

வாழ்வில் குறிக்கோள் இல்லாமல் இருந்தவன் பார்வதியை சந்தித்த பின்னர் மாறிப் போனான். காதல் கனிந்தது. வாழ்வின் மீது ஒரு பிடிப்பு வந்தது. முட்டி மோதி ஒரு நல்ல நிலையை அடைய நிறையப் போராட வேண்டி இருந்தது உண்மை தான். வாழ்க்கை இனிமையாக மாறியது. திருமணம் முடிந்த அடுத்த மாதமே பார்வதி கர்ப்பம் ஆகினாள்.

வீல்... என்ற அழுகுரலுக்கு தூக்கம் கலைந்தது. அம்மா தேநீர் கோப்பையுடன் பக்கத்தில் வந்தார். அம்மாவோ அல்லது அப்பாவோ எதுவும் கேட்காதது மிகவும் நிம்மதியாக இருந்தது. உனக்கு எப்ப சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்ப சொல்லு என்று ஒதுங்கிக் கொண்டார்கள். தொண்டை வரை வந்த வார்த்தைகளை முழுங்கிக் கொண்டான்.

பார்வதிக்கு அழகிய குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் பார்வதி புற்று நோய் வந்து இறந்து போக, இவன் குழந்தையினை வைத்துக் கொண்டு தடுமாறிப் போனான். பாலுக்காக அழுத பிள்ளையை தேற்ற வழி தெரியாமல் மீண்டும் பயணம் தொடர்ந்தது.
மீண்டும் குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. அதன் அம்மாவின் கதகதப்புக்கு ஏங்குறது குழந்தை. என் குழந்தை தாயும் இல்லாமல், தகப்பனும் இல்லாமல் வாழப்போகிறது. யாரையோ அப்பாஎன்று அழைக்கப் போகிறது என்ற நினைப்பு வந்ததும் திடுக்கிட்டு எழுந்தான். நான் செய்தது சரியா என்று மீண்டும் குற்ற உணர்வு ஆட்கொண்டது.

மறுநாள் விடிந்த போது குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லை. சொர்ணம் வீடு முழுக்கத் தேடியும் குழந்தையைக் காணவில்லை. ஒரு கடிதம் மேசையில் பட படத்தது.

அன்புள்ள அம்மா, அப்பா, இருவருக்கும்,

நீங்கள் மீண்டும் என்னை மன்னிக்க வேண்டும். நம்ம வீட்டில் இருந்த குழந்தை என் குழந்தையே தான். நான் ஊருக்குள் வந்த போது எல்லா உண்மைகளையும் சொல்லும் நோக்கத்தோடு தான் வந்தேன். ஆனால், கடைசி நொடியில் மனதை மாற்றிக் கொண்டேன். மீண்டும் மனம் மாறி என் குழந்தையை என்னோடு அழைத்துச் செல்கிறேன். அவனை வளர்ப்பது என் கடமை அல்லவா? என் மனைவி இல்லாமல் எப்படி அவனை வளர்ப்பேன் என்று தான் இங்கே வந்தேன். ஆனால், இப்ப ஒரு தெளிவு வந்துவிட்டது.
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரிந்து செல்கிறோம்.
அன்பு முத்தங்களுடன்,
சுதாகர்
மேனன்
பின்குறிப்பு: அவனுக்கு நாங்கள் வைத்த பெயர் மேனன்.

13 comments:

  1. கதை சிறப்பாகப் போகிறது
    ஆயினும் மாற்றத்திற்கான காரணம் எதுவென
    லேசாக க் கோடிட்டிடுக் காட்டி இருந்தால்
    இன்னும் சிறப்பாக இருக்குமோ எனத் தோன்றியது
    யாருடைய குழந்தையெனத் தெரியாத போதும்
    வளர்க்கத் தயாரான தன் தந்தையையரின்
    எண்ணம் காரணமாக இருக்கலாம் என யூகிக்கிறேன் சரியா ?
    கதையின் கருவும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //பின்குறிப்பு: அவனுக்கு நாங்கள் வைத்த பெயர் மேனன்.//

    என்ன வான்ஸ் இது உண்மைச் சம்பவமோ?..

    கதை சூப்பர்... முடிவை கொஞ்சம் மாத்தியிருக்கலாமோ எனத் தோணுது.. அழகான கதைக்கு முடிவு சரியில்லாததுபோல இருக்கு எனக்கு.

    ReplyDelete
  3. சுதாகர் மேனன் எப்பவும் தன்னைப்பற்றி மட்டுமே தான் யோசிக்கிறார், பெற்றோரைப் பற்றி எப்பவும் யோசிக்கவில்லை.. பாட் போய்:)).

    ReplyDelete
  4. 1. //இந்த பாழாய்ப் போன மழை// ஒரு நிமிஷம் சிவா வலைப்பூவோ என்று நினைத்துவிட்டேன் வானதி.

    ReplyDelete
  5. அருமையான கதை வாணி, அழகாகக் கொண்டு போயிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. கதை நல்லாவே இருக்கு சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  7. நல்ல கதை வான்ஸ். சுதாகர் அவரே குழந்தையை வளர்க்க எடுத்த முடிவு சரியே ஆனால் பெற்றோரிடம் சொல்லி இருந்தால் அவங்க புரிஞ்சிகிட்டு பேரனை வளர்க்க கண்டிப்பா உறுதுணையா இருந்திருப்பாங்க. பெற்றோர்கள் பாவம் (:

    ReplyDelete
  8. கொஞ்சம் லேட் :(

    ReplyDelete
  9. முன்பு வந்தேன் சரியாக நெட் கட்
    கதை ஒரு பக்கம்
    நீளமாக இல்லாமல்
    அளவாக
    சரியான திசையில்
    பிசிறு இல்லாமல் சென்றது

    ReplyDelete
  10. மாற்றத்திற்கு காரணம் ஸ்ட்ராங்கா இல்லைன்னு தோணுது வாணி ...

    ReplyDelete
  11. நல்ல கதை அருமையான முடிவு.

    ReplyDelete
  12. கருத்து தெரிவித்த ரமணி அண்ணா, அதீஸ், லஷ்மி ஆன்டி, கிரி, ஸாதிகா அக்கா, சிவா, எல்கே, புனிதா ( உங்களுக்கு வலைப்பூ இருக்கா? ), எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  13. கதையில் ஏதோ ஒன்று மிஸ் ஆவது போல ஒரு உணர்வு வருவதைத் தவிர்க்க முடியலை! துவக்கத்தில் இருக்கும் விறுவிறுப்பு முடிவிலே கொஞ்சம் குறைஞ்சிருச்சோ?

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!