Tuesday, March 13, 2012

பெயரை மாற்றப் போகிறேன்

கடைகளில் சில நேரங்களில் பொருட்கள் வாங்கினால் ரிபேட் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையினை திருப்ப தருவார்கள். இப்ப அதுக்கென்ன வாங்கி செலவழிக்க வேண்டியது தானே என்று நினைத்தால் அது தவறு. கடையில் எக்ஸ்ட்ராவா ஒரு ரசீது கொடுப்பார்கள். அதில் இந்த நபர் இந்தப் பொருளை வாங்கினார் என்பதற்கு சில தகவல்கள் இருக்கும். இந்த ரசீது, வாங்கிய பொருளின் பெட்டி மீது இருக்கும் யுபிஸி கோட், விண்ணப்ப படிவம் நிரப்பி, அவர்கள் சொன்ன தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதெல்லாம் செய்ய யாருக்கு நேரம் இருக்கு என்று என் ஆ.காரர் கடுப்படிச்சாலும் நான் கண்டு கொள்வதில்லை. அனுப்பிய பிறகு தான் மறுவேலை. சமீபத்தில் ஒரு பொருள் வாங்கினோம். அதிலும் இந்த ரிபேட் இருந்தது. நான் அவர்கள் கேட்ட எல்லாத்தையும் கவரில் போட்டு அனுப்பினேன். சில வாரங்களின் பிறகு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. அதில், நீங்கள் அனுப்பிய யுபிஸி கோடு செல்லுபடியாகாது. எனவே காசு தரமுடியாது என்று எழுதி இருந்தார்கள். உனக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அடப்பாவிகளா! என்று எரிச்சல் வந்தது. நான் என்னவோ யுபிஸி கோடு வீட்டில் உற்பத்தி செய்தது போல பிகு பண்ணுகிறார்களே என்று கோபம் வந்தது. நான் அவர்களுக்கு பின்வருமாறு மெயில் அனுப்பினேன்.

நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் அனுப்பிய பிறகும் காசு தரமாட்டோம் என்று சொல்வது முறையல்ல. உங்களுக்கு பணம் தர விருப்பம் இல்லாவிட்டால் தர விருப்பம் இல்லை என்று சொல்லுங்கள். அதை விட்டுப் போட்டு இது நொட்டை, அது நொள்ளை என்று குறை சொல்லப்படாது. இனிமேல் உங்க கடைப்பக்கம் வந்தால் என் பெயர் வானதி இல்லை. இப்படிக்கு, வானதி.


சில நாட்களின் பின்னர், அவர்களிடமிருந்து பதில் வந்திருந்தது. உன் பெயரை எல்லாம் மாத்த வேண்டாம். நாங்கள் உனக்கு சேர வேண்டிய காசினை அனுப்பி வைக்கிறோம். எங்கள் கடைப் பக்கம் வராம மட்டும் இருந்திடாதே.
இப்படிக்கு,
டோனி

( டோனிக்கு எல்லோரும் " ஓ" போடுங்க.)

**********************
மகளின் வகுப்பில் வாலன்டியராக வேலை செய்வது வழக்கம். ஒரு குட்டிப் பெண் மிகவும் ஒட்டுதலாக இருப்பார். ஒரு நாள் லஞ்ச் டைம் காஃபிடீரியாவில் என்னைக் கண்டதும் கைகளை ஆட்டினார். கிட்ட வருமாறு சைகை செய்தார்.
என்ன வேணும்?, இது நான்.
இந்த சான்ட்விச்சை கட் பண்ணிக் குடு, என்றார்.
என் கைகள் அழுக்காக ( லஞ்சம் வாங்கி அல்ல உழைத்து அழுக்கான கைகள்.) இருக்கு. நீ சான்ட்விச்சை பிடி. நான் இரண்டாக வெட்டி விடுகிறேன், என்றேன்.
சரி, என்று தலையாட்டினார்.
வெட்டிய பின்னர் ப்ளாஸ்டிக் கத்தியை அவரிடம் நீட்டினேன்.
எனக்கு வேண்டாம், என்றார்.
இதை நான் என்ன செய்ய? எனக்கும் வேண்டாம், என்றேன்.
கொண்டு போய் குப்பையில் போடு, என்று விட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நான் குப்பையில் போட்டு விட்டு நகர்ந்தேன்.


வகுப்பறையில் குட்டிப் பெண் தனியாக ஒரு நாற்காலியில் அமர வைக்கப்படிடிருந்தார். என்னைக் கண்டதும் லேசாக சிரிப்பு வந்தாலும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை. டீச்சர் பின்னர் மெதுவான குரலில் சொன்னார், இந்தக் குட்டி சொல் பேச்சுக் கேட்பதில்லை. வகுப்பறையில் விழுந்து, பிரண்டு விளையாடிக் கொண்டு இருந்தார். அதனால் தான் தனியாக அமர வைத்தேன். முன்பெல்லாம் வகுப்பறைகளில் 20 பிள்ளைகளுக்கு மேல் இருக்க மாட்டார்கள். எனவே எல்லோரின் மீதும் தனிக்கவனம் செலுத்த முடிந்தது.

இப்ப எத்தனை பேர் இருக்கிறார்கள்?, என்றேன்.

26 பேர், என்றார் ஆசிரியர்.

நான் ஊரில் படித்த போது என் வகுப்பில் கிட்டத்தட்ட 40- 50 இருந்திருப்பார்கள். என் ஆசிரியையின் முகம் ஞாபகம் இல்லை. எப்படி ஞாபகம் இருக்கும்? அவரின் பிரம்பு மட்டுமே ஞாபகம் இருக்கு. ஆசிரியரைப் பார்த்து 20 பேர் பயப்பட, மிச்சம் ( நான் உட்பட ) இருப்பவர்கள் பிரம்பினை பார்த்து பயப்பிட்டே படித்த காலம். ஆசிரியர் வகுப்பில் இல்லாவிட்டாலும் பிரம்பு இருக்கும். நேர்சரி விடும் நேரம் வந்ததும் ஒரே ஓட்டமாக ஓடி வந்து வெளியே நின்றால் தான் போன உயிர் திரும்பி வந்தது போல இருக்கும். கான்வென்டில் படித்த போது பிரம்புடன் ரவுன்ட்ஸ் போகும் தலைமை ஆசிரியை. திருக்குறள் மனப்பாடம் செய்து சொல்லாவிட்டால் அடி, ஆசியர்களுக்கு மூட் சரியில்லாவிட்டால் அடி, இப்படி ஏகப்பட்ட பிரம்புகள் வாழ்வில் சந்தித்து, பிரம்புகளோடு வாழ்ந்து இருக்கிறேன். இப்ப என் பிள்ளைகளுக்கு அந்தக் கொடுமை எல்லாம் இல்லை என்று சந்தோசம் அடிக்கடி எட்டிப் பார்ப்பதுண்டு. இதையெல்லாம் கொசுவத்தி சுழல விட்டு மனதினுள் சிரித்துக் கொண்டேன்.

ஏன் சிரிக்கிறாய்?, என்றார் ஆசிரியர்.

எங்க ஊர் பற்றி சொல்லி மானத்தை கப்பலேற்றி அனுப்பக் கூடாது என்று நினைத்துக் கொண்டே, வரட்டா, என்று விடைபெற்றேன்.

21 comments:

 1. நல்லாத்தான் கொசு வர்த்தி சுத்தறீங்க... இந்த கோட் நெறைய பேர் டூப்ளிகேட் பண்றாங்க அதான் பிரச்சனை

  ReplyDelete
 2. எல்கே, டூப்ளிகேட் ஆஆஆ?? . அப்படியே பெட்டியில் இருந்து வெட்டி அனுப்பியது. மிக்க நன்றி.

  ReplyDelete
 3. வானதியா?கொக்கா!டோனி வாழ்க.

  ஆமாம்,அந்த சாண்ட்விச் குட்டி கிட்ட ரீயூஸ் பற்றிய விழிப்புணர்வை நம்ம ஊர் ஸ்டைலில் சொல்லியிருக்கலாம்.

  இப்பல்லாம் ஆசிரியர்கள் பிரம்பை எடுக்கக்குடாதுன்னு ரூல்ஸ் போட்டாச்சு.அய்யோ! திருச்சியில் என் +2 வில் கெமிஸ்ட்ரி மிஸ் கிட்ட நான் வாங்காத பிரம்படியா?எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி சரியில்லையோ!

  ReplyDelete
 4. //பெயரை மாற்றப் போகிறேன்//

  என்னாது? வானை மாத்தி “பஸ்” என வைக்கப்போறீங்களோ? வாணாம் அது ரொம்பப் பெரிசூஊஊஊஊஊஊஊ:))

  ReplyDelete
 5. எனக்கும் உப்பூடித்தான் வான்ஸ், சிலதைப் பார்க்க கெட்ட கெட்ட கோபமாக வரும்... அப்பூடியே பொயிங்கி..பின்னிப் பெடல் எடுத்திடுவேன்:))... எல்லாம் மனதுக்குள்தான்:))..

  வெளியால ஒரு புன் சிரிப்போடு விலத்திடுவேன் “இதுவும் கடந்து போகும்” என... அதெனமோ எதிர்க்க தைரியம் வருகுதில்லை...எந்த விஷயத்துக்காயினும் மனதில் கோபம் எழும்போது.. விலத்திப் போயிட்டால் பெட்டர் எனத்தான் தோணும்.

  ஆனா இது மெயில்தானே.. கலக்கிட்டீங்க..

  எனக்கு ஒரு டவுட்டு?:)) அந்த “நொட்டு” ”லொடுக்கு” க்கெல்லாம் எப்பூடி மொழி பெயர்த்தீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))

  ReplyDelete
 6. எனக்கென்னமோ நான் படித்தபோது ஆரும் ரீச்சர் அடித்தமாதிரி நினைவே இல்லை, பிரைமரி ஸ்கூலில் மட்டும் பிரின்சிபால்... ஆண் பிள்ளைகளுக்கு எப்பவாவது ஒபிஸில் கூப்பிட்டு அடித்தது தெரியும்.

  பின்பு பெண்கள் பள்ளியில் பிரின்சிபால் ஒபிஸில் எப்பவும் பிரம்பு இருக்கும்... அடிப்பதில்லை... ஒரே ஒருதடவை மட்டும்... சோஸல்[6ம் வகுப்பில்) புத்தகம் கொண்டு வரவில்லை என, எங்கள் வகுப்பில் 8 பேரைக் கூப்பிட்டு ஒவ்வொரு அடி கையில்.... அதுதான் நான் வாழ்க்கையில் வாங்கிய முதலும் கடைசியுமான அடி... பெரிய வகுப்புக்கெல்லாம் அடிப்பதே இல்லையே.

  ReplyDelete
 7. //டோனிக்கு எல்லோரும் " ஓ" போடுங்க.// மாட்டேன். வாணிக்கு ஒரு "ஓ".

  ReplyDelete
 8. எங்க ஊர் பற்றி சொல்லி மானத்தை கப்பலேற்றி அனுப்பக் கூடாது என்று நினைத்துக் கொண்டே, வரட்டா, என்று விடைபெற்றேன்.//நல்ல வேலை செய்தீர்கள் வான்ஸ்.

  ReplyDelete
 9. நானும் வான்ஸ் ஏதோ பேரை மாத்த போறாங்கன்னு லஞ்சும் சாப்பிடாம ஓடி வந்தா புஸ்ஸ் ன்னு போயிடிச்சு:)) டோனி சொல்லுறதெல்லாம் கேட்டுராதீங்க. பேரையும் மாத்துங்க அப்படியே கடைக்கும் போகாம இருந்திடாந்தீங்க; பேர் மாத்த அதீஸ் சஜெஷன் கொடுத்து இருக்காங்க போலே இருக்கு. எனி மோர் எல்ப் ?? நீ நான்னு போட்டி போட்டு கிட்டு மஞ்சள் பூவில் இருந்து பச்சை பூவு வரைக்கும் வருவாங்க உங்க பேர மாத்த:))

  ReplyDelete
 10. இங்கே இந்த மாதிரி ரிபேட் எல்லாம் கொடுக்க மாட்டேங்குறாங்களே ?? இல்லே எனக்குத்தான் தெரியலையா? பூஸ் எல்ப் ப்ளீஸ்

  ReplyDelete
 11. பள்ளிகூடத்தில் அடி வாங்காம படிச்சேன்ன்னு யாராச்சும் சொல்ல முடியுமா? என் பையனுக்கு இந்த கதை எல்லாம் சொன்னா ரொம்ப ஆச்சர்யமா கேப்பான். ஆனா இப்பெல்லாம் ஊருலயும் ரொம்ப அடிக்க மாட்டேங்குறாங்க ன்னு சொன்னாங்க.

  ReplyDelete
 12. இங்கே பள்ளியில் ரீயூஸ் செய்வது இல்லை. ரீசைக்கிளிங் மட்டுமே இருக்கு.
  எனக்கும் கெமிஸ்ட்ரி பெரிதாக ஆர்வம் இல்லை. தமிழ் பிடிக்கும் ஆனால் மனப்பாடம் ஏரியா வீக்கோ வீக்.
  மிக்க நன்றி, ஆசியா அக்கா.

  ReplyDelete
 13. அதீஸ், சும்மா டோனிக்கு ஒரு பேச்சுக்கு சொன்னா சீரியஸா எடுக்கக் கூடாது. முகம் தெரியாத டோனியே என் பெயரை மாத்த வேண்டாம் என்று சொல்லும் போது நீங்க சொல்லலாமா????
  லொட்டு, லொடுக்கு - அது தமிழாக்கம். ஆங்கிலத்தில் என்று எழுதினேன்.
  நானும் பொங்க வேண்டிய இடத்தில் பொங்கிடுவேன். ஆனால், பெரும்பாலும் மௌனமாகவே இருந்து கொள்வேன். சிலதுகளுக்கு என்ன சொன்னாலும் சுரணை வரவே வராது. அதுகளோடு கத்தி என்ன பலன்.
  மிக்க நன்றி, அதீஸ்.

  ReplyDelete
 14. புனிதா, தாங்கியூ.
  வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 15. ஸாதிகா அக்கா, இதிலெலாம் நாங்க நல்ல கவனமாக்கும்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 16. கிரி, என் அப்பா ஆசையா வைச்ச பெயர். அதை மாத்த மாட்டேன். நீங்க போய் சாப்பிடுங்க.
  வேணுமென்றால் பச்சைப்பூக்கு பேரை மாத்தலாம்.
  என்னது அங்கு ரிபேட் இல்லையா??? நல்லா பாருங்க அம்மிணி. பூஸாரை நம்பி புண்ணியம் இல்லை.
  நான் என் பிள்ளைகளுக்கு அடி பற்றி சொன்னதில்லை. சப்போஸ் ஊர் போய் படிக்கும் சந்தர்ப்பம் வந்தால் என் இரண்டு வால்களும் எகிறிக் குதிச்சு ஓடிடாமல் இருக்கணும் இல்லையா???
  என்ன லஞ்ச் இன்று???
  மிக்க நன்றி, கிரி.

  ReplyDelete
 17. //

  En SamaiyalMar 14, 2012 05:57 AM
  இங்கே இந்த மாதிரி ரிபேட் எல்லாம் கொடுக்க மாட்டேங்குறாங்களே ?? இல்லே எனக்குத்தான் தெரியலையா? பூஸ் எல்ப் ப்ளீஸ்////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் யாமிருக்கப் பயமேன்... இங்கினவும் இருக்கு கீரி... சில இடங்களில் பிலுக்குப் பின்னால கோட் போட்டிருப்பினம்.. இதை, இந்த வெப் சைட்டில் போய் அடிச்சு அனுப்புங்க பரிசு காத்திருக்கு என்றெல்லாம்..

  நான் பில்லையே பத்திரமா வைக்க மாட்டேன்.. இதுக்குள்ள கோட் க்கு எங்க போவதாம்:)).. பேசாம போய் ஏதாவது பதிவெழுதுங்க கீரி:)))

  ReplyDelete
 18. மெய்ல் இன் ரிபேட் நான் ஒரு சிலமுறை வாங்கியிருக்கிறேன். இதுமாதிரி பிரச்சனைகள் வந்ததில்லை. வானதியா,கொக்கா?கலக்கீட்டீங்க போங்க! :)

  நான் படித்தப்பவும் அடி வாங்கியதாக நினைவு...ம்ம்ம்..7வது படிக்கையில் விஜயராகவன் சாரிடம் வகுப்பு முழுக்க ஆளுக்கொரு அடி வாங்கினோம்.அதுதான்!!:)

  ReplyDelete
 19. விடாமுயற்சி பலன் தந்துவிட்டது.(இருப்பதை எழுதி அனுப்பத்தான் முடியும் அது சரியில்லை என்று சொல்வது தவறுதானே) நல்ல அனுபவ கட்டுரை

  ReplyDelete
 20. அயிரம் பிரம்புகள் பார்த்த அபூர்வ சிந்தாமணிகள் நாம்
  என்பது இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எங்கே
  தெரியப் போகிறது.மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 21. பெயரை மாற்றவில்லையா//

  நல்ல சுட்டி பெண்...

  அடிவாங்கிய கதை சொல்லாமல் சொல்லியது சிறப்பு :)

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!