Monday, June 4, 2012

சங்கிலிப் பேய்

சரட்..சரட்.. என்று சத்தம் இரவின் அமைதியை கிழித்துக் கொண்டு காதில் விழுந்தது. என்னவாக இருக்கும் பேயா? அல்லது பிசாசா? என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். இது ஏதோ ஒரு ஆவியின் வேலையாக இருக்க வேண்டும். இரண்டு மாதங்களின் முன்பு செத்த சின்னவாளி கிழவியின் ஆவியா இருக்க வேண்டும் என்றார்கள். அது இருக்கும் போதே நகை, நகைன்னு பேயா அலைஞ்சு சொத்து சேர்த்துச்சு, இப்ப செத்த பிறகு அந்த நகைகளை போட்டுக் கொண்டு திரியுதோ என்று திகிலுடன் பேசிக் கொண்டார்கள்.

அந்தக் குக் கிராமத்தில் 30, 40 குடும்பங்கள் இருந்தார்கள். மின்சார வசதி இல்லாத 1950 களின் ஆரம்ப காலம். மண்ணெண்ணை விளக்குகள் தான் ஒரே ஒரு வெளிச்சம். மக்கள் நேரத்தோடு சாப்பிட்டு, உறங்கப் போய் விடுவார்கள். ஆண்கள் மீன் பிடித் தொழிலுக்கு போய் விட, ஊரில் பெரும்பாலான வீடுகளில் பெண்களும், குழந்தைகளுமே இருப்பார்கள்.

ஊர் அடங்கிய பின்னர் வீதியில் சங்கிலிகள் உராயும் சத்தங்கள் கேட்டன. முதலில் அதைப் பெரிதாக யாரும் எடுக்கவில்லை. யாரோ ஒருவர் கொழுத்திப் போட, அது பேய் உருவம் எடுத்தது. இரவில் பேய் உலவியதாக மக்கள் அதன் பிறகு நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உறங்கினர். வயதான பாட்டிகள் காவலுக்கு இருந்தார்கள். யாருக்கும் வெளியே எட்டிப் பார்க்கும் தைரியம் வரவில்லை. நிலவின் ஒளியில் ஒர் உருவம் சங்கிலிகளை இழுத்துப் போவது மட்டும் மங்கலாக தெரியும்.

சங்கிலிப் பேய் என்று நாமகரணம் சூட்டினார்கள். பூசாரி வந்தார். பல பூஜைகள் செய்தார். சின்னவாளிக் கிழவியின் வீட்டிலும் பூஜைகள் செய்யப் பட்டன. ஆனால் பேய் போன பாடு இல்லை. தினமும் இரவில் வந்து போனது. ஆண்கள் தொழிலுக்கு போகாமல் இருட்டில் பதுங்கி இருந்தார்கள்.

பேய்க்கு இந்த விடயம் காதுக்கு எட்டி விட்டது போல. இரண்டு நாட்களாக வரவில்லை.

ஊரின் ஒதுக்குப் புறத்தில் குடி இருந்தான் ஜெகன். களவு தான் அவன் தொழில். இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் தொழிலுக்கு போகவில்லை. மக்கள் தூங்கியதும் இவன் போய் மாடு, யானை தவிர கொல்லைப் புறத்தில் எதை கட்டி இருந்தாலும் ஈரச் சாக்கினை மிருகத்தின் மேலே போட்டு, இழுத்து வந்து விடுவான். போகும் போது ஈரச் சாக்கின் உள்ளே சங்கிலியை சுற்றி வைத்துக் கொள்வான். திருடி முடிந்ததும் சங்கிலியை தோளில் மாட்டிக் கொள்வான். மக்களை பயமுறுத்தவே அவ்வாறு செய்யத் தொடங்கினான்.


ஊரில் ஆண்களின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை தன் வீட்டில் இருந்தபடியே கவனித்தான் ஜெகன்.
வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே நோட்டம் விட்டான்.
என்ன நடக்கிறது? ஏதாவது காணவில்லயா?. என்றான் அப்பாவியாக.
உனக்கு தெரியாதா? ஊரில் உலவும் சங்கிலிப் பேயை மக்கள் பிடிக்கப் போகிறார்கள், என்றார் யாரோ ஒருவர் போகிற போக்கில்.
நல்லது. வாழ்த்துக்கள், என்றான் ஜெகன்.
எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். இரவு நெருங்க நெருங்க பர பரப்பு கூடியது.

நீ போகலையா சங்கிலிப் பேயை பிடிக்க, என்றான் ஜெகனின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அப்புக் குட்டி.
இல்லை என்று வேகமாக தலையாட்ட நினைத்தவன் ஏதோயோசனையின் பின்னர் பக்கத்தில் கிடந்த உருட்டுக் கட்டையுடன் கிளம்பினான். மனதுக்குள் சிரிப்பு வந்தது. ஊருடன் ஒத்து வாழ் என்று என் செத்துப் போன ஆயா சும்மாவா சொல்லிச்சு.

ஆண்கள் வேப்பமரத்தடியில் கூடியிருந்தார்கள். நான்கு பிரிவாக பிரிந்து ஒவ்வொரு திசையில் பேயைப் பிடிக்க அனுப்பபட்டார்கள். ஏதோ ஒரு பிரிவில் ஜெகனும் இடம் பெற்றான்.
புதரின் பின்னே மறைந்து இருந்தார்கள்.
ஜெகன் அப்போது தான் கவனித்தான் பக்கத்தில் இருந்தவர்களின் ஆயுதங்களை. சிலரின் கைகளில் கத்திகள், வீச்சரிவாள், ஈட்டி போன்று முனை சீவப்பட்ட கம்புகள், இன்னும் பல.
ஆண்டவா! நல்லவேளை நான் இரண்டு நாட்களா களவுக்கு போகவில்லை. இன்று வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அந்த சங்கிலியை ஆற்றில் தூக்கிப் போட வேண்டும், என்று நினைத்துக் கொண்டான்.
அவனையும் அறியாமல் சிரிப்பும் வந்தது. கெக்கே பிக்கே என்று சிரித்தான்.
டேய் பைத்தியம், சிரிக்கிற நேரமா இது?, என்று யாரோ இவனை அடக்கினார்கள்.
ம்ம்... நான் பைத்தியம்!!!,  என்று நினைத்தபடி உருட்டுக் கட்டையினை உறுதியாக பற்றிக் கொண்டான்.