Friday, December 10, 2010

என் தங்கைக்காக


கடல் தண்ணீர் கண்களில் பட்டதும் எரிச்சலாக இருந்தது. கனவா? உண்மையா என்று விளங்கவில்லை அகிலனுக்கு. எங்கும் மரண ஓலம் காதுகளை துளைத்து எடுத்தது. யாரைக் காப்பாற்ற, யாரை விட என்று சில நொடிகள் குழம்பி போனான். மறு நொடி பக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

"அண்ணா" என்ற குரல் அந்த இடமே அதிரும்படி எதிரொலித்தது. எப்படி என் தங்கையை மறந்தேன் என்று நினைத்துக் கொண்டான். அம்மா, தாத்தா இருவரும் எங்கே? யோசிக்க நேரம் இல்லை. தங்கையை காப்பாற்ற வேண்டும்.

இருள் பிரியாத காலை நேரம். கிட்டத் தட்ட 30 பேர் அளவில் இருக்கும். இதில் என் தங்கையை எங்கே தேடுவேன் என்று திகைத்து நின்றான். ஆனால், குரல் வந்த திசையினை வைத்து, அந்தப் பக்கம் நீந்தத் தொடங்கினான். யாரோ வேகமாக இவன் கையினைப் பற்றினார்கள். மரண பயத்தில் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. கையினை விலக்கப் போனான். தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அந்தப் பெண்ணின் கண்கள் கெஞ்சின. சிறிதும் தாமதிக்காமல் கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

**********************************

அகிலன், இன்று இரவு வள்ளத்தில் இந்தியா போகிறோம். ரெடியா இருக்க சொன்னார் ஓட்டி", என்றார் அம்மா.

அம்மா! இது 10 வது தடவை இருக்குமா? ஒவ்வொரு முறையும் போய் காத்திருந்து விட்டு, இரவானதும் திரும்பி வருவோமே. இந்த நாட்டிலேயே இருந்து செத்து போகலாம்" என்ற சொன்ன மகனை முறைத்தார் தாய்.

இல்லைப்பா! சாக பயப்படவில்லை. உன் தங்கை மேகலாவை நினைச்சா பயமா இருக்கு. சில மாதங்களின் முன்பு பக்கத்து தெருவில் கங்காவை இராணுவம் கொண்டு சென்றார்கள். இப்ப எங்கே என்றே தெரியவில்லை.", என்ற தாயை இரக்கத்துடன் நோக்கினான் அகிலன்.

" சரிம்மா. இன்று இரவு போகலாம். மேகலாவிடம் சொன்னீங்களா?", என்று வினவினான்.

" மேகலாக்கு எப்போதும் சம்மதமே. குடும்பத்திற்கு ஒரு பை தான் கொண்டு வர வேண்டும் என்று ஓட்டி கண்டிப்பா சொல்லிட்டார். உன் ஆடைகள் ஒரு செட் மட்டும் கொண்டு வாப்பா....", என்று பேசிக் கொண்டே போன அம்மாவை பார்த்துக் கொண்டே நின்றான்.

எதை விட, எதை எடுக்க என்று யோசிக்காமல் ஒரே ஒரு செட் உடையினை எடுத்து தாயிடம் நீட்டினான்.

இரவானதும் கடற்கரைக்கு போனார்கள். அமாவாசை இருட்டு. அம்மாவும், தாத்தாவும் அருகிலேயே நின்று கொண்டார்கள். தங்கை மேகலா இவனின் கையினை பற்றிய படியே நின்றாள். காற்று இதமாக வீசியது. தூரத்தில் கடற்படை கப்பலின் வெளிச்சப் பொட்டு மங்கலாக தெரிந்தது.
இன்று இந்தியா போக முடியுமா தெரியவில்லை என்று மனதினுள் எண்ணிக் கொண்டான்.

சுமார் 12 மணி அளவில் வள்ளம் வந்து சேர்ந்தது. நின்றவர்கள் சத்தம் போடாமல் ஏறிக் கொண்டார்கள். இலங்கை கடற்பரப்பினை தாண்டும் வரை மெதுவாகவே வள்ளம் ஊர்ந்து சென்றது. இந்தியா கடற்பரப்பு வந்ததும் படகு வேகமாக செல்லும் என்று ஓட்டி அறிவித்தார். கடலில் எப்படித் தான் எல்லை தெரியுமோ என்று நினைத்துக் கொண்டான் அகிலன்.

சில மணிநேரங்கள் கடந்த பின்னர் படகு வேகமாக செல்லத் தொடங்கியது. அசுர வேகத்தில் சென்ற படகு நிலைகுழைந்து போனது. படகில் இருந்தவர்கள் நாலா புறமும் தூக்கி வீசப்பட்டார்கள்.

******************************
மீண்டும் அந்த இடத்திற்கு விரைந்தான். கால்களில் ஏதோ தட்டுப்பட மூச்சடக்கி உள்ளே மூழ்கினான். கைகளை பற்றினான். அது ஒரு பெண்ணின் கை என்பது விளங்கியது. வளையல்கள் தட்டுப்பட்டது. இது என் தங்கையின் வளையல்கள் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டான்.


தங்கைக்கு அப்பா ஆசையாக வெளிநாட்டில் வாங்கி அனுப்பிய வளையல்கள். சந்தேகமே இல்லை. இது என் தங்கை மேகலா தான். வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தாள்.

வேகமாக பிடித்து இழுத்தான். ஆனால், பிடி நழுவியது. நுரையீரல் சுத்தமான காற்றுக்காக ஏங்கியது. மீண்டும் மேலே போய் மூச்சிழுத்து உள்ளே வர நேரம் இருக்கவில்லை.
" அண்ணா! என்னை கைகளை பிடித்துக் கொண்டே இருங்கள். பிளீஸ்.. என்று மேகலா படகில் கெஞ்சியது ஞாபகம் வந்தது.

முன்பை விட இன்னும் அதிக பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஏதோ ஒரு அசுர சக்தி எதிர் திசையில் இழுத்துக் கொண்டே சென்றது. இப்போது அகிலனும் சோர்ந்து போயிருந்தான். மேலே போக எத்தனித்தான். மேகலாவின் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. மேகலாவுடன் சேர்ந்து அகிலனும் சமுத்திரத்தின் சுழலில் சிக்கிக் கொண்டான். தங்கையின் கையினை மட்டும் விடவில்லை. சமுத்திர அன்னையின் சுழலில் சிக்கி, அலைக்கழிக்கப்பட்டார்கள். அவளின் வெறி அடங்கியதும் காற்றில்லாத பந்துக்கள் போல மேலே மிதந்த இருவரையும் மீனவர்கள் தூக்கி கரையில் போட்டார்கள். மரணத்திலும் கை கோர்த்தபடியே இருந்த இருவரையும் கண்ட ஊரார்கள் அதிர்ந்து நின்றார்கள்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாயார் மட்டும் கரையில் இருந்த உயிரற்ற உடல்களை இனம் காண அழைத்து வரப்பட்டார். வாய் பொத்தி அழ ஆரம்பித்தவரை தேற்ற அங்கு அகிலனோ, மேகலாவோ இருக்கவில்லை.

(This story is based on an actual event that took place in the early 90's.)

Thursday, December 9, 2010

தொடர்பதிவு.

ஆமி அழைத்த தொடர்பதிவு. நிறைய யோசித்து மண்டை காய்ந்து போனது தான் மிச்சம். எனக்கு பாட்டுக்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். இதில் எதை குறிப்பிட்டு சொல்வது என்றே தெரியவில்லை. பழைய பாட்டுக்கள் விரும்பி கேட்பதுண்டு. ஆனால், பாடியது யார் என்ற விபரம் தெரியாது. நான் எதையாச்சும் எழுதி தொலைக்க, யாராச்சும் சண்டைக்கு வந்தா.... எனவே எனக்கு மிகவும் தெரிந்த பாடல்களை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

1. அழகு மயில் ஆட அபிநயங்கள் கூட.... ஜானகியின் பாடல் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகா, அர்த்தம் நிறைந்ததா இருக்கும்.
ஒரு விதவையின் மனசை சொல்லும் பாடல்.
கல்லூரியில் படிக்கும் போது இந்த பாட்டுக்கு என் வகுப்பு மாணவிகள் இருவர் நடனம் ஆடினார்கள். மிகவும் சிறப்பாக பரத நாட்டியம் ஆடிய போதும். முதல் பரிசு கிடைக்கவில்லை. காரணம் ??? நான் சொல்ல மாட்டேன் ( இவளுக்கு இதே வேலையாப் போச்சு என்று திட்ட வேண்டாம். கேள்வி கேட்டாதானே அறிவு வளரும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. )

2. சின்ன சின்ன ஆசை... மின்மினியின் குரலில் ரோஜா படத்தின் பாடல். எனக்கும் இப்படி நிறைய சின்ன சின்ன ஆசைகள் இருக்கு. அதெல்லாம் நிறைவேற ஆசை.

3. காதோடு தான் நான் பாடுவேன்... எல் ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல். அவரின் குரலில் ஒரு கவர்ச்சி இருக்கும். அவரின் பாடல்களை you tube ல் நிறைய கேட்பதுண்டு.

4. கங்கை கரை தோட்டம்.. சுசீலா பாடிய பாடல். மிகவும் அருமையான குரல் வளம் மிக்கவர். அவரின் பல பாடல்கள் பிடிக்கும். ஆனால். மிகவும் பிடித்த பாடல் இது தான்.

5. கண்ணோடு காண்பதெல்லாம் ... ஜீன்ஸ் படத்தில் Nithyashri பாடிய பாடல். கணீரென்ற குரலும், பாடல் வரிகளும் அழகோ அழகு.


6. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே.... தளபதி படத்தில் வரும் பாடல். பாடியவர் பெயர் தெரியவில்லை ஆனால், மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
( பாடகி பெயர் தெரிஞ்சா எனக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்புங்கப்பா. இங்கே திட்டாதீங்க. சரியா? )

7. கண்ணாளனே எனது கண்ணை ... பாம்பே படத்தில் சித்ராவின் குரலில் வரும் பாடல். என்றும் இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

8. ஒவ்வொரு பூக்களுமே சொல்... என்ற பாடல். ஆட்டோகிராஃப் படத்தில் வரும் பாடல். சித்ராவின் குரலில் அருமையான வரிகள். சோர்ந்து போய் இருக்கும் நேரம் இந்தப் பாடலைக் கேட்டால் தன்னம்பிக்கை வரும். நிறையத் தடவைகள் கேட்டாலுல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.


9. இது ஹரினி பாடிய பாடல். ஆரம்பம் ஞாபகம் இல்லை. இடையில் வரும் வரிகள் மட்டுமே ஞாபகம் இருக்கு.

வானம் வரை வந்த தலைவா இனி வெண்ணிலவு ரொம்பத் தொலைவா.....இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். காரணம் சொல்லமாட்டேன். ஆனால், இந்தப் பாடல் கேட்ட உடனே எனக்கு சிரிப்பு வந்து விடும். தொடக்கம் தெரிஞ்சா சொல்லுங்க. ஆனால், இந்த வரிகள் தான் மிகவும் மனதில் பதிந்த வரிகள்.

10. உயிரே படத்தில் வரும் நெஞ்சினிலே நெஞ்சினிலே ... பாடல் மிகவும் பிடித்த பாடல். ஜானகியின் கணீர் குரல், ரஹ்மானின் இசையில் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். படமாக்கப்பட்ட விதமும் அருமை.

Monday, December 6, 2010

அரண்டவன் கண்ணுக்கு

இலங்கையில் போரினால் இந்தியா சென்ற நேரம்.. எல்லாமே புதுமையாக இருந்த நாட்கள். ஆட்டோ சங்கர் மிகவும் பிரபலமாக இருந்த நாட்கள். எந்த பெட்டிக் கடையிலும் இவர் தான் நியூஸாக தொங்கியபடி. என் பாட்டி எல்லா பத்திரிகைகளிலும் ஆட்டோ சங்கரைப் பற்றி படித்து, எங்களுக்கு பீதி கிளப்புவதை ஒரு முழு நேர வேலையாக/பொழுது போக்காக கொண்டிருந்தார்.

வாழ்க்கையில் முதன் முதலாக தெப்பக்குளம் பார்த்த என் கஸின் ஒருத்தி, வாழ்க்கையில் ஒரு போதும் தெப்பக்குளம் பார்க்காத 4 பேர் என புறப்பட்டோம். கிளம்பும் நேரம் என் பாட்டியும் வந்து, அடம் பிடித்து ஆட்டோவில் ஏறிக் கொண்டார். என் அத்தை பையன் தான் ஒரே ஒரு ஆண் துணை. அவன் முன்னாடி ஓட்டுநருடன் ஒட்டிக் கொள்ள. நாங்கள் பின்னாடி 5 பேர் அடைபட்டுக் கொண்டோம். ஆட்டோ வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. என் நினைப்பு முழுக்க எடுக்கப் போகும் புது சல்வாரை சுற்றி வந்தது.
( தெப்பக்குளம் பார்த்த ) என் கஸின் மெதுவாக என்னைச் சுரண்டினாள்.

" ஆட்டோ வலப்பக்கம் திரும்பணும். ஆனால், ஏன் இடது பக்கம் திரும்புது ?", என்றாள்.

என் பாட்டிக்கு மிகவும் கூர்மையான காது.

" என்னது இந்தப் பக்கம் தெப்பக்குளம் இல்லையா.... ?", என்று முடிக்கும் முன்பே.
என் இன்னொரு கஸின் ஆட்டோகாரரின் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டார். ஒரு கணம் தடுமாறிய ஆட்டோக்காரர் சுதாகரித்து, ரோட்டின் ஓரத்தில் ஆட்டோவை நிப்பாட்டினார்.

" முதலில் சட்டையை விடும்மா. எதுக்கு என் சட்டையை பிடிச்சே ", என்று சண்டைக்கு ஆயத்தமாகிவிட்டார்.

" ஆகா! எங்களுக்கு தெரியாதாக்கும். என் பேத்திகளை எங்கேயோ கொண்டு போய் விற்கப்போகிறாயா? பாவிப் பயலே ", என்று கத்திய பாட்டியை நக்கலாக ஒரு பார்வை விட்டார்.
" ஹையோ! இதுங்களா. ஒரு பைசா கூட தேறாது. இதுங்க மூஞ்சியும் ..... சரி! நீ ஏம்மா என் சட்டையை பிடிச்சே?", என்று என் கஸினை நோக்கி எகிறினார்.
" தெப்பக்குளம் அப்படிக்கா இருக்கு. ஏன் இந்தப் பக்கம் திருப்பினே?" , என்றாள் என் கஸின்.

" ஆங். எங்களுக்கு தெரியாதாக்கும். உறையூர் போய் போனா சுருக்கா போயிடலான்னு திருப்பினேன். பாலக்கரை பக்கம் ட்ராஃபிக் ஜாம்... இதுங்களுக்கு போய் உதவ நினைச்சேனே என் புத்தியை செருப்பாலை இல்லை விளக்குமாற்றிலை அடிக்கணும்." , என்று புலம்பிக் கொண்டே போனார்."

" சரி தம்பி. ஆட்டோவை எடு ", என்றார் என் பாட்டி.

" என்னது ஆட்டோவை எடுக்கவா? என்னை விட்டுடுங்க நான் ஓடிப் போயிர்றேன். இதுக்கு மேலேயும் இங்கே நின்னா போலீஸ் பிடிச்சு உள்ளே போட்டாலும்...இல்லை இந்த பாட்டியே பிடிச்சுக் குடுத்துடுவாங்க போல இருக்கே. "

இந்தாப்பா பணத்தை வாங்கிக்க.

" எனக்கு பணமே வேண்டாம் தாயி. ஏதோ 5 பிச்சைக்காரங்களை ஏத்தியதா நினைச்சுக்கறேன்.", என்று விட்டு, ஒரே ஓட்டமா ஓடிவிட்டார்.
என் சல்வார் கனவில் மண் விழ, அங்கு நின்றவர்களை கேட்டு, ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி, இறங்கி வீடு போய் சேர்ந்தோம்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சும்மாவா சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சியின் பிறகு அந்த ஆட்டோக்காரர் எங்களின் தெருவில் ஆட்டோ ஸ்டான்டில் நிற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். தொடக்கத்தில் எங்களைக் கண்டால் முறைத்தவர், பிறகு ஸ்நேகமாக புன்னகைக்க தொடங்கினார். சில மாதங்களின் பின்னர் என் பாட்டியின் "ஆஸ்தான" ஆட்டோ ஓட்டுநர் ஆனார்.