Saturday, March 27, 2010

சுஜாதா

சுஜாதா- என் மனம் கவர்ந்த பெண். 9ஆம் வகுப்பு மாணவி. பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். சுஜாதா மிகவும் அழகானவள். உயரமாக இருப்பாள். நல்ல சிவந்த நிறம். வசதியான குடும்பம் அவளுடையது. ஒரே பெண் என்பதால் மிகவும் செல்லம். யாரையுமே மதிக்க மாட்டாள். படிப்பில் சுமார்தான்.

நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் குடும்பம் ஓரளவு வசதியானது. நான் மிகவும் கறுப்பாக இருப்பேன்.

எனக்கு சுஜாதாவில் காதல். காரணம் எல்லாம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவளைப் பிடிக்கும். அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னை மட்டுமல்ல வேறு எந்த ஆணையும் ஏறேடுத்தும் பார்க்கமாட்டாள். என்னைக் கண்டால் ஏதோ கரப்பான், பல்லி போன்ற ஐந்துக்களை பார்ப்பது போல அலட்சியமாக பார்த்து விட்டு கடந்து போவாள். ஆனால் இதெல்லாம் என் மண்டையில் உறைக்கவே இல்லை.

காலையில் அவள் பள்ளி போகும் போது அவள் பின்னாலே போவது, அவள் உள்ளே சென்ற பின் நான் என் வகுப்பிற்கு செல்வது, மாலையில் அவள் சங்கீத வகுப்பிற்கு செல்லும் போது போய் வாசலில் காவல் இருப்பது என்று என் வாழ்விற்கே ஒரு புது அர்த்தம் வந்தது போல உணர்ந்தேன்.

ஒரு நாள் சுஜா(இனிமேல் சுஜா என்று செல்லமாக கூப்பிடுவோம்) ஏதோ விளம்பர படத்தில் நடிக்கின்றாளாம் என்பதே பள்ளி முழுவதும் பேச்சாக இருந்தது. என்ன விளம்பரம் என்று விபரம் தெரியவில்லை.
என் அப்பா ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் தவறாமல் நியூஸ் பார்ப்பார். அன்று நானும் எதேச்சையாக நியூஸ் பார்க்க அமர்ந்தேன். அப்போது சுஜாவின் விளம்பரம் வந்தது. ஏதோ ஒரு சோப்புக் கட்டியை காட்டி, இதை எல்லோரும் போட்டுக் குளித்து, சுத்தமாகுங்கள் என்று ஏதெதோ சொன்னாள். அவள் சொன்னது எதுவும் ஞாபகமில்லை. அவள் முகத்தை பார்க்க தினமும் நியூஸ் பார்க்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் அம்மாவும் விளம்பரம் பார்த்து விட்டு, எங்கேயோ இந்த பெண்ணை பார்த்து இருக்கிறேன். ஞாபகம் வரவில்லை என்றார்.உனக்குத் தெரியுமா ராசா...என்று என்னைப் பார்த்தார்.

நாம்: ம்ம்ம்.. பக்கத்து வீட்டு சுஜாதா(என்ன கொடுமை மருமகளைக் கூட தெரியவில்லை என்று மனதினுள் திட்டிக் கொண்டேன்).

இதில் எல்லாம் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்த அப்பாவிடம் அம்மா, " பக்கத்து வீட்டு ராகவன் மகள்" என்று விளக்கம் சொல்ல, அப்பா, "ஓ அப்படியா" என்று விட்டு நிறுத்திக் கொண்டார்.

அடுத்த நாள் சுஜாவின் பின்னே ஊரே அலைந்தது. மிகவும் திமிராக நடந்து வந்தவள் என்னைக் கணடதும் தோழிகளிடம், " இந்தா பார் அண்டங் காக்கை வருது" என்று சொல்ல, அவள் தோழிகள் எல்லோரும் சிரித்தார்கள்.

என் நிறத்தை குறை சொன்னதும் எனக்கு ஆத்திரம் வந்தது. இவளை பழி வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீடு வந்தேன். ஒரு வழியும் புலப்படவில்லை. அப்போது தொலைக்காட்சியில் சுஜா தோன்றி, சோப்பைக் காட்டினாள். திடீரென்று என் மண்டையில் ஒரு ஐடியா தோன்றியது.

அடுத்த நாள் சுஜா விளம்பரத்தில் பாவித்த சோப், ஒரு சொறி நாய், ஒரு வாளி தண்ணீர் எல்லாம் கொண்டு நண்பர்கள் புடைசூழ போனேன். அவள் சங்கீத வகுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தாள். நடுரோட்டில் நான் சொறி நாய்க்கு சோப்பு போட, இன்னொருவன் தண்ணீர் ஊற்ற, இன்னொரு நண்பன் சுஜா விளம்பரத்தில் சொன்ன அதே வசனத்தை சொல்ல, கோபம் கொண்ட சுஜா அழுது கொண்டே ஓடி விட்டாள். எனக்குள் ஒரு அற்ப சந்தோஷம் பழி வாங்கி விட்டதை எண்ணி.

இந்த சம்பவத்தின் பிறகு சுஜா கொஞ்சம் அடங்கி விட்டாள்.ஒரு வாரத்திற்கு மேல் நானும் அவளைக் கண்டு கொள்ளாமல் இருந்தேன். ஆனால் நீண்ட நாட்கள் என்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்துவிட்டேன்.
எப்படியாவது என் விருப்பத்தை அவளிடம் சொல்லிவிடத் துடித்தேன்.
அன்று என் பாட்டியின் நினைவு நாள். உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள் என்று வீடே நிறைந்து இருந்தது. நான் பள்ளி போகவில்லை. அன்று எப்படியாவது சுஜாவிடம் என் மனதை திறந்து கொட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பள்ளி விடும் நேரம் அப்பாவிடம் ஏதோ சாக்குச் சொல்லி சுஜாவைப் பார்க்க ஓடினேன். தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. கிட்ட வரும் வரை காத்திருந்தேன். என் நண்பர்களும் சிலர் நின்று வேடிக்கை பார்த்தார்கள். அவள் அருகில் வந்ததும் அவளை நெருங்கினேன். திடீரென்று என் நண்பர்கள், " டேய் ஓடுடா... உன் மாமியார் விளக்குமாறு கொன்டு வருகின்றா..." என்று கத்தினார்கள். நான் திரும்பி பார்க்க சுஜாவின் அம்மா என் முதுகின் பின்னால் விளக்குமாறு தூக்கிக் கொண்டு ஆவேசமாக வந்து கொண்டிருந்தார். சில நொடிகள் திகைத்த நான் பின்னர் என் வீட்டை நோக்கி ஓடினேன்.

அப்பா அவரின் நண்பர்களை வழியனுப்ப வாசலுக்கு வரவும் நான் ஓடிப் போய் அவரின் முதுகின் பின்னால் ஒழிந்து கொண்டேன்.
ஆவேசமாக வந்த சுஜாவின் அம்மா விளக்குமாற்றை கீழே எறிந்து விட்டு, என் அப்பாவை ஏக வசனத்தில் திட்டி விட்டுப் போய் விட்டார்.
மிகவும் கோபம் கொண்ட என் அப்பா கீழே கிடந்த விளக்குமாற்றை எடுத்து என்னை விளாசித்தள்ளி விட்டார்.அப்பாவின் நண்பர்கள் தான் என்னைக் காப்பாற்றினார்கள்.

இந்த சம்பவத்தின் பிறகு நான் சுஜா இருக்கும் திசையை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அன்று வழக்கம் போல அப்பா நியூஸ் பார்க்க, சுஜா விளம்பரத்தில் தோன்றி சிரித்தாள். நான் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வேறு அறையை நோக்கி நடந்தேன்.

Thursday, March 25, 2010

சங்கீதம்

யாரோ வீணை மீட்டுவது போல இனிமையாக இருக்கு உங்கள் குழந்தையின் அழுகை- இது நான் பிறந்ததும் நேர்ஸ் அப்பாவிடம் சொன்னது.
என் அப்பாவும் அதில் அப்படியே மயங்கி எனக்கு வீணா என்று பெயர் வைத்து விட்டார்.

3 அண்ணன்களுக்குப் பிறகு பிறந்தபடியால் வீட்டில் நான் தான் சர்வாதிகாரி. நான் வைத்ததே சட்டம்.
அப்பாவும் தோளில் தூக்கி வைத்தபடியே வீட்டை வலம் வருவார்.

என் பெயர் என் அண்ணன்களுக்கு என்னை திட்டுவதற்கு மிகவும் வசதியாக இருந்தது.
கோபம் வந்தால், " ஏய், வீணாப் போனவளே" என்பார்கள். நான் அழுது புரண்டு அவர்களை ஒரு வழி பண்ணி விடுவேன்.

அப்பாவுக்கு சங்கீதம் என்றால் உயிர்.
எனக்கு 7 வயசானதும் என் அப்பா என்னை சங்கீதம் பழக அனுப்பினார்.
எனக்கு அப்படி ஒன்றும் பிரமாதமான குரல் வளம் இல்லை.
கட்டைக் குரலில் நான் பாடத்தொடங்கினால் என் அண்ணன்கள் வீட்டை விட்டு ஓடிவிடுவார்கள்.
நான் எதையும் கண்டு கொள்ளாமல் பாடியே கொலை செய்வேன்.
என் அப்பா, அம்மா இருவரும் அப்படியே உச்சி குளிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

என் சங்கீத ஆசிரியை- கல்பனா.
மிகவும் உயரமாக இருந்தார். புருவங்களை மழித்து விட்டு, கோடு போட்டிருந்தார்.
எனக்கு அவரைக் கண்டாலே பயம்.
கிளாஸ் போய் ஒரு வாரத்திலே எனக்கு சங்கீதம் சுட்டுப் போட்டாலும் வராது என்று அப்பாவிடம் சொல்லி விட்டார்.

மிகவும் கோபமான அப்பா எனக்கு வீட்டிலே சங்கீதம் பழக ஒருவரை அழைத்து வந்தார்.
அவருக்கும் நான் தேறமாட்டேன் என்று தெரிந்தாலும் என்னோடு சேர்ந்து அவரும் கொடுத்த காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் கத்துவார்.

இப்படியே போன என் சங்கீத வகுப்பு என் 18 வயதில் தடைப்பட்டது. என் அழகில் மயங்கி என்னைப் பெண் கேட்டு மிகவும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தார்கள். மற்றவர்கள் போல பாடத் தெரியுமா என்று மாப்பிள்ளை கேட்கவில்லை. நான் பாடியிருந்தால் அப்பவே மாப்பிள்ளை சுவர் ஏறிக் குதித்து ஓடி இருப்பார் என்று என் அண்ணன்கள் வாய் ஓயாமல் சொல்வார்கள்.

இந்த கல்யாணத்தில் என் அண்ணன்களே மிகவும் மகிழ்ந்தார்கள். என் அப்பா ஏதோ பறி கொடுத்தவர் போல இருந்தார்.
நான் என் அப்பாவிடம் சொன்னேன்," ஏன் கவலைப்படுகிறீர்கள். பக்கத்து தெருவில் தானே இருக்கப்போகிறேன். அடிக்கடி வந்து உங்களுக்காக பாடி விட்டு போகிறேன்."

ஓகோ! அப்படி வேறு ஆசையா? இப்பவே அப்படி எண்ணம் இருந்தால் சொல்லு நாங்கள் வேறு எங்காவது வீடு மாறி போகிறோம் என்று கடைசி அண்ணன் கடுப்படித்தான்.

கல்யாணம் முடிந்தது. என் கணவர் நல்லவர். அவரை அமர வைத்து கச்சேரி வைக்காத குறையாக பாடுவேன். திருமணமான புதிதில் கேட்டவர். பிறகு ஏதாவது சாக்கு சொல்லி நழுவப் பார்த்தார். காரில் போகும் போது ரேடியோவில் பாட்டு போட்டால் நானும் சேர்ந்து பாடுவேன். என் கணவர் காரில் பாட்டு கேட்பதை நிறுத்தினார்.

என் கொடுமை தாங்க முடியாத கணவர் சொல்வார்," ஒருவன் பிறந்து தான் எங்களை எல்லாம் இந்தக் கொடுமையிலிருந்து மீட்பான்."
அடுத்த வருடம் மகன் பிறந்தான். அவனையும் என் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்தேன். ஆரம்பத்தில் அழுதவன் பிறகு என் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருக்கப் பழகி விட்டான்.
"அவன் நடக்கத்தொடங்கியதும் என்னைத் தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடப்போகிறான்", இது அண்ணனின் கூற்று.
.

என் மகனும் தவழ்ந்து, நடந்து, கதைக்கப் பழகினான். அப்பா, அம்மா இப்படி 3 ,4 வார்த்தைகள் சொல்வான்.
ஒரு நாள் நான் வழமை போல அவனைப் படுக்க வைக்க பாடினேன். கட்டிலிலிருந்து இறங்கியவன், " அம்மா ஸ்டாப்" என்று சொல்லி விட்டு வேறு அறையில் போய் படுத்துக் கொண்டான்.

மகன் என்னை பாட வேண்டாம் என்று சொன்னதை விட அவன் பேசிய ஆங்கில வார்த்தையே என்னை முதலில் புல்லரிக்க வைத்தது. பின் மெதுவாகவே அவன் என்னை பாட வேண்டாம் என்று சொன்னது நினைவில் வந்தது.

இப்போதும் நான் பாடுகிறேன்.... எங்கே என்கிறீர்களா? பாத்ரூமில் மட்டும், எனக்கு மட்டும் கேட்குமாறு பாடுகிறேன்.

Wednesday, March 24, 2010

வதக்கல் குழம்பு



தேவையானவை


கத்தரிக்காய் - 1
வாழைக்காய் - 1
வெங்காயம் - பாதி
பூண்டு - 5 பல்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - கொஞ்சம்
மிளகாய் - 3
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

கத்தரிக்காய், வாழைக்காய், வெங்காயம், பூண்டு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சட்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கத்தரிக்காயை( லைட் ப்ரவுன் நிறம்) பொரிக்கவும். பொரித்த துண்டுகளை பேப்பர் டவலில் பரவி விடவும்.
இதே போல வாழைக்காயையும் பொரிக்கவும்.
வேறு சட்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை வதக்கவும்.
அடிகனமான சட்டியில் தண்ணீரை விட்டு, அதில் மிளகாய்த்தூள், வெந்தயம், புளித்தண்ணீர்,உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பச்சை வாடை போனதும் கத்தரிக்காய், வாழைக்காய், வெங்காயம் கலவை சேர்க்கவும்.
தண்ணீர் வற்றியதும் விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

இந்த வதக்கல் குழம்பு ரைஸ், புட்டு, இடியப்பம் இவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.

Monday, March 22, 2010

வேஷ்டி

காலை 7 மணி. அம்மா என்னை எழுப்புகிறார். இன்று பள்ளி லீவு. ஒரே சந்தோஷமாக இருக்கு. என் மகிழ்ச்சியின் காரணம். பிள்ளையார் கோயிலில் திருவிழா. பின்னேரம் கோயிலுக்கு போகலாம். அம்மா தந்த ஒரு ரூபாயுடன், அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த காசில் வாங்கிய வேஷ்டி கட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.

என் குடும்பம் மிகவும் வறியது. அப்பா மேஸ்திரி வேலைக்கு போய் 6 பேர் கொண்ட குடும்பத்தை சுமக்கின்றார்.அப்பாவுக்கு ஆஸ்துமா நோய் இருக்கு.மிகவும் கஷ்டப்படுவார். எனக்கு 3 சகோதரிகள். நாங்கள் நால்வரும் நன்கு படிப்போம். எங்கள் படிப்பு கெடக்கூடாது என்பதில் அப்பாவுக்கு அவ்வளவு அக்கறை.

நான் வகுப்பில் எப்போதுமே முதல் மாணவன். வரைதல், பாட்டு என்று எல்லா ஏரியாவிலும் கலக்குவேன். என் சக மாணவன் "ரமேஷ்". அவனுக்கு எப்போதும் என்னில் பொறாமை, எரிச்சல்.
நான் வரைந்த ஓவியங்களை மற்ற மாணவர்களுக்கு காட்டி எப்படி இருக்கு என்று கருத்துக் கேட்டால் , " ரொம்ப கேவலமாக இருக்கு" என்று விட்டு கெக்கே பிக்கே என்று சிரிப்பான் ரமேஷ். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

மிகவும் வசதியான குடும்பம் அவனுடையது. ஆனால் படிப்பு ஒரு மண்ணும் ஏறாது.காரில் வந்து இறங்குவான். நிறைய நண்பர்கள் சூழ வலம் வருவான்.

நான் கோயிலுக்கு போவது அப்படி ஒன்றும் பெரிய பக்தியில் அல்ல. கோயிலில் விற்கும் பலூன், சோளப்பொறி இவையே என்னை மிகவும் ஈர்க்கும். நான் நேரே பலூன் விற்பவரிடம் போனேன். அந்த நேரம் ரமேஷ்ம் அங்கு வந்தான். பலூன் விற்பவரிடம் கடைசியாக இருந்த ஒரே ஒரு பலூனை நான் வாங்கி விட்டேன். அதிலிருந்து தான் ஆரம்பித்தது ஏழரைச் சனி எனக்கு.
அவன் பலூனை குடுடா என்று துரத்த நான் ஓடினேன். நான் ஓடும்போது பலூன் கீழே விழுந்து உடைந்து விட்டது.

ரமேஷ் ஏளனப்பார்வை பார்த்து விட்டு போய் விட்டான். நான் மீதி இருந்த காசில் சோளப்பொறி வாங்கினேன். லேசாக இருட்டத் தொடங்கி இருந்தது. நான் சோளத்துடன் குளக்கரை படிக்கட்டில் அமர்ந்து கொண்டேன். சுகமான காற்றை அனுபவித்துக் கொண்டே கொறிக்கத் தொடங்கினேன். அப்போது யாரோ என்னை பின்னாலிருந்து வேகமாக தள்ளி விட்டு ஓடினார்கள். நான் குளத்திற்குள் விழுந்து எழுந்தேன்.

என் வேஷ்டி தொப்பலாக நனைந்திருந்தது. இப்படியே வீட்டிற்கு போக முடியாது. அப்பாவை நினைக்கவே நடுங்கியது. வேஷ்டியை காய வைக்க வேண்டும். ஆனால் எப்படி??. கோயில் வீதியை சுற்றி ஓடுவது தான் ஒரே வழி (என் சிற்றறிவுக்கு எட்டிய ஒரே ஒரு யோசனை).

மூச்சிரைக்க ஓடினேன். 10 தடவை கோயில் வீதியை சுற்றியதில் என் வேஷ்டி ஓரளவு காய்ந்திருந்தது. நன்கு இருட்டி இருந்தது. வீட்டை நோக்கி ஓடினேன். வழியில் ஒரு தென்னந்தோப்பை கடக்க வேண்டும். நான் நடந்து செல்ல பின்னால் யாரோ தடதடவென ஓடி வரும் ஓசை கேட்டது. கிட்ட வந்த உருவம் என் வேஷ்டியை உருவிக் கொண்டு ஓடி விட்டது. நான் கோவணத்துடன் நிற்கிறேன். பயம், அவமானம் என்று கலவையான உணர்வுடன் அந்த உருவம் போன திசையில் ஓடினேன். ஆனால் நான் போவதற்குள் அந்த உருவம் வெகு தூரம் போய் விட்டிருந்தது.


வீட்டிற்கு போனதும் கோவணத்துடன் நின்ற என்னை அப்பா ஒரு அழுத்தமான பார்வை பார்த்து விட்டு, உள்ளே போய் விட்டார். நாலு அடி அடித்திருந்தால் கூட அப்படி வலித்திருக்காது. பெரிய தண்டனை போல உணர்ந்தேன்.

அடுத்த நாள் பள்ளிக்கூடம். நான் போய் வகுப்பறையில் அமர்ந்தேன். கரும்பலகையில் "கோவண ஆண்டி" என்று கொட்டை எழுத்தில் எழுத்துக்கள். ரமேஷ் என்னை பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். எனக்கு எல்லாமே விளங்கிவிட்டது. அவமானத்தில் அப்படியே ஒடுங்கிப் போனேன். நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை பள்ளியில் என் பெயர் அதுவே. நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படித்தேன். 10ம் வகுப்போடு ரமேஷ் பள்ளி வருவதை நிப்பாட்டி விட்டான். இந்த சம்பவத்தின் பிறகு கோயில் போவதையும் விட்டு விட்டேன்.

நான் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, மிகவும் பிரபலமான கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.
கல்லூரி முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை. அப்பா, அம்மாவுக்கு பெரிய வீடு என்று நிறைய வசதிகள் செய்து கொடுத்தேன்.

பல வருடங்கள் கழித்து ஊருக்குப் போனேன்.
அம்மா சொன்னார், " பிள்ளையார் கோவிலில் திருவிழா. வா போய் வரலாம்."
அம்மா கேட்டதும் மறுக்க முடியாமல் சென்றேன்.
அம்மா கோயிலின் உள்ளே சென்று விட நான் பலூன் விற்பவரை பார்த்துக் கொண்டு நின்றேன். ஏதோ ஒரு நெருடல் மனதிற்குள்.
பலூன்காரனும் என்னை கூர்ந்து பார்த்துவிட்டு, " நீ....குமார் தானே" என்று கேட்கவும். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஊரை விட்டு போய் பல வருடங்களாகி விட்டது. என் பெயர் இவருக்கு எப்படி தெரியும்.
கூர்ந்து பார்த்தேன். அது ரமேஷே தான்.
இவன் இங்கு எப்படி? இவனின் கார், பங்களா என்ன ஆச்சு?. ஏனோ அவனில் இருந்த கோபம் காணாமல் போனது.
வீட்டிற்கு வருமாறு அழைத்தான். தட்ட முடியாமல் போனேன். ஓலை வீட்டில் இருந்தான். மனைவி, 2 பிள்ளைகள்.
அவன் அம்மா, அப்பாவின் எதிர்பாராத மரணத்தால் அவன் வாழ்வே நிலைகுலைந்து போய் விட்டதை சொன்னான். கார், பங்களா எல்லாமே உறவினர்கள் அபகரித்துக் கொண்டு இவனையும் நடுத்தெருவில் விட்டுவிட்டார்களாம்.

நான் புறப்படும் நேரம் வந்தது. என்னை நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். வெளியே வரும்போது கையில் ஒரு பொட்டலம். என் கையில் திணித்தான். உள்ளே எனது வேஷ்டி. நான் ரமேஷை நிமிர்ந்து பார்த்தேன். அவன் கண்கள் கலங்கி இருந்தன. என்னை மன்னிப்பாயா என்பது போல இருந்தது அவன் பார்வை. நான் உன்னை எப்போதோ மன்னித்து விட்டேன் என்று கூறி விட்டு நடந்தேன். என் கண்கள் இப்போது குளமாகியது.