Monday, March 22, 2010

வேஷ்டி

காலை 7 மணி. அம்மா என்னை எழுப்புகிறார். இன்று பள்ளி லீவு. ஒரே சந்தோஷமாக இருக்கு. என் மகிழ்ச்சியின் காரணம். பிள்ளையார் கோயிலில் திருவிழா. பின்னேரம் கோயிலுக்கு போகலாம். அம்மா தந்த ஒரு ரூபாயுடன், அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த காசில் வாங்கிய வேஷ்டி கட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.

என் குடும்பம் மிகவும் வறியது. அப்பா மேஸ்திரி வேலைக்கு போய் 6 பேர் கொண்ட குடும்பத்தை சுமக்கின்றார்.அப்பாவுக்கு ஆஸ்துமா நோய் இருக்கு.மிகவும் கஷ்டப்படுவார். எனக்கு 3 சகோதரிகள். நாங்கள் நால்வரும் நன்கு படிப்போம். எங்கள் படிப்பு கெடக்கூடாது என்பதில் அப்பாவுக்கு அவ்வளவு அக்கறை.

நான் வகுப்பில் எப்போதுமே முதல் மாணவன். வரைதல், பாட்டு என்று எல்லா ஏரியாவிலும் கலக்குவேன். என் சக மாணவன் "ரமேஷ்". அவனுக்கு எப்போதும் என்னில் பொறாமை, எரிச்சல்.
நான் வரைந்த ஓவியங்களை மற்ற மாணவர்களுக்கு காட்டி எப்படி இருக்கு என்று கருத்துக் கேட்டால் , " ரொம்ப கேவலமாக இருக்கு" என்று விட்டு கெக்கே பிக்கே என்று சிரிப்பான் ரமேஷ். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

மிகவும் வசதியான குடும்பம் அவனுடையது. ஆனால் படிப்பு ஒரு மண்ணும் ஏறாது.காரில் வந்து இறங்குவான். நிறைய நண்பர்கள் சூழ வலம் வருவான்.

நான் கோயிலுக்கு போவது அப்படி ஒன்றும் பெரிய பக்தியில் அல்ல. கோயிலில் விற்கும் பலூன், சோளப்பொறி இவையே என்னை மிகவும் ஈர்க்கும். நான் நேரே பலூன் விற்பவரிடம் போனேன். அந்த நேரம் ரமேஷ்ம் அங்கு வந்தான். பலூன் விற்பவரிடம் கடைசியாக இருந்த ஒரே ஒரு பலூனை நான் வாங்கி விட்டேன். அதிலிருந்து தான் ஆரம்பித்தது ஏழரைச் சனி எனக்கு.
அவன் பலூனை குடுடா என்று துரத்த நான் ஓடினேன். நான் ஓடும்போது பலூன் கீழே விழுந்து உடைந்து விட்டது.

ரமேஷ் ஏளனப்பார்வை பார்த்து விட்டு போய் விட்டான். நான் மீதி இருந்த காசில் சோளப்பொறி வாங்கினேன். லேசாக இருட்டத் தொடங்கி இருந்தது. நான் சோளத்துடன் குளக்கரை படிக்கட்டில் அமர்ந்து கொண்டேன். சுகமான காற்றை அனுபவித்துக் கொண்டே கொறிக்கத் தொடங்கினேன். அப்போது யாரோ என்னை பின்னாலிருந்து வேகமாக தள்ளி விட்டு ஓடினார்கள். நான் குளத்திற்குள் விழுந்து எழுந்தேன்.

என் வேஷ்டி தொப்பலாக நனைந்திருந்தது. இப்படியே வீட்டிற்கு போக முடியாது. அப்பாவை நினைக்கவே நடுங்கியது. வேஷ்டியை காய வைக்க வேண்டும். ஆனால் எப்படி??. கோயில் வீதியை சுற்றி ஓடுவது தான் ஒரே வழி (என் சிற்றறிவுக்கு எட்டிய ஒரே ஒரு யோசனை).

மூச்சிரைக்க ஓடினேன். 10 தடவை கோயில் வீதியை சுற்றியதில் என் வேஷ்டி ஓரளவு காய்ந்திருந்தது. நன்கு இருட்டி இருந்தது. வீட்டை நோக்கி ஓடினேன். வழியில் ஒரு தென்னந்தோப்பை கடக்க வேண்டும். நான் நடந்து செல்ல பின்னால் யாரோ தடதடவென ஓடி வரும் ஓசை கேட்டது. கிட்ட வந்த உருவம் என் வேஷ்டியை உருவிக் கொண்டு ஓடி விட்டது. நான் கோவணத்துடன் நிற்கிறேன். பயம், அவமானம் என்று கலவையான உணர்வுடன் அந்த உருவம் போன திசையில் ஓடினேன். ஆனால் நான் போவதற்குள் அந்த உருவம் வெகு தூரம் போய் விட்டிருந்தது.


வீட்டிற்கு போனதும் கோவணத்துடன் நின்ற என்னை அப்பா ஒரு அழுத்தமான பார்வை பார்த்து விட்டு, உள்ளே போய் விட்டார். நாலு அடி அடித்திருந்தால் கூட அப்படி வலித்திருக்காது. பெரிய தண்டனை போல உணர்ந்தேன்.

அடுத்த நாள் பள்ளிக்கூடம். நான் போய் வகுப்பறையில் அமர்ந்தேன். கரும்பலகையில் "கோவண ஆண்டி" என்று கொட்டை எழுத்தில் எழுத்துக்கள். ரமேஷ் என்னை பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். எனக்கு எல்லாமே விளங்கிவிட்டது. அவமானத்தில் அப்படியே ஒடுங்கிப் போனேன். நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை பள்ளியில் என் பெயர் அதுவே. நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படித்தேன். 10ம் வகுப்போடு ரமேஷ் பள்ளி வருவதை நிப்பாட்டி விட்டான். இந்த சம்பவத்தின் பிறகு கோயில் போவதையும் விட்டு விட்டேன்.

நான் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, மிகவும் பிரபலமான கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.
கல்லூரி முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை. அப்பா, அம்மாவுக்கு பெரிய வீடு என்று நிறைய வசதிகள் செய்து கொடுத்தேன்.

பல வருடங்கள் கழித்து ஊருக்குப் போனேன்.
அம்மா சொன்னார், " பிள்ளையார் கோவிலில் திருவிழா. வா போய் வரலாம்."
அம்மா கேட்டதும் மறுக்க முடியாமல் சென்றேன்.
அம்மா கோயிலின் உள்ளே சென்று விட நான் பலூன் விற்பவரை பார்த்துக் கொண்டு நின்றேன். ஏதோ ஒரு நெருடல் மனதிற்குள்.
பலூன்காரனும் என்னை கூர்ந்து பார்த்துவிட்டு, " நீ....குமார் தானே" என்று கேட்கவும். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஊரை விட்டு போய் பல வருடங்களாகி விட்டது. என் பெயர் இவருக்கு எப்படி தெரியும்.
கூர்ந்து பார்த்தேன். அது ரமேஷே தான்.
இவன் இங்கு எப்படி? இவனின் கார், பங்களா என்ன ஆச்சு?. ஏனோ அவனில் இருந்த கோபம் காணாமல் போனது.
வீட்டிற்கு வருமாறு அழைத்தான். தட்ட முடியாமல் போனேன். ஓலை வீட்டில் இருந்தான். மனைவி, 2 பிள்ளைகள்.
அவன் அம்மா, அப்பாவின் எதிர்பாராத மரணத்தால் அவன் வாழ்வே நிலைகுலைந்து போய் விட்டதை சொன்னான். கார், பங்களா எல்லாமே உறவினர்கள் அபகரித்துக் கொண்டு இவனையும் நடுத்தெருவில் விட்டுவிட்டார்களாம்.

நான் புறப்படும் நேரம் வந்தது. என்னை நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். வெளியே வரும்போது கையில் ஒரு பொட்டலம். என் கையில் திணித்தான். உள்ளே எனது வேஷ்டி. நான் ரமேஷை நிமிர்ந்து பார்த்தேன். அவன் கண்கள் கலங்கி இருந்தன. என்னை மன்னிப்பாயா என்பது போல இருந்தது அவன் பார்வை. நான் உன்னை எப்போதோ மன்னித்து விட்டேன் என்று கூறி விட்டு நடந்தேன். என் கண்கள் இப்போது குளமாகியது.

9 comments:

 1. அடேங்கப்பா..ரெண்டு நாள் கழிச்சு வந்து பாக்கரதுக்குள்ளே கதை கதையா நிறைய சொல்லிட்டீங்களே வானதி? வேஷ்டி கதை நல்லா இருக்கு..கலக்குங்க!

  ReplyDelete
 2. இப்போ உண்மையாகவே என் கண்கள் குளமாக இருக்கு வாணி. மனசைத் தொடுற மாதிரி எழுதுறீங்கள். தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 3. மகி, நன்றி.
  இமா, ஆதரவுக்கு நன்றி.

  ReplyDelete
 4. வானு,
  கதையில் கலக்கறீங்க! ரொம்ப நல்லா இருக்கு!

  ReplyDelete
 5. வானதி.. கதை நல்லாயிருக்கு.. மகனுக்கு சொல்றதுக்காக எழுதினீங்களோ? நாங்களெல்லாம் வளர்ந்துட்டோம் :)))

  ReplyDelete
 6. செல்வி அக்கா, . ஊக்கமளிப்பதற்கு நன்றி.

  ReplyDelete
 7. சந்தனா,
  //மகனுக்கு சொல்றதுக்காக எழுதினீங்களோ? நாங்களெல்லாம் வளர்ந்துட்டோம் :)))//
  என்ன சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை?????

  ReplyDelete
 8. ஆணி.... மன்னிக்கவும் வாணி... சூப்பராக கற்பனை பண்ணுறீங்கள்.... நல்லாவே எழுதுறீங்கள் எழுதுங்கோ... எனக்கும் கதை எழுதுவதென்றால் நல்ல விருப்பம், ஆனால் நேரம் கிடைப்பதில்லை. அடுத்தவர்களுக்கு பிடிக்குமோ என்ற பயமும் கூடவே வந்துவிடும்.

  டேஏஏஏஏஏஏலியா அடக்கிவாசிப்பதை அதிரா ஓபி..ன்ன்ன்ன்னாஆஆஆஅக...

  கிட்ட வந்த உருவம் என் வேஷ்டியை உருவிக் கொண்டு ஓடி விட்டது. நான் கோவணத்துடன் நிற்கிறேன்/////இந்தக்காலத்திலயுமோ??... கடவுளே என்னால முடியேல்லையே...... அதி..எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 9. அதிரா, நன்றி. எனக்கும் கதை எழுத விருப்பம்.
  இந்தக் கதை நடப்பது கலியுகத்தில் அல்ல. ஊரில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தையே என் கதையில் எழுதினேன். விலையுயர்ந்த உள்ளாடைகள் வாங்க முடியாத குடும்ப சூழல்.
  50, 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அது தான் அப்படிக் கற்பனை செய்து எழுதினேன்.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!