Thursday, April 28, 2011

சின்னவாளியின் சாபம்

இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா? போன மாசம் மரகதம் மகன் சேகர் வெள்ளையும் சொள்ளையுமா இன்டர்வியூக்கு கிளம்பி சென்றான். இந்த சின்னவாளிக் கிழவி செய்த அளும்பினால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அதே போல இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாக்கியம் மகள் மேகலாக்கு திருமணம் கூடி வந்திச்சு. ஆனா இந்த கிழவி அதையும் கெடுத்து விட்டா. நாளைக்கு நம்ம மகன் 10 ம் வகுப்பு சோதனை எழுதப் போறான். என்ன நடக்குமோ? என்று கண்ணம்மா கவலையுடன் கணவரிடம் புகார் சொன்னார்.
உன் மகன் முதல்ல படிச்சு இருக்கிறானா என்று பார். அதை விட்டுப் போட்டு கிழவியின் மீது பழி சொல்லாதே. நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்குன்னு சொல்வாங்களே , என்றார் வேலாயுதம்.

உங்களுக்கு எப்பவும் என் பிள்ளை மீது ஓரவஞ்சனை. உங்க வாயில் நல்லதா நாலு வார்த்தை வராது. இதில் கிழவியை போய் திட்டி என்ன ஆகப்போகிறது. எல்லாம் என் தலையெழுத்து, என்று மூக்கை சிந்தினார் கண்ணம்மா.

சரி. அழாதை. நாளைக்கு அந்த கிழவியின் கண்களில் படாமல் கூட்டிச் செல்வது என் பொறுப்பு என்று உரையாடலை முடித்துக் கொண்டார் வேலாயுதம்.

சின்னவாளிக் கிழவி - எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார். அந்த தெருவே அவரை கண்டு நடுங்கியது. அவர் மகனிடம் சென்று புகார் செய்தும் புண்ணியமில்லை.
" இதை வைச்சுகிட்டு நான் படும்பாடு சொல்லி மாளாது. இனிமே யாராவது வாசலில் வந்து நின்று புகார் வாசிங்க அதுக்குப் பிறகு இருக்கு கச்சேரி", என்று உறுமினான் மகன்.

கிழவி திண்ணையில் படுத்துக் கிடந்தது. யாருப்பா நீங்கெல்லாம் என்று கேள்வி கேட்டு, பதில் சொல்லு முன்னர் திரும்ப போர்வை போர்த்திக் கொண்டு படுத்து கொண்டது. ஊரார் வாசலில் நின்று எகிறி விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பேசி, போலீஸில் புகார் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். சில போலீஸ் அதிகாரிகள் கிழவியின் வீட்டுக்கு போனார்கள். போன வேகத்தில் திரும்பியும் விட்டார்கள்.
அந்தக் கிழவி லூஸ் போல இருக்கே. மனநிலை சரியில்லாதவர்கள் மீது கேஸ் போடக் கூடாது என்று சட்டம் பேசி விட்டு சென்றார்கள். போன அதிகாரிகள் மீதும் கிழவி கை நிறைய மண் அள்ளி, ஏதேதோ மந்திரம் சொல்லி, பூ என்று முகத்திற்கு நேராக ஊதியது.
கிழவியின் இந்த பாழாய் போன பழக்கத்தினால் தான் ஊரார் கடுப்பாகி இருந்தார்கள்.
யாராவது நல்ல காரியத்திற்காக கிளம்பி போகும் போது இந்தக் கிழவி கையில் மண் அள்ளி, மந்திரம் சொன்ன பின்னர் அவர்கள் மீது விட்டெறியும். போன காரியம் வெற்றி பெறவில்லை எனில் மக்கள் ஆத்திரம் கொண்டனர். எல்லாம் இந்தக் கிழவியின் சாபம் என்று பேசிக் கொண்டனர். சிலர் கிழவியின் கண்களில் படாமல் அதிகாலையில் எழுந்து, மறைந்து , ஒளிந்து போனார்கள். கிழவி எப்போதும் திண்ணையில் இருந்ததால் அவரின் பார்வையில் இருந்து தப்புவது கடினமாக இருந்தது. யாராவது திட்டினால் இன்னும் ஆவேசத்துடன் மேலும் மண்ணை வாரி இறைக்கும்.

கெஞ்சி பார்த்தார்கள். அன்பாக சொல்லிப் பார்த்தார்கள். கிழவி கேட்டபாடு இல்லை. ஒரு நாள் தெருவில் சிறுவர்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பந்து கிழவி மீது போய் விழுந்தது. படுத்துக் கிடந்த கிழவி ஆவேசமாக எழுந்தது. உக்கிர பார்வை பார்த்தபடி கையில் மண்ணை வாரி எடுத்துக் கொண்டது. சிறுவர்கள் சிலர் ஓட்டம் பிடித்தார்கள். ஒரு பொடியன் மட்டும் தைரியமாக நின்றான். அவனும் கிழவி போலவே கையில் மண் அள்ளிக் கொண்டான். கிழவி செய்தது போலவே செய்து, கிழவியின் மீது விட்டெறிந்தான். கிழவி ஓடிப் போய் திண்ணையில் படுத்துக் கொண்டது. ஓடிப் போன சிறுவர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் கையில் மண்ணை அள்ளி கிழவியின் மீது எறிய, கிழவி வீட்டின் உள்ளே போய் கதவை பூட்டிக் கொண்டது.

இதன் பிறகு கிழவிக்கு காய்ச்சல் பிடித்துக் கொண்டது. அந்தப் பொடியன் தான் ஏதோ செய்வினை செய்து விட்டான் என்று கிழவி அரற்றிக் கொண்டே இருந்தார். இப்பெல்லாம் கிழவி யார் மீதும் மண்ணை வாரி தூற்றுவதில்லை. இப்போதெல்லாம் போன காரியம் வெற்றி பெறவில்லை எனில், தலையெழுத்து, விதி என்று ஊரார் சமாதானப்பட்டுக் கொண்டார்கள்.

Sunday, April 24, 2011

வண்ணத்துப்பூச்சி




இது நான் தைத்த வண்ணத்துப் பூச்சி. தலையணை உறையில் போட்ட டிசைன். இப்ப இதில் படுக்க மனமில்லை. மகி அறிமுகப்படுத்திய மேரி ஆன்டியின் பக்கம் இருந்து வரைந்த பூச்சி இது.
உடலுக்கு சங்கிலித்தையல், ஹெர்ரிங் போன் தையல் போட்டேன். உணர்கொம்புகளுக்கு நரம்புத் தையல் பொருத்தமா இருக்கு.

உடலில் முத்துக்கள் ஒட்டினேன். ஆனால், என் மகள் பிடித்து இழுத்து இழுக்க வந்து விட்டது. அதன் பிறகு நூலினால் தைத்து விட்டேன்.

உறையின் மேல் புறம் சுருக்கு வைத்து தைத்தேன். எப்படி இருக்கு என் தலையணை உறை?