Friday, May 14, 2010

மீண்டும் சாம்பு

ஹாய் ! எல்லோரும் நலமா? அட நான் தான் பரண் சாம்பசிவம். இமா பாட்டி, அதிரா பாட்டி, ஆசியா ஆன்டி, சந்தனா ( இவருக்கு என் வயது தான் இருக்கும் ) , குமார் மாமா, மாவீரன் ஜெய்லானி, மேனகா ஆன்டி, மற்றும் எல்லோரின் ஆசிகளால் நான் நன்றாக நடக்க ஆரம்பித்து விட்டேன். இருங்கள் நடந்து காட்டுகிறேன். எப்படி ஸ்டைலாக நடக்கிறேனா?

நான் நடக்கத்தொடங்கினால் நிறைய கதவுகள் திறக்கும் என்று எண்ணினேன். ஆனால், அம்மா எல்லாக் கதவையும் பூட்டுகள் போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள். அதோ அங்கே பாருங்கள் ஒரு கூடை தெரியுதா? கிட்ட வந்து பாருங்கள்.

வெங்காயம். அட நான் உங்களை சொல்லவில்லை. கூடையில் இருப்பதைச் சொன்னேன். இந்த வெங்காயங்களை நோண்டுவதிலேயே என் பொழுது போய் விடும். அரிசி, பருப்பு என்று பிற பொருட்களை எல்லாம் அம்மா அந்த கப்போர்டில் வைத்து பூட்டுப் போட்டிருக்கிறார் பாருங்கள்.

கிருஷ்ணா இந்த பூட்டுக்களை எல்லாம் லாவகமாக திறந்து விடுவான். போன வாரம் வந்த போது அவனுக்கு உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்து கட்டாயம் உதவி செய்வதாக வாக்கு கொடுத்து இருக்கிறான்.

இன்று கிருஷ்ணா வந்து சமையல் அறை கப்போர்ட் எப்படி திறப்பது என்று விளக்கமாக சொல்லிக் கொடுத்தான். என்னையும் நன்றாக ப்ராக்டீஸ் பண்ணச் சொன்னான். நல்ல பொறுமை அவனுக்கு.

நீ எதில் வேண்டும் என்றாலும் தலையை, கையை விடலாம். ஆனால் இந்த மின்சார விடயத்தில் மட்டும் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று சொன்னான். ப்ளக் சொருகி டி.வி, பாட்டு என்று பிற வேலைகள் எல்லாம் செய்ய உதவும் மின்சாரம் வரும் இடத்தினையும் காட்டினான். நீண்ட நாட்களின் முன்பு அவன் அம்மா அசந்த நேரம் அதில் ஆணியோ ஏதோ ஒரு பொருளை உள்ளே விட்டு, பெரிய அசம்பாவிதம் நடக்க முன்பு மயிரிழையில் தப்பிய கதையும் சொன்னான்.

மதியம் அம்மா அசந்த நேரம் பார்த்து பூட்டை திறந்து விட்டேன். விதம் விதமாக அரிசி, பருப்பு வகைகள். இரண்டு பெரிய டப்பாக்களில் இருந்த அரிசிகளை எடுத்து, வேறு அரிசி இருந்த டப்பாவில் போட்டேன். பருப்பு வகைகளை கலக்கும் முன் அம்மா வந்து விட்டார். அவர் கண்களில் தெரிந்த அதிர்ச்சி, கோபம் ஆகியவற்றை பார்த்து பயந்து போனேன். அம்மா தூக்கிக் கொண்டு போய் என்னை தொட்டிலின் உள்ளே விட்டார்கள். இந்த தொட்டிலில் இருந்து கீழே இறங்குவது பெரிய மேட்டரே கிடையாது. அம்மாவின் கோபம் ஆறும் வரை இங்கேயே இருப்பது பாதுகாப்பு.

மாலை அப்பா வந்த பின்பும் அம்மாவின் புலம்பல் ஓயவேயில்லை. " இன்று உங்கள் மகன் செய்த காரியத்தைப் பாருங்கள். பொன்னி அரிசி, இட்லி அரிசி, பாஸ்மதி அரிசி என்று எல்லா அரிசி வகைகளையும் ஒன்றாக கலந்து விட்டான். " என்றார்.

என்னது? அரிசியில் இவ்வளவு வகைகளா? எனக்கு எப்படித் தெரியும். எல்லாமே ஒரே நிறத்தில் தானே இருந்திச்சு.

அப்பா எப்போதும் என் பக்கம் தான். " சாம்பு கலந்த அரிசியை வைத்து சோறாக்கி சாப்பிடுவோம்", என்றார். அம்மாவின் பார்வையின் வெப்பம் தாங்காமல் என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே போனார் அப்பா. ம்ம்ம்.... நல்ல அப்பா.

நான் தவழத் தொடங்கிய போது கிருஷ்ணா நடந்தான். நான் நடந்து பழகிய போது அவன் வேகமாக ஓடத் தொடங்கி விட்டான். இப்படி அவன் என்னை விட எல்லாவற்றிலும் வேகமாகவே இருந்தான்.உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். கிருஷ்ணா என்னை விட 9 மாதங்கள் பெரியவன். அவன் பிறந்தநாள் ஜனவரியில் என் பிறந்தநாள் அக்டோபரில். எப்படி சரியா கணக்குப் பார்த்து சொல்லிவிட்டேனா?.

இவனால் நான் மிகுந்த கஷ்டப்பட்டேன். சாப்பிட்டு விட்டு சிவனே என்று படுத்திருக்க முடியாது.

அம்மா என்னை ஓடி விளையாட பார்க் கூட்டிக் கொண்டு போய் விடுவார். இப்போது கூட தூக்கம் சொக்குது. ஆனால் படுக்க முடியவில்லை. அம்மா வீசியெறியும் பந்தைப் பிடிக்க வேண்டும்.

நீங்கள் எல்லோரும் கதை கேட்டது போதும் வந்து இந்த பந்தைப் பிடித்து உதவி செய்யுங்கள். இந்த பெருத்த தொப்பையுடன் ஓடவே மூச்சு வாங்குது. ஹலோ! என்ன இது ? யாரையுமே காணவில்லை. உதவி என்று கேட்டது ஓடி விட்டீர்களா? என்ன விசித்திரமான உலகமடா இது.

Thursday, May 13, 2010

அறுசுவையில் என் கதை.

மிகவும் சந்தோஷமாக இருக்கு. என் கதை அறுசுவையில் வெளிவந்துள்ளது. என் கதைகளை படித்து மிகவும் ஊக்கம் கொடுக்கும் அன்பிற்குரிய இமா, கிறிஸ் அண்ணாச்சி, ஆசியா அக்கா, சந்தனா, அதிரா, ஜெய்லானி, நாடோடி, சே. குமார், மேனகா, கீதா ஆச்சல், மதுமிதா, ஆனந்தி, அப்பாவி தங்கமணி, ஜெயா, எல்கே, மனோ அக்கா, ஜலீலா அக்கா, என் தங்கை, என் கணவர், செல்வி அக்கா, மகி எல்லோருக்கும் எனது நன்றிகள். யார் பெயராவது விடுபட்டால் தவறாக நினைக்க வேண்டாம்.

இந்த லிங்க் போய் பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை அங்கே சொல்லுங்கள்.


http://www.arusuvai.com/tamil/node/14959#comment-95599

நன்றி.

அன்புடன்
வானதி ( வாணி )

Monday, May 10, 2010

முற்பகல் செய்யின்..

என் பெயர் சுதாகர். வெளிநாடு வந்து 5 வருடங்களாகி விட்டது. அம்மா, அப்பா, தங்கை மூவரும் ஊரில். ஊரில் இருக்கும் போது நான் எவ்வளவு அட்டகாசம் பண்ணினேன். நாட்டில் நிலவிய போர்ச் சூழலினால் அப்பா என்னை மட்டும் வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டார். வெளிநாடு வந்த பின்னர் தான் உறவுகளின் அருமை விளங்குது. அம்மாவின் பரிவான வார்த்தைகள், அப்பாவின் கண்டிப்பு கலந்த அன்பு இப்படி நிறைய இழந்துவிட்டேன். வெளிநாட்டில் பனியிலும், குளிரிலும் நடுங்கும் போது ஊருக்கு போய் விடமாட்டோமா என்று மனம் ஏங்கும்.

எல்லாவற்றினும் மேலாக மைதிலி - என் அன்புத் தங்கை. இப்போது எப்படி வளர்ந்திருப்பாள். போனில் பேசுவதே வருடத்துக்கு ஒரு முறை தான். ஒன்றாக ஊரில் இருக்கும் போது நாயும் பூனையும் போல சண்டை போடுவோம். நான் அவளுக்கு செய்த கொடுமைகள் ஒன்றா ? இரண்டா?

மைதிலி : அம்மா, இங்கே வந்து பாருங்களேன் இந்த லூசு பண்ணிய காரியத்தை.
அம்மா : என்ன ? ஆரம்பித்து விட்டீர்களா? நாட்டாமை வேலை செய்து எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.
மைதிலி : பென்ஸில், பேனா வைக்கும் பாக்ஸில் வெங்காயத்தை நிரப்பி வைச்சுட்டான். தோழிகளின் முன் இதை திறந்து நான் பட்ட அவமானம்.
சுதாகர் : ஐயே.. நீதானே இன்று ஹோம் சயன்ஸ் கிளாஸில் வெங்காயம் உரிப்பது எப்படி என்று செய்முறை விளக்கம் இருப்பதாக சொன்னாயே?
மைதிலி : போடா லூசு.

***********
மைதிலி : அண்ணா, போகும் போது என்னையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போக முடியுமா?
சுதாகர் : ஏன் மகாராணி நடக்க மாட்டீங்களோ.
அப்பா : சுதாகர், போற வழிதானேப்பா மைதிலியை இறக்கி விடு. என்ன சரியா?
சுதாகர் : சரி வந்து தொலை.
( 5 நிமிட பயணத்தின் பின் )
ம்ம்... சவாரி போதும் இறங்கி நட.

மைதிலி: ஆனால், நான் போக வேண்டிய இடம் இன்னும் வரவில்லையே?
சுதாகர் : அது தெரியுமே. ஓசி சவாரி என்றால் போதுமே. இறங்கடி.
மைதிலி வாடிய முகத்துடன் இறங்கி நின்று கொண்டது இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.

*************

நான் என் ந ண்பனிடம் அடிக்கடி புத்தகங்கள் இரவல் வாங்கி படிப்பேன். ஆனால் மைதிலிக்கு குடுக்க மாட்டேன். அவள் கேட்டால் நான் பண்ணும் அலப்பறையை பார்த்தால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.

சுதாகர் : என்ன புக்ஸ் வேணுமா?
மைதிலி : ம்
சுதாகர் : சரி தாரேன். முதலில் போய் ஒரு டீ கொண்டு வா. பிறகு என் ஆடைகளை அயர்ன் பண்ணு சரியா?
மைதிலி : எனக்கு புக்ஸ் வேண்டாம். நீயே வைத்துக் கொள்.
சுதாகர் : அப்ப போ. என் முன்னே நிற்காதே.
நான் வெளியே போனதும் மைதிலி புத்தகத்தை எடுத்து திருட்டுத்தனமாக படித்திருக்கிறாள். புத்தகத்தின் அட்டையின் ஓரத்தில் மெதுவாக கிழிபட்டிருந்தது. எனக்கு ஆத்திரம் வந்தது. அவளைக் கூப்பிட்டு கன்னத்தில் ஒரு அறை விட்டேன். என்னை முறைத்துப் பார்த்து விட்டு சொன்னாள், " இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து உனக்கு கிடைக்கும்."

" ஆகா ! பெரிய விசுவாமித்ரை சொல்லிப் போட்டா நடந்திடும் ", என்று அவளை நக்கல் அடித்தேன். மைதிலி அழுது கொண்டே ஓடிவிட்டாள். என்னோடு பேசுவதையும் அறவே நிறுத்திவிட்டாள். நானும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதன் பின்னர் நானும் வெளிநாடு வந்துவிட்டேன். முட்டி மோதி பள்ளிப் படிப்பை முடித்து, இப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா வேண்டாம் என்று மறுத்த போதும் பார்ட் டைம் வேலை பார்க்கிறேன். ஊருக்கு பணம் அனுப்ப மற்றும் என் செலவுகளுக்கும் பணம் வேண்டுமே.

வெள்ளி, சனிக் கிழமைகளில் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை. நள்ளிரவு 12 மணியளவில் தூக்கம் சொக்கும். கோக், காஃபி என்று எதையாவது உள்ளே தள்ளிக் கொண்டே வேலை பார்ப்பேன்.
ஒரு நாள் அதிகாலை 3 மணி போல இரண்டு தடியன்கள் கடைக்குள் நுழைந்தார்கள். ஒருவன் கையில் கத்தி வைத்திருந்தான். கத்தி வைத்திருந்தவன் பணம் முழுவதையும் தரும்படி மிரட்ட, மற்றவன் என் கன்னத்தில் சப்பென்று அறைந்தான். நான் ஆடிப் போனேன். பணம் முழுவதையும் எடுத்துக் கொடுத்தேன். இருவரும் ஓடி விட்டார்கள். அவன் அடித்தது காதுகளில் இன்னும் ரீங்காரமிட்டது. ஆகா! என் தங்கை விட்ட சாபம் பலித்து விட்டதே. இப்போது என் கண்களில் கண்ணீர். என் தங்கைக்கு எப்படி வலித்திருக்கும் என்றெண்ணி.

என் கண்ணாடி!

என் பெயர் சந்தோஷ். வயது விடலைப் பருவம். என் நண்பர்கள் எல்லோருமே வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள். என் குடும்பமும் ஓரளவுக்கு வசதியானதே. ஆனால், வீட்டில் அனாவசியமாக செலவு பண்ண விடமாட்டார்கள் . என் அப்பா ஒரு டாலர் குடுத்தாலே ஆயிரத்தெட்டு கணக்கு கேட்பார்.

என் நண்பர்கள் எல்லோரும் கூலிங் கிளாஸ் எனப்படும் வெய்யிலுக்கு இதமாக அணியும் கண்ணாடிகள் வைத்திருந்தார்கள். அதை அணிந்து கொண்டு அவர்கள் பண்ணும் அலப்பறை தாங்க முடியாமல் நானும் என் அப்பாவிடம் கேட்டேன். என் அப்பா பொங்கியெழுந்து விட்டார். " துரைக்கு கண்ணாடி கேட்குதோ ? ", என்று திட்டித் தீர்த்து விட்டார்.

அந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு பெரிய ஹீரோக்கள் போல என் நண்பர்கள் நடை போட்டார்கள். பெண்கள் வலிய வந்து பேசினார்கள். என்னை எல்லோரும் ஒதுக்கியது போல உணர்ந்தேன்.

என் அண்ணா படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறான். அவனோடு ஒப்பிடுகையில் என் அப்பாவே பரவாயில்லை ரகம். என் அண்ணன் படு கஞ்சன். அவனிடம் ஒரு கூலிங் கிளாஸ் இருக்கு. ஆனால் கேட்டால் தரவே மாட்டான். வாங்கிய புதிதில் ஸ்டைலாக மாட்டித் திரிந்தவன் இப்போது கழட்டி அலமாரியில் வைத்திருக்கிறான்.

ஒரு நாள் அண்ணன் அசந்த நேரம் கண்னாடியை சுட்டு விட்டேன். கண்ணாடியை பையில் வைக்கும் போது கண்டு பிடித்து விட்டான். நான் நடுக்கத்தோடு அவனைப் பார்க்க, அவன் சொன்னான், " இனிமேல் நீயே இந்தக் கண்ணாடியை வைத்துக் கொள் ." அவன் திடீர் தியாகி ஆகிய ரகசியம் எனக்கு விளங்கவில்லை. நான் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் அதியமானிடம் நெல்லிக் கனி பெற்ற ஔவையார் போல அக மகிழ்ந்து போனேன்.

நண்பர்களுக்கு என் கண்ணாடியை அணிந்து காட்டினேன். அவர்கள் என்னை டாம் குரூஸ் போல இருப்பதாக சொன்னதும் மகிழ்ந்து போனேன்.

அந்நேரம் பார்த்து வழக்கமாக வரும் டீன் ஏஜ் பெண்கள் கூட்டம் வர, நான் கண்ணாடியை அணிந்து கொண்டு ஸ்டைலாக முன்னுக்கு போய் நின்றேன்.
அப்போது டப் என்று ஏதோ ஒரு சத்தம் என் கண்ணாடியிலிருந்து வந்தது. என் வலது பக்க கண்ணாடித் துண்டு ஃப்ரேமிலிருந்து தெறித்து தூரப்போய் விழுந்தது. கடற்கொள்ளையன் போல ஒற்றைக் கண்ணில் மட்டும் கண்ணாடியுடன் பரிதாபமாக நின்றேன்.

பெண்கள் கூட்டம் ஹோவென்று சிரிக்க, என் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

என் அண்ணன் திடீர் தியாகி ஆக மாறி என்னைக் கோமாளி ஆக்கி விட்டான். இனிமேல் ஓசி கண்ணாடிக்கு அலையக் கூடாது என்று சபதமே எடுத்து விட்டேன்.