Friday, July 2, 2010

விருது!

எனக்கு ஜெய் தந்த விருது. மிக்க நன்றி, ஜெய்.


என் கேள்விக்கு என்ன பதில்!!!



ஜெய் : டைகர் அண்ணாச்சி, எழுந்திரு?

டைகர் : ம்ம்...( ஆரம்பிச்சிட்டான் ) என்ன வேணும் ?

ஜெய் : டைகர், அது வந்து கடுகு ஏன் உருண்டையா இருக்கு? எண்ணெயில் போட்டா ஏன் வெடிக்குது?....

டைகர் : முதல்ல காலை எழுந்ததும் பல் விளக்ககோணும் என்று எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.

ஜெய் : சரி. நீ இங்கேயே இரு. ஒரு நொடியிலை வந்திடுவேன்.

டைகர் : நீ மெதுவா வா. ( அதற்குள் எங்கையாவது எஸ்கேப் ஆயிடுவேன். )

ஜெய் : ஆகா! எனக்கு உன்னைத் தெரியாதா? இரு உன்னை இந்த கட்டில் காலோடு கட்டிப் போடுறேன்.

டைகர் : ( மனதினுள் ) விவரமான பொடியன் தான்.

ஜெய் : சரி. இப்ப சொல்லு டைகர்?

டைகர் : அதுவா! தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை வந்தபோது இந்த கடுகினை தான் ஆயுதமாக பாவித்தார்களாம். ஒரு பாட்டி இப்படி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொடுக்க, தேவர்கள் அதை கொதிக்கும் எண்ணெயில் போட்டு அசுரர்கள் மீது கொட்டினார்களாம்.

ஜெய் : தேவர்கள் என்றால் யார்?

டைகர் : குட் ஹைஸ் அதாவது நல்ல பசங்க.

ஜெய் : அப்ப அசுரர்கள் கெட்ட பசங்களா, ஜெய் ?
அப்ப இந்த கடுகினை உருண்டைகளாக உருட்டியது அந்த பாட்டிதானா? ஏன் வெடிக்குது?


டைகர் : அதுவா. தண்ணீர் சேர்த்து உருட்டி இருப்பாங்க அதான்.

ஜெய் : பூசனிக்காயும் அப்படி தானே வந்திச்சு, டைகர்?

டைகர் : ம்ம்..

ஜெய் : அப்ப அவங்க ஏன் புடலங்காயை உருட்டவில்லை?

டைகர் : ( மனதினுள் ) ஐயோ! இவன் தொல்லை தாங்க முடியலை. ஒரு நாள் அழுதிட்டு இருந்தான். ஏன் ராசா அழுவுறே என்று கேட்டேன். அன்றிலிருந்து ஆரம்பமாச்சு இவன் தொல்லை.


ஜெய் : டைகர், நீ சரியான லூசு. உனக்கு எதுவுமே தெரியாது.

டைகர் : ம்ம்.. நீ சொன்னா சரி தான்.

ஜெய் : நிலக்கடலை நிலத்தின் கீழே தானே வளருது...

டைகர் : ஆமாப்பா.

ஜெய் : அதை நிலக்கிழங்கு என்று சொல்லலாமே? ஏன் கடலை என்று பெயர் வந்திச்சு?

டைகர் : கொர்ர்ர்ர்ர்ர்......

ஜெய் : டைகர், என்ன தூங்கிட்டியா?

ஜெய் : இவனுக்கு எப்ப பாரு தூக்கம். இதில் இந்த 'இட்லி' தங்கமணி, பேபி அதிரா இருவரும் சில கேள்விகள் கேட்டிருந்தார்கள். டைகரிடம் தான் கேட்க வேண்டும்.
டைகர், எழும்பு! தூக்கம் போதும்.

அந்த நேரம் போன் அலறுகிறது.

ஜெய் : யாருப்பா அது? ஓ ப்ளாக் எழுதப் போறீங்களா? எடிட் html ஐ க்ளிக் பண்ணி, காப்பி பண்ணி, வேறு எங்கையாவது பத்திரமா வைச்சுக்கோ என்ன? கம்யூட்டரில் ஏதாவது சந்தேகம் இருந்தா என்னைக் கேளு சரியா? வரட்டா.

டைகர் : ( மனதினுள் ) இதெல்லாம் நல்லா சொல்றான். ஆனால் என்னைக் கண்டால் மட்டும் குண்டக்க மண்டக்காவா பேசுறான்.

ஜெய் : டைகர், தங்கமணிக்கு ஏன் இட்லி சரியாவே வரமாட்டேன் என்கிறது? இமாவின் காமரா ஏன் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு? அதிரா ஏன் எப்போது பூனை மாதிரி கத்துறாங்க? எல்கே எப்படி சூறாவளி போல சுழன்று சுழன்று பின்னூட்டம் போடுகின்றார்? சந்தனா, அதிரா, இமா மூவரும் ஏன் ஏட்டிக்கு போட்டியா பதிவுகள் போடுறாங்க??? ஏன் ஏன் ஏன் ??

அடுத்த நாள் காலை.

ஜெய் : டைகர், இங்கே வா? மணி 8 ஆச்சு டைகரை காணவில்லை. இங்கே ஒரு கடிதம் இருக்கே .

" என்னை யாரும் தேடி வர வேண்டாம். வந்தால் கடிச்சு குதறிடுவேன். சாக்கிரதை - இப்படிக்கு டைகர்.


ஜெய் : பாவம் டைகர். என்னாச்சு இவனுக்கு? நேற்றுக் கூட நல்லா பேசிட்டு இருந்தானே. என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலே பூட்டானே. பாவிப் பயல்.

டைகர்: ( மனதினுள் ) அப்பாடா! இப்ப தான் நிம்மதியா இருக்கு. இப்படி ஆள்மாறாட்டம் பண்ணியதால் தான் தப்பிச்சேன். இல்லாவிட்டால் என் கதி அதோ கதி தான்.


( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! )

Tuesday, June 29, 2010

அன்பளிப்பு!



நான் போன மாசம் அன்பளிப்பு என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த அன்பளிப்பை நான் யாருக்கு கொடுக்க போகிறேன் என்ற விபரம் மட்டும் சொல்லவில்லை. அந்த அன்பளிப்பை பெற்றுக் கொண்ட நபர் திருமதி. லீசா டிக்கர்ஸன். என் மகனின் ஆசிரியை.

அந்த அன்பளிப்பை நான் நடுங்கிக் கொண்டே என் மகனிடம் குடுத்து விட்டேன். என்ன சொல்வாரோ என்ற தயக்கமே காரணம். மகன் பள்ளி சென்ற பின் ஒரே தவிப்பு. சே! சும்மா இருந்து தொலைத்து இருக்கலாம். சொந்த செலவில் ஏன் சூனியம் வைத்தாய் என்று என் மைன்ட் வாய்ஸ் ( நன்றி: தங்ஸ் ) கடுப்படித்தபடி.

பள்ளி விடும் நேரம் போய் தூரத்தில் நின்று கொண்டு என் மகனை வரும்படி கை காட்டினேன். வழக்கமாக பக்கத்தில் போய் கூப்பிடுவேன். திருமதி. லீசா என்னைக் கண்டு விட்டார். ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டார். எனக்கு சந்தோஷத்தில் பேச வார்த்தைகள் வரவில்லை. ஏதோ உளறிக் கொட்டினேன்.

என் மகனிடம் நன்றி சொல்லி ஒரு வாழ்த்து அட்டை கொடுத்து விட்டார். அதை கவனமாக வைத்திருக்கிறேன். அதை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.





நிறைய நாட்கள் செலவு செய்து செய்த அன்பளிப்பை அவரின் வீட்டு சுவரில் மாட்டியிருப்பதாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.


நான் எழுதிய வாழ்த்து அட்டை.

ஏற்றிவிட்ட ஏணிகள் - ஆசிரியர்கள்.

In our language, teachers are called ladders. Because, we climb and go up and up. One day, the kids would be doctors, engineers or, even Presidents. But, the ladder is still there waiting for more kids to achieve their goals. My son was like a clay and you have molded him into a beautiful person.

We would like to Thank You for every thing you have done.

With love

*********

Monday, June 28, 2010

பொறுத்தது போதும்!

எங்கள் மக்களுக்கு சுட்டுப்போட்டாலும் இங்கிதம் வரவே வராது என்பது சரவணாவின் கருத்து. உள்நாட்டில் எப்படியோ இருந்து தொலையுங்கள், ஆனால் வெளிநாடு வந்த பின்னராவது சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது என்று அங்கலாய்ப்பான்.

மனைவி இந்தியன் கடைக்குப் போக வேண்டும் என்று சொன்னாலே கடுப்பாகி விடுவான். அங்கு வருபவர்கள் பெரும்பாலனவர்கள் ஏதோ கடமைக்கு வாழ்பவர்கள் போலத் தோன்றும். முகத்தில் சிரிப்போ, சந்தோஷமோ கடுகளவும் இருக்காது. மெல்ல புன்னகைத்தால் எங்கே இவன் என் தலையில் மிளகாய் அரைத்து விடுவானோ என்பது போல ஒதுங்கிப் போவார்கள். கதவைத் திறந்து உள்ளே போக எத்தனித்தால் கூடவே கும்பலாக முண்டியத்துக் கொண்டு நுழைவார்கள். நன்றி சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது பெரிய முட்டாள்தனம் என்பான்.

கடைகாரர் அதைவிட மோசம். ஹிந்தியில் பேசியே கொல்வார். ஹிந்தி தெரியாது என்று சொன்னாலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஒரு அசட்டுச் சிரிப்புடன் விளங்குறாப் போல தலையை ஆட்டி வைப்பான். அதை விடக் கொடுமை கஸ்டமர்கள் இருக்கும் போது வேறு யாருடனாவது போனில் அரட்டை நடக்கும். ஏதாவது கேள்வி கேட்டாலும் மையமாக தலையசைத்து வைப்பார்கள். சரவணாவுக்கு ஆத்திரமாக வரும். வாங்கிய பொருட்களை எல்லாம் அந்தாள் தலையில் கொட்டி விட வேண்டும் போல கோபம் வரும். மனைவி சிரிப்பாள். யார் எப்படி இருந்தா உனக்கென்ன ஆச்சு என்பாள்.

இதெல்லாவற்றையும் விடக் கொடுமை நம்ம ஆட்கள் செல் போனில் பேசுவது என்பான். பக்கத்தில் யார் நின்றாலும் கவலைப்படாமல் பெரிய பிரசங்கமே நடக்கும். போன வாரம் ரெஸ்டாரன்ட் போன போது ஒரு ஆசாமி செல்போனில் பண்ணிய அலப்பறை பார்த்து நொந்து போனான். செல்போனை பிடுங்கி கொதிக்கும் சாம்பாரில் எறிய வேண்டும் போல வெறி உண்டானது.

சரவணா இப்படி கோபத்தை எல்லாம் அடக்கி வைத்து, ஒரு நாள் பொங்கியெழுந்து விட்டான். வடமெரிக்காவின் பெரும் பகுதிகளில் மின் தடங்கல் ஏற்பட்டது. பஸ், புகையிரதம் என்று எதுவுமே இயங்கவில்லை. கார்களுக்கு எரிபொருள் போட முடியாமல் மக்கள் பரிதவித்துப் போனார்கள். பெட்ரோல் போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். சரவணாவும் போய் மணிக்கணக்கில் காத்திருந்தான். அப்போது ஒரு கார் கிடைத்த இடைவெளியில் நுழைந்து கொண்டது. மணிக்கணக்கில் காத்திருந்த பலரும் முகம் சுழித்து, முணுமுணுத்தார்களே ஒழிய யாரும் இடத்தை விட்டு நகரவேயில்லை.

சரவணாக்கு மற்றவர்களைப் போல பார்த்துக் கொண்டிருக்க பொறுக்கவில்லை. மதியம் சாப்பிடாத எரிச்சலும் சேர்ந்து கொண்டது. இறங்கி விறு விறுவென நடந்து போனான். அந்த நபர் சரவணாவைக் கண்டதும், " வாங்க அண்ணா, நலமா? " என்றான் தமிழில்.

" என்ன ஓய், நீர் இப்பதான் மரத்திலிருந்து இறங்கி வந்தீராக்கும். உம்ம தலையில் என்ன களிமண்ணா? இவ்வளவு பேரும் காத்திருப்பது உம்ம கண்ணில் விழவேயில்லையா? ? ", காச்சு மூச்சென்று கத்திய சரவணாவை பார்த்ததும் அந்த நபர் காரை திருப்பிக் கொண்டு ஓடிவிட்டான். வெற்றிச் சிரிப்புடன் சிங்கநடை போட்டு வந்த சரவணாவை அங்கு நின்றவர்கள் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். " டேய் நீ சிங்கம்டா ", என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான். ஏதோ சாதித்த திருப்தி உண்டானது.