Wednesday, May 4, 2011

அன்பளிப்புகள் பற்றி...

மற்றவர்களுக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுப்பது என்பது சிலருக்கு கடுப்பாகவும், சிலருக்கு மகிழ்ச்சியாகவும், சிலருக்கு போனா போகுது என்று பல விதமான உணர்ச்சிகள் ஏற்படுவதுண்டு.

உனக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறீங்களா? அன்பளிப்புகள் வாங்கும் போது ஏற்படும் எக்ஸைட்மென்ட் கொடுக்கும் போது ஏற்படுவதில்லை என்பதே உண்மை. முதல் கவலை, அன்பளிப்பு வாங்குபவருக்கு அது பிடித்திருக்க வேண்டும் என்பதே பெரிய கவலை. கடைசிக் கவலையும் அதே தான்.
சிலர் அன்பளிப்பு என்ற பெயரில் மட்டமான பொருட்களையும் தலையில் கட்டி விடுவார்கள். சிலர் விலைமதிக்க முடியாத பொருளைத் தந்து திக்குமுக்காடச் செய்வார்கள். சிலரின் அன்பான விசாரிப்புகளே அன்பளிப்புகளை விட இனிமையாக இருக்கும்.

நான் கனடாவில் இருந்தபோது யாரோ அன்பளிப்பாக கொடுத்த ஒரு மணிக்கூடு, அதை மணிக்கூடு என்று சொல்வதை விட மண்கூடு என்று சொல்லலாம். மண் ( களி மண்ணா அல்லது வேறு மண்ணா தெரியவில்லை ) கொண்டு செய்யப்பட்ட மணிக்கூடு. இரண்டு கரடிகள் குந்திக் கொண்டிருந்தன அந்த மணிக்கூண்டில். தொட்டால் கையில் மண் அப்பிக் கொண்டது. என் சகோதரன் அப்போது தான் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார். ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல ஒரு சவுன்ட் சிஸ்டம் புதிதாக வாங்கியிருந்தார். நான் மண்கூண்டினை அவரின் ஸ்பீக்கர் செட்டில் வைச்சு அழகு பார்த்தேன். வேலையால் வந்து, அவரின் ஸ்பீக்கர் பெட்டிக்கு நடந்த கொடுமையை பார்த்ததும் பொங்கி விட்டார் என் சகோ. இந்த வீட்டில் நீ இருக்கணும். இல்லை இந்த மண்கூடு இருக்கணும். நீயே முடிவு செய்து கொள், என்று கண்டிப்பா சொல்லிவிட்டார்.

அதன் பிறகு அந்த மண்கூண்டினை பால்கனிக்கு இடம் மாற்றி விட்டேன். வெய்யில், மழை, பனி எல்லாத்தையும் தாங்கி, தாங்கி சிறிது சிறிதாக நொருங்கிப் போனது மண்கூண்டு. ஒரு நாள் சிறிது மண் குன்று மட்டும் மிஞ்சி இருந்தது.

அமெரிக்கா வந்த புதிதில் ஒரு பெண்மணி வீட்டுக்குப் போனோம். அவருக்கு நண்டும் சிண்டுமாக இரண்டோ, மூன்று குழந்தைகள் இருந்த ஞாபகம். நாங்கள் கொண்டு போன அன்பளிப்பை வேண்டா வெறுப்பா வாங்கி, அந்தப் பக்கம் தூக்கிப் போட்டார் அந்தப் பெண்மணி. நாங்கள் கொண்டு போன பொருள் மட்டமான பொருள் கூட இல்லை.

வேறு ஒருவருக்கு ஒரு மணிக்கூடு வாங்கி குடுத்தோம். ஒரு நாள் அவரின் வீட்டுக்கு போன போது, அந்த மணிக்கூட்டினை மேசையில் அழகா வைத்திருப்பதை பெருமையுடன் காட்டினார். விருந்தினர் அறையில் வைத்திருந்தார் எங்கள் அன்பளிப்பினை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சில மாதங்களின் முன்னர் இந்தியன் கடை வாசலில் காத்திருந்த போது ஒரு வட இந்தியப் பெண்மணி வந்தார். சில நொடிகளில் பேசவும் ஆரம்பித்துவிட்டார். கைகளில் ஏதோ ஒரு பொதி வைத்திருந்தார். அதை திறந்து ஒரு ஆடையினை வெளியில் எடுத்தார். அது ஒரு பேன்ட்( pant ). லேசான ப்ரௌன் நிறத்தில் இருந்தது. இது நல்லா இருக்கா என்று தூக்கிப் பிடித்துக் கேட்டார். அந்த ஆடையின் ஊடாக அடுத்த பக்கம் நின்றவர்கள், போனவர்கள், வந்தவர்கள், இப்படி எல்லாமே தெரிந்தது. அவ்வளவு மெல்லிய துணியில் தைத்திருந்தார்கள். இது உங்களுக்கு வாங்கியதா, என்று தயங்கியபடி கேட்டேன்.
சேச்சே! நான் இதெல்லாம் போட மாட்டேன். என் சொந்தக்கார பயலுங்க இந்தியாவில் இருக்கிறானுங்க அவனுங்களுக்குத் தான் வாங்கினேன், என்றார்.

பக்கத்தில் நின்ற நபர் சிரிப்பை அடக்க கஷ்டப்பட்டார். நான் பதில் சொல்லாமல் தயங்கி நின்றேன்.
இதுக்கு எவ்வளவு பணம் செலவு செய்தேன் என்று சொல்லு பார்க்கலாம் என்றார். 2 டாலர்களுக்கு வாங்கினேன். நல்ல பார்கெயின் ( bargain ) இல்லை என்று சிரித்தார்.
இப்படிக் குடுப்பதை விட குடுக்காமல் இருப்பதே மேல் அல்லவா?

அமெரிக்கர்களுக்கு ஏதாவது அன்பளிப்பா குடுத்தால் உடனேயே பார்சலை பிரித்து, பொருளை வெளியில் எடுத்து நன்றி சொல்வார்கள். பிறகு நன்றி சொல்லி ஒரு கார்டும் அனுப்புவார்கள். முடிந்தால் அந்தப் பொருளை படம் பிடிச்சு, என் வீட்டுச் சுவர் உன் அன்பளிப்பினால் இன்னும் அழகா மின்னுது என்று வரியும் சேர்த்து இருப்பார்கள்.

எதை எதையோ காப்பி பண்ணுகிறோம் அவர்களிடம் இருந்து இந்த நல்ல பண்பினையும் பழகினால் நல்லது என்பது என் அபிப்பிராயம். என்ன சொல்றீங்க?