Thursday, September 2, 2010

என் கணவரும் கத்தரிக்காயும்!

கத்தரிக்காய் தெரியாதவங்க கீழே உள்ள படம் பார்க்கவும். ( நன்றி: Wikipedia)



என் கணவருக்கும் கத்தரிக்காய்க்கும் அப்படி என்ன பூர்வ ஜென்ம பந்தமோ தெரியவில்லை. கத்தரிக்காய் என்றாலே என் கணவர் அப்படியே உருகிவிடுவார்.
கல்யாணமான புதிதில் இப்படி கத்தரிக்காய் மீது பைத்தியமாக இருந்ததில்லை. எல்லாமே என் சமையல் கைராசி என்று வைத்துக் கொள்ளுங்கள். அட! நம்புங்கப்பா.
காய் கறி வாங்கி வரச் சொன்னால் கண்டிப்பாக கத்தரிக்காய் இருக்கும். அதுவும் கிலோ கணக்கில். அதை வைச்சு என்ன செய்வது என்று இரவு பகலாக தூங்காமல் யோசித்து எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.

கத்தரிக்காயில் வதக்கல் கறி, பொரியல், பால்கறி, சம்பல், வறை இப்படி எனக்குத் தெரிந்த ரெசிப்பிகள் எல்லாமே செய்தாலும் என் கணவருக்கு அலுக்கவே அலுக்காது. எண்ணெயில் பொரித்து வைக்கும் வதக்கல் கறி நன்றாக இருந்தாலும் என் கணவருக்கு அது பெரிதாக நாட்டம் இல்லை. கத்தரிக்காயின் சத்துக்கள் எல்லாமே செத்துப் போய்விடும் என்று ஒரே புகார் தான். பொரியலும் அப்படியே.

கத்தரிக்காய் இருந்தால் கண்டிப்பாக வாழைக்காய் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் எழுதப்படாத விதி. எனக்கும் அதே. என் கணவருக்கு இந்த விதி அடிக்கடி மறந்து போய் விடும். கத்தரிக்காயும், பூசணிக்காயும் வாங்கி வந்து....ம்ம்ம் எழுதவே கடுப்பா வருது.
குரோசரி லிஸ்டில் கத்தரிக்காய் வேண்டாம் என்று தலைப்பு போட்ட பின்னர் தான் தேவையான பொருட்களை கீழே எழுதுவேன். அப்படியும் ஒரு விதமான அதிசயம் நடந்துவிடவில்லை. மீண்டும் கத்தரிக்காய்கள்.

பொறுத்தது போது பொங்கியெழு என்று என் மனம் சொன்னது. என்ன செய்தாய் என்கிறீங்களா? நானே குரோசரி வேலைகளை செய்து கொள்வது என்று முடிவு செய்தேன். கடையில் கத்தரிக்காய்களைக் கண்டாலே திரும்பிக் கூட பார்க்காமல் கடந்து போய் விடுவேன்.

ஒரு மாசம் போல என் கணவரும் ஆகா விட்டது தொல்லை என்று இருந்தார். ஆனால், கத்தரிக்காய் இல்லாமல் வாழ்க்கை வெறுத்துப் போனது போல இருந்தார். அவர் மட்டும் கத்தரிக்காய் வாங்க கடைக்குப் போய் வந்தார். மீண்டும் கத்தரிக்காய்... கத்தரிக்காய்...

என் கணவரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டேன். இனிமேல் கத்தரிக்காய் வாங்கினால் நான் சமைக்கவே மாட்டேன் என்பதை மிகவும் தெளிவாக, பொறுமையாக சொன்னேன். காது குடுத்துக் கேட்டவர் சரி அப்படியே ஆகட்டும் என்றார்.

கொஞ்ச நாட்கள் மனம் திருந்தி இருந்தவர் அன்றொரு நாள் கடைக்குப் போய் வந்தார். அவர் கடைக்குப் போன விபரம் எனக்குத் தெரியாது.
கடையால் வந்து, அவரே நல்ல பிள்ளையாக பொருட்களை எல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்தார்.
அடுத்த நாள் சமையல் செய்யும் போது மகளிடம் கறிவேப்பிலை எடுத்து தரச் சொன்னேன். ஃப்ரிட்ஜ் யை திறந்து கறிவேப்பிலை எடுக்கப் போன மகள் சொன்னா, " அம்மா, இங்கே பாருங்க அப்பா கத்தரிக்காய் வாங்கி வந்திருக்கிறார்."

உள்ளே பெட்டியில் குறைந்தது ஒரு கிலோ கத்தரிக்காய்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. என் கணவரின் இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Monday, August 30, 2010

என் உயிர்த் தோழி

அகிலா வெளிநாடு வந்து 4 மாதங்களே இருக்கும். அவளுக்கு வெளிநாட்டில் எல்லாமே புதுமையாக, வெறுமையாக இருப்பது போன்ற உணர்வு உண்டானது. எல்லோரும் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கையில் காஃபி, டீ என்று எதையாவது குடித்தபடி, அல்லது எதையாவது சாப்பிட்டபடி பஸ்களிலும், ட்ரெயினிலும் மக்கள் கூட்டம். ஏன் இவர்களுக்கு வீட்டில் இருந்து சாப்பிட நேரம் கிடைப்பதில்லையா என்று நினைத்துக் கொள்வாள்.
அகிலாவின் அண்ணன் வேலைக்கு சென்று விட அம்மாவும், அப்பாவும், இவளுடன் சேர்ந்து ரோட்டை வேடிக்கை பார்ப்பார்கள். அடுக்கு மாடி குடியிருப்பின் 20வது தளத்தில் இருந்து ரோட்டை பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான்கு மாதங்கள் ரோட்டை வேடிக்கை பார்த்துக் களைத்த பின் பக்கத்தில் இருந்த மால் போய் வர எண்ணினார்கள் மூவரும்.
மால் இன்னும் பிரமிப்பாக இருந்தது. ஏதோ ஒரு துணிக்கடையின் வாசலில் நின்ற போது யாரோ "அகிலா" என்று கூப்பிடுவது கேட்டது. யாராக இருக்கும் என்று யோசனை ஓடியது. திரும்பி பார்த்தாள் அங்கே ஒரு பெண் சிரித்தபடி நின்றாள்.
" என்னைத் தெரியவில்லையா? நான் தான் சுபா", என்றாள் சுபா.
அகிலா கொஞ்ச நேரம் தடுமாறி பிறகு அடையாளம் கண்டு கொண்டாள்.

ஊரில் இவளுடன் படித்தவள். இவளின் உயிர் தோழி. ஆளே மாறியிருந்தாள். மேக்கப், ஆடைகள் எல்லாமே அவளின் வசதியை சொல்லாமல் சொல்லியது. அகிலாக்கு அவளின் பக்கத்தி நிற்க கூச்சமாக இருந்தது. ஆனால், சுபா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவளின் கைகளைப் பற்றிக் கொண்டாள். ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச் சென்றாள். அகிலாவின் பெற்றோருக்கு சுபாவை மிகவும் பிடித்துக் கொண்டது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரட்டை தொடர்ந்தது. இறுதியில் பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள். போகும் போது சுபா மறக்காமல் அவளின் செல் நம்பரை குடுத்துச் சென்றாள்.
இந்த சம்பவத்தின் பிறகு அகிலாவிற்கு சுபா தான் எல்லாமும் ஆகிப் போனாள். சுபாவின் காரில் வாரத்தில் ஒரு நாள் மால் போய் வருவாள் அகிலா. அவளுடன் போனில் அரட்டைக் கச்சேரி அடிக்கடி நடக்கும். சுபா அடிக்கடி அகிலாவின் வீட்டிற்கு வந்து போவாள்.
சுபா வரும் போதெல்லாம் நல்ல நறுமணம் வீசும். அவள் போன பின்னரும் அந்த மணம் வீட்டிலேயே தங்கிவிடும். இருவரும் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தபடி பேசுவார்கள். அகிலா நீண்ட தயக்கத்தின் பிறகு ஒரு நாள் கேட்டே விட்டாள்.
" சுபா, நீ என்ன வகையான வாசனைத் திரவியம் பாவிப்பாய்?", என்றாள்.
" ஓ! அதுவா. கொஞ்சம் பொறு", என்றுவிட்டு கைப்பையை குடைந்து ஒரு சிறிய குப்பியை எடுத்து நீட்டினாள்.
"விலை அதிகமில்லை. வெறும் 40 டாலர்கள் தான்", என்றாள் சுபா.
40 டாலர்கள் சுபாவிற்கு அதிகம் இல்லாமம் இருக்கலாம். ஆனால், அகிலாவிற்கு அது பெரிய, நிறையப் பணம். அவ்வளவு பணம் அண்ணன் தரவே மாட்டான்.
" ம்ம்..நல்லா இருக்கு. உள்ளே வை", என்று சொன்னாள்.


சுபாவும் பதில் சொல்லாமல் குப்பியை உள்ளே வைத்துக் கொண்டாள்.
மறுநாள் ஒரு சிறு அட்டைப் பெட்டி கொண்டு வந்து கொடுத்தாள் சுபா. அழகான வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது.
" இது என்னடி?" , என்றாள் அகிலா.
" உனக்குத்தான். திறந்து பாரேன்", இது சுபா.
உள்ளே அழகிய சென்ட் பாட்டில். சுபா பயன்படுத்தும் அதே ப்ரான்ட்.
அகிலா பிரமிப்புடன் பார்த்தாள். " இது எனக்கு வேண்டாம்", என்று மறுத்தாள்.
ஆனால், சுபா எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போய் விட்டாள்.
அகிலா அடிக்கடி அந்த குப்பியை எடுத்து, ஆசையுடன் வருடிக் கொடுப்பாள். எங்காவது செல்லும் போது ஒரு துளி போட்டுக் கொள்வாள். மிகவும் ரம்மியமான நறுமணம் அறை எங்கும் வியாப்பித்து நிற்கும்.

கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை தொடர்ந்த இவர்களின் நட்பு சுபாவின் திருமணத்தோடு ஒரு முடிவிற்கு வந்தது. அகிலா பெற்றோருடன் திருமணத்திற்குப் போனாள். நல்ல ஆடம்பரமாகவே திருமணம் நடந்தேறியது. மாப்பிள்ளை நல்ல வசதியான குடும்பம் என்று சொன்னார்கள். காதல் திருமணம்.
திருமணத்தின் பின்னர் அகிலா சுபாவை சந்திப்பது அறவே நின்று விட்டது. செல்போனில் அழைக்கவும் சங்கடமாக இருந்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஓடிவிட்டன. அகிலா சுபா கொடுத்த வாசனைத் திரவியத்தினை அடிக்கடி எடுத்து முகர்ந்து பார்த்துக் கொள்வாள். சுபாவே நேரில் வந்து நிற்பது போன்ற ஒரு பிரமை ஏற்படும்.
ஒருநாள் தமிழ்நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தவளின் கண்களில் அந்த மரண அறிவித்தல் செய்தி விழுந்தது.
சுபா போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தாள். கீழே அகால மரணம் என்று ஒரு வரிச் செய்தி.
அந்த நாளிதழில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டாள்.
சுபா விபத்தில்... .... என்ற செய்தி மட்டுமே காதுகளில் விழுந்தது. அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாமல் தொலைபேசியை வைத்து விட்டாள்.

பிரமை பிடித்தவள் போல் இருந்தாள் அகிலா. நம்பவும் முடியவில்லை. சுபாவின் தொலைபேசி எண்ணை டயல் செய்தாள். பதில் வரவில்லை.
சுபாவின் முகத்தை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால், போக விருப்பம் வரவில்லை. அதோடு கூட்டிச் செல்லவும் யாரும் இல்லை. பஸ்ஸிலும், ட்ரெயினிலும் போய் பழக்கம் இல்லை.

அழுதழுது கண்ணீர் வற்றிப் போனது. அழுத களைப்பில் தூங்கிப்போனாள். ஏதோ ஒரு நறுமணம் வந்து நாசியினைத் தாக்க விழிப்பு வந்தது. இது சுபா பயன்படுத்தும் வாசனைத் திரவியம் அல்லவா? அவள் வந்து விட்டாளா? என்று கண்கள் பரபரவென சுபாவைத் தேடின.
படுக்கையிலிருந்து எழுந்து ஓடினாள். ஹாலில் உறவினர் பெண்ணுடன் அம்மா பேசிக் கொண்டிருந்தார்.

" சுபா வரவில்லையா? ", என்று கேட்க நினைத்தவள் எதுவுமே கேட்காமல் மற்ற அறைக்கு ஓடினாள்.
அங்கே உறவினர் பெண்ணின் குட்டி வாண்டு வாசனைத் திரவிய குப்பியை திறந்து விளையாடிக் கொண்டிருந்தது. கோபத்துடன் அதைப் பறித்துக் கொண்டாள். குழந்தை அழ ஆரம்பித்தது. அதன் அம்மா வந்து தூக்கிக் கொண்டாள்.
விடுவிடுவென பால்கனி நோக்கி போனாள். வாசனைத் திரவிய பாட்டிலை 20வது தளத்திலிருந்து கீழே வீசியெறிந்தாள். கண்களில் கண்ணீர் மறைக்க, குப்பி கீழே விழுவதைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.