Monday, August 30, 2010

என் உயிர்த் தோழி

அகிலா வெளிநாடு வந்து 4 மாதங்களே இருக்கும். அவளுக்கு வெளிநாட்டில் எல்லாமே புதுமையாக, வெறுமையாக இருப்பது போன்ற உணர்வு உண்டானது. எல்லோரும் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கையில் காஃபி, டீ என்று எதையாவது குடித்தபடி, அல்லது எதையாவது சாப்பிட்டபடி பஸ்களிலும், ட்ரெயினிலும் மக்கள் கூட்டம். ஏன் இவர்களுக்கு வீட்டில் இருந்து சாப்பிட நேரம் கிடைப்பதில்லையா என்று நினைத்துக் கொள்வாள்.
அகிலாவின் அண்ணன் வேலைக்கு சென்று விட அம்மாவும், அப்பாவும், இவளுடன் சேர்ந்து ரோட்டை வேடிக்கை பார்ப்பார்கள். அடுக்கு மாடி குடியிருப்பின் 20வது தளத்தில் இருந்து ரோட்டை பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான்கு மாதங்கள் ரோட்டை வேடிக்கை பார்த்துக் களைத்த பின் பக்கத்தில் இருந்த மால் போய் வர எண்ணினார்கள் மூவரும்.
மால் இன்னும் பிரமிப்பாக இருந்தது. ஏதோ ஒரு துணிக்கடையின் வாசலில் நின்ற போது யாரோ "அகிலா" என்று கூப்பிடுவது கேட்டது. யாராக இருக்கும் என்று யோசனை ஓடியது. திரும்பி பார்த்தாள் அங்கே ஒரு பெண் சிரித்தபடி நின்றாள்.
" என்னைத் தெரியவில்லையா? நான் தான் சுபா", என்றாள் சுபா.
அகிலா கொஞ்ச நேரம் தடுமாறி பிறகு அடையாளம் கண்டு கொண்டாள்.

ஊரில் இவளுடன் படித்தவள். இவளின் உயிர் தோழி. ஆளே மாறியிருந்தாள். மேக்கப், ஆடைகள் எல்லாமே அவளின் வசதியை சொல்லாமல் சொல்லியது. அகிலாக்கு அவளின் பக்கத்தி நிற்க கூச்சமாக இருந்தது. ஆனால், சுபா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவளின் கைகளைப் பற்றிக் கொண்டாள். ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச் சென்றாள். அகிலாவின் பெற்றோருக்கு சுபாவை மிகவும் பிடித்துக் கொண்டது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரட்டை தொடர்ந்தது. இறுதியில் பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள். போகும் போது சுபா மறக்காமல் அவளின் செல் நம்பரை குடுத்துச் சென்றாள்.
இந்த சம்பவத்தின் பிறகு அகிலாவிற்கு சுபா தான் எல்லாமும் ஆகிப் போனாள். சுபாவின் காரில் வாரத்தில் ஒரு நாள் மால் போய் வருவாள் அகிலா. அவளுடன் போனில் அரட்டைக் கச்சேரி அடிக்கடி நடக்கும். சுபா அடிக்கடி அகிலாவின் வீட்டிற்கு வந்து போவாள்.
சுபா வரும் போதெல்லாம் நல்ல நறுமணம் வீசும். அவள் போன பின்னரும் அந்த மணம் வீட்டிலேயே தங்கிவிடும். இருவரும் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தபடி பேசுவார்கள். அகிலா நீண்ட தயக்கத்தின் பிறகு ஒரு நாள் கேட்டே விட்டாள்.
" சுபா, நீ என்ன வகையான வாசனைத் திரவியம் பாவிப்பாய்?", என்றாள்.
" ஓ! அதுவா. கொஞ்சம் பொறு", என்றுவிட்டு கைப்பையை குடைந்து ஒரு சிறிய குப்பியை எடுத்து நீட்டினாள்.
"விலை அதிகமில்லை. வெறும் 40 டாலர்கள் தான்", என்றாள் சுபா.
40 டாலர்கள் சுபாவிற்கு அதிகம் இல்லாமம் இருக்கலாம். ஆனால், அகிலாவிற்கு அது பெரிய, நிறையப் பணம். அவ்வளவு பணம் அண்ணன் தரவே மாட்டான்.
" ம்ம்..நல்லா இருக்கு. உள்ளே வை", என்று சொன்னாள்.


சுபாவும் பதில் சொல்லாமல் குப்பியை உள்ளே வைத்துக் கொண்டாள்.
மறுநாள் ஒரு சிறு அட்டைப் பெட்டி கொண்டு வந்து கொடுத்தாள் சுபா. அழகான வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது.
" இது என்னடி?" , என்றாள் அகிலா.
" உனக்குத்தான். திறந்து பாரேன்", இது சுபா.
உள்ளே அழகிய சென்ட் பாட்டில். சுபா பயன்படுத்தும் அதே ப்ரான்ட்.
அகிலா பிரமிப்புடன் பார்த்தாள். " இது எனக்கு வேண்டாம்", என்று மறுத்தாள்.
ஆனால், சுபா எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போய் விட்டாள்.
அகிலா அடிக்கடி அந்த குப்பியை எடுத்து, ஆசையுடன் வருடிக் கொடுப்பாள். எங்காவது செல்லும் போது ஒரு துளி போட்டுக் கொள்வாள். மிகவும் ரம்மியமான நறுமணம் அறை எங்கும் வியாப்பித்து நிற்கும்.

கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை தொடர்ந்த இவர்களின் நட்பு சுபாவின் திருமணத்தோடு ஒரு முடிவிற்கு வந்தது. அகிலா பெற்றோருடன் திருமணத்திற்குப் போனாள். நல்ல ஆடம்பரமாகவே திருமணம் நடந்தேறியது. மாப்பிள்ளை நல்ல வசதியான குடும்பம் என்று சொன்னார்கள். காதல் திருமணம்.
திருமணத்தின் பின்னர் அகிலா சுபாவை சந்திப்பது அறவே நின்று விட்டது. செல்போனில் அழைக்கவும் சங்கடமாக இருந்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஓடிவிட்டன. அகிலா சுபா கொடுத்த வாசனைத் திரவியத்தினை அடிக்கடி எடுத்து முகர்ந்து பார்த்துக் கொள்வாள். சுபாவே நேரில் வந்து நிற்பது போன்ற ஒரு பிரமை ஏற்படும்.
ஒருநாள் தமிழ்நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தவளின் கண்களில் அந்த மரண அறிவித்தல் செய்தி விழுந்தது.
சுபா போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தாள். கீழே அகால மரணம் என்று ஒரு வரிச் செய்தி.
அந்த நாளிதழில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டாள்.
சுபா விபத்தில்... .... என்ற செய்தி மட்டுமே காதுகளில் விழுந்தது. அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாமல் தொலைபேசியை வைத்து விட்டாள்.

பிரமை பிடித்தவள் போல் இருந்தாள் அகிலா. நம்பவும் முடியவில்லை. சுபாவின் தொலைபேசி எண்ணை டயல் செய்தாள். பதில் வரவில்லை.
சுபாவின் முகத்தை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால், போக விருப்பம் வரவில்லை. அதோடு கூட்டிச் செல்லவும் யாரும் இல்லை. பஸ்ஸிலும், ட்ரெயினிலும் போய் பழக்கம் இல்லை.

அழுதழுது கண்ணீர் வற்றிப் போனது. அழுத களைப்பில் தூங்கிப்போனாள். ஏதோ ஒரு நறுமணம் வந்து நாசியினைத் தாக்க விழிப்பு வந்தது. இது சுபா பயன்படுத்தும் வாசனைத் திரவியம் அல்லவா? அவள் வந்து விட்டாளா? என்று கண்கள் பரபரவென சுபாவைத் தேடின.
படுக்கையிலிருந்து எழுந்து ஓடினாள். ஹாலில் உறவினர் பெண்ணுடன் அம்மா பேசிக் கொண்டிருந்தார்.

" சுபா வரவில்லையா? ", என்று கேட்க நினைத்தவள் எதுவுமே கேட்காமல் மற்ற அறைக்கு ஓடினாள்.
அங்கே உறவினர் பெண்ணின் குட்டி வாண்டு வாசனைத் திரவிய குப்பியை திறந்து விளையாடிக் கொண்டிருந்தது. கோபத்துடன் அதைப் பறித்துக் கொண்டாள். குழந்தை அழ ஆரம்பித்தது. அதன் அம்மா வந்து தூக்கிக் கொண்டாள்.
விடுவிடுவென பால்கனி நோக்கி போனாள். வாசனைத் திரவிய பாட்டிலை 20வது தளத்திலிருந்து கீழே வீசியெறிந்தாள். கண்களில் கண்ணீர் மறைக்க, குப்பி கீழே விழுவதைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

22 comments:

  1. unmayagave migavum kashtamaga irukku padika padika....

    ReplyDelete
  2. வானதி கதை உருக்கமாக உள்ளது,சிறுகதையா தொடரா?

    ReplyDelete
  3. வாணி.. இப்பூடிப் பண்ணிட்டீங்களே... முடிவு கவலையாகிவிட்டதே..... எதை மறந்தாலும் பேர்பியூம் வாசத்தை யாராலும் மறக்கமுடியாதுதான்.

    ReplyDelete
  4. சொல்ல மறந்திட்டேன். தலைப்பைப் பார்த்ததும், என்னையாக்கும் கூப்பிடுறீங்கள் என ஓடிவந்தேன்:))). உஸ் அப்பா இப்பத்தான் நிம்மதி... ஜெய்... இப்பவும் ஜஸ்டு மிஸ்ட்டுத்தேன்:).

    ReplyDelete
  5. நடுவில ஒரு ஓட்டை இருக்கே .. சுபா ஏன் திருமணத்திற்கு பிறகு பேச விரும்பலைன்னு...!!!

    அதை விட்டு விட்டு படிச்சா சூப்பர் கதை ...!!இதனோட அடுத்த பார்ட்டா போடுங்க அப்பதான் கதை முழுமை அடையும். :-))

    ReplyDelete
  6. வானதி சூப்பர்.. திருமணத்துக்குப் பின் தோழியரோட நட்புல பிரிவு வரது இயற்கை தான்.. அதே மாதிரி தோழியோட நினைவா இருக்கறத ஒரு சோகத்துல தூக்கி எறிவதும் நடக்கலாம்.. திரும்பத்திரும்ப அவங்க நினைவு வந்துகிட்டே இருக்கும் அத உணரும் போதெல்லாம்..

    //இதனோட அடுத்த பார்ட்டா போடுங்க அப்பதான் கதை முழுமை அடையும்//

    செண்டி முடிவு வேனும்னா.. அகிலாவுக்கும் கல்யாணமாச்சு.. பெண் குழந்த... சுபான்ன்னு பேர் வச்சுட்டாங்க :)

    இல்ல.. திகில் கதையா வேனும்னா.. வேனாம்.. அப்புறம் தூக்கத்துல வர்ற கனவுல கண் தெரியாம போயிடும் :))

    தமிழ் சினிமா முடிவா வேனும்னா.. வேற யாரோட மரணச் செய்தியோட சுபாவோட போட்டோவ ஆக்சிடெண்டலா போட்டுட்டாங்க.. விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம், அகிலா சுபா சந்திச்சு, நட்பத் தொடர ஆரம்பிச்சுட்டாங்க :))

    ReplyDelete
  7. கதை டிராஜடியாக முடிவு பெற்று நெகிழ்வைத்து விட்டது.

    ReplyDelete
  8. தோழிக‌ளின் ந‌ட்பை ந‌ல்லா கொண்டு போனீங்க‌..

    க‌தையின் முடிவை எதிர்பார்க்க‌வில்லை....

    ReplyDelete
  9. நெகிழ வைத்து விட்டீர்கள் வானதி

    ReplyDelete
  10. nalla iruku. padithu mudithathum ennavo oru vali

    ReplyDelete
  11. நட்பை அழகா சொல்லிருக்கீங்க வானதி! ஜெய் அண்ணா சொல்வது போல திருமணத்தின் பின்னர் தொடர்பு விட்டுப்போனதுதான் கொஞ்சம் இடிக்குது. சில நாட்களாவது போன்கான்டாக்ட் அட்லீஸ்ட் இருக்குமில்ல?

    சந்தனா,இமாவின் உலகத்துல ட்ரான்ஸ்லேட்டர்,இங்கே வானதிக்கும் க்ளைமாக்ஸ் ஐடியா தர அஸிஸ்டன்ட்டா?:)

    ReplyDelete
  12. ஒன்னும் சுவாரஸ்யமே இல்லாம இப்படி சப்புன்னு இருக்கே வாணி! நான் சொல்றது அதிஸ், ஜெய்லானி கோஷ்டியில ஒரு சலசலப்பே இல்லாம என்ன இது?? ஒரு சுல்லாப்பே இல்ல! சரி வந்ததுக்கு கதயாவது படிப்போம். ஹி.. ஹி..

    ReplyDelete
  13. @@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.
    வானதி சூப்பர்.. திருமணத்துக்குப் பின் தோழியரோட நட்புல பிரிவு வரது இயற்கை தான்.. அதே மாதிரி தோழியோட நினைவா இருக்கறத ஒரு சோகத்துல தூக்கி எறிவதும் நடக்கலாம்.. திரும்பத்திரும்ப அவங்க நினைவு வந்துகிட்டே இருக்கும் அத உணரும் போதெல்லாம்.. //



    ஆஆஆஆஆ..சந்தூஊஊஊஊஊஊ அப்ப மீதி கதை உங்களுக்கு தெரியுமாஆஆஆஆ...

    ReplyDelete
  14. கதையின் விறுவிறுப்பு வாசனைத் திரவியத்தில் இருக்கா? தோழியின் பிரிவு உண்மையிலேயே மனசை என்னமோ செய்யுது. ஏன் சாகடிச்சிங்க வாணி! அருமை!! வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  15. வானதி பொதுவா கதைகள் படிக்க விரும்பாத என்னை உங்கள் தலைப்பு அழைத்து வந்து விட்டது. ஆனா படிச்சு முடிச்சு சோகமாயிட்டேன் :(

    ReplyDelete
  16. வித்யா, மிக்க நன்றி.
    ஆசியா அக்கா, சிறுகதை தான். மிக்க நன்றி.
    அதீஸ், உண்மை தான்.
    உங்களைப் பற்றி எழுத எனக்கு உங்கள் பெயர் கூட தெரியாதே .
    மிக்க நன்றி.

    ஜெய், ஓட்டை எல்லாம் இல்லை நல்லா சிமென்ட் பூசி strong ஆ கட்டிய வீடாக்கும் இது.
    உங்களுக்கு பதில் சந்தனாவே சொல்லிட்டார்.
    ஆண்களைப் போல பெண்களின் நட்பு நீடிப்பது கஷ்டம். அதுவும் திருமணம் ஆகி விட்டால். என் தோழி ஒருவரோடு என் தொடர்பு அறுந்தே போனது . நான் திருமணம் செய்த பின்னர் அவர் என்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். இடமாற்றம், வேலையில் பிஸி, குடும்பம் என்று வந்தால் நிலைப்பது கஷ்டம்.

    ReplyDelete
  17. Hi,

    Miha arumaiyaana kadhai....


    Sameena@

    www.myeasytocookrecipes.blogspot.com

    www.lovelypriyanka.blogspot.com

    ReplyDelete
  18. அருமையான கதை
    என்ன தான் உயிர் தோழியா இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு ஒரு சிலருக்கு தான் நட்பு நீடிக்கும்.

    பல பேருக்கு நிலைப்பதில்லை, நட்புடன் பழகிய பழைய நாட்களை நினைத்து கொள்வதை தவிர வேறு ஒன்றும்முடியாது.

    ReplyDelete
  19. நட்பை பற்றிய உருக்கமான கதை...nanri tholi.

    ReplyDelete
  20. வானதி கதை ரொம்ப அருமையா இருந்தது ..சோகமான முடிவு ...கஷ்டமா போச்சு ..நிறையை பெண்கள் கல்யாணமான பிறகு நட்பு தொடராமல் மனதில் பழைய நினைவுகள் வெச்சு தான் வாழாறாங்க ..அகிலாவும் அந்த லிஸ்ட் ல சேர்ந்து போச்சு அவ்ளோ தான் ..பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!