Tuesday, January 10, 2012

டொமார் returns

பல வருடங்களின் பின்னர் ஊர் போனது மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடை வீதியில் பள்ளித் தோழி சுபாஷினியோடு கதை அளந்து கொண்டிருந்தபோது கடந்து போன ஆண் - எங்கேயோ பார்த்த ஞாபகம். உடனே மூளையில் பொறி தட்டியது.
ஹேய்! டொமார், என்றேன்.
அந்த ஆண் திரும்பி, ஒரு நிமிடம் குழம்பி என்னைப் பார்த்து, " நீங்கள் யார்?", என்றார்.
என்னைத் தெரியவில்லையா? நான் தான் ராதிகா, என்றேன்.
ஓ! எப்படி இருக்கிறாய், என்று ஒருமைக்குத் தாவினான்.
அவன் பக்கத்தில் அவனைப் போலவே ஒரு குட்டி. டொமார் சின்ன வயதில் மூக்கு ஒழுகத் திரிந்தது போல டொமாரின் குட்டி நின்றான்.
நான் நல்லா இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய், என்றபடி தொடர்ந்தேன். உன் பிள்ளைக்கு மூக்கு இப்படி ஒழுகுதே துடைச்சு விடப்படதா, என்றேன்.
டேய்! மூக்கை துடை, என்றான் கடுப்போடு. அவன் மகன் டொமாரின் லுங்கியில் மூக்கினை துடைத்தான்.
நான் நீட்டிய பிஸ்கட், சாக்லெட்டுக்களை ஆசையோடு வாங்கிக் கொண்டான் குட்டி.

நீ இன்னும் பழைய வீட்டில் தானே இருக்கிறாய். இன்று மாலை உன் வீட்டுப் பக்கம் கட்டாயம் வருவேன். உன் மனைவியை கட்டாயம் பார்க்க வேண்டும், என்றேன்.
வேண்டா வெறுப்பாகத் தலையாட்டி விட்டு நகர்ந்து சென்றான்.
இவனை எப்படி மறக்க முடியும். இன்று மாலை இவனின் மனைவியை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
என் கணவரிடம் நான் டொமாரை சந்தித்த கதையினை சொன்னேன்.
ஓ! அப்படியா என்றதோடு நிறுத்திக் கொண்டார்.
என் பழைய கதைகள் பற்றி ஏதாவது கேட்பார் என்று நினைத்து, ஏமாந்து போனேன். இன்று மாலை டொமார் வீட்டுக்க்கு நான் போறேன். நீங்களும் கட்டாயம் வர வேண்டும், என்றேன்.
நான் வரவில்லை. என் நண்பனை சந்திக்க வேண்டும், என்றார்.
மாலை 4 மணி அளவில் டொமார் வீட்டுக்குச் சென்றேன். டொமாரைக் காணவில்லை. அவன் மனைவி, பிள்ளைகள் மட்டும் இருந்தார்கள். என்னை நானே சுய அறிமுகம் செய்து கொண்டேன்.
டொமார் எங்கே? , என்றேன்.
அதுக்கென்னம்மா குறைச்சல். இப்ப குடிச்சுட்டு எங்கனை விழுந்து கிடக்குதோ தெரியவில்லை. மப்பு தெளிய வீட்டுக்கு வரும், என்றார் மனைவி.
அப்ப வேலைக்கு போறதில்லையா? எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள்?, என்றேன்.

நான் அப்பம், தோசை செய்து விற்பனை செய்கிறேன். அந்தக் காசினைக் கூட குடிச்சே அழிக்கிறார். இன்று காலையில் 200 ரூபாய் குடுத்துவிட்டேன் அரிசி வாங்க. திருந்திட்டேன் என்று சொல்லித் தான் காசு வாங்கிப் போனார், என்றபடி கண்களைக் கசக்கினார் மனைவி.

டொமார் தள்ளாடியபடியே வீடு வந்து சேர்ந்தான்.
ஏன் டொமார், உனக்கு அறிவு இருக்கா? , என்று எகிறினேன்.
ராதிகா, நீ உன் வேலையை மட்டும் பாரு. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?, என்றபடி கட்டிலில் படுத்துக் கொண்டான்.
மனைவி கண்களைக் கசக்கியபடி நின்றார். நான் வீட்டினை நோக்கி நடந்தேன்.
அடுத்த நாள் டொமாரின் மனைவி என் வீடு தேடி வந்தார்.
நேற்று எனக்கு கன்னத்தில் அறைஞ்சுட்டார் என் கணவர், என்றார் வீங்கிய கன்னங்களைக் காட்டியபடி. ஒவ்வொரு நாளும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறதே வேலை அவருக்கு, என்றார்.

அடுத்த கிழமை என்னை வந்து பாருங்கள் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு வேலைகள் மளமளவென நடைபெற்றது. ஒரு சிறிய இடத்தினை வாங்கி, அதில் தேவையான பொருட்கள் வாங்கி அடுக்கி, சாவியினை டொமாரின் மனைவியிடம் கொடுத்தேன்.
என்னால் முடிந்த உதவி. கடை உங்க பெயரில் தான் இருக்கு. டொமாருக்கு இதில் ஒரு சல்லிக் காசு கூட உரிமை இல்லை. ஏதாவது வம்பு செய்தா என்னிடம் சொல்லுங்கள், என்றபடி விடை பெற்றேன்.
நீ எதுக்கு ராதிகாவிடம் பிச்சை வாங்கினாய் என்று மனைவியை அடித்தாக மனைவி மறு நாள் சொன்னார்.
நீ இப்படி பயந்து சாவதால் தான் அவர் உன்னை அடிக்கிறார். விரட்டுகிற நாய்க்கு ஓடுகிற நாயினைக் கண்டால் சந்தோஷமாம். அது போலத் தான் இதுவும். ஒரு நாளைக்கு எதிர்த்து கேள்வி கேள், என்றேன்.
அட! போங்கமா அவரிடம் நல்லா மொத்து வாங்க ஐடியா குடுக்கிறீங்க. நான் போறேன், என்றபடி விடை பெற்றார் மனைவி.
டொமார் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிப்பது குறையவேயில்லை. நான் வெளிநாடு போகும்நாளும் வந்தது. கார் டொமார் வீட்டினை கடந்த போது அந்த எண்ணம் தோன்றியது. காரினை நிப்பாட்டச் சொன்னேன். என் கணவர் விளங்காமல் பார்த்தார். இறங்கி விடு விடுவென உள்ளே சென்றேன்.

எதிர்ப்பட்ட டொமாரின் கன்னத்தில் சப்பென்று இரண்டு அறைகள் விட்டேன். ஒன்று உன் மனைவியை அடிச்சதுக்கு மற்றது உனக்குத் தான் தெரியுமே. என் கணவர் வந்து என் கையினை பிடித்து இழுத்துச் சென்றார்.
டொமார் அதிர்ந்து போய் நின்றான்.
வெளிநாடு போய் சேர்ந்து 2 வாரங்களின் பின்னர் என் அம்மா சொன்னார், இப்பெல்லாம் டொமார் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிப்பதே இல்லையாம். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பின்குறிப்பு: ( disclaimer )
டொமார் யார் என்று தெரியாதவர்கள் அந்த லிங்கினை க்ளிக்குங்கள். இது ஒரு கற்பனைக் கதையே. இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே.