Tuesday, March 9, 2010

மரவள்ளிக் கிழங்கு பிரட்டல்



தேவையானவை:


மரவள்ளிக்கிழங்கு - 1
வெங்காயம் - பாதி
மஞ்சள் - சிறிது
உப்பு -தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி தழை- சிறிது
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்

கிழங்கை சுத்தம் செய்து, ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டி வைக்கவும்,
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
சட்டியில் கிழங்கு, உப்பு, மஞ்சள், தண்ணீர் விட்டு அவிக்கவும்.
கிழங்கு நன்கு அவிந்ததும் தண்ணீரை வடித்து விட்டு, மிளகாய்த்தூள், தேவையெனில் உப்பு பிரட்டி வைக்கவும்.
அடிகனமான சட்டியில் எண்ணெய் விட்டு கிழங்கை போடவும். சிறிது பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்ககவும்.
கிழங்கு பொரிந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.



குறிப்பு:
இந்த ரெசிப்பிக்கு அதிக எண்ணெய் தேவையில்லை.
கிழங்கை வேக வைத்து பொரிப்பதால் விரைவாக பொரிந்து விடும்.

Monday, March 8, 2010

அவர்கள்......

நான் கடைக்கு போகும்போது லெஃட்turn சிக்னலுக்காக காத்திருக்கும் வேளையில் அவர்களைக் கண்டேன். அவர்கள் என்பது இங்கு "பிச்சைக்காரர்கள்"(Homeless). ஒரு பெண்ணும், ஒரு ஆணும். அந்த ஆணுக்கு 60 வயது இருக்கலாம். பெண்ணுக்கு 35 வயது இருக்கும்.

சிக்னலுக்கு நிற்கும்போது பொழுது போகாமல் அவர்களை பார்க்கத்தொடங்கினேன். சில நேரங்களில் இருக்கமாட்டார்கள். சில நேரங்களில் எவ்வளவு குளிர், காற்று என்றாலும் நிற்பார்கள்.

அந்த பெண் யாசகம் பெறுபவர் போன்ற தோற்றம் இல்லாமல் அழகாக உடுத்தி, சி.டி ப்ளேயரில் பாட்டுக் கேட்டபடி நடனம் ஆடியபடியே நிற்பார். சிக்னலுக்காக நிற்பவர்களிடம் காசு கேட்கவோ அல்லது பரிதாபமான பார்வை பார்த்தபடியோ நிற்க மாட்டார். எப்போதும் ஒரு புன்னகை முகத்தில். குடுத்தால் குடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்பது போல நிற்பார். எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம்- சுத்தம். காஃபி, டீ குடித்து முடித்த பின்னர் பேப்பர் கப்களை கீழே வீசி எறியாமல் ஒரு பையில் போட்டு வைத்திருப்பார். அந்த பை ரோட்டோரத்தில் இருக்கும் அறிவிப்பு கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும்.


ஆண்- முன் வரிசை பற்களை இழந்து, கழுத்தில் ஒரு போர்டு மாட்டிக் கொண்டு பரிதாபமாக நிற்பார். இவர் தான் வசூல் ராஜா. இவரின் தோற்றத்தை பார்த்து இரங்கி மக்கள் பணம் போடுவார்கள். அன்று ஒரு நாள் ஒரு பெரிய பீட்ஸா hut பெட்டி வைத்திருந்தார். சாப்பிட்டு மீதமான உணவை பிளாஸ்டிக் பைகளில் போட்டு, முடிச்சு போட்டு வேறு பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

இப்போது கொஞ்ச நாட்களாக இருவரையும் காணவில்லை. சிட்டி பக்கம் போயிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
போனவாரம் சிக்னலுக்காக காத்திருக்கும் போது வேறு இருவர். கணவன், மனைவியாக இருக்க வேண்டும். ஒருவர் ரோட்டின் இந்த பக்கம், மற்றவர் மற்ற கரையில்.

பெண் சத்தமாக ஆணைக் கூப்பிட்டார்.
ஆண்; என்னலே சொல்றே?
பெண்: ஷாப்பிங் போய் விட்டு வருகிறேன்.
ஆண்: சுருக்க வந்திடு என்ன??
பெண்: ம்ம்...
வாகனங்களை கடந்து எதிர் புறம் இருந்த கடைகளை நோக்கி ஒடுகின்றார்.
பெண் போனதும் ஆண் சிக்னலுக்கு காத்திருக்கின்ற வாகனங்களை நோக்கி ஓடுகின்றார்.

நான் நாட்டிற்கு வந்த புதிதில் கணிணி சம்பந்தமாக வகுப்புக்களுக்கு சென்று வந்த போது ஒரு வயதான பிச்சைக்காரர் வழியில் நிற்பார். இடையில் சில்லறைகள் கொடுப்பேன். காசு கொடுத்ததும் ஒரு பிரகாசமான புன்னகை. " கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக " என்று ஒரு வாழ்த்து மனதுக்கு இதமாக இருக்கும்.
சப்வே ஸ்டேஷனில் நின்று யாசகம் பெறுபவர்கள். சில்லறை போட்டால் கிட்டார் இசைத்தபடி அழகாக பாடுவார்கள். அவர்களின் கிட்டார் இசைக்காக சில்லறை போட்டு, அந்த இசையை ரசித்து இருக்கின்றேன்.