Friday, April 30, 2010

குழந்தையின் உலகம்!

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் ? என் பெயர் பரண் சாம்பசிவம். வயது 1 மாதம். அட நில்லுங்க! எங்கே போறீங்க. ஒரு மாதக் குழந்தையிடம் என்ன புதினம் இருக்கப் போவுது என்று தானே யோசனை. இருங்க ஒவ்வொன்றாக எடுத்து விடுகிறேன்.

நான் பிறந்ததும் எனக்கு பெற்றோர் வைத்த பெயர் பரண் சாம்பசிவம். பரண் யாருக்காவது அர்த்தம் தெரியுமா?. சரி அதை விடுங்க. சாம்பசிவம் என்பது என் கொள்ளு/எள்ளு தாத்தாவின் பெயராம். சாம்பு சாம்பு என்று எல்லோரும் என்னைக் கூப்பிட, நான் கதறி அழுது விட்டேன்.

பிள்ளைக்கு பசி போல இருக்கு என்று தூக்கி பால் குடுத்தார்கள். அழுதால் தூக்குவார்கள் என்ற சிம்பிள் லாஜிக் விளங்கியது. எனக்கு பொழுது போகாவிட்டால் அழுவேன். அதோ பாருங்கள் என் அம்மாச்சி ஒடி வருகிறார். வீட்டில் இவ்வளவு ஆட்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை.

அம்மாச்சி பிஸியாக இருந்தால் பெத்தா அல்லது இரண்டு மாமாக்கள் தடியன்கள் போல இருக்கிறார்கள். ஆகா! நான் எவ்வளவு அதிஷ்டசாலி. ஒரு நாள்
காலை எழுந்து பார்த்தேன். என்னைத் தூக்கி திரிந்தவர்கள் யாரையும் காணவில்லை. அம்மாவிடம் என் பாஷையில் கேட்டேன். அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

இப்போது வீட்டில் அப்பா, அம்மா, நான் ஆகிய மூவருமே இருக்கிறோம். என் தொல்லை பொறுக்காமல் அப்பா காலையில் எங்கோ பையை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார். மாலை நேரம் தான் வருவார். அம்மா பாவம் எங்கேயும் போகவில்லை. நான் தொட்டதற்கெல்லாம் அழுது அம்மாவை ஒரு வழி பண்ணி விடுவேன்.

இன்று என் சகா கிருஷ்ணா வருகிறான். எனக்கு யாருமே சொல்லவில்லை. காற்று வாக்கில் என் காதுகளில் விழுந்த செய்தி. அவன் போன தடவை வந்த போது ஏதோ ஒரு விளையாட்டு சாமானால் என் தலையை பதம் பார்த்து விட்டான். இன்று அவன் வருவதற்குள் எல்லா பொருட்களையும் எடுத்து ஒளிக்க வேண்டும். அது தான் காலையிலிருந்து நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். அவன் வந்து போகும் வரை ஒரே கலக்கமாக இருக்கு. ஆனால் கிருஷ்ணா வந்தால் இலவசமாக நிறைய ஐடியாக்கள் தருவான்.

கிருஷ்ணா நடக்க ஆரம்பித்து விட்டானாம். அவன் அம்மா பண்ணும் அலப்பறை தாங்க முடியவில்லை. குறைந்தது ஒரு பத்து தடவையாவது தொலைபேசியில் என் அம்மாவிடம் சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டார். கிருஷ்ணா எங்கள் வீட்டிற்கு வந்து எனக்கு நடந்து காட்டி விட்டுப் போனான். அவன் முகத்தில் தெரிந்த பெருமையை நீங்கள் பார்க்கணுமே. " நீ ஏன்டா இன்னும் நடக்கவே ஆரம்பிக்கலை " , என்று ஒரு நக்கல் கேள்வி வேறு.

இனிமேல் நானும் நடக்க பழகப் போகிறேன். இப்போது எல்லோரும் ஆசிகள் வழங்கி விட்டுப் போய் வாருங்கள். நான் நடக்கத் தொடங்கியதும் நிறைய கதைகள் சொல்வேன். மீண்டும் சந்திப்போம்.

Wednesday, April 28, 2010

வாழ்க்கை

இந்தக் கதையின் முதல் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்..
வாழ்க்கை (1)
வாழ்க்கை (2)

அடுத்த நாள் போனேன் வசுமதி வீட்டிற்கு . போய் கதவைத் தட்டினேன் திறந்து உள்ளே கூட்டிச் சென்றாள். வீடு ஆடம்பரமாக இருந்தது.
சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவள் வேலைக்காரியை அனுப்பி விட்டு மெல்லிய குரலில் என்னைக் கேட்டாள், " நீ சம்மதித்தால் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்." நான் புரியாமல் பார்க்க அவள் தொடர்ந்தாள், " போதை மருந்து கடத்தல் தான் என் தொழில். பக்கத்து நாட்டிலிருந்து போதை மருந்தை என் உடலில் கட்டி, கஸ்டம்ஸ் கண்ணில் படாமல் கொண்டு வந்து சேர்த்தால் பெரிய தொகை தருவார்கள்."

நான் பதில் பேசாது இருந்தேன். இரண்டு நாள் அவகாசம் தருகிறேன் நல்ல முடிவோடு வா என்று அனுப்பி வைத்தாள்.


நான் வசுமதிக்கு சரி என்று சொல்லி விட்டேன். என்னையும் வசுமதியையும் இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து போதை மருந்து கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுக்கு இடப்பட்ட கட்டளை. நாங்கள் இலங்கை போனோம். வாழ்வில் முதன் முதலாக வேறு நாட்டினை பார்த்த பரவசம். மேலிடத்திலிருந்து அனுமதி வரும் வரை நாங்கள் நாட்டை சுற்றிப் பார்க்க அனுமதி தரப்பட்டது.

பதட்டமாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். அந்த நாளும் வந்தது. ஒரு ஆணும், பெண்ணும் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்தார்கள். அந்தப் பெண் என் உடம்பில் கிலோ கணக்கில் போதை மருந்தை வைத்து டேப் சுற்றினாள். வெளியே தெரியாமல் இருக்க பெரிய சைஸ் உடைகள் அணிந்து கொண்டோம். விமான நிலையத்தில் இறக்கி விட்டார்கள். பாஸ்போர்ட், விசா சரி பார்த்து உள்ளே அனுப்பினார்கள். திடீரென்று எங்களை நோக்கி இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள். தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டோம். உடலில் இருந்து போதைப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.....

...... ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்தேன். இவ்வளவு நேரமும் கண்டது கனவா? வியர்வை ஆறாக ஓடியது. ஒரு முடிவுடன் எழுந்தேன். வசுமதிக்கு கண்டிப்பாக முடியாது என்று சொல்லி விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு வங்கி தென்பட்டது.

" சிறு தொழில் தொடங்க உதவி தேவையா? எங்களை அணுக்கவும்." என்று வங்கியின் முன்பு விளம்பர பலகை. இப்போது மனம் பாரம் குறைந்து இலேசானது போல் ஒரு உணர்வு. நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தேன்.

முற்றும்.

Tuesday, April 27, 2010

போலீஸ்

என் பெயர் திவ்யா. ரியல் எஸ்டேட் ஏஜென்டாக வேலை பார்க்கிறேன். வழக்கமாக மாலை 4 மணிக்கு வேலை முடித்து, 3 வயது, 2 வயது பிள்ளைகளை டேகேரிலிருந்து ஏற்றிக் கொண்டு வீடு போய்ச் சேர 5.30 ஆகிவிடும்.

இன்று லேட்டாகி விட்டது. பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வீடு போய், சமையல் செய்து, பிள்ளைகளுக்கு குடுத்து, படுக்க வைக்க வேண்டும். ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து ஒரு மிதி மிதித்தேன். சொய்ங், சொய்ங்...என்று ஏதோ சத்தம். என்ன சத்தம்?. ஓ போலீஸ். சைரன் போட்டுக் கொண்டு பின்னாடியே போலீஸ் கார் வருகிறது. நிப்பாட்டாவிட்டால் தொல்லை. ஆகா! இறங்கி என்னை நோக்கி வருகிறார்.

போலீஸ் : மேம், குட் ஈவினிங்.( மெல்லிய புன்சிரிப்பு )

நான் : குட் ஈவினிங்! ( இனிமேல் எனக்கு பேட் ஈவினிங் தான். அட! என்ன அட்டகாசமாக சிரிக்கிறார் )

போலீஸ் : மேம், நீங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட 20 மைல்கள் அதிக வேகத்தில் சென்றீர்கள்...

நான் : குழந்தைகள் பசியால் அழுகிறார்கள். அதான்......
போலீஸ் : குழந்தைகளா? ( உள்ளே எட்டிப் பார்க்கிறார். இது வரை அழுது கொண்டிருந்த என் பிள்ளைகள் எப்போது அமைதியானார்கள்! )
ஹாய், பேபிஸ்.

போலீஸ் : நீங்கள் செய்தது சட்டப்படி தவறு.( மீண்டும் மெல்லிய புன்சிரிப்பு )

நான் : ம்ம்.... ( ஆகா! மீண்டும் சிரிக்கிறார். எங்கள் நாட்டில் எப்போதும் முறைத்த போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தே பழக்கப்பட்ட கண்கள். இந்த நாட்டில் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகள் சிநேகமாக சிரிக்கின்றார்கள். இந்த சிரிப்பிற்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம்.)

போலீஸ் : நீங்கள் ஸ்பீட் லிமிட் தாண்டி வண்டி ஓட்டியதால் 1 மைலுக்கு 5 டாலர்கள். அப்ப மொத்தம்100 டாலர்கள். அதோடு ப்ராஸஸிங் ஃபீஸ் 50 டாலர்கள்...

நான் : என்னது அம்புட்டு பணமா? இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்களேன்.

போலீஸ் : இப்படியே எல்லாரையும் மன்னித்து விட்டால் நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்து விடும். ( மீண்டும் புன்சிரிப்பு )

நான் : ( மனதிற்குள் ) இவர் சிரிக்கவில்லை என்று யார் அழுதார்கள்.

போலீஸ் : மேம், இந்தாங்கள் டிக்கெட். குட்நைட். ( குழந்தைகளிடம் ) பை பை, பேபிஸ். ( போலீஸ் போய் விட்டார் )

நான் : குட் நைட்டாம் குட் நைட். நான் இனிமேல் எப்படித் தூங்குவேன்.
சிரித்து சிரித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றி விட்டுப் போய் விட்டார்.
எந்த செலவைக் குறைப்பது? பிள்ளைகளை கட்டாயம் டெகேர் அனுப்ப வேன்டும். என்னுடைய ஃபேஸியல், சலான் செலவுகளையும் குறைக்க முடியாது. ஓவர் டைம் செய்து தான் பணம் கட்ட வேண்டும்.

ஏதோ சொத்தையே எழுதிக் குடுக்குறாப் போலை ரீல் விட்டியே... இப்ப 150 டாலருக்கு இவ்வளவு யோசனை.

அட யாரிது? என் மனசாட்சி. ம்ம்...... நீயும் நையாண்டி பண்ற அளவுக்கு என் நிலமை போய் விட்டது. சும்மா கம்முனு கிட.

Monday, April 26, 2010

வாழ்க்கை

இந்தக் கதையின் முதல் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்..
வாழ்க்கை

அடுத்து என்ன செய்வது என்று குழம்பிப் போனேன். என் தோழி ஒருவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்தார். நானும் துணை நடிகை ஆகலாம் என்று முடிவு செய்தேன். நான் நினைத்தது போல இலகுவாக இருக்கவில்லை அந்த வேலை. காலை 6 மணிக்கு போய், வேகாத வெய்யிலில் காத்திருக்க வேண்டும். படத்தில் கதாநாயகி நடந்து போகும் போது குறுக்கும், நெடுக்குமாக நடக்க வேண்டும் அல்லது அவரின் தோழிகளில் ஒருவராக கும்பலோடு கும்பலாக நானும் நிற்க வேண்டும். சில சமயம் பாடல் காட்சிகளிலும் தலை காட்ட வேண்டும். சொற்ப வருமானமே வந்தது.

ஒரு நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. காலையிலிருந்து உண்ணாமல் இருந்த அசதியால் நான் கால் இடறிக் கீழே விழுந்து விட்டேன். காலில் நல்ல அடி. கீழே விழுந்த என்னை ஓடி வந்து தூக்கி நிறுத்தினான் ஒருவன். அவன் பெயர் மனோகர்.

முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தான் முதன் முதலாக காதல் வசப்பட்டேன். கல்யாணம் செய்து கொண்டோம். வாழ்க்கை இனிமையாகப் போனது. அடுத்த வருடமே மகன் பிறந்தான். மகனுக்கு 2 வயதிருக்கும் போது மனோகர் ஒரு விபத்தில் அகாலமரணமாகி விட்டான்.

வாழ்க்கையே இருண்டு விட்டது போல உணர்ந்தேன். கையிருப்பெல்லாம் கரைந்து கொண்டே வந்தது. எதிர்காலம் பற்றிய பயம் வந்தது. அம்மா மீண்டும் தையல் மெஸினை பரணிலிருந்து தூசி தட்டி எடுத்து விட்டார். ஏதாவது லோன் அப்ளை பண்ணு என்று அம்மா என்னிடம் நச்சரித்துக் கொண்டிருந்தார். நான் பதில் சொல்லாது மவுனம் காத்தேன்.

ஒரு நாள் கடை வீதியில் என் தோழி வசுமதியைக் கண்டேன். வசுமதியும் என்னைப் போலவே துணை நடிகையாக இருந்தவள். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விட்டாள்.

பகட்டாக ஆடை அணிந்து, காரில் வந்து இறங்கினாள். இவள் எப்படி இவ்வளவு வசதியாக இருக்கின்றாள்? அங்கிருந்த ஆடம்பரமான கடை ஒன்றில் நுழைந்தாள். நானும் பின் தொடர்ந்தேன். திரும்பி பார்த்தவள் என்னை அடையாளம் கண்டு கொண்டாள். ஆனால் என்னை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள். " வித்யா, நாளை என் வீட்டுக்கு வா எல்லா விபரமும் சொல்கிறேன்" , என்று சொன்னாள்.

தொடரும்....