
நன்றி, அக்கா.
ஃபாயிஜா கொடுத்த விருது.

நன்றி, பாயிஜா.
***********************
இவள் தான் என் கடையில் ரகளை பண்ணியது என்று கடைகாரர் சாட்சி சொன்னார்.
1 2 3... சே! சரியாக எண்ணவில்லை போல இருக்கே. போன முறை எண்ணிய போது 30 வந்திச்சு. இந்த முறை 28 தான் எப்படிக் கூட்டினாலும் வருது. மீண்டும் எண்ணுவோமா 1 2 3....
இது கனவே தான். நான் சிறையில் இருந்து கம்பி எண்ணும் காட்சி கண் முன்னே விரிந்தது. அடடா! காரணம் இன்னும் சொல்லவில்லையா...தொடர்ந்து படித்து விட்டு, ஒரு தீர்வும் சொல்லிட்டுப் போங்கள்.
**********
போன மாசம் ஒரு நாள் இந்தியன் கடை போயிருந்தோம். போனதும் என் மகள் ஒரு சிப்ஸ் பாக்கெட் தூக்கி வைத்துக் கொண்டார். நான் பெரும்பாலும் சிப்ஸ்கள் வாங்குவது குறைவு. வீட்டிலும் பொரியல் வகைகள் மாசத்துக்கு ஒரு தடவை தான் இருக்கும்.
மகள் தூக்கி விட்டதால் மறுப்பு சொல்ல முடியவில்லை. வாங்கியாச்சு. வீட்டிற்கு வந்து பாக்கெட்டை திறந்த நொடி ஒரு வித நெடி நாசியை தாக்கியது. எடுத்து வாயில் வைக்க முடியாமல் ஒரே கசப்பான/அருவருக்கத்தக்க சுவை. பணம் வீணாகி விட்டதே என்று எரிச்சல் ஏற்பட்டது. என் சொத்தையே குடுத்து வாங்கவில்லை என்றாலும் பணம் பணம் தானே.
கணவர் வேலையால் வந்ததும் ஒரு பாட்டம் புலம்பல்.
தூக்கி குப்பையில் போடுங்கள் - என்று சொல்லிவிட்டு கணவர் போய் விட்டார்.
சரி, தூக்கி போடலாம் என்று போனேன். பாக்கெட்டில் போன் நம்பர், தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி போட்டிருந்தார்கள்.
கடையில் போய் ரிட்டன் செய்வது என்பது முடியாத/ நடக்காத காரியம். ரசீதில் சும்மா குரோசரி 1, குரோசரி 2 என்றே விலை போடுவார்கள்.
யு.பி.சி கோட் ஸ்கேன் பண்ணினாலும் ரசீதில் அந்த தகவல்கள் வராது.
அதோடு, முன்பொரு முறை ஒரு வயதான தம்பதிகள் ஏதோ ஒரு பொருளை ரிட்டன் செய்ய முயன்ற காட்சி கண் முன்னே ஓடியது.
கடைகாரர் : இது என்ன?
தம்பதிகள் : இங்கே வாங்கிய பொருள் தான். வாயில் வைச்சாலே கப்படிக்குது. திரும்ப காசு குடுங்க!
க.காரர்: முடியாது.
தம்பதிகள் : அப்ப நாங்க போக மாட்டோம்.
க.காரர் : போலீஸை கூப்பிடவா..
( இந்த காட்சி தான் நினைவில் வந்து... மேலே கனவில் வந்து...)
இதற்கு மேல் நான் அங்கு நிற்க விரும்பாமல் வீடு வந்து விட்டேன். போலீஸ் வந்தாலும் கடை காரருக்கு தான் ஆபத்து. இது அவருக்கு தெரிந்தாலும் அந்த வயசான தம்பதிகளை மிரட்டவே அப்படி செய்தார்.
இந்த சம்பவங்கள் எல்லாம் கண் முன்னே விரிந்து, கடைப் பக்கம் போகாதே என்று எச்சரிக்கை செய்தது.
அடுத்த நாள் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினேன். இப்படி சரியில்லாத பொருளை அடுத்தவர் தலையில் கட்டுவது சரியா, நியாயமா, அடுக்குமா... என்ற ரீதியில் தட்டி விட்டேன் ஒரு மெயில்.
மெயில் அனுப்பியதோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். இந்த உலகத்தில் நல்லதா நாலு வார்த்தை புகழ்ந்து எழுதினாலே கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த லட்சணத்தில் இப்படி திட்டி மெயில் அனுப்பினால், படிப்பவர்களுக்கு கடுப்பு வந்து, படித்த உடனே கிழித்து குப்பையில் எறிந்துவிட்டு தானே மறுவேலை பார்ப்பார்கள்.
கிட்டத்தட்ட 2 நாட்களின் பின்னர் ஒரு மின்னஞ்சல் அந்த நபரிடமிருந்து. தயக்கத்துடனே திறந்தேன். என்ன அர்ச்சனை நடந்திருக்கோ என்று யோசனை.
அந்த நபர் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தார். பாக்கெட்டில் இருந்த நம்பர், மேலும் சில தகவல்கள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு என் வீட்டு முகவரியும் தந்தால் புதிதாக ஒரு சிப்ஸ் பாக்கெட் அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்.
என் ஆத்துக்காரரிடம் சொன்னேன். அவர் சொன்னார், " இந்த பிசாத்து காசுக்கு இவ்வளவு நேரத்தை ஏன் செலவு செய்ய வேண்டும் ."
ஆனால், எனக்கு அவர்கள் செய்வது சரி என்றே படவில்லை. அந்தக் கடையில் குறைந்தது 20 சிப்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. எத்தனை பேர் வாங்கி ஏமாந்து போயிருப்பார்கள். யார் என்னைப் போல ( வேலையில்லாதவள்ன்னு முணு முணுப்பது கேட்குது ) இப்படி மெயில் அனுப்பி கேள்விகள் கேட்கப் போகிறார்கள்.