Wednesday, September 7, 2011

எல்லோரும் நலமா?

எல்லோரும் நலமா? எங்கை தான் போய் தொலைஞ்சியோ தெரியலைன்னு முணு முணுப்பது கேட்குது!! சில, பல வேலைகள். அன்பாக மெயில் அனுப்பிக் கேட்டவர்களுக்கு பொறுப்பா பதில் அனுப்பினேன். மகள்  இந்த வருடம் கின்டர்கார்டன் போவதால் நிறைய வேலைகள். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய பொருட்கள் வாங்கியது, பல் மருத்துவர், பீடியாட்ரிஷன் என்று அலைந்து திரிந்து, நிரப்ப வேண்டிய படிவங்கள் நிரப்பி, போட வேண்டிய ஊசிகள் போட்டு.... மகள் ஸ்கூல் போகத் தொடங்கியதும் வீட்டில் ஒரு வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது. நிலநடுக்கம், புயல், தண்ணீர் பிரச்சினை, பவர் கட் என்று பல காரணங்களால் பள்ளி ஒரு வாரம் லேட்டாக ஆரம்பமானது. மகள்   ஆர்வமாக பள்ளி சென்று வர, நான் குழம்பி போய் கிடக்கிறேன்.  இன்று கின்டர்கார்டன்...  நாளை கண் மூடித் திறப்பதற்குள் கல்லூரி. மீண்டும் பிள்ளைகளின் மழலைப் பருவம் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.


இப்ப கொஞ்ச நாட்களாக காலையில் எழுந்ததும் என்னுடைய தினபலன் என்னவென்று பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. சும்மா பார்ப்பேன் பிறகு மறந்தும் விடுவேன். இந்தியாவில் இருந்த போது தோன்றிய பழக்கம். நானும் என் சகோதரியும் விளையாட்டாக பார்க்கத் தொடங்கினோம். தினபலனில் தோல்வி என்று போட்டிருந்தால், அக்கா! இன்று உனக்குத்  தோல்வியாமே. டெஸ்டுக்கு ஒழுங்கா படி என்று என் தங்கை கடுப்படிப்பது பொறுக்காமல் படுக்கைக்கு போகு முன்னர் பார்த்து விட்டு படுப்பேன். அப்பாடா! நாள் முடிஞ்சுது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவேன்.
 நாளடைவில் அந்தப் பழக்கம் மறைந்து விட்டது. இப்ப கொஞ்ச நாட்களாக மீண்டும் ஒரு ஆர்வம்.   ஒரு நாள் எனக்கு " மறதி " என்று போட்டிருந்தார்கள்.


சூப்பர் மார்க்கெட் போய் வந்த பின்னர் காரில் மறதியாக பொருட்களை விட்டுட்டு  வீட்டுக்குள் வந்து விட்டேன்.  என்னவோ மறந்து போனேன் என்பது மட்டும் ஞாபகம் இருந்தது ஆனால் என்னவென்று ஞாபகம் இருக்கவில்லை. மதியம் சாப்பிடுக் கொண்டே இன்று  சூப்பர் மார்க்கெட் போய் பால் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுகிறேன். திடீரென ஒரு மின்னல்... அட! கடைக்குப் போய் வந்தாச்சு அல்லவா என்று சிரித்துக் கொள்கிறேன். அப்ப பால் எங்கே, என்று அடுத்து ஒரு கேள்வி தோன்ற குளிர்சாதனப் பெட்டியை திறந்தால் பால் அங்கில்லை. பால் மட்டும் அல்ல  ஜூஸ், பழங்கள் எல்லாமே மிஸ்ஸிங்.  காரில் பொருட்களை வைத்தது ஞாபகம் வர காரினை நோக்கி ஓடினேன்.  லேசான குளிர் வெதர் என்பதால் பொருட்கள் அப்படியே இருந்தன.

எனக்கு கிரகம், கோல்கள்,  நல்ல நேரம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் தினபலனில் மறதி என்று போட்டிருந்ததை  போனா போகுது என்று ஒதுக்க முடியவில்லை.  தினபலனில் மறதி என்று போட்டிருந்ததால் மறதி வந்ததா அல்லது மகள் முதன் முதலாக பள்ளி போன டென்ஷனால் மறதி வந்ததா தெரியவில்லை.  எது எப்படியோ நாளை என்ன பலன் என்று படுக்கைக்கு போகு முன்பு தான் பார்க்க வேண்டும்.


************************************


அமெரிக்காவில் ஒருவர் தோசை சுட்டு விற்பனை செய்கிறார். நல்ல வரவேற்பு அவரின் தோசைக்கு. வட்ட வடிவமான தோசை, நடுவில் மசாலாக் கறி, சட்னி என்று அமர்களமான பிஸ்னஸ். காலை முதல் கடை முன்பு நல்ல கூட்டம். பெரிய தோசைக் கல்லில் லாவகமாக மாவை ஊற்றி, பரவி, எண்ணெய் ஊற்றி, மசாலாக்  கறி பரவி.... இதெல்லாம் ஒரு நியூஸ்? தோசை வட்டமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள்  முணுப்பது காதில் விழுகிறது. தோசை சுடுபவர் ஒரு அமெரிக்கர்.

சில வருடங்களின் முன்னர் இவருக்கு வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் போய் விட்டதாம். சந்நியாசம் செல்ல முடிவு செய்தவர் இந்தியாவுக்கு பிளைட் ஏறினார். அங்கு ஏதோ ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து கொண்டாராம்.  அங்கிருந்த  " அம்மா " என்ற பெண்மணி இவருக்கு தோசை சுடுவது, அரைப்பது, கிழங்கு மசாலா, சட்னி வைப்பது என்று எல்லாமே சொல்லிக்  கொடுத்தாராம். வாழ்க்கை வெறுத்து இந்தியா  போனவர் மீண்டும் ஒரு புது மனிதராக  அமெரிக்கா வந்து, சொந்தமாக ஒரு தோசைக் கடை திறந்து அமோகமாக வாழ்வதாக சொன்னார்.  வாழ் நாள் வரைக்கும் அம்மாவை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.