Saturday, April 2, 2011

Sweet potato pie


கிழங்கு ( sweet potatoes )- 5
சீனி - 3/4 கப்
1/2 டீஸ்பூன் - உப்பு
சினமன் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த ஜிஞ்சர் தூள் ( dry ginger powder ) - 1/2 டீஸ் பூன்
கராம்பு தூள் - 1/4 டீஸ் பூன்
முட்டை - 2
கார்னேஷன் பால் - 12 அவுன்ஸ் ( 1 1/2 கப் )
1 அன் பேக்ட் பை ஷெல் ( 9" )


அவனை 350 ப்ரீ ஹீட் செய்யவும். கிழங்குகளை ட்ரேயில் வைத்து, அவனில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். முள்ளுக் கரண்டியால் குத்தி பார்த்துக் கொள்ளவும். கிழங்கு நன்கு வெந்திருக்க வேண்டும். பேக் செய்த கிழங்குகளை நன்கு ஆற விடவும். பின்னர் தோல் நீக்கி, ஃபுட் பிராஸஸரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

சீனி, உப்பு, மற்றும் பொடி வகைகளை கலந்து வைக்கவும்.
முட்டைகளை நன்கு அடிக்கவும். இதனுடன் கூழாக்கிய கிழங்கு ( 15 oz ) சேர்க்கவும்.
பின்னர் கார்னேஷன் பால் சேர்க்கவும். சீனி கலவையை சிறிது சிறிதாக கொட்டி நன்கு கலக்கவும்.

425 F ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் இந்தக் கலவையை 15 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு 350 டிகிரி F க்கு குறைத்து 40 - 50 நிமிடங்கள் பேக் செய்யவும். நடுவில் வெந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள கத்தியால் குத்திப் பார்க்கவும். வேகவில்லை எனில் மேலும் சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இந்த ரெசிப்பி Libby's pumpkin can இலிருக்கும் ரெசிப்பி. அவர்கள் பம்கின் ஃபில்லிங் பாவித்து செய்திருந்தார்கள். நான் sweet potato ஃபில்லிங் வைச்சு செய்தேன். பை ஷெல் கடையில் வாங்கியது.Thanks : Libby's

Thursday, March 31, 2011

அவஸ்தை

குமாருக்கு வாழ்க்கையே வெறுத்து விடுமளவிற்கு விரக்தியாக இருந்தது. எப்படி இதிலிருந்து தப்பலாம் என்று பலவாறாக யோசனை செய்தான்.

அப்பா, அம்மா இருவரும் இவனைக் கட்டாயம் கட்ட சொல்லி ஒரே தொல்லை. இவனுக்கு மட்டும் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற ஆசை தான். ஆனால், சிறு வயதில் நேர்ந்த கசப்பான அனுபவம் இன்னும் நினைவில் நின்றது.சிறுவயதில் தவறு விடுவது இயல்பு தானே. இப்பவும் அதையே நினைக்காமல் கட்டுப்பா என்று அப்பா மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்.


ஆங்! இவருக்கென்ன இலேசா சொல்லிட்டுப் போயிடுவார். அதைக் கட்டிக் கிட்டு, இந்த நாட்டில் எப்படி காரில் ஏறி, இறங்கி, போகும் இடம் எல்லாம் எல்லோரும் பார்ப்பார்களே.

இதற்கு ஆயிரம் விளக்கம் சொல்லித் தொலைக்க வேண்டும்.


ஏதோ ஒரு படத்தில் லைலா பொண்ணு பார்க்கும் நாள் அன்று வீட்டிற்கு வராமல் பஸ்ஸில் ஏறி எங்கோ போய்க் கொண்டே இருப்பாரே அது போல செய்யலாம் என்று நினைத்தான்.

நீ மட்டும் கல்யாணத்தன்று சொதப்பலா ஏதாச்சும் செய்தே அவ்வளவு தான் நீ எனக்கு மகன் இல்லை என்று அப்பா மிரட்டலோ அல்லது கெஞ்சலோ என்று இனங்காண முடியாத குரலில் எச்சரிக்கை விடுத்தார்.


சொந்தங்கள் வேறு தொலைபேசியில், என்னப்பா! இப்படிப் பண்ணிட்டே. நீ கட்டலைன்னா வேறு யார் கட்டுவா என்று ஒரு நாளைக்கு குறைஞ்சது 2 தொலைபேசி அழைப்புகள்.


அப்பா! உங்களுக்காக இதைக் கட்டித் தொலைக்கிறேன். ஆனா கல்யாணம் முடிஞ்சதும் இதைக் கழட்டி விட்டுட்டு தான் மறு வேலை. சரியா?, என்று சொன்ன மகனை சந்தோஷத்துடன் பார்த்தார் அப்பா.


அம்மா ஒரு பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தார். பெட்டியில் அழகிய பட்டு வேஷ்டி குமாரைப் பார்த்து கதைகள் சொன்னது.

அம்மா, என்ன இது நான் வேஷ்டி கட்டுறேன் என்று சொன்னதும் மறதியா உங்கள் புடவையை கொண்டு வந்திட்டீங்களா? என்று கேட்டவனை தாய் செல்லமாக முறைத்தார். இல்லைப்பா அதான் நீ கட்டப் போற பட்டு வேஷ்டி. மாப்பிளைக்கும் இது போல் பட்டு வேஷ்டி, தோழன் உனக்கும் பட்டு வேஷ்டி தான் என்று சொல்லிவிட்டு, சமையல் அறையில் போய் மறைந்து கொண்டார்." அப்பா, இந்த வேஷ்டி குறைஞ்சது 5 கிலோ இருக்குமா?", என்றான்.

" டேய்! நீ சிங்கம்டா. 5 என்ன 50 கிலோவும் தூக்கும் உடல் வலிமை உனக்கு இருக்கு ராசா ", என்றார்.

அன்று முழுவதும் இவனுக்கு தூக்கமே வரவில்லை. இதை எப்படி இடுப்பில் இறுக்கமா கட்டுவது என்று யோசனை ஓடியது.

பெல்ட் அல்லது இறுக்கமா கயிறு கட்டினால் விழவே விழாது என்று அப்பா ஆறுதல் சொன்னார்.


ஒவ்வொரு நாளும் வேலையால் வந்ததும் வேஷ்டி கட்டிக் கொண்டு வேகமாக நடந்து பழகினான்.


நாளடைவில் வேஷ்டி கட்டிக் கொண்டு ஓடினான், தாவினான். இப்படி பலதும் செய்யும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டான். தமிழ் ஹீரோக்கள் போல இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு வேகமாக நடந்து பார்த்தான். வேஷ்டி மிகவும் பிடித்துக் கொண்டது.


தங்கையின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தது. ஒரு நாள் வேலையால் வந்தபோது தங்கை கண்களை கசக்கியபடி இருந்தாள். அவள் வருங்கால கணவர் வேஷ்டி கட்டமாட்டேன் என்று சொல்லி விட்டாராம். இவன் வேஷ்டியின் மகிமைகள் பற்றி எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாப்பிள்ளை கேட்டபாடு இல்லை. நான் திருமணத்திற்கு வரவே போவதில்லை என்று கண்டிப்பா சொல்லிவிட்டாராம்.


ஏதோ ஒரு வட இந்தியன் கடையில் போய் குர்தாவோ ஏதோ ஒரு வாயில் நுழையாத ஆடை வாடகைக்கு எடுத்து, அதற்கு பொருத்தமா தலைப்பாவும் கொடுத்தார் கடைக்காரன். விடிந்தால் கல்யாணம். குமாரின் பெரிய மண்டைக்கு தலைப்பா நுழையவே இல்லை. மாப்பிள்ளை எப்படியோ உள்ளே தலையை நுழைத்துக் கொண்டார். குமாருக்கு அழுகை வந்தது. தங்கை மேல் எவ்வளவு பாசம் இருந்தா இப்படி கவலைப்பட்டு கண் கலங்கி அழுவான் என்று பக்கத்தில் இருந்தவர் யாரோ சொன்னார். தலைப்பா விழா வண்ணம் ஒரு கையினால் பிடித்தபடி அந்த ஆளை அறையலாமா என்பது போல முறைத்து பார்த்தான்.

கெட்டி மேளம் முழங்க தங்கையின் கழுத்தில் தாலி ஏறியது. குமார் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, தலைப்பாவை எடுத்து கக்கத்தில் செருகியபடி, அறையினை நோக்கி ஓடினான்.