ஜப்பானில் வந்த நிலநடுக்கம், சுனாமி பற்றி எல்லோருக்கும் தெரியும். ஜப்பானில் ஒரு மூதாட்டி ( வயது 70 க்கு மேல் ) சுனாமி சைரன் கேட்க தொடங்கியதும் வேகமாக சைக்கிளில் மிதிக்க ஆரம்பித்தாராம். இவர் குடியிருந்த வீடு தண்ணீரோடு போய் விட, இவர் மட்டும் சைக்கிளை மிதிச்ச மிதியில் தப்பி பிழைத்து பாதுகாப்பான இடத்திற்கு போய் சேர்ந்து விட்டார். இப்போது அரசாங்கம் வழங்கிய ஷெல்டரில் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய பயம் இவர் கண்களில் தெரிந்தது. இவர் ஒரு விவசாயி. தோட்டத்தில் கடுமையாக வேலை செய்ததால் இவருக்கு இந்த உடல் தைரியம், மன தைரியம் இயற்கையாகவே அமைந்திருக்கும் போல. இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு தொல்லையாக இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தவர் கண்களில் வெறுமை தெரிய, இனிமேல் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை என்றார் கலக்கத்துடன்.
***********************
சமீபத்தில் ஒரு சேர்வே ( survey ) எடுத்தார்களாம், ஆண்களா பெண்களா வேலைகளை ஒழுங்கா செய்து முடிப்பது, நேர்த்தியாக செய்வது இப்படி பல விடயங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. முடிவு என்னவென்று உங்களுக்கு/எல்லோருக்கும் தெரியுமே! எடுத்த வேலைகளை செய்து முடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் என்பது தான் முடிவாம்.
உதாரணமாக, இடியோடு கூடிய மழை வரப் போகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கதறினால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்வார்களாம். ஆனால், ஆண்கள் கூரை மீது ஏதாவது ஃபிக்ஸ் பண்ணப் போறேன்னு ( கூரையில் ) ஏறி நிற்பார்களாம் அல்லது golf விளையாடப் போறேன்னு கிளம்பி விடுவார்களாம்.
இதுக்கு எல்லாம் எதுக்கு survey. எங்களை கேட்டா நாங்களே சொல்லியிருப்போமே!!!!
**********************
ஒரு கிழிந்த டாலர் நோட்டு. என் ஆ.காரர் தலையில் யாரோ கட்டி விட்டார்கள். ஒரு ஓரமா கிழிச்சிருந்தா கூட பரவாயில்லை. 1/8 பகுதி மிஸ்ஸிங். என் ஆ.காரர் சொன்னார் இதை இனிமேல் பாவிக்க முடியாது தூக்கி கடாசிட வேண்டியது தான். அவர் சொல்றார் என்பதற்காக கடாசிட முடியுமா? யாசிப்பவர்களுக்கு குடுக்கலாம். ஆனால் குடுத்தா ஒழுங்கா, நல்ல நோட்டா குடுக்கணும் என்பது எங்கள் பாலிஸி. இரண்டு நாள் டைம் குடுங்க யார் தலையிலாவது கட்டிட்டு தான் மறு வேலை என்று சபதம் எடுத்தேன். ஏதோ ஒரு பொருள் வாங்கிய பின்னர் நோட்டினை மடித்து குடுத்தேன். ஆனால், கடைக்காரர் ஒரு பார்வை பார்த்திட்டு திரும்ப தந்து விட்டார். அங்கேயே நின்றால் அடித்து விடுவாரோ என்று பயத்தில் வந்து விட்டேன்.
நேற்று கடைக்கு போனேன். இங்கே சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கிய பின்னர் நாங்களே ஸ்கான் பண்ணி, பில் போட்டு வரக் கூடிய ஷெல்ப் செக் அவுட் ( self check out ) வசதியும் இருக்கு. இதை விட்டா வேறு சந்தர்ப்பம் வராது என்று அந்த டாலர் நோட்டை உள்ளே தள்ளி விட்டேன். மெஸின் அதை வெளியே துப்பிவிட்டது. நான் விடுவேனோ பார் என்று மீண்டும் கிழிஞ்ச பக்கம் முதல் போகும்படி உள்ளே தள்ளினேன். குறைஞ்சது 2 நிமிடங்கள் மெஸின் மவுனம் சாதிச்சது. சரி! காசு அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டேன். சில நிமிடங்களின் பின்னர் பச்சை சிக்னல் வந்தது. மெஸின் வேறு வழி இல்லாமல் என் காசை எடுத்துக் கொண்டதன் அடையாளம் அது. இனி மெஸினின் சாமர்த்தியம் அதை வேறு யாராவது தலையில் கட்டுவது.
******************