Friday, September 16, 2011

மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்கணுமா?

என் மகனுக்கு 1 வயசாக இருந்த போது மாலில் வின்டோ ஷாப்பிங் & நடக்க போயிருந்தோம். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். ஒரு பெண்மணி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு சங்கடமாக இருந்தது. முகத்தினை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். ஆனால், குறு குறுவென அவரின் பார்வையினை உணர முடிந்தது.
ஹாய், என்றேன்.
அவரும் ஹாய் என்றபடி பக்கத்தில் வந்தார்.
உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் ஆனால் எங்கே என்று சரியா ஞாபகம் இல்லை, என்றார்.
எனக்கும் அவரின் முகம் பரிச்சயமாக தெரிந்தது. ஒரு வேளை போன ஜென்மத்தில் தோன்றிய பந்தமாக இருக்குமோ? எப்படிக் கேட்பது என்று தயங்கி நின்றோம்.
இதற்கிடையில் என் கணவர் நான் இருந்த பக்கம் வந்தார். நாங்கள் இருவரும் தடுமாறுவதை பார்த்து புன்முறுவலுடன் சொன்னார், எனக்கு உங்களை ஞாபகம் இருக்கு என்றார் அந்தப் பெண்மணியிடம்.
நான் இப்பவும் ஙே தான். இவங்களை ஞாபகம் இல்லையா? ஒரு ஆறு வாரம் நான் பட்ட சித்ரவதையை எப்படி மறக்க முடியும்...... இப்ப கொஞ்சம் ஞாபகம் வந்தது.

நீங்க திருமதி. பிரவுன் தானே என்றேன். அவருக்கே ஆச்சரியம். எப்படி என் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறாய் என்றபடி கைகளை குலுக்கினார்.
*********************************
நான் மாசமாக இருந்தபோது உதவிக்கு என் கணவரை விட்டால் யாரும் இருக்கவில்லை. என் பெற்றோருக்கும் விசா பிரச்சினை. அவர்கள் வருவார்களா, இல்லையா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. என் மருத்துவர் கர்ப்பமாக இருப்பவர்களுக்கு ப்ரோகிராம் நடத்தப்படுகிறது அதில் சேர்ந்தால் நலம் என்று சொன்னார். நானும் பிறந்த குழந்தைக்கு டயப்பர் மாற்றுவது, இன்னபிற வேலைகளை என் கணவருக்கு பழக்கப் போகிறார்களாக்கும் என்று நினைத்து, என் கணவரை நச்சரித்து வகுப்பில் சேர்ந்து கொண்டோம். இதில் என் ஆ.காரருக்கு கடுப்பினை ஏற்படுத்திய இரண்டு விடயங்கள்
1. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் காலை 7 மணிக்கு வகுப்புகள் ஆரம்பம்.
2. நான் எதுக்கு வெட்டியா வந்து அங்கனை உட்கார வேண்டும்

அதெல்லாம் முடியாது நீங்க கண்டிப்பா வர வேண்டும் என்று கூட்டிக் கொண்டு போனேன்.
அறிமுக படலம் நடந்தது. அதில் ஒருவர் தான் திருமதி. பிரவுன். தொடக்த்தில் அவர் தன்னைப் பற்றிச் சொன்ன போது பெரிதாக எதுவும் மனதில் பதியவில்லை.
எனக்கு பிரசவ வலியை நினைச்சா பயமா இருக்கு. ஆஸ்பத்திரியில் நான் நுழைஞ்ச உடனை எனக்கு வலியை குறைக்கும் மருந்தினை தந்திடோணும் என்று கண்டிப்பா கூறினார். நான் கொஞ்சம் தைரியமான ஆள். ஆனால் இவரின் பயத்தினை பார்த்ததும் எனக்கு பயம் தொற்றிக் கொண்டது.
உனக்கு எப்ப குழந்தை பிறக்கு என்று நேர்ஸ் கேட்க, அவர் பிப்ரவரி 29 என்று சொல்ல, எனக்கு அவரின் முகம், பெயர் & பேச்சு அப்படியே பதிந்து போனது.
நாலு வருஷத்துக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடினா போதும் இல்லை என்று எல்லோரும் சிரித்தார்கள்.

அடுத்த தம்பதிகள் அறிமுகபடலம் தொடங்கியது.
எங்க இரண்டு பேருக்கும் என் அம்மா, அப்பாவை ஆஸ்பத்திரிக்குள் விடாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
ஓ! ஆஸ்பத்திரிக்குள் வராதே என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் நீ இருக்கும் ரூமுக்குள் வர விடாமல் தடுக்கலாம் என்றார் நேர்ஸ்.
நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது என் அம்மா என் குழந்தையை பார்க்கவே கூடாது என்று அந்தப் பெண்மணி மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

உனக்கு என்ன செய்ய வேணும் என்று இப்பவே சொல்லிடு என்றார் நேர்ஸ் என்னைப் பார்த்து. எனக்கு என் அம்மா, அப்பா வர வேண்டும் என்றேன்.

நேர்ஸ் சிரித்துக் கொண்டார். என்ன உலகமடா இது! அவர்கள் வர வேண்டாம் என்கிறார்கள். நீ உன் பெற்றோர்கள் கட்டாயம் வரணும் என்கிறாய், அதோ அந்தப் பெண்மணிக்கு ஆஸ்பத்திரிக்குள் நுழைஞ்ச உடனை ஊசி போடணுமாம்.... என்னவோ போங்கப்பா என்று சிரித்துக் கொண்டார்.

ஆனால் நான் நினைத்தது போல அந்த வகுப்பில் குழந்தைக்கு டயப்பர் மாற்றுவதோ அல்லது பிறந்த குழந்தையை எப்படிக் கையாள்வது என்றோ சொல்லித் தரவில்லை. என் ஆ.காரரின் நித்திரை கெடுத்தது தான் மிச்சம் என்று நானே உணர்ந்து கொண்டேன்.
***********************
இப்ப தெரியுதா இவங்க யார் என்று? - என்றார் ஆ.காரர்.
ம்ம்ம்... உனக்கு மாசி 29 அன்றா குழந்தை பிறந்தது என்று ஆர்வமாக கேட்டேன். அவருக்கே பெரிய ஆச்சரியம். இதெல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய் என்றார். இல்லை எனக்கு மார்ச் 1 அன்று பிறந்திச்சு என்றார்.

இப்ப என் கதைக்கு வருவோம். நான் பயந்தது போல ஆஸ்பத்திரியில் இருந்த நேர்ஸ் பயப்படவில்லை.
"ஹே! டாட் (dad ) , கமான்யா. டயப்பரை கட்டு, என்றார்.
என் ஆ.காரரும் ஒரு நொடியில் டயப்பர் விழா வண்ணம் மகனின் இடுப்பில் கட்டிய பிறகு ஒரு வெற்றிப் பார்வை பார்த்தார். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா என்று அவரின் பார்வை சொல்லியது.

இதெல்லாம் இயற்கையாக நம்மில் இருப்பது. இதுக்கு வகுப்புகள் எதுவும் தேவையில்லை என்று எங்கோ ஒரு மூலையில் பொறி தட்டியது.