Friday, April 23, 2010

அமெரிக்காவும் அபியும்!

ஊரில் எல்லோரும் அமெரிக்கா மாப்பிள்ளை வேண்டும் என்று தேடித்திரிய, எனக்கு வலிய வந்த வரன் பிரசாத். என் பெயர் அபிராமி (சுருக்கமாக அபி ).
கல்யாணமாகி சரியாக ஒரு வருடம் நாற்பது நாட்கள் . கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். அமெரிக்காவில் கூட்டுக் குடும்பமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இருங்கள் என் வீட்டாரைப் பற்றி சொல்கிறேன்.

அதோ வருகிறார் பாருங்கள் அவர் தான் என் மாமனார். புகையிரதவண்டி போல எப்போதும் அவர் வாயிலிருந்து புகை வந்தபடி இருக்கும். எனக்கு சிகரெட் மணம் என்றாலே குமட்டிக் கொண்டு வரும். என் மாமனாரிடம் எப்போதும் நான்கடி தள்ளி நின்றே கதைப்பேன்.

மாமனார் ( மனதிற்குள் ) என்ன அபி பார்வையே சரியில்லை. தேநீர் குடிக்க வேண்டும் போல இருக்கு. மனைவியிடம் கேட்க முடியாது. கேட்டாலும் வராது. இவளை விட்டால் வேறு கதி. சும்மா சிரித்து வைப்போம்.


நான் ( மனதிற்குள் ) ம்ம்ம் ... மாமனார் எதற்கோ அடிப் போடுறாப் போல இருக்கு.
( சத்தமாக ) எனக்கு தலைவலி. நான் படுக்கப் போறேன்.

அங்கே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது தான் என் மாமியார். சாரு கானிலிருந்து டாம் குரூஸ் வரை எல்லாமே அத்துப்படி. ஓய்வு எடுத்தே டயர்டா போய் விடுவார் என் மாமியார். நான் தான் சமையல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வீடு இரண்டு பட்டுவிடும்.

மாமியார்: ( மனதிற்குள் ) சமைக்காமல் என்ன வேடிக்கை? .
( சத்தமாக ) அபி , வந்து இப்படி இருந்து டி.வி. பாரும்மா.


நான் : ( மனதிற்குள் ) இதுக் கொன்றும் குறைச்சல் இல்லை.
( சத்தமாக ) பரவாயில்லை. நான் சமைக்கப் போகிறேன்.

இவர் பக்கத்திலேயே புதையல் காத்த பூதம் போல ஒன்று இருக்குமே அது எங்கே? ஓ.. அங்கே அறையில் மைக்கேல் ஜாக்ஸன் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது பாருங்க. மைக்கேல் ஜாக்ஸன் பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார். இந்தக் கொடுமையை கேட்க பார்க்க ஆளில்லையா? இவர் யாரா? என் கணவரின் தம்பி ரோஹித் . பூசனிக்காய் போல இருப்பான். ஹாலோவீனுக்கு பூசனிக்காய் வாங்கி, பற்கள் செதுக்காமல் இவனை வாசலில் நிற்க வைக்கலாம்.

ரோஹித் : ( மனதிற்குள்) பசி வயிற்றைக் கிள்ளுது. சமைக்காமல் என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கு.
( சத்தமாக ) அண்ணி, என் ஆட்டம் எப்படி?நான்: ம்ம்... சூப்பர்.
( மனதிற்குள் ) இதற்கு மேல் நின்றால் ஆடியே கொலை செய்வான்.

அடுத்து என் கணவர். வேலைக்குப் போய் விட்டார். வீட்டில் நடப்பது எதுவுமே தெரியாது அல்லது தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டமாட்டார்.

இன்று என் பிறந்தநாள் என் மாமனார் அசத்தி விட்டார். நண்பர்கள், உறவினர்கள் என்று வீடே நிறைந்து விட்டது. கேக், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் என்று ஒரே ஆரவாரம்.

நான் உறவினர் பெண்ணிடம் : நான் ரொம்ப லக்கி. என் மாமனார், மாமியார் போல உலகத்தில் யாருமே இல்லை. ரோஹித்தும் அண்ணி அண்ணி என்று சுற்றி வருவான்.

மாமியார் : எங்க மருமகள் ரொம்ப நல்லவள். என்னை சமையல் அறைப்பக்கம் போகவே விடமாட்டாள். பெண்ணை நல்லா வளர்த்திருக்கிறார்கள்.

மாமனார் : என் மருமகள் சொக்கத்தங்கம். எனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்வாள் ( இலேசாக கண்கள் கலங்குகின்றது).

விருந்தினர்கள் எல்லோரும் போய் விட்டார்கள். வீட்டில் எல்லோரும் படுத்து விட்டார்கள்.

ம்ம்... என்ன வேடிக்கை இங்கே. என் குடும்பத்தில் மூக்கை நுழைத்தது போதும். எல்லோரும் போய் ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும். நாங்கள் அடிச்சுக்குவோம் பிறகு அணைத்துக் கொள்வோம். எல்லோரும் போய்ட்டு வாங்க.

Tuesday, April 20, 2010

வாழ்க்கை

என் பெயர் வித்யா.
நான் ஷோகேஸில் இருந்த பொம்மை அணிந்திருந்த சல்வார் வேண்டும் என்று அம்மாவோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நேரம் தான் அவர் எங்களை நோக்கி வந்தார். உயரமாக, கண்ணாடி அணிந்திருந்தார். பெயர் தில்லை, ஊர் சென்னை என்றார்.
" உங்கள் பெண்ணின் அழகிற்கு அவர் மாடலிங் போனால் சிறப்பான எதிர்காலம் உண்டு " என்றார்.
அம்மா தயங்கினார். அப்பா இறந்து போய் 5 வருடங்கள் ஆகின்றது. அப்பாவுக்கு குடிப்பழக்கம் அதோடு போதைப் பழக்கமும் தொற்றிக் கொண்டது. அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பாவைக் காப்பாற்ற முடியவில்லை. அதோடு போதிய பொருளாதார வசதியின்மையும் அப்பாவின் மரணத்திற்கு காரணமானது.

தில்லை அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்து விட்டுப் போய் விட்டார். அம்மாவிற்கு என்னை மாடலிங் துறைக்கு அனுப்ப கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. வீடு வந்து சேர்ந்தோம்.

இதை வீடு என்று சொல்லவே அறுகதை இல்லை. ஒரு அறை, ஒரு ஹால். ஹாலின் ஒரு புறத்தை அடைத்து சமையல் அறை என்று சொன்னார் வீட்டு ஓனர். ஹாலின் மறு புறம் அம்மாவின் தையல் மெஸின், தைக்க வேண்டிய துணிகள் குவிந்திருந்தன. அம்மாவின் தையல் தான் எங்கள் இருவருக்கும் சோறு போட்டது. மேல் தளத்தில் மூன்று வீடுகள். கீழ் தளத்தில் மூன்று வீடுகள். எல்லோருக்கும் பொதுவாக இரண்டு பாத்ரூம்கள். காலையில் எழும்பி போய் லைனில் நின்று, குளித்து வருவதற்குள் வாழ்க்கையே வெறுத்து விடும்.

நான் அம்மாவிடம் கண்டிப்பாக சொல்லி விட்டேன். நான் கட்டாயம் மாடலிங் போகப் போகிறேன் என்பதை. இது வலிய வந்த சீதேவி. காலால் எட்டி உதைக்காமல் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட யோசனையின் பின்னர் அம்மா அரை மனதுடன் சம்மதித்தார்.

நான் பள்ளி போவதை நிப்பாட்டினேன். உலகமே என் காலடியில் இருப்பதை போன்ற உணர்வு. தில்லைக்கு என் முடிவை சொல்லி விட்டேன். அடுத்த வாரமே தில்லை வந்தார். எங்களை அவரின் அலுவலகம் கூட்டிச் சென்றார். எனக்கு எப்படி நடப்பது, சிரிப்பது, காமராவை பார்ப்பது என்று பல விடயங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. அம்மா பிரமிப்பு அடங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.

நான் முதன் முதலில் மாடலிங் பண்ணியது ஒரு புடவை விளம்பரம். விலையுயர்ந்த சேலையை கண்ணால் மட்டுமே பார்த்து ரசித்த எனக்கு அவ்வளவு விலை உயர்ந்த புடவையை அணிந்திருக்கிறேன் என்று நினைவே இனிமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து மளமளவென வாய்ப்புகள் பெருகியது. பணமும் பெருகியது. திரும்பிய பக்கமெல்லாம் என் விளம்பரங்களே. நாங்கள் வேறு வீடு போனோம். வசதி வாய்ப்புகள் பெருகியது. அம்மாவின் தையல் மெஸினை எடுத்து பரணில் போட்டேன்.

தொடர்ந்து நான்கு வருடங்கள் மாடலிங் துறையில் கொடி கட்டிப் பறந்தேன். வடக்கில் இருந்து வந்த பெண்களால் என் மாடலிங் தொழில் ஒரு முடிவுக்கு வந்தது. பிஸியாக இருந்த நான் ஓரங்கட்டப்பட்டேன். தில்லையும் கைவிரித்து விட்டார்.

தொடரும்.....

Monday, April 19, 2010

சீனி அக்கா

சீனி அக்காவுக்கு பிள்ளை பிறந்துவிட்டது - இது தான் லேட்டஸ்ட் நியூஸ். எங்கள் உறவினர்கள் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தார்கள். நான் இன்னும் போய் பார்க்கவில்லை. வேலை அசதியால் போக முடியவில்லை. சீனி அக்காவுக்கு பிள்ளை பிறந்தால் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? அவரின் வயது தான் பெரிய அதிசயம். வயது 50 ஐ தாண்டி விட்டது.

சீனி அக்கா ஆரம்பத்தில் பிள்ளை வேண்டும் என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்று கொள்கை உடையவர். அவர் வயதை ஒத்த பெண்கள் பிள்ளைகள் பெற்று வளர்த்த போதோ, அல்லது காலேஜில் சேர்த்த போதோ சீனி அக்கா தனக்கு வயது ஏறிக் கொண்டே போகுது என்று எண்ணவில்லை.

அவரின் 45 ஆவது வயதில் தான் பிள்ளை இல்லை என்று ஏக்கம் வாட்டி வதைக்கத் தொடங்கியது. உடனே அமெரிக்காவிலிருந்து இந்தியா போனார். அங்கு பல விதமான வைத்தியங்கள் செய்து, பணத்தை தண்ணீராக செலவு செய்தார். ஆனால் பிள்ளை மட்டும் வயிற்றில் தங்கவேயில்லை.
ஏறத்தாழ 10 வருடங்கள் போராடி வெற்றியும் பெற்று விட்டார். இந்தியாவிலே தங்கி பிள்ளை பிறந்த பிறகே அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
இதெல்லாம் என் பாட்டி அம்மாவுக்கு சொன்ன போது காற்று வாக்கில் என் காதில் விழுந்த தகவல்கள்.

இன்று எப்படியாவது அவரைப் போய் பார்த்து விட வேண்டும் என்று நினைத்து வேலையிலிருந்து நேரத்தோடு வந்து விட்டேன்.
போய் கதவைத் தட்டினேன். சீனி அக்கா வந்து கதவைத் திறந்தார். மிகவும் தளர்ந்து போய் இருந்தார். நான் அவரின் பிள்ளை பெற்ற அனுபவங்களை கேட்டு அவரை நோகடிக்காமல் பொதுவான விடயங்களைப் பேசினேன்.

"பிள்ளைகள் தூங்குகின்றார்கள்", என்றார். என்னது " பிள்ளைகள்" என்று சொல்கின்றார் என்று மனதினுள் யோசனை ஓடினாலும் கேட்கவில்லை. ஒரு வேளை என் காதில் தான் அப்படி விழுந்ததோ ?

நான் புறப்படும் நேரம் வந்தது. மெதுவாகப் போய் தொட்டிலை எட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்...சீனி அக்காவின் இரட்டைக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் சீனி அக்காவை திரும்பி பார்த்தேன். அவர் சோஃபாவிலிருந்து எழும்ப முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.

பூரி

ஊரில் நாகேஷ் தாத்தாவின் குடும்பம் மிகவும் வறியது. தாத்தா என்று கூப்பிடும் அளவிற்கு அவருக்கு ஒன்றும் வயதாகி விடவில்லை. எப்போதும் வறுமையிலேயே வாழ்க்கை. இந்த வறுமை அவரின் வயதை அதிகரித்துக் காட்டியது. நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும்.

தாத்தாவின் தொழில் மீன்பிடித்தல். சில சமயங்களில் இரவு கடலுக்குப் போனால் வீடு வந்து சேர 2 தினங்கள் எடுக்கும். கொண்டு வந்த மீனை விற்று, ஆறு பேர் கொண்ட குடும்பத்தின் பசி ஆற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. தாத்தாவின் மனைவியும் தோசை, அப்பம், பலகாரங்கள் சுட்டு விற்று குடும்பத்தை தாங்கினார்.

ஒரு நாள் தாத்தா மனைவிக்கு டாட்டா காட்டி விட்டு கடலுக்குப் போனார். போனவர் போனது தான் திரும்பி வரவேயில்லை. கடலில் எங்கு போய் தேடுவது. மனைவியும், பிள்ளைகளும் மிகவும் நிலைகுலைந்து போனார்கள். மூன்று மாதங்கள் பார்த்து விட்டு தாத்தாவுக்கு இறுதி கிரியைகள் செய்தார்கள். ஒரு வருடம் ஆனதும் முதலாம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடினார்கள்.

ஒரு நாள் காலை எழுந்து பார்த்த போது தாத்தா உயிரோடு திரும்ப வந்து நின்றார். ஊரே அதிசயமாகப் பார்த்தது. தாத்தாவும் வேறு மூன்று பேரும் போன படகு கடும் புயல் மழையால் சேதமாகி விட, இவர்கள் நான்கு பேரும் இந்தியாவில் பூரி என்னுமிடத்தில் கரை ஒதுங்கி இருக்கின்றார்கள். இவர்கள் பேசிய மொழி அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் பேசியது இவர்களுக்கு சுத்தமாக விளங்கவேயில்லை. இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஒரு வருடம் உருண்டோடிய பிறகு தாத்தாவும், மற்றவர்களும் அப்பாவிகள் என்று முடிவு செய்து விடுவித்து விட்டார்கள்.

இந்த சம்பவத்தின் பிறகு தாத்தா " பூரி" தாத்தா ஆகிவிட்டார். இவருடன் போய் வந்த மற்றவர்களுக்கு எந்தப் பட்டப் பெயரும் ஊரார் சூட்டவில்லை. தாத்தாவும் தனக்கு ஊரார் கொடுத்த அடைமொழியை ஏற்று கொண்டார். நாளடைவில் தாத்தா போய் பூரி என்றே பெயரே நிலைத்து விட்டது.

சிறை சென்று வந்த பிறகு பூரி மீன் பிடி தொழிலை விட்டு விட்டார். குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது. மூக்கு முட்ட கள்ளுக் குடித்து விட்டு, நல்ல மப்பில் வீடு போய் சேருவார். மப்பில் நடக்கும் போது தெருவில் இந்த ஓரத்தில் இருந்து அந்த கரைக்கு குறுக்காக நடப்பார். பிறகு மீண்டும் குறுக்காக நடந்து இந்த ஓரத்திற்கு வந்து சேருவார்.

வேலைக்கு போகாமல் கள்ளுக் கொட்டிலே கதியென்று இருந்தார் பூரி.
மனைவி எவ்வளவு நாட்கள் தான் பொறுத்துக் கொள்வார். ஒரு நாள் பொங்கி எழுந்து விட்டார். இனிமேல் நானும் கள்ளுக் குடிக்க உன்னுடன் வரப்போறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டார். மனைவி சொன்னதை செய்து முடிப்பவள் என்று பூரிக்கு தெரியும்.

பூரி உடனடியாக ஒரு மாட்டு வண்டி வாங்கினார். பெட்ரோல், டீசல் எல்லாவற்றுக்கும் இலங்கை அரசு தடை விதித்திருந்த நாட்களில் தான் பூரி மாட்டு வண்டி வாங்கி விட்டார்.
ஊரில் வைக்கோல், விறகு, கல், மண் , இன்ன பிற சாமான்கள் எல்லாம் டெலிவரி செய்வது தாத்தாவின் வேலை ஆகியது.
டெலிவரி செய்யப் போகும் வழியில் தாத்தாவின் வீட்டில் விறகு கட்டைகள், கல், மண் எல்லாமே கொஞ்சம் திருட்டுத் தனமாக இறக்கப்படும். மாட்டிற்கும் இலவசமாக வைக்கோல் கிடைத்தது. ஊராருக்கும் இவரின் திருட்டு பற்றி தெரிந்தாலும் யாரும் பெரிதாக சண்டைக்குப் போவதில்லை.

இங்கு பூரியின் மாட்டைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மிகவும் விசுவாசமானது. பூரியும் மாட்டின் மீது மிகவும் பிரியமாக இருப்பார். ஓய்வு நேரங்களில் அதற்கு குளிப்பாட்டுவது, தண்ணீர், சாப்பாடு கொடுப்பது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்வார்.
பூரியின் குடிப்பழக்கம் மட்டும் மாறவேயில்லை. வேலை முடிந்ததும் கள்ளுக் குடிக்கப் போய் விடுவார். மாட்டு வண்டியிலே போய் இறங்குவார். அங்கு போய் குடித்து விட்டு, மாட்டு வண்டியிலே வந்து மல்லாக்காப் படுத்துக் கொள்வார். மாடும் அலுங்காமல் குலுங்காமல் அவரை வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்கும்.
வீடு வந்ததும் வண்டியை ரிவர்ஸில் பார்க் பண்ணி விட்டு, பூரி மப்பு தெளிந்து எழும் வரை அமைதி காக்கும்.

பூரி ஊரில் எவ்வளவு பிரபலமோ அதை விட பூரியின் மாடு பிரபலமாகி விட்டது. மாடு பூரியை கள்ளுக் கடையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் காட்சியை பார்க்கவே பெரிய கூட்டம் கூடும். வாண்டுகளும் வண்டியின் பின்னால் தொற்றிக் கொண்டே வருவார்கள். பிறந்தால் பூரி போல பிறக்கணும் என்று மற்ற 'குடி'மகன்கள் பெருமூச்சு விடுவார்கள்.

ஒரு நாள் காலை எழுந்து பார்த்த போது பூரியின் மாடு வாயில் நுரை தள்ளி இறந்து போய் இருந்தது. பூரி மிகவும் மனமுடைந்து போய் விட்டார். யாருடனும் பேசாமல் மவுனம் காத்தார். குடிப்பதையும் நிறுத்தி விட்டார். மனைவிக்கு மாடு இறந்த சோகம் ஒரு புறம் இருந்தாலும் தன் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றிய மாட்டினை மனதார வாழ்த்திக் கொண்டே இருக்கின்றார்.