Monday, April 19, 2010

பூரி

ஊரில் நாகேஷ் தாத்தாவின் குடும்பம் மிகவும் வறியது. தாத்தா என்று கூப்பிடும் அளவிற்கு அவருக்கு ஒன்றும் வயதாகி விடவில்லை. எப்போதும் வறுமையிலேயே வாழ்க்கை. இந்த வறுமை அவரின் வயதை அதிகரித்துக் காட்டியது. நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும்.

தாத்தாவின் தொழில் மீன்பிடித்தல். சில சமயங்களில் இரவு கடலுக்குப் போனால் வீடு வந்து சேர 2 தினங்கள் எடுக்கும். கொண்டு வந்த மீனை விற்று, ஆறு பேர் கொண்ட குடும்பத்தின் பசி ஆற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. தாத்தாவின் மனைவியும் தோசை, அப்பம், பலகாரங்கள் சுட்டு விற்று குடும்பத்தை தாங்கினார்.

ஒரு நாள் தாத்தா மனைவிக்கு டாட்டா காட்டி விட்டு கடலுக்குப் போனார். போனவர் போனது தான் திரும்பி வரவேயில்லை. கடலில் எங்கு போய் தேடுவது. மனைவியும், பிள்ளைகளும் மிகவும் நிலைகுலைந்து போனார்கள். மூன்று மாதங்கள் பார்த்து விட்டு தாத்தாவுக்கு இறுதி கிரியைகள் செய்தார்கள். ஒரு வருடம் ஆனதும் முதலாம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடினார்கள்.

ஒரு நாள் காலை எழுந்து பார்த்த போது தாத்தா உயிரோடு திரும்ப வந்து நின்றார். ஊரே அதிசயமாகப் பார்த்தது. தாத்தாவும் வேறு மூன்று பேரும் போன படகு கடும் புயல் மழையால் சேதமாகி விட, இவர்கள் நான்கு பேரும் இந்தியாவில் பூரி என்னுமிடத்தில் கரை ஒதுங்கி இருக்கின்றார்கள். இவர்கள் பேசிய மொழி அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் பேசியது இவர்களுக்கு சுத்தமாக விளங்கவேயில்லை. இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஒரு வருடம் உருண்டோடிய பிறகு தாத்தாவும், மற்றவர்களும் அப்பாவிகள் என்று முடிவு செய்து விடுவித்து விட்டார்கள்.

இந்த சம்பவத்தின் பிறகு தாத்தா " பூரி" தாத்தா ஆகிவிட்டார். இவருடன் போய் வந்த மற்றவர்களுக்கு எந்தப் பட்டப் பெயரும் ஊரார் சூட்டவில்லை. தாத்தாவும் தனக்கு ஊரார் கொடுத்த அடைமொழியை ஏற்று கொண்டார். நாளடைவில் தாத்தா போய் பூரி என்றே பெயரே நிலைத்து விட்டது.

சிறை சென்று வந்த பிறகு பூரி மீன் பிடி தொழிலை விட்டு விட்டார். குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது. மூக்கு முட்ட கள்ளுக் குடித்து விட்டு, நல்ல மப்பில் வீடு போய் சேருவார். மப்பில் நடக்கும் போது தெருவில் இந்த ஓரத்தில் இருந்து அந்த கரைக்கு குறுக்காக நடப்பார். பிறகு மீண்டும் குறுக்காக நடந்து இந்த ஓரத்திற்கு வந்து சேருவார்.

வேலைக்கு போகாமல் கள்ளுக் கொட்டிலே கதியென்று இருந்தார் பூரி.
மனைவி எவ்வளவு நாட்கள் தான் பொறுத்துக் கொள்வார். ஒரு நாள் பொங்கி எழுந்து விட்டார். இனிமேல் நானும் கள்ளுக் குடிக்க உன்னுடன் வரப்போறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டார். மனைவி சொன்னதை செய்து முடிப்பவள் என்று பூரிக்கு தெரியும்.

பூரி உடனடியாக ஒரு மாட்டு வண்டி வாங்கினார். பெட்ரோல், டீசல் எல்லாவற்றுக்கும் இலங்கை அரசு தடை விதித்திருந்த நாட்களில் தான் பூரி மாட்டு வண்டி வாங்கி விட்டார்.
ஊரில் வைக்கோல், விறகு, கல், மண் , இன்ன பிற சாமான்கள் எல்லாம் டெலிவரி செய்வது தாத்தாவின் வேலை ஆகியது.
டெலிவரி செய்யப் போகும் வழியில் தாத்தாவின் வீட்டில் விறகு கட்டைகள், கல், மண் எல்லாமே கொஞ்சம் திருட்டுத் தனமாக இறக்கப்படும். மாட்டிற்கும் இலவசமாக வைக்கோல் கிடைத்தது. ஊராருக்கும் இவரின் திருட்டு பற்றி தெரிந்தாலும் யாரும் பெரிதாக சண்டைக்குப் போவதில்லை.

இங்கு பூரியின் மாட்டைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மிகவும் விசுவாசமானது. பூரியும் மாட்டின் மீது மிகவும் பிரியமாக இருப்பார். ஓய்வு நேரங்களில் அதற்கு குளிப்பாட்டுவது, தண்ணீர், சாப்பாடு கொடுப்பது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்வார்.
பூரியின் குடிப்பழக்கம் மட்டும் மாறவேயில்லை. வேலை முடிந்ததும் கள்ளுக் குடிக்கப் போய் விடுவார். மாட்டு வண்டியிலே போய் இறங்குவார். அங்கு போய் குடித்து விட்டு, மாட்டு வண்டியிலே வந்து மல்லாக்காப் படுத்துக் கொள்வார். மாடும் அலுங்காமல் குலுங்காமல் அவரை வீட்டிற்கு கொண்டு போய் சேர்க்கும்.
வீடு வந்ததும் வண்டியை ரிவர்ஸில் பார்க் பண்ணி விட்டு, பூரி மப்பு தெளிந்து எழும் வரை அமைதி காக்கும்.

பூரி ஊரில் எவ்வளவு பிரபலமோ அதை விட பூரியின் மாடு பிரபலமாகி விட்டது. மாடு பூரியை கள்ளுக் கடையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் காட்சியை பார்க்கவே பெரிய கூட்டம் கூடும். வாண்டுகளும் வண்டியின் பின்னால் தொற்றிக் கொண்டே வருவார்கள். பிறந்தால் பூரி போல பிறக்கணும் என்று மற்ற 'குடி'மகன்கள் பெருமூச்சு விடுவார்கள்.

ஒரு நாள் காலை எழுந்து பார்த்த போது பூரியின் மாடு வாயில் நுரை தள்ளி இறந்து போய் இருந்தது. பூரி மிகவும் மனமுடைந்து போய் விட்டார். யாருடனும் பேசாமல் மவுனம் காத்தார். குடிப்பதையும் நிறுத்தி விட்டார். மனைவிக்கு மாடு இறந்த சோகம் ஒரு புறம் இருந்தாலும் தன் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றிய மாட்டினை மனதார வாழ்த்திக் கொண்டே இருக்கின்றார்.

15 comments:

 1. பூரியின் மாடுக‌ளை போல் நானும் ஊரில் பார்த்து இருக்கிறேன்.... க‌தை ந‌ல்லா இருக்கு...

  ReplyDelete
 2. Very touchy story..

  liked it.. :)

  ReplyDelete
 3. எனக்கு 'பூரி' எண்டால் நல்ல விருப்பம். எப்பிடி வித்தியாசமாகச் செய்து இருக்கிறீங்கள் என்று பார்க்கலாம் என்று வந்தேன். ;) சுவையான குறிப்பு. ;) நன்றி வாணி. ;)

  //வீடு வந்ததும் வண்டியை ரிவர்ஸில் பார்க் பண்ணி விட்டு// ;)))

  மேல வைங்கோ. ;)

  ReplyDelete
 4. நாளொரு போஸ்டிங் + நாளொரு முகப்புப் படம் = மலர்களே மலர்களே.....

  அழகு. ;)

  ReplyDelete
 5. வாவ்வ் வாணி கதை ரொம்ப நல்லாயிருக்கு...

  ReplyDelete
 6. நாடோடி, உங்கள் ஊரிலும் பூரியின் மாடா?. நன்றி.
  ஆனந்தி, வாங்க. நன்றி.
  ஜெய்லானி அண்ணாச்சி, நன்றி.

  ReplyDelete
 7. இமா, ம்ம்.. பூரி ரெசிப்பியா???? நான் பூரி ரெசிப்பி போட்டால் யார் பார்ப்பார்கள். என் சப்பாத்தியும் பூரியும் கூடப்பிறந்தவர்கள் போல் இருப்பார்கள்.
  இந்த மலர்கள் எல்லாமே என் காமராவில் சுட்டது. இது நேற்று லைப்ரரி வாசலில் சுட்டது. நன்றி.
  மேனகா, நலமா? நன்றி.

  ReplyDelete
 8. u have excellent writing skills vanathy.

  ithu unga real namea? ponniyin selvan padichirukeengala athula vara character name ithu

  ReplyDelete
 9. LK, என்னைப் போய் பொன்னியின் செல்வன் படித்தீர்களா என்று கேட்டு விட்டீர்கள்? நான் கல்கியின் விசிறி. என் அப்பா சிறு வயதில் பொன்னியின் செல்வனின் வானதியால் ஈர்க்கப்பட்டு, நான் பிறந்ததும் எனக்கு சூட்டிய பெயர்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. nallathu oru silar antha peyar karanam teriyalame iruppargal athukkuthan ketten :)

  ReplyDelete
 11. வானதி.. மனதைத் தொட்ட மாட்டுக் கதை சொல்லிட்டீங்கள்.. இதுவும் நிஜக் கதை மாதிரி தெரியுதே?

  அப்புறம்.. உங்க ப்ளாக் தோற்றம் அழகாயிருக்கிறது.. நல்ல பொருத்தமான வண்ணங்களைத் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கீங்கள்.. பூக்களும் கொள்ளை அழகு.. மேலே வையுங்க :)

  //படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!//

  சொல்லியாச்சு - ஏதாவது :))))

  ReplyDelete
 12. சந்தனா, எங்கள் ஊரில் இருந்தவர். நிறைய என் கற்பனை தான். பிறகு சம்பந்தப்பட்டவர் சண்டைக்கு வந்து விட்டால்.

  ம்ம்.. பூக்கள். நிறைய எங்கள் ஏரியாவில் சுட்டது. மேலே இருப்பது லைப்ரரியில் சுட்டது.

  ReplyDelete
 13. ரொம்ப நல்லா இருக்கு வானதி. பூக்கள் அழகோ அழகு!!

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!