Saturday, April 12, 2014

எனக்கில்லையா?எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட மலர்செண்டுகள் என்னைப் பார்த்து கேலியாக சிரித்தது போல இருந்தது. எனக்கு மட்டும் ஏன் மலர்கொத்து கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை அதற்கான தகுதி எனக்கில்லையோ? இல்லாவிட்டால் நான் அவர்களின் நண்பர்கள் குழுவில் இல்லையோ?  சரி. இப்ப என்ன ஆச்சு? இந்த வாடிப் போகும் மலருக்காக நான் என் வேலையைக் கூட கவனிக்காமல் ஆளாய் பறக்கிறேன். இனிமேல் கவலைப்பட போவதில்லை. 
என்ன இருந்தாலும் லீசா அப்படி செய்தது சரியில்லை. நான் எங்கு போனாலும் இவர்களுக்கும் சேர்த்து அன்பளிப்பு பொருட்கள் வாங்கி, அதை அவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களின் முகங்களில் ஏற்படும் சந்தோஷத்தினைக் கண்டு உவகை கொண்டு... ஒரு வேளை நான் தான் இவர்களை நண்பிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ? என்ன இந்த மலர்செண்டு ஒரு ஐந்து டாலர்கள் இருக்குமோ? இன்று வீட்டுக்கு போகும் முன்னர் சூப்பர் மார்க்கெட் போய் நான்கு மலர்செண்டுகள் வாங்கினால் தான் என் கோபம் அடங்கும் போலிருந்தது. வாங்குவது மட்டும் அல்ல. ஒரு கொத்து மலரினை இங்கே கொண்டு வந்து, ஒரு ஜாடியில் தண்ணீர் நிரப்பி, அந்த மலர்செண்டினை அதில் வைக்காவிட்டால் என் பெயர் நிலா அல்ல. 
" நிலா, என்ன யோசனை?", என்றபடி வந்த நாடலி  முகத்தினை பார்க்க பிடிக்காமல் வேறு பக்கம் பார்வையினை திருப்பிக் கொண்டேன்.
" என்னவோ போ நிலா. இன்று நான் இருந்த பக்கம் கூட நீ வரவில்லை. நேரம் கிடைத்தால் வா. எனக்கு ஒரு முக்கியமான பேப்பர் நீ காப்பி பண்ணி தர வேண்டும்", என்று விட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் சென்ற நாடலி மீது கோபம் வந்தது.
ம்ம்ம்ம்... போ..போ.. நான் வரப் போவதில்லை. குளமான என் கண்களை மெதுவாக துடைத்துக் கொண்டேன்.
ஒரு முக்கிய விடயமாக நிக்கோல் அறைக்கு செல்ல நேர்ந்தது. அங்கு லீசா அன்பளிப்பாக கொடுத்த மலர்செண்டு  தண்ணீர் ஜாடியில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தது. " நிலா, ஃப்ளவர்ஸ் சூப்பரா இருக்கில்லை?. இது லீசா எங்கள் மூவருக்கும் ஆளுக்கு ஒன்றாக வாங்கி வந்திருந்தா. ஜாக்கி  அறையில் ஒன்று, நாடலி அறையில் ஒன்று.. வாவ்! எவ்வளவு அழகு பார்", என்ற நிக்கோலை எரித்துவிடுவது போல பார்த்தேன்.
" எங்கள் ஊரில் செத்தவர்களுக்கு தான் மலர் கொண்டு போய் சாத்துவார்கள்", என்று கடுப்புடன் நினைத்துக் கொண்டே, வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கி கொண்டேன்.
" நிலா, என்னாச்சு? ", என்றாள் நிக்கோல். 
" ஒன்றும் இல்லை", என்றபடி விரைவாக நகர்ந்தேன். நல்லவேளை வார்த்தைகளை அவசரப்பட்டு கொட்டவில்லை. இனிமேல் வாயே திறக்கப்போவதில்லை. அன்று செய்ய வேண்டிய வேலைகளில் பிஸியாக இருந்தாலும், அந்த மலர்ச்செண்டு மட்டுமே மனம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.
நான் இப்படி இருக்க காரணம் மலர்செண்டா அல்லது அவர்கள் நண்பிகள் குழுவில் நான் இல்லை என்கிற காரணமா? அவர்கள் எல்லோரும் அமெரிக்கர்கள். நான் ஆசியாவில், சபிக்கப்பட்ட இலங்கையில் பிறந்து, என் இருபதுகளின் நடுப்பகுதி வரை சொந்த நாடு, வீடு இல்லாமல் சுற்றித் திரிந்து, கடைசியில் என் கணவரை மணந்து, குடியுரிமை பெற்று, என் மகள் பள்ளி போகத் தொடங்கியதும், நானும் வாலண்டியராக வேலை பார்த்து, என் சுறுசுறுப்பினை பார்த்து பள்ளியிலேயே வேலை கொடுத்தார்கள். லீசாவை கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தெரியும். ஆரம்பத்தில் இருந்தே  கூடப் பிறக்காத சகோதரி போல எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். 

இனிமேல் லீசா என் சகோதரி இல்லை. சகோதரி என்ன? நண்பி லிஸ்டில் கூட அவரில்லை.  டீச்சர்ஸ் லவுஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன். என் செல் போனை எடுத்து, என் கணவரின் எண்களை அழுத்தினேன்.
" நிலா", என்று என்னவரின் குரல் கேட்டதும், அழுகை கரை புரண்டு ஓடியது.
" லீசா எனக்கு மலர்ச்செண்டு கொடுக்கவில்லை. நான் அதற்கு கூட தகுதி அற்றவளா?", என்று கூறிய என்னை இடைமறித்தார்.
" வெயிட். வெயிட். லீசா மலர்ச்செண்டு கொடுக்கவில்லை. இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா?. இன்று வேலையால் வரும்போது நான் வாங்கிவருகிறேன். சரியா?", என்று போனை வைத்துவிட்டார் கணவர்.
அழுகையுடன் மேசையில் தலை கவிழ்ந்தேன். 
" நிலா, இன்று முழுக்க உன்னை பார்க்க முடியவில்லையே? என்னாச்சு? ", என்றபடி என் அருகில் வந்த லீசாவை கண்டதும் கண்ணீரை துடைக்க  விரைந்தேன்.
" ஏன் உன் முகம் இப்படி சிவந்து போய் இருக்கு. இரு நான் போய் மருந்து கொண்டு வருகிறேன். நீண்ட நாட்களாக இருமல் வந்து நீ கஷ்டப்படுவது தெரியும்", என்றபடி காணாமல் போன லீசா ஐந்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் வந்தார். 
" இன்று என் கணவர் எனக்கு மலர்ச்செண்டு வாங்கி வருகிறேன் என்று சொன்னார்", என்றேன் ஆற்றாமையுடன். 
" அப்படியா. நல்லது. அப்ப உனக்கு இன்று இரண்டு மலர்ச்செண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. நானும் உனக்கு ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். காலையில் பிஸியாக இருந்தமையால் உன்னிடம் சொல்ல  முடியவில்லை. மீட்டிங் அது இதென்று இழுத்தடித்து விட்டார்கள்... என்று சொன்ன லீசாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுத என்னை விளங்காமல் பார்த்துக் கொண்டே நின்றார் லீசா.

என் வரவேற்பறையினை அலங்கரித்த மலர்களில் லீசாவின் அன்பளிப்பு தான் கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது. என்ன இருந்தாலும் என் நண்பி இல்லை இல்லை என் சகோதரி கொடுத்த அன்பளிப்பு அல்லவா? அப்படித்தான் இருக்கும் இல்லையா!