Sunday, December 2, 2012

சிங்கு மாமா"30 நாட்களில் ஹிந்தி கற்றுக்கொள்ள இந்த நம்பரை அணுகவும்", என்ற விளம்பரத்தினை வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் செழியன்.
"அப்பா, வாங்கப்பா போகலாம்", என்று மகள் பல முறை அழைத்தபோதும் பதில் சொல்லாது விளம்பரத்தினை வெறித்துக் கொண்டே நின்றான்.

ஒரு பேப்பரில் ஹிந்தி கற்றுத் தருபவரின் தொலைபேசி இலக்கம், முகவரி, மின்னஞ்சல் முகவரி  போன்றவை இருந்தன. தன்னுடைய கைத் தொலைபேசியை எடுத்து தகவல்களைக் குறித்துக் கொண்டான்.
மகள் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்திருந்தாள். மகளை வாரி அணைத்துக் கொண்டான். மன்னிப்பு கேட்டபடி கன்னத்தில் மெதுவாக இதழ் பதித்தான்.
"அப்பா, அது என்னப்பா?", என்றாள்  ஐந்து வயது நிரம்பிய அனுஷா.
" அதுவா? அது ஹிந்தி கற்றுத் தராங்களாம்", என்றான்.
"அப்பா, ஹிந்தி என்றால் என்னப்பா?", என்றாள் மகள்.
"அது ஒரு மொழி செல்லம். ஸ்பானிஷ், ப்ரெஞ், உருது போல  ஹிந்தியும் ஒரு மொழிடா", என்றான்.
"உங்களுக்கு ஹிந்தி தெரியுமாப்பா?",  என்றாள் அனுஷா.
"ம்ம்ம்ம்... 40 வரை எண்ணத் தெரியும்", என்றான் பெருமையுடன்.
அப்பா எனக்கும் சொல்லிக் கொடுப்பீங்களா?", என்ற மகளை காரினுள் அவளுக்குரிய சீட்டில் வைத்து, பெல்ட் அணிந்து வீட்டினை நோக்கி காரினை செலுத்த தொடங்கினான்.
அப்பா, உங்களுக்கு நாற்பது வரை எண்ண யார் சொல்லித் தந்தார்கள்?", என்றாள் மகள்.
" சிங்கு மாமா தான் சொல்லிக் கொடுத்தார்கள்", என்றான்.
"ஏன் அவர் நாற்பதுக்கு பிறகு சொல்லித் தரவில்லை?", என்று மீண்டும் கேள்வி. மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவளிடம் பேசிவிட்டு திரும்பி பார்க்க அனுஷா அரைத் தூக்கத்தில் இருந்தாள்.
செழியனுக்கு ஹிந்தி கற்றுக் கொண்ட நாட்கள் மனதில் நிழலாடியது. இலங்கையில் இந்திய இராணுவம் 1980 களின் இறுதிப் பகுதியில் வந்து இறங்கினார்கள். இவனின் வீடு இருந்தது நகரின் பிரதான தெரு. இராணுவத்தினரின் சோதனைச் சாவடி கடந்தே இவர்கள் தினமும் போக வேண்டும்.  இவனுக்கு அப்போது 12, 13 வயது தான் இருந்திருக்கும். இராணுவத்தினரை கடந்து பள்ளிக்கு செல்லுதல், விளையாட செல்லுதல் என்று இவனின் பொழுது இனிமையாக சென்றது. அரணில் காவலுக்கு நின்ற நெடிய ஒரு இராணுவ வீரன் இவன் போகும் போது கைகளை ஆட்டி, சிநேகமாக புன்னகைப்பார். முதலில் பயம் காரணமாக  ஒரே ஓட்டமாக ஓடி விடுவான். நாட்கள் செல்லச் செல்ல இவனும் பதிலுக்கு புன்னகைக்கத்தான்.

ஒரு நாள் அவர் இவனிடம் வலிய வந்து பேசினார். எப்பவும் தூரத்தில் பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவான். இப்ப பக்கத்தில் பார்த்ததும் சிறிது அச்சம் உண்டானது.  அவர் இவனின் கைகளை பிடித்து குலுக்கினார்.
"உன்னைப் பார்த்தால் என் மகன் போலவே இருக்கிறாய்", என்றார்.
"அவனுக்கும் உன் வயது தான் இருக்கும்", என்றவர், " உன் பெயரென்ன?", என்றார் ஆங்கிலத்தில்.
"செழியன்", என்றான் தயங்கியபடி. அப்பா பார்த்தால் முகுகில் நாலு அப்பு அப்பி விடுவார் என்ற எண்ணம் வர ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். இப்படியே உருவான நட்பு கொஞ்சம் வலுப்பெற்றது.
ஒரு நாள் அவரிடம், " நீங்கள் என்ன மொழி பேசுவீங்கள்?", என்றான் ஆங்கிலத்தில்.
" நான் ஹிந்தி பேசுவேன். ஏன் உனக்கு பழக விருப்பமா?", என்றார்.


அப்பாவை நினைத்தால் குலை நடுங்கியது இருந்தாலும் அவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டான். ஒவ்வொரு நாளும் 5 இலக்கங்கள் சொல்லித் தருவதாக ஏற்பாடு.
ஏக், தோ, தீன்.... என்று அவர் ஹிந்தியில் சொல்ல இவன் அதை மனப்பாடமாக வைத்து ஒரு நோட்டில் குறித்துக் கொண்டான்.
கிரிக்கெட் விளையாட போகும் போது எடுக்கும் ரன்களை ஹிந்தியில் சொல்ல நண்பர்கள் வாயடைத் நின்றார்கள்.
டேய், எப்படி உன்னாலே முடியுது? எங்களுக்கும் சொல்லித் தர முடியுமா?, என்றார்கள். இவன் பெருமையாக இவனின் இராணுவ நண்பர் பற்றிச் சொல்லி, அவரிடம் அனுமதி கேட்ட பிறகு உங்களை எல்லோரையும் கூட்டிச் செல்கிறேன், என்று உறுதி அளித்தான்.
இந்த விடயம் எப்படியோ அங்கு பரவி, இங்கு பரவி அப்பாவின் காதுகளில் விழுந்தது. ஒரு நாள் இவன் குருவிடம் பாடம் கற்றுக் கொண்ட பின்னர் வீட்டுக்கு வரும் போது அப்பா கையில் பிரம்போடு காத்திருந்தார்.
" சகவாசத்தைப் பாரு. துரைக்கு இராணுவத்தில் ப்ரெண்டு கேட்குதோ", என்றபடி பிரம்பினால் விளாசித் தள்ளிவிட்டார்.


இனிமேல் அந்தப் பக்கம் போ இருக்கு கச்சேரி. அவர்களுக்கும் எங்களுக்கு ஒத்து வராதுப்பா", என்றார் அப்பா விழிகளை உருட்டியபடி.
அதன் பிறகு இவனின் ஹிந்தி கற்றுக் கொள்ளும் ஆசையும் போய்விட்டது. வழியில் எங்காவது அந்த இராணுவ வீரனை கண்டால் தலை குனிந்தபடி கடந்து சென்றுவிடுவான். அவரின் பெயரை இவன் கேட்டதில்லை. அவரின் பெயர் பொறிக்கப்ப்பட்ட அடையாள அட்டையில் விரேந்திர சிங் அல்லது லாலா சிங் என்ற பெயர் மட்டும் ஞாபகம் இருந்தது.  சிங் மாமா என்பது மருவி சிங்கு மாமா என்ற அந்த நபரும் காலப் போக்கில் மறைந்து போனார்கள். நெடிய உருவம், தீர்க்கமான கண்கள்,  கூரான நாடி  என்று அவரின் உருவம் இப்பவும் ஞாபகம் இருந்தது. அவர் சொல்லிக் கொடுத்த நம்பர்கள் மட்டும் அப்படியே மனதில் பதிந்து இருந்தது. மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆசை, தாகம் மட்டும் தணியவில்லை. வெளிநாடு வந்தபிறகு ப்ரெஞ், ஸ்பானிஷ் கற்றுக் கொண்டான். இப்ப ஹிந்தியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டான். அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு, வகுப்பில் இணைந்து கொண்டான்.
முதல் நாள் வகுப்பு முடிந்து வந்ததும் மகள் கேட்டாள், "அப்பா, உங்கள் டீச்சர் பெயர் என்னப்பா?", என்றாள்.
" சிங்கு மாமா", என்றான் புன்முறுவலுடன். வகுப்பில் ஆசிரியர் சொன்ன பெயர் எதுவும் மனதில் பதியவில்லை. நெடிய உருவம், தீர்க்கமான கண்கள், கூரான நாடியுடன் இருந்த அவரின் பெயர் "சிங்கு மாமா" தான் எப்போதும் செழியனுக்கு.

17 comments:

 1. Nice story Vanathy! Some memories stored in our heart are ever fresh!

  ReplyDelete
  Replies
  1. மகி, மிக்க நன்றி.

   Delete
 2. Replies
  1. ஃபாஜியா, மிக்க நன்றி.

   Delete
 3. ஊரு விட்டு ஊரு நாடு விட்டு நாடு வந்தாலும் ஒரு சில நினைவுகள் மறக்க முடியாதுதான்..

  ReplyDelete
  Replies
  1. ராதா, மிக்க நன்றி.

   Delete
 4. சிங்கு மாமா அந்தளவிற்கு மனதில் உள்ளார்...!

  ReplyDelete
  Replies
  1. தனபாலன், மிக்க நன்றி.

   Delete
 5. சிங்கு மாமா சிறப்பான பகிர்வுகள்.. !

  ReplyDelete
 6. சிங்கு மாமா கதை அருமை.உண்மைக் கதையோ!வானதி.

  ReplyDelete
 7. எப்படிப்பா இப்படிலாம் யோசிக்கிறீங்க!! அருமையான கதை. பெரியவர்கள் சண்டை போட்டாலும், சிறியவர்களுக்கு எல்லாரும் நண்பர்களே.

  ReplyDelete
 8. Super story Vanss... Sinku mama is a nice name:)

  ReplyDelete
 9. நமக்குப் பிடித்த டீச்சரை வாழ்நாளில் மறக்கவே முடியாது... கதை ரொம்ப நல்லாருக்கு :)

  ReplyDelete
 10. அதில் பதிலிட முடியாததால் இதில்
  கதையா நிகழ்வா
  மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அருமையான கதை
  இப்படி மறக்கமுடியாமல் இடையில்
  சம்பந்தமில்லாமல் விட்டுப்போன பல உறவுகள்
  ஞாபகத்தில் வந்து போனது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. மார்கஸ் கதையில் கருத்து தெரிவிக்க முடியலையே.கதை தொடருமா?எப்படி தப்பித்து எங்கு சென்றார்? வானதி..பாவம் பீட்டர்..

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!