Sunday, October 28, 2012

வீட்டினைத் தேடி ஒரு பயணம் ( இறுதி பாகம் )


இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும் ஒரு சிறு கிராமம் தான் தேவாவின் சொந்த ஊர். அப்பா ஊரில் மிகவும் செல்வாக்கானவர்.  சொந்தவீடு கட்ட வேண்டும் என்பது அப்பாவின் நீண்ட நாளைய கனவு. நிலம் வாங்கி, வீடு இப்படித் தான் அமைய வேண்டும் என்று அப்பாவின் விருப்பபடியே கட்டப்பட்டது. சமையல் அறை, சாமி அறை இரண்டும் அம்மாவின் எண்ணப்படி உருவானது. சாமி அறைக்கு தேக்கில் உருவான கதவுகள், சாமி படங்கள் வைக்க ஏதுவாக ஷெஃல்ப்கள், சுவரோடு கட்டப்பட்ட ஸ்டீல்  அலமாரிகள், சுவருக்கு அழகான பெயின்ட் பூச்சுகள் என்று அமர்களமாக திட்டமிட்டுக் கட்டினார் அப்பா. தினமும் பூக்கள் கொண்டு பூசை செய்வார் அம்மா. அவ்வளவு சுத்தமாக இருக்கும் சாமி அறை.

1980 களின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற குண்டு வீச்சுகளால் வீடு சேதமடைந்த போதும் சாமி அறை அப்படியே இருந்தது. பல நேரங்களில் அந்த அறையே படுக்கை அறையாக பயன்படுத்தப்பட்டது. மிகவும் உறுதியாக, குண்டு துளைக்காமல் இருந்தபடியால் ஒரு பதுங்கு குழி போல அரணாக இருந்தது. வெளிநாடு வரும் வேளையில் உறவினர்களிடம் சாவியை கொடுத்த போது அம்மாவின் கண்கள் கலங்கியதை தேவா கண்டான். நாங்கள் எப்படியும் 2 வருடங்களில் திரும்ப ஊர் வந்துவிடுவோம் அது வரை எங்கள் வீட்டினை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டன.

அப்பாவின் மறைவுக்குப் பின்னர் ஊர் போகும் எண்ணமும் அடியோடு மறைந்து போயிற்று. தற்போது வீட்டில் யாரோ குடியிருப்பதாக அம்மா சொல்வார். யார் என்று அறியும் ஆர்வம் தேவாக்கு இருந்ததில்லை. ஊர் போய் அந்த நபரை விரட்டி விட்டு, வீட்டினை புனரமைத்து, யாராவது நம்பிக்கை ஆனவர்களிடம் கொடுத்துவிட்டு, திரும்ப தன் வேலைகளை கவனிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் தேவா. 
கொழும்பில், விமான நிலையத்தில் காத்திருந்த வேலு மாமாவை அடையாளம் கண்டு, அவருடன் ஊர் போய் சேர்ந்த போது அம்மா மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். 
தம்பி, நீங்கள் தங்குவதற்கு என் நண்பரின் வீட்டினை கேட்டிருக்கிறேன், என்று இழுத்தார் வேலு மாமா.
ஏன் மாமா உங்க வீட்டில் நாங்கள் தங்க அனுமதியில்லையா என்று கேட்டவனை மறு பேச்சில்லாமல் வீட்டுக்கு கூட்டிச் சென்றார்.
மாமாவின் மகள் தேவகியும் இரண்டு குழந்தைகளுடன் அங்கே இருந்தாள். சிறு வயதில் தேவகியுடன் விளையாடியது, சண்டை போட்டது எல்லாம் ஞாபகம் வந்தது. தேவகி தங்கவிக்ரம் போல அவ்வளவு அழகு. பழைய கலகலப்பு அப்படியே இருந்தது அவளிடம். புறாக்கூடு போல வீட்டில் எப்படி இவ்வளவு பேர்?  அதில் நான் வேறு என்று கொஞ்சம் வருத்தம் உண்டானது தேவாக்கு.
மாமாவிடம் தேவகியின் கணவன் பற்றிக் கேட்க நினைத்தவன் எப்படிக் கேட்பது என்று தயக்கத்தினால் கேட்காமல் இருந்து கொண்டான். மாமாவே சொல்லட்டும். அது வரைக்கும் சும்மா இருப்பதே புத்திசாலித்தனம் என்று முடிவு செய்து கொண்டான். ஒரு வேளை அவள் கணவன் இறந்து போய்விட்டானோ? என்று நினைத்தவன் தேவகியின் நெற்றியில் இருந்த குங்கும பொட்டினைக் கண்டதும் அப்படி இருக்காது என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

இரவு அங்கேயே கழிந்தது.

டீயுடன் காலை வணக்கம் சொன்னாள் தேவகி. அம்மா அங்கிருந்த பாயில் ஓய்வாக அமர்ந்து தேவகியின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். தேவா போய் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். தேவகி சமையல் அறையினுள் சென்றதும் யாருக்கும் கேட்காத குரலில்,
" அம்மா, தேவகியின் கணவர் எங்கே?", என்றான்.
" அவர் எங்கோ டவுனில் வேலை பார்க்கிறாராம். மாசத்துக்கு ஒரு தரம் தான் வருவாராம். இங்கே தொழில் தொடங்க பொருள் வசதி, இட வசதி இல்லையாம். வேலு மாமா சிறுகச் சிறுக கொஞ்ச காசு சேர்த்து வைச்சிருக்கிறாராம். நாங்கள் தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் தேவா. ", என்றார் அம்மா.

இப்ப தான் நிம்மதியாக உணர்ந்தான் தேவா. வேலு மாமாவிடம் அல்லது தேவகியிடம் அவசரப்பட்டு, நான் அது செய்யப் போகிறேன், இது செய்யப் போகிறேன் என்று வாயை விடாமல், அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்று பலவாறாக யோசனை செய்யத் தொடங்கினான்.


"மாமா, வாங்க வீட்டினை போய் பார்த்து வரலாம்", என்றான்.
வேலு தயங்கினார். "இப்ப எதுக்கு தம்பி? நாளைக்குப் போகலாம்", என்றார்.
" நீங்க வராவிட்டால் பரவாயில்லை நான் போகிறேன்", என்று கிளம்பினான். மறுப்பு சொல்லாமல் பின் தொடர்ந்தார். நானும் வருகிறேன் என்று சொன்ன தேவாவின் தாயாரை, "நீங்கள் இன்று வர வேண்டாம். நாங்கள் போய் பார்த்துட்டு வந்து உங்களை கூட்டிச் செல்கிறோம்", என்றார்.

"மாமா, ஏன் அப்படிச் சொன்னீர்கள்? எங்கள் வீடு தானே. நாங்கள் போய் பார்க்க என்ன தடை", என்றான் வருத்தத்துடன்.
"இல்லைத் தம்பி. நீங்கள் போய் பார்த்த பிறகு தெரிந்து கொள்வீர்கள்", என்றபடி சைக்கிளை மிதித்தார் வேலு. "தம்பி, வெளிநாட்டில் இருப்பது போல சட்டம் ஒழுங்கு இந்த நாட்டில் இல்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான் இந்த ஊரில். உங்கள் வீட்டில் இருப்பவனுக்கு ஆள் பலம் இருக்கு. அவனை வெளியேற்றுவது மிகவும் கடினம். நான் உங்களை அதனால் தான் ஊருக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை", என்றார்.

தேவா பதில் சொல்லாது மௌனம் காத்தான். 
"தம்பி, அவனுக்கு என்னை அடையாளம் தெரியும். அவனிடம் பல முறை வீட்டினை காலி பண்ணச் சொல்லி பிரச்னைப்பட்டிருக்கிறேன். நீங்கள் மட்டும் உள்ளே போய் பார்த்து வாருங்கள். நான் இங்கேயே நிற்கிறேன்", என்றார்.
"வாசலில் நிற்கும் எருமை ஆயிரம் கேள்விகள் கேட்பான். அவனிடம் ஆட்டிறைச்சி வாங்க வந்திருப்பதாக சொல்லுங்கள்", என்றார்.
"மாமா, ஆட்டு இறைச்சியா? என்ன சொல்றீங்க? நான் அதெல்லாம்",.. என்று தொடர்ந்தவன் பேச்சினை இடையில் நிறுத்தியவன் மாமாவை புதிருடன் பார்த்தான்.
"உள்ளே போய் பாருங்கள் தம்பி உங்களுக்கு விளங்கும்", என்றார்.
வாசல் கடந்து, எருமைக்கு பதில் சொன்ன பிறகு உள்ளே நுழைந்தான். 
உள்ளே இருந்து வந்த கொடிய மணம் குடலைப் புரட்டியது. என்னவாக இருக்கும் என்று யோசனை ஓடியது. வீட்டு முற்றத்தில் ஆடுகள், மாடுகள் கும்பலாக தெரிந்தன. 
முற்றத்தில் ஆடு, மாடுகளின் தோல்கள் ஓரமாக காயப்போடப்பட்டிருந்தன. மறு புறம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி வாங்க ஒரு சிறு குழுவாக மக்கள் நின்றார்கள். வீட்டின் பின் புறத்தில் ஆடு ஒன்றின் கதறல் சத்தம் கேட்டது. தொண்டை அறுக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டான். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறினான் தேவா.

"தேவா, இங்கு வந்து நான்கு நாட்கள் ஆச்சு. எப்ப வீட்டினை பார்க்க போகலாம்",  என்று நச்சரித்த அம்மாவினை சமாளிக்க முடியாமல் முழித்தான். வேலு மாமா தான் எதேதோ சொல்லி சமாளித்தார். 

ஒரு வாரம் சென்ற பின்னர் அம்மா தனியாக கிளம்பிவிட்டார் வீட்டினைப் பார்க்க. தடுக்க வழி தெரியாமல் ஸ்தம்பித்துப் போனான் தேவா. 

சரி உங்க தலையெழுத்து. வாங்க போகலாம் என்று பின் தொடர்ந்தான். 
வீட்டினை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள அம்மாவுக்கு சில நிமிடங்கள் பிடித்தன." இவன் என்ன மனிதனா", என்றார் அழுகையினூடே. சாமி அறையில் ஒரு முழு ஆட்டினை தோல் உரித்து தொங்கவிட்டிருந்தான் மண்டைக் கோபால்.

"அம்மா, வீட்டினை பார்த்தாச்சு அல்லவா வாங்கள் திரும்ப ஊருக்குப் போகலாம்", என்றான் தேவா.
"இல்லை தேவா. எனக்கு அந்த வீடு வேணும். அந்த சாமி அறை திரும்ப வேணும்", என்று சொன்ன அம்மாவை கலவரத்துடன் பார்த்தான்.
"அம்மா, அந்த லூஸூ மண்டைக் கோபாலுடன் யார் போய் கதைப்பார்கள். அவன் முழியும் அவனும். அது ஒரு மனுஷ ஜென்மம் போல இல்லையே", என்றான்.
"தேவா, நீ போய் உன் வேலையை பார். நான் இங்கேயே இருந்து வேலை முடித்த பிறகு தான் வருவேன்", என்று சொன்ன அம்மாவை இயலாமை கலந்த கோபத்துடன் பார்த்தான். 
தாய் மீது கோபம் வந்தது. வேலு மாமா தான் சமாதானப்படுத்தினார்.
"தேவா, காசினை செலவு செய்ய நீ ஆயத்தமாக இருந்தால் எல்லாம் இங்கே சாத்தியமே", என்றார். 
"மாமா, எனக்கு காசு ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், இதெல்லாம் சாத்தியமா?", என்றான்.
"தம்பி, கொஞ்சம் பணத்தினை விட்டெறிஞ்சால் எல்லாம் நடக்கும்", என்றார். 
அவர் சொன்ன தொகை கொஞ்சம் அதிகம் தான். இருந்தாலும் அம்மாவுக்காக செய்து முடிப்பது என்று தீர்மானித்தான். 

காசினை விட்டெறிந்து, கால்கள் தேய நடந்து, மண்டைக் கோபலை விட ஒரு பெரிய ரவுடியை கண்டுபிடித்தார்கள். அவனுக்கு ஆள்பலம், பணபலம்,  அரசியல்வாதிகளுடன் தொடர்பு என்று எல்லாமே இருந்தன. 
மண்டைக் கோபாலை அங்கே இருந்து வெளியேற்றியது மட்டும் அல்ல அவனை மீண்டும் இவர்கள் இருந்த திசைப் பக்கம் வரவிடாமல் செய்ய ஒரு பெருந்தொகை செலவு செய்ய வேண்டியதாகிப் போனது. 
எல்லாவற்றையும் அம்மாவுக்காக செய்து முடித்தான் தேவா. இரத்தம் தோய்ந்த நிலையில் இருந்த வீட்டினை சுத்தம் செய்து, புனரமைப்பு  செய்து, மேலும் சில இலட்சங்களை செலவு செய்தான் தேவா. வீடு மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. தேக்கில் உருவான சாமி அறைக் கதவு, வண்ணப்பூச்சுகள் பள பளத்தன. 

அம்மா, இப்ப திருப்தி தானே, என்றான். 
"தேவா, இல்லை. எனக்கு இந்த அறையில் கண்களை மூடினால் சாமியை வணங்க மனம் வரவில்லை", என்றார் தாயார்.
அம்மா, என்ன சொல்கிறீர்கள்?, என்றான் தேவா.
"கண்களை மூடினால் அந்த ஆட்டின் உயிரற்ற உடல் தான் ஞாபகம் வருகிறது. நான் என்ன செய்வேன்?", என்றார் . 
" அம்மா, நான் முன்பே சொன்னேன் அல்லவா வாங்கள் திரும்ப ஊருக்குப் போகலாம் என்று. நீங்கள் கேட்கவில்லை. எவ்வளவு அலைச்சல், காசு செலவு. சரி காசு போனாலும் பரவாயில்லை. உங்களுக்கு எவ்வளவு மனவருத்தம்", என்றான் தேவா.

"தேவா, எனக்கு தெரியும் கண்ணா. மண்டைக் கோபாலை வெளியேற்ற வேண்டும் என்பதே என் வெறியாக இருந்தது. இப்ப இந்த வீட்டில் எனக்கு வாழ விருப்பம் இல்லை. வீட்டின் உள்ளே போனால் ஆடு, மாடுகள் கத்தும் ஒலி கற்பனையில் வந்து என்னைக் கொல்கிறது. இந்த வீட்டினை விற்பது தான் ஒரே வழி", என்றார் அம்மா. 

"அம்மா, ஏன் இந்த வீட்டினை வேலு மாமாவுக்கு கொடுக்கலாமே!", என்றான் தேவா.
"இல்லை தேவா. அது அவ்வளவு நன்றாக இருக்காது. எங்களுக்கு வேண்டாம் என்பதால் அவரின் தலையில் கட்டுவது சரியில்லை", என்றார்.



"வேலு மாமாவும் இதை விரும்பமாட்டார் அல்லவா", என்று தாயார் சொன்னதிலும் ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்டான் தேவா. 

வீட்டினை விற்பனை செய்ய ஒழுங்குகள் செய்த பின்னர் தாயும் மகனும் விமானத்தில் ஏறிவிட்டார்கள். வேலு மாமா எல்லாவற்றினையும் பார்த்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்தார். 

ஒரு மாதத்தின் பின்னர் தொலைபேசி மணி அடித்தது.  எடுத்து காதில் பொருத்தினான் தேவா.
"தேவா, நலமா?, என்றார் வேலு மாமா. வீட்டினை வித்தாச்சு. ஊர் பணத்தில் கிட்டத்தட்ட 100 இலட்சங்கள் இருக்கு. பணத்தினை எப்படி அனுப்ப என்று சொல்லு தம்பி", என்றார் வேலு மாமா. 

"மாமா, பணம் முழுக்க உங்களுக்குத் தான். எங்களின் அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்", என்றான் தேவா.

மறுமுனையில் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. என்ன தம்பி சொல்றீங்க?

"மாமா, அப்பா இருந்திருதால் இன்னும் அதிகமா செய்திருப்பார். இதை நாங்கள் அங்கேயே கூறியிருந்தால் நீங்கள் கண்டிப்பாக மறுப்புக் கூறியிருப்பீங்கள் என்று தெரியும். அதனால் தான் இந்த ஏற்பாடு", என்றான்.
அவரின் தழு தழுத்த குரல் அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருப்பதைக் காட்டியது.
நன்றி, சொல்லி தொலைபேசியினை அதன் இடத்தில் வைத்தான் தேவா.
நீண்ட நாட்களின் பின்னர் இன்று நிம்மதியாக உணர்ந்தான் தேவா. கசிந்த கண்களை தாயார் அறியாமல் துடைத்துக் கொண்டான்.



































18 comments:

  1. வானதி ..கதை முழுதும் படிச்சேன் ..அழகாய் முடிச்சிருக்கீங்க

    கதாசிரியரின் திறமை உங்கள் எழுத்து ..அருமை ..அப்படியே காட்சிகள் கண்ணில் நிக்குது ..கொஞ்சம் வலிக்கவும் செய்தது ..

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு, கதை பிடிச்சிருக்கா? மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. Nice ending...thanks for continuing the story! :)

    Take care Vanathy..hope you are safe from "Sandy"! Bathiramaa irunga...

    ReplyDelete
    Replies
    1. மகி, மிக்க நன்றி.
      அந்த சாந்தி வந்துட்டே இருக்காளாம். பார்க்கலாம். நாங்கெல்லாம் யாரு??!!!

      Delete
  3. அழகாக முடிச்சதுக்கு தாங்ஸ் வான்ஸ். சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இமா, மிக்க நன்றி.

      Delete
  4. சுவாரஸ்யமாக இருந்தாலும் மனசும் கூடவே கனக்கவும் செய்தது...! பாரதிராஜா கதை மாதிரி, வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. மனோ, மிக்க நன்றி. அங்கே பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.

      Delete
  5. உருக்கமான சம்பவங்களுடன் கதை சொன்ன விதம் நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.

      Delete
  6. நீங்கள் கதையை எடுத்து சொன்ன விதம் மிகவும் அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. மலர், மிக்க நன்றி.

      Delete
  7. மேல இருந்து வருவம்... அமெரிக்காவில இருந்து அந்தப்பக்கம் படமெடுக்காம, கனடாவில போய் இந்தப்பக்கம் படமெடுத்துப் போட்டிருக்கினம்:)).. நன் நயகராவைச் சொன்னேன்:)

    ReplyDelete
  8. முதல் பாக லிங் போடாமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:).. நான் ஆரம்பக் கதையை மறந்துபோனன்...

    இப்பாகம் நன்றாகப் போய் முடிஞ்சிருக்கு... வான்ஸ்க்கு ஏதும் பட்டம் கொடுக்கோணும்... என்ன கொடுக்கலாம் என ஓசிக்கிறேன்ன்ன்:))).. ஆனா இங்கின எல்லோருக்கும் பாம்புக் கண், கழுகுக் காது:)) அதுதான் ஓசனையாயிருக்கெனக்கு:)

    ReplyDelete
    Replies
    1. பூஸார், அது எங்கட நயாகரா தான். கனடாகாரர் ஆக்கிரமிச்சு இருக்கிறாங்கள். எப்பூடி?
      எனக்கு பட்டம், பதவி எல்லாம் பிடிக்காது. முதல்பாகம் அப்படியே எலியை உருட்டினால் கீழே வருமே???!!!!
      மிக்க நன்றி.

      Delete
  9. கதையை அழகா முடிச்சு இருக்கீங்க வானதி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி, ப்ரியாராம்.

      Delete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!