Saturday, June 11, 2011

எங்க ஊர் நல்ல ஊர்


எங்க ஊர் என்று நான் எதைச் சொல்ல, பிறந்த இடத்தையா? வளர்ந்த இடத்தையா? தற்போது இருக்கும் ஊர் பற்றிச் சொல்லவா? என்று ஒரே குழப்பம். பிறந்த இடத்தைப் பற்றிச் சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. அல்லாவிட்டால் பெருமையாகச் சொல்ல எதுவும் இல்லை. இலங்கையின் தலைநகர் கொழும்பில் பிறந்தேன். எனக்கு கொழும்பு எப்போதும் பிடிப்பதில்லை. எப்போதும் நச நசவென மக்கள் கூட்டம். விரைந்தோடும் மக்கள், பிஸியான சாலைகள். 1983, ஜூலைக்குப் பிறகு சுத்தமாகப் பிடிக்காமல் போய் விட்டது. சிங்களக் காடையர்களால் வீடு தாக்கப்பட்டு, நடுத் தெருவில் வீடு வீடாக ஓடி தஞ்சம் கேட்டது, சாப்பாடு கிடைக்காமல் பட்டினி கிடந்தது, ஆடு மாடுகள் போல கப்பலில் அடைக்கப் பட்டு யாழ் நோக்கிச் சென்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஊர் தான் எனக்கு எப்போதும் பிடிக்கும். என் பெற்றோரின் ஊர். தாய் வழிச் சொத்து பெண்களுக்கு என்பது எங்கள் நாட்டுச் சட்டம். பெரிய நிலம், வீடு என்று வசதியான குடும்பம் அம்மாச்சியின் குடும்பம். அந்த வீடு தான் என் வசந்தமாளிகை என்று சொல்வேன். முற்றம் முழுவதும் மா மரங்கள், கொய்யா மரம், ரோஸ், மல்லிகை, தென்னை, இப்படி நிறையச் செடிகள், மரங்கள்.
என் மாமா ( அம்மாவின் சகோதரன் ) 27 வயதில் இறந்த போது நான் என் அம்மாச்சியின் அரவணைப்பில் 2 வருடங்கள் இருந்தேன். என் பெற்றோர்கள் கொழும்பில் இருக்க நான் ஊரில். என்னை நேர்ஸரியில் சேர்த்து விட்டார் அம்மாச்சி. எனக்கோ பள்ளி போக வெறுப்பு. என் அம்மாச்சிக்குப் பயம் எங்கே நான் படிக்காமல் இருந்துவிட்டால் என் அப்பா வந்து இழுத்துச் சென்று விடுவாரோ என்று. எங்கள் வீட்டின் பின் புறம் அம்மாச்சியின் தோழி ஒருவர் இருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த அம்மாச்சி ஏதோ தோன்றியவராக என் விரலினைப் பிடித்து, அ எழுது, வாணி அம்மா என்று கடுப்பேத்த, நான் போய் பனை மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டேன்.
இந்த சம்பவத்தின் பிறகு என் அம்மாச்சிக்காக ஏதோ பள்ளி போய் வந்தேன். சில மாதங்களின் பின்னர் என் அப்பா மீண்டும் கொழும்புக்கே கூட்டிச் சென்று விட்டார். மனம் ஒன்றாமல் ஏதோ ஒரு வெறுமையாக இருந்ததை அடிக்கடி உணர்ந்தேன். ஜூலை, 1983 க்குப் பிறகு ஒரேயடியாக ஊர் போனதில் எனக்கு அவ்வளவு சந்தோஷம்.

ஒழிந்தான் துரோகி ( கொழும்பு வாழ்க்கை ) என்பது போல இருந்தது. ஊரில் அம்மாச்சியோடு சுத்தாத இடங்கள் இல்லை. கோயில் திருவிழா, உறவினர்கள் வீட்டு விசேஷங்கள், கடை, சந்தை இன்னும் நிறைய இடங்கள் இருந்தன. என் அம்மாச்சி நல்ல கல கலப்பானவர். எப்போதும் கல கலப்பாக பேசுவார். பஸ்ஸில் ஏறினால் என் அம்மாச்சியின் குரல் எங்கும் ஒலிக்கும். நான் எங்காவது கூட்டத்தில் காணாமல் போய் விட்டால் என் பெயரைக் கூவி அழைத்து, ஏலம் விடாத குறையாக ஒரு வழி பண்ணி விடுவார்.

எனக்கு ஊரில் மிகவும் பிடித்தது அம்மன் கோயில் திருவிழா. தெருவை அடைத்து பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, லைட்டுகள் போட்டு ஊரே கல கலப்பாக இருக்கும். என் அம்மாச்சியுடன் 15 நாட்களும் கோயிலுக்கு போய் வருவேன். அப்பவே பெரிய பக்தி மான் என்று நினைக்க வேண்டாம். கோயிலுக்கு வரும் நண்பிகள் கூட்டத்துடன் அரட்டை அடிக்கவே போவேன்.

தெளிந்த நீரோடை போல சென்ற வாழ்வில் மீண்டும் குழப்பங்கள். இராணுவத்தினர், ஷெல், துப்பாக்கி, விமானங்கள் என்று மீண்டும் ஓட்டம். அம்மாச்சி பெரும்பாலும் வீட்டிலேயே இருந்து விடுவார். கை, கால் வழங்காத நிலையில் இருந்த என் தாத்தாவை விட்டுட்டு எங்கேயும் வர மாட்டேன் என்று அவருடனே இருந்து கொள்வார். தாத்தாவை எங்களுடன் கூட்டிச் செல்ல முயன்றாலும் அதற்குரிய வசதிகள் இருந்ததில்லை. சைக்கிளில் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திற்கே ஓட்டிச் செல்ல முடியும். அதுவும் கை, கால்களை ஒருவர் பிடிக்க, இன்னொருவர் சைக்கிளை மெதுவாக மிதிக்க வேண்டும். வரும் குண்டு வீச்சு விமானங்களை பார்ப்பதா, இராணுவத்தினரைப் பார்ப்பதா என்று ஒரே குழப்பமாக இருந்தாலும் அம்மாச்சி கூடவே வருகிறார் என்ற நினைப்பே இனிமையாக இருக்கும் எனக்கு.

1989 இல் இந்தியா போக முடிவு செய்தார் அப்பா. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தியா போக வேண்டிய கட்டாயம். என் அம்மாச்சியும் வருவதாக இருந்தார். பின்னாளில் அது நடை முறைக்கு ஒத்து வராது என்று கை விடப்பட்டது. தாத்தாவை படகில் கூட்டி வரவோ அல்லது விமானத்தில் கூட்டி வரவோ உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.

அன்று நான் ரகசியமாக அழுத அழுகை எவருக்கும் தெரியாது. நாங்கள் இந்தியா சென்று 5 வருடங்களின் பின்னர் என் அம்மாச்சி இறந்தார். அவரின் முகத்தை கடைசியாக ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் இறந்த நிலையில் அவரைப் பார்க்க என் மனம் விரும்பவில்லை. அவரின் நினைவாக அறுசுவையில் நான் எழுதிய கதை தான் " பேரன் வருவான்".

இந்தியா, திருச்சியில் கிட்டத்தட்ட 10 வருடங்கள். திருச்சி எனக்கு கிட்டத்தட்ட எனக்கு ஊர் போல இருந்தது. மலைக்கோட்டைப் பிள்ளையார், சிறீரங்கம் இப்படிப் பல இடங்கள், படித்த பள்ளி, கல்லூரி எல்லாமே என் நினைவில் அப்படியே பசுமையாக இருக்கு.

என் அம்மாச்சியின் மறைவின் பின்னர் எனக்கு ஊர் நினைவு அடியோடு மறைந்து போய் விட்டது. ஊருக்குப் போனாலும் ஒவ்வொரு கல்லும், மரமும் அம்மாச்சியின் நினைவை எனக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும். பல தடவை குண்டு வீச்சினால் உடைந்து போயிருக்கும் எங்கள் வீட்டின் அழகும், சந்தோஷமும் என் அம்மாச்சியோடு போய் விட்டது என்றே எண்ணுகிறேன்.
ஊரைப் பற்றி எழுதாமல் என் அம்மாச்சி பற்றி எழுதியமைக்கு மன்னிக்கவும். ஊர் பற்றிய நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் ஒரு புள்ளியாய் மட்டுமே ஞாபகம் இருக்க, அம்மாச்சியுடன் திரிந்தது மட்டுமே எப்போதும் பசுமையாக இருப்பதால் அவரைப் பற்றி எழுதினேன்.

( ஸாதிகா அக்கா அழைத்த தொடர்பதிவு. )

44 comments:

 1. ;(( மிகவும் மனதைத் தொட்ட இடுகை.
  உங்கள் உணர்வுகள் புரிகின்றன வாணி. படித்ததில் கண்ணில் திரை.
  சில நினைவுகள் சோகமானாலும்... நினைப்பது சுகம்தான் இல்லையா.

  ReplyDelete
 2. அம்மாச்சியோடு சிறுவயது ஞாபகங்களை நினைவூட்டி எங்கோ பின்னோக்கி செல்கிறது சகோ நினைவுகள் ...

  இப்போ திருச்சியில் உள்ளீர்களா நல்ல ஊர் நானும் சில மாதங்கள் அங்கு பணியாற்றியுள்ளேன் திருச்சியின் அழகே தனி ....

  ReplyDelete
 3. வானதி,உங்களுக்கெ உரித்தான அருமையான எழுத்து நடையில் ஊரைப்பற்றி எழுதியது ஈழக்கலவரத்தை கண் முன் கொணர்ந்து விட்டீர்கள்.அங்கு பட்ட கஷ்டங்களை உங்களைப்போன்றோர் விவரிக்கும் பொழுது மனம் கனத்துப்பொய் விடுவது என்னொவோ உண்மை

  ReplyDelete
 4. மனங்கனக்கச் செய்து போகும் பதிவு
  ஊரென எதை சொல்வது என ஆரம்பத்தில்
  சொன்ன வார்த்தை
  மிகச் சாதாரண வார்த்தையாகத்தான் பட்டது
  ஆயினும் பதிவைப் படித்து முடித்தபின்
  அந்த வார்த்தை மிகப் பிரமாண்டமாய்
  விஸ்வரூபம் எடுப்பதுபோல் பட்டது
  ஊரின் நினைவுகள் அனைத்தும்
  அம்மாச்சியைத் தொடர்ந்து இருப்பதால்
  அம்மாச்சி கதைதான் ஊரின் கதையும்
  தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. உங்கள் வாழ்கையில் எத்தனை சோதனைகள் .......இனிவரும் நாட்களில் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் ....

  ReplyDelete
 6. இலங்கையின் தலைநகர் கொழும்பில் பிறந்தேன்.//

  வணக்கம் வான்ஸ், நான் இவ்ளோ நாளா நீங்க இந்தியா என்று நினைத்துக்கிட்டிருந்தேன்.
  ஹி...ஹி.....

  ReplyDelete
 7. என்னை நேர்ஸரியில் சேர்த்து விட்டார் அம்மாச்சி.//

  அவ்....நீங்க நேசரியை இன்னமும் மறக்கலை..
  நம்ம ஊரிலை நேசரியெல்லாம் திரிபடைந்து இப்போ கிண்டர்ஹாடன் ஆக்கிட்டாங்க..
  ஹி...ஹி....

  ReplyDelete
 8. யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஊர் தான் எனக்கு எப்போதும் பிடிக்கும்//

  அவ்..அப்போ யாழில் இருந்து 20 மைல் என்றால்
  அச்சுவேலி,
  இல்லே
  கொடிகாமம், இல்லாவிட்டால்
  புன்னாலைக்கட்டுவன்,
  இல்லே வேலணை...
  இதில் ஏதாவது ஒரு ஊர் தான் உங்க ஊர்...
  எப்பூடி;-))

  ReplyDelete
 9. அப்பவே பெரிய பக்தி மான் என்று நினைக்க வேண்டாம். கோயிலுக்கு வரும் நண்பிகள் கூட்டத்துடன் அரட்டை அடிக்கவே போவேன்//

  அது நமக்கெல்லாம் தெரிஞ்ச விசயமாச்சே..

  ஹி...ஏன்னா நாமளும் கச்சான் வாங்குவதற்கும், சாமி தூக்கும் போது ஸ்டைல் காட்டவும் தான் கோயிலுக்கு போவோமே;-))

  ReplyDelete
 10. ஊர் நினைவுகளில் உங்கள் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட்ட அம்மாச்சியின் நினைவலைகளைச் சுமந்து ஞாபக மீட்டலாய் வந்திருக்கிறது.

  ReplyDelete
 11. மிக நிகிழ்ச்சியான
  பதிவு வானதி அக்கா
  நிசமா எவ்ளோ சோகம் ..
  உள்ளுக்குள்ள..

  சொந்த ஊரு விட
  பிடிச்ச சொந்த பந்தம் எல்லாம் விட்டு..என்ன சொல்ல தெரியல
  அம்மாச்சியின் நினைவுகள் எனது தாத்தா பாட்டி நியாபகங்களை கொண்டு வந்தது

  ReplyDelete
 12. திருச்சியும் இரண்டு ஆண்டுகள் அங்கு வசித்தும் என்னினைவுக்குள் மீண்டும்
  நன்றி அருமையான பதிவுக்கு

  ReplyDelete
 13. . முற்றம் முழுவதும் மா மரங்கள், கொய்யா மரம், ரோஸ், மல்லிகை, தென்னை, இப்படி நிறையச் செடிகள், மரங்கள்.//

  இப்படிலாம் வெறுப்பேதனும்னு முடிவு பண்ணிட்டு வந்தீங்களா.!?

  ReplyDelete
 14. வாணி.. ஒரு மாதிரி உள்ளுக்குள்ள ஃபீல் ஆகுது.. என்ன என்று சொல்ல தெரியவில்லை.. கானல் நீராக போய்விட்ட என் கடந்தகால வாழ்க்கையை ஞாபக படுத்திவிட்டீர்கள்

  ReplyDelete
 15. சொந்த ஊர் என்று நேற்றை திரும்பி பார்த்தால், மனிதர்கள் பலர் ஞாபகத்துக்கு வருவார்கள். உங்களுக்கு உங்கள் அம்மாச்சி ஞாபகம்.

  ReplyDelete
 16. ஒருவர் மீது நாம் வைக்கும் அளவு கடந்த பாசம், நம்மை விட்டு விலகுவது மிக கடினம்.

  ReplyDelete
 17. ஹ்ம்ம் எல்லோருக்கும் அவர் அவர் சொந்த ஊர்தான் சொர்க்கம்

  ReplyDelete
 18. கடைசிமட்டும் உங்க ஊரின்ட பெயர சொல்லலயே கொழும்பு திருச்சி எண்டெல்லாம் மட ஊர்கள சொல்லிட்டு யாழ்பாணத்தில் எந்த ஊர் எண்டு சொல்லாமவிட்டது கவலையாய் இருக்கு

  ReplyDelete
 19. அம்மாச்சி என்ற சொல்வழக்கு கொடிகாமம் சாவச்சேரி பக்கம் உண்டு நீங்க எந்த ஊரு

  ReplyDelete
 20. வாழ்க்கையால் எழுந்த எழுந்த வலிமிகு வார்த்தைகளும் நிஜங்களாக..

  ReplyDelete
 21. ஒழிந்தான் துரோகி..?

  ReplyDelete
 22. //ஊர் பற்றிய நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் ஒரு புள்ளியாய் மட்டுமே ஞாபகம் இருக்க, அம்மாச்சியுடன் திரிந்தது மட்டுமே எப்போதும் பசுமையாக இருப்பதால் அவரைப் பற்றி எழுதினேன்.//

  nalla solli irukkinga... ninaivugaludan

  ReplyDelete
 23. Dear,
  Your writings touched my heart.
  viji

  ReplyDelete
 24. அழகாக ஆரம்பித்து முடித்திட்டீங்க வாணி... நானும் உங்க கட்சிதான்.... ஊரைவிட என்னைப்பற்றித்தான் அதிகமாக எழுதிவைத்திருக்கிறேன்... வெளிவந்ததும் பாருங்க... மண்வாசனை போலும்.

  சத்தியமாக யாழ்ப்பாணத்திலிருந்து .... மைல்கள் இப்பூடித்தான் நானும் எழுதினேன் அதெப்பூடி???.

  ReplyDelete
 25. உங்களுடைய நினைவுகள் நல்லதே..பசுமையான நிகழ்ச்சிகளை மட்டுமே ஞாபகம் வைத்து கொள்வது ரொம்ப நல்ல விஷயம்...

  ReplyDelete
 26. வானதி அருமையா சொல்லியிருக்கெ. சொந்த ஊரு
  மலரும் நினைவுகளை.

  ReplyDelete
 27. அதிராவும் எழுதியிருக்கிறார்.. உங்கட ஊர்களுக்கு இடையே 16 மைல் தூரம் என்று ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்திருக்கிறேன் :))

  உங்க நினைவுகளை வாசித்தாலே எப்பவும் வலி ஏற்படும்.. அது போலவே இப்பவும்..

  ReplyDelete
 28. //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

  அதிராவும் எழுதியிருக்கிறார்.. உங்கட ஊர்களுக்கு இடையே 16 மைல் தூரம் என்று ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்திருக்கிறேன் :))///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). எப்பூடியெல்லாம் கண்டுபுடிக்கிறாங்க...:)))... மைலைத்தானே சொன்னோம்(இது வேற மயில்:))எந்தப் பக்கம் என நாங்க ஆரும் சொல்லவேயில்லையே...

  ReplyDelete
 29. இமா, உண்மை தான்.
  மறக்க நினைத்தாலும் முடியாத நினைவுகள்.
  மிக்க நன்றி.

  தினேஷ் குமார், இப்ப திருச்சி அல்ல. அமெரிக்கா.
  மிக்க நன்றி.

  ஸாதிகா அக்கா, நான் சொன்னது 10 வீதம் கூட இல்லை. இன்னும்நிறைய இருக்கு. சொல்ல விரும்பவில்லை.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 30. ரமணி அண்ணா, எழுதி முடித்த பின்னர் பெரும் தயக்கத்தின் பின்னரே வெளியிட்டேன்.
  தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  கூடல் பாலா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  நிரூ, நீங்கள் மட்டும் இல்லை. பலரும் நினைத்தது அது தான்.
  அறுசுவையின் மூலம் அறிமுகமான சிலருக்கு மட்டுமே தெரியும் நான் இலங்கை என்பது.
  நான் படித்த போது பாலர் பாடசாலை என்றே சொல்வார்கள். இப்ப எல்லாம் பெயர் மாறிவிட்டது தெரியும். இருந்தாலும் பழசை அப்படியே எழுத வேண்டும் என்று எழுதினேன்.
  நீங்க சொன்ன ஊர் எதுவும் இல்லை. அப்படியே மேலை வடக்குப் பக்கம் வாங்கோ. ஓக்கை. இப்ப ஸ்டாப். அதான் எங்கட ஊர்.
  ஓ! நீங்களும் கோயிலுக்கு போறது அதுக்கு தானோ????
  மிக்க நன்றி, நிரு.

  ReplyDelete
 31. சிவா, உறவுகளைப் பிரிவது கஷ்டம் தான். அதுவும் மீண்டும் பார்க்கவே மாட்டோம் என்ற உணர்வுடன் பிரிவது இன்னும் சோகம்.
  மிக்க நன்றி.

  கூர்மதியான், கானல்நீராக// என்ன சொல்வது என்று தெரியவில்லை.
  எனக்கும் பல நேரங்களில் அந்த நினைப்பு வருவதுண்டு.
  இருக்கும் வரை சந்தோஷமா இருப்போம் என்று கவலைகள் அண்ட விடுவதில்லை. மனதின் ஓரத்தில் ஒரு வலி இருந்தாலும் அதோடு வாழப்பழகி விட்டேன்.
  மிக்க நன்றி.

  தமிழ் உதய, மிக்க நன்றி.
  அனாமி, மிக்க நன்றி.
  இளம் தூயவன், உண்மை தான்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 32. எல்கே, மிக்க நன்றி.

  யாதவன், சாவகச்சேரி இல்லை! மேலை நிரூபனுக்கு பதில் சொல்லியுள்ளேன். பாருங்கோ.
  மிக்க நன்றி.

  றமேஸ், மிக்க நன்றி.
  குமார், என்ன ஆச்சு பாஸ்? ஆளையே பார்க்க முடியவில்லை. நலமா?
  மிக்க நன்றி.
  விஜி ஆன்டி, மிக்க நன்றி.

  ReplyDelete
 33. வலிதரும் நினைவுகள் வானதி! என்னதான் இங்கே வந்துவிட்டாலும் மறக்கமுடியாத நினைவுகள்.

  ஊர் என்பதே மனிதர்களால் ஆனதுதானே,அதனால்/ஊரைப் பற்றி எழுதாமல் என் அம்மாச்சி பற்றி எழுதியமைக்கு மன்னிக்கவும்./இது தேவையில்லை என்பது என் கருத்து. :)

  ReplyDelete
 34. அருமையான பதிவு என்று சொல்வதை விட மனம் கனக்கச் செய்த பதிவு என்று தான் சொல்ல வேண்டும். பதிவு முழுக்க ஒவ்வொரு வ‌ரியிலும் வலியும் சோகமும் தெரிகிறது! இள‌ம் பிராயத்தில் ஏற்படும் பிரிவுகளும் வலிகளும் காலம் முழுக்க ஆறாது. அதோடு வலிகளை மறக்கச் செய்த எந்த பிரியமான உறவானாலும் அதை மரணம் வரை மறக்க இயலாது! என்ன செய்வது? வலிகளை நெஞ்சின் ஆழத்தில் போட்டு விடுங்கள்!

  ReplyDelete
 35. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
 36. மனபாரத்தை ஏற்படுத்தும் பதிவு. மற்றவர்களெல்லாம் சொந்த ஊர் என்றால் மகிழ்வோடு பதிவு எழுத, நீங்களெல்லாம் மட்டும் இப்படியெழுத வேண்டியிருப்பதை நினைத்தால் வருத்தம்தான். எனினும், இந்தியாவின்/ இலங்கையின் அகதி முகாம்களில் இருப்பவர்களின் நிலைதான் இன்னும் பரிதாபம்.

  இங்கே பாலஸ்தீனியர்களிடமும் இதேபோல ஒரு சோகம் இருக்கும்.

  ReplyDelete
 37. சொந்த‌ ஊரை விட்டுவிட்டு சொர்க்க‌த்தில் குடியிருந்தாலும் ந‌ம‌க்கு அது ர‌சிக்காது. உங்க‌ளின் நினைவ‌லையில் இருக்கும் விச‌ய‌ங்க‌ள் அனைத்தும் எழுத்தில் வ‌ந்துள்ள‌து..

  ReplyDelete
 38. manathai baaramaakkiyathu ungal "enga oor sontha oor"....really i felt a lot after reading it... aayiram irunthaalum pirantha man enbathu namathu kuruthiyodu kalantha ondru.... i vl pray the almighty for d peaceful returns in ur homeland... vera enna solla mudiyum...all iz well....

  ReplyDelete
 39. கண்ணில் நீர் வரவைத்த பதிவு வானதி.. எனக்கும் ஊர் நினைவுகளை கிளப்பி விட்டுடீங்க... கோவை கண் முன் விரிகிறது

  ReplyDelete
 40. உங்கள் நினைவுகள் பகிர்வு மனதையும் கண்ணையும் கசிய வைத்தது,அம்மாச்சியினைப் பற்றிய பகிர்வும்,ஊர் நினைவுகளும் கண் முன் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.

  ReplyDelete
 41. உங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். மனம் ஒரு கோவில் என்று சொல்வார்கள். உங்கட மனம் ஒரு நல்ல ஊரு போலிருக்கு அதான் தனிமை தேடி இங்கேயே இருக்கிறீர்கள் போல! இருங்கள் வான்ஸ்.. அம்மாச்சியின் நினைவுகளுடனே!!

  ReplyDelete
 42. மகி, நீங்க சொன்னா சரி தான். ஊர் பற்றி எழுதும் போது கோயில்கள், கடைகள், சாப்பாட்டுக் கடைகள் பற்றியே எழுதுவார்கள். அதனால் தான் அந்த வரி சேர்தேன்.
  மிக்க நன்றி, மகி.
  மனோ அக்கா, மிக்க நன்றி.

  தமிழ் யுனிகோட், மிக்க நன்றி.

  ஹுசைனம்மா, உண்மை தான். பாலஸ்தீனியர்கள் நிலமை இன்னும் மோசம் என்பது என் கருத்து.
  மிக்க நன்றி.
  நாடோடி, மிக்க நன்றி.
  ஜெயராம், முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
  அப்பாவி, மிக்க நன்றி.
  ஆசியா அக்கா, மிக்க நன்றி.
  நாட்டாமை, மிக்க நன்றி.

  ReplyDelete
 43. அதீஸு, உண்மை தான் எனக்கு ஊரைப் பற்றி எழுத எதுவுமே ஞாபகம் இல்லை. சாப்பாட்டுக் கடைகள் எங்கள் ஊர்களில் மிகவும் குறைவு (இல்லை என்றே சொல்லலாம் ), கோயில்கள் பற்றி எழுத எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை.

  மிக்க நன்றி, அதீஸூ.
  கீதா, மிக்க நன்றி.
  லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
  சந்தூ, வலி எப்போதும் இருக்கும். நான் இலங்கை பற்றிய செய்திகள் படிப்பதே குறைவு.
  படிச்சா அன்று முழுக்க மூட் சடி இருக்காது.
  அடேங்கப்பா! 20- 4 = 16 நீங்க கணக்கில் புலி தான் சந்தூ.
  மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!