Monday, May 3, 2010

கல்யாணமாம் கல்யாணம்...

என் கணவரின் நண்பருக்கு திருமணம். என் கணவரின் நண்பர் பெயர் அலெக்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் போக வேண்டுமா என்று இதோடு குத்துமதிப்பாக 15 தடவை என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் போகத் தயங்குவதன் காரணம் என்ன என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் போக விருப்பம் இல்லை. என் கணவர் கண்டிப்பாக சொல்லி விட்டார் எல்லோரும் திருமணத்திற்கு போகிறோம் என்று. இங்கு எல்லோரும் என்பது என் 1 வயது மகனையும் சேர்த்து.

எனக்கு முதலில் பிரச்சினை உண்டானது ஆடை விடயத்தில். இது அமெரிக்கன் வெடிங். தகதகவென மின்னும் பட்டுப் புடவை சரி வராது. சல்வார்கமீஸ் தான் சரி வரும் என்று முடிவு செய்தேன். கண்ணாடி பதித்த சல்வார், ஒரு வளையல், ஒற்றைக்கல் வைத்த நெக்லஸ் இவ்வளவு தான் என் மேக்கப்.
தேவாலயத்தில் திருமணம் முடிந்து, எங்கோ ஒரு ஹாலில் வரவேற்பு வைத்திருந்தார்கள். அதை ஹால் என்று சொல்வதே பாவம். நிமிர்ந்தால் மேலே தலை இடித்து விடும் போல இருந்தது.

சாப்பாடு... அதைப் பற்றி நினைக்கவே கொடுமையாக இருக்கு. சான்ட்விச் தான் சாப்பாடு. அட நீங்கள் நினைப்பதே தான்... இரண்டு பன் எடுத்து நடுவில் சிக்கன், இலைதழை, பிக்கிள் வைத்து அதை பலம் கொண்ட மட்டும் இறுக்கமாக பிடித்து சாப்பிட வேண்டும். நிறைய ஆட்கள் கூடி இருக்கிற இடத்தில் இந்த சிக்கன் சான்ட்விச் மானத்தை வாங்கி விடும். சிக்கன் ஒடி விடும் அல்லது ஏதாவது ஒரு பொருள் நழுவிக் கீழே விழுந்துவிடும். அதை ஒரு அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்க வேண்டும். சில நேரங்களில் இந்த சான்ட்விச் பிரெட் மேல் அண்ணத்தில் ஒட்டி உயிரை வாங்கி விடும். வாயில் விரலை வைத்து துழாவி எடுக்கவும் முடியாது.

இந்த பொருட்களை எல்லாம் எடுப்பதற்கு வரிசை நின்று, வெற்றிகரமாக பொருட்களை சேகரித்து வந்து அமர்ந்து கொண்டேன். மகன் சிக்கன் மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்க, சிக்கனை எடுப்பதற்குள் அது நழுவி கீழே எங்கோ விழுந்து விட்டது.

மீண்டும் வரிசையில் நின்று... நினைக்கவே கடுப்பாக வந்தது. இத்தனைக்கும் அலெக்ஸ் ஒன்றும் வறுமையில் வாடுபவர் அல்ல. நல்ல வசதியான குடும்பம் அவருடையது.

ஒரு வழியாக கல்யாண விருந்து சாப்பாடு முடிந்தது. எல்லோருக்கும் பொழுது போக வேண்டுமே! சில பெண்கள் என்னை வந்து மொய்துக் கொண்டார்கள். மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒரு பிரிவினர் என் உடையை தொட்டுப் பார்த்தார்கள். மற்ற பிரிவினர் நகைகளையும், இறுதி பிரிவினர் என் தோலையும் ஆராய்ச்சி செய்தனர். இறுதிப் பிரிவினருக்கு என் தோல் எப்படி இந்த நிறத்தில் இருக்கு என்பதே பெரிய ஆச்சரியமாக இருந்தது. " சூரிய குளியல் எடுப்பியா ? " என்றார் ஒரு பெண். அவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது.

சாப்பிட்ட சாப்பாட்டிற்கும் சேர்த்து மொய் எழுதிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மூன்று மாதங்கள் கழித்து அலெக்ஸிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் போய் வந்த படங்கள் மற்றும் அனுபவங்கள் என்று நிறைய ஏதோ கிறுக்கி இருந்தார்.

ஊரில் நாங்கள் மிருககாட்சி சாலைக்கு சுற்றுலா போய் வந்த பின்னர் ஆசிரியை எங்களை 250 சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதச் சொல்வாரே அது போல இருந்தது இவரின் கடிதம். ஏனோ அந்த கடிதத்தை பார்த்த போது கல்யாண சாப்பாடே நினைவில் வந்தது. அந்த கடிதத்தை நான்காக, எட்டாக, பதினாறாக கிழித்து குப்பையில் போட்டேன். என் கணவர் அந்த கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. அவர் இன்னும் அக் கடிதத்தை தேடிக் கொண்டிருக்கிறார். ம்ம்ம்...நல்லா தேடட்டும்.

25 comments:

 1. //ஒரு பிரிவினர் என் உடையை தொட்டுப் பார்த்தார்கள். மற்ற பிரிவினர் நகைகளையும், இறுதி பிரிவினர் என் தோலையும் ஆராய்ச்சி செய்தனர்.///

  super

  கடந்த வாரம் போன எனது நண்பரின் திருமணம் நினைவிற்கு வருகிறது . சிங்கையில் இருந்து அவரது அலுவலகத்தை சேர்ந்த வெளிநாட்டு தம்பதிகள் வந்து உணவை உன்ன வெகு சிரமப்பட்டனர்

  ReplyDelete
 2. //சில நேரங்களில் இந்த சான்ட்விச் பிரெட் மேல் அண்ணத்தில் ஒட்டி உயிரை வாங்கி விடும். வாயில் விரலை வைத்து துழாவி எடுக்கவும் முடியாது. //

  அய்யோ அய்யோ!!! சூப்ப‌ரு... ந‌ல்லா இருக்குங்க‌

  ReplyDelete
 3. அய்யோ அய்யோ!!! சூப்ப‌ரு... ந‌ல்லா இருக்குங்க‌.
  சரியான காமெடிதான் போங்க.

  ReplyDelete
 4. கல்யாண விருந்தில் பிரட் சப்பிட்ட சோகம் நல்லாவே த்ரியுது வானதி...ஹா..ஹா..ஹா

  ReplyDelete
 5. //என் கணவர் அந்த கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. அவர் இன்னும் அக் கடிதத்தை தேடிக் கொண்டிருக்கிறார். ம்ம்ம்...நல்லா தேடட்டும். //ஹா ஹா பாவம் அவர் உண்மையை சொல்லிடுங்க கிழித்துபோட்டுட்டேன்னு...

  ReplyDelete
 6. வானதி படிக்க படிக்க சிரிப்பு தாங்க முடியவில்லை...நல்ல எழுத்து நடை உங்களுக்கு :-) .ம்ம்ம் எழுதுங்க எழுதுங்க எழுதிட்டே...... இருங்க

  ReplyDelete
 7. இது அமெரிக்கன் வெடிங்///
  சாப்பிட்ட சாப்பாட்டிற்கும் சேர்த்து மொய் எழுதிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்/// அமெரிக்க வெடிங்கிலும் “மொய்யோ?”... எங்கேயோ இடிக்குதே....

  அதில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் போய் வந்த படங்கள் மற்றும் அனுபவங்கள் என்று நிறைய ஏதோ கிறுக்கி இருந்தார். /// ஏன் இப்பூடிப் புகையுது???.. மோர் குடியுங்கோ வாணி பிளீஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 8. எல்கே, வருகைக்கு மிக்க நன்றி. அமெரிக்க மக்கள் இப்போது இந்திய உணவு என்றால் வெளுத்துக் கட்டுவார்கள். அவர்கள் வெட்கம் பார்க்காமல் தோசையை கைகளால் பிய்த்து வாயில் போடுவார்கள்.

  ReplyDelete
 9. நாடோடி, மிகவும் நன்றி. அட உண்மை தான். நிறைய அனுபவம் இதில்.

  ReplyDelete
 10. குமார், ஷாதிகா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. மேனகா, கட்டாயம் சொல்ல மாட்டேன் ஹி ஹி....
  ஹர்ஷினி அம்மா, உங்கள் ஊக்க வரிகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. அதீஸ், இது செக் என்ற ரூபத்தில் எழுதப்படும் மொய். அதோடு இதெல்லாம் கற்பனை அதீஸ் எனக்கு ஏன் புகை வரப் போகுது....

  மிக்க நன்றி.

  ReplyDelete
 13. வானதி.. நீங்க சண்ட்விச் பத்தி சொன்னதும் எனக்கு ஒரே சிரிப்பு போங்க..
  அழகா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. :D :D இன்னும் சிரிப்பா வருது..

  ReplyDelete
 14. ஆகா உண்மைக்கதையும் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?வானதி.

  ReplyDelete
 15. நான் தீர்மானிச்சிட்டன் வாணி. எங்கட வீட்டில கலியாணம் எண்டால் வாணிக்கு (மட்டும்) சான்விச் தாறது இல்ல. ;)

  அப்பிடி இல்லை எண்டு தந்தாலும் மொய் வேணாம் எண்டு மெய்யாவே சொல்லீருவன். ;))

  (இன்வைட் பண்ணவே யோசினையா இருக்கும் எனக்கு. பிறகு அங்க நடக்கிறதைப் பேரை மாற்றிக் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து இங்க வந்து போட்டு விட்டீங்கள் எண்டால்!! நானும் வேற வழி இல்லாமல் ஒரு பின்னூட்டம் போட்டுட்டுப் போக வேண்டி வந்துரும். ;))

  நல்லா சிரிச்சன் வாணி.

  ReplyDelete
 16. //என் கணவர் அந்த கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. அவர் இன்னும் அக் கடிதத்தை தேடிக் கொண்டிருக்கிறார். ம்ம்ம்...நல்லா தேடட்டும்.///இது கொஞ்சம் too mucஆகதெரியலா...பாவம் உங்கள் கணவர்...அவரிடம் சொல்லிவிடுங்க...

  ReplyDelete
 17. கஷ்டம் தாங்க... இந்த பனிகாட்ல (கனடா) ஒரைஞ்சு போயிராம இருக்கத்தான் அப்படி கடினமான பிரட்ஐ சாப்பிடறாங்க போல நான் இந்த வம்புக்கு தான் இங்க இந்தியன் பாமிலி functions தவிர மத்ததெல்லாம் முடிஞ்ச வரை தப்பிச்சுடுவேன். பழகரதுல எப்பவும் பிரச்சனை இல்ல... இந்த சாப்பிடற விசயம் தான் வம்பு. அப்படி போனாலும் I have allergies, I wont eat other foods னு சொல்லி தப்பிச்சுருவேன்

  ReplyDelete
 18. ஆனந்தி, மிக்க நன்றி. சிரிப்பிற்கு நன்றி.

  ஆசியா அக்கா, மிக்க நன்றி.

  ReplyDelete
 19. இமா, நீங்கள் மொய் மெய்யாலுமே கேட்க மாட்டீர்களா?? அப்ப நீங்கள் சான்ட்விச் என்ன பச்சைத் தண்ணீரே தந்தாலும் வாயே திறக்க மாட்டேன்.

  //இன்வைட் பண்ணவே யோசினையா இருக்கும் எனக்கு. பிறகு அங்க நடக்கிறதைப் பேரை மாற்றிக் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து இங்க வந்து போட்டு விட்டீங்கள் எண்டால்!! நானும் வேற வழி இல்லாமல் ஒரு பின்னூட்டம் போட்டுட்டுப் போக வேண்டி வந்துரும். ;))//

  ஹாஹா... எப்பவுமே ஒரு பயம் இருக்கோணும் ஆமா...

  ReplyDelete
 20. கீதா, மிக்க நன்றி. ம்ம்... சொல்றேன் நாளைக்கு.

  ReplyDelete
 21. அப்பாவி தங்கமணி,
  //I have allergies, I wont eat other foods னு சொல்லி தப்பிச்சுருவேன்//
  நான் கொஞ்சம் பயந்த சுபாவம் அதான் சாப்பிட்டு விட்டேன் ஹிஹி....

  ReplyDelete
 22. சாண்ட்விச் அனுபவம் அருமை வானதி.. எனக்கு இன்னமுமே பிரச்சனை தான்.. அதுவும் இந்த சப்வே இருக்கே!! கீழே மயோனைஸ் ஒயுக பக்கத்திலேர்ந்து இலை தழை எல்லாம் கீழே விழ.. இப்போ முதலில் ஃபோர்கில் குத்தி பாதியை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு மீதி தான் பன்னோடு சேர்த்துக் கடிக்கிறேன்..

  ReplyDelete
 23. நல்லா சாண்ட்விட்ச் சாப்ட்ருக்கீங்க அடுத்ததடவ சாப்பிடும்போது சிக்கன் ஓடாம பாத்துக்கங்க...

  ReplyDelete
 24. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

  http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

  ReplyDelete
 25. இன்னமும் சிரிப்பு அடங்கலைம்மா.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!