Monday, July 12, 2010

உன்னைத் தேடி...

தேவனுக்கு அதிகாலை 5 மணிக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்து மனைவி நர்மதாவை பார்த்தான். அவள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள். கல்யாணமாகி 3 வருடங்கள் ஆகிவிட்டது . மின்சாரம் இல்லாமையால் புழுக்கமாக இருந்தது. இலங்கையில் மனிதர் உயிர் வாழ்வதே பெரிய சவால். இதில் மின்சாரம் இல்லை என்று யாருமே கவலைப்படுவது இல்லை. இன்று இருப்பவன் நாளை உயிரோடு இருந்தால் அதுவே பெரிய அதிசயம்.

தேவன் மீண்டும் அந்த கனவை நினைத்துப் பார்த்தான். கடைசி 2 வாரங்களாக அவன் நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்கிறது. நர்மதாவிடம் சொல்லாமல் மௌனம் காத்தான்.

கனவில் அவனும் நர்மதாவும் புகையிரத வண்டிக்காக காத்துக் கொண்டு நிற்கிறார்கள். வேகமாக வந்த வண்டியில் நர்மதா மட்டும் ஏறிக் கொள்கிறாள். இவன் கால்கள் இடறி கீழே விழுந்து விட்டான். எழுந்து பார்த்தால் அங்கு மனிதன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் குகை போன்று இருண்ட இடத்தில் நிற்கிறான். புகையிரத வண்டியில் நர்மதா இவனுக்கு கை காட்டுவது மட்டுமே மங்கலாக தெரிந்தது. இவன் நிற்கும் இடத்தில் புகை சூழ்ந்து கொள்கிறது. எங்கும் மரண ஓலங்கள் கேட்டன. ஆனால் யாரையும் தெரியாமல் எங்கும் புகைமண்டலமாக இருந்தது.

தூரத்தில் எங்கோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. புரண்டு படுத்தான். தூக்கம் வரவேயில்லை. எழுந்து முற்றத்தில் போய் நின்று கொண்டான். இவனுடைய செல்ல நாய் டைகர் வந்து காலைக் கவ்வியது. தலையை தடவிக் கொடுத்தான். இருட்டில் அதன் கண்கள் மின்னியதை ரசித்தான். இவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள டைகர் மடியில் படுத்துக் கொண்டது.

விடிந்த பிறகு எழுந்து வந்த நர்மதா கணவருக்கு தேநீர் கொடுத்தாள். இவன் கனவைப் பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருந்தான். நர்மதா கொல்லைப் பக்கம் போனாள். அங்கு வரிசையாக கட்டியிருந்த மாடுகளை வாஞ்சையுடன் தடவி கொடுத்தாள். தண்ணீர், வைக்கோல் எடுத்துப் போட்டாள். பால் கறப்பதற்கு நேரமாகி விட்டது. ஆனால் இன்னும் மணியம் தாத்தா வரவில்லை. இல்லாவிட்டால் அம்மாவை கேட்க வேண்டும் என்றெண்ணி நடையினை எட்டிப் போட்டாள்.

நர்மதாவின் அம்மாவும் அதே தெருவில் தான் குடியிருந்தார். ஒரே தம்பி. படித்துக் கொண்டிருக்கிறான். அம்மா வந்து பால் கறந்து கொடுத்து விட்டு போனார். பாலை வாங்கும் போது கை இடறி பால் கீழே கொட்டியது.

தொட்டதற்கெல்லாம் சகுனம் பார்க்கும் அம்மா எதோ முணு முணுத்தது நர்மதாவின் காதில் தெளிவாக விழுந்தது. இவளுக்கும் உள்ளூர பதட்டம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் புன்னகை செய்தாள். இரண்டு, மூன்று தினங்களாகவே இவளின் மனதில் என்னவென்று சொல்ல முடியாமல் ஒரு வித பதட்டம்.

தாயை அனுப்பி விட்டு, பாலினை பாட்டில்களில் நிரப்பினாள். பக்கத்து வீடுகளுக்கு இவளே கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தாள். தேவன் மாடுகளை குளிப்பாட்டுவதில் பிஸியாக இருந்தான். நர்மதா பக்கத்தில் இருக்கும் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக பணி புரிகிறாள். தேவனுக்கு பெரிதாக வேலை இல்லை. வருமானம் போதாமல் இருக்கவே மாடுகள் வளர்க்க ஆரம்பித்தார்கள். ஓரளவு லாபம் வந்தது. நர்மதாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.


கல்யாணமான புதிதில் தேவன் நிறைய கடைகள் வைத்திருந்தான். பணம் தாரளமாகவே இருந்தது. நர்மதா வேலைக்கு போக வேண்டிய அவசியமே இருக்கவில்லை. வீட்டில் ஏவலுக்கு ஆட்கள், போய் வர கார் என்று சகலவிதமான சௌகரியங்களும் நிறைந்திருந்தன.

தேவன் நர்மதாவை உள்ளங்கைகளில் வைத்து தாங்குவான். பல வருடங்கள் நர்மதாவின் மீது ஒரு தலைக்காதல் தேவனுக்கு. நர்மதாவின் அப்பா கணடிப்பானவர். தேவன் போய் பெண் கேட்டதும் உடனே சம்மதம் சொல்லிவிடவில்லை நர்மதாவின் தந்தை. இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் காயம் பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தபோது இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க சம்மதம் தெரிவித்தார். திருமணம் மிகவும் எளிமையாகவே நடைபெற்றது. திருமணம் முடிந்து அடுத்த மாதமே நர்மதாவின் அப்பா காலமானார். மிகவும் உடைந்து போயிருந்த நர்மதாவின் குடும்பத்தை தேவன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அரசாங்கம் விதித்த பொருளாதார தடைகளினால் தேவனின் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டி வந்தது. இருந்த காசும் கரைந்து வாழ்க்கை நடத்துவதே பெரும் போராட்டம் ஆகிப்போனது.

நர்மதா வேலைக்குப் போயே தீருவேன் என்று கிளம்பிய போது தேவனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனால், செலவுகள் கழுத்தை இறுக்கிய போது வேறு வழியும் புலப்படவில்லை. தேவன் கிடைத்த வேலைகளை செய்யப் பழகிக் கொண்டான்.

பிள்ளையார் கோயில் மணியோசை நர்மதாவை இந்த உலகத்திற்கு மீண்டும் கொண்டு வந்தது. பள்ளிக்கு நேரமாகி விட்டதை அறிந்து அவசரமாக சமையல் அறையினுள் நுழைந்தாள். தேவன் ஏற்கனவே சமையல் வேலைகள் பார்க்க ஆரம்பித்து இருந்தான். இவளைக் கண்டதும் கனிவாக புன்னகைத்தான்.

" பள்ளிக்கு நேரமாகி விட்டது. நான் இன்று சமையலை கவனிக்கிறேன் ", என்றான் தேவன்.


நர்மதா பள்ளி சென்றாள். அங்கு போய் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது யாரோ சொன்னார்கள் இராணுவம் இவளின் கணவரைக் கைது செய்து விட்டதாக. பதட்டமாக இருந்தது. வீட்டிற்கு ஓடினாள் . அங்கு இவளின் அம்மா அழுது கொண்டிருந்தார்கள். இவளுக்கும் அழுவதை தவிர வேறு ஒரு வழியும் புலப்படவில்லை.

தொடரும்....

19 comments:

 1. உண்மை சுடும்.. கஷ்டமா இருக்கு படிக்க...

  ReplyDelete
 2. ஏன் எனக்கு இது அப்டேட் ஆகல ???
  இன்னிக்கு எல்லாரும் ஒரு முடிவோட பதிவு எழுதறீங்க.. சோக மயமா இருக்கு

  ReplyDelete
 3. உண்மைக்கதையாய் இல்லாமல் இருக்கட்டும்...

  அடுத்த பார்ட்டில் நர்மதா கஷ்டப்படாம இருக்க கடவதாக...

  ReplyDelete
 4. கஷ்டமா இருக்கு படிக்க..!

  ReplyDelete
 5. enna nadaka povuthee ...Please write it soon...

  ReplyDelete
 6. சோகமா இருக்கு போங்க! :(

  ReplyDelete
 7. //இலங்கையில் மனிதர் உயிர் வாழ்வதே பெரிய சவால். இதில் மின்சாரம் இல்லை என்று யாருமே கவலைப்படுவது இல்லை. இன்று இருப்பவன் நாளை உயிரோடு இருந்தால் அதுவே பெரிய அதிசயம். //

  அந்தக் காலத்தை நினைவுபடுத்திவிட்டீங்கள் வாணி.

  கனவின் பலனில் எனக்கு நிறையவே நம்பிக்கையுண்டு. கதை நன்கு போகிறது... விரைவில் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. நிச்சயமற்ற இந்த நிலை இன்னமும் தொடர்வது தான் வேதனை.

  ReplyDelete
 9. வாழ்வின் நிக‌ழ்வுக‌ள்... கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மாதான் இருக்கிற‌து.. தொட‌ருங்க‌ள்.

  ReplyDelete
 10. கதை மனதினை நெகிழ்த்தியது வானதி

  ReplyDelete
 11. எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
  நிச்சயமற்ற இந்த நிலை இன்னமும் தொடர்வது தான் வேதனை.
  /// இல்லை சந்து, இப்போ வேறுவடிவில் பிரச்சனைகள் இருக்கிறது, ஆனால் முந்திய மரணபயம்.. முக்கால்வாசியும் குறந்துவிட்டது.

  ReplyDelete
 12. படிக்க கஷ்டமா இருக்கு வானதி

  ReplyDelete
 13. //நர்மதா வேலைக்குப் போயே தீருவேன் என்று கிளம்பிய போது தேவனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. தேவன் கிடைத்த வேலைகளை செய்யப் பழகிக் கொண்டான். //

  கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்கையை சந்தோசமா வாழ எடுத்து புதிய முடிவுகள் போற்றுதலுக்குரியவை. அருமையா இருக்கு! (மேடம்னு போடலை சரியா!!)

  ReplyDelete
 14. மிகவும் நேர்த்தியாக எழுதி இருகிறிர்கள் . பதிவில் சோகம் இறுதி வரை கசிந்துகொண்டிருகிறது . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 15. உண்மைக் கதையோ வாணி?

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!