Wednesday, August 3, 2011

முத்தான மூன்று

ரமணி அழைத்த தொடர் பதிவு ஒரு வழியா எழுதியாச்சு.

1)
நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்
?

1. தொலைக்காட்சியில் Seinfeld நகைச்சுவை நாடகம் பார்ப்பது. கொஞ்ச நேரம் கவலைகள் எல்லாம் மறந்து போகும்.
2. காரில் போகும் போது பாட்டுக் கேட்பது.
3. இயற்கை, குழந்தைகள்... எல்லாமே பிடிக்கும்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. காரில் போகும் போது நியூஸ் தான் கேட்பேன் என்று அடம் பிடிக்கும் கணவர் ( காலையில் எழும்பி, இரவு படுக்கபோகும் வரை நியூஸ் தான் எப்போதும் கேட்பார் என் ஆ.காரர். இருந்தாலும் காரிலும் இவரின் தொல்லை தாங்க முடிவதில்லை. )
2. பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்கள் எல்லாமே.
3. அழுது வடியும் நிகழ்ச்சிகள்.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1. எதிர்காலம் பற்றிய பயம்.
2. முகத்துக்கு முன்பு ஒன்று சொல்லி, பின்னர் முதுகில் குத்துபவர்கள்.
3. இரவு, கடலில் பயணம் இரண்டுமே பயம். மூன்றாவதும் இருக்கு சொல்ல மறந்துட்டேன் - விமானத்தில் பயணம்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. சினிமா நடிகர், நடிகைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கிறோம் என்பது விளங்காத புதிர்.

சூப்பர் மார்க்கெட்டில் எனக்கு முன்பாக நின்ற பெண்மணி ஏதோ உச்சுக் கொட்டிக் கொண்டு நின்றார்.
என்ன ஆச்சு? - இது நான்.
ஓ! அதுவா. ஜெனிபர் லோபேஸூம், மார்க் ஆன்டனியும் பிரியப் போறார்களாம், என்றார்.

கடவுளே! உலகத்தில் கவலைப்பட வேறு விடயங்களே இல்லையா. ஜெனிபர் லோபேஸ் கணவருடன் இருந்தா என்ன? போனா என்ன? இதில்லைன்னா இன்னொன்று.

2. ஒவ்வொரு நாளும் காலையில் டீ குடிக்காவிட்டால் ஏன் பைத்தியம் பிடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

3. அரசியல் வியாதிகளுக்கு எவ்வளவு சுரண்டினாலும் ஏன் திருப்தி வருவதில்லை.5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
மேசையில் இருக்கும் 3 பொருள்கள். இல்லாத மூன்று பொருள்கள் என்று கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்.
என் ஆ.காரரின் மெயில்கள், பேனைகள், லொட்டு, லொசுக்கு.... இப்படியே இந்த லிஸ்ட் நீளும்.
மேசையில் ஆசைக்கு வைச்சு சாப்பிட முடியாது. ஒரு நாளைக்கு விபத்து போல ரசம் எதையாவது ஊத்தணும் என்று ப்ளான் பண்ணி இருக்கிறேன்.

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
1. சிரிக்க வைக்கும் மூன்று நபர்களா? திரும்பிய பக்கம் எல்லாம் நகைச்சுவையாவே இருக்கு எனக்கு. வீட்டில் என் மகன். தமிழ் வகுப்பு போக வேண்டும் என்று வகுப்பில் சேர்த்தோம். காரில் எப்போதும் தமிழ் பாட்டுக்கள் மட்டுமே ஒலிக்கும். ஒரு நாள் என்னிடம் கேட்டார், அம்மா! பொய்ங்கி என்றால் என்ன?
தெரியலை செல்லம். என்ன ஸ்பெல்லிங்?
ம்ம்ம்ம்ம்ம்.... பி ஒ .... என்றார்.
எந்த புத்தகத்தில் இருந்துச்சு இந்த வார்த்தை - இது நான்.
காரில் ரேடியோவில் பாடிய பாட்டு, என்றார்.
அடுத்த முறை கூர்ந்து கவனித்த போது விளங்கியது பொய்ங்கி அல்ல பொங்கி என்று பாடல் வரியின் ஒரு வார்த்தை.
பொய்ங்கி என்றால் என்னம்மா? என்று கேள்வி மீண்டும்.
அதுவா! பால் நன்கு கொதித்து மேலே வருவதை பொங்கி என்று சொல்வார்கள் தமிழில்.
அப்படியா! என்று நிறுத்திக் கொண்டார்.
இப்பெல்லாம் பால் பொங்கினால், அம்மா பால் பொய்ங்கி, பொய்ங்கி என்று வந்து சொல்வார்.

2. ஒரு முறை என் கணவர் தொலைக்காட்சியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு சீரியல் ( serial- தொடர் கொலைகள் செய்பவன் )கொலைகாரன் பற்றிய செய்தி வந்தது. என் மகனின் முகத்தில் குழப்பம். சிறிது நேரத்தில் கேட்டார், அம்மா! ஏன் இந்த ஆள் சீரியலை ( cereal ) கொலை பண்ணினார். ஹையோ! எனக்கு இன்னும் சிரிச்சு முடியலை.

3. ரீடர்ஸ் டயஸ்டில் நிறைய நகைச்சுவைகள் வரும் அதில் ஒன்று,

ஒருவர் வேலைக்கு அப்ளை பண்ண விண்ணப்பம் நிரப்பிக் கொண்டிருந்தார். அதில் ஒரு கேள்வி,
நீங்கள் 1. திருமணம் ஆகாதவர் ( single ) 2. திருமணம் ஆனவர் ( married ) 3. விவாகரத்தானவர் ( Divorced )
அந்த நபரின் பதில், ஆமாங்கைய்யா! இந்த வரிசைப் பிரகாரம் தான் ( Yes Sir, in that order).

7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்றுகாரியங்கள்?
மூன்று காரியங்களா? ஒன்றே ஒன்று தான் செய்கிறேன். சரி வந்த பின்னர் சொல்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்றுகாரியங்கள்?

1. தையல், க்ராஃப்ட் வேலைகள் சம்பந்தமாக ஒரு கடை சொந்தமாக திறக்க வேண்டும்.
2. என் கதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும்.
3. என் பெற்றோர்கள், சகோதரி ஆகியோருக்கு பக்கத்தில் இருக்க வேண்டும். வருடத்தில் ஒரு தரம் சந்திப்பது என்பது மாசத்தில் ஒரு நாளாகவோ அல்லது வாரத்தில் ஒரு நாளாகவோ இருந்தால் நல்லது என்று அடிக்கடி நினைப்பேன். அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு கண்டத்தில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு அவர்களின் கஸின்ஸ், மாமா, மாமி என்று பெரிதாக யாரையும் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு. அப்படியே வருடத்தில் ஒரு தடவை பார்த்தாலும் அன்பு, பாசம் இருக்குமா என்று தெரியவில்லை.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
எந்த ஒரு வேலையாக இருந்தாலும் கடைசி வரை இருந்து பொறுமையாக செய்து முடிப்பேன். சமையல், க்ராஃப்ட், தையல் என்று எல்லாமே அடக்கம் இதில்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. மரணம்
2. விபத்துக்கள் பற்றிய செய்திகள்
3. நம்பிக்கைத் துரோகம்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.சைனீஷ் உணவு ( பாம்பு எப்படி சமைப்பது என்று அல்ல !!) வகைகள்.
2. சங்கீதம், ஓவியம் கற்றுக் கொள்ள விருப்பம்.
3. ஐஸ் ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள விருப்பம்.

12) பிடித்த மூன்று உணவு வகை?
பிடித்த மூன்று உணவுகளா? முப்பது கேட்டிருந்தா கூட சொல்லியிருப்பேனே.

என் அம்மா சமைச்சா எதுவும் பிடிக்கும்.
1. மீன் கறி
2. வெந்தயக் குழம்பு
3. தோசை

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
2. காக்கை சிறகினிலே நந்தலாலா

14) பிடித்த மூன்று படங்கள்?
1.சதிலீலாவதி
2. கன்னத்தில் முத்தமிட்டால்
3. தெனாலி


15) இது இல்லாமல் வாழ முடியாது என்றுசொல்லும்படியான மூன்று விஷயம்?

1. புத்தகங்கள்
2. கணிணி
3. உறக்கம் ( மதியம் படுக்கும்பழக்கம் இல்லை. இரவு உறக்கம் குறைந்தது 7 மணி நேரங்கள் அவசியம். )

29 comments:

 1. ///ஒரு நாளைக்கு விபத்து போல ரசம் எதையாவது ஊத்தணும் என்று ப்ளான் பண்ணி இருக்கிறேன்.//// பலே..செம கில்லாடியா இருப்பீங்க போல...?

  ReplyDelete
 2. மிக மிக அருமையாக தங்கள்
  விருப்பம் மற்றும் விருப்பமின்மை
  குறித்து பதிவிட்டிருக்கிறீர்கள்
  என்னை பதிவிட அழைத்தபோது கூட
  முதலில் அலுப்பாகத்தான் தெரிந்தது
  ஆயினும் பதிவிட யோசிக்கும்போதுதான்
  சில விஷயங்களில் எனக்கே நான் எதை
  விரும்புகிறேன் என தெரியாமல்
  குழம்பிப் போனேன்
  பதிவிட்டபின் கொஞ்சம் தெளிவு ஏற்ப்பட்டதைப்போல்
  உணர்ந்தேன்
  தங்கள் விரும்பாதவை எல்லாம் விலகிப் போகவும்
  விரும்பியவையெல்லாம் தொடர்ந்து கிடைக்கவும்
  எல்லாம் வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்

  ReplyDelete
 3. முத்துக்கள் முத்தாக இருக்கு வான்ஸ்ஸ். நானும் அழைத்திருக்கிறேனே உங்களை, கவனிக்கவில்லையா? நீங்கள் எல்லோரும் ஹைலைட்டைக் கண்டு பிடிப்பீங்கள் என நினைத்து, மறைத்துப் போட்டேன்... ஆருமே காணவில்லை, இமாவையும் ஜெய்யையும் தவிர்த்து.

  //2. ஒவ்வொரு நாளும் காலையில் டீ குடிக்காவிட்டால் ஏன் பைத்தியம் பிடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.//

  இதேதான் எனக்கும். கண் விழித்ததும் ரீ வேணும், இல்லையென்றால்... என்னவோ போலாகிவிடுவேன்.

  பொய்ங்ங்கி... சூப்பர்... இப்படிப் பல சொற்கள் எங்கட வீட்டிலும் உண்டு.

  வாங்கோ நான் தீத்தி விடுறேன் என்பேன்... சின்னவர் சொல்வார்.. “நோ .. நான் தீத்துறேன்” என்று... அதாவது ”நான் சாப்பிடுறேன்” என்பதை:).

  ReplyDelete
 4. உங்களை சிரிக்க வைத்த மூன்று விஷயங்கள், எங்களையும் சிரிக்க வைத்தன. ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 5. //காரில் போகும் போது நியூஸ் தான் கேட்பேன் என்று அடம் பிடிக்கும் கணவர் //
  SAME PINCH .உங்க ஆத்துகாரர் எவளவோ பரவாயில்லை ,என்னவர் டிவி யிலும் நியூஸ் மட்டுமே பார்ப்பார் .REUTERS என்று நான் நிக் நேம் வச்ருக்கேன் .

  ReplyDelete
 6. //கடவுளே! உலகத்தில் கவலைப்பட வேறு விடயங்களே இல்லையா. ஜெனிபர் லோபேஸ் கணவருடன் இருந்தா என்ன? போனா என்ன? இதில்லைன்னா இன்னொன்று//

  எனக்கும் அதே டவுட்டு இதாவது பரவாயில்லை .விக்கி பெக்ஹம் ஏன் வில்லியம் ,கேட் WEDDING இல் சிரிக்கவேயில்லை என்று இங்கே ஒரு டிபேட்.
  கடைசியில் பார்த்தா சிரிச்சா FACE WRINKLES தெரியும் என்று அவ சிரிக்கலயாம் இதெல்லாம் டூ மச் லொள்ளு தானே !!!

  ReplyDelete
 7. அப்ப...அதிராவின் அழைப்பை நீங்களும் பார்க்கலையா வானதி?! ;)

  ReplyDelete
 8. ''...ஒரு நாளைக்கு விபத்து போல ரசம் எதையாவது ஊத்தணும் என்று ப்ளான் பண்ணி இருக்கிறேன்...''
  மிக எளிமையாக, வஞ்சகமின்றி பதில்கள் உள்ளது போல உணர்வு. மிக வித்தியாசமான பதில்கள் சகோதரி. வாசிக்க சுவையாக உள்ளது.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www, kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 9. ரொம்பவும் பொருமையா அழகா பதில் சொல்லி இருக்கீங்க :-)

  //அப்படியே வருடத்தில் ஒரு தடவை பார்த்தாலும் அன்பு, பாசம் இருக்குமா என்று தெரியவில்லை.//

  யோசிக்க வைத்த கேள்வி . :(

  ReplyDelete
 10. பொய்ங்கி சூப்பர்..

  ReplyDelete
 11. தித்திருக்கும் தீந் தமிழில் வித்தியாசமான உங்கள் ரசனையினை வெளிப்படுத்தும் வண்ணம் முத்தான மூன்று விடயங்களாக வெவ்வேறு தலைப்பின் கீழ் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
  நானும் ரசித்தேன்.

  ReplyDelete
 12. 2. வெந்தயக் குழம்பு//

  இது செய்வது எப்படி என்று பதிவு போடவும்
  அனைத்து பதிலும் அருமை
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 13. ஹிஹி கலக்கல் பதிவு!!!!

  ReplyDelete
 14. விமானத்துல பயணம் கூடவா? ஆக மொத்தத்துல அமெரிக்கா விட்டு வர மாட்டேன்னு சொல்றீங்க அப்படி தானே? :))

  ReplyDelete
 15. நகைச்சுவை கலந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள்..

  உங்களின் ஆசைகள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.. :)

  ReplyDelete
 16. //மூன்று விஷயங்கள்// நல்லா சொல்லியிருக்கீங்க சகோ,
  வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 17. //பிடித்த மூன்று உணவுகளா? முப்பது கேட்டிருந்தா கூட சொல்லியிருப்பேனே// அய் என் கட்சி போல இருக்கு நீங்க ??

  Readers Digest ஜோக் நல்லா இருந்திச்சுங்க வான்ஸ்

  அது போல பொயிங்கி யும் சூப்பர் . என் பையனும் இந்த மாதிரி தத்தக்க புத்தக்கான்னு தான் தமிழ் பேசுவான். அட்லீஸ்ட் ட்ரை பண்ணுறான்னு நாங்களும் விட்டிடுவோம்

  ReplyDelete
 18. //
  அப்ப...அதிராவின் அழைப்பை நீங்களும் பார்க்கலையா வானதி?! ;) // ச்சே அதிரா பாவம். இதுக்கு அப்புறமும் தேம்ஸ்ல விழாம பூஸ் ஸ்டெடி யா இருக்காங்களா?

  ReplyDelete
 19. மேஜை மீது ரசத்தை ஊற்றி வைக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. நகைச்சுவையுடன் உங்கள் பதில்கள் நன்று வானதி

  ReplyDelete
 21. கதாசரியராச்சே அதான் நச் நச்சுன்னு எழுதி இருக்கீங்க

  ரசம், பொய்ங்கி ஒரே சிரிப்பு தான்
  வருடம் ஒரு முறை, போனால் அன்பு பாசம் கம்மிதான்

  சீக்கிறமாவே கதைகளை புத்தகமாக போட வாழ்த்துக்கள்.
  கடை தான் வாஙக் இரண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிப்போம்....

  ReplyDelete
 22. அருமையான பகிர்வு... விரிவாய் சொல்லியிருக்கிறீர்கள்.

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  சே.குமார்
  மனசு (http://vayalaan.blogspot.com)

  ReplyDelete
 23. /கடலில் பயணம், விமானத்தில் பயணம் - இரண்டுமே பயம்//

  மீ டூ.. ஹி... ஹி..

  //மேசையில் இல்லாத மூன்று பொருள்கள் //

  ஹூம்... உங்களுக்கும் எனக்கும் இந்த விஷயத்தில் விடிவே இல்லை போலத் தோணுது!! :-))))))

  ReplyDelete
 24. //என் அம்மா சமைச்சா எதுவும் பிடிக்கும்.//

  எனக்கும் அப்படி தான் வானதி. எல்லோருக்கும் அவங்க அவங்க அம்மா கையாள பண்ண சாப்பாடு ஸ்பெஷல் தான்.

  வானதி உங்களோட வளையல் போஸ்ட் ஒரு முறை பார்த்தேன். என்னோட வளையல் கலெக்ஷன் போடணும்னு தோணிச்சு. போட்டு இருக்கேன். டைம் இருந்தால் பாருங்கள்...

  ReplyDelete
 25. அம்மா! ஏன் இந்த ஆள் சீரியலை ( cereal ) கொலை பண்ணினார். //

  உண்மை தாங்க...ஹா ஹா சீரியல்ங்குற பேர்ல கொலை பன்றாய்ங்க சீரியல் காரங்க... அந்த சீரியலையே உங்க பையன் கொலை பண்ண வச்சுட்டான்... ஹா ஹா ஹா

  ReplyDelete
 26. மீண்டும் வணக்கம் அக்காச்சி,
  பதிவுலகில் விவாத மேடைப் பதிவுகளோடு கொஞ்சம் பிசியாகிட்டேன்,
  அப்புறமா, என் நெட் கனெக்சன் ப்ராப்ளம் ஆகிடுச்சு,
  அது தான் இப்போ சமீப நாட்களாக பதிவும் போடவில்லை, வலைப் பக்கமும் வரவில்லை,

  மன்னிக்கவும்,

  பதிவுலகில் நான் படித்த வித்தியாசமான மூன்று விடயங்கள் பற்றிய தொடர் இது என்று நினைக்கிறேன்,
  உண்மையில் வித்தியாசமான முறையில் உங்கள் ரசனைகளை, உங்களுக்குப் பிடிக்காத, பிடித்த விடயங்களை,
  உங்கள் மகனின் குறும்பான பேச்சுக்களை விரிவாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  ReplyDelete
 27. சிரிக்கவைத்த முதலிரண்டும் என்னையும் சிரிக்கவைத்தது வானதி. சும்மா இல்ல, பொய்ங்கி பொய்ங்கி சிரிப்பு வந்தது. ;)) சின்னவருக்கு சின்னனில கையில ஒரு அடையாளம் வந்தது. நான் 'தேமல் மாதிரி இருக்குது,' எண்டவும், அவர் 'தமிழ்த் தேமலா? இங்லிஷ் தேமலா?' என்று கேட்டார். உங்களுக்கு இப்ப ரசிக்க ரிறைய இருக்கும்.

  //தையல், க்ராஃப்ட் வேலைகள் சம்பந்தமாக ஒரு கடை சொந்தமாக திறக்க வேண்டும்.// ஹை! சூப்பர்.

  //என் கதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும்.// கட்டாயம் நடக்கும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. //மேஜை மீது ரசத்தை ஊற்றி வைக்க வாழ்த்துக்கள்// ஆஹா! எதுக்கெல்லாம் வாழ்த்துறாங்க. ;)

  //கடை தான வாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிப்போம்....// ம்ஹூம்! இந்தக் கடைக்கு நான்தான் பாட்னர் ஜலீ. விட்டுக் குடுத்துருங்க. ;)

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!