Tuesday, July 12, 2011

கயல்விழி என்னை மன்னித்து விடு


அவர் பதறிப் போய் விட்டார். இவளின் கைகளை பிடித்து தூக்கி விட்டார். அடி ஒன்றும் படவில்லை தானே என்று அன்பாக விசாரித்தார். இல்லை... என்று சமாளித்து, எழுந்தாள்.
"நீ இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய் ?", என்றார் அந்த மனிதர்.
"இல்லை. என் கணவர் வேலைக்கு போகிறார். வழி அனுப்பி வைக்க வந்தேன்", என்று சிரிக்க முயன்றாள்.
" நீங்கள் யார்? இந்த நேரத்தில் என்ன...." , என்றபடி அவரின் கையிலிருந்த பேப்பர் கட்டுகளை பார்த்தாள்.
" ஓ! நான் தான் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் பேப்பர் போடும் வேலை செய்பவன். இன்று கொஞ்சம் லேட்டாகி விட்டது. வரட்டா ", என்றார்.
"பேப்பர் போடும் வேலையா? நானும் செய்யலாமா?", என்றாள் மது.
" நீ செய்யப் போகிறாயா? கொஞ்சம் கஷ்டமான வேலை. அதிகாலை 2 மணிக்காவது எழும்ப வேண்டும். வீடு வீடாக போய் பேப்பர் போடணும்....", என்று தொடர்ந்தவரை இடைமறித்தாள்.
இவளின் உறுதியை பார்த்த பின்னர் அவர் சொன்னார், " விடிந்ததும் இந்த இடத்திற்கு வா. பிறகு பேசலாம்", என்றபடி விடை பெற்றார்.
மதுமிதாக்கு பேப்பர் போடும் வேலை கிடைத்து விட்டது. வசந்திடம் சொன்ன போது, எவ்வளவு சம்பளம் என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டான்.
அதிகாலையில் எழுந்து, கடையில் போய் பேப்பர் கட்டுகளை பிரித்து, பைகளில் அடுக்கி, வீடு வீடாக போய் விநியோகம் செய்தாள். வெய்யில் காலம் என்றபடியால் பெரிதாக அலுப்பு தெரியவில்லை.

உடைந்து போன வாழ்க்கையினை ஒட்ட மனம் நினைக்கவில்லை. அப்படியே ஒட்டுப் போட்டாலும் எவ்வளவு நாட்களுக்கு கணவன் நல்லபடி இருப்பானோ தெரியவில்லை. எப்படியாவது ஊருக்கு போய் விட வேண்டும் என்பதே மதுவின் ஒரே குறிக்கோளாக இருந்தது. போய் என்ன செய்வது? வேறு வாழ்க்கை தொடங்குவதா? அல்லது இப்படியே இருந்து விடுவதா என்று இன்னும் தீர்மானம் செய்யவில்லை. இப்போதைய முதல் தேவை பணம். பணம் மட்டுமே.
தோளில் பத்திரிகைகள் அடங்கிய பையினை மாட்டியபடி விரைந்தாள் மது. அடி வயிற்றில் மெதுவாக ஏதோ ஒரு சங்கடம். இரண்டு வாரமாக இந்த சங்கடம் தொடர்கிறது. வாந்தி வருவது போல ஒரு உணர்வு. இன்று வேலை முடிந்த பின்னர் மருத்துவரிடம் போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
மது ஆறு வாரம் கர்ப்பம் என்று மருத்துவர் உறுதி செய்தார். கணவனிடம் சொன்னபோது அவனிடம் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இப்ப என்னிடம் இருக்கும் பணத்திற்கு இது தான் ஒரு குறைச்சல் என்று முணு முணுப்பு காதில் விழுந்தது.
ஊருக்கு எப்படியாவது இன்னும் 4 மாசத்திற்குள் போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், நினைத்தது போல் எதுவும் நடந்துவிடவில்லை. ஆரோக்கியமான உணவு, மருந்துகள் என்று சேமிப்பில் பெரும்பகுதி கரைந்து போனது.

வின்டர் தொடங்கிய பின்னர் தான் சிரமமாக இருந்தது. குளிருக்கு இதமாக அணிய போதிய ஆடைகள் இருக்கவில்லை மதுவிடம். சேமித்த பணத்தில் ஆடைகள் வாங்கிக் கொண்டாள். இருந்தாலும் குளிர் எலும்பு வரை ஊடுருவிச் சென்றது. கூட வேலை செய்யும் நபரின் அறிவுரையின்படி காலுக்கு கால் உறை மாட்டி, அதன் மேலே ஷாப்பிங் பையினை சுற்றி, அதன் பிறகு பூட்ஸ் அணிந்து கொண்டாள். குளிர் கால் வழியாக உடலுக்குள் ஏறுவது குறைந்து விட்டதைப் போல இருந்தாலும் கை விரல்கள் விறைத்துப் போவதை தடுக்க முடியவில்லை.
வயிறு லேசாக மேடிட்டு இருந்தது. பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அதற்கு கயல்விழி என்று பெயர் சூட்டி, கற்பனையில் அதனுடன் விளையாடுவாள். ஆறு மாதங்கள் குளிரை சமாளித்தால் பிறகு ஊர் போய் சேர பணம் சேர்ந்து விடும் என்று கணக்குப் பார்த்துக் கொண்டாள்.

ஒரு நாள் வசந்த் வேலையால் வந்ததும், " எங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும்", என்றாள் மது.
எப்படி அவ்வளாவு உறுதியா சொல்கிறாய்? எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்றான் முகத்தை கடு கடு என்று வைத்துக் கொண்டே.

இங்கே பாருங்கள் இன்று வேலையால் வரும் போது கடையில் ஒரு அழகான சட்டை இருந்தது வாங்கி வந்தேன் என்றவள் ஏதோ நினைத்தவளாக, மகளுக்கு கயல்விழி என்று பெயர் நல்லா இருக்கு இல்லையா? என்று வசந்தை நோக்கினாள்.

ஏதோ பெரிய ஜோக் கேட்டவன் போல சிரித்தான் வசந்த். கயல்விழியா? நீ முயல்விழி என்று வைச்சாலும் காரியமில்லை. பெயரைப் பாரு கயல்விழியாம். இந்த நாட்டில் இந்தப் பெயரை கூப்பிடுவதற்குள் அவனவனுக்கு தாவு தீர்ந்து விடும் என்றபடி எழுந்து போய் விட்டான்.

இவன் சொல்வதும் சரி தான். ஆனால்,இந்த நாட்டில் நாங்கள் இருக்கப் போவதில்லை என்ற உண்மை இவனுக்கு தெரிந்தால் தானே என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள் மது.
அன்று வழக்கத்திற்கு மாறாக குளிர் அதிகமாக இருந்தது. கட்டிலில் இருந்து எழும்பவே மனம் வரவில்லை. அதற்கு உடலும் ஒத்துழைக்க மறுத்தது. பனிப்புயல் அடிக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை அறிக்கை மையம் திரும்ப திரும்ப கதறியது. இன்றும் வேலைக்குப் போகாவிட்டால் ஒரு வாரம் சம்பளம் இல்லை. செலவுகள் தலைக்கு மேல் இருக்கே என்று நினைத்தபடி இருட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
வழக்கமாக பத்திரிகைகள் போடும் ஏரியாவில் இடுப்பளவு உயரத்திற்கு பனி. நடக்க சிரமமாக இருந்தது. நடை பாதை மட்டும் பனி குறைவாக இருந்தது போல தோன்றியது. நடை பாதையில் கீழே பனி உறைந்து கிடப்பதை அறியாமல் கால்களை வைத்தாள். வேகமாக நடக்க எத்தனித்தவள் உறைந்து போயிருந்த பனியின் மீது சறுக்கி, எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் வழுக்கிக் கொண்டே போனாள். எழ முயன்று தோற்றாள். பத்திரிகைகள் நாலா புறமும் சிதறி விழுந்தன. இருள் மட்டும் துணைக்கு நின்றது. விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டிருந்தது. பனி மீண்டும் ஆவேசமாக விழ ஆரம்பித்தது. வயிற்றினுள் துடிப்பு அடங்குவது போலத் தோன்றியது. கயல்விழி என்னை மன்னித்து விடு என்று கெஞ்சினாள். விழியோரம் நீர் கசிந்தது. ஊதல் காற்று பனியினை ஆவேசமாக இவளின் மீது வாரி இறைத்தது.

முற்றும்16 comments:

 1. தொடருங்கள் தொடருங்கள்

  ReplyDelete
 2. என்ன ஆச்சு நிஜமாகவே கதையை முடித்து விட்டீர்களா?
  இல்லை தொடரும் போட மறந்துவிட்டீர்களா?
  கயல்விழி என்னை மன்னித்துவிடு எனச் சொன்னது
  கதை முடிந்ததை மிகத் தெளிவாகச் சொல்லிபோகிறது
  ஆனாலும் முடிவை ஏற்றுக்கொள்ள மனம்
  சங்கடப்படுகிறது.அதற்குப் பதில்
  தொடரும் எனப் போட்டுவிட்டுக்கூட
  தொடராமல் விட்டுவிட்டால் கூட தேவலாம் போல உள்ளது

  ReplyDelete
 3. அருமையாய் வந்திருக்கு

  ReplyDelete
 4. சரவணன், கதையை படிக்காம சும்மா கமன்ட் போட்டீங்களா??

  எல்கே, தொடருங்களா???

  முற்றும் போட மறந்து போச்சு ஹிஹி...
  மிக்க நன்றி.

  ரமணி அண்ணா, தொடர்ந்து வந்து கருத்து கூறுவதற்கு மிக்க நன்றி.
  கதை முடிந்து விட்டது. முற்றும் போட நினைத்து மறந்து விட்டேன்.
  மிக்க நன்றி.

  கவி அழகன், மிக்க நன்றி.

  ReplyDelete
 5. நடை நன்றாக இருக்கிறது.நிறைய எழுதுங்க

  ReplyDelete
 6. அன்புள்ள வானதி அவர்களுக்கு
  தாங்கள் என் பின்னூட்டத்தை அவசரத்தில்
  சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன்
  கதை முடிந்ததை தெளிவாக
  புரிந்து கொள்ளும்படியாகத்தான் எழுதி இருக்கிறீர்கள்
  ஆனாலும் தடைகளை மீறி நம்பிக்கையோடு
  உழைக்கத் துவங்கும் கதா நாயகியை சாதிக்கச் செய்யாமல்
  இப்படி சாகடித்துவிட்டீர்களே என்கிற ஆதஙத்தில்தான்
  அப்படி எழுதினேன்.தொடரும் எனக் கூடப் போட்டு
  தொடராமல் போனால் கூட எங்கோ நல்லவிதமாக
  வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அல்லது
  வாழ் முயன்று கொண்டிருக்கிறாள் என்ற திருப்தியாவது
  அடைந்து கொள்வோம்,அதற்காக அப்படி எழுதினேன்
  அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து

  ReplyDelete
 7. கற்பனையா...??? உண்மையா.....??? ஆனால் சூப்பரா இருக்கு கதை....!!!

  ReplyDelete
 8. இன்ட்லில இணைப்பு குடுங்க....

  ReplyDelete
 9. கதையின் திருப்பு முனையில் அந்த மனிதரின் ஊடாகக் கிடைத்த தொழிலினை அடிப்படையாகக் கொண்டு தன்னம்பிக்கையோடு மதுவினது வாழ்க்கை நகர்ந்து செல்கையில்,
  அவள் மனதின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறப் போகின்றது எனும் நினைப்போடு, அவள் ஊருக்க்குச் செல்வதற்கான பணமும் சேர்ந்து விடும் என்று நினைத்தேன்.

  ஆனால் இக் கதையின் வெற்றி அதனை மாற்றிப் போட்டிருக்கிறது. மனைவி மீது சினந்து விழும் ஒரு ஆண்மகனாக இருக்கும் மதுவின் கணவனால், தான் மது கர்ப்பமான சில மாதங்களின் பின்னரும் கடுங் குளிர் + பனிப் பொழிவின் மத்தியில் அவள் வேலைக்குப் போக வேண்டியேற்பட்டிருக்கிறது.

  இறுதியில் மனதினைக் கனக்கச் செய்யும் முடிவினை, நிஜத்தினை கதை வெளிப்படுத்தியிருக்கிறது.
  இப்படி எத்தனை பெண்களது வாழ்க்கை புலத்தில் பரிதாபகரமாக உள்ளதோ தெரியாது.

  ஆனாலும் உங்களது எழுத்து ஆற்றல் மூலம் தத்ரூபமாக, கதையின் போக்கினை விலக விடாது, எதிர்பார்ப்பினைக் கூட்டி + சஸ்பென்ஸ் வைத்து கதையினைப் படைத்திருக்கிறீங்க.

  நன்றி!

  ReplyDelete
 10. 2-3 வாரமாவது தொடரும்னு எதிர்பாத்தா இப்புடி பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க வானதி?? சோகமான முடிவு! :(

  ReplyDelete
 11. வான்ஸ்ஸ்ஸ்.... எம்மையெல்லாம் ஏமாற்றிய கதையின் திருப்பத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  பகுதி 1 ஐப் பார்த்து, நிரூபன்... ஊரிலுள்ள பெற்றோரை எல்லாம் திட்ட:), நான் ஓடிப்போய்ப் புதுத்தலைப்புப் போட:), கடேஏஏஏஏஏஏசியில அதுக்கும், முடிவுக்கும் சம்பந்தமில்லாதமாதிரிப் பண்ணிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

  ReplyDelete
 12. அருமையான எழுத்து நடை.

  ReplyDelete
 13. குணசேகரன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ரமணி அண்ணா, மன்னிக்கவும். நான் அன்று அவசரத்தில் எழுதிட்டு போன பின்னூட்டம்.
  வாழ முயற்சி செய்தவளை சாகடித்து இருக்க கூடாது தான். இது இரண்டு உண்மை சம்பவங்களை இணைத்து எழுதினேன்.
  இப்படி பின்னூட்டங்கள் வரும் என்று முதலே தெரிந்திருந்தால் வேறு விதமாக முடித்திருப்பேன். உண்மையில் இது தொடர்கதையாக எழுதும் எண்ணம் இருக்கவில்லை. கதையின் நீளம் கருதி 2 பிரிவாக போட்டேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 14. மனோ, மிக்க நன்றி.
  இன்ட்லி - சுத்த வேஸ்ட். நான் மற்றவர்களுக்கு வோட்டுப் போட்டு களைத்துப் போனது தான் மிச்சம்.
  இப்படியே இருக்கட்டும். இன்ட்லியில் இணைக்கும் எண்ணம் இல்லை.

  நிரூ, தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி.

  மகி, 2, 3 வாரமா?? ஹிஹி... சரக்கு இல்லையே எழுத.
  மிக்க நன்றி.

  அதீஸூ, உங்கள் ரண்டு பேரையும் யார் முந்திரிக் கொட்டை போல பதிவுகள் போடச் சொன்னது.
  சரி முடிஞ்சதை கதைச்சு என்ன வரப் போவுது??? கூல் டவுன்.
  மிக்க நன்றி.

  ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

  ReplyDelete
 15. அருமையான எழுத்து நடை வானதி. வடிவாகக் கொண்டு போய் இருக்கிறீங்கள். முடிவு கூட... நடக்க முடியாததை எழுதேல்ல நீங்கள். சோகமான முடிவாக இருந்தாலும் நல்லா இருக்கு கதை.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!