Wednesday, December 29, 2010

டைனிங் மேசை!

டைனிங் மேசை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் ( படத்தினை பாருங்கள் ). தூசி, குப்பை இல்லாமல், எப்போதும் பளிச்சென்று பார்க்கவே ( பசி இல்லாவிட்டாலும் ) சாப்பிட வேண்டும் என்று உணர்வு எழ வேண்டும். நடுவில் அழகான பூச்சாடி, சாப்பிடத் தேவையான டேபிள் மேட்ஸ் .......இப்படி இருந்தா தான் அதன் பெயர் டைனிங் டேபிள்.
படத்தில் இருப்பது யார் வீட்டு மேசைன்னு நினைக்கிறீங்க???


இப்படி என் வீட்டு மேசையும் இருந்தா எப்படி இருக்கும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. அதற்கெல்லாம் குடுப்பினை வேணும்.
என் கணவருக்கு டைனிங் மேசை மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை....

டைனிங் டேபிளின் இடது புறம் கடந்த 2 வருடங்களாக வந்த மெயில்கள் ஒரு மலை போல ( முன்பு சிறு குன்றாக இருந்தது இப்ப மலையாக மாறி விட்டது ), மறு புறம் வேலை சம்பந்தமான பைஃல்கள், பேப்பர், செல்போன், கார் சாவி, பேனாக்கள். பேனாக்கள்.....
பேனாக்கள் என்று நான் சொல்வது 2, 3 பேனாக்கள் அல்ல. ஒரு கடை வைக்கும் அளவிற்கு அவ்வளவு பேனாக்கள். அதில் ஒரு பேனா தொலைந்தாலும் என் ஆ.காரருக்கு மூக்கின் மீது வியர்த்துவிடும்.

முன்புறம் மடிகணிணி ( இது மட்டுமே நான் பாவிப்பது ).

மேசையில் இருக்கும் மெயில்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்;
வங்கியிலிருந்து வந்தவை
கிரெடிட் கார்ட் ( pre approved or pre denied )
எங்காவது தர்மம் பண்ண நினைச்சு பணம் அனுப்பினா வரிசையா வரும் மெயில்கள் ( புற்றுநோய், அமெரிக்கன் இந்தியன் பவுன்டேஷன் ( இது நம்ம ஆளுங்க இல்லை. இங்கிருக்கும் பூர்வகுடிகள் ) ). ஒரு முறை சிறுவர்களுக்கான மருத்துவமனைக்கு பணம் அனுப்பினார் என் கணவர் ( இது நடந்து 4 வருடங்கள் இருக்கும் ). அதிலிருந்து வரிசையாக வரும் மெயில்களை நிப்பாட்ட முடியவில்லை.

கேபிள், போன், கரண்ட் பில்லுகள்
பிறந்தநாள், அரங்கேற்றம் இவற்றுக்கான வாழ்த்து, இன்விடேஷன் அட்டைகள்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் இதையெல்லாம் கிளீன் பண்ணி, கீழே அண்டர் கிரவுன்ட் அறையில் கொண்டு போய் வைச்சு, ஆட்கள் போனதும் மீண்டும் கொண்டு வந்து அடுக்கி.....

அண்டர் கிரவுன்ட் அறையில் மேசைகள், நாற்காலி எல்லாமே இருக்கு. அதோடு முக்கியமா இன்னொன்றும் இருக்கு "குளிர்". ஏற்கனவே வின்டர், காற்று, மைனஸ் டெம்பரேச்சர்.

குளிரை விரட்ட ஹீட்டர் இருந்தாலும் கீழே போகவே என் ஆ.காரருக்கு தயக்கம்.

இப்ப எதற்காக சும்மா புலம்பிட்டு இருக்கிறாய் என்று கேட்கிறீங்களா?? சமீபகாலமாக என் ஆ.காரர் மேசையில் எக்ஸ்ட்ராவாக மேலும் இரண்டு பொருட்களை வைச்சிருக்கிறார். அதை எப்படி என் வாயால் சொல்றது.
அட! இருங்கப்பா. எழுதிக் காட்றேன்.
இரண்டு குறடுகள் ( (தமிழ் விளங்காதவர்களுக்கு) pliers ).
அதை ஏன் அங்கே வைச்சார் என்று எனக்கு விளங்கவேயில்லை. கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்வதில்லை.
இதைப் படிக்கும் யாராவது மேசையில் இப்படி " பயங்கரமான " ஆயுதங்களை வைச்சிருந்தா அதை எடுத்து கண்காணாத இடத்தில் வைச்சிட்டு, எனக்கு பதில் போடுங்க.

Friday, December 24, 2010

நானும் செல்போனும்!

செல்போன் - ஊரில், உலகத்தில் இது இல்லாமல் யாரையும் காண்பது அரிதிலும் அரிது. காரில், பஸ்ஸில், நடந்து செல்கிறவர்களின் கைகளில், காதுகளில் இது ஒட்டியபடியே இருக்கும். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை?
சமீபத்தில் நாங்கள் இருந்த மாநிலத்தில் கார், பஸ், ட்ரெயின் ஓட்டுபவர்கள் செல் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக டெக்ஸ்ட் ( text ) மெஸேஜ் அனுப்பக் கூடாது என்பது விதி. மக்கள் உடனே ஓடிப்போய் நீலப்பல்லு ( blue tooth ) வாங்கி, அதை தயாரிப்பவன் நெஞ்சில் பால் வார்த்தார்களாம்.

எனக்கு இந்த செல்போன் மட்டுமல்ல வேறு எந்த பொருட்களிலும் பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. அமெரிக்கா வந்து பல வருடங்களின் பின்னரே செல் போன் எனக்கென்று சொந்தமாக கணவரின் வற்புறுத்தலின் பின்னர் வாங்கிக் கொண்டேன். முதலில் ப்ரீபெய்ட் ( pre paid )போன் வாங்கினேன். ஆனால், அதை பாவிப்பதே குறைவு. இப்படித் தண்டமாக எதற்கு பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன்.

ஒரு முறை என் மகனின் பள்ளியில் என் செல் நம்பர் கேட்டார்கள். எனக்கு என் நம்பர் தெரியவில்லை என்ற உண்மை அப்போது தான் விளங்கியது.
அடடா! நம்பரை மனப்பாடம் செய்து வைக்கவில்லையே என்று முழித்தேன்.
அடி! அசட்டுப் பெண்ணே என்பது போல பார்த்தார் அங்கு வேலை செய்த பெண்மணி.
என்னைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட என் நம்பர் தலைகீழாக, தலை மேலாக சொல்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் பக்கத்தில் நின்ற டீன் ஏஜ் பெண்.

இருங்க வரேன் - என்று சொல்லி விட்டு, என் கைப் பையினைக் குடைந்து போனை வெளியே எடுத்தேன்.
போன் உயிரை விட்டிருந்தது.
அவசரமாக கணவரின் செல் நம்பரை சொல்லி, சமாளித்துவிட்டு வீடு வந்தேன்.
வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் நம்பரை எழுதி வைத்து, போகும் போது, வரும் போது நம்பரை மனப்பாடம் செய்தேன்.
முதல் மூன்று நம்பர்கள் மட்டுமே மனப்பாடம் ஆகியது. இறுதி 4 நம்பர்கள் கொஞ்ச நேரம் உயிரை வாங்கிய பின்னர் நினைவில் வந்தது.
இப்ப தூக்கத்தில், விழித்து இருக்கும் போது யார் கேட்டாலும் நம்பர் தெரியும்.
ஆனால், யாருக்கும் என் நம்பரைக் குடுப்பதில்லை.

நம்பர் குடுக்காமல் இருப்பதன் காரணம்
சோம்பேறித்தனமே முதல் காரணம் என்று நினைக்கிறேன். செல்போனில்,
1. என்னத்தை பேசுவது?
2. அதை என் கைப்பையில் குடைந்து எடுக்க வேண்டும்
3. அது உயிரை விடும் தருணங்களில் மறக்காமல் அதன் வயரை செருகி உயிர் கொடுக்க வேண்டும்

இப்படி சில காரணங்களினால் நான் பெரும்பாலும் செல்போனை சுவிட்ச் ஃஆப் பண்ணி வைத்துவிடுவேன்.

சமீபத்தில் என் உறவினர் பெண் ஆப்பிள் ஐ போனை வைத்து பெருமை பேசிக் கொண்டே இருந்தார்.
இது என்னப்பா? என்று நான் கேட்டேன்.
இது தெரியாதா? இது தான்... இங்கே பாருப்பா ஸ்கிரீனில் எல்லாமே தானாகவே நகரும். விரலை வைச்சுப் பாரு...

சரி! கிடக்கட்டும். டீ குடிக்கிறியா? என்று கேட்ட என்னைக் கடுப்புடன் பார்த்து விட்டு, போனை கைப்பையில் வைத்துக் கொண்டார்.

மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் எனக்கும் வேணும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வந்ததில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால் இப்படி இருக்கிறேனோ தெரியவில்லை. அல்லாவிட்டால் இதெல்லாம் வைத்திருக்கும் அளவிற்கு என் தகுதியை நான் இன்னும் உயர்த்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

Wednesday, December 15, 2010

தேவதையில் நான்.

என் எழுத்துக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லோருக்கும் என் இனிய நன்றிகள்.
தேவதை இதழின் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள். பொறுமை மிகவும் அவசியம். சில நிமிடங்களில் ஒரு பிரபலமான, அழகான (!!!!) வலைப்பதிவர் திரையில் தோன்றுவார்;


சில மாதங்களின் முன்பு தேவதை இதழின் ஆசிரியரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். என் வலைப்பூவினை வெளியிட அனுமதி கேட்டிருந்தார்கள். விருப்பம் இருந்தாலும் ஒரு தயக்கம். தயக்கத்தின் காரணம் என் புகைப்படம் இணைத்து, வலைப்பூவினை வெளியிட இருப்பதாக சொன்னார்கள்.
உலகம் முழுவதும் இல்லாவிட்டாலும், இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் என் முகத்தினை எல்லோரும் பார்க்கப் போகிறார்கள் அதற்கு ஏற்றாற்ப்போல என்னிடம் அழகான புகைப்படங்கள் இல்லை. என் மூஞ்சையும் அப்படி ஒன்றும் போட்டோ ஜெனிக் அல்ல. படுத்திருந்து யோசித்து, தூங்கி எழுந்தது தான் மிச்சம். என் இனிய தோழி ஸாதிகா அக்காவிடம் கேள்விகள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். அவரும் ஏன் போட்டோ அனுப்பினா என்னவாம் என்று பதிலுக்கு மெயில் அனுப்ப, நானும் என் கணவரை நச்சரித்து, குறைந்தது 20 படங்களில் தேறிய 2 மட்டும் அனுப்பி வைத்தேன்.

அன்புடன்
வானதி

Monday, December 13, 2010

உள்ளங்கை அரிப்பு.

காலையில் எழுந்தபோது இடது உள்ளங்கை லேசாக அரித்தது. அரித்தால் சொறிந்து கொள்ள வேண்டியது தானே என்று குதர்க்கமாக பேசக்கூடாது. பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள். எனக்கு எங்கிருந்து பணம் வரும்.

பிறந்த நாள் ( வாய் நிறைய வாழ்த்து மட்டுமே கிடைத்தது )போன மாதம், திருமண நாள் அடுத்த மாசம் ..கை அரிப்பு இன்னும் அதிகமாகியது. ஏதாவது வியாதியாக இருக்கப் போவுது - இது என் கணவர்.
மகனை பள்ளிக்கு கூட்டிச் சென்ற போதும் இதே யோசனை.
ரோட்டினை கடக்க நின்ற போது கை மீண்டும் லேசாக அரிப்பு எடுத்தது.
அடடா! இங்கு தான் எங்கேயோ எனக்கு உரிய பணம் இருக்கு என்று மனசாட்சி அலறியது.
10 டாலர்கள் கிடைச்சா என்ன செய்வது... 20 டாலர்கள் கிடைச்சா ஒரு ப்ளான், 100 டாலர்கள் கிடைச்சா .. 100 டாலர்களை இழந்தவன் எப்படிக் கவலைப் படுவானோ என்று அவனுக்காக இரக்கம் உண்டானது.

ஸ்கூல் கார்ட் வாகனங்களை நிறுத்தி, ரோட்டினை கடக்க உதவி செய்தார். அவருக்கு நன்றி சொல்லி மறு கரையினை அடைந்தோம்.


ஸ்கூலினை நெருங்கிய போது கீழே ஏதோ கடதாசி தென்பட்டது. நடை பாதையோரம் செடிகளின் மத்தியில் தென்பட்டது. உடனே பணம் தான் என்று என் மனசாட்சி சொல்லியது.
அது பணமே தான். தமிழ் சினிமாவில் கீழே கிடந்த பணத்தினை எடுக்க நம்ம ஹீரோக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். சும்மா சொல்லக் கூடாது அது அத்தனையும் உண்மையே தான்.
எங்கள் பின்னாடி, முன்னாடி, பக்க வாட்டில் எல்லா இடமும் மக்கள் வெள்ளம். சிலர் ஒட்டினாற் போல பின்னாடியே வருவார்கள்.
ஷூ காலினை மேலே வைத்துக் கொண்டேன். கீழே லேஸ் கட்டுவது போல அமர்ந்து, மெதுவா காசை எடுத்து விட்டேன்.

அம்மா! எவ்வளவு பணம் கிடைச்சுது? என் மகனின் கேள்வி.
தெரியலையே ராசா?- இது நான்.
மெதுவாக பிரித்துப் பார்த்தேன். 5 டாலர் நோட்டு.

இதை என்ன செய்வது? பின்னாடி வந்த ஆசாமி என்னை முறைப்பது போல இருந்தது.
இவரும் பங்கு கேட்பாரோ தெரியவில்லை.
வேகமாக நடந்தேன்.

அம்மா! எம்பூட்டு பணம் இருக்கு - இது மீண்டும் மகனே தான்.
5 டாலர்கள் இருக்கு என்று 5 விரல்களை காட்டினேன்.

அதை இப்படிக் குடுங்க என்ற மகனிடம் மறுப்பு சொல்லாமல் குடுத்தேன்.


மகன் பணத்துடன் பள்ளியை நோக்கி வேகமாக ஓட, நானும் பின்னாடியே ஓடினேன்.

பள்ளியில் அலுவலக அறையில், இது யாருடைய பணம் என்று தெரியவில்லை? ரோட்டில் இருந்திச்சு. யாராவது அவர்களின் லன்ஞ் பணத்தினை தொலைத்து இருப்பார்கள். அவங்க இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? என்று என் மகன் மழலையில் சொல்ல, அதிபர் திறந்த வாய் மூட மறந்து நின்றார்.

ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. பணத்தினை தவற விட்ட பொடியன் ஓடி வந்து, நன்றி சொல்லி பணத்தினைப் பெற்றுக் கொண்டான்.

தேசிய கீதம் பாடல் தொடங்க எங்கும் அமைதி நிலவியது.
நான் வீட்டினை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
கீழே கிடந்த பணத்தினை பொறுப்பாக கொண்டு வந்து கொடுத்த என் மகனின் பெயரினை ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள்.
அங்கிருந்த மரங்களில், செடிகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

Friday, December 10, 2010

என் தங்கைக்காக


கடல் தண்ணீர் கண்களில் பட்டதும் எரிச்சலாக இருந்தது. கனவா? உண்மையா என்று விளங்கவில்லை அகிலனுக்கு. எங்கும் மரண ஓலம் காதுகளை துளைத்து எடுத்தது. யாரைக் காப்பாற்ற, யாரை விட என்று சில நொடிகள் குழம்பி போனான். மறு நொடி பக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

"அண்ணா" என்ற குரல் அந்த இடமே அதிரும்படி எதிரொலித்தது. எப்படி என் தங்கையை மறந்தேன் என்று நினைத்துக் கொண்டான். அம்மா, தாத்தா இருவரும் எங்கே? யோசிக்க நேரம் இல்லை. தங்கையை காப்பாற்ற வேண்டும்.

இருள் பிரியாத காலை நேரம். கிட்டத் தட்ட 30 பேர் அளவில் இருக்கும். இதில் என் தங்கையை எங்கே தேடுவேன் என்று திகைத்து நின்றான். ஆனால், குரல் வந்த திசையினை வைத்து, அந்தப் பக்கம் நீந்தத் தொடங்கினான். யாரோ வேகமாக இவன் கையினைப் பற்றினார்கள். மரண பயத்தில் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. கையினை விலக்கப் போனான். தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அந்தப் பெண்ணின் கண்கள் கெஞ்சின. சிறிதும் தாமதிக்காமல் கரையினை நோக்கி இழுத்துச் சென்றான்.

**********************************

அகிலன், இன்று இரவு வள்ளத்தில் இந்தியா போகிறோம். ரெடியா இருக்க சொன்னார் ஓட்டி", என்றார் அம்மா.

அம்மா! இது 10 வது தடவை இருக்குமா? ஒவ்வொரு முறையும் போய் காத்திருந்து விட்டு, இரவானதும் திரும்பி வருவோமே. இந்த நாட்டிலேயே இருந்து செத்து போகலாம்" என்ற சொன்ன மகனை முறைத்தார் தாய்.

இல்லைப்பா! சாக பயப்படவில்லை. உன் தங்கை மேகலாவை நினைச்சா பயமா இருக்கு. சில மாதங்களின் முன்பு பக்கத்து தெருவில் கங்காவை இராணுவம் கொண்டு சென்றார்கள். இப்ப எங்கே என்றே தெரியவில்லை.", என்ற தாயை இரக்கத்துடன் நோக்கினான் அகிலன்.

" சரிம்மா. இன்று இரவு போகலாம். மேகலாவிடம் சொன்னீங்களா?", என்று வினவினான்.

" மேகலாக்கு எப்போதும் சம்மதமே. குடும்பத்திற்கு ஒரு பை தான் கொண்டு வர வேண்டும் என்று ஓட்டி கண்டிப்பா சொல்லிட்டார். உன் ஆடைகள் ஒரு செட் மட்டும் கொண்டு வாப்பா....", என்று பேசிக் கொண்டே போன அம்மாவை பார்த்துக் கொண்டே நின்றான்.

எதை விட, எதை எடுக்க என்று யோசிக்காமல் ஒரே ஒரு செட் உடையினை எடுத்து தாயிடம் நீட்டினான்.

இரவானதும் கடற்கரைக்கு போனார்கள். அமாவாசை இருட்டு. அம்மாவும், தாத்தாவும் அருகிலேயே நின்று கொண்டார்கள். தங்கை மேகலா இவனின் கையினை பற்றிய படியே நின்றாள். காற்று இதமாக வீசியது. தூரத்தில் கடற்படை கப்பலின் வெளிச்சப் பொட்டு மங்கலாக தெரிந்தது.
இன்று இந்தியா போக முடியுமா தெரியவில்லை என்று மனதினுள் எண்ணிக் கொண்டான்.

சுமார் 12 மணி அளவில் வள்ளம் வந்து சேர்ந்தது. நின்றவர்கள் சத்தம் போடாமல் ஏறிக் கொண்டார்கள். இலங்கை கடற்பரப்பினை தாண்டும் வரை மெதுவாகவே வள்ளம் ஊர்ந்து சென்றது. இந்தியா கடற்பரப்பு வந்ததும் படகு வேகமாக செல்லும் என்று ஓட்டி அறிவித்தார். கடலில் எப்படித் தான் எல்லை தெரியுமோ என்று நினைத்துக் கொண்டான் அகிலன்.

சில மணிநேரங்கள் கடந்த பின்னர் படகு வேகமாக செல்லத் தொடங்கியது. அசுர வேகத்தில் சென்ற படகு நிலைகுழைந்து போனது. படகில் இருந்தவர்கள் நாலா புறமும் தூக்கி வீசப்பட்டார்கள்.

******************************
மீண்டும் அந்த இடத்திற்கு விரைந்தான். கால்களில் ஏதோ தட்டுப்பட மூச்சடக்கி உள்ளே மூழ்கினான். கைகளை பற்றினான். அது ஒரு பெண்ணின் கை என்பது விளங்கியது. வளையல்கள் தட்டுப்பட்டது. இது என் தங்கையின் வளையல்கள் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டான்.


தங்கைக்கு அப்பா ஆசையாக வெளிநாட்டில் வாங்கி அனுப்பிய வளையல்கள். சந்தேகமே இல்லை. இது என் தங்கை மேகலா தான். வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தாள்.

வேகமாக பிடித்து இழுத்தான். ஆனால், பிடி நழுவியது. நுரையீரல் சுத்தமான காற்றுக்காக ஏங்கியது. மீண்டும் மேலே போய் மூச்சிழுத்து உள்ளே வர நேரம் இருக்கவில்லை.
" அண்ணா! என்னை கைகளை பிடித்துக் கொண்டே இருங்கள். பிளீஸ்.. என்று மேகலா படகில் கெஞ்சியது ஞாபகம் வந்தது.

முன்பை விட இன்னும் அதிக பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஏதோ ஒரு அசுர சக்தி எதிர் திசையில் இழுத்துக் கொண்டே சென்றது. இப்போது அகிலனும் சோர்ந்து போயிருந்தான். மேலே போக எத்தனித்தான். மேகலாவின் பிடி மிகவும் உறுதியாக இருந்தது. மேகலாவுடன் சேர்ந்து அகிலனும் சமுத்திரத்தின் சுழலில் சிக்கிக் கொண்டான். தங்கையின் கையினை மட்டும் விடவில்லை. சமுத்திர அன்னையின் சுழலில் சிக்கி, அலைக்கழிக்கப்பட்டார்கள். அவளின் வெறி அடங்கியதும் காற்றில்லாத பந்துக்கள் போல மேலே மிதந்த இருவரையும் மீனவர்கள் தூக்கி கரையில் போட்டார்கள். மரணத்திலும் கை கோர்த்தபடியே இருந்த இருவரையும் கண்ட ஊரார்கள் அதிர்ந்து நின்றார்கள்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாயார் மட்டும் கரையில் இருந்த உயிரற்ற உடல்களை இனம் காண அழைத்து வரப்பட்டார். வாய் பொத்தி அழ ஆரம்பித்தவரை தேற்ற அங்கு அகிலனோ, மேகலாவோ இருக்கவில்லை.

(This story is based on an actual event that took place in the early 90's.)

Thursday, December 9, 2010

தொடர்பதிவு.

ஆமி அழைத்த தொடர்பதிவு. நிறைய யோசித்து மண்டை காய்ந்து போனது தான் மிச்சம். எனக்கு பாட்டுக்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். இதில் எதை குறிப்பிட்டு சொல்வது என்றே தெரியவில்லை. பழைய பாட்டுக்கள் விரும்பி கேட்பதுண்டு. ஆனால், பாடியது யார் என்ற விபரம் தெரியாது. நான் எதையாச்சும் எழுதி தொலைக்க, யாராச்சும் சண்டைக்கு வந்தா.... எனவே எனக்கு மிகவும் தெரிந்த பாடல்களை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

1. அழகு மயில் ஆட அபிநயங்கள் கூட.... ஜானகியின் பாடல் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகா, அர்த்தம் நிறைந்ததா இருக்கும்.
ஒரு விதவையின் மனசை சொல்லும் பாடல்.
கல்லூரியில் படிக்கும் போது இந்த பாட்டுக்கு என் வகுப்பு மாணவிகள் இருவர் நடனம் ஆடினார்கள். மிகவும் சிறப்பாக பரத நாட்டியம் ஆடிய போதும். முதல் பரிசு கிடைக்கவில்லை. காரணம் ??? நான் சொல்ல மாட்டேன் ( இவளுக்கு இதே வேலையாப் போச்சு என்று திட்ட வேண்டாம். கேள்வி கேட்டாதானே அறிவு வளரும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. )

2. சின்ன சின்ன ஆசை... மின்மினியின் குரலில் ரோஜா படத்தின் பாடல். எனக்கும் இப்படி நிறைய சின்ன சின்ன ஆசைகள் இருக்கு. அதெல்லாம் நிறைவேற ஆசை.

3. காதோடு தான் நான் பாடுவேன்... எல் ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல். அவரின் குரலில் ஒரு கவர்ச்சி இருக்கும். அவரின் பாடல்களை you tube ல் நிறைய கேட்பதுண்டு.

4. கங்கை கரை தோட்டம்.. சுசீலா பாடிய பாடல். மிகவும் அருமையான குரல் வளம் மிக்கவர். அவரின் பல பாடல்கள் பிடிக்கும். ஆனால். மிகவும் பிடித்த பாடல் இது தான்.

5. கண்ணோடு காண்பதெல்லாம் ... ஜீன்ஸ் படத்தில் Nithyashri பாடிய பாடல். கணீரென்ற குரலும், பாடல் வரிகளும் அழகோ அழகு.


6. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே.... தளபதி படத்தில் வரும் பாடல். பாடியவர் பெயர் தெரியவில்லை ஆனால், மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
( பாடகி பெயர் தெரிஞ்சா எனக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்புங்கப்பா. இங்கே திட்டாதீங்க. சரியா? )

7. கண்ணாளனே எனது கண்ணை ... பாம்பே படத்தில் சித்ராவின் குரலில் வரும் பாடல். என்றும் இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

8. ஒவ்வொரு பூக்களுமே சொல்... என்ற பாடல். ஆட்டோகிராஃப் படத்தில் வரும் பாடல். சித்ராவின் குரலில் அருமையான வரிகள். சோர்ந்து போய் இருக்கும் நேரம் இந்தப் பாடலைக் கேட்டால் தன்னம்பிக்கை வரும். நிறையத் தடவைகள் கேட்டாலுல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.


9. இது ஹரினி பாடிய பாடல். ஆரம்பம் ஞாபகம் இல்லை. இடையில் வரும் வரிகள் மட்டுமே ஞாபகம் இருக்கு.

வானம் வரை வந்த தலைவா இனி வெண்ணிலவு ரொம்பத் தொலைவா.....இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். காரணம் சொல்லமாட்டேன். ஆனால், இந்தப் பாடல் கேட்ட உடனே எனக்கு சிரிப்பு வந்து விடும். தொடக்கம் தெரிஞ்சா சொல்லுங்க. ஆனால், இந்த வரிகள் தான் மிகவும் மனதில் பதிந்த வரிகள்.

10. உயிரே படத்தில் வரும் நெஞ்சினிலே நெஞ்சினிலே ... பாடல் மிகவும் பிடித்த பாடல். ஜானகியின் கணீர் குரல், ரஹ்மானின் இசையில் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். படமாக்கப்பட்ட விதமும் அருமை.

Monday, December 6, 2010

அரண்டவன் கண்ணுக்கு

இலங்கையில் போரினால் இந்தியா சென்ற நேரம்.. எல்லாமே புதுமையாக இருந்த நாட்கள். ஆட்டோ சங்கர் மிகவும் பிரபலமாக இருந்த நாட்கள். எந்த பெட்டிக் கடையிலும் இவர் தான் நியூஸாக தொங்கியபடி. என் பாட்டி எல்லா பத்திரிகைகளிலும் ஆட்டோ சங்கரைப் பற்றி படித்து, எங்களுக்கு பீதி கிளப்புவதை ஒரு முழு நேர வேலையாக/பொழுது போக்காக கொண்டிருந்தார்.

வாழ்க்கையில் முதன் முதலாக தெப்பக்குளம் பார்த்த என் கஸின் ஒருத்தி, வாழ்க்கையில் ஒரு போதும் தெப்பக்குளம் பார்க்காத 4 பேர் என புறப்பட்டோம். கிளம்பும் நேரம் என் பாட்டியும் வந்து, அடம் பிடித்து ஆட்டோவில் ஏறிக் கொண்டார். என் அத்தை பையன் தான் ஒரே ஒரு ஆண் துணை. அவன் முன்னாடி ஓட்டுநருடன் ஒட்டிக் கொள்ள. நாங்கள் பின்னாடி 5 பேர் அடைபட்டுக் கொண்டோம். ஆட்டோ வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. என் நினைப்பு முழுக்க எடுக்கப் போகும் புது சல்வாரை சுற்றி வந்தது.
( தெப்பக்குளம் பார்த்த ) என் கஸின் மெதுவாக என்னைச் சுரண்டினாள்.

" ஆட்டோ வலப்பக்கம் திரும்பணும். ஆனால், ஏன் இடது பக்கம் திரும்புது ?", என்றாள்.

என் பாட்டிக்கு மிகவும் கூர்மையான காது.

" என்னது இந்தப் பக்கம் தெப்பக்குளம் இல்லையா.... ?", என்று முடிக்கும் முன்பே.
என் இன்னொரு கஸின் ஆட்டோகாரரின் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டார். ஒரு கணம் தடுமாறிய ஆட்டோக்காரர் சுதாகரித்து, ரோட்டின் ஓரத்தில் ஆட்டோவை நிப்பாட்டினார்.

" முதலில் சட்டையை விடும்மா. எதுக்கு என் சட்டையை பிடிச்சே ", என்று சண்டைக்கு ஆயத்தமாகிவிட்டார்.

" ஆகா! எங்களுக்கு தெரியாதாக்கும். என் பேத்திகளை எங்கேயோ கொண்டு போய் விற்கப்போகிறாயா? பாவிப் பயலே ", என்று கத்திய பாட்டியை நக்கலாக ஒரு பார்வை விட்டார்.
" ஹையோ! இதுங்களா. ஒரு பைசா கூட தேறாது. இதுங்க மூஞ்சியும் ..... சரி! நீ ஏம்மா என் சட்டையை பிடிச்சே?", என்று என் கஸினை நோக்கி எகிறினார்.
" தெப்பக்குளம் அப்படிக்கா இருக்கு. ஏன் இந்தப் பக்கம் திருப்பினே?" , என்றாள் என் கஸின்.

" ஆங். எங்களுக்கு தெரியாதாக்கும். உறையூர் போய் போனா சுருக்கா போயிடலான்னு திருப்பினேன். பாலக்கரை பக்கம் ட்ராஃபிக் ஜாம்... இதுங்களுக்கு போய் உதவ நினைச்சேனே என் புத்தியை செருப்பாலை இல்லை விளக்குமாற்றிலை அடிக்கணும்." , என்று புலம்பிக் கொண்டே போனார்."

" சரி தம்பி. ஆட்டோவை எடு ", என்றார் என் பாட்டி.

" என்னது ஆட்டோவை எடுக்கவா? என்னை விட்டுடுங்க நான் ஓடிப் போயிர்றேன். இதுக்கு மேலேயும் இங்கே நின்னா போலீஸ் பிடிச்சு உள்ளே போட்டாலும்...இல்லை இந்த பாட்டியே பிடிச்சுக் குடுத்துடுவாங்க போல இருக்கே. "

இந்தாப்பா பணத்தை வாங்கிக்க.

" எனக்கு பணமே வேண்டாம் தாயி. ஏதோ 5 பிச்சைக்காரங்களை ஏத்தியதா நினைச்சுக்கறேன்.", என்று விட்டு, ஒரே ஓட்டமா ஓடிவிட்டார்.
என் சல்வார் கனவில் மண் விழ, அங்கு நின்றவர்களை கேட்டு, ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி, இறங்கி வீடு போய் சேர்ந்தோம்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சும்மாவா சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சியின் பிறகு அந்த ஆட்டோக்காரர் எங்களின் தெருவில் ஆட்டோ ஸ்டான்டில் நிற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். தொடக்கத்தில் எங்களைக் கண்டால் முறைத்தவர், பிறகு ஸ்நேகமாக புன்னகைக்க தொடங்கினார். சில மாதங்களின் பின்னர் என் பாட்டியின் "ஆஸ்தான" ஆட்டோ ஓட்டுநர் ஆனார்.

Saturday, November 27, 2010

குஷன் கவர்



பறவை உருவத்தினை துணியில் வரைந்து கொள்ளவும்.

சங்கிலித் தையல், ஹெர்ரிங் போன், அடைப்பு தையல் ஆகியவற்றால் உருவான பறவை.








நடுவில் ஹார்ட் ஷேப் க்ராஸ் ஸ்டிச், சங்கிலி தையல் பயன்படுத்தினேன்.


மகி கொடுத்த விருது. மிக்க நன்றி, மகி.




இந்த விருதினை ( பறவை ) பாலாஜி, ஆமி, எல்கே, அப்துல்காதர் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன். வேண்டாம் என்று சொல்லாமல் எல்லோரும் வரிசையா வந்து என் கைகளால் இந்த விருதினை வாங்கிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

Thursday, November 18, 2010

என் கேள்விகென்ன பதில்?

எனக்கு 7, 8 வயசாக இருந்த போது இந்த சம்பவம் நடந்தது. வேகமாக ஓடிய போது கீழே விழுந்து, காலில் நல்ல சிராய்ப்பு. பாய்ந்து ஓடிய இரத்தத்தினை கட்டுப்படுத்த அம்மா பிளாஸ்டர் போட்டு விட்டார். போட்ட நாளிலிருந்து நானும் பிளாஸ்டரும் உடன் பிறப்புகள் போலாகிப் போனோம். அதைக் கழட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கோ அல்லது தானகவே விழுந்து தொலைக்க வேண்டும் என்ற நினைப்பு அதற்கோ இருந்தது போல தெரியவில்லை. என் அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை. பிளாஸ்திரியை உரிக்கும் போது ஒரு வலி வருமே அந்த வலிக்கு இணையாக வேறு எந்த வலியும் உலகில் இல்லை என்று நம்பினேன்.

பிளாஸ்டர் என் காலில் தங்கிவிட்டது. என்ன பசை போட்டு செய்தார்களோ தெரியவில்லை என்று என் அம்மா பக்கத்து வீட்டு மாமியிடம் புலம்பியது என் காதுகளில் விழுந்தது. பக்கத்து வீட்டு மாமி, எதிர் வீட்டு ஆன்டி என்று ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். ஆனால், எந்த பாச்சாவும் என்னிடம் பலிக்கவில்லை. கிட்டத்தட்ட 5 நாட்களின் பின்னர் ஒரு வித நெடி வந்த பின்னர் இந்த கருமத்தை எப்படியாவது கழட்டிவிட வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.


மெதுவா இழுத்தா வந்திட்டு போவுது - இது அப்பா.

கண்னை மூடிட்டு இழுத்திடும்மா - இது அம்மா.

முடியவே முடியாது - இது நான்.

என்னவோ பண்ணுங்க என்று சொல்லிட்டு அப்பா வெளியே கிளம்பி விட்டார்.

அம்மாவும் எவ்வளவு நேரம் தான் எனக்கு ஆறுதல், தேறுதல் சொல்வது. பழைய இத்துப்போன பிளாஷ்டிக் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டு, அம்மாவும் எங்கோ கண் காணாத இடத்தில் போய் மறைந்து கொண்டார்.

என் அலறல் சத்தம் கேட்டு ரசிக்க என் உடன் பிறப்புகள் சூழ்ந்து கொண்டார்கள்.

நான் வாளியிலிருந்த தண்ணீரில் ப்ளாஸ்டர் போட்ட காலினை மூழ்கும்படி வைத்துக் கொண்டேன். இடையில் ப்ளாஸ்டர் மீது தண்ணீரை கைகளால் ஊற்றிக் கொண்டே இருந்தேன். ப்ளாஸ்டர் கொஞ்சம் நெகிழ்ந்து, மேல் ஓரத்தில் லேசாக பசைத் தன்மை குறைந்து இருந்தது போல ஒரு மாயை உண்டானது. பிடித்து இழுத்த போது ஒரு அதிசயமும் நடக்கவில்லை என்று விளங்கியது.
என் உடன்பிறப்புகளும் எவ்வளவு நேரம் தான் பொறுமை காப்பார்கள். எல்லோரும் விளையாட்டில் மூழ்கிவிட, நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். மிகவும் வெறுத்துப் போன என் 4 வயசு சகோதரி மட்டும் வாளியின் பக்கம் படுத்து குட்டித் தூக்கம் போட ஆரம்பித்து விட்டார்.

ஒரு அரை மணிநேரம் கடந்து, திடுக்கிட்டு எழும்பிய என் தங்கை வாளியினையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்.
பிறகு ஏதோ தோன்றியவராக என் பிளாஸ்டரை பிடித்து ஒரு இழுவை இழுத்தார். இதெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்து போனது.
நான் அலறிய அலறலில் வீட்டில் எல்லோரும் கூடி விட்டார்கள். வெற்றிச் சிரிப்பு சிரித்த தங்கையை அம்மா தூக்கி முத்தங்கள் கொடுத்தார்.

இந்த சம்பவத்தின் பிறகு வீட்டில் ப்ளாஸ்டர் போடவே எனக்கு யோசனை. ப்ளாஸ்டர் போட்டாலும் என் சகோதரியிடமிருந்து அதை கட்டிக் காப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இப்ப என் பிள்ளைகளின் முறை போலும். அவர்களுக்கு கை, கால்களில் சிராய்ப்பு வந்தால் இதே கதை தான். சும்மாவா சொன்னார்கள் தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 பாயும் என்று.
ஆனால், நான் ஒரு சூப்பர் டெக்னிக் புத்தகத்தில் அறிந்து கொண்டேன். அது என்னவா?

யாராச்சும் சரியான பதில் சொன்னா அவர்களுக்கு ஒரு ப்ளாஸ்டர் பெட்டி பரிசாக வழங்கப்படும்.

Wednesday, November 17, 2010

தப்புக்கணக்கு

அறியாப் பருவத்தில் நடந்த தவறா அல்லது தெரிந்தே நடந்த தவறா என்று விளங்கவில்லை மோகனுக்கு. எல்லோரைப் போலவும் இனிமையான குழந்தைப் பருவத்தை அவனும் கடந்து வந்தான். 4 சகோதரிகள், 3 சகோதரர்கள் என்று பெரிய குடும்பம் அவனுடையது. அப்பா விவசாயி. ஏக்கர் கணக்கான தோட்டத்தை உழுது, விதை விதைத்து, ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதித்தவர். வீட்டில் எப்போதும் தேவைக்கதிகமாகவே பணம், சாப்பாடு எல்லாமே இருக்கும். வீட்டில் மோகன் தான் கடைக்குட்டி. மற்றவர்கள் படிப்பை தொடராமல் அப்பாவுடன் விவசாயத்தில் ஈடுபட, மோகன் மட்டுமே பள்ளி போய் வந்தான். நல்ல உயரமும், சிவந்த நிறமும் கொண்டவன்.

ஒரு நாள் இவன் பள்ளி சென்று விட, வீட்டின் மீது குண்டுகள் விழுந்து, எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டது. பள்ளியால் வந்தவன் அழக் கூட முடியாமல் ஸ்தம்பித்து நின்று விட்டான். ஆதரவற்று நின்றவனை அணைத்துக் கொண்டார் செல்லாயி பாட்டி. பாட்டி இவனுக்கு தூரத்து உறவு. பாட்டிக்கு ஒரு மகள். மகளுக்கு 4 பிள்ளைகள். வருமானத்திற்கு பெரிதாக வழியிருக்கவில்லை. அன்றாடம் காய்ச்சி குடும்பம்.


பாட்டி அப்படி ஒன்றும் அன்னை தெரசா அல்ல. மோகனிடம் இருந்த சொத்துக்களே பாட்டியின் குறியாக இருந்தது. மோகன் இன்னும் மேஜராகவில்லை. அவனிடமிருந்த சொத்துக்களுக்காகவே அவனை அணைத்துக் கொண்டார். இதெல்லாம் விளங்கிக் கொள்ளும் வயசில்லை மோகனுக்கு.
பாட்டியின் பேத்தி பெயர் சுனிதா. பருவத்தின் வாசலில் நின்றாள். சுமாரன அழகி. மிகவும் கர்வம் கொண்டவள். எல்லோரையும் எடுத்தெறிந்தே பேசுவாள். மோகன் பாட்டியின் வீட்டிற்கே குடிவந்தான். வெளி வராந்தாவில் படுத்துக் கொள்வான்.

மோகனின் வீடு குண்டு வீச்சினால் சேதமடைந்து கிடந்தது. அதோடு விவசாயத்தை கவனிக்க வேறு ஆள் இல்லாமல் வயல் வறண்டு போனது. இந்த சொத்துக்களை விற்றாலே பல இலட்சக்கணக்கில் இலாபம் பார்க்கலாம். செல்லாயி பாட்டி தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். நெடு நெடுவென, சிவந்த நிறத்தில் இருந்தவனை பேத்தி சுனிதாவுக்கே பேசி முடித்து விட்டால் அவளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று என்ணினார் பாட்டி.

வீட்டிலே பெரியவர்கள் மட்டும் கூடிப்பேசி நிச்சயம் செய்து விட்டார்கள். மோகனின் பக்கம் யாருமே இல்லை. மோகனுக்கும் சுனிதாவை பிடித்துக் கொண்டது. ஆனால், சுனிதாவுக்கு மோகனைக் கண்டால் ஏனோ பிடிப்பதில்லை. எப்போதும் எரிந்து விழுவாள். எப்போதும் அடக்கமாக இருக்கும் மோகனை விட ரோட்டில் ஸ்டைலாக திரிந்த அரவிந்தை மிகவும் பிடித்துக் கொண்டது.

மோகன் கெஞ்சக் கெஞ்ச சுனிதா மிஞ்சினாள். இப்படியே காலம் கடந்தது. வீட்டில் பெரியவர்களுக்கு இந்த விடயம் தெரிந்தாலும் காலப் போக்கில் சரியாகி விடும் என்று நம்பினார்கள்.
சுனிதா மோகனை அறவே தவிர்த்தாள். மோகன் காரணம் தெரியாமல் தவித்துப் போனான். தானும் குண்டு வீச்சில் இறந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வான். பெற்றோருடன் இருந்த பசுமையான நாட்கள் மனதில் நிழலாடும். கண்களிலிருந்து அருவி கொட்டும்.

மழை காலம் தொடங்கியது. மழை சட சடவென விழுந்து, சில மணிநேரங்களில் முற்றத்தில் தண்ணீர் தேங்கி, குட்டி குளமாக மாறியது. சுனிதா அவளின் சகோதரர்களோடு மழை வெள்ளத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினாள். தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இரைப்பதும், ஓடுவதுமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள். மோகனுக்கும் ஆசையாக இருந்தது. அவனும் போய் கலந்து கொண்டான். இவனைக் கணடதும் சுனிதா முறைத்தாள். தயவு செய்து இங்கிருந்து போய் விடு என்றாள். மோகன் அவளின் கையைப் பற்றினான். ஏன் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று சொல் போய் விடுகிறேன் என்று கண்களால் கெஞ்சினான்.
அட! சீ போய்த் தொலை என்று சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாயா", என்று இவனின் கைகளை வெறுப்புடன் தட்டி விட்டாள். கண்ணீர் மழை நீருடன் சேர்ந்து கரைந்து ஓடியது. நடந்து போனவனின் கண்களில் பூச்சி கொல்லி பாட்டில் கண்களில் பட்டது. கைகளில் எடுத்துக் கொண்டான். பாட்டிலை வாயில் வைத்து கவிழ்த்தான். எரியும் நெருப்புக் குழம்பு உள்ளே இறங்கியது போல தவித்துப் போனான். குடல் எரிந்தது. ஓடிப் போய் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து புரண்டான். சுனிதா சிரித்து விட்டு, உள்ளே ஓடிப் போனாள்.

கண்கள் சிவப்பாக மாறியது. எழுந்து அலறிக் கொண்டே ஓடினான். கடைக்குப் போய் விட்டு வந்த பாட்டியும், சுனிதாவின் அம்மாவும் நடந்தது எதுவுமே தெரியாமல் திகைத்துப் போனார்கள். அவனைப் பிடிக்க ஓடினார்கள். எரிச்சல் தாங்காமல் ஓடியவன் கிணற்றினுள் பாய்ந்தான்.
பாட்டியின் கையிலிருந்த குடை காற்றில் மேலெழும்பி கீழே வந்து மல்லாக்காக விழுந்தது.

சில்லென்று ஏதோ உடல் மீது பட விழிப்பு வந்தது மோகனுக்கு. அடச்சே! இவ்வளவு நேரமும் கண்டது கனவா என்று யோசனையாகவும் அதே நேரம் நிம்மதியாகவும் இருந்தது. இந்தப் பெண்ணுக்காக போய் யாராவது உயிரை மாய்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கொண்டான். அறையினுள் போய் தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுத்து பெட்டியில் அடுக்கினான். பெட்டியை தலையில் வைத்துக் கொண்டே மழையில் இறங்கி நடக்கத்தொடங்கினான்.
தடுக்க ஓடி வந்த பாட்டி, சுனிதாவின் அம்மா எல்லோரையும் தவிர்த்தான். பெய்த மழையினால் அவன் மனம் போல தெருவும் சுத்தமாக இருந்தது.

Tuesday, November 9, 2010

பம்கின் றோல் ( Pumpkin Roll )


தேவையானவை

மா - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
சினமன் தூள் - 1/2 தேக்கரண்டி
கிராம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
முட்டை - 3
சீனி - 1 கப்
பம்கின் கூழ் ( pumpkin puree ) - 2/3 கப்

ஃபில்லிங் ( Filling )
க்ரீம் சீஸ் - 1 கப் ( 8 oz )
ஐஸிங் சுகர் - 1 கப்
பட்டர் - 6 டேபிள் ஸ்பூன்
வனிலா - 1/2 டீஸ்பூன்

அவனை 375 F க்கு முற்சூடு செய்யவும்.
15 * 10 ட்ரேயில் வாக்ஸ் பேப்பர் போட்டு, மேலே பட்டர் பூசி, மாத்தூவி வைக்கவும்.
சுத்தமான கிச்சன் டவலில் ஐஸிங் சுகர் தூவி வைத்துக் கொள்ளவும்.
மா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சினமன் தூள், கிராம்பு தூள் எல்லாவற்றினையும் ஒன்றாக கலக்கவும்.
முட்டை, சீனி இரண்டையும் எலக்ட்ரிக் மிக்ஸரால் நன்கு அடிக்கவும். பின்னர் பம்கின் கூழ் சேர்த்து, நன்கு அடிக்கவும்.
இறுதியில் மா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையினை ட்ரேயில் ஊற்றி, 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
கேக் வெந்ததும், கிச்சன் டவலை மேலே விரித்து, ட்ரேயினை கவிழ்த்து வைக்கவும். மேலே லேயராக இருக்கும் பேப்பரினை மெதுவாக உரித்து எடுக்கவும்.
கிச்சன் டவலோடு சேர்த்து ( ட்ரேயினை எடுத்திட்டு தான் சுற்றணும் ), பம்கின் றோலினை சுற்றி அப்படியே 30 நிமிடங்கள் விடவும்.
சூடு ஆறியதும் கிச்சன் டவலை எடுத்து விட்டு, ஒரு தட்டையான பலகையில் பம்கின் றோலினை விரித்து வைத்து, ஃபில்லிங்கில் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி, இந்த றோலின் மீது பூசவும்.

ஐஸிங் பூசி முடிந்ததும் மீண்டும் மெதுவாக சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வரை வைத்து, பிறகு பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை:
இந்த ரெசிப்பி சத்தியமா என்னுடையது இல்லை. தாங்ஸ் கிவ்விங் ( Thanks Giving ) நேரம் கடையில் வாங்கிய பம்கின் கூழ் டின்னில் இருந்த ரெசிப்பி. பம்கின் என்றால் எனக்கு கொள்ளை விருப்பம். பம்கின் பை, பம்கின் டாப், பம்கின் குக்கி இப்படி பம்கினில் என்ன ரெசிப்பியாக இருந்தாலும் கொள்ளை விருப்பம். இந்த ரெசிப்பி பார்க்கவே நல்லா இருந்தது. உடனே செய்து பார்த்து விட்டேன். சுவையும் அபாரம்.
சாப்பிட்டு முடிஞ்சதும் கடவுளேன்னு இருக்க முடியாது. கொஞ்ச கலோரிகளாச்சும் burn பண்ணினா தான் குற்ற உணர்வு இருக்காது. எங்கே எல்லோரும் 2 மைல் தூரம் நடந்திட்டு வாங்க பார்க்கலாம். ம்ம்.. வெரி குட்.

Friday, November 5, 2010

மேசை விரிப்பு

சங்கிலி தையல், அடைப்பு தையல், ஹெர்ரிங் போன் ஆகியவற்றால் நான் தைச்ச மேசை விரிப்பு.


பேப்பரில் விரும்பிய டிசைன் வரைந்து கொள்ளவும்.
டிசைனை துணியில் ட்ரேஸ் பண்ணவும்.

இலைக்கு அடைப்பு தையல் போட்டால் அழகா இருக்கு.

இதழ்களுக்கு சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச் தையல்கள் பொருத்தமாக இருக்கும்.


**************************************

என் தோழி மகி கொடுத்த விருது.

மிக்க நன்றி, மகி.

Friday, October 29, 2010

ஆனந்த் ஆகிய நான்..

பெரிய அறையில் எங்கும் பூனைகள். வரி வரியாக கோடு போட்ட பூனைகள், வெள்ளை, மஞ்சள், கறுப்பு வெள்ளை இப்படி ஏகப்பட்ட கலரில் ஏகப்பட்ட பூனைகள். ஆனந்த நடுவில் அமர்ந்திருக்க, சுற்றி வர பூனைகள். ஒரு பூனை இவன் மடியில், இன்னொரு பூனை இவன் காலடியில். ஆகா! இதல்லவா சொர்க்கம் என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

நங் என்று ஏதோ சத்தமும் அதனைத் தொடர்ந்து அப்பாவின் வழமையான அர்ச்சனையும் ஆனந்தை இந்த உலகிற்கு கொண்டு வந்தன. அம்மா தண்ணி வாளியை இவன் பக்கத்தில் வைத்து விட்டு, உள்ளே போனார். இதன் அர்த்தம் இவன் போய் தண்ணீர் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அப்பாவிடம் வாங்கி கட்ட வேண்டும்.

ஆனந்திற்கு பூனைகள் என்றாலே கொள்ளை விருப்பம். நாலு வீடு தள்ளி இருக்கும் பூனை, நாற்பது வீடுகள் தள்ளி இருக்கும் பூனை என்று எல்லாமே இவனின் செல்லப் பூனைகள் தான். ஆசையாக வருடிக் கொடுப்பான். பூனைகள் எந்த வீட்டில் இருந்தாலும் அங்கு ஆஜராகி விடுவான். ஆனந்தின் அப்பாவிற்கு பூனைகள் என்றாலே ஆத்திரம், கோபம், எரிச்சல் ஏற்படும். அதனால் ஆனந்த் வீட்டில் பூனை வளர்க்க முடியவில்லை. அண்டை அயலார் வீட்டு பூனைகளை தடவி ஆசையினை தீர்த்துக் கொள்வான். ஆனந்தின் பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு பூனைக் குட்டி. பார்க்கவே அழகா இருந்தது. கொழுக் மொழுக் என்று தூக்கி மடியில் வைத்திருக்க வேண்டும் போல தோன்றும்.

அப்பா வேலைக்குப் போனதும் பக்கத்து வீட்டு பூனைக் குட்டியை தூக்கி வைத்து தடவிக் கொடுப்பான். பால், ரொட்டி என்று உணவு வகைகள் குடுப்பான். பள்ளியால் வந்தால் ஆனந்தின் ஒரே பொழுது போக்கு இந்தப் பூனை தான்.

பூனைகளால் இவனுக்கு பட்டப்பெயர் ஏற்பட்டு, அதுவே நிரந்தரமாகி விடும் என்று கனவிலும் நினைத்ததில்லை. அந்தப் பட்டப்பெயர் ஏற்பட காரணம் இவனின் பக்கத்து வீட்டுப் பூனை.
பக்கத்து வீட்டில் பெரிய சுவர் எழுப்பி, கேட் போட்டு, ஏதோ ஒரு பெரிய கோட்டை போன்ற வீடு இருந்தது. அந்த வீட்டில் புதிதாக ஒரு பூனைக்குட்டி வந்து சேர்ந்தது. சுவரில் இருந்த ஓட்டை வழியாக இவன் வீட்டுப்பக்கம் வந்து விளையாடிச் செல்லும். அப்பா வரும் வரை தொடரும் விளையாட்டு, அப்பா வரும் நேரமாகியதும் அந்த ஓட்டை வழியாக பூனைக் குட்டியை தள்ளி விடுவான். அது மீண்டும் வராமல் செங்கற்களை அடுக்கி வைத்து விடுவான். அம்மா கண்டும் காணாதது போல இருந்து கொள்வார்.

ஆனந்தின் 10 வது பிறந்தநாள் வந்தது. பெற்றோர்கள் கொஞ்சம் ஆடம்பரமாக கொண்டாட முடிவு செய்தார்கள். இவனின் பள்ளி நண்பர்கள், சொந்தங்கள் என்று அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஹாலில் மையமாக விலையுயர்ந்த கம்பளம் விரித்து, உயரமான நாற்காலி போடப்பட்டது. இங்கு இந்த கம்பளம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அம்மாவிற்கு கம்பளிகள் என்றால் கொள்ளை விருப்பம். இந்தக் கம்பளி வட இந்தியாவிற்கு டூர் போனபோது அதிக விலை கொடுத்து, அப்பா அம்மாவிற்கு அன்பளிப்பாக வாங்கி குடுத்தார். அம்மா இதனை யார் இரவலாக கேட்டாலும் கொடுக்கமாட்டார்.

பிறந்தநாள் விழா சிறப்பாகவே நடந்தது. இரவு உணவினை எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அயலாரின் பூனைக் குட்டி உள்ளே வந்தது. கூட்டத்தினைக் கண்டதும் மலங்க விழித்த குட்டி ஆன்ந்தைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடியது. ஆனந்த் செய்வதறியாது தடுமாறினான். உயரமான நாற்காலியின் கைப் பிடியில் ஏறி அமர்ந்து கொண்டான். பூனையும் தாவி ஏறிக் கொண்டது. இவனின் தட்டில் ஒரு ஓரமாக உண்ணத் தொடங்கியது. அந்த நேரம் ஏதோ வேலையாக வந்த அப்பாவிடம் மாட்டிக் கொண்டாலும் என்ற பயத்தினால் பூனை குட்டியினை கையினால் மெதுவாக தள்ளினான். பூனை முன்பை விட வேகமாக தட்டில் உண்ண முயற்சிக்க, இவன் தள்ள, கையில் இருந்த தட்டு சிதறி விழுந்தது. சாதம், கறிவகைகள் கம்பளி முழுவதும் பரவியது.

கோபப் பார்வை வீசிய அப்பா, " அனுமார் மலை உச்சிலை இருந்து சாப்பிட்டாப் போல இது என்ன கூத்து என்று சத்தம் போட்டார்."
வந்திருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். கம்பளியினை எடுத்து வேலைகாரியிடம் கொடுத்தார் அப்பா. மஞ்சள், சிவப்பு, பச்சை என்று எல்லாக் கலரிலும் கறைகள். ஆனந்த உள் அறையினுள் ஓடி போய் ஒளிந்து கொண்டான்.

அதன் பிறகு விழா சப்பென்று ஆகிவிட்டது. அப்பாவிற்கு மனம் சரியில்லாமல் போனது. இவ்வளவு கூட்டத்தில் மகனை அப்படி திட்டியிருக்க கூடாது என்று நினைத்து கவலைப்பட்டார். கொட்டியதை வார்த்தைகளை அள்ள முடியாதே. மகனிடம் சென்று மன்னிப்புக் கேட்டார். மகன் அப்பாவை மன்னித்து அந்த சம்பவத்தினை மறக்க நினைத்தாலும் அவனின் பள்ளித் தோழர்கள் மறக்கவிடவில்லை. ஆனந்த் "அனுமான்" ஆகிய கதை இதுதான்.

மன்னிப்பு கேட்டதோடு நிறுத்தாமல் ஒரு அழகிய பூனைக் குட்டியினை அன்பளிப்பாக குடுத்தார் அப்பா. ஆனந்த் இப்பெல்லாம் தன் பட்டப்பெயர் பற்றி கவலைப்படுவதில்லை. இந்தப் பட்டப் பெயரினால் ஒரு பூனைக் குட்டி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டான்.

Wednesday, October 20, 2010

மனசே...

புஷ்பாக்கு எரிச்சலாக இருந்தது. என்ன நாடு இது என்று முணு முணுத்தார். என் மூத்த மகன் அப்பவே சொன்னான்.
" அம்மா, உங்களுக்கு வெளிநாடு சரி வராது. போய் கஷ்டப்படப் போறீங்க", என்றானே.
அப்பவே அவன் பேச்சைக் கேட்டிருந்தால் இப்படி அவஸ்தைப்பட்டிருக்க மாட்டேனே.
புஷ்பா வெளிநாட்டில் மகனைப் பார்க்க வந்தார். கடைக்குட்டி மகன் ஆசையாக கூப்பிட்ட போது மறுக்க முடியவில்லை.
வந்து இறங்கிய போதே குளிர் வாட்டி எடுத்தது. வீட்டில் ஹீட்டர் இருக்கு என்றான் மகன்.
ஹீட்டர் சூட்டில் தலைவலி வந்து அவதிப்பட்டார். குளிரில் வெளியே போனால் கை, கால்கள் எல்லாமே மரத்துப் போனது.
அதோடு ஜாக்கட், தொப்பி, கையுறை, காலுறை, சப்பாத்து என்று வரிசையாக மாட்டி, பிறகு வீடு வந்ததும் அதனைக் கழட்டி, அதற்குரிய இடங்களில் வைத்து, நினைக்கவே மூச்சு வாங்கியது.
மகனும், மருமகளும் வேலைக்கு கிளம்பிவிட இவருக்கு ஜன்னல் மட்டுமே தோழி.
அதனுடன் பேசியவாறே வெளியே வேடிக்கை பார்ப்பார். பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் வாழ்க்கை முறை இவருக்கு அத்துப்படியானது.
9 மணிக்கு இஸ் எனப்படும் இஸபெல்லா வாக்கிங் போவதும், தூங்கு மூச்சி ஜான் வேலைக்கு 11 மணிக்கு போவதும், ரீட்டா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என்று எல்லாவற்றையுமே பார்த்துக் கொண்டிருப்பார்.
இஸ்ஸுடன் பேச விருப்பம் இருந்தாலும் மொழிப் பிரச்சினை. தொடக்கத்தில் சைகையில் பேசிக் கொண்டார்கள். இவரின் பெயரை புஷ் என்று அவர் சுருக்கி கொள்ள, இஸபெல்லா இஸ் ஆகிப்போனார்.


இந்த நாட்டில் எல்லாமே பணம் தான் என்று எண்ணிக் கொள்வார்.
ஊரில் இருந்த வரை கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை கொசுறு வாங்கியே ஒரு வாரம் வரை ஓட்டுவார். இங்கு என்னப்பா எல்லாத்துக்குமே காசா? என்று வியந்து போனார்.
மகன் சிரித்துக் கொள்வான்.
" அம்மா, இலவசமாக குடுப்பதற்கு இது என்ன கோபால் கடையா?", என்று கடுப்படித்தான்.
போன வாரத்திலிருந்து கை, காலெல்லாம் ஒரே வலி. டாக்டரிடம் போக வேண்டும் என்று நச்சரித்தார்.
மகன் கூட்டிச் சென்றான். வெள்ளைக்கார டாக்டர் ஸ்நேகமாக புன்னகைத்தார். இவர் தன் நோய் பற்றி மகனுக்கு சொல்ல, மகன் மொழிபெயர்த்து டாக்டரிடம் சொல்ல, மருத்துவர் ஏதேதோ மருந்துகள் எழுதிக் கொடுத்தார். தூக்க மாத்திரை வேணும் என்று கேட்ட தாயை மகன் இழுத்து வராத குறையாக வெளியே கூட்டி வந்தான்.
புஷ்பாக்கு சந்தேகம்.
" அதெப்படிப்பா நான் என் நோயைப்பற்றி 4 நிமிடங்கள் சொன்னேன். நீ 1 நிமிடத்தில் மருத்துவருக்கு சொல்லி விட்டாயே?", என்று சீறினார்.
" அம்மா, ஆங்கிலத்தில் நீட்டி முழக்காமல் சொன்னேன். அவ்வளவு தான்", என்று நிறுத்தினான்.
தூக்கம் வராமல் அவதிப்பட்டார். ஊரில் மற்றப் பிள்ளைகளின் நினைவு ஏங்க வைத்தது. தூக்க மாத்திரை கேட்டும் வாங்கி குடுக்காத மகன் மீது எரிச்சல் உண்டானது.
மாலை வேலையால் வந்த போது மகனின் கையில் மருந்துப் புட்டிகள். தூக்க மாத்திரையும் இருக்கு என்று சொல்லி ஏதோ ஒரு பாட்டிலை நீட்டினான். புஷ்பாக்கு சந்தோஷமாக இருந்தது. அன்று இரவு தூக்க மாத்திரையிம் உதவியுடன் நன்கு தூங்கியதாக காலையில் மருமகளிடம் மகிழ்ச்சியை தெரிவித்தார்.

தூக்கம் வந்தாலும் கை, காலில் வலி மட்டும் குறையவேயில்லை.
தமிழ் டாக்டரிம் தான் போவேன் என்று அடம் பிடித்தார்.
இந்த அத்துவானக் காட்டில் நான் எங்கே போவேன் தமிழ் டாக்டருக்கு என்று மகன் குறைபட்டுக் கொண்டான்.
புஷ்பாவின் தொல்லை தாங்காமல் எங்கோ ஒரு தமிழ் டாக்டர் இருப்பதாக கேள்விப்பட்டு மகன் கூட்டிச் சென்றான்.
போகும் போது இவர் பாவிக்கும் மருந்துகளையும் மறக்காமல் எடுத்துச் சென்றார். இங்கு ஒரு டாக்டரிடமிருந்து வேறு டாக்டரிடம் செல்லும் போது கட்டாயம் இப்படி மருந்துகளைக் கொண்டு போய் காட்ட வேண்டும். அவர்கள் அதற்கேற்றாப் போல வைத்தியம், மருந்துகள் குடுப்பார்கள்.

புஷ்பா மருத்துவரிடம் மருந்துகளைக் காட்டினார். அவர் ஒவ்வொரு மருந்தாக பார்த்தார். தூக்க மாத்திரையின் உதவியுடன் தான் தூங்குவேன் என்று சொன்ன புஷ்பாவை கேள்விக் குறியுடன் நோக்கினார்.
அதை நீங்கள் கொண்டு வரவில்லையா? என்று கேட்ட டாக்டரிடம் இதோ இங்கே இருக்கே என்று கை காட்டினார்.
டாக்டர் சிரித்து விட்டுச் சொன்னார், " அம்மா, இது விட்டமின். தூக்க மாத்திரை அல்ல."

மகன் மீது எரிச்சல் உண்டானது.
டாக்டர் புஷ்பாவை செக் பண்ணியபடி பேசத் தொடங்கினார்.
" அம்மா, உங்களுக்கு ஒன்றுமில்லை. எல்லாம் உங்கள் மனசிலை தான் இருக்கு. இந்த நாடு, குளிர், பிள்ளைகள் என்று நிறையக் குழப்பங்கள். அதான் இப்படி நோய், வலின்னு மனசிலை நினைப்பு வந்திருக்கு. இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த ஊரிலை இருக்கப் போறீங்க?. மிஞ்சிப் போனால் இன்னும் 1 வருடங்கள் இருப்பீங்களா? அது வரை சந்தோஷமா இருக்கலாமே! கை, கால் வலிக்கு மாத்திரைகள் போடுங்கள் சரியாப் போய்டும். 2 வாரங்களின் பின்னர் மீண்டும் வாங்க சரியா." என்று முடித்துக் கொண்டார்.

டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தார். டாக்டர் பின்னாடியே வந்தவர் சொன்னார்," இரண்டு வாரம். மறக்க வேண்டாம்."

புஷ்பா தயங்கி நின்றார்.
" சாமி வரம் குடுத்தாலும் பூசாரி குடுக்காத கதையாயில்லை இருக்கு ", என்று முணுமுணுத்தார் புஷ்பா.
" இல்லை. அந்தம்மாவிடம் நான் எப்படி இங்கிலீசுலை பேசுவேன்? மகனைக் காணவில்லையே.", என்று வரவேற்பறையில் இருந்த பெண்ணைக் கைகாட்டியபடி.
டாக்டர் பெருங்குரலில் சிரித்து விட்டு, அவரே அப்பாயின்மென்ட் வாங்கி குடுத்தார்.

வெளியே வந்தார். "என்னம்மா டாக்டர் என்ன சொன்னார்?" , என்று அன்புடன் கேட்ட மகனை நோக்கிப் புன்னகைத்தார்.
பேசியபடியே வீடு வந்து சேர்ந்தார்கள்.
மகன் வேலைக்குப் புறப்பட்டு விட. மீண்டும் தனிமை சூழ்ந்து கொண்டது.
குளிருக்கான ஆடைகளை அணிந்து கொண்டார்.
குளிர் காற்று முகத்தில் வந்து மோதியது. மனபாரம் குறைந்தது போல உணர்ந்தார் புஷ்பா.

Wednesday, October 6, 2010

நவராத்திரி க்ராஃப்ட்


கொலு வைக்க வசதியில்லை. கொலு வைச்ச அனுபவமும் இல்லை. அதனால் க்ராஃப்ட் செய்து, அதை படமெடுத்து, விளக்கம் எழுதி......நீங்களும் முடிந்தால் செய்து பாருங்கள்.

பேப்பரில் ஒரு தீபம் வரைந்து கொள்ளுங்கள்.


அதில் நான் மேலே காட்டியது போல கோடுகள் வரைந்து கொள்ளுங்கள். பின்னர் நம்பர் போட்டுக் கொள்ளுங்கள். சென்டரில் வரும் பகுதிக்கு நம்பர் வேண்டாம்.

ஒரு கார்ட் போர்ட் அட்டை எடுத்து, தீபத்தின் அவுட் லைன் மட்டும் வரைந்து கொள்ளவும்.



கத்தி அல்லது கத்தரிக்கோலினால் அவுட் லைனில் சரியாக வெட்டிக் கொள்ளவும்.


இப்ப கார்ட் போர்ட் அட்டையினை திருப்பி வைத்துக் கொள்ளவும்.
இதை நம்பர் போட்டுள்ள பேப்பரின் மீது வைத்து, அசையாமல் டேப் ஒட்டிக் கொள்ளவும்.


க்ராஃப்ட் பேப்பர்களை சிறிய துண்டுகளாக வெட்டி, ஓரத்தில் நன்கு மடித்து, நன்கு அழுத்தவும்.
இதை கார்ட் போட் தீபத்தின் 1 என்ற இலக்கமிட்ட இடத்தில் வைத்து, இரு புறமும் டேப் ஒட்டிக் கொள்ளவும்.






ஒற்றைப்படை இலக்கத்திற்கு ஒரு கலரும், இரட்டைப்படை இலக்கத்திற்கு வேறு கலரிலும் பேப்பர்கள் பயன்படுத்தவும்.

ஒட்டி முடித்த பிறகு கார்ட் போர்ட் அட்டையை திருப்பவும். படத்தில் காட்டியது போல வந்திருக்கும்.


நடுவில் பூ, பூனை, பறவை, இப்படி எதையாவது ஒட்டுங்கள்.

தீபத்தின் சுடரினை க்ளிட்டர் பேனாவினால் வரைந்து விடவும். அவுட் லைனுக்கும் விரும்பிய க்ளிட்டர் கலரினால் அலங்கரிக்கலாம்.

அழகான தீபம் இதோ!



மேலும் விளக்கத்திற்கு இங்கே போய் பாருங்கள்.

Sunday, October 3, 2010

இனிமேல் வசந்தம் ( சவால் சிறுகதை )

கிழக்கு வானில் சூரியன் எழும்ப முன்பு காமினி எழுந்து விடுவாள். சனி, ஞாயிறு என்று ஒரு நாள் கூட ஓய்வெடுக்க முடியாத வாழ்க்கையை நினைத்தால் வெறுப்பாக இருந்தது. இந்நேரம் மீன் பிடிக்க போன படகுகள் திரும்பி வந்திருக்க வேண்டும். கரையில் காத்திருந்து, மீன்களை பேரம் பேசி வாங்கி, சந்தைக்கு கொண்டு சென்று விற்று வர வேண்டும். நண்டும் சிண்டுமாக 4 குழந்தைகள். கணவன் சிவா மொடாக்குடியன். அவனிடமிருந்து பணத்தை பாதுகாக்க மிகவும் கஷ்டப்படுவாள். அரிசிப்பானை, தவிட்டுப்பானை இப்படி எதில் பணத்தை ஒளித்து வைத்தாலும் கண்டு பிடித்து, குடித்தே அழித்து விடுவான்.
பக்கத்து வீட்டு பார்வதி அக்காவிடம் பணத்தை குடுத்து வைப்பாள். தேவைப்படும் போது வாங்கிக் கொள்வாள்.

மப்பில் புலம்பிக் கொண்டிருந்த கணவனை வெறித்துப் பார்த்தாள்.
"ஏய்! இந்தாயா, எழுந்திரு ", என்று அதட்டினாள்.
" ம்ம்ம்.... இப்பதானே படுத்தேன். அதுக்குள்ள சூரியனை யார் வரச் சொன்னா.... ", என்றான்.
" சோறாக்கி வைச்சிருக்கேன். பிள்ளைகளுக்கும் குடுத்து, நீயும் சாப்பிடு. 9 மணிக்கு பள்ளிக் கூடம் திறந்திருவாங்க. பிள்ளைகளை சாப்பிட வைச்சு, பள்ளிக்கு அனுப்பிடு. சரியா?", என்ற காமினியை அலுப்புடன் பார்த்தான் சிவா.

" ம்ம்...நீ கிளம்பு ", என்று அவளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான். இன்னும் தூக்கம், மப்பு எல்லாமே மீதி இருந்தன.


ஓலைப் பெட்டியை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாள். கடற்கரையினை நோக்கி நடையினை எட்டிப் போட்டாள். குளிர்காற்று உடம்பில் ஈட்டியாக குத்தியது. அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தோடியது. கடற்கரை ஆளரவம் அற்று அமைதியாக இருந்தது. இன்று வெள்ளனவே வந்து விட்டேனா என்று எண்ணியபடியே சுற்றும் முற்றும் பார்த்தாள்.அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளின் இடையில் போய் மறைவாக அமர்ந்து கொண்டாள். குளிரிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது. கொண்டு வந்த போர்வையினால் நன்கு மூடிக் கொண்டாள். தூக்கம் மெதுவாக தாலாட்டியது.
சில மணித்துளிகள் கடந்திருக்கும் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தாள். யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. வந்த உருவம் இவள் ஒதுங்கியிருந்த படகுகளின் பக்கம் வந்து ஒளிந்து கொண்டது. பயம் வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனம் காத்தாள். தூரத்தில் டார்ச் வெளிச்சத்துடன் சிலர் வருவது தெரிந்தது.

வந்தவர்கள் இவள் ஒதுங்கியிருந்த படகின் பக்கம் வந்தார்கள்.

" ஏய்! யார் நீ ?", என்றான் ஒருவன்.
இவள் பயத்துடன் போர்வையை விலக்கினாள்.
" இந்தப் பக்கம் யாராச்சும் போனதை பார்த்தாயா?", என்றான் இன்னொருவன். முகத்தில் விழுந்த டார்ச்சின் வெளிச்சம் கண்களை கூசச் செய்தது.
" இல்லையே. நான் பார்க்கலை ", என்றாள்.
"வந்து தொலைங்கடா. அவன் இந்நேரம் எங்கயாச்சும் பறந்திருப்பான். ஒரு வேலையாச்சும் ஒழுங்கா செய்ய தெரியுதா. முட்டாள் பசங்க ", என்று ஒருவன் கத்தினான்.
அவர்கள் அகன்றதும் அந்த உருவம் படகுகளின் மத்தியிலிருந்து எழுந்து வந்தது.
" அவனுங்க போய்ட்டாங்களா ?", என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

"ம்ம். நீ யாரு? ஏன் இப்படி ஓடி, ஒளிய வேண்டும் ?... ", என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டவளை இடைமறித்தான் அவன்.

" எல்லாம் சொல்றேன். என் கால்களில் காயம். அவங்க சுட்டதில் காலில் குண்டு பாஞ்சு....", என்று தொடர்ந்தவனை கலக்கமாக பார்த்தாள்.
" வா ஆஸ்பத்திரிக்கு போலாம். ", என்றாள் காமினி.
" அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். எனக்கு ஒரு உதவி செய்வாயா?. என்னிடம் ஒரு சின்ன பொதி இருக்கு. இதை நான் ஒருவரிடம் சேர்க்க வேண்டும். இதைக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போக முடியாது. ", என்றவனை இடைமறித்தாள்.

" என்ன பொதி? என்னை நம்பி எப்படி இதை ஒப்படைக்கிறாய்? நான் திரும்ப தருவேன் என்பது எவ்வளவு தூரம் நம்புகிறாய் ", என்று மீண்டும் கேள்விகள் கேட்டாள்.
" இதப்பாரும்மா. எனக்கு உன்னை விட்டா இங்கு வேறு யாரும் இல்லை. உன்னை நான் நம்புகிறேன். அதோடு உன்னை இங்கு, சந்தையில் அடிக்கடி பார்த்திருக்கேன். நீ கவலைப்பட வேண்டாம். இதை நீ சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தால் கொஞ்சம் பணம் தருவார்கள். உன் பிள்ளைகள், நீ நலமாக இருக்கலாம்.", என்றான். ஆண்களும், பெண்களும் கும்பலாக வர ஆரம்பித்து இருந்தார்கள். லேசான வெளிச்சத்தில் அவனின் முகம் ஓரளவு தெரிந்தது. பழகிய முகம் போல தெரிந்தது. ஆனால், எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவில்லை.

மீண்டும் தூரத்தில் டார்ச் வெளிச்சம் தெரிய, அவசரமாக எழுந்து, எதிர் திசையினை நோக்கி ஓடினான். இவள் மடியில் கிடந்த பொதியை கலக்கத்துடன் பார்த்தாள்.

அன்று முழுவதும் காமினிக்கு ஒரே யோசனையாக இருந்தது. இந்தப் பொதியினை எவ்வாறு கணவனிடமிருந்து காப்பது என்று யோசித்து பைத்தியம் பிடிக்கும் அளவிற்கே வந்து விட்டாள்.

மீன் கூடையினுள் வைத்து, மேலே பொருட்களை பரவி வைத்தாள். சிவா மீன் கூடையின் பக்கம் போவது குறைவு. காமினி அங்கெல்லாம் பணத்தினை மறைச்சு வைக்கமாட்டாள் என்று நம்பினான் சிவா.
ஒரு நாள் பகல் முழுவதும் அந்தப் பொதியினை காப்பாற்றி விட்டாள். இரவு சிவா மப்பில் இருந்தபடியால் பெரிதாக பிரச்சினை ஏற்படவில்லை.
அடுத்த நாள் பொதியினை உரியவர் வந்து வாங்கிக் கொள்வார் என்று நம்பினாள். அடுத்த நாள் அடுத்த வாரம் ஆகியது ஆனால் யாரும் வரவேயில்லை. உள்ளே என்ன இருக்கும்? திறந்து பார்த்தால் என்ன? என்று அடிக்கடி நினைப்பாள். என்ன இருந்து தொலைத்தால் எனக்கென்ன? என் வேலை முடிஞ்சதும் அவர்கள் குடுக்கும் பணத்தை வாங்கினால் பிள்ளைகள் வயிறார சாப்பிடுவார்கள் என்று நினைத்தாள்.

சந்தையில் வருவோர் போவோரை எல்லாம் இவன் தான் அந்த நபராக இருக்குமோ என்று பார்ப்பாள். ஆனால், அவர்கள் கடந்து போனதும் வாடிப்போய் விடுவாள். போலீஸில் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.


நாட்கள் வாரங்களாகியது யாரும் வருவதற்கான அறிகுறியே இருக்கவில்லை. இந்த வாரம் இந்தப் பொதியினை போலீஸிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள் காமினி.
குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டவளை சிவா வழிமறித்தான்.
" கலக்டரம்மா, எங்கே கிளம்பிட்டீங்க? கொஞ்ச நாளா நானும் தான் பார்க்கிறேன். உன் செய்கைகள் ஏதோ வித்யாசம் தெரியுது. என்ன திருட்டு வேலை செய்கிறாய் ? ", என்று அதட்டினான்.
" இல்லையே. நான் என் அம்மா வீட்டிற்கு போறேன். நீயும் வருகிறாயா? ", என்றாள்.
" ஆஹா! உங்க அம்மா வீட்டிலை பாலாறும் தேனாறும் ஓடுதாக்கும். நீயே போய் குடி? ", என்றான் எகத்தாளமாக.
" ஆனா, என்னை மீறி ஏதாச்சும் திருட்டு வேலை செஞ்சே கொன்னுபோடுவேன் ", என்றபடி வெளியே சென்ற சிவாவை கவலையுடன் பார்த்தாள் காமினி.

பிள்ளைகளை அம்மா வீட்டில் விட்டு விட்டு பேருந்து நிலையம் வந்தாள். காலையில் சாப்பிடாத களையினால் மயக்கமாக வந்தது. காலடியில் பூமி நழுவுவது போன்ற உணர்வு உண்டானது. சுதாகரித்து அமர்வதற்குள் கீழே விழுந்தது மட்டும் ஞாபகம் இருந்தது. எழுந்து பார்த்த போது ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்திருந்தாள்.

முகத்திற்கு மாஸ்க், வயர்கள் மாட்டி விட்டிருந்தார்கள். வெளியே பேச்சுக் குரல் கேட்டது. சிவா டாக்டரிடம் ஏதோ மெதுவான குரலில் சொன்னது காதில் விழுந்தது. இவன் இங்கே எப்படி வந்தான் என்று யோசனை ஓடியது. காமினி தன்னுடைய மஞ்சள் பையை தேடினாள். பக்கத்தில் மேசையில் பையைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. எடுத்து தலையணைக்கு அடியில் திணித்துக் கொண்டாள்.அறையினுள் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்க கண்களை மூடிக் கொண்டாள்.
" ஏன்பா, உன் மனைவியா இவங்க", இது டாக்டர்.

"ஆமாங்கய்யா. ஏன் கேட்கிறீங்க? ", என்றான் சிவா.

" இவங்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தசோகை நோய் இருக்கு. இவங்க வீட்டிலை என்ன சாப்பிடுறாங்க... ", என்று கேள்விகள். மீண்டும் கேள்விகள்.
சிவா வாய் பேசாது மௌனம் காத்தான். காமினி வெளியே கிளம்பியதும் ரகசியமாக பின் தொடர்ந்த கதையினை எப்படி டாக்டரிடம் சொல்வது என்று நினைத்தபடி தலையினை சொறிந்து கொண்டு நின்றான்.
" சும்மா தேமேன்னு நிற்காம நான் சொன்ன மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் வாங்கி வாங்க. ம்ம்.. சீக்கிரம்", என்ற மருத்துவரின் குரலுக்கு விரைந்தோடினான்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். கீழே விழுந்தவள் சுதாகரித்து எழவும், சிவா துப்பாக்கியுடன் நிற்கவும் சரியாக இருந்தது. காமினி, மன்னிச்சுக்கோ... எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

" காமினி, அந்த பையை என்னிடம் கொடு", என்றான் சிவா.
" முடியாது", என்று மறுத்தாள் காமினி.
" இதில் வைரம் இருக்கு. பல இலட்சங்கள் தேறும். போலீஸில் ஒப்படைத்தால் உனக்கு 1000, 2000 ரூபாய்கள் குடுப்பார்கள். நம்ம இப்படியே எங்காவது ஓடிப்போயிடலாம் வா", என்று கெஞ்சிய சிவாவை கேள்விக் குறியுடன் பார்த்தாள் காமினி.

" உனக்கு எப்படி தெரியும் வைரம் பற்றி?", என்றாள் காமினி.
" நேற்று ஒருவனை மீட் பண்ணினேன். அவன் தான் மப்பில் உளறிக் கொட்டினான். ஏதோ வைரம், கடற்கரை, பெண் என்று சம்பந்தம் இல்லாமல் பேசினான். நான் அவனுக்கு மேலும் சரக்கு வாங்கி குடுத்தேன். எல்லாத்தையும் அப்படியே ஒப்புவித்தான். வைரம் கிடைத்தால் நாங்கள் மூவரும் பங்கு போட்டுக் கொள்வதாக பேச்சு. நானும் இனிமேல் உன்னை தொல்லை செய்ய மாட்டேன். எங்கையாச்சும் கண் காணாத இடத்திற்கு போய் நிம்மதியா இரு...", என்று நிறுத்தாமல் பேசினான்.


காமினி பதில் சொல்லாது தயங்கி நின்றாள். அந்த இடைப்பட்ட நேரத்தில் சிவா மஞ்சள் பையை பறித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தான். காமினி ஒரு கணம் தயங்கி, பின் அவன் பின்னே ஓடினாள். வேகமாக ஓடியவன் சாலையினை கடக்க முற்பட வேகமாக வந்த காரில் மோதி, தூக்கி வீசப்பட்டான். காமினி அதிர்ந்து போய் நின்றாள். சில நொடிகளில் அங்கு கூட்டம் கூடி விட்டது. சிவா மஞ்சள் பையினை அணைத்தபடி உயிரை விட்டிருந்தான். காமினி மெதுவாக கூட்டத்திலிருந்து நழுவினாள்.

கடற்கரை காற்று இதமாக வீசியது. மெதுவாக நடை போட்டவளை யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

"காமினி, நான் தான் பரந்தாமன். வைர வியாபாரி. சில வாரங்களின் முன்பு உங்களிடம் வைரம் குடுத்தவன் என் நண்பன் தான். அவன் அதிக இரத்தப் போக்கினால் இறந்து விட்டான். போன வாரம் தான் அவன் எனக்கு அனுப்பிய தகவல் கிடைத்தது. உங்களை தேடிக் கண்டு பிடிக்க நாளாகிவிட்டது. என்னிடமிருந்து வைரத்தினை ஒரு கும்பல் கொள்ளையடித்தார்கள். வைரத்தினை விற்க போன இடத்தில் தகராறு வந்து போலீஸ் வரை போய் விட்டார்கள். அந்த கும்பலில் ஒருவனாக இருந்து செயல்பட்டவன் தான் அன்று நீங்கள் கடற்கரையில் சந்தித்தவன். வைரத்தை கொண்டு வந்து குடுத்தால் இலட்ச ரூபாய்கள் தருவேன் என்று பேரம் பேசினேன். அவன் வைரத்தை கொண்டு வரும் வழியில் தான் அவனை சுட்டுக் கொன்று விட்டார்கள். மீதிக் கதை தான் உங்களுக்கு தெரியுமே ", என்று முடித்துக் கொண்டார் பரந்தாமன்.

காமினி தயங்கி நின்றாள்.
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
"இல்லை. என்னிடம் வைரம் இல்லை. இப்ப அது போலீஸ் கையிலை தான் இருக்கு.", கணவர் பறித்துக் கொண்டு ஓடிய மஞ்சள் பையில் இருந்ததையும். அவன் விபத்தில் இறந்த சம்பவத்தினையும் சொன்னாள்.
பரந்தாமன் தலையில் கை வைத்துக் கொண்டு, கீழே அமர்ந்து கொண்டார்.

காமினி பதில் சொல்லாது தூரத்தில் சூனியத்தினை வெறித்தபடி நின்றாள்.

பரந்தாமன் அந்த இடத்தினை விட்டு அகன்றதும் உள்பாவடையில் பத்திரமாக வைத்திருந்த வைரத்தினை எடுத்தாள். பிரிகாமல் இருந்த பொதியினை வெறுப்புடன் பார்த்தாள். போலீஸ் நிலையம் நோக்கி நடந்தாள். போலீஸ் உண்மையான உரிமையாளரிடம் வைரத்தினை ஒப்படைத்தார்கள். பரந்தாமன் திருட்டு கும்பலை சேர்ந்தவன் என்று பின்னர் அறிந்து கொண்டாள்.

வைர வியாபாரி இவளின் நேர்மையினை பாராட்டி ஒரு இலட்ச ரூபாய் பணமும், அழகான வீடும் பரிசாக கொடுத்தார். வீட்டிற்கு வசந்தம் என்று பெயர் சூட்டினாள்.வழக்கமான ஆரவாரம் மிக்க வாழ்க்கையிலிருந்து விலகி, ஊட்டி போகும் வழியில் வைர வியாபாரி அன்பளிப்பாக குடுத்த வீட்டில் அவளும் பிள்ளைகளும் மட்டும். வீட்டினை ஒட்டி இருந்த இடத்தில் வருமானத்திற்கு அழகான, சிறிய மளிகை கடை. இனி காமினியின் வாழ்வில் வசந்தம் மட்டும் வீசும்.

Thursday, September 30, 2010

ஆத்தா! நான் பாஸாகிட்டேன்...




எல்லோரும் நலமா? வாங்க அப்படியே இந்தப் பேருந்துல்ல போய்க் கொண்டே பேசலாம். இன்று எனக்கு கல்லூரிக்கு போக வேண்டும். கடந்த 2 வருடங்களாக இந்த பஸ்ஸில் தான் பயணம் செய்கிறேன். ட்ரைவர் கூட அவ்வளவு பழக்கம். எங்கே கண்டாலும் வண்டியை நிப்பாட்டி, என்னை ஏற்றிக் கொள்வார். கனடாவில் இப்படி செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் அவர் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

அன்றொரு நாள் நல்ல பனி. நடைபாதை முழுவதும் பனி மூடி, நான் பேருந்தை பிடிக்கும் நோக்கில் வேகமாக ஓடி வந்து, பனியில் விழுந்து... சொல்லவே அழுகாச்சி வருகிறது. அதே நேரம் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஓட்டுநர் வண்டியை நிப்பாட்டி விட்டு, என்னை நலம் விசாரித்தார். பலமாக அடி விழுந்தாலும் சிரிச்சு, ஒரு வழியா சமாளித்து விட்டேன்.

ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? கார் லைசன்ஸ் எடுத்து தொலைக்கலாமே என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. அதைப்பற்றி தான் சொல்லப் போகிறேன். என் சகோதரன் கார் வைத்திருக்கிறான். ஆனால், எனக்கு ட்ரைவிங் பழக்கும் அளவிற்கு பொறுமை அவனுக்கோ, அல்லது அவனிடம் பழகும் அளவிற்கு பொறுமை எனக்கோ இருப்பதாக தெரியவில்லை. நான் ஒரு வழியா முட்டி மோதி ட்ரைவிங் ஸ்கூலில் பணம் கட்டி, கார் ஓடப்பழகினேன். எழுத்து பரீட்சையில் பாஸாகி விட்டேன். ஆனால், இந்த ட்ரைவிங் பரிட்சை மட்டும் எனக்கு சரியாவே வரமாட்டேன் என்கிறது. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்... காதை கிட்ட கொண்டு வாங்க. நான் 5 தடவையும் பெஸிலாகி விட்டேன். நாளை மீண்டும் ட்ரைவிங் டெஸ்ட் இருக்கு. கல்லூரி முடிய அங்கிருந்து ட்ரைவிங் ஸ்கூல் போய் 1 மணி நேரம் கார் ஓட்டிப்பழக வேண்டும். இந்த முறை எப்படியாவது நான் பாஸ் பண்ணி விடுவேன் என்று என் ட்ரைவிங் இன்ஸ்ட்ரக்டர் சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்.

பாஸாகிய பிறகு என்ன நடந்திச்சு என்று சொல்றேன். வரட்டா.

என்ன காத்துப் பிடுங்கிய பலூன் போல இருக்கிறாய் என்று நக்கல் எல்லாம் வேண்டாம். இந்த தடவையும் பாஸாகவில்லை. ம்ம்ம்...6வது தடவையும் பெயிலாகிவிட்டேன்.
எல்லாம் நல்லபடியா தான் போய்ட்டு இருந்திச்சு. இந்த முறை ட்ரைவிங் டெஸ்ட் செய்ய ஒரு பெண் அதிகாரி வந்தார். பெயர் ஜோ ஆன் என்று சொன்னார். என் பெரியம்மா வயசு இருக்கும். லைட், வைப்பர், சிக்னல் என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாகவே பதில் சொன்னேன். என்னைக் காரை ஓட்டச் சொன்னார். நானும் சந்தோஷமாக ஓடினேன். கொஞ்சம் நம்பிக்கை ஒளி தெரிந்தது. ட்ராஃபிக் நிறைந்த சாலையில் ஓடிக் கொண்டிருந்த போது, எங்களைக் கடந்து ஒரு கார் சர் என சீறிப்பாய்ந்து ஓடியது. குறிப்பிடப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்ற காரைப் பார்த்ததும் ஜோவின் முகம் தக்காளிப்பழம் போல சிவந்து விட்டது. மடையன் என்று சத்தமாகவே சொன்னார். ஒரு சிக்னலில் நின்ற காரின் பக்கத்தில் போய் எங்கள் காரும் நின்றது. ஜன்னலை திறந்து, " ஏன்பா! இப்படி ஓட உனக்கு யார் லைசென்ஸ் குடுத்தார்கள்", என்று கோபமாக கேட்டார் ஜோ.
" ஆத்தா! என்ன என்னை மறந்துவிட்டாயா? நீங்க தானே எனக்கு லைசென்ஸ் 4 மாசங்களுக்கு முன்பு குடுத்தீங்க. என் பெயர் அலெக்ஸ். உங்க மகன் பெயர் கூட அலெக்ஸ்ன்னு சொன்னீங்களே? ", என்றான் அலெக்ஸ்.

ஜோவின் முகம் கடுகடு என்று இருந்தது.
என்னைக் கண்டதும் அலெக்ஸ் கை அசைத்தான். " கவலைப்படாதே நீயும் பாஸான மாதிரி தான். வரட்டா, ஜோ ", என்று கையை அசைத்து விட்டுப் போய் விட்டான்.
அடப்பாவி! நீ எனக்கும் குழி தோண்டி விட்டு அல்லவா போகிறாய் என்று என் உள்மனம் கூச்சல் போட்டது.
அதன் பிறகு ஜோ சுரத்திழந்து போய் இருந்தார். என் நேரம் முடிந்ததும் எதுவுமே சொல்லாமல் உள்ளே போய் விட்டார்.
பிறகு ஏதோ தோன்றியவராக வெளியே வந்தார், " பெட்டர் ட்ரை நெக்ஸ்ட் டைம் (Better try next time )", என்று சொல்லிவிட்டு உள்ளே போய் மறைந்துவிட்டார்.

இந்த கூத்திற்காக என் பாக்கெட் பணம் நிறைய செலவு செய்து விட்டேன். இனிமேல் திரும்ப பணம் சேர்க்க வேண்டும். பணம் சேர்த்து, அடுத்த தடவை கண்டிப்பா பாஸாகி விடுவேன். நீங்களும் இப்படி என்னுடன் பஸ்ஸில் ஏறி, இறங்கி அல்லாட வேண்டி இருக்காது. பாஸாகிய பிறகு மீண்டும் சந்திப்போம்.

Saturday, September 25, 2010

பதிவுலகில் நான்

மகியின் அழைப்பினை ஏற்று, என்னைப் பற்றிய சுயபுராணம்.




1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வானதி அல்லது வாணி இரண்டுமே என் பெயர்கள் தான். என் பெயரில் இருக்கும் இன்னொருவரை நான் இது வரை சந்தித்தது குறைவு. யுனீக் ஆக இருக்கட்டுமே என்று அப்படியே மெயின்டேன் பண்றேன்.



2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
என்னப்பா! நான் இவ்வளவு வெளிப்படையா சொன்ன பிறகு... .... உண்மைப் பெயரே தான்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
காலடி எடுத்து வைத்தது...ம்ம்.. சும்மா பொழுது போக்கிற்கு தான் வலைப்பூ தொடங்கினேன். எப்போதும் பிள்ளைகள், கணவரின் வேலைகள் என்று இருந்ததால் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. பிள்ளைகள் படுத்த பின்னர் ஏதாவது கிறுக்கித் தள்ளுவேன். அதை அப்படியே வலைப்பூவில் போட்டேன். இது தான் நான் வலைப்பூவில் காலடி எடுத்து வைச்ச வரலாறு.


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
மற்றவர்களுக்கு கமென்ட் ( நேரம் கிடைக்கும் போது ) போடுவது, இன்ட்லியில் இணைந்தது இவை மூலம் கொஞ்சம் பிரபலமானேன் என்று நினைக்கிறேன். ஆனால், நேரம் குறைவாக இருப்பதால் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிட முடிவதில்லை.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
சொந்தக் கதை, கற்பனை என்று எல்லாமே இருக்கு என் வலைப்பூவில்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இருங்க சொல்றேன்.
இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.
வெள்ளை மாளிகை ( அதாங்க நம்ம ஓபாமா வீடு ) போல் ஒரு( கொஞ்சம் மங்கலான கலரில்) வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.
இன்னும் இருக்கு அப்புறம் இன்கம்டாக்ஸ் பிரச்சினை வந்தா. அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.

எல்லாம் சும்மா பொழுது போக்கிற்காக தான் எழுதுகிறேன்.



7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இதை வச்சு சமாளிக்கவே நேரம் பத்தவில்லை. இதில் இன்னொன்றா? தாங்காது.


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்..
கோபம், பொறாமை, ஆத்திரம் எல்லாம் கடந்தவள் நான். அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன்.
வலைப்பூவில் சண்டை போடுபவர்கள், மற்றவர்களை மறைமுகமாக தாக்குபவர்களை பிடிக்காது.


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
அண்ணாமலையான் தான் என்னை முதன் முதலாக பாராட்டியவர்.நிறைய தோழிகள், இனிமையான நட்புகள் என்று என் நட்பு வட்டம் பெருகியது. இமா, மகி இருவரும் தனிப்பட்ட முறையிலும் நிறைய ஊக்கம் கொடுத்தார்கள். அறுசுவைக்கு என் கதை அனுப்பியதில் இமாவின் பங்கு நிறைய உண்டு. மற்றவர்களுக்கு பின்னூட்டம் கொடுக்கவே ப்ளாக் தொடங்கினேன்.பிறகு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தேன். பிறகு க்ராப்ஃட், கதைகள் என்று சாம்பாராக மாற்றி விட்டேன். என்னிடம் ப்ளாக் இருப்பதே பலருக்கு நீண்ட நாட்கள் கழித்தே தெரிய வந்த...( யாருப்பா அது கொட்டாவி விடுறது...) சரி இன்னும் சொல்லி போரடிக்க விரும்பவில்லை.


10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் அப்பா முடியலை.

Monday, September 20, 2010

நானும் டீயும்




தேநீர்- ஒரு மயக்கம் தரும் வார்த்தை. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது, அவர்களைப் பார்த்து நாமும் பழகிய பழக்கம். ஊரில் இருக்கும் வரை அதிகாலை ஒரு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் முடிய ஒன்று, மாலை நேரம் ஒரு டீ, சில வேளைகளில் இடைபட்ட நேரத்திலும் டீ குடிப்பேன். காலை எழுந்து இதைக் குடிக்காவிட்டால் ஏதோ ஏர்வாடிக்கு போக வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டு, பாடாய் படுத்தி எடுக்கும். கனடா வந்த பிறகு டீ குடிக்க பெரிதாக விருப்பம் ஏற்படவில்லை. ஏதோ கடமைக்கு 2 தேநீர்கள் காலையும், மாலையும் அவ்வளவு தான். காலப்போக்கில் காலை நேரம் மட்டும் டீ குடிப்பது என்று மாற்றிக் கொண்டேன்.

அமெரிக்கா வந்த பிறகு ஒரு நாளைக்கு ஒரு டீ தான் குடிப்பது என்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டேன். தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ தூளை போட்டு, வடி கட்டி, பாலை அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி.... இங்கு ஒரு முக்கியமான விடயம் சொல்ல வேண்டும். பால், தண்ணீர் விகிதம்( ratio ) என்பது மிகவும் முக்கியம். பால் அரைக் கப் எனில் தண்ணீர் 1/4 கப் தான் விடுவேன். இரண்டையும் கலந்து, அளவாக சீனி போட்டு, இந்த டீயை குடித்தால் சொர்க்கம் தான் போங்கள். இந்த டீயின் பிறகு நான் காலைச் சாப்பாடு சாப்பிட நேரமாகும், அல்லது சாப்பிடவே மாட்டேன்.

மைக்ரோவேவில் டீ போடுவது, பால் சுட வைப்பது எனக்குப் பிடிக்காது. அப்படி டீ குடிப்பதற்கு குடிக்காமல் இருந்து தொலைக்கலாம். தண்ணீரில் டீ பைகளைப் போட்டு, சும்மா ஒரு கடமைக்கு 1 டேபிள்ஸ்பூன் குளிர்ந்த பால் ஊற்றி டீ என்ற பெயரில் யாராவது குடுத்தால் மனசை கல்லாக்கி கொண்டு குடித்து விடுவேன். ஆனால், மீண்டும் அவர்கள் வீட்டீற்கு போனால் டீ வேண்டாம் என்று முன்பே சொல்லி விடுவேன்.

வெளியே கடைகளில் டீ வாங்கி குடிப்பது எனக்கு பிடிக்காத விடயம். அந்த டீக்கு குடுக்கும் பணத்திற்கு ஒரு 2 லிட்டர் பால் வாங்கி, ஒரு வாரத்திற்கு டீ குடிக்கலாம்.

அதோடு கடையில் வேலை செய்பவர்களுக்கு டீ போடத் தெரியாது என்று நினைத்துக் கொள்வேன். அவ்வளவு மட்டமா இருக்கும் அந்த டீ.
ஒரு முறை கனடா போகும் போது வழியில் ஒரு கடையில் ( தலைவலி காரணமாக) டீ வாங்கித் தந்தார் என் ஆ.காரர். நானும் பல விதமாக பகல் கனவு கண்டபடி டீ குடிக்க காத்திருந்தேன். ஒரு பெரிய கப்பில் சுடுதண்ணீர், 2 டீ பைகள் மிதந்து கொண்டிருந்தன.

பால் எங்கே என்று தேடினேன். என் கணவர் அவரின் காஃபியோடு பிஸியாகி விட, நான் போய் அந்தப் பெண்ணிடம் பால்/கிரீம் வேணும் என்று கெட்டேன். இரண்டு சிறிய குப்பிகள் ( 4 டேபிள்ஸ்பூன்கள் பால் இருக்கும் என்று நினைக்கிறேன் ) எடுத்து நீட்டினார். 1/2 கப் பால் எங்கே இந்த 4 ஸ்பூன் பால் எங்கே என்று மனம் பழசை அசை போட்டது. இந்த 1/2 லிட்டர் தண்ணீரில் 4 டேபிள் ஸ்பூன் பாலை விட்டால்...நினைக்கவே வெறுப்பாக வந்தது. மீண்டும் போய் அந்தப் பெண்ணிடம் பல்லைக் காட்டினேன். என்னை முறைத்துப் பார்த்து விட்டு, மேலும் ஒரு குப்பியை எடுத்து வேண்டா வெறுப்பாக குடுத்தார்.

பக்கத்தில் இருந்த வயசான அமெரிக்கர் அவரிடம் இருந்த 2 குப்பிகளை என்னிடம் நீட்டினார். இப்போது 5 குப்பிகள் சேர்த்து விட்டேன். ஆனால், இன்னும் பால் வேணும் என்று தோன்றியது. சீனிக்கும் இப்படி அலைபாய வேண்டி இருந்தது. பால் இனிமேல் கேட்கவே முடியாது.

அந்த அமெரிக்கர் அவரின் 1/2 லிட்டர் பால் கலக்காத டீயை குப்பைத் தொட்டிக்கு கொண்டு சென்று ஊற்றி 1/4 லிட்டர் ஆக்கினார். அடடா! சுப்பர் ஐடியா! இது நம்மளுக்கு தோன்றவே இல்லையே என்று நினைத்துக் கொண்டே நானும் ஓடிப்போய் அது போல செய்து விட்டு வந்தேன்.

பால் குப்பிகளை உடைத்து, டீ யில் ஊற்றி, ஆசையோடு குடித்தால் சப்பென்றிருந்தது. ஆறிப்போன தண்ணீரைக் குடிப்பது போல உணர்வு. அன்று சபதம் எடுத்தேன் இனிமேல் கடையில் டீ குடிப்பதில்லை என்று.




இது நான் போட்ட டீ தான். இருங்க குடிச்சு முடிச்சிட்டு ஆறுதலா வருகிறேன்.

Friday, September 17, 2010

எங்கெங்கு காணிணும்...




நாங்கள் தற்போது இருக்கிற வீட்டிற்கு குடிவந்தபோது தோட்டத்தினை அழகா மாற்றி, சில பூச்செடிகள் வைத்து சீராக்கினார் ஒரு தோட்டக்காரன். பழைய மண்ணை தோண்டி எடுத்து, கற்களை நீக்கி, ஒரு லேயராக மக்கும் தன்மையுடைய ஒரு ஷீட் விரித்து, மேலே மண் பரவி, பார்க்க அழகாக இருந்தது. பழைய செடிகளைப் பிடுங்கி எறியும் போது ஒரு மின்ட் செடியும் இருப்பதைக் காட்டினார் தோட்ட வேலைகள் செய்தவர். எனக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்று என் ஆ.காரரும் சொன்னார். தோட்டவேலைகள் செய்தவரும் அப்படியே அந்த மின்ட் செடியை விட்டு விட்டார். நான் தினமுன் போய் பார்ப்பேன். ஆனால், பெரிதாக வளர்ச்சி இல்லாமல் ஏனோ வாடிப்போய் காட்சி தந்தது.
வின்டர் காலம் வந்தது. நானும் இனிமேல் மின்ட் செடி வராது என்று நினைத்துக் கொண்டேன். வின்டர் முடிந்து, வசந்தகாலம் வர, மின்ட் செடியும் துளிர் விட்டு, அழகா குட்டிச் செடியாக வெளிவந்தது.

ஒரு இடத்தில் இருந்த செடி பரபரவென எல்லா இடமும் பரவ ஆரம்பித்தது. என் கணவருக்கு ஏனோ தெரியவில்லை இந்த மின்ட் செடிகள் பரவியதும் பிடிக்கவில்லை. பொழுது போகாத நேரம் தோட்டத்திற்குப் போய் ஒரு செடியை விட்டு, மீதி எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து விடுவார். பிடுங்கிய செடிகளை அக்கம் பக்கம் இருப்பவர்கள் தொடக்கத்தில் எடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்திய வருடத்தை விட புதினா எங்கும் வேரோடி நிறையச் செடிகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன. மற்றச் செடிகளை வளர விடாமல் எங்கும் ஒரே புதினா மயம். என் கணவர் எரிச்சலுடன் எல்லாச் செடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டாதாக வெற்றிச் சிரிப்பு சிரித்தார். ஆனால், மீண்டும் எங்கும் புதினா மயம்.

என் ஆ.காரர் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த புதினா செடிகளை அழிக்க முடியாமல் திண்டாடிப் போனார். ஏஸியன் சூப்பர் மார்கெட்டில் சும்மா 5 இணுக்குகள் வைச்சு, 2 டாலர்களுக்கு விற்பார்கள். இப்படி கொள்ளை அடிக்கிறார்களே என்று நினைப்பேன்.
ஒரு முறை பிரியாணி செய்யும் போது புதினாவை நிறையச் சேர்த்து விட்டேன். என் கணவருக்கு இந்த புதினா டேஸ்ட் பிடிப்பதில்லை. எரிச்சல் ஒரு பக்கம் வந்தாலும், பிரியாணியை விட மனமில்லாம ல் சாப்பிட்டு முடித்தார். மீண்டும் புதினா செடிகளுக்கு கஷ்டகாலம் தொடங்கியது.

நான் ஒரு சூப்பர் ஐடியா சொன்னேன் என் ஆ.காரரிடம். அதாவது, இந்த புதினா இலைகளை மார்க்கெட்டில் கொண்டு போய் விற்பனை செய்தால் .... நான் முடிக்கும் முன்பே என் கணவர் சொன்னார்.

கொண்டு போய் விற்று, வரும் லாபத்தை நீங்கள் மூவரும்( என்னையும் என் பிள்ளைகளையும் ) பங்கு போட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு சதம் கூட வேணாம் என்று சொல்லி விட்டு, புதினா செடிகளைப் பிடுங்க சென்று விட்டார்.
புதினாக்கு கஸ்டமர் பிடிக்க கடை கடையா ஏறி இறங்கணும், சுத்தமா கழுவணும், அதற்குரிய தட்டுகளில் வைத்து, பாலித்தீன் கடதாசி சுற்றி, விலை நிர்ணயம் செய்து... இதெல்லாம் தேவையா என்று உள்மனம் சொன்னது.
கணவர் பிடுங்கி எறிந்த புதினா செடிகளை பக்கத்து வீட்டுக்காரருக்கு குடுக்கலாம் என்று போனேன். அவர் கதவினை திறந்து கூட பார்க்காமல் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சவுன்ட் விட்டார். என் கணவர் ஆவேசமாக புதினா செடிகளை பிடுங்கி எறிந்ததை கவனித்து இருக்க வேண்டும் இந்த ஆசாமி. அல்லாத்தையும் நீயே வைச்சுக்க என்று பக்கத்து வீட்டு வாண்டு சொன்னது. ஓசியில் ஒரு பொருளைக் குடுத்தால் அதன் மதிப்பே தெரியாது அல்லவா!

என் பிஸினஸை இங்கு ப்ளாக்கில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. புதினா வேண்டும் என்பவர்கள் கையை தூக்குங்க. அப்படியே செக் புத்தகத்தை எடுத்து, ஒரு 20 டாலர்களுக்கு ஒரு செக் எழுதி, என் அட்ரஸுக்கு அனுப்பி வைங்க. பாம்பு, கத்தரிக்காயெல்லாம் அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, September 12, 2010

பாம்பென்றால்...

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்களே அது என்னைப் பொறுத்தவரை மிகவும் சரியானதே. எனக்கு உடம்பே நடு நடுங்கும்.
இப்ப கூட பாருங்க ஒரு பாம்பு படம் கூகிளாண்டவரிடம் கேட்டு, இங்கு போட பயம். அவ்வளவு ஏன் பாம்பு பற்றிய பதிவுகள், படங்கள் எதையுமே பார்க்கவே மாட்டேன்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வலைப்பூவில் பாம்பு படம் பார்த்தேன். படித்தது முழுக்க மறந்து விட்டேன். வேறு ஒருவரின் ப்ஃரொபைல் படம் இந்த ஊர்வன படம் தான். அதுவும் படமெடுத்து, ஆவேசமாக வரும் பாம்பு. நான் அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க படத்தை மாற்றி விட்டார். என் கஸின் ஒருவருக்கு பாம்பென்றால் பயமே இல்லை. ஏய்! இந்தா சூ சூ..போய்த் தொலை என்பார். பாம்பு ஓடிவிடும்.

ஏன் அவ்வாறு நடக்குது என்பது விளங்கவேயில்லை! சின்ன வயசில் ஊரில் வாய்க்காலில் படுத்துக் கிடந்த பாம்பு, வீட்டு ஹாலில் வழி மாறி ஓடி வந்த பாம்பு என்று பல சம்பவங்கள் கூட இருக்கலாம். கடற்கரை போன போது மீனவர்கள் பிடித்து கரையில் போட்ட தண்ணீர் பாம்பு. அது விரட்டியதால் நான் ஓடினேனா? அல்லது நான் ஓடியதால் அது விரட்டியதா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.

திருச்சியில் இருந்த போது அழகான வீடு, பக்கத்தில் வயல், காவிரி ஆற்றுத் தண்ணீர் பாய்ந்து வரும் கால்வாய்கள் என்று மிகவும் அழகான இடத்தில் குடியிருந்தோம். எல்லாமே அழகாக தெரிந்தது அதாவது நான் நாகபாம்பினைக் காணும் வரை. வயலில் திரியும் எலிகளைப் பிடிக்க வரும் பாம்புகள் எங்கள் வீட்டிற்கும் வரும்.
படமெடுத்து ஆடிய பாம்பினைக் கண்ட பிறகு எனக்கு காய்ச்சல் வந்து விடும். என் அப்பா, பக்கத்து வீட்டினர், போவோர், வருவோர் எல்லாமே சேர்ந்து பாம்புகளை விரட்டுவார்கள்.
ஒரு முறை எங்கள் வீட்டு நாய் ஒரு பாம்பினை வாயில் பிடித்து, அடித்துக் கொன்றது. அதன் பிறகு நான் என் நாய் இல்லாமல் எங்கேயும் போவதில்லை. என் ஹீரோ என் நாய் டெனி தான்.

மக்களுக்கு இப்படியான பயங்களை போபியா(Phobia ) என்று சொல்வார்கள். இது கிரீக் ( Greek ) வார்த்தை.

பல வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் இப்படி போபியா இருப்பவர்களைக் காட்டினார்கள். கோமாளிகள் (க்ளௌன் ), லிப்ட், உயரமான மாடிகள்/இடங்கள், பூனைகள், பலூன்கள், பாம்பு, பொய் மூக்கு/மீசை/கண்ணாடிகள், இப்படி இந்த லிஸ்டில் இருப்பவர்கள் சிலரைப்பற்றிய நிகழ்ச்சி அது. ஒரு மனோதத்துவ நிபுணர் இதற்கான காரணங்களை விளக்கமாக சொன்னார்.


இந்த மக்களின் பயங்களை நீக்கி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்று அடம் பிடித்தார் நிகழ்ச்சி நடத்தியவர். இதில் ஹைலைட்டான விடயம், பாம்பு போபியா வந்தவரின் பயத்தை எப்படி நீக்கி, அவரை ஒரு சாதாரணமான குடிமகன்(ள்) ஆக்கினார்கள் என்பதே.

ஒருவர் மஞ்சள் கலரில் இருந்த பாம்பினைக் மேடைக்கு கொண்டு வர, இந்தப் பெண்மணி எடுத்தார் ஓட்டம். அரங்கத்தினை விட்டு, வீதிக்கு ஓடியவரை விடாமல் விரட்டிச் சென்று கூட்டி வந்தார்கள். அழுது கொண்டே வந்தவரை சமாதானம் செய்தார்கள்.

ஓடிய பெண்மணியிடம் பாம்பினைக் குடுத்தார்கள். முதலில் தெருவுக்கு ஓடியவர், பிறகு கொஞ்சம் பயம் தெளிந்து அரங்கத்தினுள் சுற்றி ஓடினார். பின்னர் மேடையில் மட்டும் அங்கும் இங்கும் ஓடினார். இதெல்லாம் எடிட் பண்ணி 1 மணி நேரத்தில் காட்டினாலும், இவரின் பயத்தினைப் போக்க குறைந்தது 1 வாரம் ஆவது ஆகியிருக்கலாம்.
இறுதியில் என்ன ஆச்சரியம்! பாம்பினைக் கண்டு பயந்த பெண், பிரிட்னி ஸ்பியர்ஸ் போல கழுத்தில் பாம்பினை மாலையாக போட்டுக் கொண்டு அழகாக நடந்து வந்தார். பாம்பினை தடவிக் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு போபியா பிரச்சினையுடன் வந்த எல்லோரும் பயம் தெளிந்து, வீர நடை போட்டார்கள்.

இப்படி ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனாலாவது என் பயம் தீருமா என்று தீவிரமா யோசித்தும் இருக்கிறேன். இன்னும் செயல் வடிவம் குடுக்கவில்லை.

Tuesday, September 7, 2010

டிப்ஸ்.. டிப்ஸ்

நாட்டிற்கு வந்த புதிதில் எனக்கு ஒரு பங்களாதேஷ் தோழி ஒருவர் இருந்தார். கம்யூட்டர் சம்பந்தமான கோர்ஸ் படிக்கும் போது அறிமுகமானவர். கம்யூட்டர் வகுப்பில் தரும் வீட்டுப்பாடங்கள், அஸைன்மென்ட்ஸ் ஏதாவது முடிப்பதற்காக கம்யூட்டர் லேப் போவோம். வேலைகள் முடிய சில நேரங்களில் மதியத்திற்கு மேல் ஆகிவிடும்.
பசியை ஆற்றிக் கொள்ள பக்கத்தில் இருக்கும் துரித உணவகத்திற்கு போவோம். நான் பெரும்பாலும் முட்டை சான்ட்விச்சுடன் சாப்பாட்டினை முடித்துக் கொள்வேன். என் தோழி ஆற அமர இருந்து நன்றாக வெளுத்துக் கட்டுவார். என் தோழி ஒரு சாப்பாட்டு பிரியை. அவளின் அண்ணனோடு தங்கியிருந்தாள். அவள் அண்ணா இவளை எங்கேயும் பெரிதாக கூட்டிச் செல்ல மாட்டார்.

ஒரு நாள் எங்களுடன் இன்னொரு மாணவியும் வந்தார். நீங்கள் யாராவது அந்த தாய்லாந்து நாட்டு உணவகத்தில் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?" என்று கேட்டார் கூட வந்த மாணவி.
" இல்லை. ஏன் நீ சாப்பிட்டு இருக்கிறாயா? " இது பங்களாதேஷ் தோழி.
"ம்ம்ம்... ", என்று பதில் வந்தது.
" நல்லா இருக்குமா? ", என்று மீண்டும் கேள்வி.
" நல்லா இல்லை சூப்பரா இருக்கும்.

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வது எங்கள் கல்லூரியின் அருகில் இருக்கும் தாய்லாந்து நாட்டு உணவகம் பற்றியே. அழகான கட்டிடம், தளவாடங்கள், அந்த நாட்டு பாரம்பரிய உடை அணிந்த அழகிய பெண்கள் என்று மிகவும் கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் இருக்கும் அந்த உணவகம். நாங்கள் தினமும் அதனை கடந்து போகும் போது என் பங்களாதேஷ் தோழி பெருமூச்சு விட்டுக் கொள்வார்.

" இங்கே ஒரு நாளாச்சும் சாப்பிடணும்", என்று ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார்.

இங்கெல்லாம் சாப்பிட நமக்கு கட்டுபடியாகாது என்று சொல்லி அவள் ஆசைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பேன்.

" நாங்கள் இருவரும் அங்கே போய் சாப்பிடத் தான் போறோம். இது நடக்கும் " , என்று சவால் விட்டாள் தோழி.

துரித உணவகத்தில், கூட வந்த தோழி தொடர்ந்தார்.

" அந்த உணவகத்தில் சிக்கனில் ஒரு டிஷ் செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய் பாலில் சிக்கன் துண்டுகள் மிதக்க, அளவான மசாலாக்கள் தூவி....", என்று வர்ணனை தொடர்ந்தது.
" நிசமாவே அவ்வளவு டேஸ்டா இருக்குமா? ", என்றாள் என் பங்களாதேஷ் தோழி. கையில் வைத்திருந்த சிக்கன் சான்ட்விச்சை வெறுப்புடன் கீழே வைத்தாள். இதெல்லா ஒரு சாப்பாடா என்று பார்வை பார்த்தாள்.

இந்த சிக்கன் ரெசிப்பி மட்டுமல்ல எல்லாமே மிகவும் சுவையாக இருக்கும் என்று முடித்துக் கொண்டார்.

அன்றிலிருந்து ஆரம்பமானது என் தோழியின் நச்சரிப்பு. கட்டாயம் போயே ஆக வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றாள். நான் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கழன்று கொள்வேன். ஆனால், அவள் விடுவதாக இல்லை.

ஒரு நாள் என் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்துச் சென்றாள். உள்ளே போன பின்னர் என் கைப்பையை குடைந்து 3 டாலர்கள் தான் இருக்கு என்று சொன்னேன்.
" இதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. என்னிடம் பணம் இருக்கு நான் குடுக்கிறேன் ", என்றார் தோழி.

வரவேற்பு பெண்மணி குடிக்க தண்ணீரை கப்களில் ஊற்றி விட்டு நகர்ந்தார். தண்ணீரில் ஐஸ் கட்டிகள் மிதந்து கொண்டிருந்தன.

என் தோழி அந்த பெண்ணை மீண்டும் கூப்பிட்டு வேறு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். ஐஸ்கட்டிகள் என் தோழிக்கு பிடிக்காதாம். நான் மூன்று டாலர்களுக்கு இதுவே அதிகம் என்று நினைத்து, விதியை நொந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தின் பின்னர் என் தோழி கைப்பையை குடைந்து கொண்டிருந்தார். தன்னிடம் 7 டாலர்கள் தான் இருக்கு என்று மெதுவான குரலில் சொன்னார்.

மொத்தம் 10 டாலர்களே இருந்தன. என் தோழியின் அலப்பறை மட்டும் குறையவேயில்லை.
மெனுவைப் பார்த்து, கோக்கனட் சிக்கன் டிஷ்ஸைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி ஏதோ ஒரு நூடுல்ஸ் டிஷ் கொண்டு வரச் சொன்னார் என் தோழி.
சிக்கன் டிஷ் விலை அதிகம். குறைந்தது 14 டாலர்கள் வேணும். எங்களிடமிருந்த பணத்திற்கு இது மட்டுமே சாப்பிட முடிந்தது.

ரெஸ்டாரன்ட் பெண்ணும் என் தோழியை ஓடி ஒடிக் கவனித்தார். இவர் கேட்ட நேரம் தண்ணீர், ஏதாவது சாஸ் வகையறாக்கள் என்று கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை உனக்கு என்று கேட்ட என்னை அடக்கினார்.
சாப்பிட்டு முடிந்த பிறகு பில் கொண்டு வந்தார்கள். மொத்தம் 10 டாலர்கள் என்று கணக்கு காட்டியது. நான் என்னிடம் இருந்த மூன்று டாலர்களை மேசையில் வைக்க, என் தோழி அவரின் 7 டாலர்களை வைத்தார். டிப்ஸ் குடுப்பதற்கு பணம் இருக்கவில்லை. என் தோழி அந்தப் பெண்ணை ஓட ஓட விரட்டி வேலை வாங்கிய பாவத்திற்கு குறைந்தது 2 டாலர்களாவது குடுக்க வேண்டும் என்று என் மனசாட்சி சொல்லியது.

நான் மீண்டும் கைப்பையை குடைய, தோழி அவரின் கைப்பையை குடைந்து 25 பைசாக்கள் எடுத்து மேசையில் வைத்தார். எங்களை எரித்து விடுவது போல பார்த்தார் தாய்லாந்துப் பெண்.

25 பைசாவை எடுக்காமலே மேசை மீது போட்டு விட்டு நகர்ந்து விட்டார் அந்தப் பெண்மணி. எனக்கு அவமானமாக இருந்தது. ஆனால், என் தோழி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மீண்டும் அந்தப் பைசாவை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்.
இந்த சம்பவத்தின் பிறகு நான் அந்த உணவகம் வழியாக போவதைக் குறைத்துக் கொண்டேன். மாற்று வழியால் போய் வந்தேன்.

என் தோழி மீண்டும் அவரின் அண்ணன், அக்கா குடும்பத்தோடு அந்த உணவகம் போய் சாப்பிட்டதாக சொன்னார். இந்த முறை சிக்கன் டிஷ் சாப்பிட்டதாக சொன்னவர் மேலும் தொடரும் முன்பு எவ்வளவு டிப்ஸ் குடுத்தோம் என்று நினைக்கிறாய் என்று புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.

" என்ன 50 பைசா குடுத்திருப்பாயா?", என்று சீண்டினேன்.
இல்லை கிட்டத்தட்ட 100 டாலர்களுக்கு பில் வந்திச்சு. அதில் 20% டிப்ஸ் என் அண்ணா கணக்குப் பார்த்துக் குடுத்தார் என்று சொல்லி சிரித்தார்.

" அதே பெண்ணுக்குத் தான் இந்தப் பணத்தை குடுத்தியா?", என்று கேட்டேன்.

இல்லை. அவரைக் காணவில்லை. வேறு ஒரு பெண்தான் எங்களுக்கு அன்று சாப்பாடு பரிமாறினார் என்று விட்டு, ஓடிப் போய் பஸ்ஸில் ஏறிக் கொண்டார் என் நண்பி.

நான் உணவகத்தைக் கடந்து போகும் போது யாரோ உற்றுப் பார்ப்பது போல ஒரு உணர்வு. திரும்பி பார்த்தேன். அங்கே அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் ஆட்கள் வந்து போகும் இடம். என்னை ஞாபகம் இருக்கப்போவதில்லை என்று என்னை நானே சமாதானம் செய்தபடி நடையினை எட்டிப் போட்டேன்.

Thursday, September 2, 2010

என் கணவரும் கத்தரிக்காயும்!

கத்தரிக்காய் தெரியாதவங்க கீழே உள்ள படம் பார்க்கவும். ( நன்றி: Wikipedia)



என் கணவருக்கும் கத்தரிக்காய்க்கும் அப்படி என்ன பூர்வ ஜென்ம பந்தமோ தெரியவில்லை. கத்தரிக்காய் என்றாலே என் கணவர் அப்படியே உருகிவிடுவார்.
கல்யாணமான புதிதில் இப்படி கத்தரிக்காய் மீது பைத்தியமாக இருந்ததில்லை. எல்லாமே என் சமையல் கைராசி என்று வைத்துக் கொள்ளுங்கள். அட! நம்புங்கப்பா.
காய் கறி வாங்கி வரச் சொன்னால் கண்டிப்பாக கத்தரிக்காய் இருக்கும். அதுவும் கிலோ கணக்கில். அதை வைச்சு என்ன செய்வது என்று இரவு பகலாக தூங்காமல் யோசித்து எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.

கத்தரிக்காயில் வதக்கல் கறி, பொரியல், பால்கறி, சம்பல், வறை இப்படி எனக்குத் தெரிந்த ரெசிப்பிகள் எல்லாமே செய்தாலும் என் கணவருக்கு அலுக்கவே அலுக்காது. எண்ணெயில் பொரித்து வைக்கும் வதக்கல் கறி நன்றாக இருந்தாலும் என் கணவருக்கு அது பெரிதாக நாட்டம் இல்லை. கத்தரிக்காயின் சத்துக்கள் எல்லாமே செத்துப் போய்விடும் என்று ஒரே புகார் தான். பொரியலும் அப்படியே.

கத்தரிக்காய் இருந்தால் கண்டிப்பாக வாழைக்காய் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் எழுதப்படாத விதி. எனக்கும் அதே. என் கணவருக்கு இந்த விதி அடிக்கடி மறந்து போய் விடும். கத்தரிக்காயும், பூசணிக்காயும் வாங்கி வந்து....ம்ம்ம் எழுதவே கடுப்பா வருது.
குரோசரி லிஸ்டில் கத்தரிக்காய் வேண்டாம் என்று தலைப்பு போட்ட பின்னர் தான் தேவையான பொருட்களை கீழே எழுதுவேன். அப்படியும் ஒரு விதமான அதிசயம் நடந்துவிடவில்லை. மீண்டும் கத்தரிக்காய்கள்.

பொறுத்தது போது பொங்கியெழு என்று என் மனம் சொன்னது. என்ன செய்தாய் என்கிறீங்களா? நானே குரோசரி வேலைகளை செய்து கொள்வது என்று முடிவு செய்தேன். கடையில் கத்தரிக்காய்களைக் கண்டாலே திரும்பிக் கூட பார்க்காமல் கடந்து போய் விடுவேன்.

ஒரு மாசம் போல என் கணவரும் ஆகா விட்டது தொல்லை என்று இருந்தார். ஆனால், கத்தரிக்காய் இல்லாமல் வாழ்க்கை வெறுத்துப் போனது போல இருந்தார். அவர் மட்டும் கத்தரிக்காய் வாங்க கடைக்குப் போய் வந்தார். மீண்டும் கத்தரிக்காய்... கத்தரிக்காய்...

என் கணவரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டேன். இனிமேல் கத்தரிக்காய் வாங்கினால் நான் சமைக்கவே மாட்டேன் என்பதை மிகவும் தெளிவாக, பொறுமையாக சொன்னேன். காது குடுத்துக் கேட்டவர் சரி அப்படியே ஆகட்டும் என்றார்.

கொஞ்ச நாட்கள் மனம் திருந்தி இருந்தவர் அன்றொரு நாள் கடைக்குப் போய் வந்தார். அவர் கடைக்குப் போன விபரம் எனக்குத் தெரியாது.
கடையால் வந்து, அவரே நல்ல பிள்ளையாக பொருட்களை எல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்தார்.
அடுத்த நாள் சமையல் செய்யும் போது மகளிடம் கறிவேப்பிலை எடுத்து தரச் சொன்னேன். ஃப்ரிட்ஜ் யை திறந்து கறிவேப்பிலை எடுக்கப் போன மகள் சொன்னா, " அம்மா, இங்கே பாருங்க அப்பா கத்தரிக்காய் வாங்கி வந்திருக்கிறார்."

உள்ளே பெட்டியில் குறைந்தது ஒரு கிலோ கத்தரிக்காய்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. என் கணவரின் இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Monday, August 30, 2010

என் உயிர்த் தோழி

அகிலா வெளிநாடு வந்து 4 மாதங்களே இருக்கும். அவளுக்கு வெளிநாட்டில் எல்லாமே புதுமையாக, வெறுமையாக இருப்பது போன்ற உணர்வு உண்டானது. எல்லோரும் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கையில் காஃபி, டீ என்று எதையாவது குடித்தபடி, அல்லது எதையாவது சாப்பிட்டபடி பஸ்களிலும், ட்ரெயினிலும் மக்கள் கூட்டம். ஏன் இவர்களுக்கு வீட்டில் இருந்து சாப்பிட நேரம் கிடைப்பதில்லையா என்று நினைத்துக் கொள்வாள்.
அகிலாவின் அண்ணன் வேலைக்கு சென்று விட அம்மாவும், அப்பாவும், இவளுடன் சேர்ந்து ரோட்டை வேடிக்கை பார்ப்பார்கள். அடுக்கு மாடி குடியிருப்பின் 20வது தளத்தில் இருந்து ரோட்டை பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான்கு மாதங்கள் ரோட்டை வேடிக்கை பார்த்துக் களைத்த பின் பக்கத்தில் இருந்த மால் போய் வர எண்ணினார்கள் மூவரும்.
மால் இன்னும் பிரமிப்பாக இருந்தது. ஏதோ ஒரு துணிக்கடையின் வாசலில் நின்ற போது யாரோ "அகிலா" என்று கூப்பிடுவது கேட்டது. யாராக இருக்கும் என்று யோசனை ஓடியது. திரும்பி பார்த்தாள் அங்கே ஒரு பெண் சிரித்தபடி நின்றாள்.
" என்னைத் தெரியவில்லையா? நான் தான் சுபா", என்றாள் சுபா.
அகிலா கொஞ்ச நேரம் தடுமாறி பிறகு அடையாளம் கண்டு கொண்டாள்.

ஊரில் இவளுடன் படித்தவள். இவளின் உயிர் தோழி. ஆளே மாறியிருந்தாள். மேக்கப், ஆடைகள் எல்லாமே அவளின் வசதியை சொல்லாமல் சொல்லியது. அகிலாக்கு அவளின் பக்கத்தி நிற்க கூச்சமாக இருந்தது. ஆனால், சுபா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவளின் கைகளைப் பற்றிக் கொண்டாள். ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச் சென்றாள். அகிலாவின் பெற்றோருக்கு சுபாவை மிகவும் பிடித்துக் கொண்டது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரட்டை தொடர்ந்தது. இறுதியில் பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள். போகும் போது சுபா மறக்காமல் அவளின் செல் நம்பரை குடுத்துச் சென்றாள்.
இந்த சம்பவத்தின் பிறகு அகிலாவிற்கு சுபா தான் எல்லாமும் ஆகிப் போனாள். சுபாவின் காரில் வாரத்தில் ஒரு நாள் மால் போய் வருவாள் அகிலா. அவளுடன் போனில் அரட்டைக் கச்சேரி அடிக்கடி நடக்கும். சுபா அடிக்கடி அகிலாவின் வீட்டிற்கு வந்து போவாள்.
சுபா வரும் போதெல்லாம் நல்ல நறுமணம் வீசும். அவள் போன பின்னரும் அந்த மணம் வீட்டிலேயே தங்கிவிடும். இருவரும் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தபடி பேசுவார்கள். அகிலா நீண்ட தயக்கத்தின் பிறகு ஒரு நாள் கேட்டே விட்டாள்.
" சுபா, நீ என்ன வகையான வாசனைத் திரவியம் பாவிப்பாய்?", என்றாள்.
" ஓ! அதுவா. கொஞ்சம் பொறு", என்றுவிட்டு கைப்பையை குடைந்து ஒரு சிறிய குப்பியை எடுத்து நீட்டினாள்.
"விலை அதிகமில்லை. வெறும் 40 டாலர்கள் தான்", என்றாள் சுபா.
40 டாலர்கள் சுபாவிற்கு அதிகம் இல்லாமம் இருக்கலாம். ஆனால், அகிலாவிற்கு அது பெரிய, நிறையப் பணம். அவ்வளவு பணம் அண்ணன் தரவே மாட்டான்.
" ம்ம்..நல்லா இருக்கு. உள்ளே வை", என்று சொன்னாள்.


சுபாவும் பதில் சொல்லாமல் குப்பியை உள்ளே வைத்துக் கொண்டாள்.
மறுநாள் ஒரு சிறு அட்டைப் பெட்டி கொண்டு வந்து கொடுத்தாள் சுபா. அழகான வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது.
" இது என்னடி?" , என்றாள் அகிலா.
" உனக்குத்தான். திறந்து பாரேன்", இது சுபா.
உள்ளே அழகிய சென்ட் பாட்டில். சுபா பயன்படுத்தும் அதே ப்ரான்ட்.
அகிலா பிரமிப்புடன் பார்த்தாள். " இது எனக்கு வேண்டாம்", என்று மறுத்தாள்.
ஆனால், சுபா எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போய் விட்டாள்.
அகிலா அடிக்கடி அந்த குப்பியை எடுத்து, ஆசையுடன் வருடிக் கொடுப்பாள். எங்காவது செல்லும் போது ஒரு துளி போட்டுக் கொள்வாள். மிகவும் ரம்மியமான நறுமணம் அறை எங்கும் வியாப்பித்து நிற்கும்.

கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை தொடர்ந்த இவர்களின் நட்பு சுபாவின் திருமணத்தோடு ஒரு முடிவிற்கு வந்தது. அகிலா பெற்றோருடன் திருமணத்திற்குப் போனாள். நல்ல ஆடம்பரமாகவே திருமணம் நடந்தேறியது. மாப்பிள்ளை நல்ல வசதியான குடும்பம் என்று சொன்னார்கள். காதல் திருமணம்.
திருமணத்தின் பின்னர் அகிலா சுபாவை சந்திப்பது அறவே நின்று விட்டது. செல்போனில் அழைக்கவும் சங்கடமாக இருந்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஓடிவிட்டன. அகிலா சுபா கொடுத்த வாசனைத் திரவியத்தினை அடிக்கடி எடுத்து முகர்ந்து பார்த்துக் கொள்வாள். சுபாவே நேரில் வந்து நிற்பது போன்ற ஒரு பிரமை ஏற்படும்.
ஒருநாள் தமிழ்நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தவளின் கண்களில் அந்த மரண அறிவித்தல் செய்தி விழுந்தது.
சுபா போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தாள். கீழே அகால மரணம் என்று ஒரு வரிச் செய்தி.
அந்த நாளிதழில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டாள்.
சுபா விபத்தில்... .... என்ற செய்தி மட்டுமே காதுகளில் விழுந்தது. அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாமல் தொலைபேசியை வைத்து விட்டாள்.

பிரமை பிடித்தவள் போல் இருந்தாள் அகிலா. நம்பவும் முடியவில்லை. சுபாவின் தொலைபேசி எண்ணை டயல் செய்தாள். பதில் வரவில்லை.
சுபாவின் முகத்தை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால், போக விருப்பம் வரவில்லை. அதோடு கூட்டிச் செல்லவும் யாரும் இல்லை. பஸ்ஸிலும், ட்ரெயினிலும் போய் பழக்கம் இல்லை.

அழுதழுது கண்ணீர் வற்றிப் போனது. அழுத களைப்பில் தூங்கிப்போனாள். ஏதோ ஒரு நறுமணம் வந்து நாசியினைத் தாக்க விழிப்பு வந்தது. இது சுபா பயன்படுத்தும் வாசனைத் திரவியம் அல்லவா? அவள் வந்து விட்டாளா? என்று கண்கள் பரபரவென சுபாவைத் தேடின.
படுக்கையிலிருந்து எழுந்து ஓடினாள். ஹாலில் உறவினர் பெண்ணுடன் அம்மா பேசிக் கொண்டிருந்தார்.

" சுபா வரவில்லையா? ", என்று கேட்க நினைத்தவள் எதுவுமே கேட்காமல் மற்ற அறைக்கு ஓடினாள்.
அங்கே உறவினர் பெண்ணின் குட்டி வாண்டு வாசனைத் திரவிய குப்பியை திறந்து விளையாடிக் கொண்டிருந்தது. கோபத்துடன் அதைப் பறித்துக் கொண்டாள். குழந்தை அழ ஆரம்பித்தது. அதன் அம்மா வந்து தூக்கிக் கொண்டாள்.
விடுவிடுவென பால்கனி நோக்கி போனாள். வாசனைத் திரவிய பாட்டிலை 20வது தளத்திலிருந்து கீழே வீசியெறிந்தாள். கண்களில் கண்ணீர் மறைக்க, குப்பி கீழே விழுவதைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.