Friday, December 24, 2010

நானும் செல்போனும்!

செல்போன் - ஊரில், உலகத்தில் இது இல்லாமல் யாரையும் காண்பது அரிதிலும் அரிது. காரில், பஸ்ஸில், நடந்து செல்கிறவர்களின் கைகளில், காதுகளில் இது ஒட்டியபடியே இருக்கும். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை?
சமீபத்தில் நாங்கள் இருந்த மாநிலத்தில் கார், பஸ், ட்ரெயின் ஓட்டுபவர்கள் செல் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக டெக்ஸ்ட் ( text ) மெஸேஜ் அனுப்பக் கூடாது என்பது விதி. மக்கள் உடனே ஓடிப்போய் நீலப்பல்லு ( blue tooth ) வாங்கி, அதை தயாரிப்பவன் நெஞ்சில் பால் வார்த்தார்களாம்.

எனக்கு இந்த செல்போன் மட்டுமல்ல வேறு எந்த பொருட்களிலும் பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. அமெரிக்கா வந்து பல வருடங்களின் பின்னரே செல் போன் எனக்கென்று சொந்தமாக கணவரின் வற்புறுத்தலின் பின்னர் வாங்கிக் கொண்டேன். முதலில் ப்ரீபெய்ட் ( pre paid )போன் வாங்கினேன். ஆனால், அதை பாவிப்பதே குறைவு. இப்படித் தண்டமாக எதற்கு பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன்.

ஒரு முறை என் மகனின் பள்ளியில் என் செல் நம்பர் கேட்டார்கள். எனக்கு என் நம்பர் தெரியவில்லை என்ற உண்மை அப்போது தான் விளங்கியது.
அடடா! நம்பரை மனப்பாடம் செய்து வைக்கவில்லையே என்று முழித்தேன்.
அடி! அசட்டுப் பெண்ணே என்பது போல பார்த்தார் அங்கு வேலை செய்த பெண்மணி.
என்னைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட என் நம்பர் தலைகீழாக, தலை மேலாக சொல்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் பக்கத்தில் நின்ற டீன் ஏஜ் பெண்.

இருங்க வரேன் - என்று சொல்லி விட்டு, என் கைப் பையினைக் குடைந்து போனை வெளியே எடுத்தேன்.
போன் உயிரை விட்டிருந்தது.
அவசரமாக கணவரின் செல் நம்பரை சொல்லி, சமாளித்துவிட்டு வீடு வந்தேன்.
வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் நம்பரை எழுதி வைத்து, போகும் போது, வரும் போது நம்பரை மனப்பாடம் செய்தேன்.
முதல் மூன்று நம்பர்கள் மட்டுமே மனப்பாடம் ஆகியது. இறுதி 4 நம்பர்கள் கொஞ்ச நேரம் உயிரை வாங்கிய பின்னர் நினைவில் வந்தது.
இப்ப தூக்கத்தில், விழித்து இருக்கும் போது யார் கேட்டாலும் நம்பர் தெரியும்.
ஆனால், யாருக்கும் என் நம்பரைக் குடுப்பதில்லை.

நம்பர் குடுக்காமல் இருப்பதன் காரணம்
சோம்பேறித்தனமே முதல் காரணம் என்று நினைக்கிறேன். செல்போனில்,
1. என்னத்தை பேசுவது?
2. அதை என் கைப்பையில் குடைந்து எடுக்க வேண்டும்
3. அது உயிரை விடும் தருணங்களில் மறக்காமல் அதன் வயரை செருகி உயிர் கொடுக்க வேண்டும்

இப்படி சில காரணங்களினால் நான் பெரும்பாலும் செல்போனை சுவிட்ச் ஃஆப் பண்ணி வைத்துவிடுவேன்.

சமீபத்தில் என் உறவினர் பெண் ஆப்பிள் ஐ போனை வைத்து பெருமை பேசிக் கொண்டே இருந்தார்.
இது என்னப்பா? என்று நான் கேட்டேன்.
இது தெரியாதா? இது தான்... இங்கே பாருப்பா ஸ்கிரீனில் எல்லாமே தானாகவே நகரும். விரலை வைச்சுப் பாரு...

சரி! கிடக்கட்டும். டீ குடிக்கிறியா? என்று கேட்ட என்னைக் கடுப்புடன் பார்த்து விட்டு, போனை கைப்பையில் வைத்துக் கொண்டார்.

மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் எனக்கும் வேணும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வந்ததில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால் இப்படி இருக்கிறேனோ தெரியவில்லை. அல்லாவிட்டால் இதெல்லாம் வைத்திருக்கும் அளவிற்கு என் தகுதியை நான் இன்னும் உயர்த்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

19 comments:

 1. //மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் எனக்கும் வேணும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வந்ததில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால் இப்படி இருக்கிறேனோ தெரியவில்லை. அல்லாவிட்டால் இதெல்லாம் வைத்திருக்கும் அளவிற்கு என் தகுதியை நான் இன்னும் உயர்த்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.//

  ரொம்ப யதார்த்தமாக சொல்லியிருக்கீங்க....
  இருந்தாலும் US ல இருந்துகிட்டு நீங்க இப்படி இருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறது.

  பகிர்வுக்கு நன்றிங்க

  ReplyDelete
 2. அசத்துறீங்க
  அது இருந்தாலும் தொல்லை இல்லாவிட்டாலும் தொல்லை

  ReplyDelete
 3. என்னது? ஐ-போன் கிடக்கட்டும்,டீ குடிக்கிறாயா?ன்னு கேட்டீங்களா? சூப்பர் போங்க! :)

  எனக்கும் இந்த எலக்ட்ரானிக் ஐட்டங்கள் மீது எப்பவுமே மோகம் இருந்ததில்ல!

  ReplyDelete
 4. மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் எனக்கும் வேணும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வந்ததில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால் இப்படி இருக்கிறேனோ தெரியவில்லை. ///

  மிக சரியாய் சொல்லி இருக்கீங்க.சூழ்நிலை உணர்ந்தவர்கள்
  புரிந்துகொள்வார்கள் --அலைபேசி இதை அதிகம் பாவிக்காமல் இருந்தால் உடலுக்கும் நல்லது

  ReplyDelete
 5. மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் எனக்கும் வேணும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வந்ததில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால் இப்படி இருக்கிறேனோ தெரியவில்லை// வானதி இது உங்கள் நல்ல சிந்தனையைக்காட்டுகின்றது.//இதெல்லாம் வைத்திருக்கும் அளவிற்கு என் தகுதியை நான் இன்னும் உயர்த்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.
  // இது உங்களிடமிருக்கும் பணிவைக்காட்டுகின்றது.பாராட்டுக்கள் வானதி

  ReplyDelete
 6. அதே தான் வாணி...

  ஒரு இடத்துல இருந்து தொலையாது. வச்சா வச்ச இடம் மறந்து போகும். சின்னதா இருக்குறதுனால தேடுறதும் கஸ்ட்டம். ஷாப்பிங் போனா கேன்பேக்குலையே வைக்கிறதுனால எல்லா காலையும் மிஸ் பண்ணிடுவேன். இதெல்லாம் தேவையான்னு தான் மொபைல் யூஸ் பன்றதே இல்ல ;(

  ReplyDelete
 7. நல்ல பதிவு வான்ஸ்!
  செல்போன் எங்கயாவது இருக்கும் போது அருமை தெரியாது... ஆனா ஒரே ஒரு நாள் என்னை ட்ரெயின் ஸ்டேஷனில் பிக்கப் செய்யுங்க என சொன்னால் அன்னைக்கு பார்த்து அதுக்கு உயிர் இருக்காது.. அவசரமா பிளைட் லேட் என போன் செய்யப்போனால் போனே போயிருக்கும் :) நம்ம நேரம் அப்படி.. இப்பவுமே வீட்டில இருக்க வீட்டு போன் செல்போன் ரெண்டுமே வேலை செய்யுது :(

  ReplyDelete
 8. இது எனக்கு புடிச்சிருக்கு. நானும் இந்த செல்போன் தொல்லையிலிருந்து விடுபடணும் என்று இருக்கிறேன் இப்போது முடியாத முடிவாகிறது. நல்லா இருக்கு வானதி பதிவு

  ReplyDelete
 9. வான்ஸ் :))

  நான் அப்பிடியே நேர் எதிர்.. முதன் முதலில் வாங்கிய பொழுதில் செல்போன் மிகவும் பிடித்ததாக இருந்தது.. கல்லூரி இறுதி ஆண்டில் வாங்கினேன்.. விடுதியில் இருந்ததால் பெரிய நன்மை கொடுத்தது.. நிறைய குறும்புகள் செய்தோம் அதை வைத்து.. இப்பொழுது சுத்தமாக ஈடுபாடு இல்லை.. நண்பர்கள் மட்டும் வீட்டினருடன் பேசும் தேவைக்கு மட்டுமே..

  நீங்க செல்போன் எண் நினைவில் வைக்க திணறியதைப் போல நான் இந்த எஸ் எஸ் என் க்கு திணறியிருக்கிறேன்.. அப்போதெல்லாம் ஒரு ஜடத்தைப் பார்ப்பது போலத் தான் என்னையும் பார்ப்பார்கள் :)

  ReplyDelete
 10. இருந்தாலும் தொல்லை இல்லாவிட்டாலும் தொல்லை.

  ReplyDelete
 11. உங்களுக்கு "அவார்ட்" கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!! http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

  ReplyDelete
 12. நீங்க சொன்னது எல்லாமே உண்மை வானதி. குப்பை
  பொறுக்கரவால்லேந்து எல்லார்கையிலும் செல் பாக்கும்
  போது என்ன இது அசட்டுத்தனம்னு தான் தோணுது.

  ReplyDelete
 13. சரியாச் சொன்னீங்க. ஆனா பயன்படுத்த துவங்கியபின் உங்களால் தவிர்க்க முடியாது.

  ReplyDelete
 14. உங்களுக்கு தேவை இல்லாததால் அதன் பயன் தெரியவில்லை அவ்வளவு தான்..
  //முதல் மூன்று நம்பர்கள் மட்டுமே மனப்பாடம் ஆகியது. இறுதி 4 நம்பர்கள் கொஞ்ச நேரம் உயிரை வாங்கிய பின்னர் நினைவில் வந்தது.//
  ரைட்டு.. இரண்டு வருடங்களுக்கு முன்பு 20 - 25 நண்பர்களின் எண்களை எப்போதும் கேட்டாலும் ( "செல்"லை பார்க்காமல் ) சொல்வேன்.
  இப்போ அது முடியல ஒன்லி 5 தான் ;)

  ReplyDelete
 15. இருந்தாலும் தொல்லை இல்லாவிட்டாலும் தொல்லை

  repeat

  ReplyDelete
 16. வானதி நானும் கிட்டதட்ட உங்களை மாதிரியே தான்.பத்து வருடமாக பேருக்கு மொபைல் வைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 17. ஸேம் பிஞ்ச் வானதி!! ஒவ்வொரு வரியும் எனக்கும் ஒத்துப் போகும்!! இந்த எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள் மேல் வெறியோடு அலைபவர்களைக் கண்டால் எனக்கு வெறி வரும்!! எதுவுமே தேவைக்கு இருந்தால் நலம். செல்ஃபோனும் அப்படித்தான்.

  ReplyDelete
 18. மாணவன் அவர்களின் கம்மேன்ட்டை தான் நானும் சொல்ல விரும்புறேன்..நீங்க ரொம்ப சிம்பிள் வானதி...நல்ல பண்பு..!! ஹாப்பி நியூ இயர் வாணி..:))

  ReplyDelete
 19. இப்போது செல்ஃபோன் வைத்திருப்பது ஃபேஷன் மாதிரிதான் ..சிலருக்கு அவசியமே இல்லை. பெருமைக்காகவே வைத்திருக்கிறார்கள்..
  அழகா சொல்லி இருக்கீங்க :-)

  ஐ போனை பாத்துட்டு டீ குடிக்கிறியான்னு கேட்டது கொஞ்சம் ஓவர்தான் ...பாவம் அவங்க அப்புறம் டீ குடிச்சாங்களான்னு சொல்லவே இல்லையே... :-)

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!