Thursday, May 3, 2012

படை படுக்கட்டும்

என் அம்மாச்சி சமையலில் ஒரு புலி. அவர் செய்யாத சாப்பாடு வகைகள் இல்லை. கேக், பாட்டீஸ் தொடக்கம் உள்ளூர் சாப்பாடுகள் வரை எல்லாமே நல்ல சுவையாக செய்வார். என் அமாச்சிக்கு என் அம்மா உட்பட 6 குழந்தைகள். அவர் ஏதாவது சாப்பாடுகள் செய்வது எனில் இரவு தான் செய்வார். எனக்கு ஒரே மர்மமாக இருக்கும். எதுக்கு இரவு செய்கிறார் என்று. ஒரு நாள் சொன்னார், ஓ! அதுவா. இந்தப் படை எல்லாம் படுத்த பிறகு தான் செய்வேன், என்றார்.
ஏன்?, இது நான்.
என் அம்மாச்சி பதில் சொல்லவில்லை.
உள்ளூர் சாப்பாடு வகைகள் செய்வது எனில் பகலிலும், கேக், லட்டு, அல்வா ஆகியவை செய்யும் போது இரவிலும் செய்வார்.

இந்தப் பழக்கம் என் அம்மா, அவரின் சகோதரர்கள், பிறகு நாங்கள் வளர்ந்த பிறகும் தொடர்ந்தது. என் அம்மாச்சி அல்வா செய்வது எனில் வீட்டில் போர்க்களம் போவது போல அப்படி ஒரு ஆரவாரம். மாவினை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் தெளிய வைத்து, மாவினை பிசைந்து கழுவி, அதில் வரும் தண்ணீரை எல்லாம் சேமித்து... இது ஒரு பெரிய வேலை. ரகசியமாக நடக்கும். ஆனால், நாங்கள் எல்லோரும் சூப்பராக மோப்பம் பிடித்துவிடுவோம்.
இன்று இரவு அல்வா செய்யப் போகிறார்கள், என்று எங்கள் கஸின்ஸ் எல்லோருக்கும் தகவல் போய் விடும். அவர்களும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
ஆனால் முந்திரிப்பருப்பு, வற்றல் என்று எதையும் கண்ணில் காட்டவே மாட்டார்கள். நாங்கள் முற்றத்தில் அல்வா கிண்டும் இடத்திற்கு பக்கத்தில் பாய் விரித்து, தலையணை போட்டு, எதற்கும் ரெடியாகவே இருப்போம்.
நித்திரை தூங்கி விழுபவர்களையும் சத்தம் போட்டு எழுப்பி விடுவோம்.


இந்தக் கூத்து எல்லாமே ஒரு 12 மணி வரை தான் செய்ய முடியும். அதன் பின்னர் பாதி தூக்கம், பாதி முழிப்பு என்று ஒரு நிலை வரும்.
அப்ப தான் என் அம்மாச்சி முந்திரிப்பருப்பு, வற்றல் இரண்டையும் நெய்யில் வறுத்து வைப்பார். கைக்கெட்டும் தூரத்தில் வைத்தாலும் போய் எடுக்க முடியாதபடி தூக்கம் சுழற்றி அடிக்கும். இதை சாப்பிடத் தானே இப்படி ஆளாய் பறந்தோம் என்பது மறந்து போயிருக்கும்.  அடுத்த நாள் விடிந்தெழுந்து பார்க்கும் போது அழகிய பச்சை அல்லது சிவப்பு நிறத்தில், முந்திரி தூவப்பட்ட அல்வா தட்டில் இருக்கும். ஆனால், நாங்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
படை பறந்திச்சு. ஆனால் இப்ப யாரும் தேடுவார் இல்லாமல் இருக்கே, என்று அம்மாச்சி வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு அல்வா கொடுப்பார்.


என் அப்பாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. பிள்ளைகளுக்கு தானே செய்கிறோம். பகலில் செய்தா என்னவாம், என்று குறைபட்டுக் கொள்வார்.
இவர் ஈஸியா சொல்லிட்டுப் போயிடுவார். நான் இந்தப் படையோடு படும் பாடு... என்று அம்மாச்சி முணுமுணுப்பார்.
என் அம்மா கேக் செய்ய ஆரம்பித்த போது என் அப்பாவின் ஆணைப்படி பகலில் செய்யத் தொடங்கினார்.

ஆனால் பாருங்கள் அல்வா செய்வது எனில் முந்திரிப் பருப்பு, வற்றல் இரண்டுக்கு மட்டுமே பறப்போம். கேக் செய்வது எனில் எவ்வளவு பொருட்களுக்கு பறக்க வேண்டும்... பட்டர், சீனி அடிக்கும் போது அதை அள்ளிச் சாப்பிடுவது ஒரு தனி சுகம். பின்னர் மா சேர்த்து அடிக்கும் போது, அடித்த பின்னர் இப்படியே தொடரும். என் அம்மா ஒரு பெரிய சட்டியில் பட்டர், சீனி சேர்த்து மத்தினால் தான் அடிப்பார். சட்டி நகராமல் பிடிக்க ஒரு ஆள் வேணும். அந்த பொறுப்பான பதவி வகிக்க பெரிய சண்டையே நடக்கும். ஏனெனில் சட்டியை பிடிப்பவர்  எதேச்சையாக கைகளை மேல் விளிம்பு வரை கொண்டு சென்று, விபத்து போல கேக் கலவையினை அடிக்கடி விரல்களினால் தொட்டு நக்க சந்தர்ப்பம் அதிகம் அல்லவா. ஆனால், என் அம்மா மத்தினை சுழற்றும் வேகத்துக்கு ஏற்றாப்போல சட்டியை நகராமல் பிடிக்க வேண்டும். ஒழுங்கா பிடிக்காமல் இருந்தால் அந்த வேலை வேறு யாருக்காவது கொடுக்கப்படும்.


அதன் பிறகு முந்திரிப் பருப்பு, வற்றலுக்கு பறந்து, கேக் கலவையினை ட்ரேயில் ஊற்றிய பிறகு சட்டி, மத்து இவற்றுக்கு ஒரு பெரிய சண்டையே நடக்கும். மத்து ஒருவருக்கு கொடுக்கப்படும், சட்டியில் கோடு போட்டு ஒரு பகுதி ஒருவருக்கு, மற்றைய  பகுதி இன்னொருவருக்கு என்று கொடுக்கப்படும்.
நான் அப்பவே சொன்னேன் இந்தப் படை படுத்த பிறகு செய்யலாம் என்று நீ தான் கேட்கவில்லை, என்று அம்மாச்சி என் அம்மாவிடம் குறைபட்டுக் கொள்வார்.
பிறகு நாட்டுப் பிரச்சினையால் அண்ணன்கள் ஒவ்வொரு பக்கம், நாங்கள் ஒரு பக்கம் என்று பிரிந்து போனோம். கேக் செய்வது எல்லாம் அடியோடு நின்று போனது.
இப்ப நினைத்தவுடன் கேக் செய்ய முடிகிறது. ஆனால், என் பிள்ளைகள் எதற்கும் பறப்பதில்லை. என்ன இப்படி இருக்கிறார்கள் என்று நினைப்பேன். நாங்கள் சட்டி, மத்து இப்படி எல்லாவற்றுக்கும் சண்டை பிடித்த கதைகள் சொன்னால் சிரித்துக் கொள்வார்கள்.
இப்ப நினைத்தால் சிரிப்பு வந்தாலும் திரும்ப அந்தப் பருவம் வராதா என்று அடிக்கடி ஏங்குவதுண்டு. இப்பவும் பழைய நினைவில் சட்டியை வழித்து ஒரு டீஸ்பூன் சாப்பிட்டாலும் பிறகு ஏனோ மூட் வருவதில்லை. என் அம்மாச்சி சொல்வது போல " படை படுக்கட்டும் " என்ற வரி தான் இப்பெல்லாம் கேக் செய்யும் போது ஞாபகம் வரும்.



23 comments:

  1. Nostalgic memories...those days won't come back!

    ReplyDelete
  2. //இப்ப நினைத்தால் சிரிப்பு வந்தாலும் திரும்ப அந்தப் பருவம் வராதா என்று அடிக்கடி ஏங்குவதுண்டு. //




    அதெல்லாம் நினைத்தாலும் திரும்ப கிடைக்காத அனுபவங்கள் .
    என் கணவர் எப்பவும் இந்த கேக் கடைகிற மேட்டர் சொல்வார் .அவங்க குடும்பத்தில் .கடையும்போதே விரலை போடுவார்களாம் அவர் கூடபிறந்தவங்க {பத்து பேர்ப்பா !!!!!!!!!!!!!!!!!)
    என் பொண்ணு நேரெதிர் .இனிப்பே தொட மாட்டா .
    //அல்வா செய்வது எனில் முந்திரிப் பருப்பு, வற்றல்//
    வற்றல் ???????? raisins

    ReplyDelete
  3. வானதி !!!!!!!!! முகப்பில் அந்த கனேடிய வாத்துக்கள் ரெண்டும் சூப்பர் !!!!!!:)))

    ReplyDelete
  4. அக்கா நல்லா சொல்லி இருக்கீன்கள் ..........எங்க வீட்டிலும் நான் செய்வேன் ....எனக்கு பிடிச்சது செய்தங்கள் எண்டால் சமையலறை சுற்றி சுற்றி வருவேன் எண்டு சொல்லுவாங்க ...எங்க வீட்டில் நான் இல்லன்னா எனக்குப் பிடிச்ச எதையும் அவங்க செய்து சாப்பிட மாட்டார்கள் ...வீட்டு நியபகம வந்துடுச்சி உங்க பதிவு

    ReplyDelete
  5. உண்மை தான் மகி. இப்ப என் பிள்ளைகளும் என்னோடு சேர்ந்து சட்டிக்கு சண்டை போட்டால் எவ்வளவு சூப்பரா இருக்கும் என்று நினைச்சுப் பார்ப்பேன். அம்மா, நீங்களே தின்னுங்க என்று சொல்லிட்டு போயிடுதுங்க.

    ReplyDelete
  6. அஞ்சு, பத்துப் பேரும் தொட்டு நக்கினால் என்ன மிஞ்சும். என் அம்மா எங்கள் 3 பேரோடு ( என் பெரிய அண்ணா கொஞ்சம் டீசன்ஸி தெரிஞ்சவர் ) வாழ்க்கை வெறுத்துப் போய் தான் கேக் செய்து முடிப்பார்.
    வற்றல் - ரெய்சின் தான் அஞ்சு. ஊரில் இதெல்லாம் சேர்ப்பார்கள்.
    கனடிய வாத்து - எங்க கலைக்காக 2 வாங்கி விட்டிருக்கிறேன். நல்லா மேய்க்கட்டும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  7. கலையக்கோவ், வெல்கம். இப்ப நீங்க வீட்டில் இல்லையா?? என்னவோ ஒரே கொழப்பமா இருக்கே??? எல்லோர் வீட்டிலும் அப்படித் தான் போல. என் அம்மாவும் அடிக்கடி சொல்வார்கள். பிள்ளைகள் இல்லாமல் செய்ய மூட் வருவதில்லை என்று.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. ஆஹா...மலரும் நினைவுகளா.சூப்பர் ...:-))).

    எனக்கு மீன் ஃபிரை அது ஃபிரை ஆகும் போது மட்டுமே சாப்பிவேன். இதுக்காகவே நான் வரும் வெயிட் செய்வாங்க. வெளிநாடு வந்ததும் .... விட்டுப்போன வசந்தங்களில் சில :-( .

    ReplyDelete
  9. அவ்வ்வ்வ்வ்வ்வ் இது எங்கட அமெரிக்க அஞ்சா நெஞ்சத்தலைவி வான்ஸ்ஸோட புளொக்காஆஆஆஆஆஆஅ? ஆராவது என் டவுட்டக் கிளியர் பண்ணுங்கோ...:)) ஒரே பபபபச்சையா இருக்கே... இது வேற பச்சை..:)) எனக்குப் பயம்ம்ம்மாக்கிடக்கே:))

    ReplyDelete
  10. அன்றைய நாட்கள் மட்டுமல்ல.. இன்றைய நாளும் போனால் திரும்ப வரப்போவதில்லை, அதனால ஒவ்வொரு நாளையும் முடிந்தவரை மகிழ்ச்சியாக இனிமையாகக் கழிக்க முயல்வோம்......

    ஆமா மேலே இருப்பது எந்த நாட்டுக் கொக்குக் கப்பிள்ஸ்?:)))

    ReplyDelete
    Replies
    1. // கொக்குக் கப்பிள்ஸ்?:)))//

      கொக்கா ஆஆ அடங்கொக்க மக்காஆஆஆ :))

      Delete
    2. அதீஸ், கொக்கா??? அதான் அப்பவே சொன்னேன் கண்ணாடியை போடுங்கோ என்று.
      கிரி, well said. Keep it up. okay.

      Delete
  11. படை படுக்கட்டும் எங்க அம்மாச்சி கூட எப்படி சொல்லி கேட்டு இருக்கேன்
    எனக்கும் வீடு நியாபகம் அவ்வவ்

    தீபாவளி பலகாரம் எல்லாம் தெரியாமல் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே
    பலகாரம் செய்வார்கள்...

    ம் ஸ்வீட் மெமொரீஸ் வானதி அக்கா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. பெரிய பேச்சு வார்த்தை நடக்கும் எங்க வீட்டிலும். நாங்கெல்லாம் மோப்பம் பிடிச்சு கண்டு பிடிச்சிடுவோம்ல.

      Delete
  12. எனக்குப் பயம்ம்ம்மாக்கிடக்கே:))////no fear நோ நோ பியர் ....பூனைக்கே பயமா...
    தானே தலைவிக்கே பயமா

    ReplyDelete
  13. இளம் வயது அனுபவங்களை மிக சுவாரசியமாகத்
    தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் வானதி.

    ReplyDelete
  14. என்னமாய் ரசித்து அனுபவத்திருக்கின்றீர்கள்..அனுபவம் இனிமையாக உள்ளது

    ReplyDelete
  15. ஒவ்வொரு வீட்டிலும் இதுபோல ஒவ்வொரு மலரும் நினைவுகள் இருக்கும் போல இருக்கு. ஒருவரின் பதிவு படிக்கும் போது எல்லாருக்குமே அவரவர் வீட்டு நினைவுகளைத்தட்டி எழுப்புது.

    ReplyDelete
  16. மொதல்லே உங்க டெம்ப்ளேட் அண்ட் வாத்துஸ் சூப்பர் வான்ஸ்! பூச பயப்பட வெச்சிட்டீங்க பாருங்க வெல் டன்

    ReplyDelete
  17. அருமையான நினைவுகள் வான்ஸ். கண்டிப்பா நாமெல்லாம் வளர்ந்த நாட்கள் போல நம்ம புள்ளைங்களுக்கு கெடைக்காது. ஆனா பூஸ் சொன்னது போல ஒவ்வொரு நாளும் சந்தோஷமா இருக்க கத்துக்கணும்.

    நான் சின்ன வயதில் அசைவம் சாப்பிடும் காலத்தில் அம்மா எறா வறுவல் பண்ணுவாங்க. வறுவல பாத்திரத்தில் எடுத்து வெச்சிட்டு சமைச்ச சட்டியில் சாதம் கொஞ்சம் போட்டு பெரட்டி கொடுப்பாங்க பாருங்க. இதுக்கு நான் எங்க அக்கா & அப்பாவும் போட்டி போடுவோம். அந்த சுவைக்கும் அனுபவத்துக்கும் ஈடு இணையே இல்லே

    ReplyDelete
  18. அருமையான நினைவுகள் .........

    ReplyDelete
  19. ரொம்பவும் ரசித்து மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறீர்கள் வானதி!
    என்றைக்குமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள்தான் இளம் பருவத்து நினைவுகள்! அந்த சுகமும் மகிழ்ச்சியும் இனிமையும் திரும்ப என்றைக்குமே கிடைக்காது.

    ReplyDelete
  20. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!