Saturday, July 24, 2010

மைக்ரோவேவ்!

வருணும் அஞ்சலியும் கைகோர்த்தபடி நடந்தார்கள்.
" அஞ்சலி, இங்கு தான் நாங்கள் மைக்ரோவேவ் எடுத்தோம் ", என்றான் ஒரு வீட்டினை சுட்டிக்காட்டியபடி.

" அடப்பாவி! திருட்டுத் தொழிலும் நடந்திச்சா?", இது அஞ்சலி.

வருண் பதில் சொல்லாமல் சிரித்தபடி நடந்தான்.

" இதோ இங்கே தான் சோஃபா எடுத்தான் என் நண்பன் விஷ்வா ", என்றான் இன்னொரு வீட்டைக் காட்டி.

வருணின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

பள்ளி இறுதி ஆண்டில் மிகவும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தான். வடமெரிக்காவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. நிறைய பணம் செலவாகும் என்று தெரிந்தாலும் அவனுடைய கனவினை சிதைக்க விரும்பாமல் அந்த கல்லூரிக்கே செல்ல முடிவு செய்தான்.
படிப்பதற்கு லோனுக்கு விண்ணப்பம் அனுப்பினான். வந்த பணம் படிப்பிற்கும், தங்குமிடத்திற்கும் கொடுக்கவே சரியாக இருந்தது. வீட்டிலிருந்து கல்லூரிக்கு தினமும் சென்று வர முடியாது. அதோடு எப்பவும் பனி விழும் பகுதி அது. எனவே நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய குடியிருப்பில் வாடகைக்கு தங்கிக் கொண்டான். வீட்டில் அப்பாவின் வருமானத்தில் நான்கு ஜீவன்கள் உயிர் வாழ வேண்டும். இவனும் முடிந்த போது பணத்தை சிக்கனமாக சேமித்து வைத்து, அம்மாவிடம் கொடுப்பான்.

தங்கியிருந்த குடியிருப்பில் ஒரு ஹால், கிச்சன் அவ்வளவே. நண்பர்கள் வசதிக்கேற்ப மெத்தைகள் (கட்டில் அல்ல ) வைத்திருந்தார்கள். குளிரினை சமாளிப்பது தான் பெரும் அவஸ்தையாக இருந்தது. பற்கள் தந்தியடிக்கும். ஜாக்கெட், தொப்பி, கையுறைகள் அணிந்து கொண்டாலும் குளிர் ஊடுருவிச் சென்று நடுங்கவைக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒருவர் சமையலைக் கவனிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

" டேய்! எங்க வருணை சமையலில் அடிக்க ஆளே கிடையாது ", என்று நண்பர்கள் புகழாரம் சூட்டுவார்கள்.
இப்படி ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒரு இளிச்சவாயன் திறமையான சமையல்காரன் என்ற பட்டத்துடன் இருப்பான்.

வருணும் முகம் சுழிக்காமல் முடிந்தவரை சமையல் செய்வான். பரீட்சை நேரங்களில் சமையல் செய்ய நேரம் வராது. முன்பே சமையல் செய்து வைத்துக் கொள்வார்கள். கல்லூரி முடிந்து வந்ததும் பசியில் உயிர் போகும். எல்லாவற்றையும் எடுத்து சுடவைத்து, சாப்பிட நேரம் எடுக்கும்.
ஒரு நாள் நண்பன் சிவா சொன்னான், " வருண், ஒரு மைக்ரோவேவ் இருந்தா நல்லா இருக்குமில்லை ."

" டேய், இது ஆசையில்லை பேராசை", என்று சிரித்தார்கள் மற்றவர்கள்.

கல்லூரியின் பக்கத்தில் வசதியானவர்கள் குடியிருக்கும் வீடுகள் இருந்தன. அந்த வீடுகளை கடந்தே கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் வருண் கல்லூரியிலிருந்து வரும் போது ஒரு வீட்டின் முன் மைக்ரோவேவ் ஒன்று கிடந்ததைக் கண்டான். அடுத்த நாள் வரும் குப்பை லாரியில் அதைக் கொண்டு போய் விடுவார்கள். வருண் சுற்றும் முற்றும் பார்த்தான். மக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

பெரும்பாலும் மெத்தைகள், சோஃபாக்கள், பிற தளவாடங்கள் என்று எறிவதற்கு வைத்திருப்பார்கள். அந்த பொருட்கள் எல்லாமே வருணின் அறையில் இருப்பதை விட நல்ல தரமான பொருட்களாகவே தோன்றும். இருந்தாலும் ஏனோ ஒரு வித தயக்கத்தால் பார்த்தும் பார்க்காதது போல கடந்து சென்று விடுவான். ஆனால், இந்த நுண்ணலை அடுப்பை அவ்வாறு விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

கொஞ்ச நேரம் காத்திருந்தான். ஆனால், குளிரினால் விறைத்துப் போய் விடுவான் போலிருந்தது. அறைக்குப் போய் மற்ற நண்பர்களுக்கு தகவல் சொன்னான்.

" டேய் வருண், என்னடா சொல்ற? மைக்ரோவேவை பார்த்துட்டு சும்மா வந்தியா. பாவி. எந்த வீடுடா?? சொல்லு நான் இப்பவே போய் ...", இது சிவா.

" வீடு நம்பர் ஞாபகம் இல்லை. வாசலில் ரெட் கலரில் தபால் பெட்டி வைத்திருப்பார்களே அந்த வீடுடா. ", என்றான்.

" ஓ! அந்த சப்பை பிகர் ஒண்ணு இருக்குமே அந்த வீடா? ", என்று அடையாளம் கேட்டான் ஜீவா.

" தெரியலை", என்றான் வருண்.

" நீ வேஸ்டுடா. சரி நட. போய் பார்த்து வரலாம். ", என்று சொன்ன நண்பர்களை பின் தொடர்ந்தான் வருண்.


இருட்டும் வரை அங்கேயே சுற்றிக் கொண்டு நின்றார்கள். ஓரளவு இருட்டியதும் ஒடிப்போய் மைக்ரோவேவினை தூக்கிக் கொண்டார்கள். அறையில் கொண்டு போய் வைக்கும் வரை ஒரே டென்ஷன். யாராவது பார்த்திருப்பார்கள் என்பதை விட இந்தப் பொருள் வேலை செய்யுமா என்பதே டென்ஷனின் முதல் காரணம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல சிறப்பாகவே வேலை செய்தது.
அக்கம் பக்கம் இருந்த இவர்களின் தோழர்கள் வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.

" உங்களுக்கென்னடா நல்லா வசதியா இருக்கிறீங்க. ", என்று காது படவே பேசினார்கள்.

மைக்ரோவேவ் வந்த பிறகு சமையல், தேநீர், சுடுதண்ணீர் வைப்பது என்று எல்லாமே இலகுவாக செய்ய முடிந்தது.
கல்லூரிப் படிப்பு முடியும் நேரம் இந்த மைக்ரோவேவினை ஓசியில் வாங்க பெரும் போட்டி நிலவியது. வருணுக்கு கொடுக்கவே விருப்பம் இல்லை. இறுதியில் சீட்டுக் குலுக்கி ஒரு நபரை தேர்ந்தெடுத்தான். அந்த நபர் மைக்ரோவேவினை கொண்டு சென்றபின்னர் அந்த இடமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது போல தோன்றியது வருணுக்கு.

படித்து முடித்ததும் வேலை கிடைத்தது. நினைத்தால் ஒன்றுக்கு இரண்டாக மைக்ரோவேவ் வாங்குமளவிற்கு வசதி இருந்தாலும் அந்த பழைய மைக்ரோவேவ் போல வராது என்று எண்ணிக் கொண்டான்.

வருண் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு படித்த கல்லூரியினை சுற்றி காட்டினான்.
" இது தான் நான் குடியிருந்த இடம்", என்றான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை சுட்டியபடி.

" ஓ! அப்படியா ", என்றாள் அஞ்சலி.

அப்போது தட தடவென சில மாணவர்கள் இவர்களைக் கடந்து ஓடினார்கள்.

" வேகமா போகணும். அவனுங்க மைக்ரோவேவினை எடுப்பதற்கு முன்பு நாங்க முந்திடணும் ", என்றபடி மாணவர்கள் ஓடினார்கள்.
வருணும் ஏதோஒரு ஆர்வக் கோளாரினால் பின்னாடியே ஓடினான்.
ஒரு பிரிவினர் மைக்ரோவேவினை எடுத்துக் கொள்ள, மற்றப் பிரிவினர் மைக்ரோவேவ் கிடைக்காத சோகத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.


வருண் அவர்களின் அருகில் போனான்.

" தம்பிகளா! மைக்ரோவேவ் தானே வேணும்? வாருங்கள் நான் வாங்கித் தருகிறேன் ", என்று சொன்னவனை புரியாமல் பார்த்தபடி தயங்கி நின்றார்கள்.
" இல்லை.வேண்டாம் ", என்றார்கள்.
இவன் அவர்களின் ஒருவனின் கையில் பணத்தை திணித்து விட்டு, விடு விடுவென திரும்பி பாராமல் நடந்தான்.

" டேய்! ஏதோ லூஸா இருக்கும் போல. எங்களுக்கு மைக்ரோவேவ் வாங்க பணம் குடுக்கிறார்... ", மாணவர்களின் குரல்கள் காற்றில் தேய்ந்து மறைந்து காணாமல் போயின.
வருண் எதுவுமே காதில் விழாதவன் போல போய் காரில் ஏறிக் கொண்டான்.

மனம் நிறைவாக இருந்தது போல் தோன்றியது.

29 comments:

  1. கதை நல்லா இருக்குங்க.

    வட அமெரிக்காவுல மைக்ரோவேவ அடிக்கடி தூக்கி போற்றுவாங்களோ....

    ReplyDelete
  2. 'கதை' அருமை.

    எங்க ஊரிலும் இப்படி நமக்கு வேண்டாத பொருட்களை வீட்டு வாசலில் வைக்கும் பழக்கம் இருக்கு. யாருக்காவது பயனாகுமே!!!

    என் தோழி இன்னும் கொஞ்சம் முன்னேற்றம். ஆறு மாசம் ஒரு பொருள் பயன்படுத்தப்படாமல் வீட்டில் இருந்தால் அது இனி தேவையே இல்லையாம். ஒரு கார்ட்போர்டு கார்ட்டனில் வச்சு வெலியில் வச்சுருவாங்க.

    நான் அவ்வளவு தாராளமில்லை. ரெண்டு வருசம் பார்த்துட்டுத்தான் வெளியில் வைப்பேன்.

    ReplyDelete
  3. @கலா நேசன்
    அப்படி இல்ல, அவர்களுக்கு தேவை இல்லாத இருளை இவ்வாறு வெளியில் வைத்தால், அதை குப்பை கொண்டு செல்பவர்கள் கொண்டு சென்று அழித்து விடுவார்கள்.
    சரிதானே வாணி ???

    நல்ல கதை

    ReplyDelete
  4. அழகாக எழுதி இருக்கிறீர்கள் வாணி.

    ஒருவருக்கு உபயோகமில்லாத பொருள் இன்னொருவருக்குப் பயனாவது நல்ல விடயம் தானே. மீள்சுழற்சி, சுற்றாடலுக்கும் நல்லது.

    ReplyDelete
  5. கதை நல்ல இருந்தது. வருண் மாணவர்களுக்கு பணம் கொடுத்த விசயம் அருமை.

    ReplyDelete
  6. க‌தை ந‌ல்லா இருக்குங்க‌.... த‌ன‌க்கு உப‌யோக‌ம் இல்லாத‌ பொருள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உப‌யோக‌மாக‌ இருக்கும், ஆனால் அதை ம‌ற்ற‌வ‌ருக்கு கொடுக்க‌ வேண்டும் என்ற‌ ம‌ன‌ம் வேண்டும்.

    ReplyDelete
  7. //" ஓ! அந்த சப்பை பிகர் ஒண்ணு இருக்குமே அந்த வீடா? ", என்று அடையாளம் கேட்டான் ஜீவா.//


    பாத்தா கதை மாதிரி தெரியலியே...



    நல்லா இயல்பான நடையில் எழுதீருக்கீங்க...அருமையான கதை...!!

    ReplyDelete
  8. கதை நல்லாயிருக்கு..

    ReplyDelete
  9. ”கராஜ் ஷேல்”.... நன்றாக இருக்கு.

    மைக்ரோவேவ் வந்த பிறகு சமையல், தேநீர், சுடுதண்ணீர் வைப்பது என்று எல்லாமே இலகுவாக செய்ய முடிந்தது.
    //// அப்போ மைக்குரோவேவில்தான் குடும்பமே நடத்துகிறார்கள்....

    மானும் குட்டிகளும் அழகு, எடுத்த படமோ? சுட்ட படமோ?

    2 நாட்களுக்கு முன் ஹொல்வ் கிளப்புக்குப் பக்கமாகப் போனபோது, ஒரு மான் துள்ளித்துள்ளி குறுக்கே ஓடியது, படமெடுக்க முடியாமல் போய்விட்டது:(.

    ReplyDelete
  10. வட அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமா சொல்லிருக்கீங்க வானதி.நல்லாருக்கு!

    ReplyDelete
  11. நேத்து நான் போட்ட கமெண்ட்டையும் அந்தப் பசங்க சேர்த்து தூக்கிப்போயிட்டாங்களோ??

    ReplyDelete
  12. இயல்பான நடை கதை நல்லாயிருக்குவானதி

    உங்கள் வலைப்பூவின் இப்போதுள்ள போட்டோ அருமை வானதி

    ReplyDelete
  13. ம்ம் அடுத்த ஸ்டெப் வச்சுருக்கீங்க.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. கலாநேசன், அடிக்கடி அல்ல. பழசாப் போனால் அல்லது ரிப்பேரானால் தூக்கிப் போட்டு விடுவார்கள். ரிப்பேர் செய்வதை விட புதுசு வாங்குவது இலாபம்.
    வருகைக்கு மிக்க நன்றி.

    துளசி கோபால், வாங்க. நன்றி.
    நானும் தேவையில்லாத பொருள் எனில் தூக்கி கடாசி விட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.

    எல்கே, சரியாச் சொன்னீங்க.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  15. இமா, நன்றி.
    உண்மைதான். சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

    மான்கள் அழகு...... நன்றி.

    சௌந்தர், மிக்க நன்றி.

    நாடோடி, மிக்க நன்றி.
    உண்மைதான்.

    குமார், மிக்க நன்றி.
    மேனகா, மிக்க நன்றி.

    ReplyDelete
  16. ஜெய், என்ன சொல்றீங்க???? பார்த்த படம் மாதிரி இருக்கா?????
    ஐயோ! உங்கள் சந்தேகத்திற்கு அளவே இல்லையா!!!!
    இது கற்பனைக் கதையே தான்.
    மிக்க நன்றி.

    கராஜ் ஷேலா.... எங்கே அதீஸ்??
    இங்கு எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் மைக்ரோவேவில் சோறு சமைப்பார்கள்.
    கடவுளே! இது என் ஆத்துக்காரர் எடுத்த படம். இராமயணத்தில் வந்த மான்(கள் ) போல இருக்க, நான் என் ஆ.காரரிடம் கேட்க, அவர் இராமன் போல போய் (படத்தில்) பிடித்துக் கொண்டு வந்தார்.
    மான்கள் எப்போதும் புள்ளி மான்களை ( அட! என்னைச் சொன்னேன் ) கண்டால் நிற்குமாம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. 23 வருசமா மைக்ரோவேவில்தான் சோறு சமைக்கிறேன்.

    கராஜ் ஸேல் என்பது வறு. வேண்டாத பொருட்களைக் கொஞ்சூண்டு காசுக்குத் தள்ளி விடுவது.

    ReplyDelete
  18. மகி, மிக்க நன்றி.

    சந்தூ, அப்படியா?? இருங்க கேட்டு சொல்றேன்.
    மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.
    போட்டோ அருமை..... மிக்க நன்றி.

    வசந்த், மிக்க நன்றி.

    ReplyDelete
  19. * oops............

    வறு = x
    தட்டச்சுப்பிழை.

    வேறு என்று வாசிக்கவும்.

    ReplyDelete
  20. கதை மிக அருமை.யு.ஏ.யிலும் இப்படி கச்சடா பாக்ஸ் பக்கம் தேவையில்லாத நிறைய பொருட்கள் கழித்து வைத்திருப்பதை அடிக்கடி காணலாம்.கதைக்கருத்து மனதை தொட்டது.

    ReplyDelete
  21. நானும் இங்க நெறைய அப்படி தூக்கி போடுற பொருட்கள பாத்து இருக்கேன்... நல்ல கதை வாணி... சொன்ன விதம் இன்னும் கவிதை போல அழகா இருந்தது.. சூப்பர்

    ReplyDelete
  22. எங்கட வீட்டிலயும் மைக்ரோவேவிலதான் சோறு வேகுது. ரேஸோடுற ஆக்களுக்கும், குட்டிச் சமையலுக்கும் வெகு சுகம்.
    அது இல்லையெண்டால் கை உடைஞ்ச மாதிரி என்று ஒரு மலிவு விலை 'பாக் அப்' கூட இருக்கு. ;)

    ReplyDelete
  23. /மான்கள் எப்போதும் புள்ளி மான்களை ( அட! என்னைச் சொன்னேன் ) கண்டால் நிற்குமாம். /ஓஹோ,புள்ளிமானா நீங்க? அப்ப துள்ளி,துள்ளிதான் வருவீங்க அப்போ?? :)))))))))

    ReplyDelete
  24. //து என் ஆத்துக்காரர் எடுத்த படம். இராமயணத்தில் வந்த மான்(கள் ) போல இருக்க, நான் என் ஆ.காரரிடம் கேட்க, அவர் இராமன் போல போய் (படத்தில்) பிடித்துக் கொண்டு வந்தார்.
    மான்கள் எப்போதும் புள்ளி மான்களை ( அட! என்னைச் சொன்னேன் ) கண்டால் நிற்குமாம்.
    மிக்க நன்றி. ////

    ஜெய் கேகரதுக்க்கு முன்னாடி நான் கேக்கறேன்

    இதுவும் ராமாயண மான் மாதிரி பொய் மானா??

    ReplyDelete
  25. நல்ல கதை இரசித்தேன.

    ReplyDelete
  26. சூப்பர்ப்...இந்த கதையில் ஆவது படிக்கின்ற பசங்க...ஆனா நான் கண் கூடாக வேலை செய்யும் நபர்களும் இப்படி செய்வதினை பார்த்து இருக்கின்றேன்...என்னத சொல்ல...

    ReplyDelete
  27. நல்லகதை. திறமையான எழுத்து நடை.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!