Wednesday, June 2, 2010

இணைய நட்பு

எனக்கு இணைய தளம் மூலம் ஒரு நட்பு கிடைத்தது. அந்த நட்பு ஆணா, பெண்ணா என்ற விபரங்கள் வேண்டாம். அவரின் பெயர் மேகம் என்று வைத்துக்கொள்வோம். இந்த பெயர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் நீங்களே வேறு பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். என் பெயர் தான் உங்களுக்கு தெரியுமே. என் புராண காலப் பெயரைப் பார்த்ததும் மேகம் எனக்கு மெயில் அனுப்பினார். அதில் என் பெயரை புகழ்ந்து எழுதி இருந்தார். அதுவரை என் பெயரைக் கேட்டாலே வெறுப்பின் உச்சிக்குப் போன நான் மிகவும் மகிழ்ந்து போனேன். என் அப்பாவை மனதார பாராட்டினேன்.

மேகம் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் பெரும் பாலும் உலகப் பிரச்சினை பற்றியதாகவே இருக்கும். நானும் எனக்குத் தெரிந்த அல்லாவிட்டால் எங்காவது தகவல்கள் பொறுக்கி எடுத்து பதில் அனுப்புவேன். அவர் திருமணமானவரா என்று எனக்குத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததில்லை. அவரும் என்னைக் கேட்டதில்லை. எங்கள் நட்பு தொடங்கிய ஒரு வருடத்தின் பின்னர் தான் என் மண்டையில் சில கேள்விகள் தோன்றியது. அவரின் குடும்பம் பற்றிக் கேட்டேன். இரண்டு வளர்ந்த மகன்கள் இருப்பதாக எழுதினார். அவரின் வேலை பற்றி எப்போதும் ரகசியம் காத்தார். சில நேரங்களில் மறைமுகமாக சில விடயங்கள் எழுதுவார்.

இப்படியே நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இருந்த எங்கள் நட்பில் கமலால் விரிசல் வந்தது. அட! நம்ம நடிகர் கலம்ஹாசனே தான்.

மேகம் எப்போதும் ஏதாவது படங்கள் பார்த்தால் அது பற்றி எழுதுவார். அவர் படங்கள் பார்ப்பது குறைவு என்றாலும் நல்ல படங்கள் எனில் விரும்பி பார்ப்பாராம். நான் இருக்கும் இந்த நடுக்காட்டில் தமிழ் படங்கள் தியேட்டரில் போடுவது குறைவு. அப்படியே போட்டாலும் என் பிள்ளைகளோடு படம் பார்க்க போக எனக்கு விருப்பம் இல்லை. அவர்களை விட்டுட்டு போகவும் எண்ணுவதில்லை.

கமலின் தசாவதாரம் படம் பற்றி விமர்சனம் எழுதி, என்னையும் பார்க்கும் படி எழுதினார். படம் பார்த்த பின்னர் என் கருத்துக்களை எதிர்பார்ப்பதாக எழுதினார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முடிந்து யுடியூப்பில் வந்த பின் பார்க்கும் என்னை புதிதாக வந்த படத்தை பார்க்கச் சொன்னால் நான் என்ன செய்வேன்.

நான் அவருக்கு பின்வருமாறு மெயில் அனுப்பினேன். என் விமர்சனம் படிக்க வேண்டும் எனில் நீங்கள் என்னிடமிருந்து 1 அல்லது 2 வருடங்களின் பின்னரே மின்னஞ்சல் பெறுவீர்கள். அட இது மட்டும் தான் எழுதினேன். நலம் விசாரித்தும் எழுதினேன். மேகத்திற்கு கோபம் வந்து விட்டது. அவரின் அடுத்த மின்னஞ்சலில் கோபத்தை வெளிப்படையாக கொட்டி ஒரு பெரிய மடல் அனுப்பியிருந்தார். அவரிம் மெயில் முழுவதையும் ஒரு வரியில் சொல்லப் போனால், " ஏன் 1 அல்லது 2 வருடங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்பவே இந்த நிமிடமே உன் நட்பை தலை முழுகியாச்சு."
மனசு வலித்தது. முகம் தெரியாத நட்பு எனினும் நட்பு நட்பு தானே.

அவருக்கு ஏன் கோபம் வந்தது என்பது இன்று வரை எனக்கு புரியாத புதிர். நான் அவரின் கடிதத்தை படித்து முடித்ததும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டேன்.

எங்கள் நட்பு முறிந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் மேகம் இன்னும் எனக்கு வேறு பெயரில் பொங்கல், தீபாவளி, புது வருடத்திற்கு மின் வாழ்த்து அட்டைகள் அனுப்புவார். எப்படி தெரியும் என்கிறீர்களா? அவரின் மின்னஞ்சல் முகவரி. அவரின் வேலை பற்றி அவர் மறைமுகமாக சொன்ன போது நிறைய தகவல்கள் அவர் அறிந்தோ/அறியாமலோ சொல்லியிருந்தார். அந்த வேலை தான் எனக்கு அவரை அடையாளம் காட்டியது.
நான் பதிலுக்கு எதுவுமே அனுப்புவதில்லை. கோபமா, வறட்டுப் பிடிவாதமா, சோம்பல் தனமா என்று தெரியவில்லை.

16 comments:

  1. மிக வருத்தமாக உள்ளது வானதி. சில சமயம் , இனைய நட்புக்கள் இவ்வாறு முறியலாம். இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  2. இணைய நட்பு பற்றி எதுவும் சொல்ல தோணவில்லை..எல்கே சொன்ன மாதிரி இதுவும் கடந்து போகும்...

    ReplyDelete
  3. உண்மையான நட்பு என்பது அவ்வளவு சீக்கிரம் பிரியாது....
    புரியாது....

    :-))

    ReplyDelete
  4. நீங்க உங்க கருத்தை தெளிவு படுத்தி இருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காதோ? எதுக்கும் இந்த போஸ்டுக்கு அப்புறம் உங்கள் நட்பு உயிர்த்தெழும்ன்னு நம்பறேன். இந்தப்பதிவுல ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது. கட்டாயம் தன் தவறை உணர்ந்து திரும்புவார் மேகம்.

    ReplyDelete
  5. உங்கள் நட்பு தொடரட்டும்....

    ReplyDelete
  6. 'கதை'யில் வரும் மேகம், வான் நதி - பெயர்ப் பொருத்தம் அருமை. ;)

    பிரிவு வலிக்கிறது என்றால் நட்பு பிடித்திருக்கிறது என்று அர்த்தம். ;)

    ReplyDelete
  7. மனசு வலித்தது. முகம் தெரியாத நட்பு எனினும் நட்பு நட்பு தானே/// 100 வீதமும் உண்மை வாணி.

    ஆனால் எனக்கென்னமோ உங்களிலும் தப்பிருக்கிறமாதிரி ஒரு உணர்வு. ஏன் தெரியுமோ? ஒரு வருடத்துக்கு மேலான பழக்கம், ஒரு கடிதத்தில் முறிவடைந்தால் அப்படியே ஏன் விட்டீங்கள்? மனதில் கவலை எழுமளவுக்கு நட்பு உண்மையாக இருக்கும்போது, அப்படியே விடாமல் பதில் போட்டு தெளிவடைய வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பெல்லோ. இதுவரை அவரும் மடல்கள் அனுப்புகிறார் எனில், அவரும் உண்மை நட்போடயே பழகியிருக்கிறார் என்றுதானே அர்த்தம்.

    என்னைப் பொறுத்து, இணைய நட்புகளில், ஒருவரின் பாஷையை, உணர்வுகளை அடுத்தவர் புரிந்துகொள்வது மிகவும் கஸ்டம்(எனக்குத்தெரிந்த மொழியிலே உனக்குப் பேசத் தெரியல்ல.... பாடல் நினைவுக்கு வருகிறது..), இதனாலேயே தொட்டதுக்கும் கோபப்படுகிறார்கள். நாம் ஒன்றை நினைத்து எழுதும்போது, படிப்பவருக்கு அது தப்பாகத் தெரிவதுக்கு வாய்ப்பு அதிகம். கேட்டு தெளிவடைந்துவிட்டால் பிரச்சனை எழாது.

    இப்ப கூட ஒன்றும் தப்பில்லை, நட்பிலே ஈகோ பார்க்கக்கூடாது, நீங்களும் இப்போ ஒரு மெயில் அனுப்பிப் பார்க்கலாம்.

    ReplyDelete
  8. எனக்கே மனசு வலிக்கிறது, உங்களுக்கு இருக்காதா என்ன?என்னைப் பொருத்தவரை நட்பு உறவை விட பலமானது,பாவம் மேகம்,இந்த பெண்ணின் மனதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  9. //அநன்யா மஹாதேவன் said...
    .........
    திரும்புவார் மேகம்.//
    may come
    :-)

    ReplyDelete
  10. எல்கே, //இதுவும் கடந்து போகும்// மிக்க நன்றி.

    மேனகா, மிக்க நன்றி.

    ஜெய்லானி, பிரிந்து விட்டது என்பதே உண்மை. மிக்க நன்றி.

    அநன்யா, பார்க்கலாம். மேகம் இருப்பது தூர தேசத்தில். இந்த வலைப்பூ எல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. மிக்க நன்றி.

    கீதா, மிக்க நன்றி.

    இமா, என்னமா யோசிக்கிறீங்க. நான் எளிதில் எல்லோரையும் நம்பி விடுவேன். நட்பு பிடித்தது. ஆனால் மீண்டும் அந்த நட்பு தொடருமா என்பது தெரியாது.

    ReplyDelete
  11. அதீஸ், நானும் அப்படித் தான் நினைத்தேன். ஆனால் ஏனோ அவரின் மெயில் படித்ததும் கோபம் வந்தது. உடனே குப்பையில் போட்டாயிற்று. அதோடு உடைந்த கண்ணாடி போன்றது நட்பு. அதை மீண்டும் ஒட்டினாலும் பார்க்க பிம்பம் தெளிவில்லாமல் தெரியும். ஏதாவது உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். அதிலிருந்து இணைய நட்பு என்றால் கொஞ்சம் அல்ல நிறையவே எச்சரிக்கையாக இருக்கிறேன். ஆனால் என்னத்தை சொல்ல எனக்கு பிழையாகவே படாத விடயம் மற்றவர்களுக்கு பெரிய பிழையாக படுது.
    மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி. தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்ப பல வருடங்கள் ஆகி விட்டதால் கொஞ்சம் மறந்தது போல வந்து விட்டது.
    மிக்க நன்றி.
    பாலராஜன்கீதா, வாங்கோ. நல்வரவு. ம்ம்.. வந்தால் உங்கள் எல்லோருக்கும் ஆசியா அக்காவின் பிரியாணியுடன் பார்ட்டி சரியா?

    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //அதோடு உடைந்த கண்ணாடி போன்றது நட்பு. அதை மீண்டும் ஒட்டினாலும் பார்க்க பிம்பம் தெளிவில்லாமல் தெரியும். ஏதாவது உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்.//

    இதுக்கு திரும்பவும் என்னுடைய முந்திய பதிலே

    !!. பழைய பாட்டு இருக்கு

    ’’’’ ஆயிரம் வாசல் இதயம் அதில்
    ஆயிரம் எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ இருப்பார்
    வருவதும் போவதும் தெரியாது ’’’’

    கடைசியா ஒன்னு. நட்பில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடு இருக்கு . ஆனால் ஆண்களுக்கு இல்லை அப்படியும் இருக்கலாம் .

    ReplyDelete
  13. என்னடா இது!! நான் கதை என்று நினைத்தேன். // இணைய நட்பு - story // இல்லையா!!! கருத்துகள் வேறு மாதிரி[ப் போகிறதே!! ;)

    இது கதை இல்லையாயின்.... நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
    தொடர்பானவர்கள் தான் தொடர்வதா பிரிவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

    ReplyDelete
  14. /இது கதை இல்லையாயின்.... நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
    தொடர்பானவர்கள் தான் தொடர்வதா பிரிவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். / கரெக்ட்..நானும் இதையேதான் சொல்லறேன்.

    ReplyDelete
  15. //நாம் ஒன்றை நினைத்து எழுதும்போது, படிப்பவருக்கு அது தப்பாகத் தெரிவதுக்கு வாய்ப்பு அதிகம். கேட்டு தெளிவடைந்துவிட்டால் பிரச்சனை எழாது//

    miyaav appappo indha maadhiri arumaiyaana karuththukkalaich solvaar.. naanum aamodhikkiren..

    these things happen to everyone.. i think he misunderstood you. if you had sent a reply explaining what u actually meant, everything would have been set right! but u r sensitive as well.. :))

    just have him in your good thoughts and prayers!

    ReplyDelete
  16. ஜெய்,
    //ஆனால் ஆண்களுக்கு இல்லை அப்படியும் இருக்கலாம் .//

    நீங்களே முடிவு செய்து விட்டீர்களா?? மிக்க நன்றி.

    இமா, இது முடிந்து போன சம்பவம். கருத்து, விமர்சனம் வரும் என்று தெரிந்தே இங்கே எழுதினேன். வாழ்வில் நிறைய பார்த்தாயிற்று இதெல்லாம் அவற்றோடு ஒப்பிடுகையில் சாதரணமான நிகழ்வுகளே.
    மிக்க நன்றி.

    மகி, கருத்துக்கு நன்றி.

    சந்தனா, நான் தப்பு பண்ணியிருந்தால் கட்டாயம் 100 என்ன ஆயிரம் மின்னஞ்சல் அனுப்பி மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால் சிலருக்கு தொட்டதற்கெல்லாம் சும்மா கோபம் வருமே ( மேகத்தின் வேலையும் அவரின் முன் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் ) .

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!