Showing posts with label இணைய நட்பு - story. Show all posts
Showing posts with label இணைய நட்பு - story. Show all posts

Wednesday, June 2, 2010

இணைய நட்பு

எனக்கு இணைய தளம் மூலம் ஒரு நட்பு கிடைத்தது. அந்த நட்பு ஆணா, பெண்ணா என்ற விபரங்கள் வேண்டாம். அவரின் பெயர் மேகம் என்று வைத்துக்கொள்வோம். இந்த பெயர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் நீங்களே வேறு பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். என் பெயர் தான் உங்களுக்கு தெரியுமே. என் புராண காலப் பெயரைப் பார்த்ததும் மேகம் எனக்கு மெயில் அனுப்பினார். அதில் என் பெயரை புகழ்ந்து எழுதி இருந்தார். அதுவரை என் பெயரைக் கேட்டாலே வெறுப்பின் உச்சிக்குப் போன நான் மிகவும் மகிழ்ந்து போனேன். என் அப்பாவை மனதார பாராட்டினேன்.

மேகம் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் பெரும் பாலும் உலகப் பிரச்சினை பற்றியதாகவே இருக்கும். நானும் எனக்குத் தெரிந்த அல்லாவிட்டால் எங்காவது தகவல்கள் பொறுக்கி எடுத்து பதில் அனுப்புவேன். அவர் திருமணமானவரா என்று எனக்குத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததில்லை. அவரும் என்னைக் கேட்டதில்லை. எங்கள் நட்பு தொடங்கிய ஒரு வருடத்தின் பின்னர் தான் என் மண்டையில் சில கேள்விகள் தோன்றியது. அவரின் குடும்பம் பற்றிக் கேட்டேன். இரண்டு வளர்ந்த மகன்கள் இருப்பதாக எழுதினார். அவரின் வேலை பற்றி எப்போதும் ரகசியம் காத்தார். சில நேரங்களில் மறைமுகமாக சில விடயங்கள் எழுதுவார்.

இப்படியே நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இருந்த எங்கள் நட்பில் கமலால் விரிசல் வந்தது. அட! நம்ம நடிகர் கலம்ஹாசனே தான்.

மேகம் எப்போதும் ஏதாவது படங்கள் பார்த்தால் அது பற்றி எழுதுவார். அவர் படங்கள் பார்ப்பது குறைவு என்றாலும் நல்ல படங்கள் எனில் விரும்பி பார்ப்பாராம். நான் இருக்கும் இந்த நடுக்காட்டில் தமிழ் படங்கள் தியேட்டரில் போடுவது குறைவு. அப்படியே போட்டாலும் என் பிள்ளைகளோடு படம் பார்க்க போக எனக்கு விருப்பம் இல்லை. அவர்களை விட்டுட்டு போகவும் எண்ணுவதில்லை.

கமலின் தசாவதாரம் படம் பற்றி விமர்சனம் எழுதி, என்னையும் பார்க்கும் படி எழுதினார். படம் பார்த்த பின்னர் என் கருத்துக்களை எதிர்பார்ப்பதாக எழுதினார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முடிந்து யுடியூப்பில் வந்த பின் பார்க்கும் என்னை புதிதாக வந்த படத்தை பார்க்கச் சொன்னால் நான் என்ன செய்வேன்.

நான் அவருக்கு பின்வருமாறு மெயில் அனுப்பினேன். என் விமர்சனம் படிக்க வேண்டும் எனில் நீங்கள் என்னிடமிருந்து 1 அல்லது 2 வருடங்களின் பின்னரே மின்னஞ்சல் பெறுவீர்கள். அட இது மட்டும் தான் எழுதினேன். நலம் விசாரித்தும் எழுதினேன். மேகத்திற்கு கோபம் வந்து விட்டது. அவரின் அடுத்த மின்னஞ்சலில் கோபத்தை வெளிப்படையாக கொட்டி ஒரு பெரிய மடல் அனுப்பியிருந்தார். அவரிம் மெயில் முழுவதையும் ஒரு வரியில் சொல்லப் போனால், " ஏன் 1 அல்லது 2 வருடங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்பவே இந்த நிமிடமே உன் நட்பை தலை முழுகியாச்சு."
மனசு வலித்தது. முகம் தெரியாத நட்பு எனினும் நட்பு நட்பு தானே.

அவருக்கு ஏன் கோபம் வந்தது என்பது இன்று வரை எனக்கு புரியாத புதிர். நான் அவரின் கடிதத்தை படித்து முடித்ததும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டேன்.

எங்கள் நட்பு முறிந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் மேகம் இன்னும் எனக்கு வேறு பெயரில் பொங்கல், தீபாவளி, புது வருடத்திற்கு மின் வாழ்த்து அட்டைகள் அனுப்புவார். எப்படி தெரியும் என்கிறீர்களா? அவரின் மின்னஞ்சல் முகவரி. அவரின் வேலை பற்றி அவர் மறைமுகமாக சொன்ன போது நிறைய தகவல்கள் அவர் அறிந்தோ/அறியாமலோ சொல்லியிருந்தார். அந்த வேலை தான் எனக்கு அவரை அடையாளம் காட்டியது.
நான் பதிலுக்கு எதுவுமே அனுப்புவதில்லை. கோபமா, வறட்டுப் பிடிவாதமா, சோம்பல் தனமா என்று தெரியவில்லை.