Monday, May 31, 2010

அதே மணம்!

மீண்டும் அதே மணம் எங்கிருந்தோ வந்து நாசியைத் தாக்கியது. ரதி வெறுப்புடன் அனைத்து அறைகளையும் திறந்து பார்த்தாள். " பெரியம்மா, அதே மணம். எனக்கு தலை வலிக்குது." , என்றாள் கலவரமான முகத்துடன். பெரியம்மா ஆதரவுடன் தலையை தடவிக் கொடுத்தார்.

" ரதி, எங்கையாவது பக்கத்து வீட்டிலிருந்து வந்திருக்கும். நான் வீட்டில் ஊதுபத்தி, சாம்பிராணி புகை போட்டே வருடக்கணக்காகின்றது. நான் என்னம்மா செய்ய? வா காலாற எங்காவது நடந்து விட்டு வரலாம்.", என்றார்.

சிறிது சிறிதாக தொடங்கிய தலைவலி அதிகமாகியது. ரதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தெருவில் இறங்கி விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். நுரையீரல் முழுவதும் சுத்தமான காற்றை இழுத்து நிரப்பிக் கொண்டாள். இப்போது அந்த மணம் காற்றில் கரைந்து, காணமல் போய் இருந்தது. ரதி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ரதி அவள் முன்பு குடியிருந்த வீட்டைக் கடந்து போனாள். வெளியில் நின்று வீட்டை நோட்டமிட்டாள். பாழடைந்து போய் இருந்தது. செடிகளும், புதர்களும் மண்டிப் போய் காடு போன்று காட்சி தந்தது.

2 1/2 வருடங்களுக்கு முன்பு எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு. அப்பா, அம்மா, தங்கை என்று சிறிய அழகிய குடும்பம். 1985 ஜூலை அதிகாலை நடந்த சம்பவங்களால் ரதியின் வாழ்வே அடியோடு மாறிவிட்டது.

அதிகாலையில் வந்த குண்டு வீச்சு விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் சுற்றி குண்டுகளை பொழிந்த வண்ணம் இருந்தன. இது அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிதான். எல்லோரும் பதுங்கு குழியினுள் இருந்து விட்டு, விமானங்கள் போனதும் வெளியே வருவார்கள். ஆனால், இந்த முறை நாட்கணக்காக தாக்குதல் தொடர்ந்தது. வெளியே போகவே முடியாதபடி குண்டுகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன.

ரதியின் குடும்பம் பதுங்கு குழியில் நாட்கணக்கில் இருந்தது. அப்பாவும், அம்மாவும் கிடைத்த இடைவெளியில் வீட்டினுள் போய் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

மூன்றாம் நாள் மதியம் பதுங்கு குழி வாசலில் பூட்ஸ் சத்தங்கள் கேட்டன.

யாரும் சுதாகரிப்பதற்குள் இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகள் அதிர்ந்து ஓய்ந்தன.

ரதி எவ்வளவு நாட்கள் சுயநினைவில்லாமல் கிடந்தாளோ அவளுக்கே தெரியாது. அவள் பெரியம்மா குடும்பம் வந்து பதுங்குகுழியில் இருந்த அவள் குடும்பத்தினரை கண்டு பிடித்தார்கள். ரதிக்கு கனவா நனவா என்று தெளிவில்லாமல் இருந்தது. அவள் அப்பா, அம்மா, தங்கை மூவரையும் மூட்டை போல குவியலாக அள்ளி குப்பை கொண்டு செல்லும் வண்டியில் கட்டிப் போட்டிருந்தார்கள். எழுந்த துர்நாற்றத்தை போக்க ஊதுபத்தி எரிந்து கொண்டிருந்தது. துர்நாற்றம், ஊதுபத்தியின் மணமும் சேர்ந்து ஒரு கலவையான வெறுக்கத் தக்க மணம் எங்கும் வீசியது. அழக் கூட முடியாமல் சூனியத்தை வெறித்தபடி இருந்தாள். அந்த மணம் மட்டுமே மனதில் தங்கி விட்டது.

பல நாட்கள் பித்து பிடித்தவள் போல இருந்தாள். பெரியம்மா குடும்பம் அன்புடன் பார்த்துக் கொண்டது. ஊதுபத்தி மணம் அவளின் பழைய நினைவுகளை கிளறிவிடும்.
முன்பு குடியிருந்த வீட்டின் வாசலில் நின்று பார்த்து விட்டு வருவாள். உள்ளே போக ஒரு வித தயக்கம், பயம். பதுங்குகுழியை எப்போதோ மூடிவிட்டார்கள். வீட்டினை விற்கவும் மனமில்லாமல் இருந்தது. அந்த வீட்டில் அந்த மணம் அப்படியே நிரந்தரமாக தங்கி விட்டதாக ரதி எண்ணினாள்.


பெரியம்மா கண்டிப்பாக சொல்லி விட்டார் ரதியின் வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என்று. அவரே ஆட்களை வைத்து வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்யச் சொன்னார். ரதிக்கு உள்ளூர விருப்பம் இல்லாவிட்டாலும் வெளியே சொல்ல ஒரு வித தயக்கம். பெரியம்மாவுக்கும் ரதியை அங்கே அனுப்ப விருப்பம் இல்லை. ஆனால் உள்ளூரில் அந்த வீட்டினை வாங்க யாரும் முன்வரவில்லை. அவர்களுக்கும் ஒரு வித தயக்கம்.

ரதி எவ்வளவோ மறுத்தும் பெரியம்மா மாப்பிள்ளை பார்த்து, நிச்சயம் செய்து விட்டார்.

கல்யாண நாளும் வந்தது. மிகவும் எளிமையாகவே திருமணம் நடந்தது. கல்யாணம் ஆகி ஒரு வருடத்திலே ரதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தன் தங்கையின் சாயலில் இருந்த குழந்தையை பார்க்க ரதிக்கு பழைய நினைவுகள் மீண்டும் வந்து போனது. கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. ஒரு முடிவுடன் எழுந்தாள். குழந்தையை தூக்கிக் கொண்டு தெருவில் ஓடினாள். ரதியின் கணவர் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று, பிறகு பின் தொடர்ந்தார்.

ரதி நான்கு வருடங்களின் பின்னர் பூட்டியிருந்த வீட்டினை திறந்து உள்ளே ஓடினாள். எங்கும் தூசி மண்டிக் கிடந்தது. ரதி எதையும் பொருட்படுத்தாமல் தன் பெற்றோரின் படங்களின் முன்னால் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னாடியே வந்த கணவன் அறையில் ஜன்னல்களை திறந்து விட சூரிய ஒளி எங்கும் பரவியது. ரதியின் மனதில் ஏதோ ஒரு வித தெளிவு. வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்த கணவனின் கைகளை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டாள். இது வரை அழுது கொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்தி விட்டிருந்தது. இனிமேல் இது தான் எங்கள் வீடு என்று சொன்ன அம்மாவை புரியாமல் பார்த்தது குழந்தை.

14 comments:

 1. அருமை. ஆனால் வழக்கமாய் படிக்கும் வாணியின் கதை போல் இல்லையே இது ஏன்???

  ReplyDelete
 2. அதே மணம் அதே குணத்துடன் இருக்கு உணர்வு பூர்வமான கதை...

  ReplyDelete
 3. குழம்பிய மனம் தானே நினைத்தால் தான் தெளியும் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க.பதுங்கு குழி,குண்டு வீச்சு இதெல்லாம் அனுபவித்த மக்கள் ,அனுபவிக்கும் மக்கள் எவ்வளவு பாவம்.அதில் நம் அப்பாவி தமிழர்களும் அடக்கம் என்று நினைக்கும் பொழுது மனது சங்கடமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 4. என்ன சொல்ல? கண் கலங்கிப் போச்சு.

  ReplyDelete
 5. வாணி, கதை இதயத்தைத் தொடுகிறது.இது கதையல்ல பலரது வாழ்வின் நிஜம். இப்படி எத்தனையோ சம்பவங்கள் அங்கே கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 6. ம்ம்.. ஊர்க் கதைகள்.. மனதை நெறிக்கும் கதைகள்.. ரதி மீண்டுவிட்டாள் என்பதில் மகிழ்ச்சி வானதி.. மீள முடியாமல் எத்தனை பேரோ!

  ReplyDelete
 7. க‌தை ந‌ல்லா இருக்குங்க‌...

  ReplyDelete
 8. நல்ல கதை!! மனம் கனத்தது...

  ReplyDelete
 9. படிக்கவே மனசு கஷ்டமா இருக்கு வானதி..இதனை அனுபவித்த/அனுபவித்துக் கொண்டிருப்போர் இன்னும் எத்தனை பேரோ? நினைக்கும் போதே கண்ணீர் வருகிறது. :(

  ReplyDelete
 10. இது கதை யல்ல , நிஜத்தை சித்தரிக்கிறீர்கள்.

  இப்படி எல்லாம் படிக்கும் போது ரொம்ப மனம் கலங்குது.

  ReplyDelete
 11. எல்கே, என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். அடுத்த தடவை வாணியை எழுதச் சொல்றேன். மிக்க நன்றி.

  ஜெய்லானி, கருத்துக்கு மிக்க நன்றி.

  ஆசியா அக்கா, எல்லாம் கடந்து வந்தாலும் மனக்காயம் ஆறவே ஆறாது. மிக்க நன்றி.

  எல்கே, நீங்கள் ஏன் சிரிக்கின்றீர்கள்??

  இமா, மிகவும் நன்றி.

  அதீஸ், நான் நேரிலேயே பார்த்து இருக்கிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 12. சந்தனா, மீள முடியாமல் அல்லது மீள விருப்பம் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். வருகைக்கு மிக்க நன்றி.

  யாதவன், மிக்க நன்றி.

  நாடோடி, நன்றி.

  மேனகா, நன்றி.

  மகி, உண்மைதான். நிறைய பார்த்து இருக்கிறேன். எல்லாம் எழுத முடிவதில்லை. மிக்க நன்றி.

  ஜலீலா அக்கா, மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!