Monday, April 19, 2010

சீனி அக்கா

சீனி அக்காவுக்கு பிள்ளை பிறந்துவிட்டது - இது தான் லேட்டஸ்ட் நியூஸ். எங்கள் உறவினர்கள் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தார்கள். நான் இன்னும் போய் பார்க்கவில்லை. வேலை அசதியால் போக முடியவில்லை. சீனி அக்காவுக்கு பிள்ளை பிறந்தால் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? அவரின் வயது தான் பெரிய அதிசயம். வயது 50 ஐ தாண்டி விட்டது.

சீனி அக்கா ஆரம்பத்தில் பிள்ளை வேண்டும் என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்று கொள்கை உடையவர். அவர் வயதை ஒத்த பெண்கள் பிள்ளைகள் பெற்று வளர்த்த போதோ, அல்லது காலேஜில் சேர்த்த போதோ சீனி அக்கா தனக்கு வயது ஏறிக் கொண்டே போகுது என்று எண்ணவில்லை.

அவரின் 45 ஆவது வயதில் தான் பிள்ளை இல்லை என்று ஏக்கம் வாட்டி வதைக்கத் தொடங்கியது. உடனே அமெரிக்காவிலிருந்து இந்தியா போனார். அங்கு பல விதமான வைத்தியங்கள் செய்து, பணத்தை தண்ணீராக செலவு செய்தார். ஆனால் பிள்ளை மட்டும் வயிற்றில் தங்கவேயில்லை.
ஏறத்தாழ 10 வருடங்கள் போராடி வெற்றியும் பெற்று விட்டார். இந்தியாவிலே தங்கி பிள்ளை பிறந்த பிறகே அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
இதெல்லாம் என் பாட்டி அம்மாவுக்கு சொன்ன போது காற்று வாக்கில் என் காதில் விழுந்த தகவல்கள்.

இன்று எப்படியாவது அவரைப் போய் பார்த்து விட வேண்டும் என்று நினைத்து வேலையிலிருந்து நேரத்தோடு வந்து விட்டேன்.
போய் கதவைத் தட்டினேன். சீனி அக்கா வந்து கதவைத் திறந்தார். மிகவும் தளர்ந்து போய் இருந்தார். நான் அவரின் பிள்ளை பெற்ற அனுபவங்களை கேட்டு அவரை நோகடிக்காமல் பொதுவான விடயங்களைப் பேசினேன்.

"பிள்ளைகள் தூங்குகின்றார்கள்", என்றார். என்னது " பிள்ளைகள்" என்று சொல்கின்றார் என்று மனதினுள் யோசனை ஓடினாலும் கேட்கவில்லை. ஒரு வேளை என் காதில் தான் அப்படி விழுந்ததோ ?

நான் புறப்படும் நேரம் வந்தது. மெதுவாகப் போய் தொட்டிலை எட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்...சீனி அக்காவின் இரட்டைக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் சீனி அக்காவை திரும்பி பார்த்தேன். அவர் சோஃபாவிலிருந்து எழும்ப முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.

8 comments:

  1. கதை நல்லாயிருக்குங்க....
    சீனி அக்கா மாதிரி இன்னும் எத்தனையோ அக்காக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. க‌தைக்கு பெய‌ர் எங்க‌ இருந்து பிடிக்கிறீங்க‌......

    ReplyDelete
  3. //நான் அவரின் பிள்ளை பெற்ற அனுபவங்களை கேட்டு அவரை நோகடிக்காமல் பொதுவான விடயங்களைப் பேசினேன்//


    நல்ல கதை

    ReplyDelete
  4. நல்ல கதை என்று லேசா சொல்லிட்டுப் போக முடியேல்ல வாணி. எங்கயோ யார் யாருக்கோ நடக்கிற பிரச்சினைகள். வடிவாக சொல்லுறீங்கள்.

    ReplyDelete
  5. குமார், சீனி அக்கா மாதிரி நிறைய வெள்ளைக்கார அக்காக்கள் இருகிறார்கள். பிள்ளையா பேரப்பிளையா என்று பார்த்தாலும் விளங்காது?!

    ReplyDelete
  6. நாடோடி, ஹாஹா... கைவசம் நிறைய தலைப்புகள் இருக்கு. நன்றி.
    ஜெய்லானி, நன்றி.
    இமா, நன்றி.

    ReplyDelete
  7. ம்ம்.. இந்த மாதிரியும் நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் வானதி.. என்னது ரெண்டோட நிறுத்திட்டாங்களா? நான் ஏழோ எட்டோ இருக்கும்ன்னுல்ல நினைச்சிருந்தேன் :))

    ReplyDelete
  8. Chandana, ஏழு, எட்டா ம்ம்.. நல்ல கற்பனை. அப்படி போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
    நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!