அன்று வழக்கத்தினை விட வேலை பிஸியாக இருந்தது எனக்கு. அஸிஸ்டென்ட் டீச்சராக இருக்கும் எனக்கு தலைக்கு மேல் பொறுப்புகள். ஆசிரியை லீசா யாயா என்ற பொடியனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றார். இன்று ஹாலோவீன் என்பதால் மாணவர்கள் வண்ண உடைகளில். சிலந்தி மனிதன், இளவரசி, செஃப், ட்ராகன், மைக்கேல் ஜாக்ஸன் ( சப்பாத்து அணிந்து, வெள்ளைக் கலரில் காலுறை அணிந்து, அந்தக் காலுறைகள் வெளியே தெரியுமாறு கறுப்பு கலரில் pants அணிந்து.) இப்படி பல கோலங்களில் மாணவர்கள்.
" யாயா, உன் அம்மாவிடம் நேற்று ஓராயிரம் தரம் சொன்னேன் அல்லவா? ஹாலோவீன் உடைகள் வீட்டில் அணிந்து வர வேண்டும் என்று", என்றார் லீசா.
யாயா எதையும் கேட்கும் மனநிலையில் இருக்கவில்லை. சிலந்தி மனிதன் ஆடையை தலைகீழாக அணிந்து கொண்டு, ட்ராகனின் வாலை பிடித்து இழுக்க, ட்ராகன் பொடியன் கீழே விழ, லீசா டென்ஷன் ஆக.
வாசலில், எக்ஸ்கியூஸ் மீ, என்ற குரலுக்கு திரும்பினோம்.
அங்கு ஒரு இளம் பெண் நின்றார்.
லீசா அவரிடம் போய் பேசிவிட்டு என்னிடம் வந்தார்.
" இவர் ஜோர்டனின் அம்மா. இங்கு வாலண்டியராக பணி செய்ய வந்திருக்கிறார்", என்று என்னிடம் அறிமுகம் செய்த பின்னர் அவருக்கான வேலையை விளக்கி சொல்ல ஆரம்பித்தார்.
எனக்கு அந்தப் பெண்மணியை எங்கேயோ பார்த்த ஞாபகம். ஆனால் நினைவில் வரவில்லை. அவரும் என்னை உற்றுப் பார்ப்பதும் பிறகு எங்கோ பார்ப்பதுமாக இருந்தார்.
யாயா ட்ராகன் பொடியனிடம் இருந்து விலகி சின்டரெல்லா பெண்ணிடம் வம்பு செய்ய ஆரம்பித்து இருந்தான். சின்டரெல்லா அழ ஆரம்பிக்க அவளின் மேக்கப் கலைந்து ஓட, லீசா யாயாவை வகுப்பறையின் மூலையில் இருக்க வைத்தார்.
எனக்கு இன்னும் அந்தப் பெண்மணியை பற்றிய நினைப்பே மனம் முழுவதும். முன்பே அறிமுகமான முகம். ஆனால், அது ஒரு சிறப்பான, மனதிற்கினிய அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை என்று உள்மனம் சொன்னது. ஒரு வேளை பார்க்கிங் இடத்திற்காக சண்டை போட்டிருக்க வாய்ப்பு இருக்குமோ அல்லது...என்னதான் மூளையை கசக்கியபோதும் புலப்படவில்லை.
ஹாலோவீன் உடைகள் அணிந்தவர்கள் வரிசையாக அணி வகுத்து வரவும், என்ற இன்டர்காம் அழைப்புக்கு மாணவர்கள் செல்ல, நானும் அந்தப் பெண்மணியும் மட்டும் வகுப்பறையில்.
நீயும் என்னைப் போல தொண்டர் தானா?, என்று கேட்டவர், உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது, என்றார்.
இல்லை. நான் இங்கு வேலை பார்க்கிறேன். உன்னை எங்கேயோ.... ஆகா! ஞாபகம் வந்துவிட்டது.
கோடை காலத்தில் ஒரு நாள். நச நசவென வியர்வை. பள்ளியில் ஏதோ ஒரு கொண்டாட்டம். நான் அப்போது வேலை செய்யாமல் வீட்டில் இருந்த நாட்கள். பள்ளியில் நடக்கும் விழாக்களுக்கு தவறாமல் செல்லும் பழக்கம் எபோதும் உண்டு.
பள்ளியில் கோடை கொண்டாட்டம். வெளியில் மழை வருவதற்கான அறிகுறிகள் இருந்தமையால் ஜிம்மில் கொண்டாட்டம் என்று மாற்றினார்கள்.
ஜிம்மில் மாஜிக் ஷோ, ஃபேஸ் பெயின்டிங் என்று மாணவர்களை குஷிப்படுத்தும் பலவிடயங்கள். இடப் பற்றாக்குறை தான் பெருங்குறை. 50 பேர் மட்டும் கொள்ளக் கூடிய அறையில் 100 பேருக்கு மேல். 4 வாத்துக்கள். அவை மனிதரைக் கண்டதும் டென்ஷனாகி ஆய் போக, அதை க்ளீன் பண்ண 4 ஆசிரியைகள். எனக்கு டென்ஷன் எகிறியது. ஏற்கனவே டோக்கன் வாங்கியபடியால் வீணாக்க விருப்பம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது சோளப் பொரி ஸ்டான்ட் கண்களில் பட்டது.
கிட்டத்தட்ட 10 டாலருக்கான டோக்கன் மிச்சம் இருந்தது. சோளப் பொரி வாங்க கூட்டம் அலைமோதியது.
வரிசை நகரவே மாட்டேன் என்று அடம் பிடித்தது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் காத்திருந்தும் பெரிய முன்னேற்றம் இல்லை. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு ஜோடி, இரண்டு பிள்ளைகளுடன் வந்தார்கள். வந்தவர்கள் வரிசையில் காத்திருக்கவில்லை. அவர்களாகவே ஒரு வரிசையினையை உருவாக்க, அவர்களின் பின்னே மக்கள் கூட்டம் மளமளவென சேர ஆரம்பித்தது. அந்த வரிசை நாங்கள் நின்ற வரிசையை விட வேகமாக நகர்ந்து, கிட்டத்தட்ட சோளப் பொரி கடைப்பக்கம் சென்றுவிட்டது. எனக்கு வந்த கோபத்தில் வரிசையினை உருவாக்கிய ஜோடியிடம் சென்றேன். ஆங்கிலத்தில் பயங்கர வாக்குவாதம் நடந்தது. வாத்து மேய்ச்ச டீச்சர்களும் அங்கு வர, நான் கோபத்தில் எகிற, அவர்கள் சோளப் பொரி வாங்காமல் சென்றுவிட்டார்கள்.
அந்த வரிசை உருவாக்கிய பெண்மணி தான் இவர்.
அந்த பெண்மணியை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே ஹாலோவீனுக்கு நான் வாங்கிய முகமூடியினை எடுத்து வேகமாக மாட்டிக் கொண்டேன். அவர் கண்டுபிடிக்கும் முன்னர் என் முகத்தினை மறைத்த என் கெட்டிக்காரதனத்தினை பாராட்டிக் கொண்டேன். இனிமேல் சோளப் பொரிக்கு சண்டை போடுவியா, என்று என்னை நானே திட்டியபடியே மாணவர்கள் மத்தியில் நுழைந்து காணாமல் போனேன்.
( இது 100% கற்பனைக் கதையே )