Saturday, April 20, 2013

One Way Ticket to Mars!


நான் படிக்கும் பள்ளியில் கட்டுரைப் போட்டி. தலைப்பு "  One Way ticket to Mars   ". இதெல்லாம் ஒரு தலைப்பா? என்று நினைத்து மலைத்துப்போனேன். புதன் கிரகத்துக்கு போக மட்டும் டிக்கெட். திரும்பி வரமுடியாதாம். அங்கே நீங்க அனுப்ப நினைக்கிறவர்கள் உங்கள் அப்பா, அம்மா, பாட்டி, மாமி... உங்கள் வீட்டு நாய், பேய் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்கள் அங்கே போவதால் புதன் கிரகத்துக்கு நன்மை அல்லது பூமிக்கு நன்மை இப்படி இரண்டில் ஒன்று பற்றி கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டுமாம். சும்மா சல்லிக்காசு பெறாத காரணங்கள் எல்லாம் குறிப்பிடாமல் ஏதாவது சுவாரஸ்யம் கலந்து எழுதுபவர்களுக்கு முதல் பரிசு உண்டு. அதாவது என் அம்மா அங்கே போனால் நல்ல ஒரு உணவகம் ஆரம்பித்து ஓகோ என்று வருவார்கள் என்றெல்லாம் தமாஷாக எழுத கூடாதாம். எனக்கும் அம்மாவை கற்பனைக்கு கூட அப்படி அனுப்ப மனம் ஒப்பவில்லை. அப்பா கண்டிப்பானவர் தான். ஆனால், புதன் கிரகத்துக்கு அனுப்பும் அளவுக்கு அப்படி ஒன்றும் குரூரம் நிறைந்தவர் இல்லை. அதோடு அவருக்கு அம்மா பக்கத்தில் இல்லாவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது. புதன் கிரகத்தில் போய் அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார், என்று நினைப்பு வர அவரையும் என் லிஸ்டில் நீக்கிவிட்டேன். அடுத்து நான். என்னால் வீட்டுக்கே ஒரு பிரயோசனமும் இல்லை, இதில் புதன் கிரகத்தில் என்னத்தை கிழிக்கப் போகிறேன் என்று நினைத்து என்னை நானே எலிமினேட் செய்து கொண்டேன். எங்கள் வீட்டு நாய் ஜிம்மி. சே! அது அங்கே போய் கண்ட, நின்ற இடமெல்லாம் மூச்சா மட்டுமே போகும். ஜிம்மியால் ஒரு நன்மையும் விளையப்போவதில்லை.

என் மாமி, சித்தி, பெரியம்மா இப்படி எல்லோரையும் எலிமினேட் செய்து கொண்டே வந்ததில் எனக்கு யாரை அனுப்புவது என்ற குழப்பம் மட்டுமே மிச்சம் இருந்தது. முக்கியமான ஒரு ஆளை எப்படி மறந்து போனேன் என்று எனக்கு அன்று மதியம் வரை விளங்கவேயில்லை. என் அப்பா என்னை முடி திருத்தகம் அழைத்துப் போனார். அங்கிருக்கும் பார்பரை அனுப்பலாமா, என்ற யோசனையும் வந்தது. அவர் தான் புதன் கிரகம் போக சரியான ஆள் என்று நினைத்துக் கொண்டேன். இவர் அங்கே போய் எல்லோருடைய முடிகளையும் வெட்டி, திருத்தி, ஷேவிங் செய்து... அப்பாடா எழுத எவ்வளவு இருக்கு என்று மகிழ்ந்து போனேன். அப்ப தான் 'படார்' என்று யாரோ கதவினை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்கள். வந்தவர் என் சித்தப்பா. எப்பவும் மப்பில் இருப்பவர்.


உள்ளே வந்த என் சித்தப்பா பயங்கர மப்பில் இருந்தார். என் சித்தப்பாவும், பார்பரும் ஏதோ ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் போல கட்டி அணைத்து குசலம் விசாரித்துக் கொண்டார்கள். இருவரும் சேர்ந்து குடிப்பவர்கள் என்ற உண்மை எனக்குத் தெரியாது அல்லது அந்த உண்மை இது வரை யாருக்கும் தெரியாதோ, என்பதும் விளங்கவில்லை. என் சித்தப்பரையும் சேர்த்து கிட்டத்தட்ட 12 பேர் இருந்தார்கள். நேரம் ஆக ஆக என் சித்தப்பா பொறுமை இழந்து,  டைனோசர் போல உறுமிக் கொண்டே இருந்தார். கட்டாயம் முடி திருத்தகம் வந்து தான் அவரின் முடியை வெட்ட வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கில்லை. இருந்தாலும் பாதி சொட்டைத் தலையுடன் நானும் சலூன் போகிறேன் ஆக்கும் என்ற வெட்டி பந்தாவுக்காக வந்திருந்த அவரை நினைக்க எனக்கு கோபம் வந்தது.

நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?, இப்ப எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு அவன் தலையில் கை வை, என்று எகிறினார் சித்தப்பர்.
இப்ப தானே வந்தீங்கள். உங்கள் முறைக்கு காத்திருக்க வேண்டாமா?, என்று பார்பர் பொறுமையாக சொன்னார். 
பொறுமையை பற்றி நீ எனக்கு பாடம் நடத்தியது போதும். வந்து எனக்கு ஒரு தீர்வு சொல், என்றார் சித்தப்பா. 
முடி திருத்தகத்தில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற  யோசனை கூட இல்லாமல் சித்தப்பா ஏக வசனத்தில் கத்த தொடங்கினார். டேய்! நேற்று நீயும் நானும் சேர்ந்து குடிச்சோமே நினைவிருக்கா? நீ எனக்கு தெரியாமல் மேலதிகமாக ஒரு கப் திருட்டுத்தனமாக குடிச்சு, என்னிடம் மாட்டி, செருப்பு கூட இல்லாமல் நீ ஓட, நான் விரட்ட, நீயெல்லாம் ஒரு ஆள். உனக்கெல்லாம் ஒரு கடை என்று காறித் துப்பினார் சித்தப்பா. 
" போடா வெளியே", என்று வெளியே தள்ளி கதவை சாத்தினார்கள் அங்கிருந்தவர்கள்.
இந்த லட்சணத்தில் என் சித்தப்பாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். புதன் கிரகத்துக்கு அனுப்ப ஏற்ற ஆள் என் சித்தப்பாவே தான். 

நான் என் சித்தப்பாவை புதன் கிரகத்துக்கு அனுப்ப ஆவலாக இருக்கிறேன். அவர் போவதால் புதன் கிரகத்துக்கு எதுவும் நன்மை நடக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், பூமியில் அவர் இல்லாவிட்டால் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வு காப்பாற்றப்படும். அவரின் வருங்கால சந்ததி காப்பாற்றப்படும். எனவே என் சார்பில், என் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் என் சித்தப்பாவை நாங்கள் புதன் கிரகத்துக்கு அனுப்ப ஆவலாக இருக்கிறோம். நீங்கள் கட்டாயம் அவர் திரும்பிவராமல் இருக்க உறுதி அளிக்க வேண்டும்..... இப்படியே விரிந்தது என் கட்டுரை.


இப்ப சொல்லுங்கள் முதல் பரிசு எனக்கு கட்டாயம் கிடைக்கும் அல்லவா?

7 comments:

 1. வானதி:)))) சூப்பர்மா !!!

  கண்டிப்பா பரிசு கிடைக்கும் ....கிடைச்சாச்ச்ன்னு நினைச்சுக்கோங்க ..

  இது மாத்திரம் உண்மையா இருந்தா :)) நானும் நிறைய பேரை லிஸ்ட் போட்டு அனுப்பி வைப்பேன் .ஹாஆ :))

  ReplyDelete
 2. ஹா..ஹா..ஹா... கண்டிப்பா வான்ஸ்:) முதல் பரிசு உங்களுக்கே:) அப்பூடித் தராட்டில்... செலக்ட் பண்ணிய ஜஜ் ஐ அனுப்பிடலாம் மார்ஸ் க்கு:)

  ReplyDelete
 3. ரொம்ப நாட்கள் கழித்து மறுபடியும் உங்க ப்ளாக் ஆக்டிவ்-ஆ இருப்பதைப் பார்க்க சந்தோஷம் வானதி! வாரத்துக்கொரு கதையாவது எழுதுங்க.

  செவ்வாய்க்கு அனுப்ப குடிகார சித்தப்பா சூப்பர் தேர்வு. பரிசு உங்களுக்கே! :)

  ReplyDelete
 4. முதல் பரிசு பெரிசாகப் பெறப்போகும் கட்டுரைக்குப் பாராட்டுக்கள்..

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. ;))))))))))

  சூ...ப்பர் வான்ஸ். கட்டாயம் உங்களுக்குத்தான் முதல் பரிசு. //ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வு காப்பாற்றப்படும்.// என்று சொல்லுறீங்கள், அவங்கள் தராம எப்பிடி விட்டாலும் நான் தாறன்.

  3 மாசத்துக்கொரு போஸ்ட்... கர்ர்ர்... அடுத்ததைக் கெதியா போஸ்ட் பண்ணுங்கோ. எனக்கு சிரிக்க வேணும்.

  ReplyDelete
 6. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 7. பரிசு கிடைத்திருக்குமே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!