Tuesday, May 22, 2012

அம்மாவுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள அம்மா, நலமா?  உங்களுக்கென்ன நலமாகத் தான் இருப்பீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் தான்  அநாதைகள்  போல் ஆகிவிட்டோம். நீங்கள் இருந்தபோதும் நாங்கள் அநாதைகள் தான் என்பது வேறு விடயம். எப்போதும் எள்ளும், கொள்ளும் வெடிக்கும்  முகம். பக்கத்தில் வந்தால் முதுகில் சரமாரியாக அடி விழும் என்ற காரணத்தினால் ஒரு  நான்கடி தள்ளி நின்றே எல்லோரும் பேசப் பழகிக் கொண்டோம். தப்பித் தவறி யாராவது மாட்டிக் கொண்டால் அந்த நபர் கதி அவ்வளவு தான். இப்படி உங்கள் மீது பழியை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு நாள் கூடத்தில் ஒரு அழகிய வெண்புறா வந்து நின்றது. இதைக் கண்ட என் பள்ளித் தோழி  ஸ்டெல்லா சொன்னாள், உனக்குத் தெரியுமா வெண்புறா வந்தால் வீட்டில் துர்மரணம் சம்பவிக்கும், என்றாள். நான் குழம்பி நின்றேன். யார் இறக்கப் போகிறார்கள். என்ன தான் கொடுமையான அம்மாவாக இருந்தாலும் நீ வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய பலம். நீ இல்லாமல் ஒரு வாழ்க்கையினை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சே! அப்படி இருக்காது என்று வெளிமனம் சொன்னாலும் உள்ளுக்குள்  பயமாக இருந்தது.
மற்ற அம்மாக்கள் போல விரும்பிய உணவுகள் செய்து கொடுத்ததில்லை. ஏதாவது சாப்பிட ஆசையாக இருந்தாலும் உன் பக்கத்தில் வந்து கேட்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை. கேட்டால் நையப் புடைத்து விடுவாய். என் தங்கை, தம்பிகள் இப்படி உன்னிடம் அடிக்கடி அடி வாங்கியது கண்டு மனம் பொறுக்காமல் நானே அவர்களுக்கு சமைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு வீட்டு நிர்வாகம் முழுக்க என் தலையில் சுமத்தி விட்டு நீ கட்டிலில் மட்டும் காலத்தைக் கழித்தாய்.

உனக்கு என்ன நோய் என்று எங்களுக்கு விளங்கவில்லை. அதை நீயும் எங்களுக்கு எடுத்துச் சொன்னதில்லை. ஒரு வேளை தவறு எங்கள் மீது தானோ? உன் தலையினை வருடி, உன் கைகளைப் பிடித்து ஆதரவாக, அம்மா, நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தைகளை தான் நீ எதிர்பார்த்தாயோ? அப்பாவிடம் கிடைக்காத அன்பு, காதல் எதையும் நீ எங்களிடமும் எதிர்பார்கவில்லையோ?
ஒரு நாள் பள்ளியால் வந்தபோது அப்பா வாசலில் நின்றார். அவரின் முகம் கலங்கி இருந்தது. எங்களை அணைக்க முயன்றார். அவரை விலக்கி உள்ளே ஓடினேன். அங்கே கூடத்தில் நீ. உயிரற்ற சடலமாக. ஆனால், உன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி உணர்வு. அப்படி ஒரு சாந்தமான முகத்தினை நான் அதற்கு முன்னர் கண்டதில்லை. ஒரு பெரிய பொதியாக கட்டி உன்னை எடுத்துச் சென்றார்கள்.

 இது வரை நான் வாழ்க்கையில் கண்டறியாத, கேட்டறியாத உறவினர்கள் எல்லோரும் வந்தார்கள். போலியான சோகத்துடன் அவர்கள். பொய்யான சோகத்துடன் அப்பா. இடையில் நாங்கள் நால்வரும் செய்வதறியாது நின்றோம். நான் ஒரு உறவினர் வீட்டிலும், தங்கை வேறு ஒருவர் பராமரிப்பிலும், தம்பிகள் அப்பாவோடு செல்வதாக அவர்களே முடிவு செய்தார்கள். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என் தங்கை, தம்பிகளை வளர்க்க நீங்கள் எல்லோரும் யார், என்று கேள்வி கேட்ட என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
அப்படியே அம்மாவின் திமிர் இதுக்கும் வந்திருக்கு, என்று நொட்டை சொன்ன பிறகு அவர்கள் வழியில் போய் விட்டார்கள்.
அம்மாவின் திமிர் மட்டும் அல்ல. அவரின் மன உறுதியும் சேர்ந்தே வந்திருக்கு என்று மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு உடன் பிறப்புகளை கவனமாக வளர்த்து கரையேற்றினேன்.
உன் திமிர், மன உறுதி மட்டும் அல்ல. உன் நோயும் எனக்கு வந்திருக்கு. ஆம். உனக்கு வந்த அதே மனச்சிதைவு நோய் எனக்கும் வந்திருக்கு.
இப்ப விளங்குகின்றது நீ எதற்காக அப்படி இருந்தாய் என்பது. உலகமே என்னைச் சுற்றி வந்தாலும் எனக்கோ எதையோ பறி கொடுத்தால் போல ஒரு உணர்வு. அழகிய மகள் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் புரியாத வெறுப்பு எல்லோர் மீதும். இன்று  காலை வெய்யில் வீட்டினுள் வரக் கூட நான் அனுமதிக்கவில்லை.கதவு, ஜன்னல் திரைச்சேலை எல்லாம் மூடி விட்டு, இரூட்டில் இருக்கிறேன்.  இருட்டினையே அதிகம் விரும்புது மனது. நீயும் இப்படி இருட்டில் தானே இருந்தாய். 

காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது மகள் சொன்னாள், அம்மா, இன்று எனக்கு பிடிச்ச பைனாப்பிள் கேசரி செய்து வைப்பீர்களாம், என்று.  உனக்கு அது தான் ஒரு கேடு என்று நீங்கள் சொல்வது போல நினைத்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டே புன்னகை செய்தேன்.


தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் விளங்கும் என்பார்கள். நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று விளங்குது. ஒரே ஒரு முறை மீண்டும் அந்த நொடி... நீ தற்கொலை செய்ய நினைத்த அந்த  நொடிக்கு போகும் சக்தி எனக்கு இருந்தால், இப்பவே உன்னை அங்கே வந்து மீண்டும் கூட்டி வருவேனே. உன்னிடம் அன்பாக பேசி, உனது நோயின் காரணத்தை கண்டறிந்து கொள்ள வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. இந்தக் கொடிய நோய் உனக்கு, எனக்கு, எனக்குப் பின்னர் என் மகளுக்கு.... நினைக்கவே நெஞ்சு பதறுகின்றதே. உன் முடிவு உனக்கு மட்டும் விடுதலை தேடிக் கொடுத்தது. உன்னைப் போல நான் மட்டும் விடுதலை பெற விரும்பவில்லை. எதிர்த்து நின்று இந்த நோயினை வெற்றி கொள்ளப் போகிறேன்.

இப்படிக்கு,
உன் அன்பு மகள் சௌம்யா.

35 comments:

  1. அருமை... அருமையான கதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. குமார், மிக்க நன்றி.

      Delete
  2. பாராட்டுக்கள்/ வாழ்த்துக்கள் /அருமை என்ற வார்த்தைகளை கூறுவதை விட .,நீங்கள் அருகில் இருந்தால் கையை பிடிச்சு அழுது விடுவேன் அந்த அளவுக்கு மனதை பாதித்த மடல் .
    சௌம்யாவின் கடிதம் மனதை குத்தி ரணமாக்கிவிட்டது வானதி .
    எல்லா பெண்களுமே இந்த மனச்சிதைவை எதிர்க்கொண்டு போராடவேண்டும் .ஆரம்பம் முதல் இறுதி வரை அழுது கொண்டே வாசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு, உண்மை தான். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருக்கு. யாருக்கும் தெரிவதில்லை. உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  3. நெகிழ வைக்கிறது....

    ReplyDelete
  4. நெகிழ வைத்த கதை வான்ஸ். உடல் நோய் க்கு கொடுக்கும் முக்கியத்துவம் மன நோய்க்கு ரொம்ப பேர் கொடுப்பதில்லை. இது ஏதாவது போட்டிக்கு அனுப்ப எழுதினீங்களா? இது கற்பனை தானே :(

    ReplyDelete
    Replies
    1. கிரி, போட்டிக்கு அனுப்பவில்லை. என்னத்தை போட்டிக்கு அனுப்புறது? போன முறை போட்டி வைச்சார்கள் அதில் அவர்களின் லோகோ கண்டிப்பா போடணும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதின்படி என் போஸ்டில் லோகோ போட நான் லோல்பட வேண்டி இருந்தது. என் 2 கண்களும் பூத்துப் போனது தான் மிச்சம். கடைசி வரை என்னால் முடியவில்லை.
      இது கற்பனையே தான் கிரி.
      மிக்க நன்றி.

      Delete
  5. நில்லுங்க கொஞ்ச நேரத்தில வந்து படிக்கிறேன்.. சொல்லி வச்ச மாதிரி எல்லோரும் ஒரே நேரத்தில பதிவு கர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  6. பூசுக்கு முன்னாடி வந்திட்டேன்ன்ன் ;)) வான்ஸ் கொஞ்சம் என் வீட்டையும் எட்டி பாருங்க. என் பதிவு எதுவும் உங்க எல்லார் டாஸ் போர்டுலையும் வர மாட்டேங்குது போல இருக்கு. உங்க கமெண்ட் இல்லாம என் பதிவு அழுவுது:((

    ReplyDelete
  7. அருமையான கதை,விடை கிடைத்தது போல் உணர்வு.பாராட்டுக்கள்.அந்த தாய்மைக்கு என் இரு சொட்டு கண்ணீர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி,அக்கா.

      Delete
  8. ம்ம்ம்ம்ம் படித்து முடித்ததும் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாததுபோல வெறுமையாக இருக்கிறது மனம்...

    உண்மைதான் “தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்”...

    உலகம் ஒரு நாடக மேடையாம், அதில் நாமெல்லாம் நடிகர்களாம்... அதில் எத்தனை உண்மைகள்.. நடித்துக்கொண்டேதான் இருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. அதீஸ், உண்மை தான். சில நேரம் சிலரின் மரண செய்தி கேட்டால் இப்படித் தான் தோன்றுகிறது.
      நன்றி, அதீஸ்.

      Delete
  9. En SamaiyalMay 22, 2012 9:31 AM
    பூசுக்கு முன்னாடி வந்திட்டேன்ன்ன் ;)) வான்ஸ் கொஞ்சம் என் வீட்டையும் எட்டி பாருங்க. என் பதிவு எதுவும் உங்க எல்லார் டாஸ் போர்டுலையும் வர மாட்டேங்குது போல இருக்கு. உங்க கமெண்ட் இல்லாம என் பதிவு அழுவுது:((///

    ஹா..ஹா.. இது வேறையா?:) ஆரோ செய்வினை செய்திட்டினம் போல:)) நான் வேணுமெண்டால் சைனா சிங்குஜானை அனுப்பட்டோ கீரி?

    கொஞ்சம் இருங்க வந்துவிடுகிறேன்ன்..

    ReplyDelete
    Replies
    1. நான் வேணுமெண்டால் சைனா சிங்குஜானை அனுப்பட்டோ கீரி?//யார் மாத்தியோசி ஐயாவையா சொல்றீங்க???

      Delete
    2. எதுக்கும் டொமார் கிட்டே கேட்டு சொல்லுங்க :-)))

      Delete
  10. மனச்சிதைவு என்ற நோய் பற்றியெல்லாம் போதுமான விழிப்புணர்வு இந்தியாவில் வந்துவிட்டதா என்று தெரியவில்லை. கிரிஜா சொன்ன மாதிரி யாருக்கும் இந்த நோய்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மனதைத் தொட்ட கதை வானதி!

    ReplyDelete
    Replies
    1. மகி, உண்மைதான். உங்களுக்கு மெயில் அனுப்ப என்று கடந்த 1 கிழமையா யோசிச்சுட்டே இருக்கிறேன். முடியலை. மீதி மெயிலில்.
      மிக்க நன்றி.

      Delete
  11. மனச்சிதைவு நோயின் கொடூரம் குறித்து மிகச் சிறிய பதிவிலேயே
    எங்களுக்கு புரிய வைத்த தங்கள் எழுத்தின் வீச்சு
    மலைக்கவைத்தது.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கதை நெகிழ வைத்து விட்டது வானதி :(

    ReplyDelete
  13. கலங்கவைத்துவிட்டது..!!

    எதிர்த்து நின்று இந்த நோயினை வெற்றி கொள்ளப் போகிறேன். தங்கள் மழலையுடன் நீண்டகாலம் நலம் வாழணும் நீங்கள்..!!

    ReplyDelete
  14. Nice, love this...

    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  15. பிரித்து ஆராய்ந்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை.

    அருமை வாணியம்மா.

    ReplyDelete
  16. ((பாட்டி ))ரொம்ப நாள் கழிச்சு வான்ஸுடமிருந்து அருமையான கதை . :-)

    ReplyDelete
  17. முன்பே வாசித்தேன் வானதி அக்கா
    பதில் சொல்ல தெரியவில்லை
    அழகான வார்த்தைகள்
    எதார்த்தமான உண்மை சம்பவம்
    கதையில் வரும் சம்பம் உண்மை போல
    உணர வைத்தது

    ReplyDelete
  18. நல்லா இருக்குங்க வான்ஸ் அக்கா .....

    ReplyDelete
  19. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!