Friday, July 29, 2011

யாமினி எங்கே போனாள்?

புது இடம். புது பள்ளி. டென்ஷனாக இருந்தது நிம்மி எனப்படும் நிர்மலாக்கு. வகுப்பறையில் கொண்டு போய் விடப்பட்டாள். அறிமுக படலம் முடிந்த பின்னர் ஆசிரியை பாடம் நடத்த ஆயத்தமாகினார். இவள் போய் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். பாடத்தில் மனம் லயிக்கவே இல்லை. பாட நேரம் முடிந்து ஆசிரியை போனதும் சுற்றும் முற்றும் பார்வையினை ஓட விட்டாள். பக்கத்தில் காட்டான் போல ஒரு மாணவி. இவளுக்கு பயமாக இருந்தது.
" என்னலே பார்க்கிறே? ", என்றாள் அந்த மாணவி.
இல்லை... என்று எச்சில் விழுங்கியபடி வேறு எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்வையினை ஓடவிட்டாள்.

" உன் பெயர் என்ன?", என்று அதட்டினாள் அந்தப் பெண்.

" நிம்மி", என்றாள் இவள்.

" என் நாய் பெயர் ஜிம்மி. உன் பெயர் நிம்மி. நல்ல ரைமிங்கா இருகில்ல ", என்று விட்டு பெருங்குரலில் சிரித்தாள்.

அன்று தொடங்கிய பயம் அதன் பிறகு இன்னும் அதிகமாகியதே தவிர குறையவில்லை நிம்மிக்கு.

பருந்தினைக் கண்ட கோழிக்குஞ்சு போல ஒதுங்கியே இருந்து கொண்டாள். அந்த மாணவியின் பெயர் யாமினி என்று அறிந்து கொண்டாள்.
யாமினி எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தாள். வயசுக்கு மீறிய உடல், குரல், நடை எல்லாமே மற்றவர்களையும் ஒதுங்கி போகும் படி செய்தது.

3 அடி நீள பெஞ்ச், கீழே புத்தகங்கள் வைப்பதற்கு வசதியாக ஒரு இழுப்பறை.
போன முதல் நாளே யாமினி 3 அடி பெஞ்சின் நடு மையமாக ஒரு கோடு போட்டு விட்டாள்.
" இதப் பாருலே இந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் உன்னுது. இந்தப் பக்கம் என்னுது. மீறி இந்தப் பக்கம் கை வந்திச்சு பிச்சுப் போடுவேன்", என்றாள்.

வேறு எங்கும் இடம் கிடைக்காத காரணத்தினால் நிர்மலா தலையாட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

யாமினிக்கு படிப்பு ஏறவே இல்லை. அப்பாவின் தொல்லையாலோ அல்லது இவளை வீட்டில் வைச்சு சமாளிப்பது கஷ்டம் என்பதாலோ பள்ளிக்கு அனுப்பினார்கள்.

ஒரு நாள் யாமியை காணவில்லை. அவள் யாருடனோ ஓடிவிட்டதாக சொன்னார்கள்.
பள்ளிக்கு அவளின் அப்பா ஒரு பெரும் படையுடன் வந்து விட்டார். ஒரு சிலர் அதிபருடன் நின்று வாக்கு வாதம் செய்ய, மறு பிரிவினர் வகுப்பறைக்கு வந்தனர்.

" யாமினியின் இடம் எது ?" , என்றான் ஒருவன்.
யாரோ கையை காட்ட, விர்ரென்று அம்பு போல பறந்து வந்தான். நிம்மிக்கு நடுக்கம் பிடித்துக் கொண்டது. வந்தவன் பெஞ்ச் இழுப்பறையினை திறந்தான். உள்ளே கிடந்த பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசினான்.
யாமினியின் அப்பா விழிகளை உருட்டியவாறு உறுமிக் கொண்டே நின்றார். இவரை விட யாமினியே பரவாயில்லை போல தோன்றியது நிம்மிக்கு.

" நீதான் என் பெண்ணின் நண்பியா? ", என்றார் நிம்மியை நோக்கி.

"இல்லை. நானி....", என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.

"எலேய்! உண்மையை சொல்லிப்போடு. இல்லை தொலைச்சுப் போடுவேன். ", என்று மிரட்டினார்.
அதிபரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
" பக்கத்தில் இருந்த உனக்கு தெரியாமல் அவள் ஓடியிருக்க மாட்டாள். எங்கே போனாள், யார் கூடப் போனாள்ன்னு சொல்லிடு ", என்று கூட்டமாக நின்று மிரட்டினார்கள்.

இவள் சொன்ன சமாதானங்கள், காரணங்கள் எதுவுமே எடுபடவில்லை.
நாளைக்கு மீண்டும் வருவோம். உண்மையை சொல்லிடு என்று மிரட்டி விட்டு போய் விட்டார்கள்.
நிம்மிக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. ஒரு வாரம் பள்ளிக்கு போக முடியாதபடி காய்ச்சல் வாட்டி எடுத்தது.
மீண்டும் பள்ளிக்கு சென்றபோது இவளின் பெஞ்ச் இழுப்பறையினையும் யாரோ சோதனை போட்டிருந்தது தெரிந்தது.
யாமினி அலை கொஞ்சம் ஓய்ந்து போயிருந்தது.
கீழே விழுந்த பேனாவை எடுக்க குனிந்த போது நான்காக மடிக்கப் பட்ட காகிதம் கண்களில் பட்டது. பேப்பர் கசங்கி இருந்தமையால் யாரும் அதை சட்டை செய்யவில்லை போலத் தோன்றியது நிம்மிக்கு.
காகிதத்தினை பிரித்தாள். அது யாமினி அவளின் அப்பாவிற்கு எழுதிய மடல்.

அன்பின் அப்பா, இப்படி எழுதவே வெறுப்பாக வருகின்றது. அன்பிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். ஒரு நாள் கூட உங்கள் முகத்தில் புன்சிரிப்பை நான் கண்டதில்லை. எ
ப்போது பார்த்தாலும் அடி தடி, ஆள் அம்பு என்று உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? நான் யாருடனோ ஓடிப்போய் விட்டதாக ஊர் பேசும். அப்படியே பேசட்டும். நான் கன்னியாஸ்திரி ஆகப் போகிறேன். எதிர்காலத்தில் நீங்கள் திருந்தி நல்ல மனிதராக இருந்தால் சந்திக்கலாம்.

யாமினி.

நிம்மிக்கு யாமினி மீது இரக்கம் உண்டானது.
கடிதத்தினை மடித்து, பையில் வைத்துக் கொண்டாள். கடிதத்தினை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது நிம்மிக்கு. பள்ளியில், யாமினி வீட்டில் கொடுத்தால் இவளை சந்தேகமாக பார்ப்பார்கள்.
யாமினியின் அப்பாவை நினைக்கவே கலக்கமாக இருந்தது.
பள்ளி விட்டதும் வேகமாக வீடு நோக்கி நடந்தாள். வீட்டில் போய் கடிதத்தினை கிழித்துப் போட்டு விட எண்ணினாள்.
வழியில் காளி கோயிலை கடக்கும் போது அந்த யோசனை தோன்றியது.
பேப்பரை சுருட்டி, நூலில் கட்டி, அங்கிருந்த மரக்கிளையில் தொங்க விட்டாள். நூற்றுக்கணக்கான சுருட்டப்பட்ட காகிதங்களோடு யாமினியின் கடிதமும் சேர்ந்து கொண்டது. யாமினி கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று காளியிடம் வேண்டி கொண்டாள். திரும்பி பாராமல் வீட்டினை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினாள்.

22 comments:

  1. வீடு என்பது வெறும் கட்டிடம் போலும்
    உறவுகள் எந்திரம் போலும் இருந்தால்
    வேறு என்னதான் செய்ய இயலும்
    நிம்மியின் முடிவு மிகவும் பிடித்திருந்தது
    கதையும் சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கதையின் ஆரம்பமும், எதிர்பாராத முடிவும் நன்றாக இருக்கு வான்ஸ்ஸ்.

    //யாமினி கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று காளியிடம் வேண்டி கொண்டாள். திரும்பி பாராமல் வீட்டினை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினாள்//

    யாமினி திரும்பி வந்து படிப்பைத் தொடர வேணும், தந்தையும் திருந்த வேணும் என வேண்டியிருக்கலாமெல்லோ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு கதை..

    ReplyDelete
  4. வானதி , கதை நல்லா இருக்குங்க

    //யாமினி திரும்பி வந்து படிப்பைத் தொடர வேணும், தந்தையும் திருந்த வேணும் என வேண்டியிருக்கலாமெல்லோ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). // கரெக்ட் இந்த மாதிரி முடிச்சிருந்தால் நல்லா இருக்கும்

    ReplyDelete
  5. நல்லா இருக்கு வானதி! பள்ளிப்பருவ நினைவுகளை ப்ரெஷ்ஷா நினைவில் வச்சிருக்கீங்க போலிருக்குது. படிக்கும்போது நான் படிச்ச ஸ்கூல்-க்ளாஸ்ரூமெல்லாம் ஞாபகம் வந்துருச்சு! :)

    யாமினி பாவம்! :-|

    ReplyDelete
  6. கதையா இது! சுப்பர் வான்ஸ். @}->--

    //பெஞ்சின் நடு மையமாக ஒரு கோடு// ;) எனக்கும் அனுபவம் இருக்கு.

    ஆரம்பத்தில உங்கட யாமினி என் மாணவி ரமணியை நினைவுபடுத்தினா.

    இப்பிடி வெளியில கரடுமுரடா தெரியிற ஆட்களுக்கு உள்ளே மென்மையாக ஒரு மனதும் வலிகளும் இருக்கிறது உண்டு.

    வடிவா எழுதி இருக்கிறீங்கள்.

    ReplyDelete
  7. அந்த பேப்பரை ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் குடுத்து அவர் மூலம் அவ அப்பாவுக்கு கொடுதிருந்தால் அவள் அப்பாவும் ஒரு வேளை திருந்திருக்கலாம் .யாமினியும் கிடைத்திருப்பாள்.

    வித்தியாசமான முடிவு :-)

    ReplyDelete
  8. யாமினி எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தாள்.... யாமினி மட்டுமல்ல நிம்மியும் மனதில் சிம்ம சொப்பனமாக அமர்ந்து விட்டாள்.. கதையை நகர்த்திய விதம் அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்


    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  10. ரமணி அண்ணா, தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    அதீஸ், சே! சே! அது நாடக தனமா இருந்திருக்கும். அதனால் தான் இப்படி முடித்தேன்.
    மிக்க நன்றி.

    அமைதி அக்கா, மிக்க நன்றி.

    அப்பாவி, மிக்க நன்றி.

    ReplyDelete
  11. கிரிசா, ஏதோ சினிமா க்ளைமாக்ஸ் ( Maniratnam movie climax avvvv... ) போல இருந்திருக்கும் அந்த முடிவு.
    மிக்க நன்றி.

    மகி, பள்ளி நினைவுகளா? அது எக்கச்சக்கமா இருக்கு. அதுவும் கேம்ஸ் டீச்சர் ( வில்லி போல என் கண்களுக்கு தெரிபவர் ) இன்னும் கனவில் வந்து மிரட்டுவார். கனவில் பஸ்ஸில் போனாலும் பின் தொடர்ந்து வந்து, ஏய்! எழுந்திரு என்று அதட்டுவார்.
    உங்களுக்கும் பள்ளி நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது சந்தோஷம். அதெல்லாம் மறக்க கூடியவையா?
    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. இமா, கதையே தான்.
    நானும் பெஞ்சில் மையமாக கோடு போட்டு வைத்திருந்தேன். அதுக்காக யாமினி போல ரவுடி என்று நினைக்க வேண்டாம். நான் சரியான அப்பிராணி.
    மிக்க நன்றி, இம்மி.

    ஜெய், அப்படியும் செய்திருக்கலாம் தான். பிறகு எல்லோரும் முடிவு எதிர்பார்த்தது போல சப்பென்று இருக்கே என்று கமன்ட் போட்டா நான் உடைஞ்சு போயிடுவேன். ஓக்கி.
    மிக்க நன்றி.

    மாய உலகம், மிக்க நன்றி.

    ReplyDelete
  13. " என் நாய் பெயர் ஜிம்மி. உன் பெயர் நிம்மி. நல்ல ரைமிங்கா இருகில்ல ", என்று விட்டு பெருங்குரலில் சிரித்தாள்.//

    அவ்...அவ்...என்ன ஒரு டெரர் தனமா பேர் வைக்கிறாங்க.

    ReplyDelete
  14. பெற்றோரின் அரவணைப்பு இன்மையால், குழந்தைகள் மனதில் ஏற்படும் விரக்தியானது, இங்கே யாமினி எனும் கதாபாத்திரம் வாயிலாக அவளின் தந்தையின் அரவணைப்பின்றித் தனித்து விடப்பட்ட யாமினியின் மூலம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் சமூகத்தின், யாமினியைச் சார்ந்துள்ள சக மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் யாமினி இடையூறாக இருப்பதன் காரணத்தால், எத்தகைய விபரீதங்கள் ஏற்படுகின்றன என்பதனைக் கதையினூடாக விளக்கியிருக்கிறீங்க, ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட ஒரு வயது வரை அன்னை அல்லது தந்தையின் அரவணைப்புத் தேவை என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

    பெற்றோரின் அரவணைப்பின்றிக் குழந்தைகள் வாழுவதால், ஏற்படும் விபரீதத்தினை விளக்கும் ஒரு பாடலினை இப் பின்னூட்டத்தோடு இணைக்கின்றேன்.

    http://www.youtube.com/watch?v=nURFiw94Y2U

    ReplyDelete
  15. கதையை நகர்த்திய விதம் அருமை.

    -S.Kumar

    ReplyDelete
  16. வானதி கதை அருமை. நல்ல ப்ளோ இணைய இதழ்களுக்கு கதைகள் அனுப்புங்களேன்

    ReplyDelete
  17. கதை நல்லாயிருந்தது சகோ.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. என் விஷயத்தில் இது கதை அல்ல நிஜ்ஜ்ஜ்சம் !!!!!!!.
    நான் படித்த பள்ளியில் இப்படி ஒரு பெண் ( ஒரு கிறிஸ்தவ பெண் )எனக்கும் நிர்மலா என்ற பெண்ணுக்கும் நடுவில் உக்காருவா .அவ ஹோம் வொர்க்கை நாங்க சேயனும் ,மெண்டல் மாத்ஸ் /டிக்டேஷன் எல்லாம் காட்டாட்டி எங்களை தண்டவாளத்தில் தள்ளிடுவேன்னு பயமுறுத்துவா.ரொம்ப வில்லங்கமான ஆளு .ஒரே நேரம் நிர்மலாவும் நானும் போகாததால் .எக்சாமில் அவள் fail .அதனால் வீட்டை விட்டு ஓடிபோய்விட்டா ..எப்படி அந்த பெயர்nirmala கூட சரியா எழுதினீங்க ????? amazing .!!!!!!!!!!!!.

    ReplyDelete
  19. @VANATHY
    //அதுவும் கேம்ஸ் டீச்சர் ( வில்லி போல என் கண்களுக்கு தெரிபவர் ) இன்னும் கனவில் வந்து மிரட்டுவார். //

    "தொலிய உரிச்சிபோடுவேன்" அப்படிதானே வானதி (அய்ங்க்க் அதை நினைச்சா இப்ப கூட நெஞ்சு படபட ன்னு அடிச்சிக்குது .)

    ReplyDelete
  20. அன்பு வானதிக்கு
    நீங்கள் அன்புடன் ரமணி அண்ணா என
    ஒவ்வொருமுறை குறிப்பிடும்போதும்
    அது எழுத்தாக இல்லாமல்
    குரல் வடிவாக கேட்பதைப் போலவே உணர்வேன்
    தங்கள் பதிவுகளிலும் அந்த அன்பு
    ஊடாடிக்கிடக்கும்
    தங்களை வலைச் சரத்தில் அறிமுகம் செய்ய
    கிடைத்த வாய்ப்பினை பெரும்பேறாகக் கருதுகிறேன்

    ReplyDelete
  21. நிரூபன், உண்மை தான். குழந்தைகளுக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே போல தந்தையின் அரவணைப்பும் முக்கியம். என் அப்பா தான் எனக்கு எப்போதும் வழிகாட்டி.
    பாடலுக்கு மிக்க நன்றி.

    எல்கே, ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள். முயற்சி செய்து பார்க்கிறேன்.

    நாடோடி, மிக்க நன்றி.

    ஏஞ்சலின், இதில் நிர்மலா என்ற பெண்ணு என் வகுப்பு மாணவி. ஏனைய பெயர் கற்பனையே.
    அட! இந்த கேம்ஸ் டீச்சருங்க எல்லாருமே டெரரா தான் இருப்பாங்க போல. இவர்களைப் பார்த்தே எனக்கு விளையாட்டில் வெறுப்பு வந்தது.
    மிக்க நன்றி.

    மாய உலகம், மிக்க நன்றி.


    ரமணி அண்ணா, சிலரை பார்த்ததும் மரியாதை வரும், சிலரின் எழுத்துக்களைப் படிக்க மனதில் பெரும் மரியாதை எழும். இதில் உங்கள் எழுத்துக்களை படித்தே உங்கள் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது.
    அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!