Sunday, July 18, 2010

தங்ககூண்டு!

லீசா, ஆன், ஜெனிபர், லீனா நால்வரும் இணைபிரியாத தோழிகள். ஜெனிபர் சிங்கிள் மதருக்கு ( கணவனால் கைவிடப்பட்ட பெண் ) ஒரே பெண். இவரைத் தவிர மற்ற மூவரும் மிகவும் வசதி படைத்தவர்கள். லீசாவின் தந்தை மனநல மருத்துவர், ஆனின் தந்தை ஒரு மிகப் பெரிய கம்பெனியின் தலமைப் பதவியில் இருப்பவர்.
இவர்கள் மூவரும் குடியிருப்பது வசதியானவர்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதி. பல மில்லியன் டாலர் விலையுள்ள வீடுகள் இவர்களுடையது. வாழ்வில் எல்லாவிதமான வசதிகளும் நிறையவே இருந்தன.

*******

கன்வீனியன்ட் ஸ்டோரில் முகமூடி அணிந்த ஒருவர் நள்ளிரவில் நுழைகிறார். அங்கு கல்லாவில் நின்றவரின் முகத்திற்கு நேராக துப்பாக்கி காட்டப்படுகிறது. கல்லாவில் நின்றவர் நடுங்கியபடியே இருந்த பணத்தை எல்லாம் எடுத்து முகமூடி அணிந்திருப்பவரிடம் கொடுக்கிறார். இது போல வேறு கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
போலீஸார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறிவிட்டார்கள். குறைந்தது 3,4 நபர்களாவது இச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது பொலீஸாரின் கருத்து. கடையில் பொருத்தப்பட்ட காமராவில் முகமூடி அணிந்திருந்தவரின் குரல் தெளிவாக பதிந்திருந்தது.

சில மாதங்கள் கடந்த பின்னர் காவல் துறைக்கு ஒரு முக்கியமான துப்பு கிடைக்கிறது. அந்த கொள்ளையர்கள் லீசா, ஆன், ஜெனிபர், லீனா என்பதே அந்த தகவல். காவல்துறை விசாரணையை தொடங்கியது. இதில் லீனா தவிர மற்றவர்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டார்கள். கொள்ளைக்கு காரணம் பணத்தேவை.

வசதியாக இருந்தாலும் பணப்பற்றாக்குறை நிலவியது இந்த டீன் ஏஜ் பெண்களுக்கு. லீசா தான் இந்த கூட்டத்திற்கு தலைவி. அவரின் யோசனையின் படியே மற்றவர்களும் செயல்பட்டனர். லீசா முகமூடி அணிந்து கொள்ள, இவர்கள் கொள்ளை அடித்த பிறகு தப்பிச் செல்ல கார் ஓட்டியர் லீனா.

இவர்களின் சார்பில் வாதாட வக்கீல்கள். எதிர்தரப்பில் வாதாட ஒரு வக்கீல். எதிர் தரப்பு வக்கீல் மிகவும் திறமையாக வாதாடினார்.

மில்லியன் டாலர்கள் சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும் யாராலும் சட்டத்தை விலை கொடுத்து வாங்க முடியவில்லை.


கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் தாரளமாக செலவு செய்தனர். பார்ட்டிகளுக்குப் போய் மது வகைகள் உட்கொண்டு விட்டு, மப்பில் இவர்கள் நண்பர்களிடம் உளறிக் கொட்டினார்கள். நண்பர்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லிவிட்டார்கள்.

குற்றத்தை ஒப்புக் கொள்ளாத லீனா தவிர மற்ற மூவருக்கும் ஜூரி எனப்படும் மக்களின் தீர்ப்பிற்காக காத்திருந்தார்கள். சில வழக்குகளில் இந்த ஜூரியின் தீர்ப்பே இறுதியானது. ஜூரியில் சாதரண பொதுமக்களில் 6 - 12 பேரை தேர்வு செய்வார்கள். இந்த 6- 12 பேரும் வழக்கு முடியும் வரை நீதிமன்றம் செல்வார்கள். விவாதங்கள், சாட்சிகள், தடயங்கள் என்று எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள். தடயங்கள், சாட்சிகள் எல்லாமே இவர்களை திருப்திப்படுத்த வேண்டும். ஒரு தனி மனிதனின் வாழ்வு இவர்களின் கையில் இருக்கும் போது இவர்கள் மிகவும் யோசித்தே தீர்ப்பு சொல்வார்கள். இறுதியில் இவர்கள் தங்களுக்குள் ஒன்று கூடிப் பேசி, தீர்ப்பை எழுத்து மூலம் நீதிபதிக்கு அளிப்பார்கள். இவர்களின் தீர்ப்பை மாற்றியமைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.


இவர்கள் குற்றவாளிகள் என்பதே ஜூரியின் தீர்ப்பு. லீனாவிற்கு 7 1/2 வருடங்களும். மற்ற மூவருக்கு தலா 7 வருடங்களும் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நால்வரும் வாழ்க்கையில் இனிமேல் அழவே கண்ணீர் இருக்குமா என்று எண்ணுமளவிற்கு அழுது தீர்த்தார்கள்.

வசதியான பகுதியில் குடியிருந்தாலும் பொழுது போக்கிற்கு மால், தியேட்டர்கள் எவையுமே அங்கு இருக்கவில்லை. ஒரே ஒரு பொழுது போக்கு நண்பர்கள் சேர்ந்து பார்ட்டி வைப்பது. பெற்றோர்கள் பணம் பணம் என்று அதன் பின்னே ஓட, இவர்கள் வாழ்வில் அணைத்துக் கொள்ள யாரும் இல்லாமல் தீய வழியில் சென்று விட்டார்கள்.

கடைசியில் நீதிபதி, " நீங்கள் எவ்வளவு வசதியான வீட்டில் குடியிருக்கிறீர்கள் அல்லது உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கு என்பது இங்கு முக்கியமில்லை. நீங்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு மரண பயத்தை உண்டாக்கினீர்கள். " - என்று பஞ்ச் டயலாக்குடன் வழக்கினை முடித்தார்.

தங்க கூண்டு என்பதற்காக உள்ளே பூட்டிக் கொண்டு இருக்க முடியுமா?

( இது உண்மைச் சம்பவம். சில மாதங்களின் முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த நிகழ்ச்சி இது.
)

21 comments:

  1. //தங்க கூண்டு என்பதற்காக உள்ளே பூட்டிக் கொண்டு இருக்க முடியுமா? //உண்மைதான்.

    ReplyDelete
  2. குற்றம் புரிந்தவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிடின் வெறும் அரையாண்டுகள் மட்டுமே தண்டனையில் கூட்டப்படும்? ? ?

    ReplyDelete
  3. யப்பா.. உண்மைச் சம்பவமா இது? ம்ம்.. பயமாயிருக்கு :))

    பார்த்ததை நன்றாக தொகுத்திருக்கீங்க வான்ஸ்..

    ReplyDelete
  4. உண்மைதான் .. இப்ப இந்தியாவிலும் இது போன்று நடக்கிறது .

    நல்ல பகிர்வு வாணி

    ReplyDelete
  5. //பெற்றோர்கள் பணம் பணம் என்று அதன் பின்னே ஓட, இவர்கள் வாழ்வில் அணைத்துக் கொள்ள யாரும் இல்லாமல் தீய வழியில் சென்று விட்டார்கள்.//

    கவனிக்கவேண்டிய விஷயம் இதுதான்....

    ReplyDelete
  6. நல்ல கூடு தங்க கூடு

    ReplyDelete
  7. //நீங்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு மரண பயத்தை உண்டாக்கினீர்கள். //

    சரியான தீர்ப்புதான். நல்ல பகிர்வு தோழி

    ReplyDelete
  8. விசித்திராமான‌ வ‌ழ‌க்கு தான்... "விளையாட்டு வினையாகும்".. ப‌கிர்விற்கு ந‌ன்றி ச‌கோ

    ReplyDelete
  9. //தங்க கூண்டு என்பதற்காக உள்ளே பூட்டிக் கொண்டு இருக்க முடியுமா? //.

    athaney..!

    enna namma valaippakkam ungalai kanom?????????

    ReplyDelete
  10. நீங்கள் பார்த்ததை எங்களோடு பகிர்ந்து கொண்டீர்களே அதுவே பெரிய விஷயம். அருமையாய் வந்திருக்கு!

    ReplyDelete
  11. உண்மைச் சம்பவமோ? முழுவதும் படிச்சிட்டு வாறேன்... உண்மைச் சம்பவம் என்றால் நான் படிக்காமல் விடுவதேயில்லை.... அதுக்காகவே இங்கு சில மகசின்ஸ் தேடிப்படிப்பேன். நேரமில்லை, பின்பு வருகிறேன்.

    ReplyDelete
  12. தங்க கூண்டு என்பதற்காக உள்ளே பூட்டிக் கொண்டு இருக்க முடியுமா?

    கண்டிப்பாக முடியாது

    ReplyDelete
  13. வாணி, படித்தேன், உண்மைதான் இப்படி பல சம்பவங்கள் நடக்கிறது.

    judge Judy, Trisha(talk show) இவை இரண்டும் நேரம் கிடைக்கும்போது விரும்பிப் பார்ப்பேன், நன்றாக இருக்கும். பல குடும்பக் கதைகள் எல்லாம் சொல்லி அடிதடி நடக்கும்(பேச்சுவார்த்தையால்தான்).

    ReplyDelete
  14. இந்த யூரிக்கு இங்கும், ரண்டம் ஆக ஆட்களைத் தெரிவு செய்து அழைப்பார்கள். ஒரு தடவை என் கணவருக்கு வந்தது, சில மாதங்களின் பின்பு எனக்கு அழைப்பு வந்தது, எதிர்பாராத மகிழ்ச்சி. ஆனால் அந் நேரம் என்னால் போக முடியாமல் போய்விட்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே எனக் கவலைப்பட்டேன்.

    ஆனால் ஒன்று, போய்ப் பார்த்துவிட்டு சும்மா வரமுடியாது, எமது தீர்ப்பையும் சொல்ல வேண்டும், அதுதான் எனக்கு பயம். எப்படியான கேஸ் வருமெனத் தெரியாதெல்லோ.

    ReplyDelete
  15. நல்ல பதிவு வானதி!!

    ReplyDelete
  16. ஹைஷ் அண்ணா, வருகைக்கு மிக்க நன்றி.

    வசந்த், வருகைக்கு மிக்க நன்றி.
    புது தகவல். தகவலுக்கும் நன்றி.

    சந்து, உண்மையே தான். எனக்கும் பயமா இருந்திச்சு.
    முன்பெல்லாம் நிறைய பார்ப்பேன். இப்ப நேரம் வருவது குறைவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. எல்கே, எல்லா இடங்களிலும் நடக்குது.
    மிக்க நன்றி.

    ஜெய், மிக்க நன்றி.

    யாதவன், நன்றி.

    நாடோடி, உண்மைதான்.
    மிக்க நன்றி.

    குமார், மிக்க நன்றி.
    உங்கள் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

    ReplyDelete
  18. அப்துல் காதர், மிக்க நன்றி.

    சரவணன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    அதீஸ், நீங்கள் சொன்ன ப்ரோகிராம்ஸ் நானும் பார்த்திருக்கிறேன். இப்ப பார்ப்பதில்லை.
    எனக்கும் உண்மைச்சம்பவங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
    பார்த்து தீர்ப்பு சொல்லுங்கள் அதீஸ். ஒரு அப்பாவிக்கு தண்டனை வாங்கி குடுக்க வேண்டாம்.

    மேனகா, மிக்க நன்றி.

    ReplyDelete
  19. நல்ல தீர்ப்பு.........

    ReplyDelete
  20. இப்ப என்ன என்னவோ எல்லாம் நடக்குது. ;(

    ReplyDelete
  21. அருமையான கருத்துள்ள போஸ்ட்...சூப்பர் வாணி

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!