Thursday, June 10, 2010

என் உயிர் நீதான்!

ஜூன், 2009
***********
மாலை ஆறு மணி. வேலையால் வந்து கதவைத் திறந்து உள்ளே போனான் ரமேஷ்.

" திவ்யா, என்ன சாப்பாடு செய்ய ?. ரோஸ்டட் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாயே. இதோ இன்னும் 1/2 மணி நேரத்தில் சமையல் முடிச்சுடுவேன். " என்றான் மனைவியிடம்.

( 45 நிமிடங்களின் பிறகு )
" திவ்யா, நல்லா சாப்பிடும்மா. குழம்பு நல்ல இருக்கா. இன்னும் கொஞ்சம் மீன் எடும்மா. சாப்பிட்டு முடிஞ்சதும் நீ டி.வி பாரும்மா. நான் பாத்திரங்கள், சமையல் மேடை க்ளீன் பண்ணி விட்டு வருகிறேன். "
ரமேஷ் : குட்நைட், திவ்யா.

ஜூன், 2008
***************
ரமேஷ் : திவ்யா, எங்க இருக்கே?
திவ்யா : இதோ இங்கே ரூமில்.
ரமேஷ் : ஏன் உடம்பு சரியில்லையா? இந்த நேரம் படுக்கமாட்டாயே.
திவ்யா : வேலை கொஞ்சம் அதிகம். தலைவலி உயிர் போகுது.
ரமேஷ் : இதோ இஞ்சி டீ போட்டுத் தருகிறேன். குடிச்சுட்டு நல்லா ரெஸ்ட் எடுடா.
திவ்யா: தாங்ஸ்.

டீயை சுவைத்துக் கொண்டே உற்சாகமாக பேசினாள் திவ்யா.

ரமேஷ், டேக்கேரில் எவ்வளவு அழகான குழந்தைகள் தெரியுமா? ஒவ்வொரு நாளும் பார்க்கவே அலுப்புத் தட்டாது. குண்டுக் கன்னங்கள், அழகிய கண்கள்... ஒவ்வொரு குழந்தையும் பூக்கள் போல கொள்ளை அழகு. நேற்று புதுசா ஒரு குழந்தை வந்திச்சு. பிறந்து 6 வாரம் தான். மெத்து மெத்தென்று பஞ்சு போல அவ்வளவு மென்மை. அழுது கொண்டே இருந்த குழந்தையை நான் தூக்கியதும் அமைதி ஆகி விட்டது "

வேலையில் நடந்தவற்றை அப்படியே வந்து ரமேஷுக்கு வாய் ஓயாமல் சொல்வாள். ரமேஷூக்கு அலுப்புத் தட்டாது. கல்யாணமாகி 3 வருடங்களாகி விட்டது. குழந்தைகள் இல்லை என்ற ஏக்கம் எப்போது திவ்யாவுக்கு உண்டு. ரமேஷ் ஆறுதல் சொல்வான்.


ஜூலை 10, 2008
****************
ரமேஷ் : வேலைக்கு நேரமாச்சு நான் போறேன். இரவு எதுவுமே சமைக்க வேண்டாம். வெளியே போய் சாப்பிடலாம். சரியாடா?
திவ்யா : ம்ம்ம்..

ரமேஷ் எப்போதும் ட்ரெயினில் தான் வேலைக்குப் போவான். காரில் போவதென்றால் ட்ராஃபிக் என்று 30 நிமிடப் பயணம் 1 மணி நேரத்திற்கு அதிகமாகி விடும். ட்ரெயினில் ஏதாவது புக்ஸ், பேப்பர் படிக்கலாம் .
ரமேஷ் வேலைக்குப் போய் சேர்ந்ததும் அவன் செல் சத்தமிட்டது. எதிர் முனையில் திவ்யா.
" ரமேஷ், இனிமேல் என்னுடன் பேச வேண்டாம். இன்று காலையில் வேலைக்குப் போகும் போது கைவலிக்க டாட்டா காட்டி, ப்ளையிங் கிஸ் குடுத்தேன். நீ கண்டு கொள்ளாமல் போய் விட்டாய்... "
ரமேஷ் : தாயே மன்னித்து விடு. நான் கவனிக்கவில்லை.
திவ்யா போனை கோபத்துடன் வைத்து விட்டாள்.
எங்களுக்குள் இந்தப் பழக்கம் கல்யாணமாகிய புதிதில் தொடங்கியது. நான் வேலைக்குப் போகும் போது திவ்யா எங்கள் வீட்டின் அடுக்குமாடிக் குடி
யிருப்பின் 5வது தளத்தில் நின்று கைகாட்டி, ப்ளையிங் கிஸ் கொடுப்பாள். நானும் பதிலுக்கு கைகாட்டுவேன். அக்கம் பக்கம் யாருமில்லா விட்டால் ப்ளையிங் கிஸ் குடுப்பேன்.

ஜூன், 2009
***************
ரமேஷ் வேலையால் வந்தான். நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாதபடியால் வீடெங்கும் தூசியும், குப்பையுமாக காட்சி தந்தது. திவ்யாவுக்கு குப்பை, தூசி என்றாலே அலர்ஜி.
" திவ்யா, இதோ ஒரு மணி நேரத்தில் சுத்தம் பண்ணிவேன்டா. நீ ரெஸ்ட் எடும்மா. பசிக்குதா? இதோ இப்பவே போய் சாப்பாடு வாங்கி வருகிறேன். இன்று நிறைய வேலை. அசதியா இருக்கு. நாளைக்கு உனக்கு பிடித்த மீன் பொரியல் செய்து தரேன்டா ."

ஜூலை 16, 2008
****************
இன்று திவ்யாக்கு பிறந்தநாள்.
ரமேஷ் : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திவ்வி.
திவ்யா : மிக்க நன்றி.
ரமேஷ் : இந்த வீக்கென்ட் நயாகரா அருவி பார்க்கப் போலாமா?
திவ்யா : போலாமா இல்லை. கட்டாயம் போகிறோம்.
திவ்யாவுக்கு நயாகரா போவதென்றால் கொள்ளை விருப்பம். சமர் வந்தால் அடிக்கடி போவோம். அதிகாலையிலே போய் கைகோர்த்தபடி நடப்போம். பார்க்கில் அமர்ந்து, கொண்டு போன உணவுகளை உண்டு, கதைகள் பேசி, வீடு வந்து சேர இரவாகி விடும். ஒவ்வொரு முறையும் நயாகரா அருவி தெரியுமாறு நின்று புகைப்படம் எடுத்து, திகதி வாரியாக ஆல்பத்தில் அழகாக போட்டு வைப்பாள்.

திவ்யா : ரமேஷ், நிலக்கடலை வாங்க மறந்து விட்டேன். அன் சால்டட் வாங்கு சரியா?
ரமேஷ் : ம்ம் .. வாங்கி வருகிறேன்.
அருவியின் அருகில் இருக்கும் பார்க்கில் ஓடித் திரியும் அணில்களுக்கு நிலக்கடலை கொடுப்பது திவ்யாவுக்கு மிகவும் பிடிக்கும். இவளின் கைகளில் இருக்கும் கடலையை அணில்கள் கிட்ட வந்து வாங்கிச் செல்லும்.

அருவி வழக்கம் போல இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு போய் சிறிது நேரத்தில் திவ்யாவுக்கு மீண்டும் தலைவலி. அவள் கீழே இருந்து விட்டாள். ரமேஷ் தடுமாறிப்போனான். அடுத்த நாள் மருத்துவரிடம் கட்டாயம் போக வேண்டும் என்று நினைத்தான் ரமேஷ். ஆனால், திவ்யா சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விட்டாள்.

அடுத்த நாள் ரமேஷ் எவ்வளவோ கெஞ்சியும் திவ்யா மருத்துவரிடம் போக மறுத்து விட்டாள்.

ஜூலை 25, 2008
***************

ரமேஷின் செல் ஒலித்தது. எதிர்முனையில் திவ்யாவின் டேகேரிலிருந்து அழைப்பு. திவ்யா ஆஸ்பத்திரியில் என்று தகவல் சொன்னார்கள். ரமேஷ் ஓடினான். மீண்டும் தலைவலியால் சோர்ந்து போயிருந்தாள் திவ்யா. நிறைய டெஸ்டுகள் நடந்தன. ரிசல்ட் வரத் தான் முடிவு தெரியும் என்றார்கள். ரமேஷூக்கு அவஸ்தையாக இருந்தது. மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் உள் மனது கதறியது.

" உங்கள் மனைவிக்கு புற்றுநோய். உடல் முழுக்க பரவியுள்ளது .... " இது மட்டுமே ரமேஷின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. வேறு எதுவுமே மனதில் பதியவில்லை. ரமேஷ் தனிமையில் அழுதான்.

ஆகஸ்ட் 10, 2008
*************

திவ்யாவுக்கு கீமோதெரபி என்று ஏதேதோ சொன்னார்கள். மனதளவில் சோர்ந்து போயிருந்தாலும் உற்சாகமாக பேசிக் கொண்டேயிருந்தாள்.
" ரமேஷ், என்னைப் பார்க்க ஏலியன் போல இல்லை? ", என்பாள் முடி எல்லாம் கொட்டிய தன் மொட்டைத் தலையை தடவியபடி.
" என் அழகிய ஏலியனே ", என்று சொல்லி திவ்யாவை அணைத்துக் கொள்வான் ரமேஷ்.

ரமேஷ் எவ்வளவோ சொல்லியும் திவ்யா வேலையை விட மறுத்தாள். நான் சுகமாகி வந்ததும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். வீடு முழுவதும் குழந்தைகள். உன் மடியில் ஒன்று, தோளில் ஒன்று.... என்று சொல்லி சிரிக்கும் திவ்யாவை அன்புடன் பார்ப்பான் ரமேஷ்.

ஜனவரி 29, 2009
***************



மீண்டும் திவ்யாவுக்கு இரத்தப் பரிசோதனை செய்தார்கள்.

" உங்கள் மனைவி 6 மாதங்களே உயிரோடு இருப்பார்... " என்று மருத்துவர் சொன்னபோது ரமேஷ் கதறி அழுது விட்டான்.

இவனின் வாடிய முகத்தைக் கண்டதும் திவ்யா ஓரளவு ஊகித்து விட்டாள்.

" ரமேஷ், நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேனாம் ", என்று கேட்டவளை கட்டிப் பிடித்துக் கதறி அழுதான் ரமேஷ்.

வின்டர் குளிரிலும் நயாகரா அருவி பார்க்க வேண்டும் என்று சொன்ன திவ்யாவை கூட்டிச் சென்றான். அணில்களைக் காணவில்லை. திவ்யா இயல்பாக இருந்தாலும் ரமேஷால் அவ்வாறு இருக்க முடியவில்லை.

பூமிப் பந்து வேகமாக சுற்றுவது போல இருந்தது ரமேஷூக்கு. புற்றுநோய் ஆஸ்பத்திரியிலேயே இறுதி நாட்களை கழித்தாள் திவ்யா. கடைசி ஒரு வாரம் இருக்கும்போது வீட்டிற்கு கூட்டி வந்து, ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டான்.

மே 30, 2009
************


திவ்யா இறந்து போய் இரண்டு வாரங்களாகி விட்டது. எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. எதுவுமே ஞாபகம் இருக்கவில்லை. திவ்யாவின் தோழிகள், ரமேஷின் அலுவலக நண்பர்கள் வந்து போனார்கள். ரமேஷ் அழவில்லை. எங்கோ சூனியத்தை வெறித்தபடி இருந்தான்.

2 வாரங்களாக வேலைக்குப் போகாமல் இருந்த ரமேஷைப் பார்க்க அவன் நண்பன் வந்தான்.

" வா எங்கேயாவது சென்று வரலாம் ", என்று கூப்பிட்டான்.
" இரு திவ்யாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் " , என்று சொன்னவனை விசித்திரமாகப் பார்த்தான் நண்பன்.

காலாற இருவரும் நடந்தார்கள். தூரப் போய் நின்றவன் பால்கனியை திரும்பி பார்த்தான். அது வெறிச் சோடிப் போய்க் கிடந்தது. நண்பன் ஆதரவாக தோளில் தட்டினான்.

ஜூலை 16, 2009
*************

இன்று திவ்யாவுக்கு பிறந்தநாள். நயாகரா அருவி பார்க்கப் போனான் ரமேஷ். மழை வரும் போல இருந்தது. வழக்கமாக அமரும் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். அணில்கள் ஓடி வந்தன.

மெதுவாக தொடங்கிய மழை சடசடவென விழுந்தது. ஆங்காங்கு நின்றவர்கள் ஓடிப் போய் ஒதுங்கி கொண்டார்கள். ரமேஷ் அசையவேயில்லை. கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் மழை நீருடன் சேர்ந்து ஓடியது. குலுங்கி அழுதவனை அணைத்துக் கொள்ள அங்கு மழை மட்டுமே இருந்தது.

20 comments:

  1. அருமை. கலங்க வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  2. கலங்க வை...த்...த.. கதை..!!

    ReplyDelete
  3. மிகவும் அருமையாக இருக்கின்றது...படிக்கும் பொழுதே அழுகையே வந்துவிட்டது...என்ன கொடுமை....

    ReplyDelete
  4. வாணி,
    இப்படி அடிக்கடி அழ வைக்கறீங்களே!

    ReplyDelete
  5. மிக அருமை வாணி,படிக்கும் போதே அழுது விட்டேன்....

    ReplyDelete
  6. கண் கலங்க வைத்த கதை

    ReplyDelete
  7. நல்லாருக்கு வானதி! கடைசி வரிகள் படிக்கும்போது ஆட்டோமேட்டிக்கா கண் கலங்குது!

    ReplyDelete
  8. வானதி கதை தேதிவாரியாக அருமையாக குறிப்பிட்டு எழுதியது அருமை.இறுதியில் திவ்யாவிற்கும் தேதி குறித்தது மிகவும் சங்கடமானது.

    ReplyDelete
  9. நெஜமாவே கண்ல தண்ணி வந்துடுச்சு வாணி....என்னோட நெருங்கின தோழியை கான்செர்க்கு பறிகொடுத்தவ நான்... அந்த நினைவும் சேந்து கஷ்டமா போச்சு... நல்லா உருக்கமா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  10. வாணி, உலக அழிவை எண்ணி மனம் நொந்துபோய் இங்கு வந்தேன், இங்கு கண்ணில தண்ணி வர வச்சுவிட்டீங்களே? கெதியா ஒரு நகைச்சுவையைப் போட்டு என் மனதை டைவேர்ட் பண்ணிவிடுங்கோ...

    ReplyDelete
  11. சீக்ரியம் மெகாத் தொடர் எழுதப் போகலாம் நீங்க. அப்படி அழ வைக்கறீங்க நீங்க

    ReplyDelete
  12. ரெம்ப‌ நெகிழ்ச்சியான‌ க‌தை... சொல்லிய‌ வித‌ம் அருமை...

    ReplyDelete
  13. எல்கே, மிக்க நன்றி.

    அண்ணாமலையான், நலமா? நீண்டநாட்களின் பிறகு வருகை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    ஜெய், நன்றி.

    கீதா, மிக்க நன்றி.

    செல்வி அக்கா, அழ வைத்தற்கு ஸாரி. மிக்க நன்றி.

    ReplyDelete
  14. மேனகா, மிக்க நன்றி.

    எல் எஸ், மிக நன்றி.

    மகி, வருகைக்கு மிக நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    ReplyDelete
  15. தங்ஸ், மிக்க நன்றி. என் நெருங்கிய உறவினரும் புற்று நோயால் இறந்தார். வருகைக்கு மிகவும் நன்றி.

    அதீஸ், நகைச்சுவை தானே. வரும். உலகம் அழியப்போவுதா? கண்டது, நிண்டது எல்லாம் படித்து குழம்பி போகாமல், என்னைப் போல ரிலாக்ஸ் பண்ணுங்கோ.
    மிக்க நன்றி.

    எல்கே, மெகா தொடரா? எனக்கு அதெல்லாம் வரவே வராது. மிக்க நன்றி.

    நாடோடி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. நல்லா எழுதி இருக்கிறீங்கள் வாணி. இன்னொரு மனத்தைக் கனக்க வைக்கும் கதை. எனக்கும் திகதி போட்டு எழுதி இருக்கிறது பிடிச்சு இருந்துது.

    ReplyDelete
  17. அழுதுட்டேன் வானதி.. நிரந்தரமாகத் துணையைப் பிரிவதென்பது மிகவும் கொடுமையான விஷயம்..

    ReplyDelete
  18. Imma, Ila, & Chandana, yhanks for your comments.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!